Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் ; இமையாக நீ--25

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 25

வாசு அங்கிருந்து வெளியேறிச் சென்றதும் , வெண்ணிலாவின் கண்கள் மீண்டும் சுற்றும், முற்றும் ஆராய்ந்து கொண்டே இருந்தன. அப்போது, சிதறி விழுந்த ஃபைலில் இருந்த ஒரு காகிதம் மட்டும், கேட்பாரற்று அங்கே கிடந்தது.அதனைக் கண்ட வெண்ணிலா உடனே அந்தக் காகிதத்தைத் தனது கையில், எடுத்துக் கொண்டு, அந்த அறையின் மெல்லிய வெளிச்சத்தில்,அதில் இருந்த, குறிப்புகளை ஆராயத் தொடங்கினாள்.

அதில் இருந்த, தகவல்கள், மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தன. ' Human genetic disorders ---An intro for bio- war ' என்ற தலைப்புடன் , அதில், குறிக்கப் பட்டிருந்தது என்னவென்றால், இயற்கை முறையில் ஒவ்வொரு கருவுக்கும், 23+23= 46 , குரோமோசோம்கள் இருக்கும்; அதாவது கண்டிப்பாக, இருக்கத் தான் வேண்டும்.அப்படி ஏதாவது, குரோமோசோம் இணைகள் பிறழ்ந்தோ, அல்லது சிதைந்தோ போய் விட்டிருந்தால் அந்த குழந்தை ,பிறக்கும் போதே ஊனமுற்ற குழந்தையாகத் தான் பிறந்திடும் .அதிலும் அவர்கள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளாகத் தான் இருந்திடுவர். இப்போது, செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை முறைகள் , பெருகி .வந்திடும் இந்த காலகட்டத்தில், கருவை உருவாக்கிடும் போதே, ஒரு குரோமோசோமை அதன் இணையில் இருந்து அகற்றி விட்டால் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும், ஊனமுற்ற குழந்தைகளாகத் தானே இருந்திடும் . இப்போது, வாசு அப்படி ஒரு சட்டத்துக்குப் புறம்பான காரியத்தில் தான் ஈடுபட்டு இருந்தான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ரம்யாவின் மரணத்திற்கு காரணமான ஷீபாவும் மற்ற மருத்துவமனை உறுப்பினர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என வாசு ஷீபாவிடம் பேச நினைத்து மருத்துவமனைக்குச் சென்று ஷ்பாவைச் சந்தித்தார், ஆனா ஷீபா அவனது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தினார். ரம்யாவின் மரணத்திற்குப் பிறகு அவருக்கும் ஷீபாவுக்கும் இடையே நடந்த உரையாடல்
வாசுவின் நினைவுக்கு வந்தது..

வாசு ஒரு மயக்க மருந்து சிகிச்சை நிபுணர் என்பதை அறிந்து கொண்ட ஷீபா, அவனை விலை பேசத் தொடங்கினாள்.

" இதோ பாருங்க வாசு. ஏதோ தப்பு நடந்து போச்சு, உங்க தங்கை கொஞ்சம் எமோஷனலாகவும் பாதிக்கப்பட்டு இருந்தா. அதனால தான், அவங்களை எங்களால காப்பாத்தவே முடியலை. மரணத்தை எதிர்த்துப் போராடறதுக்கு, அவ தயாரா இல்லை. சரி, நடந்தது, நடந்து போச்சு.இப்ப நாம கொஞ்சம் பிஸினஸ் பேசலாமா?." என்று கேட்டாள்.

" என்னது பிஸினஸா? என்ன பேசறீங்க நீங்க? இதுல என்ன பிஸினஸ் பண்ணப் போறீங்க. ஃபெர்டிலிடி சென்டர் எல்லாம் குழந்தை உற்பத்தி பண்ற நிறுவனங்களாகிடுச்சே. அப்புறம் நீங்க எல்லாரும் இப்படித் தான் பேசுவீங்க " என்று சாடினான் வாசு.

