Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

2. இனித் தேடப் பாதையில்லையே!

Advertisement

ITP

New member
Member
நதியாவின் வீட்டினருக்குச் சொந்தமாக ஒரு மெஸ் இருக்கிறது. அதில் வரும் வருமானத்தை வைத்துத் தான் தங்களது அன்றாடச் செலவுகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

காலையில் எழுந்து, சீக்கிரமாகவே அங்கே கிளம்பிச் சென்று விடுவர் அவளது பெற்றோரான கணேசன் மற்றும் சிவசெல்வி.

அவ்விடத்தில் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் கூடத் தாங்களும் தங்கள் பங்கிற்கு வேலைகளை எடுத்துச் செய்வார்கள் அவ்விருவரும்.

அதே போன்று, அவர்களுடைய இரு மகள்களான நதியா மற்றும் நளினியும் கூடத் தங்களுடைய சிறு பிராயத்தில் இருந்தே தங்களது தாய், தகப்பனுக்கு ஒத்தாசையாக மெஸ்ஸில் வந்து அவர்களைப் போலவே வேலை பார்த்துக் கொடுப்பார்கள்.

அவர்கள் பூப்பெய்து விட்ட பிறகு, மெஸ்ஸிற்கு அதிகமாக வந்து செல்ல வேண்டாமென்று தடுத்து நிறுத்தி விட்டனர் அவர்களது பெற்றோர்.

இப்படியாகத் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக் கொண்டிருந்தவர்களோ, இடையில் குடும்பத்தில் ஒரு சறுக்கல் ஏற்பட்டதால், சற்று ஆசுவாசம் அடைந்து, தங்களைச் சமாளித்துக் கொண்டு மீண்டும் உயிர்த்தெழுந்து இப்போது அமைதியானதொரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த நால்வரும்.

ஒருநாள்,”அவங்க இப்பவும் நம்மப் பொண்ணைக் கேட்கிறாங்க ம்மா” என்று தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கணேசன்.

அதற்குச் சிவசெல்வியோ,”யாருங்க?” என்று அவரிடம் வினவினார்.

உடனே அவருக்கு அதைப் பற்றிய விவரத்தைக் கூறி முடிக்கவும்,

”அப்படியா ங்க? இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்கப் பையனுக்கு நம்மப் பொண்ணைக் கேட்டாங்களே? அவங்க மறுபடியும் வந்து விசாரிச்சாங்களா?” என்றார்.

“ஆமாம் மா. அவங்கப் பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆகாமல் தான் இருக்காம். அதான், நம்மகிட்ட ஒரு தடவை கேட்டுப் பார்த்துக்கலாம்ன்னு வந்து எங்கிட்டே பேசினாங்க” என்று அவருக்கு விளக்கம் அளித்தார் கணேசன்.

“இன்னுமா அந்தப் பையனுக்கு கல்யாணம் ஆகாமல் இருக்கு? ஏதாவது பிரச்சினை இருக்குமோ ங்க?” என்று தன் கணவனிடம் வினவினார் சிவசெல்வி.

“அப்படியெல்லாம் எதுவும் இருக்காது ம்மா” என்று அவரிடம் நம்பிக்கையுடன் கூறிய கணவனை ஏறிட்டவரோ,

”அப்போ அந்தப் பையனையே கேட்டுப் பார்க்கிறதில் தப்பு இல்லைங்க” என்று கூறி விட்டார் அவரது மனைவி.

“அப்போ அவங்களை வீட்டுக்கு வரச் சொல்லவா, கடையில் வச்சுப் பேசவா?” என்று அவரிடம் யோசனை கேட்டார் கணேசன்.

சிவசெல்வி,“இப்போதைக்கு அவங்களை வீட்டுக்குக் கூப்பிட்டு வரச் சொல்ல வேண்டாம் ங்க. எதுவாக இருந்தாலும் கடையில் வச்சே பேசிக்கலாம். சம்பந்தம் கூடி வந்தால் நதி கிட்டே கேட்டுட்டுப் பொண்ணுப் பார்க்கிறதுக்கு வரச் சொல்லலாம்”

“சரிம்மா” என்றவர்களது பேச்சுக் குரல்கள் அத்தனையும் தன்னுடைய காதுகளுக்கு எட்டி விட்டது என்பதை அவர்களுக்கு அறிவிக்காமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் நதியா.

