Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ--31

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
31

வாசு தொடர்ந்தான். ரம்யா, பணி புரிந்து வந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர், டாக்டர் ஜென்சியின் மூலமாக, மரபணுக் குறைபாடுகளுடன், பிறந்திடும் குழந்தைகளுக்கான, மருந்தினைப் பற்றிய ஆராய்ச்சிப் பணி, செய்திட அவனுக்கு அழைப்பு வந்தது.

அந்த, மருந்தானது, அமெரிக்க நிறுவனத்தின் பிரத்யேகமான தயாரிப்பு. அதன் தயாரிப்பு பற்றிய ஆராய்ச்சிகள் இன்னமும் இந்தியாவில்
நடைபெறவில்லை.

' ஜோல்ஜென்ஸ் ' என்ற பெயர் கொண்ட அந்த அமெரிக்க தயாரிப்பு மருந்தின் விலையே சுமார் ஒன்றரை கோடி!

ஆனால், அந்த மருந்தும் தயாரிக்கப்பட்ட பதினைந்து தினங்களுக்குள், உபயோகப்படுத்திட வேண்டும், இல்லை என்றால், அதுவும் பாழ் தான்.

அதனால், இந்தியாவிலேயே, அப்படி ஒரு மரபணுக் குறைபாடுகளைச் சீரமைத்திடும், மருந்தினைத் தயாரித்திடும் ஆராய்ச்சியில் தான் மருத்துவர் ஜென்சி ஈடுபட்டு இருந்தாள்.

அப்படி ஆய்வுக் கூடங்களில் தயாரிக்கப்படும் , மருந்தினை செலுத்தி , அதன் செயல்பாடுகளைப் பரிசோதனை செய்திட, மரபணு குறைபாடுள்ள குழந்தைகள் வேண்டுமே!

அப்படிப்பட்ட குழந்தைகளை உற்பத்தி செய்திடத் தான் வாசுவின், உதவி ஜென்சிக்குத் தேவையாக இருந்தது.

ஏனெனில், குரோமோசோம் பிறழ்ச்சியைச் செயற்கையாக உண்டாக்கிட மயக்க மருந்துகளின் செயல்பாடுகளே மிகவும் அலாதியானது.

பார்பிச்சியூரேட்ஸ் ( Barbiturates) மற்றும் நிக்கோடினாய்ட்ஸ் ( nicotinoids)
போன்ற, ஆழ்நிலை மயக்கத்தில், ஒரு நடமாடும் மாந்தரையே தள்ளி விடும், மருந்துகள் , அப்போது தான் கருத்தரிக்கக் காத்திருக்கும், கருமுட்டைகளை, தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடும் தன்மை கொண்டது, என்று சொன்னால் அது மிகையாகாது!

அதற்கான மருந்துகளை, சரியான முறையில், கருமுட்டைக்குள் செலுத்தி, மரபணு குறைபாடுடன் கூடிய கருவினை, அதன் பின் ஊசி மூலம், பெண்களின் கருப்பைக்குள் செலுத்தி விடுவார்கள்.

அந்தப் பெண்கள்??? அவர்களைத் தருவிக்கும் பொறுப்பு மருத்துவர் ஷீபாவுடையது.

அப்படி தான், பிரீத்தா வாடகைத் தாய் ஆனாள். நல்ல வேளையாக, அவளது உடல் அந்த வேண்டாத கருவினை ஏற்றுக் கொள்ளவில்லை.

அப்போது தான் மருத்துவர் ஷீபாவின் அடுத்த இலக்கு வெண்ணிலா, என்பதைத் தெரிந்து கொண்ட வாசு அவளும் தனக்குத் தெரிந்தே இப்படி ஒரு சாக்கடைக்குள் விழ வேண்டாம் என்ற எண்ணத்தில் அவளைக் கடத்திச் சென்றான்.

வாசு சற்று நிறுத்தினான். அங்கே, இன்னமும் வேண்டாத நிசப்தம் தான் உலவிக் கொண்டிருந்தது.

பின் வெண்ணிலாவைப் பார்த்த வாசு, " உன்னை இந்த ஷீபா டாக்டர் ஹாஸ்பிட்டல்ல பார்ப்பேன்னு நான் சத்தியமாக எதிர்பார்க்கவேயில்லைடி நிலா. உன்னைப் பார்த்த நிமிஷத்தில எனக்கு இந்த டாக்டரோட, சிகிச்சை செயல்பாடுகளை நினைச்சு, மனசுல பெருசா ஒரு பயம் தான் வந்தது. அதான் உன்னை எப்படியாவது அந்த இடத்தில இருந்து அப்புறப் படுத்திட நெனச்சேனே தவிர வேற எந்த விதமான கெட்ட எண்ணங்களும் எனக்குக் கிடையாது " என்று சொன்னான்.

" சரி, அப்ப இப்படி குறை மாசத்திலே இறந்து போற குழந்தைகளோட பிரேதங்களை எல்லாம், எதுக்காக பத்திரப்படுத்தி வச்சு இருக்கீங்க " என்று கேட்டான் தீபக்.

