Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

32. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
அகிலனுக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகியிருக்க அதுவரை அமைதியாக இருந்த உருவம் மீண்டும் அதன் வேலையை காட்டத் தொடங்கியது.

கடை சம்மந்தமான வேலை என அகிலன் முகிலன் இருவரும் இரண்டு நாள் வெளியூர் கிளம்பினார்கள். அகிலனின் மனைவியும் குழந்தையும் அவளது அம்மா வீட்டில் இருக்க, முகிலனின் மனைவியும் எட்டாம் மாதம் என்பதால் ஏற்கனவே அம்மா வீட்டிற்க்கு சென்றிருப்பதால் அன்று தனா மட்டுமே வீட்டில் இருந்தான்.

அண்ணன்கள் இருவரும் ஆயிரம் பத்திரம் சொல்லி, சுமதியிடமும் தனாவை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு விடியலிலேயே கிளம்பினார்கள். காலை உணவை கொண்டு வந்த சுமதியும் மீண்டும் மாலை பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்துவிடுவதாக சொல்ல, தனா பகல் முழுதும் மகாவின் அறையிலேயே அடைந்து கிடந்தான்.

வெகுநேரம் அறையிலேயே இருந்தவன் எழுந்து பின் பக்கம் செல்ல, அங்கு எப்போதும் தனா, மகாவிற்கு பறித்துக் கொடுக்கும் மல்லிகை பூ யாரும் இல்லாமல் தரை பரவிக் கிடந்தது. செடியின் அருகிலேயே பழைய நினைவை நினைத்துக் கொண்டிருக்க, மேலே அந்த உருவமோ மீண்டும் அந்த பொருளில் இருந்து வெளிவந்து அதன் அழுகி உருகிய உடலை வளைத்து நெளித்து,

ரீரீரி... எத்தனை நாட்களாக இதனுள்ளே அடைந்து கிடப்பது. நாதனின் இறப்பிற்கு பின் ஏன் என்று தெரியவில்லை, என்னால் இதை விட்டு வெளிவர முடியாமல் போய்விட்டது. இனி அப்படி இருக்க கூடாது. மீண்டும் பலிகளை எடுத்தால் மட்டும் தான் நான் அழியா வரம் பெற முடியும்.

இந்த வீட்டில் உள்ள அனைவரையும். அழித்து, இங்கு குடிகொண்டிருக்கும் குலதெய்வத்தை எனக்கு அடிமையாக்கி எனை அடக்கி ஆண்ட அந்த ஜடா முடியனின் பத்தினி அவளின் சக்தியை மிஞ்சி நானே உயர்ந்தவன் என உலகம் போற்ற வைக்கிறேன். இனி ஒருபோதும் என் நேரத்தை வீணாக்காமல் நான் எனது உயிர் பலிகளை எடுத்தால் தான் என் ஆசை பூர்த்தி அடையும்.

இப்போதே சென்று நான் எனது ஆட்டத்தை தொடங்குகிறேன், என கீழே வந்த உருவம் வீட்டை அதன் பழுப்பு நிற கண்களால் சுழற்றி சுழற்றி பார்த்து, வீட்டில் யாருமே இல்லாததை அறிந்து கொண்டது. மீண்டும் அங்கும் இங்கும் தாவித் திரிந்து பார்க்க, இப்போது சோகமே உருவாய் அமர்ந்திருக்கும் தனா சிக்கினான்.

ரிர்ரிரீ.... கிடைத்து விட்டது எனது அடுத்த பலி. இதோ இவன் உயிரை இன்றே உறிந்து குடித்து விடுகிறேன்.

ரிர்ரிரீ... இனி என் இலக்கை அடைவதில் எந்த தடையும் வராது. என மீண்டும் தாவி பறந்து கடைசி அறையை அடைந்த உருவம், அதன் வாய் பகுதியில் இருந்த அழுகிய சதைகளை நீவி விட்டு மெதுவாக காற்றை வெளியிட,

அங்கிருந்த பொருட்கள் எல்லாம் படார் படார் என கீழே விழத் தொடங்கியது.

ஏதேதோ நினைவுகளில் மூழ்கியிருந்த தனா, வீட்டிற்குள் வரும் சத்தத்தை கேட்டு வேகமாக உள்ளே வந்தான். கீழே நின்றுகொண்டே அண்ணாந்து சத்தம் எங்கிருந்து என கவனிக்க,

சத்தமோ நான் இங்கிருந்து வருகிறேன் என கடைசி அறையைக் கை காட்டியது.

மேலும் மேலும் பொருட்கள் விழும் சத்தம் கேட்க, விரைந்து மேலே ஏறி அந்த அறையை அடையும் ஒரு நொடிக்கு முன்பாகவே,

தனா எங்கடா இருக்க. தனா.... டேய் தனா... என அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் திரு.

