Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 8

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 8
கற்பாறையில் தலை கவிழ்ந்திருந்தபடி அமர்ந்திருந்த சமீரா, சற்று தள்ளி கைகளை மடித்து ஏதோ சிந்தனையில் நின்றிருந்த சமர்த்தை, நிமிர்ந்துப் பார்த்தாள்.
“உங்க ஸ்ரீனியும், அம்ருதாவும் எப்படி இருக்காங்க?” என்றாள் தன்னிலை மறந்து.
அதுவரை காற்றின் மெல்லிய ஒலியை தவிர வேறெந்த சப்தமும் இல்லாமல் இருந்த இடத்தில் ஒலித்த அவளுடைய குரலே அவளை நடப்புக்கு இழுத்து வந்தது.
“ஓ! ஸ்ரீனிக்கு சொந்தமா நீ? உன்னை பார்த்த மாதிரியே நேக்கு தெரியலையே?” என்று பேசிக்கொண்டே சென்றவன் “அவா ரெண்டு பேரும் நன்னாத்தான் இருப்பான்னு நினைக்கிறேன்.. ரொம்ப நாள் ஆயிடுத்து அவாளப் பார்த்து.. இப்போ பெங்களூர்ல தான அவா இருக்கா?” என்ற கேள்வியையும் கேட்டான் சமர்த்.
அன்று ஸ்ரீனி-அம்ரு கல்யாணத்தின் போது ஒரு சில வார்த்தைகளை அவளின் முகம் பார்த்தே பேசியவனின் நினைவில் தான் இல்லை என்பது அவளுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது.
அன்று, ‘இங்க கையெழுத்து போடுங்கோ’, மற்றும் ‘ஆத்துக்கு வாங்கோ’ என்ற இரு வாக்கியங்களை மட்டுமே அவளின் முகம் பார்த்து பேசியிருந்தான் சமர்த். அதுவும் ஸ்ரீனியின் கல்யாணத்திற்கு உதவிய பெண் என்ற ரீதியில் மட்டுமே.
அதை தான் சமீரா, ஏதோ நீண்ட காலமாக அவளிடம் உரிமையாக பேசிக்கொண்டிருந்துவிட்டு இன்று அவை அனைத்தையும் மறந்து விட்டானே என்று தேவையில்லாமல் வேதனைப்பட்டாள்.
சமர்த்தின் அப்போதைய எண்ணம் ஸ்ரீனி-அம்ருவின் கல்யாணம் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடக்கவேண்டும் என்பதே. ஆனால் அது சமீராவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதே போல் சமீராவின் மனதில் இருந்த அவனை குறித்த ஆசையை சமர்த் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
சமர்த்தும் அன்று அவளின் அழகை கண்டு ரசித்திருக்கலாம் தான். அது இயற்கையின் அழகை, குழந்தையின் சிரிப்பை எல்லோரும் ரசிப்பது போலவே அவனின் அவள் மீதான ரசிப்பு தன்மை இருந்திருக்கும்.
ஆனால் சமீராவின் ரசனையோ அவனுடனான திருமணம் வரைக்கும் நினைத்து பார்த்து அவளின் மனதை சலனப் படுத்திக்கொண்டாள்.
காலத்தின் உதவியால் அச்சலனம் சில நாட்களியே அவளுக்கு மறைந்திருக்கலாம். பருவயதின் தாக்கம் தான் இது என்று அவளால் மிக எளிதாக எடுத்துக்கொண்டு அவளின் நாட்களை அழகாக கழித்திருக்கவும் முடிந்திருக்கும்..
ஆனால் இறைவனின் எண்ணம் வேறாக இருக்கும் போது, அவளால் இதையெல்லாம் செய்ய முடியவில்லை.
அவளின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த கொடூரத்தால் சமர்த்தின் நினைவு அவளின் மனதை விட்டு அகலாமலே இருந்தது.
அவனின் நினைவாகவே இன்றும் ‘சமீர்’ என்ற பெயரிலேயே அவள் பத்திரிகையில் எழுதுவதே அதற்கு ஒரு சான்று.
“சொல்லு மீரா! ஸ்ரீனிக்கு நீ சொந்தமா?”
சமர்த்தை திரும்பிப் பார்த்த சமீரா மௌனம் என்ற போர்வைக்குள் ஒளிந்துக்கொண்டாள்.
