Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter twelve

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 12

தேவியும், சரவணனும் பார்க், லைப்ரரி என்று காதல் பயிரை தன் நேரம் கொடுத்து வளர்த்தனர்.
செமஸ்டர் லீவ்.
இரு வாரங்கள்.
லீவ் தொடங்கும் முன்பே சரவணன் தேவியிடம் அதற்கான திட்டங்கள் விரிந்தன.
லீவில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போன் செய்ய வேண்டும். ஷீபாவை விட்டு முதலில் பே'சத் தொடங்க வேண்டும். அம்மா எடுத்தால் ஷீபா தன் பேரைச் சொல்லி நண்பி என்று அறிமுகப்படுத்திப் பேச வேண்டும். அதிகப் பட்சம் பதினைந்து நிமிடம். மீறிப் பேசினால் அம்மாவுக்கு சந்தேகம் வந்து விடும். ஒரு வார இறுதி சனிக்கிழமையில் சரசுவுடன் பெருமாள் கோவிலுக்கு காலை 8 மணிக்கு வருவாள். அங்கு வந்தால் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் சிறு மண்டபத்தில் அமர்ந்து பேசலாம். அதுவும் ஒரு மணி நேரம் தான். லேட்டாய் திரும்பினால் அம்மாவிடம் பொய் சொல்ல வேண்டும்.
அவள் சொன்னதும் எல்லாவற்றிற்கும் தலை ஆட்டினான் சரவணன்.
'என்ன இப்பவே தலை ஆட்ட ஆரம்பிச்சுட்ட? நீயும் ரெண்டு கண்டிஷன் சொல்லு.' ஷீபா சீண்ட, சிரித்தாள் தேவி.
'எனக்கு ஒங்கள எப்படி பாக்காம இருக்கறதுன்னே தெரியல...'சொல்லச் சொல்ல தேவியின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.
அவள் கண்கள் கலங்க ஆரம்பித்ததும் சரவணன் தகர்ந்தான்.
'ஏய். என்ன இது? ஒரு ரெண்டு வாரம் தானே. அதுக்கப்புறம் மறுபடியும் காலேஜ் தொறந்துரும். மறுபடியும் நாம அடிக்கடி சந்திக்கலாம்.'
சரவணனின் படபடப்பைப் பார்த்து கிண்டல் செய்தாள் ஷீபா.
'ஆமா. இவ கண் கலங்கினா போதுமே ஐயா நெஞ்சு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சு வாய் கொளற ஆரம்பிச்சுருமே.'
சரவணன் கண்டுக்காது அவளது கைகளைப் பிடித்து ஷீபாவிடம் திரும்பினான்.
'ஷீபா அதக் கொடு.'
என்ன என்பது போல் பார்த்தாள் தேவி.
ஷீபா தனது ஹாண்ட் பேக்கில் இருந்து அந்த புத்தகத்தை எடுத்தாள்.
சரவணனின் நீட்டிய கையில் அதை வைத்தாள்.
சரவணன் அதை தேவியின் கைகளில் வைத்தான்.
'ஒனக்கு எப்பல்லாம் என் நியாபகம் வருதோ இந்தப் புத்தகத்தப் படி.'
தேவி அந்தப் புத்தகத்தைப் பார்த்தாள்.
ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்.'
முகப்புப் பக்கத்தைத் திருப்பினாள் தேதி போட்டு வாங்கிய இடம் எழுதப் பட்டிருந்தது. தேவியின் பெயர் சரவணனின் கையால் எழுதப்பட்டு அன்புப்பரிசு என்று ஸ்டைலாக தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. அவள் மெதுவாகப் புரட்டிப் பார்த்தாள். 51, 101, 151 பக்கங்களில் அவளது பெயர் எழுதப்பட்டிருந்தது. ஏதோ கண்களை இடறவே திரும்பவும் பக்கங்களைப் புரட்டினாள். ஒரு பக்கத்தில் சரவணனின் அழகிய கலர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மின்னியது. சட் என்று அதை கண்களில் ஒத்திக் கொண்டாள்.
