Viswakarma 1 1
1
சில வருடங்களுக்கு முன்
————————————————–
Advertisement
“இவருக்கு கோபம் அதிகம் வரும், இவர் வளர வளர தான் உங்க குடும்பத்துல முன்னேற்றமே ஏற்படும்… இந்த குழந்தை தேவசிற்பி விஸ்வகர்மாவோட அம்சம்…”
Advertisement
“உங்க குடும்பத்துல ஏழு தலைமுறைக்கு பிறகு அதே அம்சத்துல பிறக்கறது இவரா தான் இருக்கும். இவர் செய்யற தொழில்ல அவ்வளவு சுத்தமிருக்கும், நேர்த்தியிருக்கும், இவருக்கு கைத்தொழில் நல்லா வரும், அது மூலமா தான் இப்போ இருக்கற இந்த சின்ன கடையை நீங்க பெரிசாக்குவீங்க…”
Advertisement
“அப்போ இவனோட குடும்ப வாழ்க்கை??”
Advertisement
“நான் இப்போ அதுக்கு தான் வர்றேன்… ரொம்பவும் சிக்கலானது இவரோட வாழ்க்கை, தன்னைச்சுற்றி என்ன நடந்தது நடக்குதுன்னே தெரியாமலே இவரை சுத்தி பின்னப்படுற வலையில இவர் விழுவாரு”
“இவருக்கு இருப்பத்தியெட்டு வயசுல திருமணம் நடந்தா தான் உண்டு. அந்த காலம் தள்ளிப்போனா இவருக்கு திருமணமே நடக்காது”
“இன்னொரு முக்கியமான விஷயம் இவருக்கு திருமணம் நடந்துச்சுன்னா நீங்களும் உங்க முன்னோர்களும் இதுவரை செஞ்ச முன்வினை எல்லாம் உங்களுக்கு எதிர்வினையாகி உங்களோட கர்மபலனை நீங்க எல்லாருமே அனுபவிப்பீங்க”
“தப்பு செஞ்ச எல்லாருமே கர்மபலனை அனுபவிச்சு தான் ஆகணும்… யார் செஞ்ச புண்ணியமோ உங்க முன்னோர்கள் அவங்களோட தீவினை எல்லாம் இறந்த பிறகு தான் அவங்களை சேர்ந்திருக்கும்… அதே போல இருந்தா உங்களுக்கும் அதே தான் நடக்கும்”
“அந்த எண்ணத்தை எல்லாம் இவரோட கல்யாணம் தகர்க்கும்… நீங்க உயிரோட இருக்கும் போதே செஞ்ச, செய்யற பாவத்துக்கான பலனை அனுப்பவிப்பீங்க…”
“அய்யா நாங்க எந்த பாவமும்…” என்று அவர் இழுக்க “எல்லாம் எனக்கு தெரியும்… நீங்க சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியது இல்லை…”
“கடைசியா ஒரு விஷயம் நல்லா கேட்டுக்கோங்க, இது வரைக்கும் நீங்க எல்லாருமே அனுபவிக்கற இந்த சொத்தும் கூட உங்களைவிட்டு போகும்…”
“என்ன சொல்றீங்க அய்யா??”
“இது தான் இந்த குழந்தையோட ஜாதகப்பலன், இவன் சந்தோசமா இருந்தா மட்டுமே உங்க குடும்பம் நல்லா இருக்கும், இதுக்கு மேல சொல்ல எதுவும் இல்லை…”
“கடைசியா சொன்ன எல்லாமே இவருக்கு திருமணம் நடந்தா இந்த குடும்பம் என்னாகும் அப்படிங்கறது பத்தி தான்…” என்று முடித்தார் அவர்.
“அப்போ அவனுக்கு நாங்க கல்யாணமே பண்ணிப்பார்க்க முடியாதா” என்றார் வீட்டிற்கு மூத்தவரான விஸ்வகர்மாவின் தாத்தா கனகவேல்.
விஸ்வகர்மாவின் ஜாதகத்தை கணித்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து அவரைப் பார்த்து ஒரு மென்னகை புரிந்தார். பதிலொன்றும் சொல்லவில்லை அவர்.
