Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 17

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 17

"என்ன நடந்துச்சு... இப்போ சொல்ல போறீங்களா இல்லயா?" மைதிலியின் அதட்டலில் திவ்யா ரிஷியின் அருகே சென்று நின்று கொண்டாள்.



"அக்கா... நீங்க இங்க வந்ததும் சொல்லலாம்னு தான் இருந்தோம்.. ஆனா அதுக்குள்ள திவ்யா அவசரப்பட்டுட்டா... மறைக்கணும்னு நினைக்கவே இல்லை.. சந்தோஷ்க்கு எல்லாமே தெரியும் அக்கா..."

ரிஷி அவ்வாறு சொன்னதும் அவள் பக்கம் நின்றிருந்த சந்தோஷை எரித்தது அவளின் பார்வை.



"மைதிலி, கோவப்படாத... நாளைக்கு சொல்லலாம்னு முடிவு பண்ணிருந்தோம்... ஆனா அதுக்குள்ள..."



பேசிய சந்தோஷை கை உயர்த்தி தடுத்தவள், "கதை சொல்லவேணாம்... நடந்ததை மட்டும் சொல்லு..." என்றாள்.



பின்பு வேறு வழியின்றி நடந்தது அனைத்தையும் எடுத்து சொன்னான் சந்தோஷ்.



"எலெக்ட்ரிக் ஷாக்கா? கேவலம் பணத்துக்காக? நீங்க எல்லாம் மனுஷங்க தானா? ச்சை!" தரையில் மடிந்து அமர்ந்து கைகளால் தலையை தாங்கிக்கொண்டாள் மைதிலி.



"அக்கா.... நான்தான்....." என பேச வந்த ரிஷியை, "வாயை மூடு நீ... பொணந்தின்னி கழுகு விட கேவலமான பிறவி நீங்க எல்லாம்... பணம்ன்னு சொல்லிட்டா போதும்ல? அதுக்காக என்ன வேணாலும் செய்வீங்க? அந்த மிருகங்களுக்கு பொறந்த நீ மட்டும் யோக்கியமா இருப்பான்னு எப்படி நம்ப சொல்ற?

இவனுக்கு நீ சப்போர்ட்டா சந்தோஷ்?" என கத்தியவள், "ராம்...! எவ்ளோ துடிச்சுருப்பான்!" அன்று அவன் பட்ட வேதனை, மைதிலி முகத்திலும் தெளிவாய் தெரிந்தது. அவன் வேதனைக்காக இவள் முகம் கசங்கியது.



"காம் டவுன் மைதிலி... " தன் நண்பனின் பழைய நிகழ்வுகள், அவனுக்கும் அதிர்ச்சி தான் என்பது கௌதமின் குரலில் விளங்கியது.



"எல்லாம் சரிதான் மைதிலி, ஆனா ரிஷி கெட்டவன் இல்ல. சரியான நேரத்துல பவர் கட் ஆக இது என்ன படமா இல்ல சீரியலா? மெயின் பாக்ஸ்ல இருந்த எல்லா ஒயரும் அறுந்தனாலதான் பவர் போச்சு... அது எப்படின்னு யோசிச்சியா?"



சந்தோஷ் கேள்வியில் தன்னை மீட்டெடுத்தவள், அவன் சொன்னதை யோசித்து பார்த்தாள்.



"என்ன? புரியுற மாறி இருக்கா?" என கேட்ட சந்தோஷிடம், "ரமா பாட்டி?" என சந்தேகமாய் வினவினாள் மைதிலி.



"ராம்க்கு உண்மை எல்லாம் தெரிஞ்சுடுச்சுன்னு நிம்மதில, அவங்க தூங்க போய்ட்டாங்க. இது நடந்ததே அவங்களுக்கு தெரியாது. சோ அவங்க பண்ணல.... "



"வேற யாரு?"



"ரிஷி தான்!!"



ரிஷியை சந்தேகம் நீங்காமல் பார்த்தாள் மைதிலி. அவளின் நேர்ப்பார்வையை எந்த வித தயக்கமும் இன்றி எதிர்கொண்டான் ரிஷிகேஷ்.