“நீதான அவாளப் பத்தி கேட்ட.. இப்போ பதில் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?”
“.....”
“ப்ப்ச்” என்று அலுத்துக்கொண்டே திரும்பி நின்றுக்கொண்டான் சமர்த்.
மருத்துவமனையினுள் நுழைந்த மருத்துவருக்கு அடிபட்டு கிடந்தவர் யாரென்று தெரிந்தது.
அதனால் நோயாளியை பரிசோதிக்காமலேயே அவருடைய அறைக்குள் புகுந்து அவரின் விசுவாசத்தை காண்பிக்க ஆரம்பித்தார். அதாவது அலைபேசியில் விக்கியை அழைத்திருந்தார் அவ்மருத்துவர்.
விக்கியால் மட்டுமே அவரது படிப்பும், இந்த மருத்துவமனையும் அவருக்கு கிடைத்திருந்ததினாலேயே ஏற்பட்டது இந்த விசுவாசம்.
விக்கியை அழைத்துவிட்டு வந்து, சகாயத்தை பரிசோதித்து, மயக்கம் தெளிய ஒரு ஊசியையும் போட்டு விட்டு, அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தார் மருத்துவர்.
அடுத்த ஒரு அரைமணி நேரத்தில் அந்த மருத்துவமனையை அடைந்திருந்தான் விக்கி.
அப்பொழுதும் சமீரா அதே கற்பாறையிலேயே அமர்ந்திருக்க, அவளைப் பார்த்தவாறே சமர்த் நின்றுக்கொண்டிருந்தான்.
சிறிது தூரத்தில் தெரிந்த காரின் வெளிச்சத்தால் சமீராவின் அருகில் வந்து நின்றுக்கொண்டான் சமர்த்.
சமீராவும் எழுந்து நின்று கார் வரும் திசையையே பார்த்தாள்.
காரிலிருந்து நிறைய பேர் இறங்குவது தெரிந்ததால் இருவரும் மறைவிடத்தை நோக்கி ஓட தொடங்கினர். அந்த காரின் வெளிச்சம் முழுவதும் குறைந்தது அவர்களுக்கு வசதியாய் ஆகிப் போனது.
“யோவ்!! வைத்தி!! இப்போ எப்படி இருக்கு அவனுக்கு?” என்றான் விக்கி அந்த மருத்துவனை நோக்கி.
விக்கிக்கு படிப்பின் வாசனை துளியும் இல்லாததால் டாக்டர் என்று அழைக்க வரவில்லை.
‘மருத்துவரே!’ என்று மரியாதையாக அழைத்தால் அவனிடம் பயமற்று போகக்கூடும் என்பதால் அவரை(டாக்டர்) அப்படி அழைக்க விக்கியின் மனது இடமளிக்கவில்லை.
அதனால் வைத்தியர் என்பதை ‘வைத்தி’ என்று சுருக்கிதான் அழைப்பான்.
முதலில் சற்று சுனுங்கிய மருத்துவரின் மனது, விக்கியின் கைங்கர்யத்தால் (அதாங்க கையாலேயே கன்னத்துல ஓங்கி ஒண்ணு விடறது) அவ்வழைப்பை ஏற்றுக்கொண்டது.
“மயக்கம் தெளிய வைக்க ஊசி போட்டிருக்கேன் சார்.” என்று விக்கியை மரியாதையாய் விளித்தான் அந்த மருத்துவன்.
“இவனை யாரு கொண்டு வந்து சேர்த்தது?” என்று கேட்ட விக்கிக்கு விஸ்வநாதனை கைகாட்டினான் மருத்துவன்.
“யோவ் பிரஸ்ஸு!! நீ இங்க என்னய்யா செய்யற?”
இந்த நேரத்தில் விக்கியை அங்கு எதிப்பார்க்காததால் அவருக்கு வார்த்தைகள் தந்தி அடித்தன.
“அது..வந்து ..அது ..” என்று இழுத்த விஸ்வநாதனின் அருகில் நின்றிருந்த லோகுவைப் பார்த்தான் விக்கி.
“நீ யாருய்யா?” என்று லோகுவைப் பார்த்து கேட்ட விக்கிக்கு, விஸ்வநாதனால் விக்கியின் கூட்டத்திற்கு அனுப்பப்பட்ட சேரன் பதிலளித்தான்.
