அக்குரலில் தெரிந்த ஆளுமை, ஏனோ அவளைத் தன்னை மீறி எழச் செய்தது.
கண்ணீர் கசிந்த கண்களோடு அவள் எழுந்து நிற்பதைப் பார்த்தவன்,
“நானும் நேத்து ராத்திரியிலிருந்து பார்த்துட்டு இருக்கேன்! ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கடி நீ..! காலையில காரை விட்டு இறங்கி நீ ஆட்டோவில ஏறினப்பவே… இழுத்துவைச்சு நாலு அறை விட்டிருப்பேன்! பொது இடமாச்சேன்னு விட்டா… ரொம்ப ஓவரா ரியாக்ட் பண்ற…?!
நான் பேசினது தப்புதான். இல்லன்னு சொல்லலை! அதுக்கு… நீ பண்றதும் ரொம்ப அதிகம்டி..! போ.. போய் கட்டில்ல படு..!” என்றான் மிரட்டலாக.
அவள் ஏதும் பேசாமல் அவனை முறைக்க, “இந்த முறைப்பெல்லாம் என்னை ஒண்ணும் செஞ்சிடாது! கண்ணைத் துடைச்சிகிட்டு போய்ப் படு போ!” என்று அவன் அலட்சியாமாகச் சொல்ல,
‘திமிர் பிடிச்சவன்! என்ன பேச்சு பேசினான்?! கொஞ்சமாவது அப்படி பேசிட்டோமேங்கிற வருத்தம் இருக்கா?! இதுல அதிகாரம் வேற…!’ என்று அவள் முணுமுணுக்க,
“ம்ஹும்.. நீயெல்லாம் சொன்னா கேட்கிற ஜாதியில்லடி…!” என்றவன், அவளை குண்டு கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் கட்டில் போட்டான்! மெதுவாகத்தான்!
“நீ பண்ண டென்ஷன்ல நேத்துலயிருந்த ஒரு பொட்டுத் தூக்கம் இல்லை! எனக்கும், என் பிள்ளைக்கும் ரொம்….பபபப டயர்டா இருக்கு! படுத்துத் தூங்கு!” என்று சோம்பல் முறித்துச் சொன்னவன், அவள் அங்கும் இங்கும் நகரமுடியாமல், அவளை நன்றாய் அணைத்தபடி படுத்துக் கொண்டான்.
அவள் அவனைவிட்டு விலகிப் படுக்க முயல, “சும்மா நெளியாம பட்றி…!” என்றவன் பிடி மேலும் இறுகியது, அவளால் வில(க்)க முடியாத அளவு.
“ப்ச்!!” என்று அவள் கோபமும் சலிப்பும் ஒருசேர முனக, ஏதோ நினைவு வந்தவனாய் சடக்கென்று எழுந்து அவள் வயிற்றுப்புறம் இருந்த சேலையை விலக்க, பதறித் தடுத்தவள்,
“என்ன பண்ற நீ?!” என்று பல்லைக் கடித்தாள்.
“ஏதாவது பண்ணனுமா பேபி…!” என்று அவன் குறும்பாய் கண்ணடித்து, ஆசையோடு அவளை நெருங்க, “வே வேணாம்…!” என்று அவள் சொல்லச் சொல்ல, அவள் மணிவயிற்றில் அழுத்தமாய் நீண்ட முத்தம் ஒன்றை பதித்தான்.
அம்முத்தத்தை அவளால் தடுக்கவும் முடியவில்லை, எதிர்க்கவும் முடியவில்லை. ஏனெனில், தன் வயிற்றில் இருக்கும் மகவுக்கு, அதன் தந்தை கொடுக்கும் முதல் முத்தமல்லவா?! சேயுடன், சேர்ந்து தாயும் அதன் சுகத்தில் கரைந்துதான் போனாளோ?!
