Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 1 2

அதிலும் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்திருந்ததால் வீட்டுக்குள் வந்த காற்று அவன் உடலை மட்டும் அல்ல மனதையும் மயக்கியது. அவனுக்கு இந்த வீடும் இடமும் அதிகமாக பிடித்து விட்டது. 

அதன் பின் அங்கிருந்த பெட்ரூமுக்குள் நுழைந்தவன் தன்னுடைய உடைமைகளை அடுக்கி விட்டு துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றான். குளித்து முடித்து ஒரு லுங்கியை எடுத்து அணிந்தவன் அன்னை கொடுத்து விட்டிருந்த சப்பாத்தியை எடுத்து உண்டான். 

பின் ஒரு போர்வையை எடுத்து அங்கிருந்த ஸ்டீல் கட்டிலில் விரித்தவன் இன்னொரு போர்வையை எடுத்து தலைக்கு வைத்து படுத்து விட்டான். 



Advertisement

அன்று முழுவதும் வந்த பயண அலுப்பு அவனை சிறிது நேரத்தில் தூக்கத்துக்கு அழைத்துச் சென்றது. சுற்றிலும் இருந்த அதிக மரங்களால் அங்கே எந்த மின் விசிறியும் தேவை இருக்க வில்லை. 

Advertisement

அடுத்த நாள் காலை பறவைகளின் கீச் கீச் சத்தத்தில் கண் விழித்தான் மாதவன். அந்த ரம்மியமான காலை அந்த காட்டை இன்னும் அழகாக்கி காட்டியது. காலைக் கடனை முடித்து விட்டு மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்தான். 

Advertisement

மண்ணில் இருந்த லேசான ஈரப்பதம் அவன் காலை மட்டும் அல்ல அவன் உடலுக்கும் ஒரு வித குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியும் தந்தது. 

Advertisement

காட்டுப் பூக்களின் வாசனை அவன் மனதை மயக்க ஆரம்பித்தது. அந்த சுகந்தமான வாசனையை அனுபவித்தவனின் மனதில் எல்லையில்லா அமைதி ஒன்று குடியேறியது.

“சார் எந்திரிச்சிட்டீங்களா? புது இடம் நல்லா தூங்குனீங்களா?”, என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான் மாதவன். 

அங்கே ஒரு புதியவன் நிற்கவும் “ஆமா, நீங்க…?”, என்று கேள்வியாக இழுத்தான். 

“என் பேர் ராம் சார். இது தான் என்னோட முதல் போஸ்டிங். இங்க ஜூனியர் கிரேட்ல இருக்குறேன்”, என்று ராம் சொல்லிக் கொண்டிருக்க இன்னும் நாலு பேர் அங்கே வந்தார்கள். அங்கே வந்த வெற்றி மற்றவர்களை அவனுக்கு அறிமுகப் படுத்தினான். 

அவர்களும் அவனிடம் தங்களைப் பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் சொந்த பந்தங்கள் எல்லாம் இன்னும் எழுந்து கொள்ள வில்லை என்று சொன்னார்கள். 

பின் மற்றவர்கள் எல்லாம் தங்களின் வீட்டுக்குள் புகுந்து கொள்ள வெற்றி மட்டும் அவனிடம் நின்று பேசிக் கொண்டிருந்தான். 

“நம்மளோட வொர்க் ஏரியா எங்க இருக்கு வெற்றி?”, என்று கேட்டான் மாதவன். 

“இந்த வீடுகளுக்கு பின்னாடி ஒரு குடவுன் இருக்கு சார். அங்க தான் எல்லாரும் கூடுவோம்”

“இதுவே பயங்கரமான காடா இருக்கு. அப்புறம் இங்க யார் வந்து என்ன தப்பு செய்யப் போறாங்க? எதுக்கு நம்மளை இங்க போட்டுருக்காங்க?”

“காரணம் இல்லாம அரசாங்கம் செய்யுமா சார்? இந்த காட்டைச் சுத்தி நிறைய கிராமங்கள் இருக்கு சார். கிராமத்துல இருக்குற எல்லாரும் குசும்பு பிடிச்சவங்களாச்சே. என்னையும் சேத்து தான் சொல்றேன். தேன் எடுக்குறோம், மரம் வெட்டுறோம், டூர் போறோம்னு சொல்லி கூட்டாளிகளா சேந்து இங்க வந்துறாங்க சார். அப்புறம் பாத்தா ஏதாவது விலங்குகள் கிட்ட மாட்டி இரண்டு போயிறாங்க. நிறைய உயிர் இழப்பு ஆனதுனால தான் கவர்ன்மெண்ட் வனத்துறையை இங்க போட்டாங்க. நம்ம கேட் தான் எண்ட்ரன்ஸ். நம்மளைத் தாண்டி யாரும் உள்ள போக முடியாது. அது மட்டும் இல்லை இந்த காடே மூலிகைகளால் நிறைஞ்சதாம் சார். இன்னும் வரப் போற வருசத்துல பெரிய ஆராய்ச்சி மையம் இந்த காட்டுக்கு நடுவுல வைக்கப் போறாங்களாம்”

