Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 12

 

                                                                  

                              12

     “மாப்ளை தாலியை எடுத்துப் பொண்ணு கழுத்தில கட்டுங்கோ..” என்று அய்யர் மறுபடியும் கூற,



Advertisement

     ரஞ்சன் கைகள் நடுங்க தாலியைக் கையிலெடுத்தான்.

     அய்யர் மந்திரம் முழங்க, அனைத்து உறவுகளும் அட்சதை தூவி தங்கள் ஆசிகளை வழங்க, பொன்னிலவு மேனியாள் பொன்மஞ்சள் தாலியை ஏற்கத் தலைகுனிய, அழகின் நாயகன் மூன்று முடிச்சிட்டு அவளுக்கு மனையாள் எனும் ஸ்தானத்தை வழங்கினான்.

     தன் நெஞ்சை உரசிக் கொண்டு ஆடிய மாங்கல்யத்தை தன் கண்ணுக்குள் நிறைத்துக் கொண்ட நிலவானவள், லேசாக தன் விழிகளைத் திருப்பி அதைச் சூட்டியவனின் முகம் பார்க்க, அவன் எவ்வித உணர்ச்சிகளும் முகத்தில் பிரதிபலிக்கா வண்ணம் அமர்ந்திருந்தான். 

Advertisement

     நிலாவிற்கு உள்ளூர நெஞ்சில் பயம் பரவியது. இருந்தாலும், ‘இது தான் சம்மதித்து ஏற்ற வாழ்க்கை! என்ன நடந்தாலும் நான்தான் பொறுத்துக் கொள்ள வேண்டும். அவனுக்கும் மனமாற்றம் ஏற்பட நாள் பிடிக்கும் அல்லவா?!’ என்று நினைத்துக் கொண்டாள்.

Advertisement

     செல்லச் சீண்டல்கள் இல்லாமல், வெட்கச் சிரிப்புகள் இல்லாமல், இனிய பார்வைப் பரிமாற்றங்கள் இல்லாமல் இரு இளநெஞ்சங்களும் திருமண பந்தத்திற்குள் இணையாமல் இணைந்தன.

     நிலா மற்றும் நிரு குடும்பத்தினரின் அழைப்பை ஏற்று யாஷினியும் திருமணத்திற்கு வந்திருந்தாள். அவ்வப்போது அவள் நிருவை சீண்டிக் கொண்டே இருக்க, நிரு அவளைச் சற்றும் கண்டு கொள்ளாமல் இருந்தான்.

     ரஞ்சன், நிலாவின் கழுத்தில் தாலி கட்டும் நேரம், யாஷினி மெல்ல நிருவின் அருகே வந்து நின்று, “நம்ம கல்யாணத்தையும் இப்பவே முடிச்சிடலாமா?!” என்று கண்ணடித்தாள்.

Advertisement

     “உன்னை…!” என்று வெளியே அவன் கோபப் பார்வைக் வீசினாலும், இப்போதெல்லாம் நிருவும் அவளை ரசிக்கத் துவங்கியிருந்தான்.

     திருமணம் முடிந்து அனைவரிடமும் ஆசீர்வாதம் பெற்ற தம்பதியினரை, நல்ல நேரம் முடிவதற்குள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் சொல்ல, நிலா தன் தாய் வீட்டினரிடம் சென்று விடை பெற்றாள்.

     “அப்பா… நான் போயிட்டு வரேன்…!” என்றவளுக்குத் தொண்டை கமறியது.

     “என்னம்மா இது…? நாலு அடி எடுத்து வைச்ச நம்ம வீடு. நினைச்சதும் ஓடி வந்து அப்பாவைப் பார்த்துக்கப் போற? இதுக்குப் போய் கண்கலங்கிக் கிட்டு?!” என்று மகளின் கண்களைத் துடைத்து விட்ட வெங்கடேசன், மகளின் கைகளைப் பற்றி, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,

     “அம்மாடி.. மாப்பிள்ளை ஏதேனும் கோபமா நடந்தாலும் நீ விட்டுக் கொடுத்துப் போம்மா… போகப் போக உன்னோட அன்பைப் புரிஞ்சிகிட்டு.. அவரே தன் குணத்தை மாத்திக்குவாரு! நீங்க ரெண்டு பெரும் சந்தோஷமா வாழுறதுலதான் என் சந்தோஷமே அடங்கியிருக்கு!” என்றார்.

