Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

5. இனித் தேடப் பாதையில்லையே!

Advertisement

ITP

New member
Member
அதைக் கேட்டவுடன்,”இல்லை” என்று பதிலளித்தாள் நதியா.

“ஏன் க்கா? அதைப் பார்த்துட்டுக் கூட ஓகே சொல்லி இருக்கலாம்ல?” என்று தமக்கையிடம் சலித்துக் கொண்டாள் நளினி.

“அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு முடிவாகிப் போச்சு! அப்பறம் எதுக்கு ஃபோட்டோ எல்லாம் பார்த்துக்கிட்டு? அதான், நேரிலேயே வருவார் தானே?” என்று தங்கையிடம் கேட்க,

“ம்ம்…ஆனாலும் அம்மாகிட்ட அவரோட ஃபோட்டோவைக் கேட்டுப் பார்க்கிறேன்” என்றவளோ,

தாயிடம் சென்று, மாப்பிள்ளையின் புகைப்படத்தைத் தருமாறு கேட்டாள் நளினி.

சிவசெல்வி,“அதை இன்னும் வாங்கலை டி. அவரை நாங்களே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது” என்க,

“என்னம்மா நீங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க? முதல்ல மாப்பிள்ளையோட ஃபோட்டோவை வாங்கிட்டு வந்து அக்கா கிட்டே கொடுங்க” என்று அறிவுறுத்தினாள் அவருடைய இளைய மகள்.

“ஏன் உன் அக்கா கேட்டாளா?” என்றவரிடம்,

“அவ கேட்கலைன்னாலும் மாப்பிள்ளை எப்படி இருப்பாருன்னு அவ பார்க்க வேண்டாமா?” என்றாள் நளினி.

அவளது பேச்சும் நியாயமானதாக இருக்கவே,”சரி. இன்னைக்கு அவங்களை வரச் சொல்லி இருக்கோம். அவங்ககிட்ட பேசிட்டு, அப்படியே ஃபோட்டோவை வாங்கிட்டு வர்றோம்” என்று மகளிடம் சொல்லி விட்டுத்,

தன் கணவனிடம் போய்,”அந்த அம்மாகிட்டே மாப்பிள்ளையோட ஃபோட்டோ வேணும்னுக் கேளுங்க” என்றவுடன்,

“ சரிம்மா. நீயும் இன்னைக்குக் கடைக்கு வர்ற தானே?” என்று அவரிடம் வினவினார் கணேசன்.

“ஆமாம் ங்க” என்று தன் மனைவி கூறவும்,

அவர்கள் இருவரும் மகள்களிடம் விடைபெற்றுக் கொண்டு மெஸ்ஸிற்கு விரைந்தார்கள்.

அன்றைய தினம், தங்கையும் கல்லூரிக்குக் கிளம்பிச் சென்று விட்டதால், தன்னுடைய செல்பேசியுடன் ஐக்கியமாகி விட்டாள் நதியா.

அதில் அவள் தன்னுடன் பயின்ற எந்த தோழர், தோழிகள் கைப்பேசி எண்களையும் பதிவு செய்து வைத்திருக்கவில்லை. அவளுக்கு அந்த எண்கள் நினைவில் இல்லை. அதனால் தான், தன்னுடைய உயிர்த் தோழிகளாக கருதப்பட்ட யாரையுமே தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வருத்தப்பட்டாள்.

அப்படியொரு சூழ்நிலை வந்ததற்குக் காரணமும் இருக்கிறது. தன்னுடைய முன்னால் காதலன் செய்த துரோகத்தைத் தாங்க இயலாமல் தன்னுடைய செல்பேசியில் போட்டிருந்த சிம் கார்டைக் கழட்டித் தோழி ஒருவளிடம் கொடுத்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டாள் நதியா.

அதை எண்ணிப் பார்க்கையிலேயே அவளது இதயத்தில் வலி எடுத்தது.

அந்தச் செல்பேசி எண்ணைத் திரும்பவும் பெறும் நோக்கம் அவளுக்குச் சிறிதும் இல்லை. அதே போல், தனது திருமணத்தைப் பற்றிய தகவல்களை அவர்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ள அவளுக்கு விருப்பமில்லை.

அதனால், தன்னுடைய வாழ்க்கையில் நடக்கப் போகும் நல்லது, கெட்டது எவருக்கும் தெரிய வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாள் நதியா.

