Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Enaik Kollum Vanathevathai

Enaik Kollum Vanathevathai 4 3

கலங்கிச் சிவந்த கண்களை வைத்து தன்னைப் பார்ப்பவளைக் கண்டு பாவமாக இருந்தாலும் “என்ன?”, என்று கோபமாக கேட்டான். அடுத்த நொடி அவன் முன்பு அவனுடைய புகைப்படத்தை நீட்டினாள்.

புருவச் சுளிப்போடு அதைப் பார்த்தான் மாதவன். “இதை தான் நான் நேத்து எடுத்துட்டு போனேன். இதைக் கொடுக்க தான் இன்னைக்கு வந்தேன்”, என்று கண்களில் நீர் வழிய எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவள் அதை அங்கிருந்த டேபிளில் வைத்தாள்.



Advertisement

“என்னது?”, என்று அதிர்ந்து போனான் மாதவன். சத்தியமாக அவள் எடுத்தது தன்னுடைய புகைப்படமாக இருக்கும் என்று அவன் ஒரு சதவீதம் கூட எதிர் பார்க்கவே இல்லை.

ஏதோ அவன் கோபமெல்லாம் வற்றி ஏதோ ஒரு பெரிய பாரம் அகன்றது போல இருந்தது அவனுக்கு. “நான் செஞ்சது தப்பு தான். நான் ஏன் இப்படிச் செஞ்சேன்னு எனக்கே தெரியலை. அதனால தான் அதைக் கொடுக்க வந்தேன். என்னை மன்னிச்சிருங்க. நான் பெரிய திருடி எல்லாம் இல்லை. ஆனாலும் இது திருட்டுத் தனம் தான். இனிமே நான் இங்க வர மாட்டேன். உங்க முகத்துல விழிக்க மாட்டேன். நீங்க ரொம்ப நல்லவங்க. முடிஞ்சா என்னை மன்னிச்சிருங்க”, என்றவள் அங்கிருந்து செல்வதற்காக வாசல் பக்கம் திரும்பி நடந்தாள்.

Advertisement

Advertisement

அப்போது உள்ளே வந்த குச்சி அக்கா அழுவதையும் மாதவனின் திகைத்த தோற்றத்தையும் கண்டு குழம்பிப் போனான்.

“அக்கா என்ன ஆச்சு? எதுக்கு அழுற?”

Advertisement

“ஒண்ணும் இல்லை டா குச்சி. வா நாம போகலாம்”

“போகலாமா? நீ எதுக்கு அழுத? அதை முதல்ல சொல்லு”

புகைப்படம் திருடியதைச் சொல்ல மனதில்லாமல் அதே நேரம் மாதவன் அதை தம்பியிடம் சொல்லி விடுவானோ என்ற பயத்திலும் “கண்ணுல தூசி விழுந்துருச்சு டா குச்சி. நாம போகலாம் டா”,  என்றாள்.

“பொய் சொல்லாத. என்னன்னு தெரியாம நான் வர மாட்டேன். சார் அக்கா எதுக்கு அழுது? நீங்க எதுவும் சொன்னீங்களா?”, என்று நேரடியாக மாதவனிடமே கேட்டான் அந்த அன்புத் தம்பி.

“என்னை மன்னிச்சிரு குச்சி. உன் அக்காவை திட்டிட்டேன்”, என்ற குற்ற உணர்வுடன் சொன்னான் மாதவன். இப்போது அவன் பேசியது அவனுக்கே அதிகப் படியாக தோன்றியது.

“என்னன்னு சார் திட்டுனீங்க? எதுக்கு திட்டுனீங்க?”, என்று விடப் பிடியாய் கேட்டான் குச்சி.

திரும்பி நின்ற வனமங்கை மாதவனிடம் கண்களால் சொல்லாதே என்று கெஞ்சினாள். ஒரு அந்நிய ஆடவனின் புகைப்படத்தை அக்கா எடுத்திருக்கிறாள் என்று தெரிந்தால் புத்தி கூர்மை அதிகம் உள்ள தம்பி அதை எப்படி எடுத்துக் கொள்வான் என்று அவளுக்கு பயமாக இருந்தது.

ஆனால் மாதவனுக்கு அவள் கண்கள் பேசும் மொழி புரிய வில்லை. அவனிடம் இருந்த குற்றணர்வு அவள் விழி பேசும் மொழியை புரிய விட வில்லை.

அதனால் “திருடின்னு சொல்லிட்டேன் டா”, என்றான் மாதவன்.

