Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 21

Advertisement

Super
தோகை 21:

மீண்டும் நன்னியூரை நோக்கி ஒரு பயணம்.முதல் பயணத்திற்கும்... இரண்டாவது பயணத்திற்கும் அவ்வளவு வித்யாசம்.மனதில் இருந்த காதல் உணர்வை...வெறுப்பு,பழி என்று முகமூடி போட்டுக் கொண்டு சென்றதாய் முதல் பயணம்.அதே காதலை உணர்ந்து,அவளை அடைந்து..இதோ அவளுடன் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் அஜய்யின் மனம் முழுவதும் நிறைந்திருக்க....சக்தியோ யாருக்கு வந்த கடனோ என்று அமர்ந்திருந்தாள்.

அதற்காக அவள் மனதில் ஒன்றும் இல்லை என்றெல்லாம் அர்த்தம் கிடையாது.அவளின் மனதில்...ஊசியிடை நூலாய் மெது மெதுவாய் நுழைந்திருந்தான் அஜய்.அதை உணர்ந்து கொள்ளும் தருணம் தான் இன்னமும் வரவில்லை.

“அன்னைக்கு மழை பெய்த மாதிரி இப்பவும் பேஞ்சா நல்லா இருக்கும்..!” என்று அவன் மனதில் நினைக்க....அவளுக்கோ..எப்போதடா ஊருக்கு போவோம் என்று இருந்தது.

“எந்தவித பாதுகாப்பும் இன்றி,எந்த வித அறிவிப்பும் என்றி..முதன் முறையாக ஒரு பயணம் மேற்கொள்கிறான் அஜய்.அது அவனுக்கு ஒரு புது மாதிரியாக இருந்தது.

நினைத்த நேரத்திற்கு..நினைத்த இடத்திற்கு அவனால் சுதந்திரமாக சென்று வர முடியாது என்பதை எப்படி சக்திக்கு சொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லை.இருந்தாலும் மனைவியின் மனம் பார்த்து...தன்னிலையில் இருந்து தடம் மாறினான் அஜய்.
கண்ணனுக்குமே ஆச்சர்யம்...! இவ்வளவு பெரிய ஸ்டார்..இப்படி சாதாரணமா போனா...அங்க என்ன சூழ்நிலை இருக்கும் என்று அவனுக்கு தெரியும்.இப்போது அஜய் போனாலும்..அங்கேயும் வீட்டிற்குள் தான் இருக்க முடியும் என்பதும் அவனுக்குத் தெரியும்.இருந்தாலும்..அதை சட்டை செய்யாது வந்து கொண்டிருந்த அஜய்யைப் பார்த்து அவனுக்கு ஆச்சர்யமே...!அவன் அறிந்த அஜய்..அவனல்லவே..! எதற்காகவும் தன்னில் இருந்து இறங்காதவன் ஆயிற்றே..?

அவர்கள் வருகிற தகவலை..ஏற்கனவே மகாலிங்கத்திடம் சொல்லியிருந்த படியால்...அவர் அதற்கான ஏற்பாட்டை செய்திருக்க.. இதை அறியாத அஜய்யோ...மனதில் விசில் அடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.

“சக்தியும்,மாப்பிள்ளையும் வந்தாச்சு...!” என்ற லிங்கத்தின் குரலில்... ஊரே அங்கு திரண்டது.முதலில் அஜய் கவனிக்கவில்லை.கண்ணன் தான் கவனித்தான்.

“சார்..!” என்று அழைக்க....

“சொல்லுங்க கண்ணன்..!”

“அங்க ஒரே கிரவுடா இருக்குற மாதிரி தெரியுது..!” என்றான்.

“ம்ம்..பார்த்தேன்..” என்றான் பட்டும் படாமல்.

“இப்போ..இப்படியே இறங்குனா...எப்படியும் நியூஸ் தீயா பரவிடும்..!” என்றான் கண்ணன்.

