Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 1 1

அத்தியாயம் 1

பரந்து விரிந்த ஆரண்யத்தின்

அதிபதியே என் மனம் கவரும்

வித்தையை எங்கு கற்றாய்?!!!



Advertisement

கதிரவனின் இதமான வெப்பம் பூமியை ஆக்ரமிக்க ஆரம்பிக்கும் அழகான இளங்காலைப் பொழுது. பல வீடுகளில் ஆண்கள் பரபரப்பாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க நைட் ஷிப்ட் முடித்து விட்டு எந்த பரபரப்பும் இன்றி வீட்டுக்குள் நுழைந்தான் மாதவன். அதுவும் சும்மா வரவில்லை. “அம்மா எங்க இருக்க? அக்கா எங்க இருக்க?”, என்று ஏலம் போட்டுக் கொண்டே வந்தான். 

Advertisement

“எதுக்கு டா ஏலம் விட்டுட்டே வர? அம்மாவுக்கும் அக்காவுக்கும் என்ன வச்சிருக்க?”, என்று கேட்ட படி சமையல் அறையில் இருந்து வந்தாள் அவனது அன்னை கீதா. 

Advertisement

அவன் சத்தம் கேட்டு அவனது அக்கா வனிதாவும் அவளது மகள் வைஷ்ணவியும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். 

Advertisement

அம்மா எனக்கு டிரன்ஸ்பர் கிடைச்சிருக்கு. நாளைக்கு நைட் நான் கிளம்பணும்”, என்று சொன்னான் மாதவன். 

கீதாவுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் வனிதா தன்னுடைய கணவன் கிருஷ்ணனுடன் சென்னையில் வசிக்கிறாள். அவர்களுக்கு வைஷ்ணவி என்ற ஆறு வயது மகள் இருக்கிறாள். இப்போது இரண்டாவது பிரசவத்துக்காக அன்னையின் வீட்டுக்கு வந்திருக்கிறாள் வனிதா. 

வனிதாவுக்கு அடுத்து பிறந்தவன் மாதவன். அவனுக்கு வயது இருபத்தி ஒன்பது. வனத்துறை அதிகாரியாக பணி புரிகிறான். கீதாவின் கணவர் ராஜேந்திரனுக்கு சொந்த ஊர் சத்யமங்கலம். அங்கே தான் அவர்களுக்கு நிலம் வீடு எல்லாம் இருக்கிறது. ஆனால் மாதவனின் வேலை காரணமாக எதையும் பராமரிக்க முடியாமல் கீதா நிலங்களை குத்தகைக்கு விட்டிருந்தாள். 

மகனுக்கு எங்கே வேலையோ அங்கேயே கீதாவும் சென்று விடுவதால் வீடு பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஈரோட்டில் இருந்து சத்யமங்கலத்துக்கு மாதவனுக்கு டிரான்ஸ்பர் கிடைத்தது. 

“அப்பாடி இனி சொந்த ஊரிலே இருக்கலாம்”, என்று சந்தோஷப் பட்ட கீதா ஊருக்கு வந்து சொந்த வீட்டை சீர் படுத்தி கடந்த இரண்டு வருடமாக மகனுடன் குடியிருக்கிறாள். 

இனிமே இங்கே தான் என்று அவள் சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கும் போது அவனோ டிரான்ஸ்பர் என்று வந்து நின்றான். அதனால் மகனை முறைத்துப் பார்த்தாள் கீதா. 

அன்னை முறைக்கவும் புரியாத பார்வை பார்த்த மாதவன் “எதுக்கு மா முறைக்கிற?”, என்று கேட்டான். 

“மாமா, ஆச்சி எதுக்கு உன்னை முறைக்கிறங்கான்னு தெரியலையா? டிரன்ஸ்பர் கிடைச்சு ஆச்சியை வெளி நாட்டுக்கா கூட்டிட்டு போக போற? ஏதாவது ஒரு காட்டுக்கு தான் கூட்டிட்டு போக போற? அதான் உன்னை பாசமா பாக்குறாங்க”, என்று தன்னுடைய மழலை மொழியில் சொன்னாள் வைஷ்ணவி. 

