Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 30 2

“நோ நோ நத்திங் டாக்டர்!” என்று புன்னகையுடன் மறுத்தவள், அவர் சொன்ன ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்ட பின், அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, தன் பர்சிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கப் போக, ரஞ்சன் ஏற்கனவே அவரிடம் ஆயிரம் ரூபாய்த் தாளொன்றை நீட்டி இருந்தான்.

     அவர் இருநூறு ரூபாயை எடுத்துக்கொண்டு மீதப் பணத்தைக் கொடுக்க, “எவ்ளோ சந்தோஷமான விஷயத்தை சொல்லியிருக்கீங்க! நீங்களே வச்சிக்கோங்க டாக்டர்!” என்றான்.

     “இல்ல இல்ல..!” என்று அவர் மறுக்க,

     “சரி உங்களுக்கு விருப்பமில்லைன்னா.. இதோ இந்தப் பாட்டிகிட்ட கிட்ட கொடுத்திடுங்க!” என்று அவன் சொல்ல, அவர் புன்னகையுடன் தன்னிடத்தில் வேலை செய்யும் ஒரு வயதான மூதாட்டியிடம் அப்பணத்தை நீட்டினார்.



Advertisement

     “நீயும், உன் பொஞ்சாதியும் நல்லா இருக்கணும் ய்யா…!” என்று வாழ்த்தினார் அந்த மூதாட்டி.

     இருவரும் பரஸ்பரம் நன்றி தெரிவித்து விட்டு வெளியே வந்ததும், “ஏன் இந்த கிளினிக்கு வந்த?! ஏதாவது சிறந்த கைனகாலஜிஸ்ட் கிட்ட போயிருக்கலாம் இல்ல…” என்று ரஞ்சன் கேட்க,

     “என் தகுதிக்கு ஏற்ற இடத்துலதான் நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்க  முடியும்!” என்று முகத்திலறைந்தது போல் சொன்னதோடு நில்லாமல், தன் பர்ஸிலிருந்து, ஆயிரம் ரூபாய்த் தாளை எடுத்து அவன் கையில் திணித்து விட்டு, அதே வேகத்தில் ஆட்டோவில் ஏறினாள்.

Advertisement

      “இவள…?!” என்று பல்லைக் கடித்தவன், “இப்ப எங்கடி போற?!” என்றான் பொறுமை இழந்து.

Advertisement

     “அண்ணா… ஸ்டேட் பாங்க்குக்கு போங்க!” என்றாள்.

     “நான் ஒருத்தன் இங்க கேட்டுகிட்டு இருக்கேன் ஆட்டோகாரனுக்கு பதில் சொல்றா?!” என்று மனதுள் பொறிந்துத் தள்ளியவன், ஆட்டோ கிளம்பிவிட, மறுபடியும் அவளைத் பின்தொடர்ந்தான்.

     பாங்கிற்குச் சென்ற நிலா, தனது சில நகைகளை அடகு வைத்து, பணத்தை வாங்கிக் கொள்ள, அவளருகே வந்த ரஞ்சன், அவள் கையை வளைத்துப் பிடித்து, “ரொம்ப ஓவரா போயிக்கிட்டு இருக்கடி நீ! இப்ப நகையை அடகு வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?!” என்றான்.

Advertisement

      “ம்! அதுவே மறந்து போச்சா?!” என்று நக்கலாகக் கேட்டவள், “அங்க ஒரு ஜீவன் உயிருக்கு போராடிகிட்டு இருக்கு! அவங்களுக்கு இன்னிக்கு ஆபரேஷன்! அதுக்காகத்தான் பணம் கொண்டு போறேன்!” என்று வேதனையுடன் அவள் கூறியதும்தான், நேற்று இரவு அவள் எதற்காகப் பணம் கேட்டாள் என்பது நினைவிற்கு வந்தது ரஞ்சனுக்கு.

     தன் தவறை உணர்ந்தவன் பிடி இலக, அவள் கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றாள். அங்கு பதட்டத்துடன் காத்திருந்த தன் அக்காவின் கணவர் கோபியிடம் சென்று பணத்தைக் கொடுத்தாள் நிலா.

     “ரொம்ப நன்றிம்மா ரெண்டு மாசத்துல திரும்பக் கொடுத்திடறேன்!” என்றார் கோபி.

     “பொறுமையாகவே கொடுங்க மாமா…!” என்றவள், “எப்போ மாமா ஆபரேஷன்? என்றாள்.

     “ஈவினிங் தான் ம்மா..!” என்று அவர் சொல்ல,

     “சரிங்க மாமா நான் போய் அத்தையை பார்த்துட்டு வரேன்!” என்று உள்ளே சென்றாள்.