அந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகத் தன்னைப் பெண் கேட்ட சங்கதி தனக்கும் தெரியும் தான்!

அப்போதிருந்த சூழ்நிலையில் அந்த ஆணின் முகத்தை அவள் பார்த்தது கூட கிடையாது.

ஆனால், அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் தன்னுடைய கடந்த காலம் தெரிந்திருக்கும். அப்படியென்றால், அந்த ஆணுக்கும் இவ்விஷயம் நன்றாகவே தெரிந்திருப்பதற்கு வாய்ப்புள்ளது.

அப்படியிருந்தும் கூடத் தன்னையே திருமணம் செய்ய வேண்டுமென அவர் நினைப்பதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வி இவளது மூளையைக் குடைந்து எடுத்தது.

அவளது குழப்ப முகத்தைக் கண்ட நளினியோ,”என்னாச்சு க்கா? ஏன் இப்படி முகத்தை வச்சிருக்கிற?” என்று அவளிடம் விசாரித்தாள்.

அதற்கு,”என் கல்யாணத்துக்கு வரன் வந்திருக்குப் போல, அப்பாவும், அம்மாவும் அதைப் பத்திப் பேசிட்டு இருந்ததைக் கேட்டேன்” எனப் பதிலளித்தாள் நதியா.

“ஓஹ்ஹோ! அப்படி என்னப் பேசிக்கிட்டாங்க?”

தன்னிடம் விவரத்தை உரைத்தவளிடம்,”அவங்களுக்கு உன்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சு இருந்தும் பொண்ணுக் கேட்டு வந்திருக்காங்கன்னு நினைக்கும் போது ஆச்சரியமாகத் தான் இருக்கு. நம்ம அப்பாவும், அம்மாவும் எப்படியும் உங்கிட்ட வந்து விருப்பத்தைக் கேட்பாங்க. அப்போ அவங்ககிட்ட எல்லாத்தையும் தெளிவாக கேட்டு முடிவு சொல்லு” என்று அவளுக்கு ஐடியா கொடுத்தாள் நளினி.

“அப்படிங்குற?”

“ஆமாம் க்கா”

“சரி. அவங்கப் பேச வர்ற வரைக்கும் வெயிட் பண்றேன்” எனக் கூறி விட்டாள் அவளது தமக்கை.

வீட்டிலிருக்கும் வேளைகளில், தன்னுடைய தங்கைக்குப் பிடித்தமான உணவைச் செய்து வைப்பவள், அவ்வப்போது தங்களுடைய மெஸ்ஸூக்கும் சென்று அங்கே தாய், தந்தைக்கு உதவவும் செய்வாள் நதியா.

ஆனால், அவளுக்கு மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கியதில் இருந்து மகளை மெஸ்ஸிற்கு வர வேண்டாம் என்று கணேசனும், சிவசெல்வியும் தடை செய்து விட்டார்கள்.

அவள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை. எனவே, தனக்கும், தனது வீட்டினருக்கும் பிடித்தமான உணவோ, பொருளோ எதுவாக இருந்தாலும் செய்து கொடுத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறாள் நதியா.

இதே சமயம், இவர்கள் முன்னர் இருந்த ஊரில், தன்னுடைய வீட்டில் ஆற அமர உட்கார்ந்து தேநீரைப் பருகிக் கொண்டிருந்தான் பிரகதீஸ்வரன்.

“ஏன் ப்பா நீ அந்தப் பொண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கனும்ன்னு ஆசைப்பட்றியா?” என்று அவனிடம் வினவினார் அவனது அன்னை மங்கலவல்லி.

அவரைப் பார்த்துப் புன்னகைத்தவனோ,”ஆமாம் மா. அதிலென்ன உங்களுக்குச் சந்தேகம்?” என்றான் மகன்.