     “ம் சரிங்க ப்பா…!” என்றவள், தன் தாயிடமும், அக்கா, மாமாவிடமும், அவர்கள் உறவினர்களிடமும் விடைபெற்று, மண்டபத்திலிருந்து தன் புகுந்த வீட்டிற்குக் கிளம்பினாள்.

     அனைவரும் மண்டபத்திலிருந்து வீட்டிற்கு வர, காமாட்சி பாட்டி  தம்பதியினரை ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

     பின் நிலாவை அவர்கள் வீட்டுப் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொன்னார்கள்.

   அனைத்து சம்பிரதாயங்களும் முடிவடைந்த பின்,  ரஞ்சன் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு யாரிடமோ பேசச் சென்று விட, நிவி, நிலாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

     ஆனால் அவள் மனமோ எதிலும் லயிக்கவில்லை. நிலாவிற்கு இது பழகிய வீடுதான் என்றாலும், இன்று ஏனோ புதிதாய்த் தோன்றியது!

     “நிவி… அவளே ரொம்ப களைப்பா தெரியுறா.. சும்மா தொண தொணன்னு பேசி அவளை தொல்லை பண்ணாம ரஞ்சன் ரூம்ல கொண்டு போய் அவளை விட்டுட்டு வா.. கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடுக்கட்டும்…!” என்று ராதா சொல்ல,

     “ம் சரிம்மா…!” என்றவள், நிலாவின் காதருகினில் சென்று,

     “இப்பவே நல்லா தூங்கிக்கோங்க மேடம்…!” என்று விஷமத்துடன் கண்ணடிக்க, நிலாவின் வயற்றில் பயப் பந்து உருண்டது.

     நிவி அவளை ரஞ்சனின் அறைக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டு வர, நிலா முதன் முதலாக அவன் அறையைப் பார்த்தாள். இந்த வீட்டில் அவள் சென்றிறாத ஒரே அறை அவனுடையதுதான். ஆனால் அதுவே இன்று அவளுக்கும் உரியதாகிப் போனது.

     “ஹப்பா எவ்ளோ அழகாயிருக்கு..?! என்னதான் சிடு மூஞ்சியா இருந்தாலும், ரூமை எவ்ளோ அழகா, நீட்டா வைச்சிருக்கான்!?” என்று வியந்தாள்.

     அறையில் இருந்த ஒவ்வொரு பொருளையும் தன்னை மறந்து ரசித்தபடியே சென்றவள், அவ்வறைக் கண்ணாடியின் வழியே வீட்டுப் பின்புறத்திலிருந்த தோட்டம் தெரிய, அதில் தன் மனதை தொலைத்தாள்.

     தன் நண்பனிடம் பேசி முடித்துவிட்டு தன் அறைக்குத் திரும்பிய ரஞ்சன், நிலா, தன் அறையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு,

     “ஏய்… நீ.. நீ இங்க என்ன பண்ற?!” என்றான் எரிச்சலுடன்.

     அவன் குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பியவள், “அ அது வ வந்து ஆன்ட்டி, நிவி..!” என்று ஏதோ சொல்ல வந்தவளுக்குப் பேச்சே எழவில்லை!

     “என்ன லூசு மாதிரி உளர்ற?!” என்று அவன் வினவ,

     தன் சகஜ நிலைக்குத் திரும்பியவள், “என்ன என்ன நான் லூசா?! ஆன்ட்டிதான் என்னை இங்க இருக்கச் சொன்னாங்க! இருக்கக் கூடாதுன்னு ஆன்ட்டிகிட்ட போய் சொல்லு!” என்றாள் சிடுசிடுப்பாக.

     “அய்யோ!? இனி உன் மூஞ்சியிலதான் முழிக்கனுமா?!” என்று அவன் தலையில் அடித்துக் கொள்ள,

     “ம் வேணும்னா பக்கத்துல ஒரு கண்ணாடியை வைச்சிகிட்டு அதைப் பார்த்துக்கிட்டே எழுந்திரு…! கொரங்கு மூஞ்சியில் முழிச்ச மாதிரி இருக்கும்!” என்று அவள் நையாண்டி செய்ய,

     “ஏய் யாரு? யாரு குரங்கு?!” என்று அவன் எகிற,

     “சந்தேகமிருந்தா… நீயே பாரு…!” என்றாள் டிரஸ்ஸிங் டேபிளின் மேல் இருந்த கைக் கண்ணாடியை எடுத்து அவன் முகமெதிரே காட்டி.

