Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 13.1

Advertisement

Admin

Admin
Member




பகுதி – 13

விஜய்க்கு ஜெனியோடு திருமணம் என்பதை லின்சியால் ஏற்கவே முடியவில்லை... விஜய்யை பிடிக்காதது போல் போக்குக் காட்டினால்... அவர்கள் வழிய வருவார்கள்... அவர்களுக்காக ஒத்துக்கொண்டது போல் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டால்... அந்த வீட்டில் இதை வைத்தே ஆட்சி செய்யலாம் என்று கற்பனை கோட்டை கட்டியிருந்தாள்.

வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும் என்று சொன்னது எல்லாம் சும்மா... பந்தா காட்டுவதற்காக... வெளிநாட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் நம் வேலையை நாம் தான் பார்க்க வேண்டும்... அதே இங்கே என்றால்... அனைத்து வேலைக்கும் ஆள் வைத்து விட்டு ராணி மாதிரி இருக்கலாம் என்பதுதான் அவள் நினைப்பு.

வருடத்திற்கு இரண்டு முறை வெளிநாடுகளுக்குச் சுற்றுபயணம் செய்து தன் ஆசையையும் தீர்த்துக் கொள்ளலாம் என்பது அவள் கனவு... அவள் செல்வராணி அன்று பேசியதை பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை... அத்தை மகனை விட்டுக் கொடுக்காமல் பேச வேண்டும் என்பதற்காகச் சொல்கிறார்கள். திருமணம் என்றால் தன்னைத்தான் தேடி வருவார்கள் என்று நினைத்திருந்தாள்.

தங்களிடம் இருக்கும் வசதிக்காகவாவது வருவார்கள் என்று நினைத்திருந்தாள். அவளுக்குச் செல்வராணி விஜய்க்கு வெளியில் பெண் தேடியது தெரியாது.

விஜய் தன்னைக் குண்டு என்று கேலி செய்வதால்... கஷ்ட்டப்பட்டு உடல் மெலிந்து இன்னும் அழகாக வந்திருந்தாள். அதனால் தான் சிறிது நாட்களாக இந்தப் பக்கமே வரவில்லை... விஜய்யை தன் பின்னே சுற்ற வைக்க வேண்டும் என்று கனவுகளோடு வந்தவளுக்கு... அவள் கற்பனை கோட்டை நொறுங்கி தூள்த் தூளானது.

விஜய் புத்தாண்டுக்கு மறுநாள் காலை அலுப்பு தீர உறங்கி விட்டுத் தாமதமாக எழுந்து கீழே வந்தபோது ஹாலில் ஸ்வீட்டி மட்டுமே இருந்தது.


அதைப் பார்த்ததும் விஜய்க்கு ஜெனியின் ஞாபகம் வர... ஜெனி இல்லாமல் வீடே கலையிழந்தது போல் அவனுக்குத் தோன்றியது. அங்கிருந்த சோபாவில் சென்று படுத்தவன் ஸ்வீட்டியை வருடியபடி இருந்தான்.

எப்போதும் தூங்கி எழுந்த பிறகு சுறுசுறுப்பாக இருக்கும் தன் மகன் இன்று சோம்பலாகப் படுத்திருப்பதைப் பார்த்து வியந்த செல்வராணி அவனுக்கு எதிரில் சென்று அமர்ந்தார்.

விஜய் அவன் அம்மா வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை... எதோ சிந்தனையில் இருந்தான்.

“என்ன விஜய் இன்னைக்கு ஹோட்டலுக்கு ரௌண்ட்ஸ் போகலையா?....”

“இல்ல மா... போகலை... மதியமா லஞ்ச் சாப்பிட்டு ஹோட்டல் போறேன்.”

“உடம்பு முடியலையா விஜய்...” கவலையாகப் பார்த்த தன் அன்னையிடம் “இல்லமா... நல்லா தான் இருக்கேன். கொஞ்சம் டயர்ட் வேற ஒன்னும் இல்லை...” என்று விஜய் புன்னகைக்க.

“ஜெனி நியாபகமா இருக்கா...” செல்வராணி அவன் நினைப்பதை கேட்டு விட...

“ம்ம்.. ரெண்டு நாள் முழுசும் அவளோடவே இருந்திட்டு... இப்ப அவ இல்லாம இருக்கக் கஷ்ட்டமா இருக்கு...” விஜய் தன் மனதை மறைக்காமல் வெளிபடுத்த....


