Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 14

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 14

"இது தான் நடந்துச்சு!" என ரிஷி சொல்லி முடிக்கவும், அங்கு கனத்த அமைதி நிலவியது. சந்தோஷ் தன் நிலையை மாற்றிக்கொள்ளாமல் அமர்ந்திருப்பதை கண்ட ரிஷி மேலும் தொடர்ந்தான்.



"அதுக்கு பிறகு முழுசா ரெண்டு நாள், ராம் ICUல தான் இருந்தான். மூணாவது நாள் அவனுக்கு சுயவுணர்வு வந்தப்போ தான் எங்களுக்கு தெரிஞ்சுது, அவனுக்கு டோட்டல் மெமோரி லாஸ் ஆகிருக்குன்னு. வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். அவன் நடவடிக்கைகள்ல நிறைய மாற்றம் தெரிஞ்சுச்சு... கொஞ்ச நாள் பிறகு தான் அவன் மன ரீதியா பாதிக்கபட்டுருக்கான்னு கண்டுபுடிச்சோம்.

அப்பாக்கும் அம்மாக்கும் ஏக சந்தோசம்...

எங்க பிசினஸ் சர்கில்ல இருக்க எல்லாருக்கும், ராம்க்கு இப்படி ஆகிட்டத அப்பா தெரியப்படுத்துனாரு... சொத்துக்களை நிர்வாகிக்குற முழு பொறுப்பும் அப்பா கைக்கு தானா வந்துச்சு" ரிஷி ஒரு வித வெறுப்புடன் சொல்லி முடித்தான்.



சந்தோஷ், "உங்களுக்கு வேண்டிய சொத்து தான் கைக்கு வந்துடுச்சே!! அப்புறம் எதுக்கு ராமை கொல்ல திட்டம் போடுறீங்க...? அவன் நிம்மதியா இருக்குறது புடிக்கலையா??" அமைதியாய் இருந்தவன் குரல் உயர்த்தினான்.



"சந்தோஷ் !! அவங்களோட என்னையும் சேர்த்து வச்சு பேசாத!!! எனக்கு ராம் மேல உண்மையிலேயே அக்கறை இருக்கு,, அவன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா!? அதனால தான் அவனை நான் எங்க வீட்டை விட்டே அனுப்புனேன்!!!" என்றான் ரிஷி.



"இது என்ன புது கதை சொல்ற?" சந்தோஷ் பிடிப்பின்றி கேட்டான்.



"புது கதை இல்ல... நடந்ததை தான் சொல்றேன். ராம் பைத்தியம் ஆகிட்டான்னு தான் கவலப்படுற மாறி, எல்லாரையும் கூட்டி ஒரு எமோஷனல் ட்ராமா போட்டாரு என் அப்பா.... அதுக்கு பிறகு இதையே சாக்கா வச்சு அவனை எங்க வீட்ட விட்டு வெளிலேயே விடல...

வீட்டுக்குள்ளேயே அவனை ஒரு அடிமை மாறி தான் நடத்துனாரு... ஒரு வேளை சாப்பாட்டுக்கு அவனை 3வேளையும் வேலை வாங்குனாரு... கோவம் வரப்போ எல்லாம் அடிக்கவும் செஞ்சாரு..."



ரிஷி சொல்லிக்கொண்டிருப்பதை கேட்க பொறுமையற்றவனாய் , "நீ அதையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருந்த!!! அதானே!?" என்றான் சந்தோஷ், ஏக கடுப்பில்.



"மப்ச்... சொல்றத கேளேன்டா கொஞ்சம்...." இப்போது ரிஷிக்குமே சற்று கோவம் துளிர் விட்டது.



"நீ சொல்ற மெகா சீரியல் கதை எல்லாம் நானும் கேட்டுட்டு தானேடா இருக்கேன்!!! முழுசா சொல்லி தொலை, பிபி ஏறுது எனக்கு!" என்று கடுப்படித்தான் சந்தோஷ்.



வேகப்பெருமூச்சுடன் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பினான் ரிஷி.



