__________________________
சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் வழியே பயணித்து வந்த மூவரும் கோவையில் இருந்து ஊட்டிக்கு காரில் தங்கள் எஸ்டேட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார்கள்.
நேரம் இரவு எட்டு மணியை தாண்டி இருக்கும். வழியெல்லாம் அமைதியாகவே பயணித்து வந்த மூவரின் மனதிலும் கவலைகள் ஆட்கொண்டு இருந்தது.
காரின் முன் இருக்கையில் அமர்ந்து காரை தங்கள் எஸ்டேட்டை நோக்கி விரட்டினான் மாறன்.
"மாமா..அம்மாவுக்கு தகவலை சொல்லிடலாமா?" என்று அவன் மனைவி மாயா கேட்டதும் "என்ன மாயா சொல்ல சொல்லுற? அத்தையால இந்த செய்தியை எப்படி தாங்கிக்க முடியும்? நம்ம நேர்ல போய் பார்த்து பக்குவமா சொல்லிக்கலாம்." என்று சூழ்நிலையை அறிந்தவனாக சொன்னான் மாறன்.
மாயாவும் மாறனும் கவலையாகவே பேசிக்கொண்டு இருக்க காரின் பின் இருக்கையில் அமர்ந்து தன் முகத்தை அவன் கைக்குட்டையை கொண்டு மூடி இருந்தான் ராணா @ ரணதீரன்.
ராணாவின் மனமெல்லாம் ரணமாக இருந்தது. தன் கோவத்தை கட்டுப்படுத்த தெரியாமல் அவன் கைகளை மடக்கி இருக்கையில் அடிக்கடி குத்திக்கொண்டான்.
"மச்சான்..கோவப்படாத மச்சான்." என்ற மாறன் தன் அருகே அமர்ந்து இருந்த மாயாவை பார்த்து "உன் தம்பியை சமாதானம் பண்ணு." என்றான்.
"எப்படி சமாதானம் பண்ண சொல்லுறிங்க? அவன் தான் கல்யாணமே வேணான்னு சொன்னானே. நம்ம தானே இவனை வம்பு பண்ணி அழைச்சிட்டு போனோம். ஆனா இப்போ பாருங்க என்னாச்சுன்னு." என்ற மாயாவின் கண்கள் தன் தம்பியை நினைத்து கலங்கியது.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் மாயாவின் செல் போன் அலறியது.
"மாமா..பாப்பா தான் கூப்பிடுறாள்."என்று மாயா சொன்னதும்
"எடுத்து பேசு."என்றான் மாறன்.
"ஐயோ..இப்போ நான் பேசினா காலையில அங்க நடந்த விஷயத்தை எல்லாம் சொல்ல வேண்டியது வருமே."என்று அச்சத்துடன் மாயா சொன்னதும்.
"சரி நேர்ல போய் பேசிக்கலாம் போனை அணைச்சு வை." என்ற மாறன் மீண்டும் ஒரு முறை தலையை திருப்பி பின் இருக்கையை பார்க்க, அங்கே தன் முகத்தை மூடியப்படியே அமர்ந்து இருந்தான் ரணதீரன்.
"நேத்து கூட அம்மா அவங்களுக்கு வர போற மருமகளுக்கு நெத்தி சுட்டி, கம்மல் ஜிமிக்கி,காசு மாலை,ஒட்டியாணம்,தங்க கொலுசுன்னு நூறு பவுனுக்கும் மேல நகையா வாங்கி அலமாரியில பூட்டி வச்சிருக்காங்க.ஆனா இன்னைக்கு எல்லாமே கனவா போச்சு." என்ற மாயாவின் வார்த்தையை கேட்டு பின் இருக்கையில் இருந்தவன் மேலும் கோவம் கொண்டவனாக அமர்ந்து இருந்தான்.
"சத்த சும்மா இரு மாயா. உன் தம்பியே கோவமா இருக்கான். இப்போ ஏன் நீ தேவையில்லாம எதை எதையோ பேசிட்டு வர" என்ற மாறன் அவன் விரட்டிய காரை ரயில்வே கேட் அருகே நிறுத்தி
"இன்னும் இருபது நிமிஷத்துக்கு இந்த கேட் மூடி தான் இருக்கும். நீ எதாவது சாப்பிடுறியா? அங்க ஒரு சின்ன கடை இருக்கு. உனக்கு எதாவது வேணுமா?" என்று மாறன் கேட்டதும்
"ரொம்ப தாகமா இருக்கு மாமா. தண்ணீர் பாட்டில் இருந்தா வாங்கி தாங்க." என்ற மாயா காரில் இருந்து கீழே இறங்க, மாறன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அங்கிருந்த கடைக்கு சென்றான்.
