Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

9. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member
நட்பூக்களே!

ரொம்ப சாரி! இந்த கொரோனா லாக்டவுன், மத்தவங்களுக்கு எப்பிடியோ.. என்ன மாதிரி இல்லத்தரசிகளை ரொம்பவே கஷ்டப்படுத்துது.. தெணறத் தெணற வீட்டு வேல மிலார்ட்.. இதுக்கு நடுல ரெம்ப கஷ்டப்பட்டு எழுதி எடுத்தாந்திருக்கேன்.. அடுத்தடுத்து எபி வருதுப்பா.. படிச்சுட்டு எப்டியிருக்குன்னு ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க நண்பர்களே..



9. இவன் வசம் வாராயோ!

நல்ல வேளை! கார் மக்கர் பண்ணினதுனாலதான் நா அவசரமா இந்த லாரில ஏறினேன்.. இல்லன்னா நிரஞ்சனாவ பார்த்திருக்கவே முடியாது.. கடவுளுக்கு நன்றி.. என்று நினைத்துக் கொண்டான் தமிழ்.

அலுவலகப் பணியாக ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்திருந்தான் தமிழ்.

நேற்றே முடிந்திருக்க வேண்டிய வேலை சில பல தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இன்று தான் முடிந்தது. முடித்த வேலையின் விவரங்களை சேகரித்து சேமித்து எடுத்துக் கொண்டு கிளம்பினான் தமிழ். மிக முக்கியமான பணி என்பதால் பேருந்துக்காகக் காத்திராமல் ஒரு மகிழுந்தை வாடகைக்கு பேசிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவனை அழைத்துக் கொண்டு கிளம்பிய அந்த வண்டி மதுரையை அடையவும் இஞ்சினில் கோளாறு ஏற்பட்டு நிற்கவும் சரியாக இருந்தது.

"சார்! என்னான்னு புரியல.. வண்டி இதுக்கு மேல போகாது சார்.." என்று வண்டியோட்டி கைவிரித்தாரன்.

இப்படி நடு வழியில் நின்றால் என்ன செய்வது? இவரிடம் கோபிக்கவோ சண்டையிடவோ இப்போது நேரமில்லை; மனமுமில்லை! யோசித்த தமிழ்,

"பரவால்லண்ணே! உங்களுக்கு தெரிஞ்ச வண்டி எதுனா இருந்தா சொல்லுங்களேன்.. பஸ் பிடிக்கல்லாம் நேரமில்ல.. நா ரொம்ப சீக்கிரம் சென்னை போயாகணும்.. ப்ளீஸ்!" என்றான் தணிந்த குரலில்!

இவனுடைய இந்த தணிந்த குரலின் தன்மையான பேச்சு, அந்த வண்டியோட்டியை என்ன செய்ததோ, தமிழின் பதட்டத்தை உணர்ந்து கொண்டவனாக,

"எனக்கு தெரிஞ்ச லாரி ட்ரைவர் ஒருத்தரு.. வாரத்தில மூணு நாள் லோடு ஏத்திகிட்டு சென்னை போவாரு.. இன்னிக்கும் போறாரான்னு கேக்கறேன்.. நீங்க வேற சீக்கிரம் போகணும்னு கேக்கறீங்க.. லாரி பரவால்லையா சார்?!" என்று தயக்கமாகக் கேட்டான் அந்த வண்டியோட்டி.

"பரவால்லண்ணே.. எதுவா இருந்தா என்ன.. சென்னை போனா போதும்.. இன்னிக்கு அவரு லோடு ஏத்திகிட்டு போறாரான்னு கேட்டு சொல்லுங்கண்ணே.." என்றான் தமிழ்.

அவன் சம்மதிக்கவும் அந்த வண்டியோட்டி தன் நண்பனான சரக்குந்து ஓட்டுனர் செல்வத்தைக் கேட்க, செல்வமும், அன்றிரவு ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஒரு மணி நேரம் முன்புதான் கிளம்பியிருப்பதாகவும் சென்னைதான் சென்று கொண்டிருப்பதாகவும் சொன்னான்.

வண்டியோட்டி தமிழை சென்னையில் இறக்கி விடவேண்டும் என்று கோரிக்கை எழுப்ப, செல்வமும் சம்மதித்தான்.

தானும் தமிழும் எங்கே நிற்கிறோம் என்று அடையாளம் சொல்லி, அரை மணி நேர காத்திருப்புக்கு பின் செல்வம் அவர்கள் முன் வந்து தன் சரக்குந்தை நிறுத்தினான்.