“என்னது திருடியா? என் அக்காவையை அப்படிச் சொன்னீங்க?”, என்று கோபமாக கேட்ட குச்சி “காட்டுக்குள்ள வந்து எங்க அக்கா வந்ததுக்கு திருடின்னு சொல்லுவீங்களா? பல உயிரைக் காப்பாத்த அன்னைக்கு எங்க அக்கா மூலிகை பறிக்க தான் வந்தா. அவளை நீங்க பாத்துட்டீங்க. அது மட்டுமில்லாம என் அக்கா தாவாணியும் உங்க கிட்ட சிக்கிக்கிச்சு. அதுல என் அம்மாவோட தாலி இருக்கு. அந்த தாலி இப்ப உங்க கிட்ட தான் இருக்கு. அதை எடுக்க தான் நாங்க உங்க கூட பழகினோம். இதுல எங்க சார் திருட்டு இருக்கு? இது எங்க காடு சார். எங்க பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த இடம். மலைவாழ் மக்கள்ன்னு சொல்லி எங்களை ஒதுக்கி வச்சதும் இல்லாம நாங்க ஒதுங்கி வாழ்ந்துட்டு இருக்குற இடத்துக்கு வந்து வனத்துறைன்னு போட்டு இப்படி எங்களை வாழ விடாம பண்ணுற நீங்க தான் சார் திருடங்க. என் அக்கா கூட உங்க கிட்ட உண்மையை சொல்ல தான் சொல்லுச்சு. நீங்க தான் மூலிகை பறிச்சதை ஏதோ தீவிரவாதம் மாதிரி பேசுனீங்க. அதனால தான் நான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன். கடைசில உங்க புத்தியைக் காமிச்சிட்டீங்கல்ல? எங்க அக்கா அழுது நான் பாத்ததே இல்லை சார். இல்லாதவங்களுக்கும் தன் கிட்ட இருக்குறதைக் கொடுக்குறவங்க சார் நாங்க. அதான் நேத்து உங்க சாப்பாடை எங்களுக்கு நீங்க கொடுக்கப் சொன்னப்ப நீங்களும் எங்களை மாதிரி தான்னு நினைச்சு உங்களை எங்களுக்கு ரொம்ப புடிச்சது. நாங்க இன்னைக்கு இங்க வந்தது எங்க அம்மாவோட தாலியை வாங்க தான். ஆனா இதோ இந்த தூக்குச் சட்டில இருக்குறது உண்மையான அன்புல நாங்க உங்களுக்கு கொண்டு வந்தது சார். இனி நாங்க இங்க வர மாட்டோம். இனி நீங்க யாரோ நாங்க யாரோ. கடைசியா ஒரு உதவி. அந்த மாலையையும் என் அக்கா தாவாணியையும் கொடுத்துருங்க, நாங்க போறோம்”, என்ற ஆவேசமான பேச்சில் உண்மை அனைத்தையும் உளறி இருந்தான் குச்சி.

இவள் தான் அன்று பார்த்த பெண்ணா? அதனால் தான் அவளது கண்கள் தன்னைப் பாதித்ததா என்று அதிர்வாக வனமங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.

வனமங்கையோ குச்சி உண்மையைச் சொன்னதால் உள்ளுக்குள் சந்தோஷப் பட்டாள். கூடவே தம்பிக்கு தான் மாதவனின் புகைப்படம் எடுத்தது தெரியாமல் போனதும் அவளுக்கு நிம்மதியைத் தந்தது. அதனால் மௌனமாக நின்றாள்.

“என்ன சார் நான் சொன்னதை எதையும் நீங்கள் நம்பலையா?”, என்ற குச்சி தன்னுடைய அக்காவின் முகத்தை மறைத்திருந்த துணியை எடுக்க அவளது நிலா முகம் மாதவன் கண்களில் விழுந்தது.

“அவளே தான்”, என்று அவன் மனம் உற்சாகம் கொண்டது. ஏதோ தொலைந்த பொருள் கைக்குள் வந்தது போல ஒரு சந்தோஷமான உணர்வு அவனையே அறியாமல் அவனுக்கு வந்திருந்தது.

திகைப்புடன் வனமங்கை மாதவனை நிமிர்ந்து பார்த்தவள் பேச்சற்று போனாள். மாதவன் முகம் அவளுக்கு ஆயிரம் உணர்வலைகளை அவளுக்கு திருப்பிக் கொடுத்தது. “கடவுளே இவன் என்ன இப்படி பாக்குறான்? இவன் பார்வைக்கு அர்த்தம் என்ன? கண்டிப்பா கோபமோ வெறுப்போ இல்லை. ஏன்னா அது தான் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாத்தோமே? இது நிச்சயம் வேற தான்? இது என்ன?”, என்று தெரியாமல் திணறினாள் அந்த சிறு பெண்.

“சார் அன்னைக்கு நீங்க இவளைத் தானே பாத்தீங்க? அந்த தாலியைக் கொடுங்க சார், நாங்க போகணும்”, என்று குச்சி சொல்ல அதில் நடப்புக்கு வந்த மாதவன் வனமங்கையைப் பார்த்தான். அவன் பார்வையை தாங்க முடியாமல் அவள் தலை குனிந்து கொண்டாள். ஒரு பெருமூச்சொடு தன்னுடைய சட்டைப் பையில் இருந்த அந்த மாலையை எடுத்து குச்சியிடம் நீட்டினான்.