"ஆல் இந்தியா டூர் முடிஞ்சு அன்னைக்கு நைட் வீட்டுக்கு வந்த ரிஷி, ராம் ரூம்ல அவங்க பேசுனது, ஷாக் கொடுத்தது எல்லாம் பாத்து ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டான். நடக்குறதை அவனால நம்பமுடியல! டாக்டர் வேணான்னு சொல்லியும் கேக்காம இவன் அப்பா, ராம்க்கு மூணாவது முறை ஷாக் குடுக்க சொன்னபோ தான் இவன் ஓடிப்போய் மெயின் பாக்ஸ டேமேஜ் பண்ணிருக்கான்... இவன் மட்டும் அன்னைக்கு அப்படி பண்ணலனா ராம்க்கு என்ன ஆகிருக்குமோ தெரியாது!"



ரிஷி உதவாமல் போயிருந்தால் அவளுடைய ராமின் நிலை இப்போது என்னவாகிருக்கும்? அவன் உயிரோடு இருந்துருப்பானா? என சில நொடிகளே நினைத்தவள், "என்னை மன்னிச்சுடு ரிஷி, உன்னை தப்பா பேசிட்டேன். நீ மட்டும் ராம்க்கு உதவலனா அவன் நிலைமையை நினைச்சு கூட பாக்க முடில... ரொம்ப நன்றி ரிஷி" என அவன் கையை பிடித்து கொண்டு குளுக்கோ குளுக் என்று குளுக்கிருந்தால் அது மைதிலி அல்லவே...! எதையும் பலமுறை பரிசோதித்து ஆய்ந்து அறிபவள்!



"சோ? இவன் நல்லவன்னு சொல்றியா?" என அலுங்காமல் கேட்டாள் மைதிலி.



"பின்ன? இல்லங்குறியா?" என்றான் சந்தோஷ்.



இதற்கு மைதிலி பதில் சொல்லும் முன், இடைப்புகுந்த கௌதம், "ஏன்டா உன் அப்பன் என்னவோ பெரிய வில்லன் ரேஞ்சுக்கு வேலை பாத்துருக்கான்... ஆனா அடுத்த நாள் மெயின் பாக்ஸ்ல தான் யாரோ ஒயர்ற அறுத்து விட்டுருக்கான்னு கண்டுபுடிக்கலையா?" என தன் அதிமுக்கிய சந்தேகத்தை கேட்டான் கௌதம்.



"கண்டுபுடிச்சாரு!! அப்போதான் நானும் எங்க அப்பா திட்டத்துல ஒன்னு சேர்ந்த மாறி பேசி அவரை நம்பவச்சேன்... நான் ஒயர் அறுக்கலனா, ராம் செத்துருப்பான். அவர் உயிர் போறது இப்போதைக்கு நல்லது இல்ல... நீங்க ஆசைப்பட்ட மாறி கொஞ்ச நாள் அவன் நமக்கு அடிமையா இருக்கட்டும். இதுவரை குடுத்த ஷாக்க்குகே அவன் நிலைமை என்னனு தெரியலனு சொன்னேன். அவரும் என்னை நம்பி, என் பேச்சை கேட்க ஆரம்பிச்சுட்டாரு" என ரிஷி சொல்லி முடிக்கவும் மைதிலி தன் விழியால் அக்கினி மழையை பொழியவும் சரியாக இருந்தது.



"சும்மா சந்தேகப்படாத மைதிலி... அவங்கள கையும் களவுமா மாட்டிவிட தான் உங்களை இங்க வர சொன்னோம்... பிளான் எல்லாம் ரெடி..." என சொன்னான் சந்தோஷ்.



"அண்ணி? " என தயங்கியபடி அழைத்தாள் திவ்யா.



மைதிலி அவளை பார்க்கவும், தன் கையில் இருந்த கோப்புகளை அவளிடம் நீட்டினாள் திவ்யா.



"இதுல எல்லா டீடெய்ல்ஸும் இருக்கு அண்ணி... இதுவரை ராம் அண்ணாக்கு கொடுக்குறதுக்காக டாக்டர் மூர்த்தி எழுதி கொடுத்த தவறான மருந்துக்கான ப்ரிஸ்க்ரிப்ஷன். வக்கீல் வரதன் போலியா தயார் பண்ணுனா பத்திரங்கள். இன்னும் நெறய இருக்கு... இதெல்லாம் தாண்டி வலுவான ஆதாரம் வேணும்... அதை நம்ம தான் இனி உருவாக்கனும்...."



அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தாள் மைதிலி.

பின்பு ஒரு முடிவுடன் "என்ன பிளான்?" என கேட்டாள்.



தன்னை அவள் நம்பிவிட்ட மகிழ்ச்சியில் மைதிலியிடம் தன் முதல் திட்டத்தை சொல்ல தொடங்கினான் ரிஷி.



"நாளைக்கு சாயங்காலம் வக்கீல் வரதனுக்கு ‘ஸ்கை வாக்’ல ஒருத்தரோட மீட்டிங் இருக்கு. அப்போ நீங்களும் ராமும் அவன் கண்ணுல படுற மாறி அங்க உலவனும். என்னோட அனுமானம் சரின்னா, அவன் கண்டிப்பா உங்களை பார்த்ததை என் அப்பாட்ட சொல்லுவான், அதைக்கேட்டு என் அப்பாவே பதறி போய், உங்களை தேடி வந்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போவாரு.

இது முதல்ல நடக்கட்டும்... அடுத்து பண்ண வேண்டியதை நம்ம வீட்டுக்கு போய்ட்டு பிளான் பண்ணுவோம்..."



"உன் அப்பா தேடி வரப்போ நாங்க எங்க இருக்கனும்?" அவன் திட்டத்திற்கு தான் உடன்படுவதை மறைமுகமாக சொன்னாள் மைதிலி.



"அதெல்லாம் பிரச்சனை இல்ல அக்கா. எல்லாம் ரெடி. இந்த பிளான் ஓகே ஆச்சுன்னா, நீங்க நான் சொல்ற இடத்துக்கு போயிடலாம்..."



அவனிடம் 'ம்ம்ம்' என சொல்லிவிட்டு அருகே கலவரத்தின் நடுவிலும் கண்ணயர்ந்திருந்த ராமை எழுப்ப முயன்றாள் மைதிலி.



"ராம்? உள்ள போய் தூங்கலாம். எழுந்துக்கோ..."



"ஹே அக்கா என்னை நம்பிட்டாங்கடா!!!" என சந்தோஷிடம் கிசுகிசுத்தான் ரிஷி.



அதை கேட்ட கௌதம், "எனக்கு என்னவோ சந்தேகமாவே இருக்கு.... " என்றான்.



"என்மேலயா?" என்ற ரிஷியிடம் "என் தங்கச்சி மேல... !!! அது அமைதியா இருந்தா தான் என்னவோ வில்லங்கம்னு அர்த்தம்..." என்றான் கௌதம் இத்தனை நாள் அனுபவத்தில் கற்றதை.



மைதிலி ராமை கைதாங்கலாக தூக்குவதை கண்ட ரிஷி," நான் ஹெல்ப் பண்றேன் அக்கா" என அருகே சென்றான்.



"வேணாம்.. என் புருஷன்ன நான் பார்த்துப்பேன்" என சொன்னபடி அவனோடு உள்ளே சென்றாள் மைதிலி.



பாதி தூரம் சென்றவள், பின் நின்று திரும்பி, "எதுக்கும் கொஞ்சம் கேர்புல்லா இரு சந்தோஷ்! கிளைமாக்ஸ்ல ஏதும் ட்விஸ்ட் வச்சுட்ட போறான்.." என சொல்லிவிட்டு மேற்கொண்டு நடந்தபடி, "புரியலையா? நமக்கு உதவுர மாறி நடிச்சு,, கடைசில இவன் அப்பனோட கூட்டு சேர்ந்துட போறான்" என சொல்லிவிட்டு மறைந்தாள் ராமுடன்.

ரிஷியை ‘நம்பாதே’ என அப்பட்டமாய் சொல்லிவிட்டாள்.



"ஹீஹாஹா!!! நான் சொல்லல...! ஐ க்நொவ் மை சிஸ்டர்... " என கெத்தாய் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு சிரித்தான் கெளதம்.



"என்ன சந்தோஷ்...? என்ன நம்பவே மாட்றாங்க?” புலம்பினான் ரிஷி.



