வரம் 45 (Final)

Advertisement

Writer girl

Well-known member
Member
அவர்கள் அனைவரும் வெளியேறியதும் தனது கையை மிருதுவாகப் பற்றியிருந்த மகிழம்பூவனைப் பார்த்து,”என் கையை இன்னும் இறுக்கமாகப் பிடிச்சுக்கோங்க பூவன்! இனிமேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் என் கையைப் பிடிச்சிருக்கிறதை மட்டும் விட்றாதீங்க!”என்றவளை ஆதூரமாகப் பார்த்தவனோ,

“நான் ஏன் உன் கையை விடப் போறேன் அழகி? நான் எப்பவும் உன்னைக் கை விடவே மாட்டேன்!”எனக் கூறித் தன்னவளது கரத்தை இன்னும் அழுத்திப் பிடித்தான் அவளவன்.

அதில் வலியை உணர்வதற்குப் பதிலாக வலிமையை உணர்ந்திருந்தாள் பெண்ணவள்.

“எனக்கு மல்லிகா அத்தை தான் அப்பாவுக்குத் தொழில் ஆரம்பிக்கிறதுக்காக அவங்களோட சொந்த நகைகளைக் கொடுத்து உதவினாங்கன்னுச் சத்தியமாக இப்போ வரைக்கும் தெரியாது பூவன்! அது தெரிஞ்சு இருந்தால் கூட நான் உங்களையும், மதியையும் அவமானப்படுத்தி இருக்க மாட்டேனோ, என்னவோ?”என்று அவனிடம் குற்ற உணர்வுடன் உரைத்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள் சஹஸ்ரா.

அதில் நெகிழ்ந்து போய் அவளது தலையை உயர்த்தி அவளைத் தனது கண்களைப் பார்க்க வைத்தவனோ,”அப்படி உனக்கு அந்த உண்மை முன்னாடியே தெரிஞ்சு இருந்தால் நீ ஒரு கடமைக்காக, எங்க கூடப் பழகி இருப்ப அழகிம்மா! அதே மாதிரி எனக்கும், மதி அக்காவுக்கும் கூட அந்த உண்மைத் தெரிஞ்சு இருந்தால் நாங்களும் உன்னை அதைச் சொல்லிக் காமிச்சு வருத்தப்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கு! அதனால் தான், நம்ம மூனு பேருக்குமே இந்த உண்மைத் தெரியாமல் இருந்து இருக்குது! அதுவும் நல்லதுக்குத் தானே? அதனால் தானே நாம மூனு பேரும் நேரமெடுத்து நம்மளை ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்கிட்டு இருக்கோம்! இதுக்கு எல்லாம் நம்மளோட புரிதல் தான் காரணமாக இருக்கே தவிர்த்து உங்கப்பாவுக்கு எங்கம்மா செஞ்ச உதவியோ, அதுக்கு நன்றிக் கடனாக நீ எங்க கூடப் பழகினதோ கண்டிப்பாக இல்லை தானே? அப்படி மட்டும் இருந்திருந்தால் நாம ரெண்டு பேரும் கூட இப்படி நம்மளை ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்கிட்டுக், கொஞ்சம், கொஞ்சமாக காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்காமல் நன்றிக் கடனுக்காகவும், நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு நம்ம அப்பா, அம்மா முடிவு செய்ததுக்காக கடனேன்னு நாமக் கல்யாணம் செய்துக்கிறச் சூழ்நிலை வந்திருக்குமே? அதனால் இந்த உண்மை நமக்கு இப்போ தெரிஞ்சு இருக்கிறதும் நன்மைக்குத் தான்னு நினைச்சு நிம்மதியாக இரு அழகி!”என்று தன்னவளுக்கு விளக்கிக் கூறிப் புரிய வைத்தான் மகிழம்பூவன்.

அதைக் கேட்டு விட்டு,”அப்படின்னா உங்களுக்கும் இப்போ வரைக்கும் இந்த உண்மை எதுவும் தெரியாது தானேங்க?”என அவனிடம் தவிப்புடனும், படபடப்புடனும், ஏக்கத்துடனும் கேட்டிருந்தாள் சஹஸ்ரா.

