அவள் சொன்னதைக் கேட்டு, அவன் பிடி முற்றிலும் தளர்ந்து, முகம் இறுகியது. இருவருக்குள்ளுமே அன்றைய நினைவுகள் முட்டி மோதின.
ஆனால் சில நொடிகளில் தன்னைச் சமாளித்துக் கொண்ட நிலா, நிலைமையை சகஜமாக்க முயன்று, “நீ கிளம்பு ரஞ்சு.. நேரமாச்சு!” என்றாள்.
ஆனால் அவனோ அவளின் கைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். அவன் மனம் அவளுக்கு செய்த தீங்குகளைப் பட்டியலிட்டு அவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது!
உண்மைத் தெரியாமலேயே அவளுக்குத் திருடி பட்டம் கட்டியது, உண்மைத் தெரிந்த பின்னும் அவளிடம் மன்னிப்புக் கேட்க மறுத்தது, அவள் பாட்டி கொடுத்த தண்டனைக்கும் சேர்த்து அவளையே குற்றவாளியாக்கியது, அதன் பின் எப்போது அவளைக் கண்டாலும் வெறுப்பை உமிழ்வது, இதையும் தாண்டி, அன்று நிவியின் நிச்சயத்தில், அவள் கையில் கொதிக்கும் சூப்பைக் கொட்டி அவளைத் துன்பப்படுத்தியது என்று அவன் செய்த ஒவ்வொரு செயலும் நெஞ்சில் நிழலாட, ‘சே தான் எத்தனை இழிவாக நடந்திருக்கிறோம்?!’ என்று முதன்முதலாக அவமானத்தில் குறுகினான்.
சிவந்திருந்த அவன் முகத்தைக் கண்டவள், “ரஞ்சு… இங்க பாரு.. அதெல்லாம் முடிந்து போன விஷயம்! இப்பதான் எல்லாம் மாறிடுச்சே! திரும்ப திரும்ப அதை நினைக்கறதுனால வருத்தம்தான் மிஞ்சும்..! பாட்டி காத்திக்கிட்டு இருப்பாங்க.. சீக்கிரம் கிளம்பு.. சாப்பிடப் போகாலாம்!” என்றாள்.
அவள் சொன்ன எதுவுமே அவன் மனதில் பதியவில்லை. “ஸாரி நிலா…!” என்றான் குற்ற உணர்ச்சியுடன் அவள் கைத்தழும்பை வருடி.
அவளுக்கும் உள்ளுர அவனின் சில செயல்களை நினைத்துக் கோபம் இருந்ததுதான். ஆனால் அவன் மேல் காதல் கொண்ட கணம் முதல் அக்கோபமெல்லாம் எங்கோ மூளையில் போய் ஒளிந்து கொண்டுவிட்டது.
‘எத்தனை நாட்கள் மனதுள் அவனைத் திட்டித் தீர்த்திருப்பேன், அவன் செய்த செயலுக்காக! இன்று அது மறந்தே போய் விட்டதே!? அப்படி என்னதான் லவ்வோ?!’ என்ற எண்ணம் தோன்ற அவளுக்கு சிரிப்பு எட்டிப் பார்த்தது.
அவள் செய்கையைக் கண்டு, “செய்யிறதை எல்லாம் செய்துட்டு ஸாரி கேட்டா எல்லாம் சரியாப் போயிடுமான்னு நினைக்கிறயா?!” என்றவன் மேலும் தொடர்ந்து,
“எனக்குத் தெரியும் நிலா… உன்னால என்னை அவ்ளோ சீக்கிரம் மன்னிக்க முடியாதுன்னு!” என்று தலை குனிய,
“அச்சோ ரஞ்சு.. நீ இவ்ளோ ஃபில் பண்ண வேண்டிய அவசியமே இல்லை! அதெல்லாம் நான் எப்பவோ மறந்துட்டேன்!” என்றாள் அழகாய்ச் சிரித்து.