“இவனும் நம்ம கூட்டத்தை சேர்ந்தவங்தாங்கண்ணா..!”
“அப்படியா?” என்று கேட்ட விக்கிக்கு லோகுவின் தலை ‘ஆமாம்’ என்று பதில் அளித்தது.
“நீ பெரிய இவனா?வாய தொறந்து பேச மாட்டீரோ?”
“ண்ணா அவனுக்கு வாய் பேச வராதுங்க..” – சேரன்
“இது வேறயா? இவனை மாதிரி ஆட்களை எல்லாம் ஏன்யா நம்ம கூட வச்சுக்கறீங்க?”
“ண்ணா!! அது வந்துங்ண்ணா!! இவனால் தான் எனக்கு நிறைய தகவல் சகாயத்தைப் பத்தி தெரிய வந்தது.. அதான் இவனை நம்ம கூட சேர்த்துக்கிட்டேன்..” என்ற வார்த்தைகளில் சற்று அடங்கினான் விக்கி.
“யோவ்! ப்ரெஸ்ஸு!! கேள்வி கேட்ட பதில சொல்லாம ஏதோ ஆடு திருடின களவாணி போல நின்னுக்கிட்டு இருக்கிற.”
முதலில் சற்று தடுமாறிய விஸ்வநாதன் சேரனின் விளக்கத்தால் கதை புனைய தொடங்கினார்.
“நான் அங்கிருந்து வண்டிய எடுக்கும் போது இவர் அந்த மந்திரியை தூக்கிட்டு வந்தார். இவருக்கு பேச வராது என்றறிந்ததும் நானே இருவரையும் இந்த மருத்துவமனைக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டேன்.” என்று கூறும்போதே அவரது கண்களில் சகாயத்தையும் சமீராவையும் பரிசோதித்த செவிலியப் பெண் விழுந்தாள்.
“அய்யோ! இந்தப் பெண் எதையும் உளறாமல்இருக்கவேண்டுமே.. சமீராவும் இப்போ இங்க வராமல் இருக்கணுமே!!” என்று அவரது மனது கடவுளிடம் மனு போட்டது.
அந்த செவிலியப் பெண், ‘இப்பொழுது வாய் மூடி மௌனம் காத்தால் மட்டுமே நாளை காலை உயிருடன் வீடு போய் சேர முடியும்’ என்று மனதில் நினைத்துக்கொண்டாள். மேலும் ‘சீக்கிரம் வேறு மருத்துவமனையில் வேலை தேடவேண்டும்’ என்றும் நினைத்துக்கொண்டாள்.
செவிலிய பெண்மணி ஒன்றும் பேசாதததைக் கண்டதால் விஸ்வநாதனிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளியேறியது.
இரண்டு நோயாளிகள் அங்கே அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற தகவலில் தான் மருத்துவர், அந்த மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்ததே.. இங்கு வந்து சகாயத்தைப் பார்த்ததுமே அந்த விஷயம் மருத்துவருக்கு மறந்ததும் விஸ்வநாதன் குழுவின் நல்ல நேரமே.
அந்த விஷயத்தை அவருக்கு நினைவு படுத்த விரும்பவில்லை அந்த செவிலியப் பெண். அவள் வாயை திறந்திருந்தால் சமீராவும் அவர்களிடம் மாட்டியிருப்பாள்
சமர்த்தும், சமீராவும் மருத்துவமனையின் பின்பக்கம் ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு உள்ளே நடப்பது நன்றாகவே தெரிந்தது.
சமீரா அவளுடைய பேன்ட் பாக்கெட்டில் எதையோ தேடிக்கொண்டிருந்ததைப் பார்த்த சமர்த், தன்னுடைய சட்டைப் பையில் இருந்த அவளுடைய அலைபேசியை நீட்டினான்.
“நீ மயக்கமா இருந்த போது கீழ விழுந்துடுத்து.. நான் தான் எடுத்துவச்சேன்.” என்ற சமர்த்திற்கு மௌனமாக சிறு தலை அசைப்பில் நன்றி தெரிவித்தாள் சமீரா.
அலைபேசியில் மருத்துவமனையினுள் நடப்பவற்றை வீடியோ எடுக்க முற்பட்டாள் சமீரா.