“ஒன்னும் பண்ண முடியாது கண்ணன்..இப்போ நான் இறங்கலைன்னா... ஒருத்தி பார்வையாலையே பொசுக்கிடுவா..!வரது வரட்டும்..!” என்றபடி அவன் இறங்க..

தான் இறங்கி இவ்வளவு நேரம் ஆகியும்...இறங்காத அவனைக் கண்டு முறைத்தாள் சக்தி.
அவனின் நிலை தெரியாமல்...லிங்கம் அனைத்தையும் செய்திருக்க.. அங்கே ஆரத்தி எடுக்கவே பெண்கள் அலை மோதிக் கொண்டிருந்தனர். முதலில் இது சக்தியின் கண்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் நேரம் ஆக ஆக..விஷயம் தீயாய் பரவ..அங்கே கூட்டம் அதிகம் கூடத் தொடங்க...

“நம்ம ஊர்ல இத்தனை ஜனம் இல்லையே..?” என்று அவள் யோசிக்க...

“அதுவே இப்ப தான் தெரியுதா..?” என்று மனம் கிண்டல் அடித்தது.

“நம்ம சக்திக்கு அடிச்ச யோகத்தைப் பாருங்கடி..எவ்வளவு பெரிய ஹீரோ..இவளுக்கு இப்போ புருஷன்..” என்று அவள் வயதை ஒட்டிய வயசுப் பெண்கள் பொறாமைப் பட...அதில் சந்தோஷப் பட்டது மருதாணி மட்டும் தான்.

“வாங்க மாப்பிள்ளை..! வாம்மா சக்தி..!” என்று லிங்கம் அழைக்க..

அஜைய்யால் ஒரு எட்டு கூட நகர முடியவில்லை.அனைவரும் அவனை சுற்றி நின்று..அதிசயத்தைப் பார்ப்பதைப் போல் பார்க்க...அவனுக்கு தர்மசங்கடமாகியது.அளவுக்கு அதிகமான கூட்டம் அவனுக்கு எப்போதும் ஆவதில்லை.
சக்தி ஒரு ஓரத்தில் நிற்க..அவளை விட்டு ஒரு பத்தடி தூரத்தில் மக்களின் நடுவில் நின்றிருந்தான் அஜய்.
அதைப் பார்த்த சக்திக்கு..முதன் முறையாக ஒரு தனிமை உணர்வு.ஏதோ மனதிற்குள் செய்ய..அவளையும் அறியாமல் கண்கள் கலங்கியது.

“இப்ப எதுக்கு இப்படி நினைக்குற...?சும்மா அவர் இந்த ஊருக்கு வந்தப்பவே..அவ்வளவு போலீஸ் இருந்தாங்க..! ஆனா இப்ப யாரும் இல்லை..!அப்பவே தினமும் அவ்வளவு கூட்டம் வரும்..! இப்ப சொல்லவா வேணும்..!” என்று மனம் சொல்ல...
வேகமாய் அந்த கூட்டத்தை விலக்கி சென்றவள்..அவன் கைக்குள் தன் கையைக் கொடுத்து...அவனை அணைத்தார் போல் நின்றவள்...”இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை...வந்தவரை வீட்டுக்குள்ள கூட விடாம..?நகருங்க முத..!” என்றாள் ஒரே போடாய்.

அவளின் குரல் சுத்தமாக வேலை செய்யாவிட்டாலும் ஓரளவு வேலை செய்தது.கொஞ்சம் நகர..

“நீங்க நடங்க...! மருதாணி..நீ மட்டும் ஆரத்தி எடு..!” என்றாள் கொஞ்சம் குரலை உயர்த்தி.ஊர் பெரியவரின் மகள் என்பதால் அவளின் சொல்லுக்கு அங்கே கொஞ்சம் அமைதி நிலவ...மருதாணியும் சந்தோஷமாய் ஆரத்தி எடுத்தாள்.

அதுவரை அவன் கைகளை விட்டு அவள் கையை விலக்கவேயில்லை. அஜய் கூட சக்தியை ஆச்சர்யமாய் பார்த்தான்.அவள் உரிமை உணர்வு கண்டு மனதிற்குள் சாரல் அடித்தது.