அவன் ஆச்சர்யத்துடன் அவள் முகம் பார்த்து, “நிஜமா!” என்றான்.
“அடி! மறுபடியும் GEM மா..!” என்றான் அவளைச் செல்லமாக அடிப்பது போல் கை ஓங்கி.
அவள் அவன் கைகளுக்கு அகப்படாமல், விலகி ஓடி, “சீக்கிரம் கிளம்பி வாங்க MR.GEM! நான் இங்க இருந்தா நீங்க சீக்கிரம் கிளம்ப மாட்டீங்க போலிருக்கு!” என்று கதவைத் திறந்து கொண்டு ஓடியே விட்டாள்.
வேகமாக வெளியே வந்தவள், தன்னைச் சுதாரித்துக் கொண்டு, ‘யாரேனும் பார்க்கிறார்களா?’ என்று சுற்றும் முற்றும் பார்க்க, நல்லவேளையாக அங்கு யாரும் இல்லை.
அவள் டைனிங் ஹாலிற்குச் சென்றதும், “வாம்மா… ரஞ்சு… வரலியா..?!” என்றார் காமாட்சி.
“அவர் ரெடி ஆகிட்டு இருக்கார் பாட்டி…! இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்திடுவாரு!” என்ற நிலாவின் முகத்தில் புதுப் பொலிவு மலர்வதைக் கண்டவர், மனதுள் சிரித்துக் கொண்டார்.
சில நொடிகளில் நிருவும் அங்கு வர, அவனைப் பார்த்ததும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் நிலா.
“நிரு… நேத்து ராத்திரியே உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்!” என்று காமாட்சி பாட்டி துவங்க,
“ப்ளீஸ் பாட்டி… யாஷினியப் பத்தின விஷயமா இருந்த எதுவும் பேச வேண்டாம்!” என்றான் கடினமாக.
நிரு இதுவரை எந்த விஷயத்திலும் இதுபோல் முகத்தில் அறைந்தார் போல் யாரிடமும் பேசியதில்லை! அதுவும் அவன் பாட்டியிடம் இப்படிப் பேசியது அனைவருக்குமே மிகுந்த மனவருத்தத்தைக் கொடுத்தது.
“நிரு…?!” என்று அவர் வருத்தமும், அதிர்ச்சியும் கலந்து அவனைப் பார்க்க, நிலாவிற்கோ கோபம் துளிர்விட்டது.
“விடுங்க பாட்டி… அவர் இப்பல்லாம் ரொம்ப பெரிய மனுஷர் ஆகிட்டார்! நம்ம பேச்சையெல்லாம் கேட்க மாட்டார்!” என்றாள் அவனை முறைத்தபடி.
“ஏய் நிரு…. நீ ஏன் ஒரு மாதிரி இருக்க?! உன் பிரெண்ட் மூஞ்சியும் சரியில்லை! ரெண்டு பேருக்கும் சண்டையா என்ன?!” என்றான் வேண்டுமென்று நிலாவைச் சீண்ட நினைத்து.
‘இவன…?! என்னை வம்பிழுக்கலைன்னா… இவனுக்கு தூக்கம் வராதே?!’ என்று நினைத்தவள்,
“உங்களுக்கும் உங்க தம்பிக்கும்தான் மத்தவங்களை வம்பிழுக்குறது வேலை நாங்கல்லாம் அப்படியில்லை!” என்று அவள் பதில் கொடுத்தாள்.
‘அய்யோ! மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க போல இருக்கு!?’ என்று எண்ணியவனுக்கு, நேற்று இரவு நிலா தன்னைத் திட்டியதோடு சேர்த்து நிருவையும் திட்டியது நினைவிற்கு வந்தது.
ரஞ்சன் அவள் முகம் பார்த்து, ‘என்னாச்சு?!’ என்று கண்களால் வினவ,
‘அப்புறமா சொல்றேன்!’ என்றாள் அவளும் கண்களாலேயே! அதன் பின் எவரும் எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.