“இல்ல நீங்க…”
“இதுக்கான பதிலை காலம் சொல்லும். தீதும் நன்றும் பிறர்தர வாரா… இதை நல்லா புரிஞ்சுக்கோங்க… இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க. காலம் மாறும்…” என்று சொல்லி முடிக்க அவருக்கு மரியாதை செலுத்தி அங்கிருந்து கிளம்பினர் நம் நாயகனின் குடும்பத்தினர்.
விஸ்வகர்மா நம் கதையின் நாயகன். இப்போது இவன் குடும்பத்தில் உள்ளவர்களையும் பார்த்துவிடுவோமே. வீட்டிற்கு மூத்தவர் கனகவேல் பாட்டி தெய்வானை அவர்களின் பிள்ளைகள் மூவர்.
பெரிய மகன் ரத்தினவேல் அவர் மனைவி செண்பகவள்ளி, அவர்களின் மகன்கள் கார்த்திக், மற்றும் சரவணன்.
இரண்டாவது வீட்டின் செல்ல மகள் அங்கயற்கண்ணி, கணவர் முத்துராமன், அவர்களின் பிள்ளைகள் ரம்யா (கார்த்திக்கின் மனைவி), சௌம்யா (சரவணனின் மனைவி)
கடைசியாய் செந்தில்வேல் அவர் மனைவி சகுந்தலா, அவரின் பிள்ளைகள், மூத்தவள் ராதிகா (கணவர் மாதவன்), அடுத்து நம் நாயகன் அவன் தங்கை ரேகா. அனைவரும் ஒரே குடும்பமாய் ஒன்றாக வசிக்கிறார்கள். இவர்களின் குடும்பத் தொழிலும் ஒன்றே, நகை செய்வதும் அதை வியாபாரம் செய்வதும்.
சொந்தமாய் இவர்களுக்கென்று நகைக்கடை உள்ளது. விகே தங்க மாளிகை கன்னியாகுமரியில் மிகப்பிரசித்தம். நாளை ஒரு முக்கிய தினம் அதனாலேயே இன்று குடும்பத்தினர் விச்சுவின் ஜாதகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.
விஸ்வகர்மாவின் பிறந்த தினம் அவனுக்கு இருபத்தியாறு முடிந்து இருப்பத்தியேழாம் அகவை தொடங்கப் போகிறதே திருமணத்திற்கு பார்க்கலாம் என்று தான் அவன் ஜாதகத்தை மீண்டும் கையில் எடுத்திருந்தனர்.
அவர்களின் குடும்ப ஜோசியர் அவன் திருமணம் நடந்தால் பெரிய அதிசய நிகழ்வு என்று சொல்லிச் சென்றிருந்தார்.
அவன் பிறந்த சில நாட்களில் அவனுக்கு ஜாதகம் கணித்தே போதே வள்ளுவர் சொல்லியிருந்தார். அவன் பிற்காலம் குறித்து. சரி கால நேரம் வந்தால் எல்லாம் சரியாகியிருக்காதா என்ற நப்பாசை வீட்டினருக்கு.
நினைப்பத்தெல்லாம் நடந்துவிட்டால் தெய்வமேது. இதோ இன்று குடும்ப ஜோசியரும் அவர்களை குழப்பி சென்றிருக்க வீட்டினர் அனைவருக்குமே கவலை சூழ்ந்தது. முக்கியமாய் அவன் அன்னை சகுந்தலாவிற்கு மகனை குறித்து பெருங்கவலையாய் போனது.
இவர்களின் கவலைகளுக்காகவெல்லாம் பொழுது விடியாமல் இருக்குமா என்ன. அது எப்போதும் போல் விடியத் தொடங்கியது. அன்று செப்டெம்பர் 17, விஸ்வகர்மாவின் பிறந்தநாள்.
அன்றைய தினம் இன்னமும் விசேஷமானதும் கூட. தேவசிற்பி விஸ்வகர்மாவின் ஜெயந்தியும் அன்றே. வருடந்தோறும் ஆவணித்திங்கள் கடைசி நாளே விஸ்வகர்மா ஜெயந்தி ஆகும்.