தமிழை ஏற்றிக் கொண்டு ஊருக்குள் உள்ளே வராமலேயே மதுரையின் வெளி வட்டத்தை தொட்டுக் கொண்டு சென்று விட செல்வம் திட்டமிட்டான்.

ஆனால் அதற்குள் சின்னா அவசரமாக அவனை ஊருக்குள் வரச் சொன்னதால், தமிழால் நிரஞ்சனாவைக் காண முடிந்தது. அவளுக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றி அவளைத் தன்னுடன் அழைத்தும் செல்ல முடிந்தது.

அவன் கடவுளுக்கு நன்றி சொன்னபடியே நிரஞ்சனாவைப் பார்த்தான். பாவம் எத்தனை நாட்களாகத் தூங்காமல் இருந்தாளோ?! இப்போது நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

எண்ணை காணாத் தலை கலைந்து, வருத்த ரேகைகளுடன் இருந்தாலும் அன்று பார்த்தது போலவே இன்றும் இந்த கசங்கிய நிலையிலும் அவளுடைய முகம் அவனை ஈர்க்கவே செய்தது.

சற்று முன்பு குழந்தையை அணைத்துக் கொண்டு அவள் குலுங்கி அழுத போது, தன்னையுமறியாமல் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்த அந்த நொடி, இவள்தான் தன் உயிர்; இனி ஒரு நிமிடம் கூட தன்னால் இவளை விட்டுவிட்டு உயிர் வாழவே முடியாது என்பது போல உணர்ந்தான் தமிழ்.

அவனுடைய கையிலிருந்த குழந்தை சிணுங்கி எழுந்து கொண்டது.

அவனைப் பார்த்துவிட்டு மேலும் அழுவதற்கு ஆயத்தமாக, அவன் குழந்தையின் தலையைச் சுற்றியிருந்த பூந்துவாலையை எடுத்துவிட்டான். குழந்தைக்கு முகத்தில் குளிர் காற்று பட, குழந்தை அழுகையைக் கைவிட்டு, காற்றை அனுபவித்தபடியே தமிழின் கன்னத்தை சப்பத் தொடங்கியது. தமிழ் புன்னகைத்துக் கொண்டான்.

குழந்தையைத் தன் தோளில் போட்டுத் தட்ட, அது மெல்ல மெல்ல கண்ணயர்ந்தது.

தமிழின் கைப்பேசி சிணுங்கியது. எடுத்துப் பார்க்க, முகிலிடமிருந்து செய்தி வந்திருந்தது.

அவன் நிரஞ்சனாவை எங்கே பார்த்தான்? அவள் இவனுடன் வர எப்படி சம்மதித்தாள் என்று பல கேள்விகள் கேட்டு செய்தி அனுப்ப, தமிழ் அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் நிதானமாக விரிவான பதிலை அனுப்பினான்.



***********************************



இங்கே முகில் தன் மனைவி கயலிடம், தமிழ் அனுப்பிய செய்தி பற்றிச் சொல்ல,

"என்னங்க இது? அண்ணன் இப்டி மெசேஜ் பண்ணிருக்கான்?" என்று அவள் அதிர்ந்து போய்க் கேட்டாள்.

"அவன் ரொம்ப நாளாவே அவள மனசில நெனச்சிட்டிருக்கான்.. அதனாலதான் அவள அவ்ளோ தீவிரமா தேடினான்.. இப்ப அவ நல்லபடியா கிடைச்சிட்டா.. திரும்பவும் அவள தொலைச்சிடுவேனோன்னு பயப்படறான்.. அதான் இப்டி மெசேஜ் செய்திருக்கான். வா.. நம்ம பெத்தவங்க கிட்ட இத சொல்லணும்.." என்று எழுந்தான் முகில்.

"இப்பவே சொல்லணுமா? காலையில சொன்னா போறாதாங்க?!" என்று வினவினாள் கயல்.

"இல்ல கயல்! நிரஞ்சனா இங்க வரதுக்கு முன்னால அவளப்பத்தி நம்ம பெத்தவங்களுக்கு சொல்லிடணும்.. வா! நல்ல வேள அப்பா, அம்மா, அத்த, மாமா நாலு பேரும் இப்ப இங்க இருக்காங்க.." என்று சொல்லிவிட்டு முகில் முன்னால் செல்ல, உறங்கிக் கொண்டிருக்கும் முத்தழகிக்கு போர்வையை சரியாக இழுத்து விட்டு விட்டு அவன் பின்னால் போனாள் கயல்.