     “திமிரு.. திமிரு..!” என்று அவன் கர்ஜிக்க,

     “உன்னைவிட கம்மிதான்..!” என்றாள் சரிக்குச் சரியாய் நின்று.

     அவர்களின் அறைக்கு வெளியே சென்று கொண்டிருந்த நிரஞ்சனின் காதில் இவர்கள் போட்ட சத்தம் விழ, ‘அடங்க மாட்டேங்க றாங்களே?!’ என்று நினைத்தபடி அவர்கள் அறைக்குக்குள் சென்று,

     “ஏய் ஏய் என்ன நடக்குது இங்க?! இப்பவும் உங்க சண்டை முடியலையா?!” என்றான்.    

     “அவன்தான் முதல்ல ஆரம்பிச்சான்!” என்று அவள் சொல்ல,

     “அவதான் ஏட்டிக்கு போட்டியா பேசிக்கிட்டு இருக்கா!” என்றான் ரஞ்சனும்.

     “அய்யோ போச்சுடா…!” என்று நிரஞ்சன் தலையில் கைவைத்துக் கொண்டு அருகே இருந்த சோபாவில் அமர,

     “என்ன நிரு…!?” என்றாள் நிலா பாவமாக அவனருகே வந்து.

     “ம் நோன்ன நிரு!” என்று அவளை முறைத்தவன்,

     “இன்னொரு முறை ரெண்டு பெரும் இப்படி சண்டை போட்டீங்கன்னா… வீட்ல இருக்க எல்லோரையும் கூட்டிப் பஞ்சாயத்து வைச்சிடுவேன் பார்த்துக்கோங்க!” என்று நிரு ஒற்றை விரல் நீட்டி மிரட்ட, இருவரும் கப்சிப் பென்று வாயை மூடிக் கொண்டனர்.

     “ம் இப்படித்தான் எப்பவும் இருக்கணும்!” என்று மிரட்டிவிட்டு அவன் செல்ல, அவள் ஒருபுறம் சென்று சோபாவிலும், அவன் ஒருபுறம் சென்று கட்டிலிலும் அமர்ந்து கொண்டான்.

      வெகு நேரம் அவன் போனில் எதையோ நோண்டிக் கொண்டிருக்க, அவளும் அறையையே சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

     “எப்படி சுத்தி சுத்தி பார்க்கிறா பாரு?! இந்த சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுதானே எங்க வீட்ல இருக்க எல்லோரையும் உன்பக்கம் இழுத்து என் வாழ்க்கை யிலையும் நுழைஞ்சிட்ட?!

     நீ ஆசைப் பட்ட சொகுசான வாழ்க்கை வேணா உனக்குக் கிடைச்சிருக்கும்டி! ஆனா ஒரு பொண்ணுக்கு தன் புருஷன்கிட்டே இருந்து கிடைக்க வேண்டிய எந்த சந்தோஷமும் உனக்குக் கிடைக்காது!” என்று மனதுள் பொருமினான் ரஞ்சன்.

      சிறிது நேரம் கழித்து, இருவருக்குமே களைப்பு மிகுதியால் கண்கள் செருகியது.

     அவன் கட்டிலில் வசதியாகப் படுத்து உறங்கிவிட, அவளும் மெல்ல சோபாவில் சாய்ந்து உறக்கத்தைத் தழுவினாள். 

     “அண்ணா…. எழுந்திரு அண்ணா…! அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க!” என்று அவனைத் தட்டி எழுப்பினாள் நிவி.

     அவன் எழுந்ததும், நிவி, நிலாவின் அருகே சென்று, “நிலா… நிலா…” என்று குரல் கொடுக்க அவளும் எழுந்து கொண்டாள்.

     “என்னடி இதெல்லாம்?! நீ இங்க, அண்ணா அங்க?!” என்று நிவி கேட்க,

     “ம்ம்ம்” என்று நிலா அவளை முறைக்க,

     “சரி சரி வா.. அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க!” என்று அவளை அழைத்துச் சென்றாள்.

     அனைவரும் சாப்பிட்டு முடித்தபின், ராதா, “நிலா…  ரஞ்சன்.. நீங்க இரண்டு பேரும் நிவியோட ரூம்ல  தங்கிகோங்க!” என்றார்.

     “ஏன் அவ ரூம்ல தங்கணும்?!” என்று ரஞ்சன் கேள்வி கேட்க,

     “ம்ம்ம்…! சொன்னா கேட்டுக்கணும்! சும்மா எதிர் கேள்வி கேட்கக் கூடாது!” என்று அவர் செல்லமாகக் கண்டிக்க,

     “ம் என்று மண்டையை ஆட்டினான் ரஞ்சன்.