நிலா பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது, சக ஆசிரியைகளுடன் அமர்ந்து, சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அங்கு ரஞ்சன் சென்ற வேலை நல்லபடியாக முடிய, அவனுக்கு ஏனோ அச்சந்தோஷமான விஷயத்தை முதலில் நிலாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
சாப்பாட்டு நேரமாதலால் நிலா கைப்பேசியை உயிர்ப்பித்து வைத்திருக்க, அவனின் அழைப்பு வந்ததும் அவள் ஆச்சர்யத்துடன் போனை எடுத்து அட்டென்ட் செய்தாள்.
“நிலா… ஒரு ஹாப்பி நியூஸ்! அந்த இடத்தைப் பேசி முடிச்சிட்டேன்!” என்றான் மிகவும் உற்சாகமான குரலில்.
“ரொம்ப சந்தோஷம் ரஞ்சு…!” என்று அவள் சொல்ல,
“என்ன நிலா… நான் எவ்ளோ சந்தோஷமா சொல்றேன் உன் குரல்ல உற்சாகமே இல்லை!?” என்று ரஞ்சன் கேட்க,
“ரஞ்சு நான் ஸ்டாஃப் ரூம்ல இருக்கேன்!” என்றாள் மெதுவாக.
அதற்குள் அவளின் சக ஆசிரியை ஒருவர், “என்னங்க உங்க ஹஸ்பண்டா…?!” என்று சிரிக்க,
“ம்!” என்று தலையசைத்த நிலா, “ரஞ்சு நான் ஈவினிங் கிளாஸ் முடிந்ததும் கூப்பிடறேன்!” என்று போனை வைத்துவிட்டாள்.
அன்று மாலையும் வெகு சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டு நிலாவை வெளியே கூட்டிச் செல்லலாம் என்று ரஞ்சன் ஆசையோடு வீட்டிற்கு வர, அவள் வெகு நேரம் கழித்தே வீடு வந்தாள்.
“ரஞ்சு அதுக்குள்ள வந்துட்டியா?!” என்று ஆச்சர்யமாகக் கேட்க,
“தினமும் இப்படி லேட்டாதான் வீட்டுக்கு வருவியா?! ரெண்டரை மணிக்கு ஸ்கூல் விட்டா அஞ்சு மணிக்கு?!” என்றான் கேள்வியாக.
“அப்படியில்லை ரஞ்சு… இன்னிக்கு ஒரு வேலையா கொஞ்சம் வெளில போக வேண்டியிருந்தது!” என்று அவள் சொல்ல,
“அப்படி என்ன வேலை?! என் போனைக் கூட எடுக்க முடியாத அளவுக்கு?!” என்றான் கடினமான குரலில்.
“அச்சோ ஸாரி ரஞ்சு… ஃபோன் ஹான்ட் பேக்ல இருந்தது, கவனிக்கலை!” என்றவள், ரெப்ரெஷ் செய்து கொண்டு, உடை மாற்றி வந்து,
“டிஃபன் ஏதாவது சாப்டியா ரஞ்சு..?! இல்லை கொண்டு வரட்டுமா?!” என்றாள்.
ரஞ்சன் அவள் கேள்விக்கு பதிலளிக்காமல், “ஈவினிங் கிளாஸ் முடிஞ்சதும் கால் பண்ணுவேன்னு வையிட் பண்ணேன்!” என்றான் எங்கோ பார்த்தபடி.
“அச்சோ! மறந்துட்டேன்!” என்று அவள் தலையில் கைவைத்துச் சொல்ல, அவன் முறைத்தான்.
“ஓ! அதான் GEM இவ்ளோ கோபமா இருக்குறாரா?!” என்று அவள், அவன் மூக்கைச் சீண்ட,
அவள் கொஞ்சியதில், கோபம் உடனே மறைந்தது! இருந்தாலும், “இந்தக் கொஞ்சல் எல்லாம் வேண்டாம்!” என்றான் கோபத்தை இழுத்துப் பிடித்து.