" அது, அதை எல்லாம் வேற மாதிரி, ஆராய்ச்சிகளுக்கு உபயோகப்படுத்திக்குவோம் " என்று சொன்னான் வாசு.

" அதாவது, ஸ்டெம் செல், தெரபி; டிஷ்யூ தெரபி, அந்த மாதிரி ஏக போக விளைச்சலைத் தர்ற, பண்ணைங்க மாதிரி. அப்படித் தானே மிஸ்டர் வாசு, & டாக்டர் ஷீபா " என்று ஏளனமான குரலில் கேட்டான் தீபக்.

வாசு பேச்சு அற்றவனாய்த் தன் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.

" சரி, வாசு .இப்ப நான் உங்களை ஒரு கேள்வி கேக்கறேன் .என் மேல தப்பு, இல்லை, என் மேல தப்பு இல்லைன்னு மட்டும் திரும்பத் திரும்பச் சொல்றீங்களே, வாசு , ஆனா உங்க தங்கை மாதிரி , எத்தனையோ பெண்களோட வாழ்க்கை உங்களால சிதைக்கப்பட்டு இருக்கே, அதுக்கு நீங்க என்ன, விளக்கம் தரப் போறீங்க ? இதோ எங்க கண்ணுக்கு எதிரேயே, ஒரு பொண்ணு பிணமாகி இருக்காங்க. இன்னும் இது மாதிரி எத்தனை பெண்கள்?? சொல்லுங்க வாசு, இதை எல்லாம் பார்த்தா உங்க தங்கையோட ஆத்மா சாந்தி அடையுமா? நான் பாதிக்கப்பட்டவன், நான் இப்படித் தான் பழி வாங்குவேன் இது தான் என் சட்டம், அப்படின்னா சொல்லப் போறீங்க? நீங்க படிச்சவர் தானே, உங்களோட ஆறாவது அறிவைக் கொஞ்சம், உபயோகப்படுத்திப் பாருங்களேன் நான் இப்பக் கேட்ட கேள்விகளை எல்லாம் உங்களையே நீங்க கேட்டுப் பாருங்க , ஐ மீன், உங்க மனசாட்சி கிட்ட " என்று சாடினான் தீபக்.

வாசுவிடம், தீபக்கின் கேள்விக்குப் பதில் இல்லை.

சில கணங்கள் அங்கே, கனத்த நிசப்தம் நீடித்தது.

வெண்ணிலா தான் முதல் நபராக அந்த நிசப்தத்தைக் கலைத்தாள் .
அவள் தீபக்கை நோக்கி , " சார், உங்களுக்கு டைம் ஆகுது பாருங்க. நீங்க, இந்தக் கிரிமினல்களைக் கூட்டிட்டு கிளம்புங்க சார். முதல்ல கேஸ் பைல் பண்ணி, எஃப்.ஐ.ஆர் போடுங்க. நான் கம்பிளெயின்ட் தர்றேன் " என்று சொன்னாள்.

தீபக் அவளை வியப்புடன் பார்த்தான். " ஓ.கே சிஸ்டர். நீங்க சொன்னதே போதும். இந்த கேஸ் விஷயத்தைப் பத்தி நான் பார்த்துக்கறேன். நீங்க முதல்ல ரவியைக் கூட்டிட்டு வீட்டுக்குக் கிளம்புங்க " என்றான்.

" இது, சாதாரண கேஸ் இல்லை. நமக்குத் தெரியாத இன்னொரு டாக்டரும் கூட இதில சம்பந்தப்பட்டு இருக்காங்க இல்லையா. அவங்களைத் தேடணும். இல்லை, இவங்களை எல்லாம் ஸ்டேஷன்ல வச்சி விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிக்கணும். அப்பத் தான் அந்த டாக்டரைப் பத்தி, நமக்கு ஏதாவது தெரிய வரும் " என்று சொன்னான் தீபக்.

பின் வெண்ணிலா ரவியை நோக்கி, " ரவி, நாம இப்ப வீட்டுக்குப் போகலாமா " என்று கேட்டாள்.

அவள் அவ்வாறு கேட்பதற்காகவே காத்துக் கொண்டு இருந்த ரவி, " ஓ .கே வெண்ணிலா. போகலாம் . இனி இந்த இடத்தில நமக்கு என்ன வேலை? " என்று கேட்டான்.

" ஆனா ரவி, நான் இதோ, இந்தப் பாப்பாவையும், சாரதா அம்மாவையும் கூட்டிட்டுத் தான் வருவேன் . உனக்கு இதில ஏதாவது மறுப்பு இருக்குதா? " என்று கேட்டாள்.