"போக போக புரிஞ்சுப்பா... நீ வந்து படு வா..." என அனைவரும் எழுந்துகொள்ள, "ம்ம்.. ம்ம்.. என் தங்கச்சிய யாராலயும் ஏமாத்த முடியாது! கௌதம் தங்கச்சியா, கொக்கா!!!!" என சொல்லிக்கொண்டு எழுந்துகொள்ள முயற்சித்தவனுக்கு, சற்று முன் நடந்த அந்த கோர விபத்தை நினைவு படுத்தும்படி, கழுத்தும் முதுகும் கபடி ஆட தொடங்கியது.



"யம்மா!!! ஹய்யோ! வலிக்குதே!!!" அவன் அலறலை கேட்க சந்தோஷும் திவ்யாவும் இல்லை. தூரத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த ரிஷி மட்டுமே தெரிந்தான்.



"அடேய் தம்பி!!" என அழைக்கவும், திரும்பி "என்ன?" என்றான்.



"அப்படியே வந்து அண்ணன்ன அலேக்கா தூக்கிட்டு போய் ரூம்ல விடு.. வா வா..." என்றான் கௌதம்.



"நானே செம்ம கடுப்புல இருக்கேன்... பேசாம இருங்க..."



"டேய் அண்ணனுக்காக இதுகூட பண்ணமாட்டியா???"



"போடாங்............" ரிஷி என்ன சொல்லிருப்பானோ, நல்ல வேளையாக கௌதம் அவை தனக்கு கேட்காதபடி செவிபறைகளுக்கு கைகளால் சிறையிட்டிருந்தான்.



"காலையில தானேடா,, அண்ணன் அண்ணன்னு உருகுன? ம்ம்... நீ இந்த உலகத்துல இருக்க வேண்டிய ஆளே இல்லடா கௌதம், பேசாம செவ்வாய் கிரகத்தில செட்டில் ஆகிடுடா..." என தனக்கு தானே சொல்லிக்கொண்டு தவழ்ந்து சென்றான்.



மறுநாள் மதியம் அனைவரும் டைனிங் ஹாலில் குழுமியிருந்தனர்.



"பரிமாறுனது போதும்.. நீயும் உட்காந்து சாப்பிடு" என திவ்யாவை அமர வைத்தாள் மைதிலி.



ரிஷியின் பார்வை தன் தட்டை தவிர்த்து திவ்யாவையே சுற்றிசுற்றி வந்தது. அவனுக்கு போக்கு காட்டவே, அவள் நில்லாமல் ஓடி கொண்டிருந்தாள். மைதிலி உட்கார சொன்னதும், வேறு வழியின்றி அமர்ந்தவளை பார்வையில் விழுங்கி கொண்டிருந்தான் ரிஷி.

"சாப்பாடு இங்க இருக்கு ரிஷி" என அவன் தட்டை காட்டி கிண்டல் செய்தான் சந்தோஷ்.



அவனை கண்டுகொள்ளாமல் தன் எதிரில் இருந்த திவ்யாவையே பார்த்து கொண்டிருந்தான் ரிஷி.



இவர்கள் விளையாட்டை கவனித்த மைதிலி, விரைவாக உணவை முடித்து கொண்டு ராமுடன் வெளியே தோட்டத்திற்கு சென்றுவிட்டாள்.



காலை எழுந்தது முதலே ராம் சற்று சோர்வாக இருப்பதை போல உணர்ந்தாள் மைதிலி. அதனால் அவனிட்டம் பெரிதும் பேச்சுக்கொடுக்காமல், அவனை தனியே அழைத்து சென்றுவிட்டாள்.



திவ்யா குனிந்த தலை நிமிராமல் இருப்பதை கண்ட ரிஷி, தன் காலை மெல்ல நீட்டி அவள் காலை தொட முயன்றான். ரிஷியின் திடீர் தீண்டலில் கூச்சம் ஏற்பட சட்டென காலை உள்ளிழுத்து கொண்டாள் திவ்யா.



இதை கண்ட சந்தோஷ் வேண்டுமென்றே இருமுவதை போல நடிக்க, அதை சற்றும் கண்டுக்கொள்ளாமல், மீண்டும் தன் காலை நீட்டி, அவள் காலை தேடினான் ரிஷி. அவனுக்கு சிக்காமல் போகவே தன் இருக்கையிலிருந்து சற்று இறங்கி அமர்ந்து தன் முயற்சியை தொடர்ந்தான்.

இப்போது கால் தென்பட்டுவிட, அவள் காலில் மெல்ல வரிகோலம் போட்டபடி அவள் முகத்தை பார்த்தான் ரிஷி.