அதை அவன் கையில் இருந்து பறித்துக் கொண்ட குச்சி உள்ளறைக்குச் சென்று தன்னுடைய அக்காவின் தாவாணியையும் எடுத்து வந்தான். மாதவன் முகம் பார்த்தவன் “நீங்க நேத்து எங்களுக்கு உதவி செஞ்சீங்க. அதுக்கு கைமாறு தான் இது”, என்று சொல்லி அவர்கள் கொண்டு வந்த பாத்திரத்தைக் காண்பித்தவன் உதவிக்கு உதவி சரியாப் போச்சு. இனி நீங்க யாரோ நாங்க யாரோ? வாக்கா போகலாம்”, என்று சொல்லி விட்டு அவள் கையை பிடித்து இழுத்துச் சென்றான். மாதவனைத் திரும்பிப் பார்த்த படியே நடந்தாள் வனமங்கை.

நமக்கு பிடித்த ஒருவரை கடைசி முறையாக பார்க்க போகிறோம்  என்று தெரிந்து அவர்களை நம்முடைய இதயத்தில் படம் பிடிப்பதற்காக பார்ப்போமே, அப்படி ஒரு பார்வையை பார்த்த படியே சென்றாள் வனமங்கை.

அவளுடைய நேசப் பார்வையில் அவன் கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து கொண்டிருந்தான். அவளுடைய மொத்த நேசத்தையும் அந்த பார்வை அவனிடம் உரைக்க “ஐயோ கொல்லுறாளே?”, என்று முனங்கிக் கொண்ட படியே வெளியே வந்தான்.

அவர்கள் கண்ணில் இருந்து மறையும் வரை அவர்களையே அவன் பார்த்துக் கொண்டிருக்க அவளும் அவனைத் திரும்பி திரும்பி பார்த்த படியே சென்றாள்.

அவர்கள் கண்ணில் இருந்து மறைந்ததும் அறைக்குள் வந்தவனின் கண்களில் விழுந்தது டேபிளில் இருந்த அவன் புகைப்படமும் அவர்கள் கொண்டு வந்தவைகளும்.

அவனுடைய புகைப்படத்தை கையில் எடுத்துப் பார்த்தான். சில பல கசங்கல்களுடன் இருந்தது அது. அவளது வாசனை அதில் இருந்தது போல அவனுக்கு தோன்றியது. அதுவும் அந்த புகைப்படம் பத்திரமாக இருந்த இடத்தை கற்பனை செய்து பார்த்தவனின் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

கூடவே தன்னுடைய புகைப்படத்தை அவள் எடுத்துச் செல்ல வேண்டிய காரணத்தை உணர்ந்து கொண்டவனின் மனம் றெக்கையில்லாமல் வானில் பறந்தது.

“நான் பொய் சொல்லலை டி. உண்மைலே நீ திருடி தான். என்னையே மொத்தமா திருடிட்டுப் போன என் செல்லத் திருடி”, என்று புன்னகையுடன் முணுமுணுத்தவன் அவர்கள் கொண்டு வந்திருந்த பாத்திரத்தைத் திறந்து பார்த்தான்.

ஒரு பாத்திரத்தில் பாயாசமும் மற்றொன்றில் தேன் தட்டும் இருந்தது. அதில் அவர்களின் பாசமும் நேசமும் வெளிப்பட அவர்களை எப்படி சமாதானப் படுத்தப் போகிறேன் என்று முதல் முறையாக தடுமாறினான்.

உள்ளே இருந்து ஒரு டம்ளரை எடுத்து வந்தவன் அந்த பாயாசத்தில் கொஞ்சம் ஊற்றி குடித்தான். புது விதமாக இருந்த அந்த இனிப்பு அவன் தொண்டைக்குள் இதமாக இறங்கியது. தலையில் இருந்து கால் வரை ஒரு வித குளிர் பரவியது போன்று உணர்ந்தவன் கொஞ்சமே கொஞ்சம் தேனை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு மற்றதை அன்னமாவிடம் கொண்டு போய் கொடுத்தவன் மற்றவர்களுக்கு கொடுக்கச் சொல்லி விட்டு அறைக்குள் வந்து முடங்கி விட்டான்.

அரை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று எண்ணி வந்தவனுக்கு அதன் பின் வந்த நேரங்களில் எல்லாம் வனமங்கையின் நினைவுகளே.

வேலை நேரத்தில் இப்படி வந்து படுத்திருக்கிறோமே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் சிறிதும் அவனுக்கு இல்லை. அவன் நெஞ்சில் நின்றது எல்லாம் அவனது வனதேவதை மட்டுமே.

வனதேவதை வருவாள்…. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!