வரம் 6

Advertisement

Writer girl

Well-known member
Member
அதற்குப் பிறகு, தனது அறையை விட்டு வெளியே வரவே இல்லை சஹஸ்ரா.

மாலையில் குடிக்கும் கொட்டை வடிநீரைக் கூடத் தன்னு அறைக்கே கொண்டு வந்து கொடுக்குமாறு தாயிடம் கூறி விட்டிருந்தாள்.

அவளது சுபாவத்தை அறிந்த அவளது மற்ற குடும்ப உறுப்பினர்களும் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை.

அவளைத் தவிர மற்றவர்கள் தங்களது மாலைத் தேநீர் அருந்தும் போது,“நீங்க மூனு பேரும் இன்னைக்கு ரெஸ்ட் எடுங்க. நாளையிலிருந்து நாம ஊரைச் சுத்திப் பார்க்கப் போகலாம்”என்று பால்ராஜ் மற்றும் அவரது பிள்ளைகளிடம் உரைத்தார் ரமணன்.

அதே சமயம், தனது மகளின் அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தார் கஸ்தூரி.

அவரது கையில் காப்பிக் கோப்பை இருந்தது. அதை சஹஸ்ராவிடம் கொடுத்து விட்டு,”உன் வேலை எல்லாம் முடிஞ்சிருச்சா? கொஞ்ச நேரம் வெளியே வந்து உட்காரலாம்ல?”என்று ஆதங்கத்துடன் மொழிய,

உடனே,”என்னோட வேலை இன்னும் முடியலைம்மா”என்று அலட்சியமாக உரைத்த மகளிடம்,

“நீ இப்போ வெளியே வந்து உட்கார வேண்டாம். ஆனால் நாளைக்கு அவங்களை வெளியே கூட்டிட்டுப் போகும் போது எங்க கூட நீ வந்து தான் ஆகனும்”என அறிவுறுத்தினார் கஸ்தூரி.

“ம்மா”என்று அவரிடம் மறுப்புத் தெரிவிக்க வாயெடுக்க,

“இங்கே பாரு சஹா! உனக்கு அவங்களைப் பிடிக்காது தான்! ஆனால் வீட்டுக்கு வந்து இருக்கிறவங்க கிட்டே நீ இப்படித் தான் மூஞ்சியில் அடிச்சா மாதிரி நடந்துக்கனும்ன்றதை தான் நாங்க உனக்குச் சொல்லி வளர்த்தோமா என்ன? அதுவும் அவங்க உங்கப்பாவோட தங்கச்சி மல்லிகாவோட புருஷனும், அவரோட பிள்ளைங்களும் தான்! நீ அவங்க கிட்டே இப்படி நடந்துக்கிட்டா அவங்களோட மனசு எவ்வளவு கஷ்டப்படும்! அதையெல்லாம் யோசிச்சுப் பார்க்க மாட்டியா? உனக்கு அவங்களைப் பிடிக்காது தான்! ஆனால் உன்னோட மல்லிகா அத்தையையும், மாமாவையும் ரொம்ப பிடிக்கும் தான? அவங்க மேலே மதிப்பும், மரியாதையும் வச்சு இருக்கேன்னு அப்பப்போ சொல்லுவ தானே? அப்படி இருக்கும் போது அவங்க பிள்ளைங்களை மட்டும் ஏன் அவமானப்படுத்துறா மாதிரி நடந்துக்கிற? நீ இப்படி பண்றது சரியில்லை சஹா!”என்று அவள் மீது இருந்த தனது ஒட்டு மொத்த மனக்கிலேசத்தையும் அவளிடம் கொட்டி விட்டு அவளை அடிபட்ட பார்வை பார்க்க,

தன் தாயின் வார்த்தைகளில் இருந்த நிதர்சனம் அவளுக்குள் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தி விட்டதா? அல்லது மல்லிகா மற்றும் பால்ராஜின் மீது அவளுக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் நினைவிற்கு வந்து விட்டதா? என்று தெரியவில்லை.

ஆனால் சற்று முன்னர் அவளிடமிருந்த வெறுப்பும், கோபமும் அவளது முகத்திலிருந்து காணாமல் போயிருந்தது.

எனவே,”என்னை மன்னிச்சிருங்கம்மா. நான் இனிமேல் இப்படி அவங்க கிட்ட நடந்துக்க மாட்டேன்! அவங்களையும் மரியாதைக் குறைவாக நடத்த மாட்டேன்! அவங்க ஊருக்குக் கிளம்புற வரைக்கும் நான் நல்லவிதமாக நடந்துக்குவேன்!”எனத் தன் அன்னையிடம் மன்னிப்புக் கோரினாள் சஹஸ்ரா.