தன்னுடைய அக்கா மகளை தூக்கி மடியில் வைத்துக் கொண்டவன் “செல்லக் குட்டி உங்க ஆச்சி கிட்ட சொல்லுங்க. இந்த தடவை உன் ஆச்சியைக் நான் எந்த காட்டுக்கும் கூட்டிட்டு போகலை. நான் மட்டும் தான் போறேன். ஆச்சி உங்க கூட தான் இருப்பாங்க”, என்று சொல்லி அன்னையைப் பார்த்தான். 

“என்ன டா சொல்ற? நீ மட்டும் போறியா? அது எப்படி உன்னை மட்டும் தனியா அனுப்ப முடியும்?”, என்று கேட்டாள் கீதா. 

“அம்மா, உங்களுக்கு காடுன்னாலே அதிகம் பிடிக்காது. ஆனா எனக்காக பல ஊர்ல இருக்க ஒத்துக்கிட்டீங்க? உங்களுக்கு சொந்த ஊர் தான் பிடிக்கும்னு தெரியும். அதுக்கு தான் இங்க டிரான்ஸ்பர் கேட்டேன். இனி எங்கயும் மாத்த மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா இப்ப நீலகிரி பாரஸ்ட்க்கு மாத்திருக்காங்க மா. போஸ்டிங் கிரேட் கூடிருக்கு. சம்பளமும் கூடிருக்கு. நான் போயே ஆகணும். ஆனா நீங்க அக்காவை இந்த நிலைமைல விட்டுட்டு எப்படி வர முடியும்? அக்காவுக்கு அப்புறம் குழந்தையைப் பாக்கணும். வைசு குட்டி வேற இருக்கா. அதனால நீங்க இங்கயே இருங்க. நான் மட்டும் போறேன். கொஞ்ச நாள் வேலை பாத்துட்டு மறுபடியும் இங்கயே டிரன்ஸ்பர் கேக்குறேன்”

“எனக்காக இங்க இருந்தா உன்னை யாரு டா பாப்பா? என்னை என் மாமியார் பாத்துக்குவாங்க. நீ அம்மாவை கூட்டிட்டு போ. அங்க சாப்பாடுக்கு என்ன பண்ணுவ?”, என்று கேட்டாள் வனிதா. 

“இல்லைக்கா, உனக்கு துணைக்கு அம்மா இங்க கண்டிப்பா இருக்கணும். எனக்கு அங்க உள்ள நிலைமை எப்படின்னு தெரியலை. அதனால நான் போய் முதல்ல பாக்குறேன். பெரிய பொசிசன்ல போற எனக்கு சாப்பாடு தராமலா இருப்பாங்க? நான் பாத்துக்குறேன்”, என்று மாதவன் சொன்னதும் அரை மனதாக சம்மதித்தார்கள் கீதாவும் வனிதாவும். 

அடுத்த நாள் அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றான் மாதவன். அவன் போவது மலைப் பிரதேசம் என்பதால் பேருந்து வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது. கொண்டை ஊசி வளைவுகள் அவ்வளவு அழகாக இருந்தன. ஜன்னல் வழியாக இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தான் மாதவன்.  

மாதவன் மாநிறம் தான் என்றாலும் அழகான இளைஞன். அறிவும் நிமிர்வும் ஆண்மையும் கொண்டவன். இருபது வயதில் கல்லூரிப் படிப்பை முடித்தவன் ஒரு வருடம் கடுமையாக படித்து அரசாங்கப் பணியை வாங்கினான். அவன் அரசாங்க உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பது இறந்து போன அவனது தந்தையின் ஆசை. 

அவன் வனத்துறையை தேர்வு செய்தது வீட்டில் யாருக்கும் பிடிக்க வில்லை. ஆனால் அவன் அதை விரும்பினான். இந்த எட்டு வருடத்தில் பல ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைத்தது அவனுக்கு. ஒவ்வொரு இடத்திலும் ரசித்து வேலை செய்தான் மாதவன். 