ரவி ஒரு கணம் யோசித்தான். பின், " உன் விருப்பம் போலவே செய்யலாம். இப்ப இவங்களை நம்ம கூட கூட்டிட்டுப் போகலாம். ஆனா நம்ம வாழ்க்கை, முழுசுக்கும் இவங்க நம்ம கூடத் தான் இருக்கணுமான்னு, நம்ம வீட்டில உள்ள பெரியவங்க தான் முடிவு செய்யணும் " என்று சொன்னான்.

அதற்குள், தீபக்கின் கட்டளையின் பெயரில், அந்த வழியாக சென்ற கால் டாக்சி ஒன்று நிறுத்தப்பட்டது. ரவி வெண்ணிலாவுடன் சாரதாவும், சுஷ்மியும் அதில் ஏறிக் கொண்டனர்.

சுஷ்மி வெண்ணிலாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டபடி அவளது மடியில் அமர்ந்து கொண்டாள்.

இன்னமும் அவளது விசும்பல் ஓய்ந்து இருக்கவில்லை. அதனைக் கண்ட சாரதா, இதமாகத் தனது பேத்தியின் தோள்களைத் தட்டிக் கொடுத்தாள்.

சாரதா, தன் கண்களுக்கு முன் பெரிதாக ஒரு கேள்விக் குறி தென்படுவதாக உணர்ந்தாள்.

வாசு, இப்படி ஒரு குற்றவாளியாக மாற ஒரு மறைமுகக் காரணிகளாக இருந்த தனது உறவுகளைத் தேடிச் செல்ல அவளது மனம் விரும்பவில்லை .

மேனகாவும், சபாபதியும் தன்னை ஏற்றுக் கொள்வார்களா என்பதும் அவளுக்குத் தெரியவில்லை.

சொந்த ஊரில், பல்லாங்குழி விளையாடிய பக்கத்து வீட்டுத் தோழியாக இருந்த போதிலும், இப்போது மேனகா, தன்னால் எட்டவே முடியாத உயரத்தில் நின்று கொண்டிருப்பதாக அவளுக்குப் பட்டது.

' ம் ம் இந்த சுஷ்மி குட்டி இல்லைன்னா நான், இந்தப் பாழும் உலகத்தை விட்டுப் போறதுக்குக் கூட நான் தயங்க மாட்டேன். ஆனா, இப்ப ரம்யாவுக்கு நான் வாக்குக் குடுத்திருக்கேனே. அதைக் காப்பாத்தறதுக்காகவாவது நான் உயிரோட இருந்து தானே ஆகணும் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் சாரதா.

இவளது மன ஓட்டங்களைச் சிறிதும் அறியாதவளாய், சுஷ்மி நிலாவின் தோள்களில் சாய்ந்தபடி , உறக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்தாள்.
_____________________
சுஷ்மியை வெண்ணிலா தூக்கிக் கொண்டதும், வாசுவின் மனத்தில், அது வரை இருந்த பாரங்கள் யாவுமே கழுவித் துடைத்தாற் போல காணாமல் போய் விட்டிருந்தன.

' எனக்குத் தெரியும் நிலா. நீ சுஷ்மியை விட்டுட்டுப் போக மாட்டேன்னு. ஏன்னா நீ என்னோட நிலா. என்னை விட்டுட்டு நீ விலகிப் போக நெனச்சாலும், உன் மனசும், உடலும் , காதலின் ஸ்பரிசத்தை, உணரும் ஒவ்வொரு கணத்திலயும் என்னையும் நினைச்சுக்கிட்டே தான் இருக்கும். அது தான் மறுக்கவே முடியாத உண்மை ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவனது வீடு, மற்றும் நிலவறை ஆராய்ச்சி கூடங்கள் யாவும், சீல் வைக்கப்பட்டு, அங்கே காவலுக்கு இரண்டு போலீசார்கள் நிறுத்தி வைக்கப் பட்டனர்.

மருத்துவர் ஜென்சியைத் தேடும் பணி, முடுக்கி விடப்பட்டது.

அங்கிருந்து கைப்பற்றிக் கொண்டு வந்த கோப்புகள், மற்றும் மருந்துப் பொருட்கள் யாவும், ஸ்டான்லி மருத்துவமனை ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அனைவரையும் அனுப்பி வைத்து விட்டு தீபக் ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

வாசு வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்த, தனது பைக்கைக் கிளப்பிய போது, ' ம், ஒவ்வொரு குற்றமும் நமக்கு ஒவ்வொரு கதையைச் சொல்லுது. டாக்டர் வாசு, உங்க கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கவேயில்லை ' என்று தனக்குள் சொல்லிக் கொண்ட தீபக் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்து கொண்டான்.
( வரும்)

ஹாய் ஃபிரெண்ட்ஸ், அடுத்த எபி போட்டுட்டேன். படிச்சுப் பார்த்துட்டு உங்க கமெண்ட்ஸை சொல்லுங்க. மிக்க நன்றி.

 
அடப்பாவி வாசு இப்படி பண்ணிட்டியே .....
மாமியார் வீட்டில் நல்லா கவனிப்பாக போ😡
சூப்பர் 😀
 
Top