அதில் உருகிப் போய் அவளது விழிகளில் அழுத்த முத்தமிட்டு விட்டு,”ம்ஹ்ம். எனக்கும், மதி அக்காவுக்கும் எந்த உண்மையும் இப்போ வரைக்கும் தெரியாது அழகி! எங்கப்பா எங்க கிட்ட இது வரைக்கும் அதைப் பத்தி எதுவுமே சொன்னது இல்லை! ஆனால், எங்கம்மா இறந்ததுக்கு அப்பறம் அவர் எங்க கிட்ட உங்கிட்ட சண்டைப் போடக் கூடாதுன்னும், உனக்குப் பிடிக்காததைச் செய்யக் கூடாதுன்னும் கேட்டுக்கிட்டார்! ஏன்னா, எங்கம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடிக்குமாம்! அதனால் நாங்க உன் மனசுக் கஷ்டப்பட்ற மாதிரி பேசக் கூடாது! நடந்துக்கக் கூடாதுன்னும் எங்க கிட்ட உறுதியாகச் சொல்லிட்டார்! அதுக்கு முன்னாடியே எனக்கு உன் மேல் ஒரு பாசம், ஈர்ப்பு, உன்னைப் பார்த்தாலே ஒரு பூரிப்பு, கனிவுன்னு நிறைய உணர்வுகள் தோனும்! அதனாலேயே அவர் கேட்டுக்கிட்டதுக்கு நான் உடனே ஒத்துக்கிட்டேன்! ஆனால் மதி அக்காவைப் பத்தித் தான் உனக்குத் தெரியுமே? அவங்களுக்கு எங்கப்பா அப்படிச் சட்டம் போட்டது பிடிக்கலை! அது என்ன அவ மட்டும் இந்த வீட்டில் ஸ்பெஷலா? அவளும் எங்களை மாதிரியே இந்த வீட்டில் பொறந்தவ தானேன்னு உன்னை வேணும்னே சீண்டுவாங்க! ஆனால் நான் உன் மேல் விருப்பப்பட்டதை தெரிஞ்சிக்கிட்டதும் அதைக் குறைச்சுக்கிட்டாங்க!”என்று தன் தமக்கையும், தன்னவளும் சிறு வயதில் சண்டை போட்ட நிகழ்வுகள் எல்லாம் இப்போது நினைவிற்கு வந்து விட அதில் அவனது இதழ்கள் புன்னகையை உதிர்த்தது.

அவனது அந்தப் புன்னகையைக் கண்டு மெய் மறந்து போய் அவனது கன்னக்குழியில் தனது இதழ்களைப் பதித்து விலக்கிக் கொண்டாள் சஹஸ்ரா.

அதில் தனக்கும் அவளிடம் உரிமை இருப்பது நினைவிற்கு வந்து விடவும் தன்னவளின் கன்னத்தை அழுந்த முத்தமிட்டு விட்டு அவளது முகம் முழுவதும் முத்தங்களால் அர்ச்சித்தான் மகிழம்பூவன்.

அதில் மோனநிலையை அடைந்தவளோ, தனது கண்களைத் திறவாமலேயே,”நீங்க என்னைக் கட்டாயத்தின் பேரில் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கலை தானே?”எனத் தனக்குள் எழுந்த சந்தேகத்தை அவனிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ள எத்தனித்தாள் சஹஸ்ரா.

உடனே,”ஆமாம் அழகி! எங்கம்மாவும், அப்பாவும், மாமா, அத்தைக்கிட்டே உன்னை எனக்குக் கல்யாணம் செய்து வைக்கக் கேட்டுக்கிட்ட விஷயத்தை மட்டும் தான் எங்கப்பா எங்க கிட்ட சொன்னாரு! நான் தான் அதுக்கு முன்னாடியே உன் மேல் விருப்பப்பட ஆரம்பிச்சுட்டேனே? அதனால் அதைக் கேட்டதுமே நமக்கு இவ தான்டா பொண்டாட்டின்னு உறுதி பண்ணித் தான் நமக்குள்ளே எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லாதப்போவும் கூட நமக்குக் கண்டிப்பாக கல்யாணம் நடக்கும்ன்ற நம்பிக்கையோட, உறுதியோட காத்திருந்தேன்! அதுவும் இல்லாமல் இந்த உண்மையை எல்லாம் சொல்லி இதுக்குப் பிராயச்சித்தம் பண்றதுக்காக வேண்டி உன்னைக் கட்டாயப்படுத்தி எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கக் கூடாதுன்னும் எல்லார்கிட்டேயும் கேட்டுக்கிட்டேன்! ஏன்னா, உனக்கா என் மேல் காதல் வந்து நீ என்னை விருப்பப்பட்டுக் கட்டிக்க ஒத்துக்கனும்ன்ற விஷயத்தில் உறுதியாக இருந்தேன்! ஆனால் நீ வேற ஒரு விஷயத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்ச ஆனாலும் என்னால் அந்த வாய்ப்பை விட்டுக் கொடுக்க முடியலை! அதனால் இது தான் சரியான நேரம்ன்னு நானும் உன்னோட நிபந்தனைகளுக்கு எல்லாம் ஒத்துக்கிட்டேன்!”என்று அவளுக்கு நீண்டதொரு விளக்கத்தை அளித்து விட்டிருந்தான்.