நல்ல வேளையாக நாலு பேரும் இன்னும் உறங்காத காரணத்தால் அவனுக்கு உறங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புகிறோமே என்ற குற்ற உணர்வு வராமல் போனது.

நால்வரையும் அழைத்து நிரஞ்சனாவைப் பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு தமிழ் அவளை எவ்வளவு விரும்புகிறான் என்று கூறினான்.

இப்போது தமிழ் அவளை அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும் வந்ததும் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தான் முகிலன்.

பெரியவர்கள் நால்வருக்குமே இது அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் தமிழுக்கு ஆதரவாகவே பேசினார்கள். ஆனால் தமிழின் அம்மா மதுரம்,

"இல்ல முகில்! எனக்கென்னமோ இந்த கல்யாணம் சரியா வரும்னு தோணல!" என்றாள்.

"என்ன அத்த சொல்றீங்க? நிரஞ்சனாவுக்கு என்ன குறைன்னு நெனக்கிறீங்க.. அந்த காலத்திலயே பொண்ணுங்க படிக்கணும்.. அதுவும் கல்யாணம் ஆகி குழந்தை பெத்தப்றம் கூட படிக்கலாம்.. குடும்பத்துக்காக வேலைக்கு போகலாம்னு புரட்சியா செயல்பட்ட நீங்களா இப்டி சொல்றீங்க.. எனக்கு இது அதிர்ச்சியா இருக்கு.." என்றான் முகில்.

"ம்ஹூம்.. நீ என்ன தப்பா புரிஞ்சிகிட்ட முகில்.. நா அந்த ஆங்கிள்ல சொல்லல.. அந்த பொண்ண தமிழ் கல்யாணம் பண்ணிக்கறதுல எனக்கு எந்த மறுப்பும் இல்ல.."

"அப்றம் ஏம்மா இந்த கல்யாணம் சரி வராதுன்னு சொல்றீங்க?" என்று கேட்டாள் கயல் தன் அம்மாவிடம்.

"அந்த பொண்ணுக்கு வெளிய சொல்லாம தனக்குள்ள புழுங்கிகிட்டிருக்கற அளவுக்கு பிரச்சனை இருக்கும்ன்னு தோணுது எனக்கு.."

"ஏன் அத்த அப்டி சொல்றீங்க?"

"ஆமா முகில்.. அந்த பொண்ணுக்கு அவ பொறந்த வீட்ல பிரச்சனைன்னு அங்கேந்து வெளியேறினா.. சேலம் போக வேண்டியவ சென்னை பஸ்ல ஏறினதா பாத்தவங்க சொல்றாங்க.. ஆனா அவள சென்னையில கண்டுபிடிக்க முடியல.. அவளத் தேடி தமிழ் ஓய்ஞ்சி போயிருக்கற நிலையில அவள மதுரையிலேர்ந்து கூட்டிட்டு வரான்..

தமிழ் ஏதேச்சையா அவளப் பார்த்தாலும், அவன் கூப்பிட்டதும் அவன் கூட அவ ஏன் வரணும்? ஏதோ ஒரு கட்டாயத்தினாலதான் அவ தமிழ் கூட வரா! அதான் சொல்றேன், அவ ஏதோ பிரச்சனையில மாட்டியிருக்கான்னு.." என்றாள் மதுரம்.

"ஆனா.. தமிழ் அவள கல்யாணம் பண்ணிகிட்டா அவ எல்லா பிரச்சனையும் சரியாகிடும்தானே அத்த.."

"அத நா எப்டி சொல்றது.. அவ பிரச்சனை என்னன்னு தெரியாதப்ப அத சரியாகிடுமா இல்லையான்னு அவ தான் சொல்லணும்." என்றாள் மதுரம்.

"இப்ப என்ன பண்றது அத்த? அவன் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுன்னு சொல்றான்.. எங்க இப்ப விட்டா அவள அப்றம் மிஸ் பண்ணிடுவேன்னு பயப்படறான்." என்று முகில் கவலையாகக் கூற,

"பாக்கலாம் முகில்! காலையில அவங்க வரட்டும். அந்த பொண்ணு முடிவு பண்ண வேண்டியது இது. நாம இல்ல!" என்றாள் மதுரம் தெளிவாக!