மாயாவை பார்த்த கடைக்கார பெண்மணி"வணக்கம் சின்னமா, எப்படி இருக்கீங்க? பெரியம்மா எப்படி இருக்காங்க?உங்க தம்பிக்கு கண்ணாலம்ன்னு ஊருல சொல்லிக்கிட்டாங்க, பொண்ணும் மாப்பிளையும் காருக்குள்ள இருக்காங்களா? "என்று எட்டி பார்த்தப்படி தன் கேள்விகளை கேட்டு முடித்தார் அந்த பெண்மணி.
"ஹாங்.. காருல தான் இருக்காங்க. எனக்கு ஒரு பாட்டில் தண்ணீர் தாங்க."என்ற மாயாவுக்கு தன் தம்பியின் திருமணம் நடக்கவில்லை என்ற உண்மையை சொல்ல வாய் வர வில்லை.
முப்பத்திரெண்டு வயதுடைய மாயாவுக்கு அவள் விரும்பிய சொந்தக்கார பையன் மாறனை மனமுடித்து வைத்தார் அவளின் அன்னை வேதநாயகி.
மாறன் ஒற்றை பிள்ளை என்பதால் அவனின் அம்மா கீதாவும்,மாறனும் வேதநாயகி கட்டுப்பாட்டில் இருக்கும் நெல்சன் எஸ்டேட்டிலேயே தங்கி உள்ளார்கள்.
வேதநாயகிக்கு வயது ஐம்பதை தாண்டி இருக்கும்.
வேதநாயகியின் அப்பா ஊட்டி எஸ்டேட்டில் கணக்கு பிள்ளையாக பணி புரிந்து வந்தவர். ஊட்டி எஸ்டேட்டை உரிமையாளர் வேறொருவருக்கு விற்ற பிறகும் வேதநாயகியின் தந்தை அங்கேயே வேலை பார்த்து வர, அந்த எஸ்டேட்டை வாங்கிய கருப்பு இனத்தை சேர்ந்த நெல்சன் என்கிற தொழில் அதிபருக்கு சுட்டி தனமாக அந்த எஸ்டேட்டை சுற்றி வந்த பாவை வேதநாயகியை பிடித்து போன காரணத்தால் முறைப்படி நம் நாட்டு கலாச்சாரம் மாறாமல் முழு காதலுடன் அவரை திருமணம் செய்துக்கொண்டு அந்த எஸ்டேட்டுக்கே வேதநாயகியை ராணியாக்கி அழகு பார்த்தார் நெல்சன்.
வேதநாயகி நெல்சன் தம்பதிகளின் காதலுக்கு அடையாளமாக அவர்களுக்கு முதலில் பிறந்த பெண் குழந்தையின் பெயர் தான் மாயா.
மாயா அப்படியே வேதநாயகியின் உருவம், அழகு, நிறம் என்று தமிழர்களின் சாயலில் பிறந்த பெண் குழந்தை. ஆனால் இரண்டாவதாக பிறந்த ஆண் பிள்ளை ராணா என்கிற ரணதீரன் நெல்சனின் சாயல்.அதாவது கருப்பர் இனத்தின் உருவமாக பிறந்தான்.
வேதநாயகி தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள் மீதும் சரிசமமான பாசத்தை பொழிந்தவருக்கு தன் கணவன் நெல்சன் மீது பல மடங்கு காதல் அதிகரிக்க,
நெல்சன் தன் மனைவி பிள்ளைகளுக்காக ஊட்டியில் இவர்களின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கி குவித்தார்.
ரணதீரனுக்கு ஐந்து வயது இருக்கும் நிலையில் தன் சொந்த நாட்டிற்கு சென்று வருவதாக சொன்ன நெல்சன் பயணித்த விமானம் பாதி வழியில் வெடித்து சிதறியதால் வேதநாயகி சிறுவயதிலேயே தன் கணவரை இழந்தவருக்கு இன்றும் பாதுகாப்பாக அவர் கணவன் சேர்த்து வைத்த பல கோடி கணக்கான சொத்துக்கள் மட்டுமே உள்ளது.
தொழிலில் உள்ள எதிரிகளை சமாளித்து இத்தனை வருடமாக சொத்தை கட்டி காத்து வந்த வேதநாயகிக்கு இன்று துணையாக அவருடைய மகன் ரணதீரன் கைகொடுக்க, அவனுக்கு ஒரு திருமணத்தை நடத்தி முடிக்க அரும்பாடு படுகிறார் வேதநாயகி.