“இங்க எந்த விலங்குகள் அதிகம் வெற்றி? நீங்க எதையாவது பாத்துருக்கீங்களா?”

“நீலகிரில வரையாடு அதிகம் சார். அருவிக்கு தண்ணி குடிக்க வர வரையாட்டைப் பிடிக்க இந்த காட்டுல புலி நடமாட்டம் அதிகம் இருக்கு. இப்ப எல்லாம் மக்கள் ஆடுகளை இந்த பக்கம் விடுறது இல்லை. பக்கத்துல இருக்குற அருவிக்கு ஒரு தடவை போனப்ப புலியையும் கரடியையும் பாத்துருக்கேன் சார்”

“அருவிக்கு போறது ஆபத்து இல்லையா?”

“இல்லை சார். அருவிக்கு கீழே தண்ணீர் ஆறு மாதிரி ஓடுது. அதைத் தாண்டி விலங்குகள் வராது. நமக்கும் விலங்குகளுக்கும் அந்த அருவி தான் தடுப்புச் சுவர். ஆனா அந்த தண்ணிக்கு அந்த பக்கம் போக நினைச்சா கண்டிப்பா ஆபத்து தான். அதை தவிர நிறைய மலைப்பாம்பு அலையுதுங்க சார். அதை நினைச்சு தான் பயம். இது வரைக்கு நானே அஞ்சு தடவை பாத்துருக்கேன். நம்ம சத்தம் கொடுத்தா அது ஓடிருது. ஆனாலும் கொஞ்சம் பயம் தான். கன் எப்பவும் லோட்லே தான் வச்சிருக்கணும். அதுங்களைக் கொல்லுறதுக்கு இல்லை. நம்மளைத் தாக்க வரும் போது சுட்டா அந்த சத்தத்துக்கு ஓடிரும்ல, அதுக்கு தான். சே நீங்களே எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆள். உங்க கிட்ட போய் விளக்கிட்டு இருக்கேன் பாருங்க”, என்று தலையில் தட்டிக் கொண்டான் வெற்றி. 

“வேற காட்டுல எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு வெற்றி. ஆனா எனக்கு இங்க நீங்க தான் பாஸ். இந்த காட்டைப் பத்தி உங்களுக்கு தான் தெரியும். சரி நான் கொஞ்சம் காலார நடந்துட்டு குளிக்க போறேன். மேலிடத்துல இருந்து எப்ப வேணும்னாலும் விசிட் வருவாங்க. அதனால சரியா ஒன்பது மணிக்கு எல்லாரும் யூனிபார்ம் மாட்டிரணும்”, என்றான் மாதவன். 

“சரி சார், ரொம்ப தூரம் நடக்காதீங்க. வேற பக்கம் போயிட்டா வழி மாறக் கூட சான்ஸ் இருக்கு”

“அதான் அருவி இருக்கே?”

“அருவி இருக்குறது இந்த பக்கம் சார். நான் சொல்றது அதுக்கு ஆப்போசிட்ல சொல்றேன். அந்த பக்கம் பெரிய காடு இல்லை. இருந்தாலும் அந்த பக்கம் போறதும் ரிஸ்க் தானே? எங்க இருந்து என்ன வரும்னு தெரியலை”

“சரி வெற்றி”, என்று சொன்ன மாதவன் சிறிது தூரம் காட்டைச் சுற்றிப் பார்த்தான். பின் வீட்டுக்கு வந்தவன் குளித்து கிளம்பி ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பிரட்டை உண்டு விட்டு அவர்களுக்கு ஆபீஸ் போல இருந்த ஒரு அறையை நோக்கி நடந்தான். அங்கே அவனுக்கு முன்பே மற்றவர்களும் இருந்தார்கள். 