“ஏன்டா? நான் உனக்கு வேற பொண்ணைப் பார்க்கிறேன். நம்ம முத்துச்சாமி தரகர்கிட்டே சொன்னால் நூறு ஜாதகம் கொண்டு வருவாரு! அதில், நீ ஒரு பொண்ணைப் பார்த்து முடிவு பண்ணலாம்ல?” என்று அவனை அதட்டவும்,

“ம்ஹூம்! எனக்கு அந்தப் பொண்ணைத் தான் பிடிச்சிருக்கு ம்மா!” என்று அவருக்குப் பட்டென்று பதிலைக் கொடுத்து விட்டுத் தன்னுடைய அலுவலகத்திற்குச் சென்று விட்டான் பிரகதீஸ்வரன்.

அவனது தாயாரைப் பொறுத்தவரையில் அவரது மகனுக்குப் பெண் கொடுக்க, நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படியிருக்கும் போது, இந்தக் காதல் தோல்வி அடைந்த மகராசியைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன் மகன் ஒற்றைக் காலில் நிற்பது மங்கலவல்லிக்கு இரத்த அழுத்தத்தை உயர்த்தியது.

அதைத் தனது சொந்தப், பந்தங்களிடம் வேறு சொல்லிப் பொருமிக் கொண்டார்.

அவர்களில் சிலர்,”உன் பையனோட மனசை மாத்தி வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணி வை!” என்றும்,

வேறு சிலரோ,”அவனுக்கு இஷ்டப்பட்டப் பொண்ணைக் கல்யாணம் செய்து வைக்கலாம்ல வல்லி?” என்றும் கேட்டு விட்டுப் போயினர்.

இப்படி இரு தரப்பினரும் தன்னை நன்றாக குழப்பி விட்டுச் சென்றதால் தன்னுடைய மகன் விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் திக்கித் திணறிக் கொண்டிருந்தார் மங்கலவல்லி.

தனது சொந்த ஊரில் தான், தன்னுடைய பெற்றோர் பார்த்து வைத்தக் குறிஞ்சிநாதன் என்பவரின் கைகளால் மங்கல நாணைப் பெற்றுக் கொண்டு அவரது சரிபாதியாகினார் மங்கலவல்லி.

ஆனால், தனது நடுத்தர வயதிலேயே உடல்நலக் குறைவால் காலமாகி விட்டார் குறிஞ்சிநாதன்.

அதற்குப் பிறகுத் தன் கணவரின் ஆட்டோக்களை வாடகைக்கு விடும் தொழிலை உற்றார், உறவினர்களின் துணையுடன் நடத்தி வந்தவர், தன் மகன் தலையெடுக்கத் தொடங்கியதும் அவன் கையில் தொழிலை ஒப்படைத்து விட்டு வீட்டில் இருந்து கொண்டு ஓய்வெடுக்கத் தொடங்கி விட்டார் மங்கலவல்லி.

அவருக்கும், குறிஞ்சிநாதனுக்கும் பிறந்த ஒரே மகனான பிரகதீஸ்வரனோ, இளங்கலை தமிழ் இலக்கியம் படிந்திருக்கிறான். அதைப் படிக்க வைக்கவே தன் தாய்ப் படாதபாடு பட்டதை தெளிவாக அறிந்திருந்ததால், தனது மூன்று வருடப் படிப்பு முடிந்ததும் தன் தந்தையின் தொழிலைக் கையில் எடுத்துக் கொண்டு அதை இன்று வரை செம்மையுற நடத்திக் கொண்டு இருக்கிறான்.

அப்படியிருக்கும் போது தான், அவனுக்குப் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்தார் அவனது அன்னை.

அப்போதைய சூழ்நிலையில், அவர்களுக்குத் தெரிந்த நெருங்கிய உறவினர் ஒருவர், கணேசன் மற்றும் சிவசெல்வி குடும்பத்தைப் பற்றிச் சொல்லி, அவர்களது மெஸ்ஸையும் மங்கலவல்லிக்குக் காட்டிக் கொடுக்க, அதைக் கண்டதும், அவரும் கூட அவர்களிடம் சென்று பேச்சுக் கொடுத்தார்.

அப்படி பேசியதில், அவர்களுடைய மூத்தப் பெண் அப்போது தான் இளங்கலை பட்டப் படிப்பை முடிக்கப் போகிறாள் என்ற விஷயம் மங்கலவல்லிக்குத் தெரிய வந்தது.