“இப்படியே இரு..! இதுவே செம்ம கிக்கா இருக்கு..!” என்றான் அவள் காதோரத்தில்.

“உங்களை..!” என்று முறைத்தவள்..பட்டென்று கைகளை விட்டாள். ஆனால் அவனோ அதை கண்டு கொண்டவனாய் தெரியவில்லை.அவன் எதார்த்தமாய் வீட்டிற்குள் செல்ல..அதற்கு முன் அந்த வீட்டிற்குள் வந்த சம்பவம் நியாபகம் வர..சிரித்துக் கொண்டான்.

அவன் ஒன்றும் சொல்லாமல் சென்றது அவளுக்கு தான் ஒரு மாதிரி ஆகியது.அனைவரும் அவனைத் தாங்க..அவளுக்கு தன் வீட்டிலேயே அந்நியப்பட்ட உணர்வு.

“எதுக்குடி அண்ணனை இப்படி வெறிக்க வெறிக்க பார்க்குற..?” என்றாள் மருதாணி.

“ம்ம்..எனக்கு வேற வேலை இல்லை பாரு..போடி அங்கிட்டு..நீ எப்படி இருக்கடி...இங்க நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு..!” என்றாள்.

“இங்க எல்லாம் அப்படியேதான் இருக்கு.ஒருவாரத்துல இங்க எந்த மாற்றமும் இல்லை..ஆனா நீ தான் ஒரு மார்க்கமா இருக்க..!” என்றாள் மருதாணி.

“யாரு நானு..மார்க்கமா..? அடிப் போடி..!” என்று இழுத்தாள்.

“இல்லை சக்தி..! நிஜமா..சும்மாவே உன் மூஞ்சி ஜொலிக்கும்...இப்போ சும்மா அள்ளுது...அப்புடி இருக்க..ஆமா இதென்ன காதுல கழுத்துல ஒன்னையும் காணோம்..அண்ணா ஒன்னு கூட வாங்கித் தரலையா..?” என்றாள்.

அவர்கள் ஊரில் கல்யாணம் முடிந்து பிறந்த வீட்டிற்கு வரும் பெண்களின் அலங்காரம் பற்றி சக்திக்கு நன்றாகவே தெரியும்.கழுத்து நிறைய..காணாததைக் கண்டது போல்..போட்டுக் கொண்டு திரிவதைப் பார்த்து அவளே நிறைய முறை சிரித்திருக்கிறாள்..இப்போ மருதாணியும் அதையே கேட்க...சக்திக்கு சிரிப்பு வந்தது.

“எதுக்குடி சிரிக்கிற..?”

“இல்லை..! உங்க நொண்ணன் எனக்கு ஒண்ணுமே வாங்கித் தரலை..அவர்கிட்ட காசு இல்லையோ என்னவோ..!” என்றாள் சக்தி.

“நீ நிஜமாதான் சொல்றியா சக்தி..! அப்படின்னா அவர்கிட்ட கேட்டு அவரை கஷ்ட்டப்படுத்தாத சக்தி..நம்ம அய்யாகிட்ட இல்லாததா... அவர்கிட்ட எனக்கு சீர் செனத்தி செய்ங்கன்னு கேளுடி..” என்றாள் மருதாணி அப்பாவியாய்.

அதை அவர்கள் பின்னாடி இருந்து கேட்ட அஜய்க்கு..ஏனோ மருதானியின் அப்பாவித்தனம் பிடித்துப் போனது.எதை சொன்னாலும் நம்பும் அவளைப் பார்த்து சிரித்தான்.

“விளங்கிடும்..!” என்றாள் சக்தி சிரிப்பாக.

“என்னால இன்னும் நம்பவே முடியலைடி..”மருதாணி.

“எதை..!” சக்தி.