நம் நாயகனும் அதே நாளில் தான் பிறந்திருந்ததால் அவனுக்கு அவரின் திருநாமத்தை சூட்டியிருந்தனர்.
விஸ்வாவின் குடும்பத்தினர் கூட்டுக்குடும்பமாய் இருந்தாலும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை. அவர்கள் வீடு இருக்குமிடம் ஒரே இடமே. ஐந்து வீடுகள் வரிசைக்கட்டி இருக்க, நடுவில் உள்ள வீடு மட்டும் மிகப்பெரியது.
நீண்ட தாழ்வாரத்துடன் முற்றம் வைத்து கட்டப்பட்ட அழகிய வீடு. அவ்வீட்டில் கனகவேல், தெய்வானை மற்றும் அவர்களின் இரு மக்களும் மனைவிமார்களும் வசிக்கின்றனர். திருமணமாகாத இளைய மகள் ரேகா அவர்களுடன் அதே வீட்டில் தான் இருக்கிறாள்.
அவ்வீட்டிற்கு வலது புறத்தில் இருந்த இரு வீட்டிலும் ரத்தினவேலின் மகன்கள் தங்கள் மனைவிமார்களுடன் வசிக்கின்றனர்.
இடது புறத்தில் இருக்கும் வீட்டில் ஒன்றில் நம் நாயகன் தனியே வசிக்க அடுத்துள்ள வீட்டில் அங்கயற்கண்ணி தன் கணவருடன் இருக்கின்றார். எந்தவொரு விசேஷம் என்றாலும் அவர்கள் நடுவில் உள்ள வீட்டில் தான் ஒன்றுகூடுவர்.
விஸ்வாவின் சகோதரி தன் கணவன் மற்றும் மகளுடன் வந்திருந்தாள். இன்று நம் நாயகனின் பிறந்தநாள் என்பதால் அனைவரும் அங்கே தான் வாசம்.
இதோ நம் நாயகன் வந்துக்கொண்டிருக்கிறான், இனி அவனை கவனிப்போம். காலையிலேயே குளித்து முடித்து வெள்ளை வேட்டி சட்டையுடன் பக்தியாய் கடவுளின் முன் நின்று தொழுதுக் கொண்டிருந்தான் அவன்.
“அம்மா…”
“சொல்லுப்பா விச்சு…”
விஸ்வகர்மா நண்பர்களுக்கு விஸ்வா, வீட்டினருக்கு விச்சு…”
“எல்லாரும் எங்கே?? இன்னைக்கு சீக்கிரமே கடைக்கு போக வேணாமா, வருஷத்துல ஒரு நாள் இந்த விசேஷத்தை செய்யறதுக்கு ஒவ்வொரு வருஷமும் நானே ஞாபகப்படுத்தணுமா எல்லாருக்கும்” என்று கொஞ்சம் உரக்கவே சொல்ல ஒவ்வொருவராய் அங்கு வர ஆரம்பித்தனர்.
“அதெப்படிப்பா எங்களுக்கு மறக்கும்…” என்று சொல்லிக் கொண்டே தயாராகி வந்துக் கொண்டிருந்தார் கனகவேல் உடன் பாட்டியுடன்.
“நீங்களும் மறந்திருப்பீங்களோன்னு நினைச்சேன் தாத்தா. பரவாயில்லை நீங்க ரெடியாகி வந்திட்டீங்க”
“நான் அப்போவே தயார் ஆகிட்டேன்ய்யா. காலையிலேயே பூஜையை முடிச்சிட்டேன். உங்க பாட்டி கோவிலுக்கு போகணும்ன்னு சொன்னா. இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் இல்லையா, அதான் போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்தோம்” என்றார் அவர்.
பாட்டி அவனருகே வந்தவர் அவன் நெற்றியில் கோவில் விபூதியை இட்டுவிட்டார்.
“விச்சு… விச்சு…” என்று ரகசியமாய் அழைத்தார் அவன் அன்னை.
“என்னமா…” என்றிருந்தான் இவன் சத்தமாய்.
தலையில் அவர் லேசாய் தட்டிக்கொள்ள “இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் இல்லையா. தாத்தா, பாட்டி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க சொல்லுவா உங்கம்மா. வேற எதுக்கு கூப்பிட்டிருக்க போறா” என்றார் செந்தில்வேல் தன் மனைவியை புரிந்தவராய்.