நெடுநெடுவென உயரமும் கட்டுமஸ்தான உடல் அழகும் கொண்டவன். ஒளிரும் கண்கள், கூர் நாசி, அழுத்தமான உதடுகள் என அனைத்தும் அவனை பேரழகனாக காட்டியது. ஆனால் அவனுடைய அழகைப் பற்றிய எந்த கர்வமும் தலைக்கணமும் அவனிடம் கிடையாது. சிறு சிரிப்புடன் இயற்கையை ரசித்தவாறே வந்தான். 

எங்கும் இருந்த பசுமை அவன் கண்களுக்கு விருந்தாக இருந்தது. ஒவ்வொரு இடத்தையும் பார்க்க பார்க்க அவன் மனதுக்கு இதமாக இருந்தது. ஜில்லென்ற தென்றல் அவன் முகத்தில் வந்து மோதி அவனை வேறொரு உலகத்துக்கு அழைத்து சென்றது. 

வெண் மேகங்கள் வான் பாதையில் ஊர்வலம் போய்க் கொண்டு இருந்தன. ஓங்கி உயர்ந்த மரங்கள், புதர்ச் செடிகள், பசுமையான புல்வெளிகள், ரப்பர் தோட்டங்கள், தேயிலைச் செடிகள், பலா மரங்கள் அனைத்துமே அந்த மலையை அழகுறச் செய்தது. மலைப்பிரதேசம் என்பதால் குளிர் சற்று அதிகமாக இருந்தது. 

அவன் வருவதாக ஏற்கனவே தகவல் சொல்லியிருந்ததால் அவனை அழைக்க பஸ் ஸ்டாண்ட்க்கே ஜீப் வந்தது. மாதவனின் பையை வாங்கிக் கொண்ட ஜீப் டிரைவர் “வாங்க சார், நீங்க வருவீங்கன்னு சூப்பரின்டெண்ட் ஐயா கால் பண்ணிச் சொன்னார். அதான் உங்களைக் கூப்பிட வந்தேன்”, என்று சொல்லிக் கொண்டு முன்னே நடந்தான்.  

“உங்க பேர் என்ன?”, என்று கேட்ட படி அவனுடன் நடந்தான் மாதவன். 

“என் பேர் வெற்றி சார். இனி நான் தான் உங்களுக்கு ஜீப் டிரைவர். இனி எங்கன்னாலும் உங்களுக்கு துணைக்கு நான் தான் வருவேன். எனக்கு சொந்த ஊர் மதுரை பக்கம் சார். எட்டு வருஷமா இங்க தான் இருக்கேன். மனைவி பிள்ளைங்க எல்லாம் ஊர்ல தான் இருக்காங்க. ஏறுங்க சார் போகலாம்?”, என்று சொன்னதும் மாதவனும் ஜீப்பில் ஏறி அமர்ந்தான். 

“உங்களுக்கும் குவாட்ரஸ் இருக்குமே? பேமிலியையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்ல?”, என்று கேட்டான் மாதவன். 

“அதை ஏன் சார் கேக்குறீங்க? முதல்ல வரோம் வரோம்னு எல்லாம் சொல்லுச்சிக. சரினு சொல்லி லீவுக்கு கூட்டிட்டு வந்தா நாலு நாள்ல இருக்க மாட்டோம்னு ஓடிட்டாங்க. அது மட்டுமில்லாம பிள்ளைங்களுக்கு பள்ளிக்கூடம் போக இங்க தோது இல்லை சார்”

“அப்ப குவாட்ரஸ்ல யாரும் பேமிலியோட இல்லையா?”

“இருக்காங்க சார். ஆனா பள்ளிக்கூடம் போற மாதிரி யாரும் இல்லை. இங்க உங்களையும் சேத்து நம்ம டிப்பார்ட்மெண்ட்ல இருந்து ஆறு பேர் தங்கிருக்கோம். நாலு பேர் குடும்பத்தோட இருக்காங்க. அவங்க அம்மா அப்பா கூட, தங்கச்சி கூட, இன்னொருத்தர் அத்தை கூட தங்கிருக்காங்க. ஒருத்தர் கல்யாணம் ஆன புது தம்பதி, மிச்ச இருக்குற இன்னொரு ஆள் உங்களை மாதிரி சின்ன பையன் தான் சார். எங்க எல்லாருக்கும் சமைக்கிறதுக்கு வீடு கிளீன் பண்ணுறதுக்கு ஒரு அம்மா அந்த மலை கிராமத்துல இருந்து வரும். நாளைல இருந்து உங்களுக்கும் அவங்களே சமைச்சு தருவாங்க”

“சரி வெற்றி. வீடு எப்படி? சொல்லிக்கிற மாதிரி இருக்கா?”, என்று கேட்டான் மாதவன். 