“இல்லை..அஜய் சார்..இல்ல இல்ல..அஜய் அண்ணா தான் உனக்கு புருஷன்றதை..!” என்றாள் வியப்பு மாறாமல்.

“நல்லது..அப்படியே இரு..!” என்றாள்.

“மெட்ராசுக்கு போனியே..அங்க அண்ணன் உன்னை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போனாரா...அங்க கடல் எல்லாம் இருக்காமே கூட்டிட்டு போனாரா..?” என்றாள் மருதாணி.

“அதையேன் கேட்குற மருது...அவர் என்னை ஒரு இடம் பாக்கி விடலை..எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போனாருன்னா பார்த்துக்கோயேன்..!” என்று நக்கலாய் சொல்ல..அவளின் நக்கல் அஜய்க்கு புரிந்தது..ஆனால் மருதாணியோ..

“அதான எனக்குத் தெரியும்..! அவரு எவ்வளவு நல்லவரு...அவரு கடைசியா நடிச்ச படத்துல அந்த ஹீரோயினை கூட்டிட்டு பைக்ல ஊரெல்லாம் சுத்துவாரு.....அதே மாதிரி உன்னையும் கூட்டிட்டு போயிருப்பாரு..!” என்று அவள் எதார்த்தமாய் சொல்லிக் கொண்டு போக...அதைக் கேட்ட அஜய் தலையில் கையை வைக்க...சக்திக்கோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“மறுபடியும் முதல்ல இருந்தா..?” என்று நொந்து போனான் அஜய்.

“என்ன..? மாப்பிள்ளைய உட்கார வச்சுட்டு..ரெண்டு பேரும் ரகசியம் பேசிட்டு இருக்குறவளுக..! போ..போய் தம்பிக்கு குடிக்க எடுத்துட்டு வா..!” என்று பாட்டி விரட்ட..அவரை முறைத்துக் கொண்டே சென்றாள் சக்தி.

மருதாணி அவனையே வைத்த கண் வாங்கமால் பார்த்துக் கொண்டிருக்க...”என்ன..?” என்பதைப் போல் கேட்டு வைத்தான் அஜய்.

“இல்ல..எப்படி நீங்க இப்படி அழகா இருக்கிங்கன்னு பார்த்துட்டு இருக்கேன்..!” என்றாள்.
அந்த வெகுளித் தனத்தில் சிரித்தவன்....”இங்க வா..” என்றவன்...அவள் உடனே வரவும்..

“உண்மையாலுமே..நீ தான் அழகு..!” என்றான் பாசமாய்.

“நிஜமாவா சொல்றிங்க..? நான் அழகா இருக்கேனா..?” என்றாள் உறுதிப் படுத்தும் பொருட்டு.

“நிஜமாமா..நீ ரொம்ப அழகு...மனசில் எந்த அழுக்கும் இல்லாத.. வெகுளியான அழகு..!” என்றான்.

“நன்றிங்க அண்ணா..!” என்றாள் மருதாணி.

“ம்ம்க்கும்..” என்று சக்தி செரும...அவனிடம் காபி டம்ளரை நீட்டினாள் சக்தி.அவள் முகம் கடுப்பாய் இருக்க..

“அண்ணா.! அவளையும் அழகுன்னு சொல்லிடுங்க..இல்லைன்னா அவ்வளவு தான்..” என்று மருதாணி சொல்ல..

“எல்லாரையும் விட என் பொண்டாட்டி தான் அழகு..அதுல உனக்கு என்ன சந்தேகம்..?” என்றான்.

”ஆத்தி..நீங்க சரியான ஆளுதான்..” என்று மருதாணி கன்னத்தில் கைவைக்க...சிரித்து விட்டாள் சக்தி.

“மாப்பிள்ளை உங்களைப் பார்க்க...நிறைய பேர் வெளிய நிக்குறாங்க..!” என்று மகாலிங்கம் சங்கடத்துடன் சொல்ல...
அவனுக்குதான் உள்ளே எரிச்சலாய் இருந்தது.அவனுக்கு ஏற்கனவே அசதியாக இருக்க..அவரிடம் மறுப்பும் சொல்ல முடியாமல் முழித்தான்.

“அப்பா..! இப்ப தான வந்திருக்கோம்..அசதியா இருக்காதா..அவர் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டார்ன்னு சொல்ல சொல்லுங்கப்பா..!” என்றாள்.

“ஏதாவது நினச்சுக்குவாங்க மா..!” என்றார்.

“பரவாயில்லை..!” என்று அவள் சொல்ல..

“இட்ஸ் ஓகே சக்தி...நான் வரேன் மாமா..!” என்றபடி அவன் எழுந்து போக..சக்தியோ அவனை கோபமாக முறைத்தாள்.
ஏதோ எல்லா இடங்களிலும்...அவன் இருந்தும்..அவள் அருகில் இல்லாத ஒரு உணர்வு அவளுக்கு.
வேகமாக தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

இப்போ..அப்போ..என்று ஒரு வழியாக அவர்களிடம் இருந்து விடுபட்டவன் சக்தியை காணாமல் தேட...அவ அறையில இருக்கா தம்பி...மருதாணி தம்பியைக் கூட்டிட்டு போமா...!” என்று சொல்ல..

“இருக்கட்டும் பாட்டி நானே போய்க்கிறேன்..!” என்றபடி சென்றான்.

“பரவாயில்லை பாட்டி..எவ்வளவு பெரிய ஆளு அவரு...ஆனா கொஞ்சம் கூட பகட்டே இல்லை..!” என்றாள் மருதாணி.
பாட்டிக்கும் அது புரிந்து தான் இருந்தது.அவன் மேல் சக்தியின் மனமும் சாயத் தொடங்கியிருப்பதை பாட்டி ஏற்கனவே அறிந்திருந்தார்.

“அப்பனே..முருகா..! ரெண்டு பிள்ளைங்களையும் நீதான் நல்லபடியா பார்த்துக்கணும்..!” என்று முருகனிடம் ஒரு வேண்டுதலை வைத்து விட்டு...அவர் வேலையைப் பார்க்க செல்ல.. மருதாணி..,சமைத்துக் கொண்டிருந்த குப்பாயிக்கு உதவும் பொருட்டு சமையல் அறைக்கு சென்றாள். அவளின் அறைக்குள் நுழைந்தான் அஜய்.அவன் அறையில் கால்வாசி கூட இல்லை அந்த ரூம்.ஆனால் அதெல்லாம் அவன் கண்ணுக்குத் தெரியவில்லை.

அந்த மழை நாளில் அவள் நின்றிருந்த ஜன்னலோரம் இன்றும் நின்றிருந்தாள்.அன்று ரசனையாக.இன்று கோபமாக.
“என்ன மேடம்...ரொம்ப அமைதியா இருக்கீங்க..?” என்றான் கட்டிலில் அமர்ந்தபடி.அவளிடம் பதில் இல்லை.அவளை யோசனையுடன் பார்த்தவன்...

“சக்தி..!” என்று மென்மையாக அழைத்தபடி..அவள் அருகினில் சென்று தோளைத் தொட...அவ்வளவு நேரம் இருந்த அமைதி மறைந்து...அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

அஜய் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.அவளின் முதல் அணைப்பு. சுகமாய் சில கணங்கள்.மனதால் கரைந்த சில கணங்கள்.

“என்னாச்சு..!” என்றான்.

அவன் நெஞ்சில் புதைந்தவள்...’ஒன்றுமில்லை’ என்பதைப் போல் தலையை ஆட்ட..

“அதுக்கு ஏன்..என் சட்டையை அழுக்கு பண்ற..?” என்றான் சிரித்தபடி.

அவனின் பேச்சில் நிமிர்ந்து அவனை முறைத்தவள்..”உங்களை..!” என்று பல்லைக் கடிக்க...

“என்னை..?” என்று எடுத்துக் கொடுத்தான் அஜய்.

“ஒண்ணுமில்லை..!” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள...அவள் மனதின் போராட்டம் அவனுக்கு தெளிவாய் தெரிந்தது.
அவளைப் பின்னிருந்து இறுக அணைத்தவன்....அவள் காதோரத்தில் தன் முகத்தை வைத்து உரசியவனாய்...”ஒரு பொண்ணு..அருவாளை வச்சு என்னை மிரட்டுச்சு..அந்த பொண்ணை எங்கயாவது பார்த்தியா சக்தி..?” என்றான் வெகு நெருக்கமாய்.

“பார்த்தேன்..!” என்றாள் சற்று திணறிய படி.

“அப்படியா..? எங்க பார்த்த..? இன்னொரு தடவை அவளைப் பார்த்தா சொல்றியா..?” என்றான்.

“என்னன்னு...?”

“நீ அப்படி திமிராவே இரு...அதான் பார்க்க நல்லா இருக்கு..வெட்கம் எல்லாம் படாத...சத்தியமா பார்க்க முடியலைன்னு..நான் சொன்னதா அவகிட்ட சொல்லிடுறியா..?” என்றான் சிரிக்காமல்.

அவன் பின்னிருந்து அணைத்ததில்..ஏகாந்த உணர்வில் சிக்கியிருந்தவள்..அவன் அவ்வாறு சொல்லவும்...

“உங்களை வச்சுகிட்டு...” என்று வேகமாய் அவனைத் தள்ளிவிட...

“அதைத்தான் சொல்றேன்..கட்டிகிட்டவனை ஏன் வச்சுக்கணும்...” என்றான்.

“ஐயோ...! என்னால முடியலை..என்னை விட்ருங்க..தயவு செஞ்சு..!” என்றாள் கடுப்பாய்.

“சரி..இப்ப சொல்லு என்ன பிரச்சனை..!” என்றான்.

“இல்லை..அது...வந்து..!” என்று இழுத்தாள்.

“இழுக்காம சொல்லு சக்தி..!” என்றான்.பழைய அஜய் திரும்பியதாக தோன்றியது சக்திக்கு.

“இப்ப ஏன் கோபமா பேசுறிங்க..?” என்றாள்.

“யாரு நானு..கோபமா...எனக்கு கொஞ்ச பொறுமைதான்...பிரச்சனை என்னன்னு சொல்லு..” என்றான்.

“இல்ல..அங்க..வெளிய..” என்றாள்.

“வெளிய..?” என்றான் கேள்வியாய்.

“அவளுங்க எல்லாம் உங்களை சுத்தி நிக்குறாளுங்க..நீங்களும் ஈன்னு இளிச்சுட்டு நிக்குறிங்க..!” என்றாள் கோபமாய்.

“நான் இளிச்சுட்டு நின்னேன்..! நீ பார்த்த..?” என்றான்.

“நான் மட்டுமா..எல்லாரும் தான் பார்த்தாங்க..?” என்றாள் ஆதங்கமாய்.

“இப்ப அதுக்கு என்ன..? அதுக்கு நான் என்ன பண்றது..?” என்றான்.

“எனக்கு பிடிக்கலை..!” என்றாள்.

“என்ன பிடிக்கலை..?”

“நீங்க இப்படி எல்லாம் பண்றது..!” என்றாள்.

“இங்க பாரு..நானா ஊருக்கு வரேன்னு சொன்னேன்...எனக்கா வேண்டுதல் இருக்கு..நானா பொங்கல் வைக்க போறேன்..?” என்றான்.

“நான் உங்களை கூப்பிடவே இல்லையே...நீங்களா தான வந்திங்க..?” என்றாள்.

“ஹோ...அப்ப ஏண்டா என்கூட வந்தன்னு கேட்குற..? அப்படித்தான..?” என்றான்.

“இல்லை அப்படியில்லை..!” என்று சமாளித்தாள்.

“உன் பதிலே சொல்லுது...உன் மனதில் இருப்பதை..!” என்று விரக்தியாய் சிரித்தவன்...

“இது கிராமம்...முதல் முதல்ல உங்க வீட்டுக்கு வறியே..தனியா வந்தா.. எல்லாரும் உன்னை ஏதாவது சொல்லுவாங்க...நீ
கஷ்ட்டப்டுவன்னு சொல்லி..எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு வந்தேன்ல..நீ இதையும் பேசுவ..இன்னமும் பேசுவ..!” என்றான் கோபமாய்.

“அப்படியெல்லாம் இல்லைங்க..!” என்றாள் அழுகும் குரலில்.

“எனக்கு என்ன வேலை வெட்டி இல்லைன்னு நினைச்சியா..?” என்றான் எரிச்சலாய்.

“கொஞ்சம் நிறுத்துறிங்களா..! அதெல்லாம் ஒண்ணுமில்லை..ஆனா நீங்க அவங்ககிட்ட பேசுறது எனக்கு பிடிக்கலை..எல்லாரும் வெறிக்க வெறிக்க பாக்குறாங்க..!” என்றாள் பட்டென்று.

முதலில் புரியாமல் திகைத்தவன்..கொஞ்சம் யோசனைக்கு பிறகு... வாய்விட்டு சிரித்தான்.
கடைசியில் அவளுக்கும் கணவன்ன்ற உரிமை வந்துடுச்சே...அப்பா சாமி...! என்று எண்ணியவன் மீண்டும் சிரிக்க...

“சிரிக்காதிங்க..!” என்றாள்.

“இங்க வா..!” என்றான்.

கொஞ்சம் தயங்கியபடி அவள் வர...”இங்க உட்கார்..!” என்றான்.

அவள் அமரவும்...அவனும் அருகில் அமர்ந்து அவள் கைகளை தனக்குள் இழுத்துக் கொண்டான்.

“இங்க பாரு சக்தி...! உன் மனசுக்குள்ள என்ன ஓடுது...நீ அதையெல்லாம் எப்படி சமாளிக்கிற..இப்படி எல்லாமே எனக்கு தெளிவா புரியுது..!

ஆனா நான் என்ன பண்றது..? என்னோட தொழில் அப்படி..யார்கிட்டயும் முகத்தைக் காட்டவும் முடியாது...உன்னோட எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி இருக்க முடியலைன்னாலும்...என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல புருஷனா இருக்கத்தான் ஆசைப்படுறேன்..

அதுக்கு நீயும் கொஞ்சம் ஒத்துழைக்கனும்..! சின்ன சின்ன விஷயத்துக்கு பொசிசிவ்நெஸ் இருக்க கூடாது.அதுவும் என்னோட பீல்டுல சுத்தமா இருக்க கூடாது..அப்ப தான் வாழ்க்கை அமைதியா போகும்.
நாளைக்கே..எனக்கும் இன்னொரு ஹீரோயினும்க்கும்..தொடர்புன்னு எழுதுவாங்க..நிறைய வதந்திகள் வரும்..நீ நிறைய பேஸ் பண்ண வேண்டியது வரும்..அதனால தான் சொல்றேன்..இப்படி எதுக்கு எடுத்தாலும் சின்ன பிள்ளை மாதிரி நீ பிகேவ் பண்ணா..என்னால சத்தியமா முடியாது..” என்றான்.

“அப்போ நான் எதுவுமே கேட்க கூடாதா..?” என்றாள்.

“தாரளாமாய் கேட்கலாம்...! ஆனா நம்பிக்கையில்லாம கேட்டேன்னா.. அந்த நிமிசம் என் மனசு
செத்துடும்..!” என்றான்...ஆத்மார்த்தமாய்.

“இல்லை..நான் நம்பிக்கை இல்லாம எல்லாம் கேட்கலை..எனக்கு ஒரு மாதிரி இருந்தது அதான்..!” என்றாள்.

“தப்பில்லை...இது இயற்கை..உனக்கு அப்படி தோணலைனா தான் தப்பு..! ஆனா என்னோட பீல்டை நீயும் கொஞ்சம் புருஞ்சுக்கணும்....உன்னோட அழகே உன் தைரியம் தான்..அது ரொம்ப முக்கியம்...சின்ன சின்ன
விஷயத்துக்கு எல்லாம் எமோஷனல் ஆகக் கூடாது..!” என்றான்.

“ம்ம் சரி..!” என்றாள் தெளியாத குரலுடன்.

“இன்னும் தெளியலை போலவே..?” என்றான்.

“உடனே எப்படி முடியும்..கொஞ்ச கொஞ்சமாதான் முடியும்..!” என்றாள்.

“அப்போ முடியும்ன்ற..?” என்றான்.

“ம்ம் அதெல்லாம் முடியும்..!” என்றாள் அவன் உள்குத்து அறியாமல்.

“எனக்கு பொண்டாட்டியா இருக்க முடியும்ன்ற..?” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“ஆமா..அதைத் தான சொல்லிட்டு இருக்...” என்று அவன் முகம் பார்க்க..அவனோ சிரிக்க...

“உங்களை...!” என்று அவள் சராமரியாக அடிக்க...

“ஹேய் விடுடி..வலிக்குது..!” என்றவன்..அப்படியே மல்லாக்க படுத்து..அவளை தன் மேல் சரிக்க..

“என்ன பண்றிங்க..? விடுங்க..!” என்றாள்.

“தி பேமஸ் ஹீரோ அஜய்...வீட்டுக்குள்ள பொண்டாட்டிகிட்ட அடிவாங்கிட்டு இருக்கான்னு சொன்னா வெளிய யாராவது
நம்புவாங்க..?” என்றான்.

“நம்புவாங்க..நம்புவாங்க..! இன்னும் கொஞ்சம் பலமா அடிச்சா நம்புவாங்க..!” என்றாள் மந்தகாசமாய்.

“இன்னும் கொஞ்சம் பலமான்னா...எப்படி..? இப்படியா..?” என்றவன்...

அவள் இதழ்களை சிறை செய்ய..அந்த சிறைக்குள் சந்தோஷமாய் மூழ்கிப் போனாள் சக்தி.

“சக்தி..” என்று மருதாணி அழைக்கும் வரை..அந்த யுத்தம் தொடர...

“விடுங்க..மருதாணி கூப்பிடுறா..?” என்றவள் விலக எத்தனிக்க...

“அடியேய்..என்னைப் பார்த்தா எப்படி இருக்கு..?” என்றான்.

“இப்போதைக்கு நல்லா இல்ல..” என்றபடி அவள் செல்ல...

“எப்படியும் வருவதானே அப்ப இருக்கு உனக்கு..!” என்றான்.

“நான் எங்க இங்க வரப் போறேன்..! நான் வயலுக்கும்..தோப்புக்கும் போகப் போறேன்..!” என்றாள்.

“என்ன சொல்ற...?அப்ப நான் என்ன பண்றது..?” என்றான்.

“நீங்களும் வாங்க..!” என்றாள்.

“என்ன விளையாடுறியா..?” என்றான்.

“ஏன்..?”

“இப்ப வெளிய பார்த்த தானே..! என்னால சுதந்திரமா வெளிய சுத்த முடியாது..பிரைவேசி இருக்காது..” என்றான் எரிச்சலாய்.

“எல்லாரும் உங்களையே பார்ப்பாங்கன்னு நினைச்சா உங்க முட்டாள் தனம்..!” என்றாள்.

“அவளுக்கு பதில் சொன்னால் மீண்டும் ஒரு சண்டை வரும் என்று அவனுக்கு தெளிவாய் தெரிந்தது.இப்போது உள்ள சுமூக நிலையை மாற்ற அவன் விரும்பவில்லை.அதனால் ஜன்னல் அருகில் நின்று வெளியே வேடிக்கை பார்க்க...
சக்தியும் கண்டு கொள்ளாமல் சென்றாள்.ஏனோ அவளின் அந்த செயல் அவனுக்கு வலித்தது.
 
Top