"ஆனா.." என்று ஈஸ்வர பாண்டி இழுத்தார்.

"அவ என் மருமகளா ஆகறதில எனக்கு மனபூர்மான சம்மதம்தான் அண்ணே!" என்று கூறிவிட்டு தன் கணவன் முகத்தை மதுரம் பார்க்க,

அவரும் சம்மதம் என்று தலையசைத்து புன்னகைத்தார்.

"சரி! போய் படுங்க! காலையில பேசிக்கலாம்!" என்று மதுரம் எல்லாரையும் அனுப்பினாள்.

எல்லாரும் கலைந்து செல்ல, வளர்மதி வந்து மதுரம் கையைப் பிடித்துக் கொள்ள,

"என்ன அண்ணி?" என்று வினவினாள் மதுரம்.

"ஒனக்கு ரொம்ப பெரிய மனசு மதுரம்!" என்றாள் வளர்மதி.

"ஏன் அண்ணி இப்டி சொல்றீங்க?"

"கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கற பொண்ண நம்ம தமிழ் விரும்பறான். ஒனக்கு கோபம் வரல.. ஆனா அவ பிரச்சனைய புரிஞ்சிக்கறயே.."

"பாவம் அண்ணி.. ரொம்ப நல்ல பொண்ணா தெரியுது.."

"அவ நல்ல பொண்ணுன்னு எப்டி சொல்ற.."

"அவ நல்ல பொண்ணா இருக்கறதாலதான் இவ்ளோ பிரச்சனை.. தன்னோட நல்ல குணத்தை விட்டுக் குடுக்க முடியாமதான் கண்டவங்களுக்கும் பயந்து பயந்து ஊர் ஊரா ஓடிட்டிருக்கா.." என்றாள் மதுரம்.

"உண்மைதான் மதுரம். பாவம் அந்த பொண்ணு.. ஆனா.. நீ சொல்ற மாதிரி.. ஒரு வேளை அவ கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னா.."

"மருமகளா ஏத்துக்கறதுக்கு பதில் மகளா ஏத்துக்க வேண்டியதுதான் அண்ணி! வேற என்ன செய்ய முடியும்?" என்று மதுரம் சொல்ல, வளர்மதியின் மனதில் மதுரத்தைப் பற்றிய மதிப்பு உயர்ந்து கொண்டே இருந்தது.

மதுரம் வளர்மதியைப் பார்த்து புன்னகைக்க, வளர்மதியும் மதுரத்தைப் பார்த்து புன்னகைத்து விட்டு படுக்கச் சென்றாள்.



********************************



நேரம் விடியலை நோக்கிச் சென்று கொண்டிருக்க, செல்வம் வண்டியை ஒரு தேநீர்க் கடையருகே நிறுத்தினான்.

"டீ சாப்ட்டு வந்திடறேன்.. சார்!" என்றபடியே வண்டியிலிருந்து இறங்கினான்.

தமிழ் நிரஞ்சனாவை எழுப்பி குழந்தைக்கு பால் எதுவும் வேண்டுமா என வினவினான்.

அவள் ஆமாம் என்றாள்.

தமிழ் வண்டியிலிருந்து கீழிறிங்கிப்போய் குழந்தைக்குப் பால் வாங்கிக் கொண்டு அவளுக்கும் தேநீர் வாங்கி வந்தான்.

அவள் முதலில் வேண்டாம் என்று மறுத்துவிட்டு அவன் முறைத்ததும் ஒன்றும் சொல்லாமல் அந்த தேநீரை வாங்கிக் குடித்தாள்.

"மணியென்ன?" அவள் கேட்டாள்.

"மூணு!" அவன் சொன்னான்.

"உங்க போன்ல நானும் நீங்களும் இருக்கற மாதிரி போட்டோல உங்க பக்கத்தில இருக்கறவங்க கயலண்ணிதானே?" என்று கேட்டாள்.

"ம்.." என்றான் தமிழ்.

அவள் புரிந்தது போல தலையாட்டிக் கொண்டாள்.

செல்வம் தேநீர் அருந்தி புத்துணர்வுடன் வந்து வண்டியெடுக்க, குழந்தை பசியில் அழ, அவள் பால் பாட்டிலை அதன் வாயில் வைத்தாள். குழந்தை பாலைக் குடித்துவிட்டு மீண்டும் உறங்கிப் போனது.