     கணையத்தில் மிகப்பெரிய கட்டி வந்து உண்ண முடியாமல், உறங்க முடியாமல், வலி மிகுதியால் சோர்ந்து போய்ப் படுத்திருந்த தன் அக்காவின் மாமியாரைக் காண அவள் மனம் வருந்தியது. அருகே நின்றிருந்த அஷ்மிதா, நிலா வருவதைக்  கண்டதும், “வாங்கக்கா..” என்றழைக்க,

     “எப்படி இருக்க அஷ்மி..!” என்று கேட்டபடி உள்ளே வந்தாள்.

     அவள் குரல் கேட்டுக் கண்களைத் திறந்த ஜோதி, அவளைக் கண்டவுடன் அவர், “வாம்மா நிலா… எப்படி இருக்க? உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார்?” என்று அன்புடன் நலம் விசாரிக்க,

     “நல்ல இருக்கோம் அத்தை… உங்க உடம்பு பரவாயில்லையா?!” என்றாள் அக்கறையுடன்.

     “எங்கம்மா.. வலி இருக்கத்தான் செய்யுது! ஆபரேஷன் முடிஞ்சாதான் தெரியும்!” என்று அவர் சொல்ல,

     “சீக்கிரம் சரியாகிடும் அத்தை! கவலைப்படாதீங்க!” என்றாள் ஆறுதலாக.

     சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தவள், “அக்காவும் பெரிய மாமாவும் எப்ப வருவாங்க?” என்று அஷ்மிதாவிடம் கேட்க,

    “அண்ணி எல்லோருக்கும் சாப்பாடு செய்து எடுத்துட்டு வரணும்! அதான் கொஞ்சம் லேட்டாகுது! வர்ற நேரம்தான் க்கா..!” என்றாள் அஷ்மிதா.

     “பாவம் சின்னக் குழந்தையை வைச்சிக்கிட்டு ஒத்தையாளா சிரமப் படுறா..!” என்று மருமகளுக்காக, வருந்தினார் மாமியார்.

     ‘அப்பல்லாம் அக்காவை என்னமாய் குறை கூறுவார், இப்ப அவளுக்காக பார்க்கறாங்களே..?!’ என்று நிலா ஆச்சர்யம் கொள்ள, அவள் மனதைப் படித்தவராய்,

     “என்னம்மா செய்யிறது உடம்பு சதி செய்த பிறகுதான் மருமகளோட அருமை தெரியுது!” என்றார் ஜோதி.

     அவள் அமைதியாய் இருக்க, “ரொம்ப நன்றிம்மா… கடைசி நேரத்துல பணம் பத்தாம போனதுல நீதான் பணம் கொடுக்கறேன்னு சொன்னியாமே! கோபி சொன்னான். உனக்கும் உங்க வீட்டுக்காரருக்கும் ரொம்ப நல்ல மனசு! கேட்காமலேயே உதவி செய்யறீங்க! ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க!” என்று அவர் வாழ்த்த, சிறுபுன்னகையுடன் அவ்வாசிகளை ஏற்றுக் கொண்டாள் நிலா.

     அந்நேரம் கலையும், அவர் மாமனாரும் வந்துவிட பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்து, “உங்க வீட்டுக்காரர் வரலியா நிலா..!” என்றாள் கலை.

     “ம்.. அவருக்கு ஏதோ முக்கியமான வேலையாம்! அதான் நான் மட்டும் வந்தேன். தப்பா நினைச்சுக்காத க்கா…!” என்று நிலா சமாதானம் கூற,

     “அட.. அவர் வேலையைப் பத்தி தெரியாதா என்ன?! அவர் பணம் கொடுத்து உதவினதுக்கு நன்றி சொல்லலாமேன்னு கேட்டேன்!” என்றவள்,

     “நேர்ல வரலன்னா என்ன? போன்ல கூப்பிட்டு அவருக்கு நன்றி சொல்லுவோம்ங்க!” என்று கணவனிடம் சொன்னவள், நிலாவிடம் அவன் போன் நம்பர் வாங்கி அவனுக்கு போன் செய்தாள்.

     கலையும், கோபியும், ரஞ்சனுக்கு போன் மூலம் தங்களது நன்றிகளைத் தெரிவிக்க, அவன் மேலும் குறுகிப் போனான்.

     ‘நான் பணம் கொடுக்காட்டியும், நானே கொடுத்தது போல் கொடுத்திருக்கிறாளே! அவளைப் போய்..!’ என்று எண்ண எண்ண அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்தது.

     அன்று இரவு, தங்கள் வீட்டிற்கு இரு புது வரவுகள், வரப் போவதைக் கொண்டாட காமாட்சி, இராமநாதன் வீட்டில் ராஜா விருந்தே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

     நிலா, யாஷினி, நிவி அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் அவ்விருந்துக்கு அழைக்கப் பட்டிருந்தார்கள்.