     ‘இப்போதெல்லாம் என் பிள்ளை ரொம்ப நல்ல பிள்ளையா மாறிட்டான்!’ என்று ராதா மனதுள் தன் மகனை மெச்சிக் கொண்டார்.

     மாலை நிலாவின் பெற்றோரும், அவள் அக்காவும் வந்து அவளை பார்த்துவிட்டுச் செல்ல, அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

     ஆனால் சிறிது நேரத்திற்குப் பின் ரஞ்சன் வீட்டு வேலையாட்கள், பலவிதமான பூக்கூடைகளை ரஞ்சனின் அறைக்குள் எடுத்துச் செல்ல, அதைப் பார்த்தவளின் தைரியம் முற்றிலும் தொலைந்து போனது.

     அங்கு யாஷினி தன் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தாள். “அவர தண்டிக்கிறேன் ங்கிற பேர்ல நீ எங்களையும் சேர்த்து தண்டிக்கிற யாஷு….!” என்றான் சந்தோஷ் வருத்தத்துடன்.

     அதற்கு அவள் பதிலேதும் உறைக்காமல் மெளனமாக இருக்க,

     “இந்தப் பிடிவாதம் தான் உன்கிட்ட எனக்குப் பிடிக்காதது!” என்று அவன் கோபித்துக் கொண்டான்.

     “அண்ணா… ப்ளீஸ் இந்த டாபிக்கை விடேன்!” என்ற யாஷினி,

     “விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே!” என்று வாழ்த்தி தன் அண்ணனுக்கு ஒரு அழகான வாட்ச்சை பரிசளித்தாள்.

     “ம்ஹும் இந்த மாதிரி வேண்டாம்! என்னோட அடுத்த பிறந்தநாளை என் யாஷு குட்டி, அவளோட கணவன், அப்புறம் நம்ம அப்பா எல்லாருமா ஒண்ணா சேர்ந்து கொண்டாடனும்” என்று சந்தோஷ்  கூற,

     “ததாஸ்து…! கணவனே…!” என்று ஆசி வழங்கினாள் அவனின் அன்பு மனைவி.

     அவளது ஆசி அவர்களை முகம் மலரச் செய்ய, “வாட்ச் நல்லாயிருக்கா அண்ணா… முதன் முதலா என்னோட சொந்த சம்பாத்தியத்துல உனக்காக வாங்கினது! ரொம்ப காஸ்ட்லி எல்லாம் இல்லை.. நீ போட்டுக்குவதானே…?!” என்றாள் தங்கை.

     “ஏய் என்ன யாஷு நீ!? நீ கொடுக்கற கிஃப்ட்தான் எனக்கு உலகத்துலயே மிகச் சிறந்தது!” என்று  சந்தோஷ் சொல்ல,

     “அடப்பாவி புருஷா காலையில என்கிட்டயும், இதே டயலாக் தானே சொன்ன?!” என்று முறைத்தாள் காவ்யா.

     சந்தோஷ், “ஞே!” என்று முழிக்க, அதை பார்த்த யாஷினியும், தர்ஷினியும் வாய்விட்டுச் சிரித்தனர்.

     ‘ரொம்ப நாள் ஆச்சு என் தங்கச்சி இப்படி சிரிக்கறதை பார்த்து…!’ என்று நினைத்த சந்தோஷ்,

     “நிரஞ்சனோட அண்ணன் கல்யாணம் நல்லபடியா முடிந்ததா?” என்றான்.

     “ம் சுப்பரா நடந்தது அண்ணா…!” என்று  யாஷினி சொல்ல, 

     “சரி சரி படம் ஆரம்பிச்சிடப் போகுது… கிளம்பலாம?!” என்று அப்பேச்சிற்கு தடை போட்டாள் காவ்யா.

     “எப்பவும் நான்தானே சினிமான்னா அவசரப் படுவேன்?! இப்போ உனக்கென்ன அவசரம்?!” என்றான் சந்தோஷ்.

     அவள் எண்ணம் புரிந்த யாஷினி, “அது ஒண்ணுமில்லை அண்ணா… மாமனாருக்கு ஏற்ற மருமகளா இப்போவெல்லாம் காவி மாறிகிட்டு வர்றா!” என்றாள் யாஷினி.