குழந்தையாகவே இருந்திருக்கலாம்! எந்தக் கவலையுமின்றி எந்த இடத்திலும் உறங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பெருங்களத்தூரை அடைந்தார்கள்.

"சார்! இதுக்கு மேல நா அவுட்டர்ல தான் போகணும்.. சிட்டிக்குள்ள லாரி எடுத்துட்டு போக கூடாது.. நா வெளிய சுத்தி ஊரத் தொட ரொம்ப லேட்டாகிடும்.. அது மட்டுமில்ல.. நா மொதல்ல சரக்க எறக்கிட்டுதான் உங்கள எறக்கி வுட முடியும்.. பரவால்லயா சார்.." என்று கேட்டான்.

"இல்ல வேணாம்! நாங்க இப்டியே இறங்கி.. ட்ரைன்ல போய்டறோம்.. அதான் எங்களுக்கு ஈசி.. எனக்கு சீக்கிரமா ஆஃபீஸ் போயாகணும்.. ரொம்ப தேங்க்ஸ்!" என்று சொல்லிவிட்டு வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டு நிரஞ்சனாவிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு அவள் இறங்குவதற்கு உதவினான்.

இரவு முழுதும் வண்டியில் ஒரே நிலையில் அமர்ந்திருந்ததால் அவளுக்கு முழங்கால்களில் வலி ஏற்பட்டது.

வண்டியிலிருந்து கீழே இறங்கியதும் நேராக நிற்க முடியாமல் தள்ளாடினாள்.

அவளைக் கைத் தாங்கலாகப் பிடித்துக் கொண்டான் தமிழ்.

"கால நல்லா ஒதறி வுடுமா.." என்றான் செல்வம்.

அவள் எதுவும் சொல்லாமல் கால்களை உதறிக் கொண்டு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயற்சித்தாள்.

"ரொம்ப நேரம் ஒரே இடத்தில உக்காந்துட்டிருந்தல்ல.. அதான்.. அப்டியே நடந்துக்க.. லைட்டா வலிக்கும்.. ஆனா நடக்க நடக்க சரியாகிடும்.." என்று மேலும் கூறினான் செல்வம்.

நிரஞ்சனா தலையாட்டிக் கொண்டாள்.

தமிழ் தன் கால்சட்டைப் பையிலிருந்து தன் பர்ஸ் எடுத்து ஒரு இரண்டாயிரம் ரூபாய்த் தாளை செல்வத்திடம் கொடுத்தான். செல்வம் மறுக்காமல் வாங்கிக் கொண்டு,

"சார்! படிக்காதவன் சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சார்! எவ்ளோதான் படிச்சிருந்தாலும் பெரிய வேலை காசு பணம் இருந்தாலும் பொண்டாட்டி புள்ளயோட ஒழுக்கமா இருந்தாதான் சார் நம்மள நாலு பேர் மதிப்பாங்க.. பொம்பள பாவம் பொல்லாதது சார்.. தப்பா எடுத்துக்காதீங்க சார். இனிமேலாவது தங்கச்சியோட நல்லபடியா வாழுங்க சார்!" என்று இலவச அறிவுரையை அள்ளி வழங்கினான்.

"சரிங்க!" என்று ஒற்றை வார்த்தையை தமிழ் உதிர்க்க, வாய்க்குள் எதையோ முணுமுணுத்தபடியே வண்டியைக் கிளப்பிக் கொண்டு நகர்ந்தான்.

தமிழ் ஒரு கையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மறுகையால் நிரஞ்சனாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு பெருங்களத்தூர் ரயில் நிலையம் நோக்கி மெதுவாக நடந்தான். நிரஞ்சனா மெதுவாக நொண்டியபடி அவனுடன் நடந்தாள்.



இனி அவள் வாழ்வு தமிழுடனா?


- தொடரும்.

 
அருமை மேம், இனி வாழ்வு தமிழுடனா? என்று எங்களை கேட்டு இருக்கீங்க, நீங்கதானே மேம்சொல்லனும்.......???
 
சூப்பர் மதுரம் அம்மா???

இந்த லாக்டவுன்ல ரொம்ப கஷ்டப்படுறது இல்லத்தரசிகள் தான சிஸ்..இதுல ஃபோன வேற ஆன்லைன் கிளாஸ்னு பிள்ளைங்க வாங்கிருறாங்க..நீங்க ஃப்ரீயா இருக்கும் போது எபி போடுங்க
 
Top