“சரி. இப்போ வெளியே போகலாமா?”என்று அவளிடம் ஆதூரமாக வினவினாள் கஸ்தூரி.

“போகலாம்மா”என்றதும், அவர் முன்னால் செல்ல அவரைப் பின் தொடர்ந்து வரவேற்பறைக்கு வந்திருந்தாள் சஹஸ்ரா.

அவளைக் கண்டதும் அங்கேயிருந்த அனைவருடைய முகங்களிலும் மகிழ்ச்சியின் ரேகைகள் தென்படவும்,

அதில் குற்ற உணர்வு மேலோங்க நாற்காலியில் அமைதியாக அமர்ந்து விட்டாள்.

“வேலை முடிஞ்சதா சஹாம்மா?”என அவளிடம் கனிவாக வினவினார் பால்ராஜ்.

“முடிஞ்சிருச்சு மாமா”என்று அவருக்குப் பதிலளித்தாள் சஹஸ்ரா.

“ஸ்நாக்ஸ் எடுத்துக்கோடா”என்று சிற்றுண்டி இருந்த தட்டை அவளிடம் தந்தார் ரமணன்.

அதை வாங்கிக் கொறித்தவளது மனநிலையை அறிந்து கொண்டு,”சஹா! நாளைக்கு நீயும் எங்க கூட ஊர் சுத்திப் பார்க்க வருவியா?”என்று அவளிடம் கனிவுடன் கேட்டாள் வண்ணமதி.

அவளது குரலில் முன்பிருந்த கிண்டல் தொனி இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு,

“கண்டிப்பாக வருவேன் மதி”என்று அவளுக்குப் பதிலளித்தாள் சஹஸ்ரா.

அதைக் கேட்டதும் அவளைப் பரவசத்துடன் ஏறிட்டான் மகிழம்பூவன்.

ஏனென்றால், தங்களது வரவு அவளுக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் கூட அவளைப் பார்ப்பதற்காகவே இங்கே வந்திருந்தான்.

ஆனால் தனது காதல் தேவதையோ தன்னை ஒருமுறை கூட நன்றாகப் பார்க்கவில்லை என்பதை உணர்ந்தவனின் மனம் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானது.

ஆனாலும் சஹஸ்ராவின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து அவளிடமிருந்து தள்ளியே இருந்து கொண்டான் மகிழம்பூவன்.

அதேபோல் தன்னவளை வம்பிழுக்க வேண்டாம் என்று தன் தமக்கை வண்ணமதியிடமும் கேட்டுக் கொண்டவனோ, இப்போது சஹஸ்ராவின் மாற்றத்தைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தான்.

அதனால் புன்னகையை வரவழைத்துக் கொண்டு,”உன்னோட ஆஃபீஸையும் பார்க்கனும்னு ஆசையாக இருக்கும்மா. அங்கேயும் எங்களைக் கூட்டிட்டுப் போக முடியுமா?”என அவளிடம் இறைஞ்சும் பார்வையுடன் கேட்டான் மகிழம்பூவன்.


அதில் அவளது மனம் உருகி விட்டதைப் போன்றதொரு உணர்வு அவளுக்கு.

ஆகவே,”ம்ஹ்ம். நாளைக்கு நான் ஆஃபீஸூக்குப் போயிட்டுச் சொல்றேன். அப்பறம் நீங்க வாங்க”என்ற மகளை ஆச்சரியத்துடன் பார்த்தனர் ரமணன் மற்றும் கஸ்தூரி.

அவளது மனமாற்றம் தங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும் கூட அவளுக்கும், மகிழம்பூவனுக்கும் திருமணம் பேசப்பட்டால் நிச்சயமாக இந்த அமைதியை உடைத்து வெடித்துச் சிதறி விடுவாள் என்ற உண்மை அவர்களது மனங்களைக் கலங்கடித்தது.

ஆனால் உணவுண்ட பின், அனைவருக்கும் இரவு வணக்கத்தைக் கூறி விட்டுத் தன் அறைக்குள் வந்த பின் தன்னிடம் மகிழம்பூவன் எது கேட்டாலும், அதற்குச் சரியென்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தன்னுடைய மூளை அனிச்சையாக கட்டளையிடுவதன் அர்த்தம் என்ன என்பதை தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள் சஹஸ்ரா.

ஏனெனில் அவளுக்கு எப்போதுமே தன்னிடம் ஏட்டிக்குப், போட்டிப் பேசும் வண்ணமதியை விடத் தன்னிடம் சண்டையிடாமல், தான் கூறுவதைச் சரி என்று ஒப்புக் கொண்டும், தன்னைத் தொல்லை செய்யாமலும், கோபப்பட வைக்காமலும் நடந்து கொள்ளும் மகிழம்பூவனிடம் சில சமயங்களில் மனம் இளகிப் போய் விடும் தன்னை எண்ணி அவளுக்கே வியப்பாக இருந்தது.