'என்ன காலு சொரசொரன்னு இருக்கு!!?'

வெட்கத்தில் நெளிந்து கொண்டிருந்தாள் திவ்யா. இன்னும் சற்று இறங்கி அமர்ந்தபடி, அதே வேலையை மீண்டும் செய்ய தொடங்க, இம்முறை சிரித்தபடி எழுந்து சென்றுவிட்டாள்.


'ச்ச.. அதுக்குள்ள போய்ட்டாலே!! அவ போனாலும் காலு மட்டும் இங்கேயே இருக்கு?' கோவத்தில், தன் காலை வேகமாக உதற,

"அம்மாஆஆ" என கௌதம் அலரவும் பதற்றத்துடன் எழுந்து சரியாய் அமர்ந்தான் ரிஷி.



"என்ன ஆச்சு கௌதம்?" என சந்தோஷ் கேட்பதற்குள், "டேய் நிம்மதியா சோறு திங்க விடுங்கடா. சாவடிக்குரானுங்களே என்னைய....

எனக்கு போஸ்ட் மார்ட்டம் பண்ணாம ஊருக்கு அனுப்ப மாட்டானுங்க போலயே" என அழுதுகொண்டு தன் தட்டை கையிலேந்தியபடி சென்றான் கௌதம்.



அசடுவழிய அமர்ந்திருந்த ரிஷியிடம் "பாவம்டா அந்த மனுஷன்... ஹாஹா.. ஆனா, எருமமாட்டுக்கும், எம்மா வாட்சன்க்கும் கூட வித்தியாசம் தெரியாத அப்பாவியா இருக்கியேடா!!" என தன் பங்கிர்க்கு கலாய்த்துவிட்டு சென்றான் சந்தோஷ்.



மாலை ஸ்கைவாக்கில்...



"ரொம்ப நன்றி சார்! நீங்க எதிர்பார்க்குறத விட குறைவான நேரத்துல, இந்த கேஸை நமக்கு சாதகமா முடிச்சு தரேன்... சீக்கிரமே ஒரு நல்ல செய்தியோடு உங்களை சந்திக்குறேன்!" என தன் கிளைன்டை வழியனுப்பி விட்டு திரும்பிய வரதனின் கண்களில் ராம் விழுந்தான்.



"ரா...ம்...??"

அவர்கள் கவனத்தை ஈர்க்காதபடி அருகே சென்றார் வரதன்.



மைதிலி காதில், குழல் மறைத்திருந்த ப்ளூடூத் வழியே, "அந்த நாதாரி உங்க கிட்ட வந்துட்டான் மைதிலி. அலெர்ட்" என்றான் சந்தோஷ், மறைந்திருந்தபடி.



அவன் சொன்னதும் ஓர கண்ணால் வரதன் இருப்பதை உறுதி செய்துகொண்டாள் மைதிலி.



"மையு மையு.. அந்த பாப்பா பாரேன்! க்யூட்டா இருக்குல..." அவளை சுரண்டினான் ராம்.



அவன் காட்டிய இடத்தில் பார்த்தவள், "ஆமா ராம்.. ரொம்ப அழகா இருக்கா!!" என்றாள்.



"நமக்கும் கல்யாணம் ஆச்சுல... எப்போ இந்த மாறி பாப்பா வரும்?"

ராம் கேட்ட கேள்வியில் திகைப்புற்றாலும், ராம்க்கு திருமணம் ஆகிவிட்டதை எப்படி வரதனுக்கு தெரியப்படுத்தலாம் என்ற அவள் யோசனைக்கு முற்று புள்ளி வைத்ததைபோல் அமைத்தது அவனின் கேள்வி.

'காலைல இருந்தே ஒரு மாறி தான்டா இருக்க நீ!' மைதிலியின் மனம் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த ராமிடம் கவலையாய் நிலைத்தது.


"என்...ன.. ராம் கல்யாணம் பண்ணிக்கிட்டானா?" வரதனின் வாயில் நான்கு பெருச்சாளிகள் புகுந்து வந்தது.



திட்டம் சுலபமாக நிறைவடைந்ததை எண்ணி சிரித்து கொண்டனர் அனைவரும்.

-தொடரும்...
 
Last edited:
Top