“ஹப்பா… இப்பதான் சந்தோஷமா இருக்கு! காலையில இருந்து என் செல்லத்துக்கு ஒரு முத்தம் கூட கொடுக்க முடியாத அளவுக்கு என்னமா சீன் போட்டா தெரியுமா உங்கம்மா?! சொல்லி வைடா செல்லம் அவகிட்ட… இனி இந்த முகத்தை தூக்கி வைச்சிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்னு!” என்று அவள் முகத்தை நேருக்கு நேர் முறைத்தவன், மறுபடியும் அவள் வயிற்றின் அருகே சென்று,
“ஓகே பேபி… நீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்கள்ல.. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க! அப்பாவுக்கும் தூக்கம் வருது! குட் நைட்!” என்று கொட்டாவி விட்டுவிட்டு, அவள் எதிர்பாராவண்ணம் அவளது கன்னத்திலும் ஓர் முத்தத்தைப் பதித்துவிட்டுப் தூங்குபவன் போல் கண்களை மூடிப் படுத்துக் கொண்டான்.
“ஹ…! இவன…” என்று அவள் கோபத்துடன் தன் கண்களை இறுக மூடித் திறந்து, அவன் கழுத்தை நெரிப்பது போல் போக,
“பேசாம பட்றி… உன்னால அதெல்லாம் செய்ய முடியாது!” என்று கண்மூடியபடியே சொல்லிவிட்டு, சில நொடிகளில் உறங்கியே போனான்.
அவன் நன்றாக உறங்குவதைப் பார்த்து பொறாமை கொண்டவள், “எருமை.. எருமை! என்னைத் தூங்கவிடாம பண்ணிட்டு இது மட்டும் நல்லா தூங்குது பாரு!” என்று சில நொடிகள் அவனையே வெறித்திருந்தவள், எவ்வளவு முயன்றும் அவன் கைவளைவுக்குள் இருந்து மீள முடியாமல் போக, தன் வயிற்றில் வளரும் சிசுவை நினைத்தபடியே கண்ணுறங்கிப் போனாள்.
அங்கு நிருவின் அறையில், யாஷினி அவன் மடி மீது தலை வைத்துப் படுத்திருக்க, அவன் தன் மனையாளின், தலையைக் கொதியபடியே கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.
“என்னடா இன்னும் தூக்கம் வரலையா?!” என்று நிரு கேட்க,
“ம்ஹும்.. சந்தோஷத்துல தூக்கமே வராட்டேங்குது!” என்றவள், அவன் முகம் பார்க்கும் வண்ணம் படுத்துக் கொண்டு,
“நினைச்சுப் பாருங்க நிரு… என் பாப்பாவுக்கே பாப்பா வரப் போகுது!” என்று குறும்புடன் கண்ணடிக்க,
“அடி வாங்கப் போற நீ! பாப்பான்னு கூப்பிடாதேன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்!” என்று அவன் செல்லமாய் மிரட்ட,
“அட போங்கப்பா… எப்பப் பாரு மிரட்டறீங்களே தவிர, அடிக்க மாட்டேங்கறீங்க!” என்று அவள் சலித்துக் கொள்ள, அவன் லேசாய் அவள் கன்னத்தில் தட்டி, அழகாய் புன்னகைத்தான்.
“ஸ்வீட் பாப்பா…!” என்று அவன் முகத்தை தன் அருகே இழுத்து ஓர் இனிய முத்தம் பதித்தவள்,
“நம்ம பாப்பா என்னை மாதிரி இருக்குமா உங்களை மாதிரி இருக்குமா நிரு…?!” என்று ரசனையாய் அவள் தலைசரித்துக் கேட்க, அவ்வழகு அவனை ஈர்க்கவில்லை! மாறாய், “இல்ல.. இல்ல..! என்னை மாதிரி வேண்டாம்!” என்று பதறினான்.
அவன் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டு துடித்துப் போன மனைவி, “நிரு… ஏன்ப்பா… இப்படி பதறுறீங்க?!” என்று எழுந்து அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.