அதை பார்த்த சந்தோஷ், "ஏய்!!! என்னை அடிச்சு போட உங்க அப்பாட்ட சொல்லி அம்பது பேர இங்க வர வைக்க போறியா?? அதுக்கு தானே இப்போ யாருக்கோ மெஸ்ஸேஜ் அனுப்புன? உண்மைய சொல்லு!!!" என்றான் கராத்தே கிட் போல இருக்கைகளையும் முன்நீட்டி போஸ் கொடுத்து.



"எது?? உன்னை அடிக்க அம்பது பேரா??" என அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு, "பார்க்க சினிமா ஹீரோ மாறி தான் இருக்க!! அதுக்காக இதெல்லாம் டூ மச் டா!!! ஹாஹா" என சிரிக்க தொடங்கினான்.



தானே வலிய போய் மாட்டிக்கொண்டதை எண்ணி மானசீகமாக தலையில் அடித்துக்கொண்ட சந்தோஷ், வெளியே விரைப்புடன், "இப்போ நீ இந்த பிளாஷ்பாக்க முடிக்க போறியா இல்லயா?" என்றான்.

ரிஷி முகம் சிரிப்பை தொலைத்து இறுகியது.

"ராமை ரொம்ப நேரம், தொடர்ந்து தூங்கவே விடமாட்டாங்க. அவன் தூங்காம இருக்கானான்னு பார்த்துக்கவே ஒருத்தன் எங்க வீட்டுல வேலைக்கு இருந்தான்...."



"ஏன்? தூங்குறதால என்ன???" என கேட்டான் சந்தோஷ்.



"Sleeping is the best healing remedy for mental issues’ அப்டின்னு அந்த டாக்டர் மூர்த்தி தான் சொன்னாரு... அவன் சீக்கிரமா குணமாக வாய்ப்பு இருக்கு... அதனால முடிஞ்ச அளவு, அவன் மைன்ட ரெஸ்ட்லெசா, டிப்ரஷனோடவே இருக்குற மாறி வச்சுப்போம்னு சொன்னாரு.

அதும் இல்லாம அவனுக்கு அடிக்கடி ஸ்டீராய்ட் இன்ஜெக்ஷன் போடுறதுக்கு ஆள் அனுப்புவாரு வீட்டுக்கு.... அவன் உடம்ப பாழாக்க என்ன என்ன செய்ய முடியுமோ,, எல்லாம் பண்ணுனாங்க...!!!" ரிஷி வருத்தமாய் சொல்ல,



"ஓ!!! சார் என்ன பண்ணுனீங்க? இதெல்லாம் பார்த்துட்டு இருந்தீங்களா?" என்றான் சந்தோஷ் நக்கலுடன்.



"என்னால முடிஞ்ச அளவு அவனை யாரும் தூங்குறப்போ தொல்லை பண்ணாம பார்த்துகிட்டேன்... ஆனா அப்பாவ மீறி ஏதும் பண்ண முடில.... "



"ம்ம்ம்கும்!!! சரி அப்புறம்???"



"அப்புறம்!!! டெய்லி ஹாஸ்பிடல்ல இருந்து அவனுக்கு இன்ஜெக்ஷன் போட வர ஆள கரெக்ட் பண்ணிட்டேன்... சோ இன்ஜெக்ஷன் போடாமையே, அவனுக்கு போட்டுடதா டாக்டர்கிட்ட பொய் சொல்லிடுவோம்..."



"ஹய்யோ!! யப்பா!! செம்ம!!! அப்புறம்!!!!!" சந்தோஷ் குரலில் நக்கல் கூடி கொண்டே போனது.



"இப்படியே ரெண்டு வருஷம் போச்சு....!! அப்போதான் அந்த வீணா போன வக்கீல் சொன்னான்... ராம் இறந்த பிறகு தான் சொத்துக்களை விற்க முடியும்ன்னு... அதுக்காக அவனை கொல்ல பிளான் போட்டாங்க...."



"உங்க அப்பா என்ன டொக்கு பிளானிங் இஞ்ஜினியரா? ஓயாம ஓட்ட பிளான்னா போட்டுட்டே இருக்கான்... அடுத்தவன் சொத்துக்கு என்னம்மா யோசிக்குறீங்க? சரி இதுல நீ என்ன பண்ணுன??"