ரணதீரனின் தற்போதைய வயது 29.அவன் தன் தந்தை நெல்சனின் நிறம்.பார்ப்பதற்கு கலையாக இருந்தாலும் அவனின் கருப்பு நிறம் அவனை கூட்டத்தில் தனியாளாக எடுத்துக் காட்டும். அவனின் நிறத்தைக் கொண்டு ரணதீரனை பள்ளியில் சக மாணவர்கள் கேலி செய்தாலும் படிப்பில் முதன்மையாக வந்தான்.
அவனுக்கேன்று நண்பர்கள் இல்லை. கல்லூரி படிப்பை முடித்து இன்று பல தொழில் நிறுவனங்களை கட்டி காக்கும் ரணதீரனின் இன்பம், துன்பம்,நல்லது, கெட்டது எல்லாமே அவனின் அறையில் உள்ள ஓவியங்கள் மட்டுமே அறிந்துக் கொள்ளும் என்று நம்பியவனுக்கு இடது கையில் ஓவியம் வரையும் பழக்கமுண்டு.
அவன் வரைந்த ஓவியங்களுக்கு அவனே உயிர்க்கொடுத்து அவர்களிடம் சகஜமாக பேசுபவனுக்கு உயிருள்ள மனிதர்கள் அவனை இழிவுப் படுத்தி பேசுவதை போல, ஓவியங்கள் இவனை அசிங்கப்படுத்தி வேடிக்கை பார்க்காது என்று நம்பினான்.
யாரிடமும் சகஜமாக பேசி பழகாத ரணதீரனின் தாழ்வு மனப்பான்மைக்கு அவன் வேலியாக போட்டுக் கொண்டது அவனின் கோவம் தான். ஆம்! ரணதீரன் கோவமான ஆண் மகனும் கூட.
ஆனால் தன் அம்மா, அக்கா,அக்காவின் மகள் மயிழினி என்று இவர்கள் மூவரிடத்தில் மட்டும் கோவத்தை மறந்து பாசத்தை தேடுவான்.
பல நாட்களாக எப்படியாவது தன் மகனுக்கு திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என்று எண்ணிய வேதநாயகி சென்னையில் வசித்து வரும் இவர்களின் பாட்னர் கண்ணையாவின் மகள் மீனாவை திருமணம் செய்துக்கொடுக்க சம்மதம் கேட்டதும், அவரும் சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டு தன் மகளின் விருப்பத்தை கேக்காமல் திருமண ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார்.
தன் மகனின் திருமணத்தை கணக்குளிர பார்க்க போகிறோம் என்று எண்ணிய வேதநாயகி கடந்த வாரம் எதிர்பாராத விதமாக காலில் அடிபட்டு நடக்க முடியாமல் படுக்கையில் விழுந்து இருக்க. தன் மகள் மாயா மற்றும் மாறனின் பொறுப்பில் ரணதீரன் திருமணத்தை சென்னையில் உள்ள இவர்களின் குலதெய்வ கோவிலில் செய்து முடிக்க ஏற்பாடு செய்தார்.
என்னதான் திருமண வாழ்கை மீது பற்று இல்லாமல் போனாலும் தன் அன்னையின் ஆசையை நிறைவேற்ற ரணதீரனும் தன் அக்கா மாமாவுடன் நேற்றைய தினம் விமானம் வழியே சென்னைக்கு பறந்தவனை மாப்பிளையாக இன்று காலை சபையில் அமர வைத்தார்கள்.
கோவிலில் பெண் வீட்டாரின் சொந்தங்கள் சில பேர் ரணதீரனை பார்த்து அவர்களுக்குள் ஜாடை பேசிக்கொள்ள "நாழி ஆகுது பொண்ண அழைச்சிட்டு வாங்க.."என்று ஐயர் சொன்னதும்.
"ஐயோ ஏங்க... நம்ம பொண்ணை காணோமுங்க.." என பெண்ணை பெற்ற அன்னை கையில் கடிதத்தோடு மனவரைக்கு ஓடிவந்ததும்
"மாப்பிளை நிறம் கம்மினு சொன்னிங்க.ஆனா இவரை பார்த்தா ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவரை போல இருக்காரு. இவரை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னோட தோழிங்க எல்லாம் என்னை டீஸ் பண்ணியே சாகடிச்சுடுவாங்க.அதுவும் இல்லாம சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டு இன்னைக்கு நான் இவரை கல்யாணம் பண்ணிகிட்டா அப்புறம் என்னோட வம்சமே இவரை போல கருப்பா அசிங்கமா தான் பிறக்கும்.அதனால எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. நான் போறேன். என்னை தேடாதிங்க." என்று லெட்டர் எழுதி வைத்த மணப்பெண் மீனா ரணதீரனை மனகோலத்தில் மனவரையில் தனியாக தவிக்கவிட்டு சென்று இருக்க.