“வசதி எல்லாம் இருக்கு சார். ஆனா வீடு இருக்குற ஏரியா தான் கொஞ்சம் ரிஸ்கான ஏரியா. நான் வேலை பாத்த மத்த இடத்துல எல்லாம் காடு தனியா இருக்கும். குவாட்ரஸ் தனியா இருக்கும். ஆனா இங்க காட்டோட எண்ட்ரன்ஸ்ல தான் வீடு. அது தான் கொஞ்சம் பயம். எப்ப எந்த விலங்கு வரும்னு தெரியாது. அந்த சமையல் கார அம்மா இங்க பக்கத்துல ஒரு அருவி இருக்கு. அந்த அருவியை தாண்டி விலங்குகள் வராதுன்னு சொல்றாங்க. ஆனாலும் அப்ப அப்ப கொஞ்சம் பயம் தான்”

“இவ்வளவு நாள் இங்க வேலை பாத்தும் உங்களுக்கு பயம் போகலையா வெற்றி?”

“என்ன செய்ய சார்? உயிர் முக்கியம் ஆச்சே?”

“அந்த அம்மா இங்க தான் தங்கியிருப்பாங்களா?”

“ஆமா சார், அதுக்கு சொந்தம்னு யாரும் இல்லை. அதனால எப்பவும் இங்க இருக்குறவங்களுக்கு சமைச்சு கொடுக்குற வேலை செய்றாங்க. நாங்க மாசம் ஆளுக்கு ரெண்டாயிரம்னு கொடுப்போம். அது கூட வேண்டாம்னு தான் சொல்லும். என்னோட வீட்டுல தான் தங்கியிருக்காங்க. முதல்ல வெளி வராண்டால தான் தங்கிருந்தாங்க. நான் வந்த அப்புறம் என் வீட்டுல ஒரு சின்ன ரூம் எக்ஸ்ட்ரா இருந்துச்சு. அதுலே தங்கிக்கச் சொல்லிட்டேன்”, என்று சிரித்த வெற்றி ஒரு இடத்தில் ஜீப்பை நிறுத்தினான். 

அந்த இடத்தை ஆவலாக பார்த்தான் மாதவன். “இது தான் சார் நாம தங்க போற இடம். இதோ இந்த வீட்ல தான் நீங்க தங்கப் போறீங்க? நீங்க வருவீங்கன்னு நேத்தே சுத்தம் செஞ்சிட்டோம். அதோ அது தான் என் வீடு. ஏதாவது வேணும்னா சத்தம் கொடுங்க வரேன். இப்ப மணி அஞ்சு தான் ஆகுது. ஆனா இருட்டப் போகுது பாருங்க. இன்னைக்கு உங்களுக்கும் சேத்து அந்தம்மாவை செய்ய சொல்லிறேன் சார்”

“வேண்டாம் வெற்றி, அம்மா சாப்பாடு கட்டிக் கொடுத்து விட்டுட்டாங்க. நாளைக்கு பாத்துக்கலாம்”

“சரி சார் ரெஸ்ட் எடுங்க. மத்தவங்களை எல்லாம் நாளைக்கு அறிமுகப் படுத்துறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான் வெற்றி. 

வீட்டுக்குள் சென்ற மாதவன் அந்த வீட்டை ஒரு முறை வலம் வந்தான். சின்னதாக இருந்த வரவேர்ப்பறை, ஒற்றை படுக்கை அறை, சமையல் அறை என எளிமையாக அதே நேரம் அழகாக இருந்தது அந்த வீடு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!