இரு வீட்டாரும் ஒரே ஊரில் வாழ்ந்து கொண்டிருப்பதால் அவளை ஆங்காங்கே பார்த்திருக்கிறார் தான். ஆனால், அவளுடைய குணத்தைப் பற்றித் தெரியாததால், அந்த விஷயத்தை ஆறப் போட்டு விட்டார் மங்கலவல்லி.

ஆனால், அவரது சொந்தங்கள் அவரை நிதானமாக யோசிக்க விடவில்லை. அவரது மகனுக்கான மணப்பெண் இவளாக இருக்கலாம். அதுவுமில்லாமல், நளினியின் வீட்டாருடைய சொந்த ஊரும் இதுவேயாகும். அதனால், அவளது குணத்தில் எந்தக் குறையும் இருக்காது என்று வேறு அவருடைய காதுபடவே அடித்துச் சொன்னார்கள்.

அதனால், நளினியைப் பார்க்கப் பார்க்க, அவரது மனமும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது பேச்சில் சாயத் தொடங்கி விட்டது.

அவளது நடவடிக்கைகளைத் தன்னுடைய இரு கண்களாலேயே ஆழம் பார்த்து திருப்தி அடைந்து கொண்டார் மங்கலவல்லி.

அதற்குப் பிறகு, அந்தத் தம்பதியிடம் தானே நேரடியாகச் சென்று தன்னுடைய மகனைப் பற்றி அவர்களிடம் அனைத்தையும் ஒப்புவித்தவரோ,

அவர்களது பெண்ணைத் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விருப்பப்படுவதைப் பற்றி அவர்களிடம் கோடிட்டுக் காட்டவும்,

“எங்களை மன்னிச்சிருங்க ம்மா. எங்கப் பொண்ணுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை தயாராக இருக்கான். அவளுக்குக் காலேஜ் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வைக்கிறதாக இருக்கோம். இல்லைன்னா, அடுத்து இரண்டு வருஷம் அவளைப் படிக்க வச்சிட்டுக் கல்யாணம் செஞ்சு வைக்கிறதாக முடிவெடுத்து இருக்கோம்” என்று அவரிடம் தன்மையாக உரைத்து விட்டார்கள் கணேசன் மற்றும் சிவசெல்வி.

அதைக் கேட்டவுடன், தனது ஏமாற்றத்தை அப்படியே முகத்தில் வெளிப்படுத்தியவரோ,”அப்படியா? சரிங்க” என்று கூறி விட்டு,”உங்கப் பொண்ணும், அந்தப் பையனும் ஒருத்தரையொருத்தர் விரும்புறாங்களா?” என்று அவ்விருவரிடமும் சட்டென்று கேட்டு விட்டார் பிரகதீஸ்வரனின் அன்னை.

“ஆமாம் ங்க” என்று மட்டும் அவருக்குப் பதிலளித்தார் சிவசெல்வி.

அதன் பின்னர், அவர்களது மெஸ்ஸின் பக்கமே போகவில்லை மங்கலவல்லி.

இதில் யாரும் அறியாத விஷயம் ஒன்று உண்டென்றால், அது அவரும், அவரது உறவினர்களும் சேர்ந்து நளினியைப் பற்றியும், அவளது குடும்பத்தைப் பற்றியும் அவர்கள் பேசியதை எல்லாம் பிரகதீஸ்வரன் கேட்டு விட்டதை அவர்கள் அறியவில்லை.

அவனது மனதில் அந்தப் பெண்ணைப் பற்றியவை அனைத்தும் பசுமரத்தாணி போல ஒட்டிக் கொண்டது.

ஆனாலும், அவளுக்கு வேறொரு ஆடவன் மீது விருப்பம் என்றும், அதை அவளுடைய பெற்றோர் சம்மதித்து ஏற்றுக் கொண்டதைப் பற்றியும் அறிந்தவனோ, அடுத்த நிமிஷமே தன்னுடைய மனதிலிருந்த அவளது ஞாபகங்களை எடுத்து விட்டான் பிரகதீஸ்வரன்.


- தொடரும்
 
Last edited:
Top