     “யாஷு…!” என்று காவ்யா தயக்கத்துடன் அழைக்க,

     “என்ன?!” என்பது போல் பார்த்தாள் யாஷினி.

     “மாமா சொல்றதுல என்ன தப்பிருக்கு?! அது மட்டும் இல்ல அந்த நிரஞ்சனே உன்னை வேண்டாம்னு தானே தவிர்க்கிறார்?!” என்று காவ்யா கேட்க,

     “ஆமாம் வேண்டாம்னுதான் தவிர்க்கிறார். காரணம்… அவரும் உன்னை மாதிரிதான், எனக்கு எந்தக் குறையும் இல்லாத ஒருத்தர் மாப்பிளையா அமையணும்னு ஆசைப் படறாரு! ஆனா எப்போ அவர் மட்டும்தான் என்னோட சந்தோஷம்கிறதை புரிஞ்சிக்கறாரோ, அந்த நிமிஷமே அவர் என்னை நிச்சயமா ஏத்துக்குவார்” என்றாள் நம்பிக்கையோடு.

     “போதும் வா அத்தை… பேசிக்கிட்டே இருந்தா… அப்பா எப்படி ஐஸ்கிரீம் வாங்கித் தருவார்?!” என்று அவள் கைப்பிடித்து எழுப்பினாள் தர்ஷினி.

     தர்ஷினியின் தொல்லை தாங்க முடியாமல் அனைவரும் தத்தம் கவலைகளை தற்காலிகமாக மறந்து சினிமாவிற்குக் கிளம்பிச் சென்றனர்.

     இரவு நெருங்க நெருங்க நிலாவின் இதயம் ஓடும் ரயிலாய் தடதடத்தது.

     அவள் கைகால்கள் சில்லிட்டு போயின. இரவு விருந்தை ஒரு வாய் கூட உண்ண முடியாமல் தவித்துப் போனாள்.

     “நிலா… ஏன் ஒரு மாதிரி இருக்க?! உடம்புக்கு ஏதும் முடியலையா?!” என்று நிரு கரிசனமாகக் கேட்க,

     “ஹான்?! ஒ ஒண்ணுமில்லை!” என்றாள் நிலா தடுமாற்றத்துடன்.

     “களைப்பா இருக்கும் நிரு…! தூங்கி எழுந்தா சரியா போயிடும்!” என்றார் காமாட்சி பாட்டி.

     மாலை தன் மடிக்கணியை எடுத்துக் கொண்டு வேளையில் மூழ்கிய ரஞ்சன், இரவு அவர்கள் சாப்பிட அழைத்தபோதுதான் நிவியின் அறையிலிருந்து வெளியே வந்தான்.

    இரவு உணவை முடித்துக் கொண்டதும், “இப்பவாவது என் ரூமுக்குப் போகலாமா?!” என்றான் ராதாவிடம்.

     ‘ம் போகலாம்!” என்று அவர் சொல்ல, நேரே தன் அறைக்குச் சென்றவன், அங்கு பூக்களால் அலங்கரிப்பட்டிருந்த தன் அறையையும் மெத்தையைக் கண்டு கடும் எரிச்சலுற்றான்.

     “சே இது ஒண்ணுதான் குறைச்சல்!” என்று அவன் கட்டிலை எட்டி உதைத்த நேரம் பார்த்து, நிலா பால் செம்பை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைய, அவனின் எரிச்சல் மேலும் அதிகமானது.

     அவள் மெல்ல மெல்ல பயத்துடன் பால் செம்பை அவனிடம் நீட்ட,

     “ஏய்.. இதப் பாரு..! என் தாத்தாவுக்காகத்தான் நான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்! பொண்டாட்டிங்கிற உரிமையை வைச்சு எதையும் என்கிட்டே இருந்து எதிர் பார்க்காத!” என்று விரல் நீட்டி எச்சரித்தான் கணவன்.

     “ஹப்பா இப்பதான் நிம்மதியா இருக்கு!” என்று சொல்லி பால் செம்பை படாரென்று டேபிளில் வைத்துவிட்டு அருகே இருந்த சோபாவில் சென்று படுத்துக் கொண்டு நிம்மதியாகக் கண்மூடித் தூக்கத்தைத் தழுவினாள் மனைவி.

     அவள் கோபப் படுவாள், கவலைப் படுவாள் என்றெல்லாம் அவன் எண்ணியிருக்க, அவளின் செய்கை அவனுக்கு வியப்பை கொடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!