"ஆமா..அந்த பொண்ணு பயத்திலும் அர்த்தம் இருக்க தானே செய்யுது. இப்படி கருப்பா இருக்குற பையனை யாரு தான் கல்யாணம் பண்ணிப்பாங்க" என்று கூட்டத்தில் ஒருவராக பேசிய பெண்மணியை முறைத்து பார்த்த ரணதீரன் கோவமாக மனவரையில் இருந்து எழுந்தவன் வேகமாக அங்கிருந்து வெளியேறியதை கைபேசி வாயிலாக ஊட்டி எஸ்டேட்டில் இருக்கும் வேதநாயகிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
"என்ன... இந்த முறையும் என் மகனுக்கு கல்யாணம் நடக்கலையா?" என்ற அதிர்ச்சியில் வேதநாயகிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தெரியாமல் தன் எஸ்டேட்டை நோக்கி பயணிக்கும் ரணதீரன் காரின் பின் இருக்கையில் அதீத கோபத்துடன் அமர்ந்து இருந்தான்.
"மச்சான் தண்ணி வேணுமா?"என்ற மாறனின் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு காரில் இருந்து இறங்கிய ரணதீரன் பாட்டிலில் இருந்த நீரை முழுவதுமாக பருகியவனுக்கு காலையில் இவனுக்கு நேர்ந்த அவமானத்தை இன்னும் மறக்க முடியாமல் உள்ளுக்குள் கோபக்கனலாக கொதித்துக் கொண்டு இருந்தான்.
"மாமா.. எஸ்டேட்டில் இருந்து போன் வந்துகிட்டே இருக்கு. பேசாம அம்மாகிட்ட கல்யாணம் நின்னு போன விஷயத்தை சொல்லிடலாமே" என்ற மாயாவின் கைபேசி மீண்டும் இசை எழுப்ப. கைபேசியை பிடுங்கி சுவிட்ச் ஆப் செய்து காரின் இருக்கையில் தூக்கி வீசினான் ரணதீரன்.
"என்னடா தம்பி நீ. இந்நேரம் அம்மாவுக்கு மட்டும் இல்ல,நம்ம கம்பெனில வேலை பார்க்குற ஆளுங்கள்ள இருந்து, ஏன் நீ அடிக்கடி போற சிவன் கோவில் ஐயருக்கு கூட உண்மை தெரிஞ்சு இருக்கும்"என்று மாயா சொன்னதும் தன் அக்காவை கோவமாக முறைத்த ரணதீரன் மீண்டும் காருக்குள் அமர்ந்தவனின் மொத்த கோவமும் காலையில் இவனை வேண்டாம் என்று திருமணத்தை நிறுத்திய பெண்ணின் மீது தான் திரும்பியது.
"ப்ச்.. விடு மாயா. இன்னும் அரைமணி நேரத்துல நம்மளே எஸ்டேட்க்கு போக தான் போறோம். அங்க போய் பார்த்து பக்குவமா அத்தைகிட்ட உண்மையை சொல்லிக்கலாம். நீ வந்து காருல உக்காரு" என்ற மாறன் ரயில்வே கேட் திறந்ததும் தன் காரை நெல்சன் எஸ்டேட் என்று அழைக்கப்படும் பிரேமாண்டாமான எழில் மிகு இயற்கை அழகைக்கொண்ட இடத்தை நோக்கி காரை விரட்டினான்.
அடுத்த அரை மணி நேரத்தில் மாறன் விரட்டிய கார் எஸ்டேட்டை சென்று அடைய
"ஐயா ஐயா பெரியம்மாவுக்கு நெஞ்சுவலி. நம்ம ஹாஸ்பிடலுக்கு தான் மாறன் ஐயாவோட அம்மா கீதா நம்ம பெரியம்மாவை டிரைவர் வேலுவுடன் அழைச்சிட்டு போயிருக்காங்க" என்ற தகவலை எஸ்டேட்டில் பணிபுரியும் நபர்கள் தெரிவிக்க.
"இப்படி ஏதாவது ஒன்னு நடக்கும்னு தெரிஞ்சு தான் நேர்ல வந்து கல்யாணம் நின்ன விஷயத்தை சொல்லலாம்ன்னு நினைத்தேன்.இப்போ பாரு அத்தைக்கு என்ன ஆச்சுன்னு."என மாறன் பதற
மாயா,மாறன்,ரணதீரன் என்று மூவரும் இவர்களின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேதநாயகியைக் காண விரைந்து சென்றனர்.