“மீரா இந்த லைட்ல பிச்சர் சரியா வராது.. நீ இங்கயே இரு.. நான் கொஞ்சம் கிட்ட போய் வீடியோ எடுக்கறேன்..” என்று அவளின் கையில் இருந்த அலைபேசியை வாங்கினான் சமர்த்.
“அங்க என்ன நடந்தாலும் நீ வெளிய மட்டும் வராத ப்ளீஸ்.. நானும் அவங்ககிட்ட மாட்டிண்டா போலீஸ்க்கு தகவல் சொல்லவவாது நீ மாட்டிக்காம இருக்கணும்..
நான் சொல்ற இதையாவது கேளு ப்ளீஸ் மீரா.” என்ற சமர்த் அவளைப் பார்த்தவாறே அங்கிருந்து செல்ல தொடங்கினான்.
‘சரி’ என்பதைப் போல் அவளின் தலை தானாக ஆடினாலும், “டேக் கேர் சமீர்” என்றது அவளுடைய உதடுகள்.
அவளின் ‘சமீர்’ என்ற அழைப்பில் ஒரு நொடி நின்றான் சமர்த். அவனை ‘சமீர்’ என்று அவனுடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைப்பர் என்றறிந்ததால் அவனுடைய நினைவடுக்கில் சமீரா எங்காவது தென்படுகிறாளா? என்று ஒரு சில நொடிகள் யோசித்துப் பார்த்தான்.
அவளை குறித்து எதுவுமே நினைவு வராததால், இப்பொழுது அதைப் பற்றி அவளிடம் பேசுவதும் உசிதமாக படவில்லை என்பதாலும் அந்த மருத்துமனை அருகில் செல்ல தொடங்கினான்.
“வைத்தி அவனுக்கு எப்போ தான் மயக்கம் தெளியும்?”
“கொஞ்ச நேரத்தில தெளிஞ்சுடும்ன்னு நினைக்கிறேன் சார்.”
“பிரஸ்ஸு இங்க வா.” என்றவாறே விஸ்வநாதனின் தோள்களில் கையியைப் போட்டு தன்னருகில் நிறுத்திக் கொண்டான் விக்கி.
“இந்தா பிரஸ்ஸு இப்போ நான் சொன்ன தகவலை வெளிய சொல்லவேண்டாம்... உன் கிட்ட ஒரு போட்டோ ஒண்ணு கொடுத்தேனே அதைக் கொடு.” என்று விஸ்வநாதனிடம் கேட்டான் விக்கி.
“ஏனுங்ண்ணா இப்போ வேண்டாம்ன்னு சொல்றீங்க?” என்றான் சேரன்.
“அதுவா சேரா! இந்த சகாயத்தால நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு.. அதுமட்டுமில்லாம இப்போ சகாயத்துக்கும் இந்த விக்கியைப் பத்தி நல்லாவே புரிந்திருக்கும்..
இனிமே நம்ம கிட்ட கொஞ்சம் பம்முவான் பாரேன். இன்னும் கொஞ்சம் அவனுக்கு உயிர் பயத்த மட்டும் அவன் கண்ணுல காண்பிச்சோம்ன்னு வச்சிக்கோ, பய என் காலடியிலேயே விழுந்துக்கிடப்பான்.
அதைப் பத்தி இந்த பத்திரிகைக்காரன் முன்னாடி நாம ரொம்ப பேச வேண்டாம்.” என்று சேரனிடம் கூறியவன் விஸ்வநாதனிடம் திரும்பினான்.
“யோவ் ப்ரெஸ்ஸு!! நீ இங்க நடந்ததை பார்க்கலை, எதுவும் கேட்கவும் இல்ல! என்ன சரியா?
சகாயத்தைப் பத்தியோ, இல்ல என்னைப் பத்தியோ தகவல் ஏதாவது வெளிய கசிஞ்சுச்சுன்னா நீயும் உன்னோட பத்திரிக்கையும் இருக்கிற இடமே தெரியாம போயிடும்.. இப்போ உன்னோட மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு கிளம்பு.” என்றான் விஸ்வநாதனிடம் விக்கி.