விஸ்வா தன் அன்னையை பார்க்க அவர் பார்வை அவன் தந்தையின் கூற்றை ஆமோதிப்பது போல் தலையை ஆட்ட தாத்தா பாட்டி மட்டுமல்லாது தன் பெரியப்பா, பெரியம்மா, அம்மா, அப்பா என்று அனைவரின் காலிலும் விழுந்து வணங்கினான் அவன்.
“நான் கடைக்கு போறேன்… எல்லாரும் சீக்கிரமே வந்து சேருங்க” என்று கிளம்பிச் சென்றுவிட்டான் அவன்.
அவர்களின் விகே தங்க மாளிகைக்கு நாகர்கோவில், தோவாளை, தக்கலையில் கிளைகள் இருந்தது. இது தவிர திருவனந்தபுரத்திலும் ஒரு கிளை உள்ளது, அங்கு அவன் தமக்கையின் கணவர் மாதவன் மேற்பார்வையில் அது உள்ளது.
அனைத்திலுமே இன்று ஒரே நேரத்தில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவன் வீட்டினர் ஒவ்வொருவரும் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்திருந்தனர்.
கனகவேல் பூஜையை ஏற்று நடத்த மற்ற கிளைகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைந்திருக்க அங்கேயும் பூஜை அதே நேரத்தில் முடிந்திருந்தது.
பூஜை முடிந்ததும் வீட்டின் பெண்கள் அனைவரையும் கனகவேல் அழைத்து சென்றுவிட மற்றவர்கள் அங்கேயே தேங்கினர்.
“கார்த்தி அண்ணா நீங்க நாகர்கோவில் கிளம்பலையா, சரவணன் அண்ணா நீங்க தோவாளைக்கு கிளம்புங்க”
“நான் தக்கலைக்கு போயிட்டு வர்றேன். பெரியப்பா நீங்களும் அப்பாவும் இங்க பார்த்துக்கோங்க… போயிட்டு வர்றேன்” என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு அவன் கிளம்ப கார்த்தியும், சரவணனும் கொஞ்சம் முகம் சுளிக்கவே செய்தனர்.
“நம்மளைவிட சின்னவன் இவன் நம்மை இங்க போ அங்க போன்னு அதிகாரம் பண்றான். எல்லாம் வீட்டில இருக்கவங்க கொடுக்கற இடம், அப்பா, அம்மா தாத்தா பாட்டின்னு யார்கிட்ட சொன்னாலும் இவனை தான் தலையில தூக்கி வைச்சு ஆடுவாங்க…” என்று தன் தம்பியிடம் வெளிப்படையாகவே பொருமினான் கார்த்திக்.
“என்ன கார்த்தி பண்ணுறது அவன்கிட்ட திறமை இருக்கு. நம்ம வீட்டில எதாச்சும் சொன்னோம்ன்னு வைய்யேன், அவன் அளவுக்கு திறமையை வளர்த்திட்டு பேசுன்னு சொல்வாங்க”
“அவனால தான் இன்னைக்கு இத்தனை கிளை திறந்திருக்கோம்ன்னு எல்லாம் பெருமை பேச ஆரம்பிச்சுடுவாங்க. இதுக்கெல்லாம் ஒரு நாள் நமக்கு விடிவுகாலம் வராமலா போய்டும், வெயிட் பண்ணுவோம்” என்றான் சரவணன் தன் அண்ணனுக்கு ஆறுதலாய்.
விஸ்வகர்மா தக்கலைக்கு வந்து சேர ஒரு மணி நேரமாகியிருந்தது. கடைக்குள் நுழைந்து சுற்றிலும் பார்வையை ஒட்டியவன் தன் கண்களாலேயே அனைத்தும் ஸ்கேன் செய்து அவன் அறைக்கு சென்றான்.
உள்ளிருந்த போனை எடுத்து யாருக்கோ அழைத்தான். சற்று நேரத்தில் அவன் அறைக்கதவு தட்டப்பட “உள்ள வாங்க” என்றான்.