"அதுவரைக்கும் எதையும் கண்டும் காணாம இருந்த நான், இந்த விஷயம் தெரிஞ்சதும்,, என் அப்பா கிட்ட நேரடியா பேசுனேன்.. அவனை கொன்னுட்டா நமக்கு தான் பிரச்சனைனு எதேதோ சொல்லி நல்லா குழப்பி விட்டேன்... கடைசில என்கிட்டயே கேட்டாங்க, என்னதான் பண்றதுனு!!?"



"ஓ!! நீ இதை சாக்கா வச்சு ராம்ம துரத்தி விட்டுட்ட?? அதானே??" என சந்தோஷ் குறுக்கிடவும் ரிஷி தன் பற்களை நற நறவென கடிப்பது சந்தோஷிற்கே கேட்டது.



"ஹீ ஹீ... ஜும்மா.... நீ மேல சொல்லு" என்றான் சந்தோஷ் நக்கலை கைவிட்டு.



"இங்க இருந்து அவனால திரும்பி வரவே முடியாத அளவு தூரமா கொண்டு போய் விட்டுடுங்கனு சொன்னேன்.... முதல்ல யோசிச்சாங்க... அப்புறம் நான் பண்ணுன ப்ரைன் வாஷ்ல ஓகே சொல்லிட்டாங்க...

ஒருவழியா எல்லாம் சரிகட்டி ராம் கூட என் அப்பாவை எங்க கார்லயே அனுப்பி வச்சேன். அப்பாவும் அவனை நான் சொன்ன இடத்துல விட்டுட்டு வந்தாங்க... "



அதை கேட்ட சந்தோஷ், "ம்ம்ம்..... எல்லாம் சரி... கொண்டு போய் விட்டியே!! அதுக்கு பிறகு அவன் என்ன ஆனானு ஏதும் கவலப்பட்டியா???" என்றான்.



"ராமை விட்டுட்டு வந்த ஜெய்ப்பூர் பாரெஸ்ட் ரிசார்ட் என் பிரண்ட்டோடது... என் அப்பா விட்டுட்டு போனதும், கொஞ்ச நாள் அவனை பத்திரமா பாத்துக்க சொல்லிருந்தேன்... அவன் என்னடான்னா அடுத்த நாள் எனக்கு போன் பண்ணி பெரிய ஷாக் கொடுத்துட்டான்..."



"என்னது உனக்கும் ஷாக்கா?" சந்தோஷ் வாயை பிளக்க,



"ஹாஹா ஆமா... இது வேற ஷாக்... 'ராம் ஒரு பொண்ணு கூட இருக்கான்... அந்த பொண்ணு இவன ஹஸ்பண்ட்னு சொல்லுதுன்னு' சொன்னான் பாரு.... !!!! பயங்கர ஷாக்.... திடீர்னு ஒரு நாள் காட்டேஜ காலி பண்ணிட்டு போயிடாங்கன்னு தெரிஞ்சதும் என்ன பண்றதுனே தெரில... கண்டுபுடிக்கவே முடில என்னால..."



"ம்ம் ம்ம்.. சரி உன் அறிவாளி அப்பாக்கு உன்மேல சந்தேகமே வரலையா?"



"எவ்ளோ பெரிய அறிவாளியா இருந்தாலும் ஏதோ ஒரு இடத்துல சறுக்குவான்... என் அப்பாவோட வீக்னெஸ் நான்தான்... நானும் அவரை மாறி இருப்பேன்னு நினைச்சுட்டு இருக்காங்க..."

அவன் பேசி கொண்டு இருக்கும்போதே காலிங் பெல் சத்தம் கேட்கவும், கதவை திறந்து, வந்தவருக்கு வழி விட்டான் ரிஷி.



புதியவரிடம், "நான் கேட்டது எல்லாமே கொண்டு வந்தியா?" என கேட்ட, 'ம்ம்ம்' என்றதோடு அனைத்தையும் பையில் இருந்து வெளியில் எடுக்க தொடங்கினார்.



ரிஷியின் அருகே சென்று, "ஹே யாரு இது?" என மெல்லமாய் கேட்டான் சந்தோஷ்.