“வர்ற சண்டே உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம். உன் அண்ணனுங்ககிட்ட கேட்டு கல்யாண தேதி பிறகு முடிவு செய்வோம்.” என்று செல்வராணி சொல்லிக்கொண்டிருக்கும் போதே பானுவும், லின்சியும் வந்தனர். ஜோசப் நேற்றே கிளம்பி விட... இவர்கள் மட்டும் இருந்தனர்.
“ஏன் அண்ணி விஜய்க்கு வேற பெண்ணே கிடைக்கலையா...” பானு ஆரம்பித்த போது.... விஜய் செல்வராணி இருவரின் முகமும் மாறுவதைக் கண்டு நொடியில் சுதாரித்தவர் “ப்ரித்விக்குத்தான் வயசு அதிகம். அதனால வேற வழியில்லாம அவங்க வீட்ல பொண்ணு எடுத்தோம். நம்ம விஜய்க்கு அப்படி அவசரம் ஒன்னுமில்லையே பிறகு எதுக்கு?” என்று அவர் கேட்க...


“ப்ரித்விக்கு ஒன்னும் அதிக வயசு இல்ல... முப்பது முடிஞ்சு முப்பத்தி ஒன்னுதான் ஆரம்பிச்சிருக்கு. அவன் ரொம்ப நாள் திருமணத்திற்குச் சம்மதிக்கவே இல்லை... நானும் விடாம நிறையப் பொண்ணுங்க போட்டோ அனுப்பிட்டே இருந்தேன். அதில் அவனுக்குப் புனிதாவைதான் பிடிச்சிருந்தது.”

“அவன் புனிதாவை பிடிச்சுதான் கல்யாணம் பண்ணிகிட்டான். அவனுக்குப் பொண்ணு கிடைக்காம அவளைக் கல்யாணம் பண்ணிகிட்ட மாதிரி இனி பேசாதீங்க.”

“அதோட புனிதா குடும்பமும் எங்க அந்தஸ்த்துக்குச் சமமானவங்கதான். இனி அவங்களைக் குறைச்சுப் பேசுறதும் வேண்டாம். எல்லாத்தையும் விட எங்களுக்கு எங்க பிள்ளைங்க விருப்பம் ரொம்ப முக்கியம்.”

“விஜய்க்கு ஜெனியை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதோட எங்களுக்கும் பிடிச்சிருக்கு. நான் விஜய்க்கு வர்ற மனைவி எப்படி இருக்கனும்ன்னு ஆசைபட்டேனோ.... ஜெனி அதே மாதிரி இருக்கா...” செல்வராணி மேலும் அவர்கள் எதுவும் பேசமுடியாத படி பேசி வாயை அடக்க... பானுவும் லின்சியும் ஏமாற்றத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த ஆரோக்கியராஜ் செய்தித்தாளில் வந்த அவர்களின் கடை திறப்பு விழாவின் புகைப்படத்தைக் காட்ட... விஜயும் செல்வராணியும் அதை ஆவலாக வாங்கிப் பார்த்தனர்.

விஜய்தான் பத்திரியாகையாளர்களை அழைத்திருந்தான். ஆனால் அவன் ஜெனியை பற்றி எதுவும் அவர்களிடம் சொல்லவில்லை... இது யாரோட வேலை என்று யோசித்தவனுக்கு... இது மைக்கேல்லின் வேலையாக இருக்கும் என்று புரிந்தது. அவன்தான் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். விஜய் புன்னகையுடன் தன் நண்பனிடம் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள எழுந்து சென்றான்.

செல்வராணி அன்று மாலை அவரின் மற்ற இரு பிள்ளைகளிடமும் விஜய் ஜெனி நிச்சயத்தைப் பற்றிப் பேச... புனிதாவிற்குத் தான் இன்ப அதிர்ச்சி... அவளிடம் இதுவரை யாருமே இதைப் பற்றிச் சொல்லவில்லை.... ஏன் லீனா கூடச் சொல்லவில்லை. முதலில் உறுதியாகட்டும் பிறகு சொல்லலாம் என்று இருந்தார்.

புனிதா உடனே தன் தாயை அழைத்து விசாரிக்க... அவரும் விஜய் ஜெனி இருவருக்கும் திருமணம் செய்யப் போவதாகச் சொன்னதும், தன் தங்கையும் அவள் வீட்டுக்கே மருமகளாக வருவதை எண்ணி அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

நிச்சயத்திற்குச் செல்லும் முன் செல்லில் அழைத்த ஜெப்ரி “நாங்க எல்லாம் எங்க நிச்சயத்துக்கு வரவேயில்லை...... அது எப்படி விஜய் மட்டும் போகலாம்.” என்று அல்ப்பத்தனமாகச் சண்டை பிடிக்க...

“டேய் நானாடா... உங்களை வர வேண்டாம்ன்னு சொன்னேன். நீங்க வெளிநாட்டில இருந்திட்டு வரலை... அவன் இங்க இருக்கான் அதனால வரான். நான் எதோ சதி செஞ்சு உங்களை வரவிடாம பண்ண மாதிரி சொல்ற...” செல்வராணி நிச்சயத்திற்குக் கிளம்பும் பரபரப்பிலும் தன் மகன்களுக்கு இடையே பஞ்சாயத்துச் செய்தார்.