அதில் தனது மனதை அடைத்திருந்த மனக்குமுறல்களும், குழப்பங்களும், சந்தேகங்களும் கண் காணாமல் போனதை அறிந்து தன்னவனின் காதலில் கட்டுண்டு அவனிடம் முழுமையாகச் சரணடைந்து விட்டாள் சஹஸ்ரா.

“அழகிம்மா! நாம ரொம்ப நேரமாக இப்படி ரூமில் தனியாக இருக்கிறது சரியில்லை! நம்மக் குடும்பம் நம்மளை நம்பித் தனியாகப் பேசுறதுக்கு வாய்ப்பும், சம்மதமும் கொடுத்து இருக்காங்க! அதை நாம மதிச்சு இப்போ அறையை விட்டு வெளியே போகலாமா?”என்று அவளிடம் மென்மையாக வினவினான் மகிழம்பூவன்.

“ஆமாங்க. வாங்க போகலாம்”எனப் படுக்கையில் இருந்து எழ முயன்றவளிடம்,

“உன்னால் எழுந்திரிக்க முடியும் தானேம்மா? இல்லைன்னா நான் உன்னைத் தூக்கிட்டுப் போகவா?”என்றிருந்தான்.

“வேண்டாம் பூவன்! நம்ம வீட்டாளுங்க சங்கடப்படுவாங்க! நானே நடந்து வர்றேன்”என்று கட்டிலில் இருந்து இறங்கிக் கொள்ளவும்,

அவளது கைகளைத் தன்னுடன் பிணைத்துக் கொண்டுத் தானும் அவளுடன் சேர்ந்து நடக்கவும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ரா.

அவர்களின் தெளிந்த முகத்தைக் கண்டதும் அங்கேயிருந்த அவர்களது மற்றக் குடும்ப உறுப்பினர்களுக்கு நிம்மதி உண்டாகி விட்டிருந்தது.

“இனிமேல் எந்தக் குறுகுறுப்பும் இல்லாமல் இவங்களுக்குக் கல்யாணம் செஞ்சி வச்சிடலாம்!”என்று மனதார உரைத்தார் முல்லைக்கொடி.

அதற்குப் பிறகான நாட்கள் அனைத்தும் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ராவிற்கான நிச்சய வேலைகளைச் செய்து முடிக்க உதவி விடவும்,

இப்போது தங்களது ஊரிலேயே பெரிய மண்டபத்தைப் பிடித்து அதில் அனைத்து வேலைப்பாடுகளையும் செய்து முடித்து அதன் மேடையில் தங்களது நிச்சயத்திற்கான மோதிரங்களை மாற்றிக் கொள்வதற்காக ஏற்றி வைக்கப்பட்டு இருந்தார்கள் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ரா.

அந்த ஊர் முழுவதும் அங்கே கூடி இருக்க, அதேபோல் தங்களது பண்ணைகளில் வேலை பார்க்கும் அனைவரையும் தனது நிச்சயத்திற்கு அழைத்து இருந்தான் மகிழம்பூவன்.

அவனைப் போலவே, தராதரம் பார்க்காமல் தனது அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரையும் தனது நிச்சயத்திற்கு வருமாறு நேரில் சென்று அழைத்திருந்தாள் சஹஸ்ரா.

அதனாலேயே அவர்களும் தங்களது முதலாளியின் நிச்சயத்தார்த்தத்தைத் தவற விடக் கூடாது என்றெண்ணி இங்கு வந்து சேர்ந்திருந்தனர்.