"நான் சொன்னேன்ல... ஊசி போட வந்த ஆள கரெக்ட் பண்ணிட்டேன்னு... அதான் இது... என்னோட ஆளு திவ்யா. அந்த மூர்த்தி ஹாஸ்பிடல்ல தான் ஹெட் நர்ஸா இருக்கா..." என அறிமுகப்படுத்தினான் ரிஷி.



"அடப்பாவிவிவிவி..... இதுதான் உங்க ஊருல கரெக்ட் பண்றதாடா!!" என அநியாயத்திற்கு வாயை பிளந்தான் சந்தோஷ்.



"பின்ன!!! எனக்கு ஜோடி வேணாமா??? அதை விடு.. இங்க பாரு.. இது எல்லாமே என் அப்பா அம்மா, அந்த வக்கீல், டாக்டர் கூட சேர்ந்து இதுவரைக்கும் பண்ணுன திருட்டுதனத்துக்கான எவிடன்ஸ்" என மொத்தமாக சந்தோஷ் கையில் கொடுத்தான் ரிஷி.



அதையெல்லாம் பிரித்து படித்து பார்த்த சந்தோஷ், " டேய், நீ அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே டா!!! உன்னை ஹாஸ்பிடல்ல இருந்து மாத்தி தூக்கிட்டு வந்து வளர்த்துடாங்களோ?" என்றான்.



"ரொம்ப வாராத.... இதெல்லாம் நான் ரொம்ப கஷ்டப்பட்டு கலெக்ட் பண்ணுனது... சோ கீப் இட் செப்...."



"இதெல்லாம் இன்னும் எதுக்கு வச்சு சாமி கும்புட்டுட்டு இருக்க??? போலீஸ்கிட்ட கம்ப்லைன்ட் கொடுத்து இதை ஆதாரமா காட்டிடலாமே!!! கதை சீக்கிரமா முடிஞ்சுடும்ல!!!" சந்தோஷ் ஆர்வப்பட,



"லூசு... இந்த ஆதாரம் எல்லாம் வெறும் டாக்குமெண்ட் அண்ட் பைல்ஸ் தான். இதெல்லாம் fakeனு நிரூபிக்க என் அப்பாக்கு ரொம்ப நேரம் ஆகாது... இதை விட ஸ்ட்ராங்கா வேணும்... கையும் களவுமா புடிக்கனும்... அடிச்சா சிக்ஸர் தான்.... சும்மா அப்படி இருக்கணும்!!!"



ரிஷி சொன்னதும், "இப்போ என்னதான் பண்ணலாம்னு சொல்ற?" என வினவினான் சந்தோஷ்.



"அப்படி கேளு.....

முதல்ல.............." என சொல்ல தொடங்கியவன், "ம்ஹும்... என் ஆளுக்கு ஒரு டைலாகு கூட இல்ல...

பப்பிமா... இந்த டைலாகு நீ சொல்லுடா!!!" என பேச்சில் திவ்யாவை இழுத்தான் ரிஷி.



தன் பதியின் உபசரப்பில் உற்சாகமான திவ்யா, "முதல்ல மைதிலி அண்ணிக்கு போன் செஞ்சு,,, சீக்கிரமா சென்னை வர சொல்லுங்க.... எல்லாரும் சேர்ந்து பிளான் போடுவோம்...." என்றாள்.



"ம்ம்ம்... அதும் சரிதான்... இப்போவே பன்றேன்...." என அலைபேசியை கையில் எடுத்தான் சந்தோஷ்.



அங்கே மையு,, "பேசிட்டு இருக்கும்போதே கட் ஆகிடுச்சு... இன்னும் டவர் வரல..." என வெகு நேரமாக கையில் அலைபேசியுடன் போராடி தோற்றாள்.



பின்பு 'ராம் வர நேரம் ஆச்சு... பால்பாயசம் செய்யணுமே!!!' என நினைத்தபடி தன் வேளைகளில் மூழ்கினாள் மையு.



அவள் பாயாசம் செய்து முடிக்கவும்,, ராம் வரவும் சரியாக இருந்தது.



"ஹை ராம்!!! .... வந்துட்டியா??? வா வா!! ஏய்!! என்னடா முகம் டல்லா இருக்கு... ?!"