     கர்ப்பவதிகள் இருவரில் நிலாவிற்கு, உணவு அவ்வளவாக ஏற்கவில்லை என்பதால் பெயருக்கு மட்டுமே சாப்பிட்டு எழ,

     “என்னம்மா.. எதுவுமே சாப்பிடாம எழுந்துக்கற?!” என்றான் ரஞ்சன் கவலையாக.

     “இல்ல… பிடிக்கலை!” என்றாள் பட்டும் படாமல்.   

     “இந்தப் பழச் சாரையாவது குடிம்மா..!” என்று ரஞ்சன் அவளுக்கு புகட்டிவிடப் போக, அவன் அன்பைக் கண்டு பெண்ணைப் பெற்றிவர்களின் மனம் குளிர்ந்தது.

     “இல்ல… நானே குடிச்சிக்கிறேன்!” என்று கையில் வாங்கப் போனவவளிடம், “அப்பா…!” என்று ரஞ்சன் மெல்லிய குரலில் முணுமுணுக்க, தன் தாய், தந்தையாரிடம் பார்வையைச் செலுத்திய நிலாவிற்கு, அவர்களின் கண்களில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்து, அவன் விஷத்தையே கொடுத்தாலும் குடிக்கலாம் என்று தோன்றியது.

     அவன் கொடுத்த பழச்சாறை மெதுவாய்ப் பருகியபடியே, நிலா, தன் தந்தையைப் பார்க்க, அவர்களைக் கண்ணார ரசித்துக் கொண்டிருந்தவருக்கு, தன் உண்மை நிலை தெரிந்தால் என்னவாகும் என்று எண்ணம் எழ,  அவள் நெஞ்சில் சொல்லொணா வலி எழுந்தது.

     யாஷினியின் தந்தையும் தன் மகளின் நிலை எண்ணி மிகவும் பூரிப்படைந்தார். சந்தோஷ், காவ்யா இருவரும், யாஷினிக்கும், நிலாவிற்கும் அழகிய குழந்தை பொம்மைகளை வாங்கி வந்து பரிசளித்திருந்தனர்.

     இரவு விருந்து முடிந்து அனைவரும் விடைபெற்றுக் கிளம்ப, வீட்டில் இருந்தவர்களும், தத்தம் அறைக்கு உறங்கச் சென்றனர்.

     தன் அறைக்கு வந்த நிலா, ரஞ்சனும் அறைக்குள் வந்த பின், தனது கைப்பையில் இருந்த, முப்பதாயிரம் ரூபாய்ப் பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

     அவன் எதற்கென்று புரியாமல் விழிக்க, “இது இத்தனை மாசமா நான் உங்க வீட்ல தங்கினதுக்கும், சாப்பிட்டதுக்கும் உண்டான பணம்! என் சம்பளம் வந்ததும், எனக்கும், என் குழந்தைக்கும் சேர்ந்து ஆகுற செலவை கொடுத்திடறேன்!” என்று சொல்லிவிட்டு, அவன் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல், பழையபடி சோபாவில் சென்று படுத்துக் கொண்டவள் கண்களில், தன் கட்டுப் பாட்டையும் மீறிக் கண்ணீர் பெருக்கெடுத்தது.                     

                      இமையே இமையே… விலகும் இமையே..

                      விழியே விழியே… பிரியும் விழியே…

                      எது நீ… எது நான் இதயம் அதிலே…

                      புரியும் நொடியில் பிரியும் கணமே…

                      சிறகை மீட்டுகின்ற நேரம் பார்த்து

                      வானெல்லாம் மழை! 

                      வரைந்து காட்டுகின்ற வண்ணம் 

                      என்ன செய்ததோ பிழை!

                      ஓ…… அடி மனதில் இறங்கி விட்டாய்…

                     அணுஅணுவாய்க் கலந்துவிட்டாய்… {அடி மனதில்}

     ‘ஏதோ கோபத்தில் இருக்கிறாள்! சற்று முரண்டு பிடித்தாலும் மன்னித்துவிடுவாள், சரியாகி விடுவாள்!’ என்று நினைத்திருந்தவனுக்கு, அவளின் இச்செயல் விஷம் பாய்ந்த அம்பாய் இதயத்தைத் தைத்தது.

                     இமையே இமையே… விலகும் இமையே…

                     விழியே விழியே… பிரியும் விழியே…

                     எது நீ எது நான் இதயம்… அதிலே…

                     புரியும் நொடியில்… பிரியும் கணமே…

                     பனியில் மூடிப் போனப் பாதை மீது

                     வெயில் வீசுமோ?!

                     இதயம் பேசுகின்ற வார்த்தை

                     உந்தன் காதில் கேட்குமோ?

                     அடி மனதில் இறங்கிவிட்டாய்…

                     அணுஅணுவாய்க் கலந்துவிட்டாய்… {அடி மனதில்}

                                      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!