'பாத்து தேவி. உங்கம்மா கண்ல படாம பாத்துக்க. பட்டுச்சு லீவ்ல வீடு அல்லோலகல்லோலம் தான். ஆமா ஐயாவுக்கு நீ ஏதும் கிப்ட் தரலயா?'
தேவி 'அச்சச்சோ' என 'பரவால்ல. ஒனக்கு பதிலா நானே தந்துட்றென்.' என்றாள் ஷீபா.
தேவி புரியாமல் விழித்தாள்.
மறுபடியும் தன் ஹாண்ட் பாக்கில் இருந்து ஒரு கவரை எடுத்து தேவியின் கைகளில் திணித்தாள் ஷீபா.
'இத ஒன்னவர்ட்ட கொடு.'
தேவி கவரில் என்ன என்று பார்க்க கையை வைக்கும் முன் ஷீபா கத்தினாள்.
'அவன் தான் பிரிக்கணும்'
தேவி ஒன்றும் சொல்லாமல் கவரை சரவணனிடம் நீட்டினாள்.
அவன் அதை வாங்கிக் கவரின் உள் விரல் விட்டு பிரித்து உள்ளே இருந்த போட்டாவை எடுத்தான்.
சரவணனும் தேவியும் காலேஜின் புளிய மரத்தடியில் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும் போட்டோ அது.
'ஏய் ஷீபா! இது எப்ப எடுத்த? போஸ் குடுத்த மாதிரி தத்ரூபமா இருக்கு!' என்றான் சரவணன்.
'ஆமா. போட்டோ எடுக்கறதே தெரியாத அளவுக்கு ரெண்டு பேரும் மெய் மறந்து நின்னீங்க. நம்ம காலேஜ் புரபசர் ஜீவா கூட அந்த வழியா வந்தார். பாக்காத மாதிரி போயிட்டார். அப்படி என்ன தான் பாத்துட்டே இருப்பீங்களோ? நானும் இத தெரிஞ்சுக்கலாம்னு பாத்தா எவன் மேலயும் லவ் வந்து தொலைக்க மாட்டேங்குது.'
'அது நல்லதுன்னு நெனச்சுக்கோ. இந்த மாதிரி பிரிவு வரப்போ தாங்க முடியாது.' சரவணனின் குரல் கெட்டித்தது.
தேவி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
'நான் வேணும்னா ஏதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கிறேன்னு எதிலயாவது ஜாயின் பண்ணட்டுமா?'
'அம்மா விடுவாங்களா?'
'டவுட்டாத்தான் இருக்கு.'
'அப்படி எதுன்னா இருந்தா போன் பண்ணு.'
'கண்டிப்பா'
'சரி. பஸ் வரப்போகுது. நீ போயிக்கோ. அம்மா ஏன் லேட்டுன்னு கேக்கப் போறாங்க.'
அவன் சொல்லவும் அவளது ஊருக்குச் செல்லும் பஸ் வந்தது.
சரசு 'வாடி' என்று சொல்லி சரவணனயும் ஷீபாவயும் பாத்து 'வரேங்க.' என்று சொல்லி சிரித்து விட்டு பஸ்ஸில் ஏறினாள். அவளைத் தொடர்ந்து பேசினால் அழுது விடுவோமோ என்று கண்களில் நீர் குளமாய் கட்ட பஸ்ஸில் ஏறினாள் தேவி. விடு விடு என்று உள்ளே சென்று சரசுவின் பக்கத்தில் அமர்ந்து கைக்குட்டையை எடுத்து வழியும் நீரைத் துடைத்துக் கொண்டாள். பஸ் புறப்பட்டது.
'டிக்கட்' என்று கண்டக்டர் பக்கத்தில் வரவே அழும் குரலில் சரசுவிடம் 'நீ எடுறீ' என்றாள் தேவி. கண்களில் நீர் பெருகிய வண்ணம் இருக்க கண்டகர் கவனிக்காத மாதிரி ஜன்னல் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
'நாலு டிக்கட் கொடுங்க.' என்று ஜெண்ட்ஸ் வாய்ஸ் கேட்கவே அதிர்ந்து திரும்பினாள் தேவி. பின் சீட்டில் சிரித்தவாறு ஷீபாவும் காதல் கண்களுடன் சரவணனும்.
கண்டக்டர் டிக்கெட் தந்து விட்டு பின் பக்கம் நகர, தேவி கண்களைத் துடைத்துக் கொண்டாள். சிரிக்க முற்பட்டாள்.