முதல் முறையாக இப்போது தான், தன்னுடைய செல்பேசியில் வாட்சப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற செயலிகளைத் தரவிறக்கம் செய்து கொண்டாள். அதில் தன்னுடைய தங்கையின் உதவியுடன் கணக்கைத் தொடங்க வேண்டும் என்று காத்திருக்கலானாள்.

இதே சமயம், தன்னுடைய மகனிடம்,”அந்தப் பொண்ணோட அப்பா, அம்மாவைப் பார்த்துப் பேசப் போறேன் டா” என்று தன் மகனிடம் தெரிவித்தார் மங்கலவல்லி.

“சரிம்மா. அவங்க மெஸ்ஸூக்குத் தானே போய்ப் பேசப் போறீங்க?” என்றவனிடம்,

“இல்லை. அவங்க என்னைக் கோயிலுக்கு வரச் சொல்லி இருக்காங்க” என்றதும்,

“ஓஹ். சரி. போயிட்டு வாங்க” என்று கூறி அவரை அனுப்பி வைத்தான் பிரகதீஸ்வரன்.

அவன் தன்னிடம் பெண்ணுடைய புகைப்படத்தை வாங்கி வாருங்கள் என்ற உத்தரவோ, விண்ணப்பமோ வைக்கவில்லை என்ற ஆசுவாசத்துடன் நதியாவின் பெற்றோரைச் சந்திப்பதற்காக கோயிலுக்குப் போனவரோ,

அங்கே, அவருக்கு முன்னதாகவே வந்திருந்த சிவசெல்வி மற்றும் கணேசனிடம் சென்று,”வணக்கம் ங்க” என்று சொல்லிப் புன்னகைத்தார் மங்கலவல்லி.

“வணக்கம் மா” என்றதும்,

அவர்களை விட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டு,”உங்கப் பொண்ணு என்ன சொன்னா?” என்று உடனே விஷயத்திற்கு வந்தார் பிரகதீஸ்வரனின் அன்னை.

அவரது அவசரத்தைக் கண்டு அவருக்கு இந்தத் திருமணத்தை விரைவாக நடத்த விருப்பம் போலும் என்று எண்ணிக் கொண்ட அந்தத் தம்பதியோ,”எல்லாம் நல்ல பதில் தான் ம்மா. அவ கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டா” என்று அவரிடம் கூறினர்.

அதைக் கேட்டதும், தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு,”அப்படியா? ரொம்ப சந்தோஷம்!” என்று கூறிப் போலியாகப் புன்னகை செய்தார் மங்கலவல்லி.

“அப்பறம், எங்கப் பொண்ணு மாப்பிள்ளையோட ஃபோட்டோ கேட்டா” என்று அவரிடம் தயக்கத்துடன் வினவினார் சிவசெல்வி.

‘இது வேறயா!’ என்ற எரிச்சல் தனக்குள்ளே மூண்டாலும்,

வெளியே சிரித்துக் கொண்டே,”இப்போ எங்கிட்ட இல்லை. யார்கிட்டேயாவது கொடுத்து அனுப்பி விடவா?” என்று அவர்களிடம் கேட்டார் பிரகதீஸ்வரனின் தாய்.

“உங்க செல்லில் இருக்குமே ம்மா?” என்ற சிவசெல்வியிடம்,

“என்கிட்டே இருக்கிறது பட்டன் செல் தான். இங்கே பாருங்க” என்று அதைக் காட்டினார் மங்கலவல்லி.

கணேசன்,“அப்போ ஃபோட்டோவே கொண்டு வந்து தர்றீங்களா?” என்கவும்,

“ம்ம். தர்றேன் ங்க” என்றவரோ,

“பொண்ணுப் பார்க்க வர்றதுக்கு நாளைக் குறிச்சிட்டு சொல்றேன்” என்று அவர்களிடம் கூறி விட்டு அங்கேயிருந்து கிளம்பி விட்டார் மங்கலவல்லி.

அவர் சென்றதும்,”அவங்கப் பார்க்கிறதுக்கு வெள்ளந்தியாக இருக்காங்கள்ல?” என்று தன் கணவனிடம் வினவினார் சிவசெல்வி.

“ஆமாம் மா” என்றார் கணேசன்.