தனது கரத்தில் அளிக்கப்பட்டு இருந்த கணையாழியைச் சில கணங்களுக்குப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மகிழம்பூவனிடம்,”இன்னும் எவ்வளவு நேரமாகத் தான் அதையே பார்த்துட்டு இருப்ப? அதை அழகியோட விரலில் போட்டு விடு மாப்பிள்ளை!”என்று அவனுக்கு அறிவுறுத்தினான் பூபாலன்.

அதில் குறிஞ்சிரிப்புடன் தன்னவளின் மோதிர விரலில் வலிக்காமல் அந்தக் கணையாழியைப் போட்டு விட்டான் மகிழம்பூவன்.

அவனைப் போலவே, தன்னிடமிருந்த மோதிரத்தை அவனது விரலில் மாட்டி விடாமல் போக்குக் காட்டிக் கொண்டுக் குறும்பாக அவனைப் பார்த்துக் கண்ணடித்தாள் சஹஸ்ரா.

“நீயும் அவனுக்கு இணையாக ஆரம்பிச்சிட்டியா? சீக்கிரம் மோதிரத்தை போட்டு விடுத்தா!”என்று அவளிடம் கேட்டுக் கொண்டாள் வண்ணமதி.

உடனே தனது குறும்புத் தனத்தைக் கைவிட்டு, விட்டுத் தன்னிடம் இருந்த கணையாழியைத் தனது இணையின் மோதிர விரலில் அணிவித்து விட்டாள் சஹஸ்ரா.

அதில் தாங்கள் இருவரும் தங்கள் ஒருவரையொருவரைப் புன்னகைத்துக் கொள்ள, அதைக் கண்ட அந்த மண்டபத்தில் இருந்த மற்ற அனைவரும் பூரித்துப் போயினர்.

தனது மனைவியின் ஆசைக்கு இப்போது முதல் அடித்தளம் போட்டு விட்டதைக் கண்ணுற்றப் பால்ராஜ்ஜோ அந்த உணர்வுக் கொடுத்த நெகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.

அதை அவதானித்து விட்டு அவருக்குப் பக்கபலமாக நின்று அவரைத் தேற்றினர் ஆறுமுகம் மற்றும் முல்லைக்கொடி.

அதேபோல் தங்களது மகளின் திருமணம் சரியான நபருடன் நடக்கப் போவதை தற்போது கண்ட காட்சியின் மூலமாக உறுதி செய்து கொண்டதால் வந்த மகிழ்ச்சியில் தங்கள் விழிகளில் நீரைக் கசிய விட்டுக் கொண்டார்கள் ரமணன் மற்றும் கஸ்தூரி.

“நாம இனிமேல் இவங்களுக்கு இடையில் தூது போகத் தேவையில்லை மதி!”எனத் தன் மனைவியிடம் கூறிப் புன்னகைத்தான் பூபாலன்.

அதைக் கேட்டுத் தானும் புன்னகைத்து விட்டு,”ம்ஹ்ம். ஆமாங்க. இன்னும் கொஞ்ச மாசத்துல இவங்களுக்கும் இவனை மாதிரியே ஒரு குட்டிப் பையன் வந்துட்டால் அவன் பின்னாடி ஒடவே இவங்களுக்கு நேரம் பத்தாது! அப்பறம் எப்படி இவங்களுக்குச் சண்டைப் போட மட்டும் நேரம் இருக்கப் போகுது!”என்று அவனிடம் கூறி விட்டுத் தனது கைகளில் இருந்த மகனின் கன்னத்தில் இதழ் பதித்துக் கொண்டாள் வண்ணமதி.

இப்படியாகப் பாரபட்சம் இன்றி அந்த மண்டபத்தில் இருந்த அனைவரின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டப் பெருமிதத்துடன் மேடையில் மங்காத புன்னகையுடன் நின்றிருந்தார்கள் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ரா.

வண்ணமதியின் வாய் முகூர்த்தம் பலிக்கும் விதமாக இவர்களது திருமணத்திற்குப் பின்னர் சில மாதங்களில் இவர்கள் இருவருக்கும் குட்டிப் பையனோ, பொண்ணோ பிறந்து இவர்களது இந்தப் புன்னகையை வாழ்நாள் முழுவதும் மங்காமல் நிலைத்து வைத்து அனைவருக்கும் அன்பையும், பாசத்தையும் வாரி வழங்கட்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோமாக!

முற்றும்

இன்னும் எபிலாக் மட்டும் இருக்கு டியர்ஸ்...
 

Advertisement

Advertisement

Back
Top