ஜெனியின் வீட்டிலேயே நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஸ்டீபன் அவர் பக்கம் நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்திருந்தார். அதே போல் ஆரோகியசாமியும் அவர் பக்க உறவினர்கள் நண்பர்களையும் அழைத்திருந்தார். அதுவே வீடு நிறைய ஆட்கள் இருந்தனர்.

பெரியவர்களிடையே பேச்சு வார்த்தை முடிந்ததும் ஜெனியை அழைத்து வந்து சபையில் உட்காரவைக்க... விஜய்க்கு அவள் பக்கம் இருந்து பார்வையைத் திருப்ப முடியவில்லை.

நிச்சயத்திற்கு ஊரிலிருந்து வந்திருந்த ஜெனியின் அத்தை பெண் ஜாஸ்மின் அவளை அழகாக அலங்காரம் செய்திருந்தாள். ஆரஞ்சு நிறத்தில் தங்க நிற கரையிட்ட புடவை அவளுக்குப் பாந்தமாகப் பொருந்தி இருந்தது.

விஜய் இது வரை ஜெனியை மாடர்ன் ட்ரஸில்தான் பார்த்திருக்கிறான். இன்று தான் முதன் முறை புடவையில் பார்க்கிறான். கழுத்தில் காதில் பெரிய நகைகள் அணிந்து, தோள்வரை இருந்த கூந்தலை பின்னி பூ வைத்திருந்தாள். முகத்தில் லேசான ஒப்பனையோடு பெரிய பொட்டும் வைத்து பார்க்க லக்ஷனமாக இருந்தாள்.



விஜயின் நண்பர்கள் அவனைக் கிண்டல் செய்து ஓட்ட... அவன் புன்னகையுடன் ஜெனியை பார்த்தபடி இருந்தான்.

“டேய் நீ மட்டும் அவங்களையே பார்க்கிற... அவங்க இங்க பார்க்கவே மாட்றாங்க.” மைக்கேல் கிண்டல் செய்ய....


“வெட்கம் டா... அப்புறமா தனியா இருக்கும் போது பார்ப்பாங்களா இருக்கும்.” என்றான் மற்றொரு நண்பன் கெவின்.

விஜய் ஜெனிக்கு மோதிரம் அணிவிக்க.... ஜெனியும் விஜய்க்கு மோதிரம் அணிவித்தாள். ஜெனியின் முகத்தில் சிறிது நாட்களாகத் தொலைந்துபோன புன்னகை மீண்டும் வந்திருந்தது. பெரியவர்கள் இருவரையும் ஆசிர்வதித்தனர்.

ஜெனிக்கு விஜய்யோடு இந்தத் திருமணத்தில் விருப்பம் இருந்தது. ஆனால் அதற்கு மேல் அவள் மகிழ்ச்சியை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை... அமைதியாக இருந்தாள். ஆனால் அதற்க்கு அப்படியே எதிர்மறையாக விஜய் இருந்தான்.

இந்த நிச்சயதார்த்தம் ஜெனியோடு அவனின் எதிர்காலத்தை உறுதி செய்திருப்பதால்.... அவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. அது அவன் முகத்தில் வெளிப்படையாகவும் தெரிந்தது.

விஜய்யின் நண்பர்கள் ஒரு பெரிய கேக்கை கொண்டு வர... அதை விஜய்யும் ஜெனியும் சேர்ந்து வெட்டினர். விஜய் ஜெனிக்குக் கேக்கை ஊட்டிவிட்டவன், அவள் இதழில் ஒட்டியிருந்த க்ரீமை அவனே துடைத்து விட....

அதைப் பார்த்த அவனின் நண்பர்கள் “டேய் உன் ஆர்வக்கோளாறுக்கு அளவே இல்லையா... அவங்க பார்த்துபாங்க விடுடா....” என்று கேலியில் இறங்க....விஜய் அவர்களைக் கண்டுகொள்ளாமல் ஜெனியையே ஆவலோடு பார்த்திருந்தான்.

அவன் எதற்கு அப்படிப் பார்கிறான் என்று புரிந்துகொண்ட மைக்கேல் “ஜெனி ப்ளீஸ்... நீங்களும் அவனுக்குக் கேக்கை ஊட்டி விட்டுருங்க. அதுக்குத் தான் இப்படிப் பார்க்கிறான். காலையில இருந்து சாப்பிடாம இருந்திருப்பான் போலிருக்கு....” என்றதும், சுற்றி நின்றவர்கள் அனைவரும் சிரிக்க... ஜெனி விஜய்க்குக் கேக்கை ஊட்டினாள். அதை அவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தனர்.
 
Top