விஸ்வநாதனுக்கோ மாவட்ட ஆட்சியையரையும், சமீராவையும் இங்கேயே விட்டு விட்டு கிளம்ப மனது வரவில்லை. அதுமட்டுமில்லாமல் லோகு இல்லாமல் அவருக்கு காரை எடுப்பதும் சிரமம்.
விக்கியின் முன்னால் இதையெல்லாம் காட்டிக்கொள்ளவும் முடியாத காரணத்தால் சேரனைப் பார்த்து, அவர்கள் இருவர் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய சமிக்ஞையை செய்தார்.
 
சேரனும் அதைப் புரிந்துக்கொண்டு, “ண்ணா! இந்த ஆளை இப்போ அனுப்பவது எனக்கு என்னமோ தப்பா படுதுங்க? சகாயம் எழுந்ததும் என்ன நடந்ததுன்னு கேட்டுக்கிட்ட பிறகு தான் இந்த ஆளை அனுப்பனும்.” என்றான்
“சேரா! இப்போ இவன் இங்கிருக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன்.. கொஞ்சம் என்னோட வா!” என்று அழைத்து, மருத்துவரின் அறைக்குள் கூட்டி சென்றான் விக்கி.
“என்னங்ண்ணா விஷயம்?”
“சேரா! எனக்கு இன்னிக்கே சகாயத்துகிட்ட ஒரு டீலிங் பேசியே ஆகணும்.. அவன் என்னோட அந்த டீலிங்க்கு ஒத்து வரலன்னா உடனேயே அவனோட கதையை முடிச்சே ஆகணும்..
இதெல்லாம் நடக்கறப்போ இந்த பிரஸ்ஸு இருந்திச்சின்னா ரொம்ப பெரிய பிரச்சினையாகும். அதுமட்டுமில்லை எங்களோட டீலீங் இப்போதைக்கு யாருக்குமே தெரியவும் கூடாது.
ஆனா இந்த பத்திரிக்கைகாரங்களுக்கு உடம்பு முழுக்க கண்ணும், காதும் தான்.. எப்படி தான் விஷயத்தை தெரிஞ்சிப்பாங்களோ தெரியாது.. விஷயம் உடனே வெளிய கசிஞ்சுடும்..
அதை நான் விரும்பலை.. சீக்கிரம் அவனை கிளப்பற வேலைய பாரு. அதோட கூட நம்ம ஆட்களையும் கூட்டிக்கிட்டு நீயும் கிளம்பு.” என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான் விக்கி.
“ப்ரெஸ்ஸு என்ன கிளம்பலையா?” என்று கேட்டபடியே விஸ்வநாதனின் அருகில் வந்தான் சேரன்.
சேரனின் கேள்வியிலேயே விக்கிக்கு தான் அங்கு இருப்பது பிடிக்கவில்லை என்று உணர்ந்துக்கொண்டார் விஸ்வநாதன்.
அப்பொழுதும் அவருக்கு கிளம்ப மனம் இல்லை தான் ஆனால் வேறு வழியில்லாததால் மருத்துவமனையை விட்டு வெளியேற தொடங்கினார்.
அப்பொழுது அந்த மருத்துவர் செவிலியப்பெண்ணை நோக்கி “சிஸ்டர் நீங்க இரண்டு பேரு அட்மிட் செஞ்சிருக்குன்னு தானே சொன்னீங்க? எங்க அந்த இன்னொரு பேசன்ட்?” என்றார்.

அந்த செவிலிய பெண்மணியோ அதிர்ந்த முகபாவத்துடன் விஸ்வநாதனை பார்க்க முற்பட்டாள்.
அதையறிந்த விஸ்வநாதன் அப்பெண்ணை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் கிளம்புவதிலேயே குறியாக இருந்தார்.
வைத்தியின் குரலில் செவிலியப் பெண்மணியை நோக்கிய விக்கி, “என்ன நர்சம்மா? வைத்திக்கு பதில சொல்லுங்க?”என்றான்
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சமர்த்திற்கு உடம்பெல்லாம் வேர்த்துக்கொட்ட தொடங்கியது.
சமீராவைப் பற்றி இந்தப் பெண் ஒன்றும் கூறாமல் இருக்க வேண்டும் என்று காஞ்சி வரதராஜ பெருமாளிடம் வேண்டினான் சமர்த் அவசரமாக.
“அது வந்துங்க டாக்டர்!! அவங்க போய்ட்டாங்க.” என்றாள் செவிலியர்.
“என்னமா சொல்லற? எங்க போனாங்க?” என்று கேட்டார் மருத்துவர்.
“டாக்டர் அவங்களுக்கு சின்னதா ஒரு மயக்கம் தான்.. அந்த மயக்கம் தெளிஞ்சதுமே ஒரே கத்தல்.. இந்த ஹாஸ்பிட்டல்ல எதுக்கு சேர்த்தீங்கன்னு அவங்க ஹஸ்பண்டு கூட சண்டை போட்டாங்க..
அதான் அவங்க வீட்டுக்காரரு என் கிட்ட ஒரு சாரிய சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.” என்றவளை நன்றி கலந்த பார்வையுடன் பார்த்தார் விஸ்வநாதன்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சமர்த்தோ மீராவை திரும்பிப் பார்த்து சிரித்துக்கொண்டான். கொஞ்சநேரம் முன்னாடி மயக்கத்தில் இருந்த அவளை கையில் ஏந்தியிருக்கும்போது ‘அவளோட ஆம்படையான் பாவம்’ என்று தான் நினைத்ததை எண்ணி தான் அவனுக்கு சிரிப்பு வந்தது..
அவளின் கணவனாக தான் இருந்தால் எப்படி இருக்கும்? என்று சிந்திக்க தொடங்கினான். பின் ஏதோ நினைத்து பயந்தவன் போல் தலையை உதறிக்கொண்டு மனதிற்குள்ளேயே பேசிக்கொள்ள ஆரம்பித்தான் சமர்த்.
“இவளை கல்யாணம் பண்ணிண்டா பாதி நேரம் மௌனமா இருந்தே மனுஷன கொன்னுடுவா!! அய்யோ! நான் ரிஸ்க் எல்லாம் எடுக்கமாட்டேன்.. பெருமாளே!! நேக்கு இந்த மாதிரி எண்ணம் எல்லாம் கொடுக்காதே..”என்ற வேண்டுதலுடன் அங்கு நடப்பவற்றை மேற்கொண்டு கவனிக்க தொடங்கினான்.
“சரி சிஸ்டர் அந்த பேசன்ட்டை விடுங்க.. இப்போ இந்த பேசன்ட் ரூம்க்கு போய் மயக்கம் தெளிஞ்சுதான்னு பாருங்க..” என்று சகாயம் இருக்கும் அறையை நோக்கி கை காட்டினார் மருத்துவர்.
அப்பெண்ணோ, “யோவ் டாக்டரு!! நானாய்யா அந்த பேசன்ட்டை பிடிச்சுக்கிட்டு தொங்கறேன்..? உன் ஞாபகத்துல தீயை வைக்க.. காலைல மொதவேலையா பேப்பர் போட்டுட்டு கிளம்பணும்.” என்று மனதினுள் சொல்லிக்கொண்டாள். பிறகு சகாயத்தை கவனிக்க செல்லவும் மறக்கவில்லை.
அவள் அறையினுள் நுழைவதைப் பார்த்துக்கொண்டிருந்த விக்கிக்கு விஸ்வநாதனை தவிர, வேறு யாரோ அவர்களை கவனிக்கிறார்கள் என்று புரிந்தது.
ஏனென்றால் மருத்துவர், ‘இன்னொரு நோயாளி எங்கே?’ என்று கேட்டதுமே, அந்த நர்சம்மாவின் பார்வை விஸ்வநாதனை நோக்கியதை விக்கி ஏற்கனவே கவனித்திருந்தான்.
ஜீப்பில் ஏறி உட்கார்ந்த விஸ்வநாதனைப் பார்த்து “யோவ் பிரஸ்ஸு!! இப்போ நீ போகவேண்டாம்.! “ என்று கர்ஜித்தான் விக்கி.
“சேரா! நம்ம ஆளுங்களை எல்லாம் வெளிய அனுப்பி யாராவது இருக்காங்களா?ன்னு தேட சொல்லு.. எனக்கு என்னமோ இவன் மட்டும் தனியா வரலைன்னு தோணுது.. போ!! சீக்கிரம் போ!! “ என்று சேரனையும் விரட்டினான் விக்கி.
 
Top