'தன்னோட காதல் தேவதை கண்ல தண்ணியோட போறத ஐயாவால தாங்க முடியல. அதான் ஊர்ல ட்ராப் பண்ணிட்டுப் போலாம்னு ஏறிட்டார். கூட நானும். எங்க வீட்ல ஏன் லேட்னு கேட்டா இவனத் தான் சொல்லுவேன்.
ஷீபா புலம்ப அதை காதில் வாங்காது தேவியும் சரவணனும் ஒருவரை ஒருவர் ஆழமாய் பார்க்க ஆரம்பித்தனர்.
'போச்சுடா. பாக்க ஆரம்பிச்சுட்டாங்களா. இனி உங்க ஸ்டாப் வர வரைக்கும் நான் ஸ்டாப் பார்வ தான். இதனால தான் சைட் அடிக்கிறதுன்னு வந்துச்சோ'
சரசுவிடம் ஷீபா சொல்ல அவள் சிரித்தாள்.
'நம்ம ஏதாவது பேசிட்டு வரலாம் சரசு. இல்ல அர மணி நேரம் இவங்க பாக்கறத நாம பாத்திட்டு இருந்தா நமக்கு பைத்தியம் புடிச்சிரும்.'
சரசு மறுத்தாள்.
'ஐயோ. அர மணி நேரம் இப்படி திரும்பி இருந்தா எனக்கு கழுத்து வலிக்க ஆரம்பிச்சுரும்'
'தேவிக்கு வலிக்காதோ?'
'அது என்னமோ. ஒங்களுக்கு லீவ் விட்டாச்சா?'
'இல்ல. இன்னும் ரெண்டு எக்சாம் இருக்கு. நாளைக்கு கூட ஒண்ணு இருக்கு. அய்யாவுக்கும் தான். இப்படி டைம் வேஸ்ட் பண்ணா அரியர் தான. பைனல் இயர் வேற. சொன்னா கேக்க மாட்டேங்கறான்.'
'சரி. போனதும் படிங்க. நல்லா எழுதுங்க. இடைல இடைல கூப்டுங்க.'
'சரி சரசு. நீ எப்படி எழுதுன எக்சாம்லாம்?'
'ம். நல்லா எழுதி இருக்கேன்.'
இருவரும் ஏதேதோ பேசி அரை மணியை கழிக்க தேவி திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே மௌனத்தால் காதல் பாஷை சரவணனிடம் பேசினாள்.
அவர்கள் இறங்கும் ஸ்டாப் வந்தது. அவர்கள் எழுந்து கொள்ள பின் சீட்டில் இருந்த சரவணனும், ஷீபாவும் எழுந்தனர். தேவியின் கண்களில் மறுபடியும் நீர் திரள ஆரம்பிக்க தலை குனிந்து இறங்கி சரசுவின் பக்கத்தில் நின்று கொண்டாள். பஸ் கிளம்ப பக்கத்தில் சரவணனும் ஷீபாவும் நின்றிருந்தனர்.
'சரி. நான் வரட்டா தேவி. இன்னும் ரெண்டு வாரம் தான.'
தழுதழுத்த குரலில் சொன்னாள் தேவி.
'இல்ல பதினாலு நாள்.'
'சரி. அழுவாத. நாவல் நெறய படி. கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர ட்ரை பண்ணு.'
மெல்ல தலை ஆட்டினாள்.
ஷீபா அவசரப்படுத்தினாள்.
'நாம போக வேண்டிய பஸ் வருது. வா போலாம்.'
'சரி வரட்டா?'
கண்களில் நீருடன் ஏறிட்டாள் தேவி.
'நாங்க வேண்ணா ஒங்கள ட்ராப் பண்ண வரட்டா?'
ஷீபா கேலி செய்தாள்.
'பாத்தியா சரசு. இவங்க ரெண்டு பேர் லூஸூ மாதிரி நடந்துக்கறதோட நம்மளயும் சேத்து இழுக்கறாங்க. இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ட்ராப் பண்ணிகிட்டே இருந்தா எப்படி வீட்டுக்கு போறதாம்? நீ வாடா.'
சரவணனைப் பிடித்து இழுத்து ரோட்டை கடந்தாள் ஷீபா.
சரவணன் திரும்பிப் பார்த்து கை அசைத்து விட்டு வந்த பஸ்ஸில் ஏறினான்.
ஜன்னலோர சீட்டில் அமர்ந்து இவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
பஸ் நகர சரவணன் கை காட்டினான்.
பஸ் அவ்விடம் தாண்டியதும் பக்கத்தில் இருந்த திண்டில் அமர்ந்த தேவி நெஞ்சு வெடிக்க குமுற ஆரம்பித்தாள்.

(தொடரும்)
 
Nice epi.
Yedi Ithu konjam over than.
Appo Sheebha ku vendi than Saravanan Vasanthi devi ya vittu poyatha?
 
Top