தன் அம்மாவின் நிலையை எண்ணி மாயா கண்கள் கலங்க,ரணதீரனுக்கோ தன்னால் தான் அவன் அன்னைக்கு இப்படி ஒரு நிலைமை என்று எண்ணியவன் இனி தன் வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று உறுதியாக மனதில் நினைத்துக் கொண்டவன்,தன் அன்னைக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்று எல்லாம் வல்ல சிவனை வேண்டிக் கொண்டான்.
"மாமா சீக்கிரம் போங்க அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே,இருங்க நான் அத்தைக்கு போன் பண்றேன்."
என மாயா கைபேசி மூலம் மாறனின் அம்மா கீதாவை அழைக்க,கை பேசி இணைப்பு இணைக்கப்படாத காரணத்தால் மேலும் பதற்றம் அடைந்தாள் மாயா.
"அத்த போன் எடுக்கல எனக்கு ரொம்ப பயமா இருக்கு " என மாயா மேலும் பயம் கொள்ள. மாறனும் வேகமாக காரை விரட்டியவன் எதிரே எங்கிருந்தோ ஓடி வந்த இளம் பெண் மாறனின் காரில் மோதி இரண்டடி தள்ளி கீழே விழுந்தவளின் பின் தலையில் அடிபட்டதும்,
"ஆ..அம்மா.."என்று வலியால் துடித்தாள் அந்த பெண்.
"யோவ் மாமா..காரை பார்த்து ஓட்ட கூடாதா?அங்க பாருங்க அந்த பொண்ண இடிச்சிட்டீங்க" என்று மாயா பதறியதும்.மாறன் காரில் இருந்து வேகமாக கீழே இறங்கி அந்த பெண்ணை நோக்கி ஓடியவன் "சாரிமா சாரிமா.. கார் வர்றது பார்க்காம ஏன் இவ்வளவு வேகமா ஓடி வர?" என்று மாறன் கேட்க,
"இந்தா தண்ணி குடி. அடி பலமா பட்டுருச்சா?அய்யய்யோ தலையில ரத்தம் வருது." என்ற மாயா மாறனின் கைக்குட்டையை வாங்கி அந்த பெண்ணின் ரத்தத்தை துடைத்து விட்டாள்.
"சார் சார்..என்னை காப்பாத்துங்க.என்னை துரத்திக்கிட்டு வராங்க" என்று அந்தப் பெண் உயிருக்கு பயந்து தூரத்தில் தன்னை துரத்திக் கொண்டு வரும் இரண்டு மூன்று நபர்களை சுட்டிக்காட்டியதும்
"என்ன துரத்திட்டு வராங்களா? ஆமா நீ யாரு?"என்று மாறன் கேட்டதும்.
"சார்..எனக்கு நாளைக்கு கல்யாணம். ஆனா எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல.நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். தயவுசெய்து என்னை காப்பாற்றி ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுருங்க ப்ளீஸ்."
என்று அந்த பெண் பயத்தில் சொன்னதும். மின்னல் வேகத்தில் காரில் இருந்து இறங்கிய ரணதீரன் கீழே விழுந்து கிடந்த பெண்ணை தன் உயரத்துக்கு தூக்கி நிறுத்தியவன், அவள் கன்னத்தில் பளார் பளார் என்று இரு பக்கமும் ஓங்கி அறைய, ஏற்கனவே தலையில் அடிபட்டு ரத்தம் கசிந்த பெண்ணுக்கு ரணதீரனின் இத்தகைய செயலால் மயக்கம் ஏற்பட்டு அதே இடத்தில் மயங்கி சரிந்து கீழே விழுந்தவளை பார்த்து
"கல்யாணம் வேணாம்னா மாப்பிள்ளை போட்டோவை காட்டி மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு கேட்கும் போதே பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது தானே?மனவரை வரைக்கும் அழைச்சிட்டு வந்து மாப்பிள்ளை மூஞ்சில கரிய பூசுறது தான் உங்கள மாதிரி அழகான பொண்ணுங்களுக்கு வேலையா?"என்று மயங்கி இருந்த பெண்ணை பார்த்து தன் மனதில் உள்ள வேதனைகளை வார்த்தையால் கொட்டித் தீர்த்த ரணதீரன் பேசும் எந்த வார்த்தைகளையும் கேட்க முடியாத நிலையில் மயங்கி கிடக்கும் பெண்ணவள் யார்.?

மீண்டும் சந்திப்போம்
Last edited: