Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது வெள்ளை மழை

புது வெள்ளை மழை 20

அத்தியாயம் – 20 


மாலை ஏழு மணிக்குத்தான் குழலி வீட்டிற்கு வந்தார். நன்றாக அலைந்துதிரிந்து வந்ததில், மிகவும் கலைத்து போய் இருந்தார். அவரே அசந்து போய் இருக்க, அவரைத் தாரணி இன்னும் படுத்தினாள். 


“அம்மா, எனக்குப் பசிக்குது? எதாவது செஞ்சு தாங்க.” 


“மதியம் சமைச்சது எல்லாம் காலியா?” என அவர் பாத்திரத்தை திறந்து பார்க்க… மதியம் வடித்த சாதம் அப்படியே இருக்க.. மீன் குழம்பும் இருந்தது. 



Advertisement


“இதோதான் சாப்பாடு இருக்கே. போட்டு சாப்பிட வேண்டியது தானே.” 


“எனக்கு அது வேண்டாம்.” 


“தோசை ஊத்தி தரவா.” 

Advertisement


“சரி. ஆனா தொட்டுக்க.” 

Advertisement


“மீன் குழம்பு இருக்கே.” 

“எனக்கு அது வேண்டாம் பிடிக்கலை.” 

Advertisement


டேபிளில் உட்கார்ந்து மறுநாளுக்குக் காய் நறுக்கிக் கொண்டிருந்த கயல், “நான் வேணா சட்னி அரைக்கவா.” எனக் கேட்டதும், 


“அம்மா நான் உங்களைத்தான் கேட்டேன். உங்களால பண்ண முடியுமா? முடியாதா?” எனத் தாரணி கோபமாகக் கத்த, வருணுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. 


அதைக் கவனித்த குழலி, அவன் பேசினால் மீண்டும் சண்டை வரும் என்பதை உணர்ந்து, “பண்ணி தொலைக்கிறேன். உனக்கு இன்னைக்கு என்ன ஆச்சு?” என அவர் பதிலுக்குக் கத்தினார். 


“கயல், நீ இனி இவளுக்கு எதுவும் பண்ணாத. அவங்க அம்மாவே பண்ணிக்கட்டும்.” வருண் கயலிடம் சொல்ல… அவள் மெளனமாக இருந்தாள். 


அந்நேரம் நந்தா போன் செய்ய…. வருண் தான் எடுத்தான்.
“என்னடா எப்படிப் போச்சு சண்டே?” 


“நீ வேற வெறுப்பு ஏத்தாதே? நானே நொந்து போய் இருக்கேன்.” 


“ஏன் என்ன ஆச்சு?” 


“உன் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணி இருக்கேனே, அது ஒன்னு போதாதா?” வருண் பேசப்பேச… தாரணியின் முகம் வெளுத்தது. 


“என்ன நடந்தது சொல்லு.” 


“ரொம்பப் பேசுறா டா. நானும் என் குடும்பமும் சாப்பிடுறதுக்காக வாழுறோமாம். அத்தை இப்பத்தான் வீட்டுக்குள்ள வந்தாங்க. அதுக்குள்ள அவங்களை டிபன் செய்யச் சொல்லி உயிரை எடுக்கிறா.” 


“வர வர ரொம்ப அதிகமா போறாடா மச்சான். கயலையும் எடுத்து எரிஞ்சு பேசுறா. சொல்லி வை.”

“அவகிட்ட போன்னை கொடு.” 


“தாரணி, வா உங்க அண்ணன் கூப்பிடுறான்.” 


தாரணி வருணை முறைத்தாள். போன்னை கையால் மூடிய வருண், “நீ என்னைப் பேசினா பரவாயில்லை. கயல்கிட்ட உன் கோபத்தைக் காட்டுற பாரு. அதுக்கு உனக்கு அதிகாரம் இல்லை. அந்தப் பொண்ணு உன் அண்ணன்கிட்ட சொல்லாதுன்னு தைரியம் தானே உனக்கு.” என்றான்.

வருண் பேசிய அனைத்தையும் நந்தா அந்தப் பக்கம் கேட்டு இருந்தான். கயலை நினைத்து அவனுக்கு வருத்தமாகப் போய்விட்டது.
போன்னை வாங்கிய தாரணி, “அண்ணா…” என்றதும், 


“என்ன தாரணி இது? என்னால நிஜமா நம்ப முடியலை. நீ எவ்வளவு காயப்படுத்தி இருந்தா, வருண் என்கிட்டே சொல்வான். உன்னோட தரத்தை நீயே குறைச்சுக்காத.” 


அவ்வளவுதான் நந்தா சொன்னான். அதுவே தரணிக்கு தாங்க முடியவில்லை. 


“சாரி அண்ணா.” 


“நீ ரொம்பப் படிச்ச பொண்ணு. உனக்கு நான் புத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்ன தப்பு பண்றன்னு யோசிச்சு பாரு.” 


“சரி அண்ணா.” 


“போன்னை கயல்கிட்ட கொடு.” 


கயல்விழி நடந்ததை எல்லாம் பார்த்து மிகவும் மிரண்டு போய் இருந்தாள். இந்த வருண் அண்ணா ஏன் தன்னை உள்ளே இழுத்தான்? என அவளுக்கு ஒரே கவலை. 


“நான் கயல் பேசுறேன்.” குரலே கிணற்றுக்குள் இருந்து வருவது போலத்தான் இருந்தது. 

“எப்படி இருக்கக் கயல்?” 


“நல்லா இருக்கேன்.” 


“என்ன பிரச்சனை அங்க?”  


“அத்தையா நல்லா இருக்காங்க. இப்பத்தான் வீட்டுக்கு வந்தாங்க.” 


“நான் என்ன கேட்கிறேன்? நீ என்ன சொல்ற?” 


“சாப்பிடலை… இனிதான் சாப்பிட போறோம்.” 


எல்லோரும் அங்கே இருப்பார்கள். கயல் எப்படிப் பேசுவாள். அதை உணர்ந்தவன், “சரி நாளைக்கு மதியம் பேசுறேன்.” என்றான். 


“சரி வச்சிடுறேன்..” இப்போதுதான் கயல் ஒழுங்காகப் பதில் சொன்னாள். 


“ஒரு நிமிஷம்.” என்றவன், “சாரி கயல். தாரணிக்காக நான் மன்னிப்புக் கேட்டுகிறேன்.” என்றதும், கயல்விழிக்கு மனம் உருகிவிட்டது. 


“ம்ம்… நான் வச்சிடறேன்.” என்றவள் வைத்தே விட்டாள். 


தாரணி அவள் அம்மாவின் அறைக்குள் சென்று அவர் கட்டிலில் படுத்து, ஒரே அழுகை. மகள் அழுததும் குழலிக்கு தாங்க முடியவில்லை. 


அவருக்கு வருண் மீது மிகவும் வருத்தம். எதற்கு இப்போது நந்தாவிடம் சொல்ல வேண்டும். அவரால் அதைத் தன் மாப்பிள்ளையிடம் காட்ட முடியுமா? அதனால் அவரது கோபம் கயலிடம் திரும்பியது. 


எல்லாம் இவள் வந்த பிறகுதான். நான்தான் ஏற்கனவே தாரணியைப் பற்றிச் சொல்லி இருந்தேனே. கொஞ்ச நாள் பொறுத்துப் போனால் என்ன? 

“என்ன பார்த்திட்டே இருக்க? வருணுக்கு சாப்பாடு எடுத்து வை.” என்றார் அதிகாரமாக. வருண் அதைக் கவனித்தே இருந்தான். 


“சரிங்க அத்தை.” என்றவள், வருணிடம் சென்று “அண்ணா தோசை ஊத்தவா?” எனக் கேட்டாள். 


“சாதம் இருந்தா சாதமே சாப்பிடுறேன்.” 


“அஞ்சு நிமிஷம் இருங்க அண்ணா, சாதத்தைச் சூடு பண்ணிட்டு வரேன்.” என்றவள், உணவை சூடு படுத்திக் கொண்டு வந்தாள். 


கயல் வருணுக்கு பரிமாற. “நீயும் உட்கார்ந்து சாப்பிடு.” என்றான். கயல் அவனோடு உட்கார்ந்து சாப்பிட்டாள். 


வருண் சாப்பிட்டு முடித்தும், தாரணி வெளியே வரும் வழியைக் காணோம். பிறகு அவனே அவள் இருந்த அறைக்குள் சென்றான். 


தாரணி கட்டிலில் குப்புற படுத்திருக்க, குழலி அவளின் தலையைக் கோதியபடி இருந்தார். அதைப் பார்த்த வருண், இப்படி இருந்தா விளங்கிடும் என்று நினைத்துக் கொண்டான். 


“தாரணி, கிளம்பு நம்ம வீட்டுக்கு போகலாம்.” 


“நான் வரலை நீங்க போங்க.” 


“இந்தக் கதையே வேண்டாம். நீ இப்ப என்னோட வர.” 


அவனின் கோபத்தை உணர்ந்த குழலி, “தாரணி, அவர் சொல்றதை கேளு.” என்றார். 


தாரணி மெதுவாக எழுந்துகொள்ள… குழலி மகளுக்குத் தோசை ஊற்ற சென்றார். 


தாரணி முகம் கழுவி தலைவாரிக்கொண்டு, வந்தபோது தோசை தயாராக இருந்தது. அவள் சாப்பிட்டதும் இருவரும் கிளம்பினர். 


வாசலில் வைத்து வருண் தாரணியிடம், “இந்த வீட்டு சாவியை எடுத்து உங்க அம்மாகிட்ட கொடு.” என்றான். 

“ஏன்?” 

“இனி நீ ஒரு இடமா இரு போதும். இங்ககேயும் அங்கேயுமா உன்னோட சேர்ந்து என்னால அல்லாட முடியாது. மாசம் ஒரு தடவை நாம இங்க வரலாம்.” 


“ஏன் வருண் இப்ப என்ன ஆச்சு?” 


“எங்க வீட்டோட அவ ஒத்து வாழ வேண்டாமா? இங்கயும் அங்கயுமா இருந்தா அது நடக்காது.” 


“பாருங்க அத்தை, உங்க மருமகள் பொறுப்பா இருக்கிறதுனால, நீங்க அங்க இங்க போறீங்க.அந்த பொறுப்பு உங்க மகளுக்கும் வரணும்.” 


வருண் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. அது புரிந்தாலும், மகளை விட்டுக்கொடுக்கவும் மனம் வரவில்லை. இருபக்கமும் குழலி அல்லாடினார். 


“கவலைப்படதீங்க உங்க பொண்ணுக்கு ஒரு குறையும் இல்லாம நான் பார்த்துகிறேன்.” 


தாரணி சாவியைக் கொடுத்ததும், இருவரும் கிளம்பி விட்டனர். கயல்விழிக்கு இதெல்லாம் தெரியாது. அவள் உள்ளே இருந்தாள். 


குழலி முகமே சரி இல்லை என்பதால்… கயல் அவள் வேலையை முடித்தும், அவரைத் தொந்தரவு செய்யாமல், மாடிக்கு சென்றுவிட்டாள். 


பரணி அப்போதுதான் வீட்டிற்கு வந்தான். “சாப்பிடுறியா பரணி?” 


“இல்லைமா வேண்டாம். சாயங்காலம் ஸ்நாக்ஸ் சாப்பிட்டதே வயிறு நிறைய இருக்கு.” என்றவன், டீவியைப் போட்டுக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தான். 


குழலி நந்தாவின் வீட்டு எண்ணுக்கு அழைத்தார். அப்போது அவன் வீட்டில் இருந்ததால் எடுத்துப் பேசினான். அவனிடம் குழலி எல்லாவற்றையும் கொட்டி தீர்த்து விட்டார். 

“மாறுன்னா? அவ ஒரே நாள்ல மாறிடுவாளா? மெதுவா சொல்ல வேண்டியது தான. இங்க வரக் கூடாதுன்னு சொன்னா எப்படி?” 


“தாரணி இங்க வந்தா கயலுக்குப் பிரச்சனை ஆகுதுன்னு நினைக்கிறாரோ என்னவோ?” 


“அவர் சொன்னாருன்னு நீயும் தாரணிகிட்ட அப்படிப் பேசி இருக்க வேண்டாம். அழுதிட்டே போறா பார்க்கவே பாவாமா இருக்கு.” 


“அம்மா, நான் அவளை எதுவும் திட்டலை. நான் வருண்கிட்ட பேசுறேன். அவ முன்ன மாதிரி வந்து போய் இருப்பா. நான் இப்பவே பேசுறேன்.” என்றான். 


பரணி குழலி பேசியதை கேட்டுக் கொண்டே இருந்தான். “என்ன ஆச்சு? என அவன் கேட்டதும், குழலி எல்லாவற்றையும் அவனிடமும் சொன்னார். 


அவனாவது தாரணிக்கு பரிந்து பேசுவான் என்று பார்த்தால், “ஆமாம் அவ அண்ணியை மதிக்கிறதே இல்லை. நானும் பார்த்தேன்.” என்றான். 


இவன்கிட்ட போய்ச் சொன்னோமே எனக் குழலி நொந்துகொண்டார். 


நந்தா சொன்னது போல் வருண் வீட்டிற்கு அழைத்தான். அவன் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்து இருந்தான். 


“சொல்லுடா மச்சான்.” 


“என்ன டா எதுக்கு இவ்வளவு கோபம்? அவ எங்க வீட்டுக்கு வந்து போறதுல உனக்கு என்ன பிரச்சனை? அம்மா ரொம்பப் பீல் பண்றாங்க?” 


“நந்தா ப்ளீஸ், நீ இதுல வராத. தப்பு என் மேலதான். நான் முன்னாடியே ஒரு அளவோட நிறுத்தி இருக்கணும்.” 

“இதே உங்க வீடு பக்கத்தில இருக்கு. அதனால அடிக்கடி வந்து போறா. இதே தூரமா இருந்திருந்தா? அப்படி நினைச்சிக்கோங்க.” 


நந்தாவுக்கு அதிகபடியாக அவர்கள் வீட்டு விஷயத்தில் தலையிடுவதிலும் விருப்பம் இல்லை. 


“சரிடா பார்த்துக்கோ.” 


“என்னை நம்புறல…” 


“உன்னை நம்பினதுனாலதான் என் தங்கச்சியை உனக்குக் கொடுத்திருக்கேன்.” 


“அப்ப கொஞ்ச நாள் என்னோட விருப்பத்துக்கே விட்டுடு.” 


“சரி, நான் வச்சிடுறேன்.” 


தாரணியும் அந்த அறையில்தான் இருந்தாள். அதனால் என்ன பேசினார்கள் என்று தெரியும்.

அவள் பக்கம் திரும்பிய வருண் “நீ இங்க ஒரு வேலையும் செய்ய வேண்டாம். உன் வேலையைப் பார்த்திட்டு சந்தோஷமா இரு போதும்.” என்றான். 


தாரணி அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் அருகில் கட்டிலில் உட்கார்ந்தவன், “அம்மா உன்னை ஒரு குறையும் சொல்லாம நான் பார்த்துகிறேன். இங்க உனக்கு எதாவது பிடிக்கலைனா என்கிட்டே சொல்லு. நான் கண்டிப்பா மாத்திக்கிறேன்.” என்றான். 


சண்டை போட்டால் திரும்பச் சண்டை போடலாம். இப்படிப் பேசினால் என்ன செய்வது, அதுவும் நந்தா காது வரை விஷயம் போனதில்,  தாரணி கொஞ்சம் மிரண்டு போய்தான் இருந்தாள். அதனால் அமைதியாக இருந்தாள். 


மறுநாள் தாரணி கல்லூரிக்கு கிளம்பிய பிறகு, வருண் தன் அம்மாவிடமும் சொல்லிவிட்டான். 

“அம்மா அவளை எந்தக் குறையும் சொல்லாதீங்க. அவளை நான் அவ அம்மா வீட்டுக்கு அடிக்கடி போகக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன். நம்ம வீட்டோட அவ கொஞ்சம் ஒட்டி வரட்டும்.” 