" இப்ப, இயற்கையான முறையில குழந்தை பெத்துத் தர்றதுக்கு, அவங்களுடைய உயிரணுக்களுக்கு சக்தி இருந்தாலும், அதை முறைப்படியா செய்து தங்களுடைய வாழ்க்கையை நிறைவா மாத்திக்கறதுக்கு மக்களுக்கு மனசு தான் விட்டுப் போச்சு . பாருங்க, இந்த ஃபைலை, இந்த வருஷம் மட்டும் என் கிட்ட புதுசா டிரீட்மெண்ட் எடுத்துக்கறதுக்காக வந்தவங்க பத்தாயிரம் பேருக்கு மேலே . இதோட வருஷக் கணக்கா தொடர்ந்து வந்துட்டு இருக்கறவங்க, இப்படி நிறைய. நான் போன வருஷம், ஐவிஎப் பண்ணினதுல, எண்பது சதவீதம் சக்ஸஸ் ஆயிடுச்சு.அதனால், எனக்கு லண்டன் யுனிவர்சிட்டில இருந்து கிடைச்ச, ஆஃபர் தான் இந்த பிராஜெக்ட். அதில தான், உங்களையும் என்னோட கலந்துக்கச் சொல்றேன் " என்று சொன்னாள் மருத்துவர் ஷீபா.

"ஒன்னும் அவசரம் இல்லை. நீங்க நல்லா நிதானமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தா போதும். ஆனா, இது உஙகளுக்குத் தான் " என்று சொல்லி அவனிடம் ஐம்பது லட்சம் ரூபாய்க்கான காசோலையைத் திணித்தாள்.

அதற்கு மேல் வாசு எதுவும் பேசவில்லை. அங்கிருந்து வெளியேறிச் சென்று விட்டான்.அன்று வாசுவைத் தனது தில்லுமுல்லு வேலைகளுக்கு எல்லாம் ஒரு பகடைக்காயாக மாற்றிக் கொள்ள, முயற்சித்த ஷீபாக்கு, வெற்றியே கிட்டியது.

ஆம்! வாசுவிற்குத் தன் தங்கையை மறக்க, ஒரு போதை ஊசி தேவைப்பட்டது. விளைவு, அவனது படிப்பு, தீவிர ஆராய்ச்சி மனப்போக்கு இவை அனைத்தும் , இப்படி ஒரு தேவையற்ற களத்தில், இணைக்கப் பட்டு விட்டது . அன்று மருத்துவர் ஷீபாவிடம் இருந்து வாசு பெற்றுக் கொண்ட ஃபைல் தான், இப்போது, வெண்ணிலாவின் கைகளில் சிக்கிக் கொண்டது.ஃபைலை ஒரு முறை முழுமையாகப் படித்து முடித்த போது வெண்ணிலாவிற்கு, அதன் சாராம்சம், விளங்கவில்லை. மீண்டும், மீண்டும் வாசித்த போது தான் அவளுக்கு அதன் விளக்கம், புரிந்தது.

' அடப் பாவி, இவ்வளவு கீழ்த்தரமானவனா நீ? உன்னைப் போய் நான் நம்பினேனே? ஆனா என்னை எதுக்காக இங்கே, கூட்டிட்டு வந்து அடைச்சி வச்சிருக்கே. நிச்சயமாக இதிலே எந்த விதமான நல்ல எண்ணமும் உன் கிட்ட கிடையாதுன்னு எனக்கு இப்பத் தான் தெரியுது; இதிலே சாரதா அம்மா, நல்லவங்களா? இல்லை அவங்களும் வில்லங்கம் தானா? " என்று தனக்குள் கேட்டுக் கொண்ட அவளுக்கு, பதில் சொல்லப் போவது யார்??

--------------------------------------------------------------------------------------------------------------------------
இளநீர் விற்றுக் கொண்டிருந்த பெரியவரிடம் இருந்து, அழைப்பு வந்ததும் உடனே, தனது அலைபேசியை ஆன் செய்த தீபக், " ம், சொல்லுங்க பெரியவரே! என்ன விஷயம்? " என்று கேட்டான்.