சில நொடிகள் அவன் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளைப் படித்தவள், “ஏன் நிரு நம்ம பாப்பா உங்களை மாதிரி பிறந்தா நீங்க ஏத்துக்க மாட்டீங்களா?!” என்று கேட்க,
“மறுபடியும் அப்படிச் சொல்லாத யாஷு… நம்ம குழந்தை எப்படி இருந்தாலும் அது நமக்கு பொக்கிஷம்தான், ஆனா இந்த உலகத்தைப் பொறுத்தவரை, குறையோட, அதுவும் பெண்பிள்ளை குறையோடு பிறந்துட்டா…?! கேட்கவே வேண்டாம்!” என்று நிறுத்தியவன், சில நொடிகள் அவகாசம் எடுத்துக் கொண்டு,
“எல்லோரும் வேணும்னே குறை இருக்கவங்களை உதாசீனப் படுத்த மாட்டாங்க யாஷு…. ஆனா அவங்களோட பரிதாபமான பார்வை, அவங்கள்ல இருந்து எங்களை தனிச்சுப் பார்க்குற விதம், அதிலும் ஒருசிலர் எங்களை கேலியா பேசுறது, இதையெல்லாம் எதிர்கொள்ளும் போது, என்னை மாதிரி இருக்கறவங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?! வார்த்தைகளால அந்த வலியை விவரிக்க முடியாது…”
“நம்ம குழந்தை அந்த மாதிரி ஒரு கஷ்டத்தை அனுபவிக்கக் கூடாது யாஷு..!” என்றவனின் குரல் கரகரத்தது.
அவன் வேதனையை போக்க எண்ணி, “நிரு…!” என்று அவனைக் கட்டிக்கொண்டு ஆறுதல் உரைக்க முயன்றவளின் கண்களும் தாமாகக் கண்ணீர் சொரிந்தன.
அவன் மேலும் தொடர்ந்து, “என்னதான் நாங்க சுயமா நின்னு, கௌரவமான வாழ்க்கை வாழ்ந்தாலும், உடல் ஊனமுற்றவர்களை பரிதாமாகவும், இவங்களால பெரிசா என்ன சாதிக்க முடியும்னு எங்களை அலட்சியப் படுத்தி ஒதுக்குற, சில மனிதக் கூட்டமும் இருக்கத்தான் செய்யுறாங்க! பரிதாபமா பார்க்கிறது தப்புன்னு நான் சொல்லலை! ஆனா அது எங்களை சக மனிதர்கள்ல இருந்து ஒதுக்கி வைக்கிற மாதிரி இருக்கு!”
“ஒரு வயதுக்கு மேல்தான் எனக்கு இதையெல்லாம் தாங்கிக்கிற பக்குவம் வந்தது. ஆனா என்னோட பள்ளிக் காலங்கள்ல நான் நிறையவே மன உளைச்சளுக்கு ஆளாகியிருக்கேன் தெரியுமா?! மத்தவங்க கேலியையும், பரிதாபப் பார்வையையும் சாதரணமா எடுத்துக்குற பக்குவம் அப்ப எனக்கு வரல… நிலாதான் எனக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பா.. இருந்தாலும் எனக்கு அப்பப்போ ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடும். அதோடு சேர்ந்து கோபமும் வந்துடும்! அப்பவெல்லாம் நிலாதான் பெரும்பாடு பட்டு என்னை ஒருநிலைப்படுத்துவா. அவ மட்டும் இல்லைன்னா நான் இந்த அளவுக்கு தன்னம்பிக்கையோடு இருந்திருக்க மாட்டேன்! ஷி இஸ் அன் எஞ்சில்!” என்றான் கண்கள் மிளிர.
நிலாவைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவன் கண்களில் மிளிரும் அந்த அன்பு, அது என்றுமே யாஷினிக்கு பெருமிதத்தைக் கொடுக்கும்.
‘ஹப்பா எத்தனை ஆத்மார்த்தமான நட்பு…!’ என்று பலமுறை வாய்விட்டுக் கூறி இருக்கிறாள். ஒருவர் மனதில் இருப்பதை ஒருவர் சொல்லாமலே மற்றவர் அறிந்து கொள்வது, அவர்களுக்குள் இருக்கும் அழகான புரிதல், இதையெல்லாம் எண்ணி பலமுறை வியந்திருக்கிறாள்.
இப்போதும் அவள் அப்படி எண்ணியே பெருமிதம் கொண்டிருக்க, “ஆனா நிலா மாதிரி ஒரு தோழி எல்லா நிருவுக்கும் கிடைக்க மாட்டங்க யாஷு…!” என்று அவன் நிறுத்தினான்.
“ம்!” என்று கண்கலங்க அவனைப் பார்த்து தலையசைத்தவள், “நம்ம குழந்தை நிச்சயமா நீங்க ஆசைப்பட்ட மாதிரி நல்ல ஆரோக்கியத்தோடவே பிறக்கும் நிரு… கவலைப் படாதீங்க!” என்று அவனைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டாள்.