“ஏன் டா அப்படிச் சொன்ன? ஆனா நீ சொல்றதும் சரிதான். நான் அவளை எதுவும் சொல்ல மாட்டேன்.” 


“வேலைக்கு வேணும்ன்னா இன்னொரு ஆள் கூடப் போட்டுக்கோங்க.” 


“போதும். ஏற்கனவே ரெண்டு பேர் இருக்காங்க. வீட்டு வேலை பார்க்க ஒரு பொண்ணு, காய் நறுக்கி , சப்பாத்தி போட ஒரு பொண்ணு. அதனால எனக்கு ஒன்னும் பெரிசா வேலை இல்லை.” 


அங்கே குழலியோ முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டே இருந்தார். கயல்விழியை எந்த வேலையும் செய்ய விடவில்லை. இதெல்லாம் பரணி கவனித்துக் கொண்டே இருந்தான். 


மதியம் கல்லூரியில் இருந்து கயல் வந்ததும், நந்தா அவளை அழைத்து விட்டான். 


“என்ன பிரச்சனை கயல்?” 


“ஒன்னும் இல்லையே.” 


“அப்ப தாரணி ஒண்ணுமே பண்ணலைன்னு சொல்றியா? வருண் பொய் சொல்றானா?” 


“நான் அப்படிச் சொல்லலை. தாரணி அண்ணி சில நேரம் அப்படித்தான் இருப்பாங்க. அப்புறம் சரி ஆகிடுவாங்க. அதை ஏன் பெரிசு பண்றீங்க?” 


“எடுத்து எரிஞ்சு பேசுறது சாதாரண விஷயமா? நீ ஏன் இதை என்கிட்டே சொல்லலை?” 


“இதையெல்லாமா போய்ச் சொல்வாங்க.” 


“நீ என்னோட மனைவி. அந்த உரிமையில தான் அந்த வீட்ல 

இருக்க. உனக்குத் தர வேண்டிய மரியாதையைத் தரனும். நீ யாருக்கும் இறங்கி போக வேண்டிய அவசியம் இல்லை.” 


“அவங்க என்னோட பெரியவங்க. அதனால நான் சின்னப் பொண்ணுன்னு நினைச்சு இருக்கலாம்.” 


“சின்னப் பொண்ணோ பெரிய பொண்ணோ. நீ இப்ப அவளோட அண்ணி. அந்த மரியாதையை அவ உனக்குத் தரனும். நான் அம்மாகிட்டயும் தாரணிகிட்டயும் பேச போறேன்.” 


“ப்ளீஸ், ப்ளீஸ் அப்படி மட்டும் எதுவும் பண்ணிடாதீங்க. ஏற்கனவே வருண் அண்ணா கோபமா பேசிட்டாங்க.” 


“என்னை என்னத்தான் பண்ண சொல்ற?” 


“ஒண்ணுமே பண்ணாதீங்க அப்படியே விட்டுடுங்க. தானா சரி ஆகிடும்.” 


நந்தாவுக்கும் புரிந்தது. அவன் எதாவது அவளுக்குப் பரிந்து பேசினால், அந்தக் கோபம் அவள் பக்கம்தான் திரும்பும். தான் அவள் அருகில் இருந்தாலாவது பரவாயில்லை. 


“சரி நான் எதுவும் கேட்கலை. ஆனா உனக்கு எதாவது கஷ்ட்டமா இருந்தா? நீயாவே என்கிட்டே சொல்லிடனும். இப்ப மாதிரி அமைதியா இருக்கக் கூடாது.” 


“சரி சொல்றேன்.” 


“ப்ராமிஸ்.” 


“ம்ம்…” 


நந்தவுக்காகக் கயல்விழி ஒத்துக்கொண்டாளே தவிர, அவளுக்கு யாரையும் குறை சொல்லும் எண்ணம் எல்லாம் இல்லை. 


இரண்டு நாட்களுக்கு மேல் குழலியாலும் தன் கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியவில்லை. வீட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!