" தம்பி இப்ப இந்தப் பக்கம் ஒரு ஆம்புலன்ஸ் வண்டி போச்சு ..அதிலே இருந்து ஒரு பொம்பளை அலர்ற சத்தம் கேட்டுச்சு. சந்தேகப்பட்ட நான், என் மகளை வண்டியை எடுத்துட்டு அந்த ஆம்புலன்ஸ் பின்னாடியே போகச் சொன்னேன். அவ, போயிட்டு வந்து சொல்றா, அந்த வண்டி நீங்க தேடிட்டு வந்த வீட்டுக்குத் தான் போய் நின்னதாம். ஆம்புலன்ஸ் வண்டி நின்ன உடனே, வீட்டுக்குள்ள இருந்து முகமூடி போட்டுட்டு , ஒரு நாலு பேரு வந்து, அந்தப் பொம்பளையை ஸ்டிரெச்சரில படுக்க வச்சி, உள்ளே தூக்கிட்டுப் போயிட்டாங்களாம். அதுக்கப்புறம், கதவை சாத்தி வச்சிட்டதுனால, தனக்கு எதுவும் தெரியலைன்னு சொல்லிட்டு, திரும்பி வந்துட்டா அவ " என்று சொன்னார்.

" ரொம்ப நன்றி பெரியவரே. உங்க பொண்ணுக்கும் என்னோட நன்றியைச் சொல்லிக்கறேன். இதே போல, ஏதாவது, சந்தேகத்துக்கு உரிய ஆசாமிங்க நடமாட்டம், ஏதாவது இந்தப் பக்கம் தெரிஞ்சுதுன்னா, உடனே என் கிட்ட சொல்லுங்க " என்று சொன்னான் தீபக் .

இளநீர் வியாபாரியிடம் இருந்து இந்த செய்தி, தீபக்கை அணுகிய போது , ரவிச்சந்திரனும் அவனுடன் தான் இருந்தான்.இருவருமாக இணைந்து தங்களது மதிய உணவினை உண்டு கொண்டிருந்தனர் , ரவிச்சந்திரனின் அம்மாவுடன்.

தீபக், அந்த தொலைபேசி அழைப்பிற்குப் பின் அசாதாரணமாக இருப்பதைக் கண்ட, சுமதி, " தம்பி என்ன ஏதோ பலமான யோசனையில் இருக்கீங்க போல, முதல்ல சாப்பிடுங்க தம்பி . அதுக்குப் பிறகு மத்த விஷயங்களை எல்லாம் பேசிக்கலாம் " என்று அவனை ஆற்றுப் படுத்தி விட்டு மீண்டும், அவர்களை தன் பாங்கில் உபசரிக்கத் தொடங்கினாள்.

" இல்லைம்மா, இப்ப இங்க நடக்கிற சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, நாம திரும்பவும் கற் காலத்துக்கே திரும்பவும் போயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங் வருது எனக்கு. பாருங்க, இவன் கிட்ட பேசிக்கிட்டு, கூடவே கார்ல வந்த பொண்ணு, அடுத்த நிமிஷமே காணாமப் போயிட்டாங்க, அவங்களைத் தேடப் போனா , ஏதோ புற்றீசல்னு சொல்லுவாங்களே, அது மாதிரி என்னென்னமோ புதுசு, புதுசா கிளம்பிட்டு வருது. எதை முன்னிலைப் படுத்தி எப்படித் தேடப் போறேன்னு தெரியலை " என்று புலம்பினான் .

அவனது குரலில் அதீத நம்பிக்கை இன்மை தொனித்தது. அதனைக் கண்ட சுமதி, " கடவுள் போட்டுட்டு வர்ற கணக்கு எல்லாத்துக்கும் தீர்வுன்னு ஒன்னு கண்டிப்பா உண்டு தம்பி. எல்லா கணக்குகளும் எளிதாகவே இருந்துச்சின்னா, அப்புறம் வாழ்க்கைல ஏது சுவாரசியம் " என்றாள்.

ரவி உடனே தீபக்கிடம், " என்ன ஆச்சுடா , இப்ப யாரு உனக்கு போன் பண்ணினாங்க? ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிட்டே? சொல்லுடா " என்று கேட்டான்.

" சொல்றேன், சொல்றேன்டா இன்னிக்குக் கொஞ்சம் மனசு விட்டுப் பேசினாத் தான் என்னோட அடுத்த கட்ட தேடல்ல, என்னால முழுமையா இறங்கிட முடியும்னு தோனுச்சு. அதான் நான் உன் வீட்டுக்கே வந்தேன். அம்மா சமைச்ச பிரியாணியைச் சாப்பிட்ட பிறகு எனக்குப் புதுசா ஒரு தெம்பு வந்த மாதிரி இருக்குது " என்று சொல்லிப் புன்னகைத்த அவன், பிரீத்தாவைத் தான் சந்தித்தது முதல் , அன்று காலை தான் சந்தித்த, பெரியவர் சொன்ன தற்போதைய செய்தி வரை அனைத்தையும் சுமதியிடமும், ரவியுடனும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினான்.