ஆனால், அவருடைய உண்மையான குணம் என்னவென்று அவர்களுக்குத் தெரிய வரும் நாளும் வெகு தொலைவில் இல்லை.

அந்த நேரத்தில், தனது அன்னைக்குக் கால் செய்த பிரகதீஸ்வரனோ,”அவங்க என்னம்மா சொன்னாங்க?” என்று தாயிடம் விசாரணை நடத்த,

“உன் ஃபோட்டோ கேட்டாங்க. உன்கிட்டே வேலை பார்க்கிறவங்க யார் கிட்டேயாவது கொடுத்து விடு” என்று அவனிடம் மொழிந்தார் மங்கலவல்லி.

“உங்ககிட்ட அவங்களோட ஃபோன் நம்பர் இருக்குல்ல ம்மா? அதைச் சொல்லுங்க. நான் வாட்சப்பில் அனுப்பி விட்றேன்” என்று அவரிடம் சொல்லவும்,

உடனே கணேசனின் செல்பேசி எண்ணை அவனுக்கு அனுப்பி வைத்தவுடன், அதைத் தனது கைப்பேசியில் பதிந்து விட்டுத், தன்னை நன்றாக எடுத்துக் காட்டும் புகைப்படம் ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து அதை அவரது எண்ணிற்கு அனுப்பி வைத்தான் பிரகதீஸ்வரன்.

அதே போலவே, மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த சிவசெல்வியோ,”அவங்ககிட்ட பேசியாச்சு நதி. மாப்பிள்ளையோட ஃபோட்டோவைக் கொடுத்து விட்றேன்னு சொல்லி இருக்காங்க” என மகளிடம் தெரிவித்தார்.

“சரிம்மா” என்று அவருக்கு உணவைப் பரிமாறினாள் நதியா.

இங்கு மெஸ்ஸில் இருந்த கணேசனோ, வாட்சப்பில் வந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் அதை அனுப்பியது பிரகதீஸ்வரன் தான் என்பது புரிந்து விட்டது.

அதனால், வீட்டிலிருந்த மனைவிக்கு அழைத்து,”மாப்பிள்ளை அவரோட ஃபோட்டோவை செல்லில் அனுப்பி வச்சிட்டார் ம்மா. அதை நான் நதியோட நம்பருக்கு அனுப்பிட்டேன்” என்று கூறி அழைப்பை வைத்து விட்டார் அவரது கணவர்.

அதை மகளிடம் சொல்லி விட்டு, உணவை முடித்துக் கொண்டு மெஸ்விற்குக் கிளம்பி வந்த சிவசெல்வியிடம்,

அங்கே,“நதி, மாப்பிள்ளையோட ஃபோட்டோவைப் பார்த்துட்டாளா?” என்றார் கணேசன்.

“இல்லை ங்க” என்றதும்,

“சரி‌. மெதுவாகப் பார்த்துக்கட்டும்” என்றவரைச்‌ சாப்பிட அனுப்பி வைத்தார் மனைவி.

தனக்கு உணவு பரிமாறிய மகளிடம், பிரகதீஸ்வரனின் புகைப்படத்தைப் பார்த்தாயிற்றா என்று விசாரித்தார் கணேசன்.

“இன்னும் இல்லை ப்பா. நளினி வந்ததும் பார்த்துக்கலாம்ன்னு நினைச்சேன்” என்று அவரிடம் தயங்கியபடியே கூறினாள் நதியா.

“ம்ம்” என்றவரோ, அதற்கு மேலும் அவளிடம் எதையும் வினவாமல் கிளம்பி விட்டார் அவளது தந்தை.

மாலையில்,”ஹேய்! அவரோட ஃபோட்டோ வந்துருச்சு டி” என்ற தமக்கையிடம்,

“அப்படியா? நீ பார்த்துட்டியா?” என்க,

“ம்ஹூம்” என்றாள் நதியா.

“ஏன் க்கா?”

“நீ வந்ததும் பார்க்கலாம்ன்னு தான்” என்றவளை, முறைத்துப் பார்த்த நளினியோ,”நீ முதல்லப் பாரு க்கா” என அவளுக்கு வலியுறுத்தினாள்.

உடனே தன்னுடைய செல்பேசியை எடுத்தவளுக்கு நெஞ்சம் படபடத்தது.

தனக்குக் கணவனாக வரப் போகிறவனின் உருவத்தை முதல் முறையாகப் பார்க்கப் போவதால் வந்த பதட்டத்தை அவளால் மறைக்க முடியவில்லை.