சோர்ந்து வந்து அமர்ந்தவனை இடையோடு கட்டிக்கொண்டாள் மையு. அவளை இறுக கட்டிக்கொண்டபடி எதுவும் பேசாமல் இருந்தான் ராம்.



"என்னாச்சு என் ராம்க்கு??? ஏன் இவ்ளோ சோகமா இருக்கீங்க?" என அவன் முகம் தூக்கி விசாரித்தாள் மைதிலி.



'ம்ஹும்ம்' என தலையை இடவலமாய் ஆட்டிவிட்டு மீண்டும் அவள் இடையில் முகம் புதைத்து கொண்டான் ராம்.



"சொன்னா தானே தெரியும் எனக்கு... என்னனு சொல்லு..."



முகத்தை நிமிர்த்தாமல், "எனக்கு தலை ரொம்ப வலிக்குது மையு... ரொம்ப்ப்ப்ப்ப வலிக்குது....." என அழும் குரலில் சொன்னான் ராம்.



"அது .... ஒன்னும் இல்லடா... ட்ரீட்மெண்ட் கொடுக்குறாங்கல்ல... அதனால தான் உனக்கு கொஞ்சம் வலிக்குது போல..... " என சொல்லிக்கொண்டே மெதுவாக அவன் சிகைகோதினாள் மையு.



"ட்ரீட்மெண்டா? நீ கோச்சிங் கிளாஸ்னு தானே சொன்ன?" அவள் இடையில் இருந்து தலையை வெடுக்கென நிமிர்த்தி அவளை கேட்டான் ராம்.



'விவரம் தான்....' என மனதில் நினைத்துக்கொண்டு,,,"ஆமா ஆமா... நான்தான் மாத்தி சொல்லிட்டேன்.... சரி வா பால் பாயசம் சாப்பிடலாம்...." என்றாள்.



"நான் சாப்பிடமாட்டேன்... "

"ஏன்??"

"நீ சாயங்காலம் வந்தா தரேணு சொன்னல்ல??!!!"



"ஹ்ம்ம்... ரெடி பண்ணிட்டேன்... அதுக்கு தான் கூப்பிட்டேன்.. வா..." என அவன் முன்னே நடக்க அப்போதும் அவன் அசையாது இருந்தான்.

கையில் பாயாசத்துடன் வந்தவள், அவன் வாய் அருகே கொண்டு சென்று, " நல்லா இருக்கா பாரு ராம்!" என்றாள்.



ராம் தலையை திருப்பிக்கொண்டு சாப்பிடாமல் அடம் செய்யவும், "ராம், வர வர ரொம்ப அடம் பண்றடா நீ??? எதுக்கு இப்போ மூஞ்ச தூக்கி வச்சுருக்க???" என்றாள்.



"நீதான் சாயங்காலம் வந்தா கிஸ் தரேணு சொன்ன!!! இப்போ மறந்துட்ட!!! நீதான் தப்பு... என்ன திட்டாத... போ!!!" என முறுக்கி கொண்டான் ராம்.



'சரியான கேடி' என எண்ணிக்கொண்டே, "எல்லாம் எனக்கு நியாபகம் இருக்கு.... இதை குடி,, அப்புறமா கொடுக்குறேன்..." என்றாள்.



"நிஜமா???"

"நிஜமா தான்!!!"



நல்ல பிள்ளையாய் சொட்டு விடாமல் குடித்து முடித்தான் ராம்.

"இப்போ குடு!!" என தன் கன்னத்தை அவள் புரமாக நீட்டினான்.

அவள் அவனை நெருங்கும் சமயம் அவள் கைபேசி அலறியது. அதை எடுக்க அவள் விரைய,, அவளை போக விடாமல் கரம் பற்றி தடுத்தான் ராம்.



"குடுத்துட்டு போ மையு.... நீ மறந்துடுவ அப்புறமா"



"ரொம்ப நேரமா டவர் இல்லாம இப்போதான் கிடைச்சுருக்கு... பேசிட்டு வந்துடுறேன் ராம்... என் செல்லம்ல... பிலீஸ் டா......" அவள் கெஞ்சல் எதுவும் அவனிடம் பலிக்காமல், தன் கடனை வசூலித்தபின்னே அவளை விட்டான் ராம்.

-தொடரும்...
 
Top