அதனைக் கேட்ட சுமதி, " எனக்கு என்னவோ, நீ திரும்பவும் அந்த வீட்டுக்கே போய், அந்த வயசான அம்மா கிட்ட பேசிப் பார்த்தா, உனக்கு இன்னும் வேற ஏதாவது கிளூ கிடைக்கும்னு தான் தோனுது " என்று சொன்னாள்.

" ஆனா , நீ அவங்களை மட்டும் தான் தனியாப் விசாரிச்சுப் பார்க்கணும் தீபக் " என்றாள் சுமதி.

" அப்புறம், அந்த வயசான அம்மா நீ சந்திச்ச ஆளோட அம்மான்னே வச்சிக்குவோம். அப்ப அந்தக் குழந்தை, அது யாரோடது, அவனோடது தானா ? அதையும் நீ குறிச்சு வச்சிக்க " என்று சொல்ல ரவி உடனே எழுந்து கை தட்டத் தொடங்கினான்.

" அம்மா எப்படிம்மா இதெல்லாம் நீயே ஒரு துப்பறியும் சாம்பவியா மாறிட்டே போல இருக்கு " என்று கேட்டான்.

" ஆமாம்டா, உனக்கு ஒன்னு தெரியுமா? பெண்கள் அந்தந்த சூழலுக்குத் தகுந்த மாதிரி தங்களை ஆக்கபூர்வமா மாத்திக்கிற திறமை படைச்சவங்க. என்ன பண்ணச் சொல்றே, உன்னோட தவிப்பைப் பார்த்துட்டு என்னால, எப்படி சும்மா இருக்க முடியும்? என் உலகமே நீ தானே? " என்று சொல்லிப் புன்னகைத்தாள்.

தீபக், வியப்புடன் அவளைப் பார்த்தான். இப்போது கேள்வி கேட்பது அவனது முறை ஆனது. " அம்மா, நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே. காணாமப் போயிருக்கிற வெண்ணிலா, எந்த நிலைமையில உங்க கிட்ட திரும்பி வந்தாலும் நீங்க அவங்களை உங்க மருமகளா ஏத்துப்பீங்களா? " என்று கேட்டான்.

சுமதி , புன்னகை செய்தாள். " அப்படி எதுவும் அசம்பாவிதங்கள் நடந்திடக் கூடாதுன்னு தான் நான் பிரார்த்தனை பண்ணிட்டு இருக்கேன். ஆனாலும், தவிர்க்க முடியாத, பட்சத்தில ஏதாவது நடந்தாக் கூட, அவளை ஏத்துக்கிறது, என் கைல இல்லை, ரவி கிட்ட தான் இருக்குது " என்றாள்.

ரவி சுமதியைக் குழப்பத்துடன் பார்த்தான். " ம்ம், சொல்லுடா. முதன் முதல்ல, அவளைப் பார்த்த உடனே எந்த மாதிரியான ஃபீலிங் உனக்குள்ள வந்துதோ, அது போன்ற உணர்வுகள் காலம் பூராவும் அவளைப் பார்க்கும் போது உனக்குள்ள வருமா. இல்லை நானும் வாழ்ந்தேன்னு, கடமைக்காக அவ கூட வாழ்ந்து முடிச்சுடுவியா? " என்று மீண்டும் அவனிடம் கேட்டாள் சுமதி.

இதற்கு ரவி என்ன பதில் சொல்லப் போகிறான்?

தொடர்ந்து வாசித்து உங்களது கருத்துக்களைச் சொல்லுங்கள் ஃபிரெண்ட்ஸ். மிக்க நன்றி.

( வரும்)

 
என்னவோ வாசு தப்பா இருக்க மாட்டான்னு தோணுது
 
எனக்கென்னவோ வாசு தப்பா இருக்க மாட்டான் என தோணுது ..
பாப்போம் ..?
சூப்பர் 😀
 
Top