அதைப் பற்றிய சிந்தனை மேற்கொண்டிருந்தவளோ அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாத உறக்கத்தில் ஆழ்ந்து போனாள் சஹஸ்ரா.

அதே சமயம், பால்ராஜூம், மகிழம்பூவனும் ஒரே அறையில் தான் தங்கிக் கொள்ள விருப்பம் கொண்டனர்.

அதனால் அவர்களது விருப்பத்தை மதித்து அந்த அறையிலேயே அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார் ரமணன்.

“ஏன்டா மகிழு! நம்ம சஹா பொண்ணு உங்கிட்ட மட்டும் எப்படி அமைதியாகப் பேசுறா? நீ கேட்டால் மட்டும் எல்லாத்துக்கும் உடனே சரின்னு சொல்றான்னு யோசிச்சுப் பார்த்தியா?”எனத் தன் மகனிடம் கேட்டார் பால்ராஜ்.

“ஆமாப்பா. எனக்கும் அதே சந்தேகம் தான்! நான் இங்கே வர்றதுக்கு முன்னாடி அவளுக்கு நம்மளைப் பிடிக்காதுன்னு சொன்னேன்ல? ஆனால் இங்கே வந்ததுக்கு அப்பறம் கொஞ்சம், கொஞ்சமாக அவ நம்மகிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிட்டா! அத்தை தான் அவளுக்கு ஏதோ சொல்லிப் புரிய வச்சு இருக்காங்க போல. அதனால் தான் இப்படி மாறி இருக்கிறாள்!”என்றுரைத்தான் மகிழம்பூவன்.

“அவ அவங்க அம்மாவோட வார்த்தைக்காக எங்ககிட்ட நல்லா நடந்துக்கிறா. ஆனால் உங்கிட்ட மட்டும் அவளோட மென்மையான மனசைக் காட்றாளோன்னுத் தோணுது”என அவனுக்கு விளக்கம் அளித்தார்.

“எனக்கும் அப்படித் தான் தோணுதுப்பா! அது ஏன் - னு எனக்கும் புரியலை”என்றவனிடம்,

“ஆனால் அவ உங்கிட்ட அப்படி நடந்துக்கிறதும் நல்லது தானே? அதிலிருந்து அவ மாறாமல் இருக்கனும்”என்று அவனிடம் கூறி விட்டு உறங்கத் தானும் தூக்கத்தை மேற்கொண்டான் மகிழம்பூவன்.

தன்னுடைய அறையில் தனது கணவன் பூபாலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தாள் வண்ணமதி.

“செந்தில் என்னப் பண்றான்ங்க?”

“அவன் நல்லா உறங்கிட்டான்ம்மா”என்றவனோ, செல்பேசியைப் பக்கவாட்டில் திருப்பி ஆழ்ந்து உறங்கும் மகனை அவளுக்குக் காட்டினான் பூபாலன்.

அவன் தூங்கும் அழகைக் கண்களால் பருகி விட்டுத் தனது கணவனைக் காதலுடன் ஏறிட்டு,”உங்க எல்லாரையும் விட்டுட்டு நான் மட்டும் கிளம்பி இங்கே வந்துட்டேன். சாரிங்க”என்று அவனிடம் மன்னிப்புக் கேட்க,

அதற்கு,”அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. நான் வெளியூருக்குப் போனால் நீயும் இப்படித் தானே இருந்திருப்ப? நீ அங்கே நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா”என்றான்.

அதைக் கேட்டதும்,”ம்ஹ்ம். எல்லாரும் சாப்பிட்டீங்களா? அத்தை, மாமா தூங்கிட்டாங்களா?”எனச் சில பல கேள்விகளைக் கேட்டு அவனிடம் பதில்களைப் பெற்றுக் கொண்டு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு உறங்கிப் போனாள் வண்ணமதி.

அடுத்த நாள் காலைப் பொழுது அழகாக விடிந்து விடத் தனது அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகி விட்டு,”நாம முதல்ல என்னோட ஆஃபீஸூக்குப் போயிட்டு வந்துட்டுச் சாயந்தரமா ஊரைச் சுத்திப் பார்க்கலாமா?”எனத் தனது குடும்ப உறுப்பினர்களிடம் வினவினாள் சஹஸ்ரா.

“இதுவும் சரியான யோசனை தான்ம்மா”என்று மற்றவர்கள் ஒப்புக் கொண்டவுடன் சிறிதும் தாமதிக்காமல் வீட்டிலிருந்துக் கிளம்பி அவளது அலுவலகத்திற்குச் சென்றனர் அனைவரும்.


- தொடரும்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top