இந்த உணர்வை என்னவென்று சொல்வது என அவளுக்கே தெரியவில்லை.

புலனத்தைத் திறந்து, தன் தந்தையிடம் இருந்து வந்திருந்தப் புகைப்படத்தைத் தரவிறக்கம் செய்தவளோ,

அது தெளிவாகத் தெரிந்ததும், அந்தப் புகைப்படத்தில் இருந்த மாநிறத் தோற்றத்தைக் கொண்டிருந்தவனுடைய முழு உருவத்தையும் விழி அசைக்காமல் பார்த்தாள் நதியா.

அவனுடைய புறத்தோற்றத்தை வைத்து அவன் மனதை அவளால் கணிக்க முடியாது தான்!

ஆனால், தன்னுடைய முன்னால் காதலனின் பிம்பத்தைத் தன் மனதிலிருந்து முழுமையாக அழித்து விட வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது. எனவே, பிரகதீஸ்வரனின் புகைப்படத்தை நன்றாக ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டாள் நதியா.

இனிமேல், இவனுடன் தான், தனது எதிர்கால வாழ்க்கையை வாழப் போகிறோம் என்பதில் உறுதியாக்கிக் கொண்டவளோ, அவனது நிறமோ, உடையோ, முழுத் தோற்றமும் கூடத் தன்னை எதிர்மறையாகப் பாதிக்கவில்லை என்பதையும் உணர்ந்தவள்,

அந்தப் புகைப்படத்தைத் தங்கையிடம் காட்ட,”ம்ஹ்ம். இவரைப் பார்க்க நல்லா தான் இருக்கார். உனக்குக் கரெக்ட் ஆக இருப்பாரான்னுத் தான் சந்தேகமா இருக்கு க்கா” என்று அவளிடம் உரைத்தாள் நளினி.

“ஏன் நான் மட்டும் பார்க்க நல்லாவா இருக்கேன்?” என்றவளை ஒரு நொடி அழுத்தமாகப் பார்த்தவளோ,

“ஓஹ்! அப்போ உனக்கு இந்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ண இப்பவும் சம்மதமா?” என்று கேட்க,

“ஆமாம்” என்ற உறுதியான பதிலொன்றை உதிர்த்தாள் அவளது அக்கா.

நளினி,“அப்போ சரி”

அதற்குப் பிறகுப் புகைப்படத்தைப் பார்த்தாயிற்று என்ற தகவலைத் தன் பெற்றோரிடம் அறிவித்து விட்டாள் நதியா.

அதை மங்கலவல்லியிடம் உரைக்க, அவரோ,”ம்ம். அப்போ பொண்ணுப் பார்க்க நாள் குறிச்சிட வேண்டியது தான்” என்று கூறிப் பெருமூச்செறிந்து கொண்டார்.

இதையறிந்து கொண்ட பிரகதீஸ்வனோ, தன்னிடம் இருந்த தாழ்வு மனப்பான்மை எண்ணங்களை உடைத்து எறிந்தவளைப் பார்க்க மிகவும் ஆவலாக இருந்தான்.

ஏனென்றால், தன் மகன் மேலிருந்த பாசத்தால் அவனைக் கல்யாணம் செய்து கொள்வதற்காக நிறைய பெண்கள் வரிசையில் நிற்கிறார்கள் என்று அவ்வப்போது மங்கலவல்லி சொன்னாலும் கூடத் தன்னுடைய தோற்றத்தைக் கண்டதும் அந்தப் பெண்கள் நிராகரித்து விட்டதை அறிவான் பிரகதீஸ்வரன்.

அதை ஒரு போதும் அவனிடம் சொல்ல மாட்டார் அவனது அன்னை.

அவர் சொல்லாமலேயே அந்த விஷயம் அவனுக்குத் தெரியும்.

ஆனால், இப்போது முதல் முறையாகத் தனது புகைப்படத்தைப் பார்த்தும் கூட வேண்டாமென்று மறுக்காத பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இன்னும் ஆழமாக வேரூன்றி வளர்ந்தது அவனது மனதில்.

இப்படியிருக்கும் சமயத்தில், நதியாவின் பெற்றோரிடம் அவளது ஜாதகத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டார் மங்கலவல்லி.

- தொடரும்
 
Top