இரு ஜோடிகளில் ஒரு ஜோடி காதலோடும், ஒரு ஜோடி ஊடலோடும், உறக்கத்தைத் தழுவியிருக்க, விரைவில் அவர்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று வாழ்த்திவிட்டு, நிலவும் வானும், காற்றும் கடலும் ஒன்றோடு ஒன்று உரசியபடி தங்கள் காதல் காவியத்தில் திளைக்கத் துவங்கின.
மறுநாள் காலை, எப்போதும் போல் அல்லாமல், சோர்வு மிகுதியால் நிலா சற்று நேரம் கழித்தே எழ, ரஞ்சன் அதற்குள் குளித்துவிட்டு வந்து தயாராகிக் கொண்டிருந்தான்.
அவள் எழுந்துவிட்டதை உணர்ந்த ரஞ்சன், “குட் மார்னிங் பேபி… போய் பிரஷ் அப் பண்ணிட்டு வந்து அந்த ஜீசைக் குடி!” என்றான் உற்சாகத்துடன்.
“ம்ம்!” என்று அவனை முறைத்தவள், படுக்கையிலிருந்து வேகமாய் எழ,
“ஏய் பொறுமை பொறுமை! எதுக்கு இவ்ளோ வேகம்?! பொறுமையா குளிச்சு ரெடியாகி வா..!” என்றவன், அவள் முறைத்துக் கொண்டே நிற்பதைக் கண்டு,
“முடியலைன்னா சொல்லு பேபி நானே…!” என்று ஏதோ சொல்ல வர,
“போதும்..!” என்று கையமர்த்தித் தடுத்தவள், தனது உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் சென்றாள்.
அவள் குளித்துவிட்டு வந்ததும், ரஞ்சன் பழச்சாறை எடுத்து அவளிடம் நீட்ட, “எனக்கு தேவையானதை சாப்பிட எனக்குத் தெரியும்!” என்று அவள் தன் பாட்டிற்குக் கிளம்ப,
“நான் உன்கிட்ட பெர்மிஷன் கேட்கலை குடிக்கச் சொன்னேன்!” என்று அவன் தனது பெல்ட்டை ஃபேன்ட்டில் மாட்டியபடியே சொல்ல,
‘குடிக்கலைன்னா என்ன பண்ணுவானாம்?’ என்று அவள் அவனை கொஞ்சமும் மதிக்காமல் இருக்க,
அவன் பழச்சாறை எடுத்து வந்து வலுக்கட்டாயமாக அவளுக்குப் புகட்டப் போக, “சே… சாப்பிடறதுல கூட நிம்மதியில்லை!” என்று எரிச்சலுற்றவள்,
“கொடுத்துத் தொலை!” என்று வெறுப்புடன் அதனை வாங்கி அருந்த, குடித்த சில நொடிகளையே அதை வாந்தி செய்தாள்.
அவள் வேதனையைக் கண்டு ரஞ்சன் மனம் வருந்தி நிற்க, “இப்ப சந்தோஷமா?!” என்றாள் வியர்த்திருந்த தன் முகத்தைத் துடைத்த வாரே.
அவள் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சில நிமிடங்களில் யாருக்கோ போன் செய்தவன், அவளருகே வந்து, “என்னம்மா.. ரொம்ப டயர்டா இருக்கா?” என்று கரிசனமாக வினவ, ஓர் அலட்சியப் பார்வையை அவன்மேல் வீசிவிட்டு கண்களை மறுபடியும் மூடிக் கொண்டாள்.
சில நிமிடங்கள் அவள் அருகிலேயே அமர்ந்திருந்தவனை வேலை அழைக்க, “நிலா… கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடும்மா… பதினொரு மணிக்குத்தான் டாக்டரை பார்க்கிறதுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைச்சிருக்கு, அதுக்குள்ள எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு முடிச்சிட்டு வந்திடறேன்!” என்று அவன் சொல்ல,
அவன் வேண்டாம் என்று ஒரு புறம் நினைத்த மனம், அவன் தன்னை இந்த நிலையில் விட்டு விட்டு வெளியே செல்கிறானே என்று கோபமும் கொண்டது.