திருவின் சத்தத்தில் மீண்டும் கீழே இறங்கி வர, அந்த உருவமோ திருவின் மேல் கடும் கோபத்தில் அதன் கரகர குரலில் உறுமித் தள்ளியது. அன்றைய சம்பவம் தான் திருவின் மரணத்திற்கு முழு முதற் காரணமாக அமைந்து போனது.

தனது வேலையில் குறுக்கிட்ட, திருவின் மேல் வெறி கொண்ட உருவம்,

என்னை நீயே தேடி வருவாய்.... உன் மரணத்தை நீயே தேடிக் கொள்வாய். உன்னை அணு அணுவாய் ரசித்து ருசித்து பலியெடுக்கிறேன் பார். மானிடனே என் வழியில் குறுக்கிட்ட உன்னை விரைவில் பார்த்துக் கொள்கிறேன் என கொக்களித்து விட்டு மீண்டும் அந்த பொருளின் உள்ளேயே அடைந்து கொண்டது.

கீழே வந்த தனா, என்ன மாமா இந்நேரத்துக்கு வந்திருக்கீங்க. ஏன் கடைக்கு போகலையா?

அதை ஏன்டா கேக்குற, உங்க மாமாவும் அத்தையும் என்ன போட்டு நச்செடுக்குறாங்க டா. அங்க புள்ள தனியா கெடப்பான் டா, நீ போய் ஒரு எட்டு பாருடா. உனக்கெல்லாம் அக்கறை இருக்காடா, சக்கரை இருக்காடா, அப்படியே போகும் போது புள்ளைக்கு சாப்பாடு வாங்கிட்டு போடான்னு ஒரே பேச்சு தான்டா. அவங்க பாசத்துல நான் சாப்பிடக் கூட இல்ல. கடைல இருந்து நேர இங்கேயே வந்துட்டேன் டா. இனி அங்க இளா பார்த்துப்பான்.

பற்கள் தெரிய சிரித்த தனா, வாங்க மாமா சேர்ந்தே சாப்பிடலாம்.

ம்ம். வாடா வாடா, என இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர். மற்றவை மறந்து முழுமூச்சாக மாமனும் மச்சானும் நிறைய விஷயங்களை பேசி சிரித்துக் கொள்ள, மாலை பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சுமதியும் வந்து விட்டாள்.

பிள்ளைகளோடு சேர்ந்து மூவரும் அன்றிரவு ஆனந்தமாக விளையாடிக் களிக்க அன்றைய தினம் தனாவிற்க்கு ஆனந்தமாக கடந்தது.

ஆனால் கோபத்தில் அடங்கி போன உருவமோ, நாளை எனது பலியை எடுத்து உங்கள் அனைவரின் மகிழ்ச்சியையும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கிறேன் பாருங்கள் என சபதமிட்டுக் கொண்டு, சொன்னபடியே மறுநாள் வீட்டின் மகிழ்ச்சியை மொத்தமாக அழித்தது.

மறுநாள் காலையிலேயே அகிலனும் முகிலனும் வந்துவிட, சுமதி அன்று அங்கிருந்தே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப, அந்நேரம் தான் தனா,

அகி அண்ணே, நேர்த்தி மேல பொருளெல்லாம் கீழ விழும் சத்தம் கேட்டுச்சு. அநேகமா அந்த கடைசி ரூமா தான் இருக்கும் போல, நீங்க இருங்க நான் போய் அதெல்லாம் பார்த்து எடுத்து வச்சிட்டு வந்திடுறேன். நேர்த்தி மாமா வந்ததால நான் போய் பார்க்க, மறந்துட்டேன்.

நீ ஏன்டா சிரமப்பட, இரு அப்பறமா நான் போய் எடுத்து வச்சிக்கிறேன். இப்போ நீ உக்காந்து சாப்பிடு என சுமதி சொல்ல, அகிலன், எனக்கு வெளியில, கொஞ்ச வேலை இருக்குடா அதை முடிச்சிட்டு இன்னிக்கி குழந்தைய பார்க்க போகனும். என் வண்டிய முகி எடுத்துட்டு போய்ட்டான். அதனால உன் வண்டிய எடுத்துக்கிட்டு போறேன். இப்போ நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நான் போய் உன் ரூம்ல இருக்குற சாவிய எடுத்திட்டு வரேன் என,

அறைக்குச் சென்றவன், மனைவிக்கு அழைத்து பேசிக் கொண்டே சாவியை எடுத்து வெளியே வந்து நிற்க, மெல்ல அந்த கடைசி அறையின் கதவு திறந்தது.


விடை தேடி பயணம் தொடரும்.....
Prabhaas...
 
Top