அன்றைய நாள் முழுக்க அந்த காட்டைப் பற்றி மற்றவர்களுக்கு என்ன எல்லாம் தெரியும் என்று கேட்டு அனைத்தையும் தன்னுடைய மனதுக்குள் பதிவேற்றிக் கொண்டான். அவர்களுடன் அமர்ந்து உணவு உணடான். வருணின் அம்மா அப்பாவிடம் பேசினான். விஷ்ணுவின் மனைவியிடமும் மரியாதை நிமித்தம் பேசினான். சந்தோஸின் அத்தை மற்றும் கிரியின் தங்கை, சமையல்காரப் பாட்டி அனைவரும் அவனிடம் பேசினார்கள். அவன் அனைவரிடமும் இயல்பாக உரையாடியது அவர்களுக்கும் நிம்மதியை தந்தது. 

புது அதிகாரியின் குணம் எப்படி இருக்குமோ என்று பயந்தவர்கள் இப்போது நிம்மதி அடைந்தார்கள். வெற்றியும் மற்றவர்களும் சிறிது தூரம் ஜீப்பில் காட்டைச் சுற்றிக் காண்பித்தார்கள். 

அன்று மதியத்துக்கு மேல் வெற்றியை அழைத்து “சில பொருள்கள் வாங்கணும் வெற்றி, போகலாமா?”, என்று கேட்டான். 

ஜீப்பை எடுத்து வந்த வெற்றி மற்றவர்களிடமும் ஏதாவது வாங்க வேண்டுமா என்று கேட்டுக் கொண்டான். அதன் பின் வெற்றியும் மாதவனும் ஜீப்பில் கிளம்பினார்கள். 

கிட்டத் தட்ட அரை மணி நேரம் சென்றதும் “இந்த இடம் பேர் கொங்கணி சார். இங்க தான் இன்னைக்கு சந்தை. உங்களுக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோங்க. அப்படியே வேற ஏதாவது வேணும்னாலும் நாம டவுனுக்கு போகும் போது வாங்கிக்குவோம். அங்க போக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். ஒரெடியா டவுனுக்கே போயிரலாமா?”, என்று கேட்டான் வெற்றி. 

“இன்னைக்கு டைம் ஆச்சு வெற்றி. இங்கயே வாங்கிக்கலாம்”, என்று சொல்லி இறங்கினான் மாதவன். எல்லா விதமான பொருள்களை குவித்து வைத்து அங்கே சந்தை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. 

தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த சற்று நேரத்தில் இருட்டி விட்டது. பின் வெற்றி கொண்டு வந்து கொடுத்த உணவை உண்டு விட்டு படுத்து விட்டான். 

அடுத்த நாள் காலை குக்கூ குக்கூ என்ற இனிமையான சத்தத்தில் கண் விழித்தான் மாதவன். முகத்தைக் காட்டாமல் தன்னுடைய இசையை மட்டும் பறைசாற்றிக் கொண்டிருந்தது குயில். அந்த சத்தத்தின் இனிமையில் அவன் மனம் மயங்கியது. 

மெதுவாக எழுந்து வெளியே வந்தான். ஒரு வித குளிர் அவன் உடலை வருடிச் சென்றது. “என்ன சார் வாக்கிங் கிளம்பிட்டீங்களா?”, என்று கேட்டான் வருண். 

“ஆமா வருண்”

“ரொம்ப தூரம் போக வேண்டாம் சார். வழி மாறி போயிருவீங்க”

“சரி வருண், இங்க டவர் எங்க கிடைக்கும்? வீட்டுக்கு போன் பேசணும்”

“இந்த பக்கம் போனீங்கன்னா அருவி பக்கத்துல ஒரு உயரமான பாறை இருக்கும். அதுல ஏறி நின்னா கிடைக்கும் சார்”, என்று அவன் சொன்னதும் அந்த பாறையை நோக்கி நடந்தான் மாதவன். 

அந்த அடர்த்தியான காட்டின் அமைதி அவனை என்னவோ செய்தது. இன்னும் சற்று தள்ளி செல்லும் போது அங்கே ஒரு அருவி இருந்தது. அதன் பேரிரைச்சலில் ஒரு வித உயிர்ப்பு இருப்பதை உணர்ந்தான். தன்னுடைய போனை எடுத்து அந்த இயற்கை காட்சிகளை போட்டோ எடுத்து கொண்டான். 

அருவியை இன்னும் நெருங்கிய போது அழகான காட்டு முயல்கள் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது அந்த காட்சியைப் பார்க்க ரம்மியமாக இருந்தது. பின் அந்த பாறையில் ஏறி அம்மா அக்கா வைஷ்ணவியிடம் பேசினான். பின் கிருஷ்ணனுக்கு அழைத்து பேசினான். அனைவரிடமும் பேசியதும் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைத்தது போல இருந்தது. 

வனதேவதை வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!