“ஓகே சார்”, என்று விஷ்ணு சொன்னதும் அவன் காதில் வந்து எதையோ ஓதி விட்டுச் சென்றான் ராகவன்.
சிதம்பரம் விஷ்ணுவைக் குழப்பமாக பார்க்க “ஒரே ஒரு பெர்பார்மன்ஸ் மட்டும் பாக்கி இருக்கு சார்”, என்றான் விஷ்ணு.
“எல்லாம் முடிஞ்சிருச்சே? வேற என்ன?”
“பர்ஸ்ட் இயர்ஸ்க்காக நாங்க தானே பெர்பார்ம் பண்ணினோம். இப்ப நமக்காக பர்ஸ்ட் இயர்ல இருந்து ஒரு பொண்ணு பாடப் போகுது”
“சூப்பர் விஷ்ணு, வரச் சொல்லு. இப்படி தான் ஜூனியர்சை என்கரேஜ் பண்ணனும்”, என்று சொன்னார் சிதம்பரம்.
“தேங்க் யு சார்”, என்று சொன்ன விஷ்ணு “ஹலோ பிரண்ட்ஸ், கடைசி பெர்பார்மன்ஸ் பாத்துட்டு நாம வீட்டுக்கு போகலாம். இவ்வளவு நேரம் உங்களுக்காக நாங்க எல்லாரும் சேர்ந்து செய்த பெர்பார்மன்ஸ் பாத்தீங்க. அது கொஞ்சம் போர் அடிச்சிருக்கும்ல? அதனால இப்ப உங்கல்ல ஒருத்தர் வந்து இங்க பாடப் போறாங்க”, என்றான் விஷ்ணு.
முதலாம் வருட மாணவர்கள் யாருக்குமே அவ்வளவு பெரிய கூட்டத்தில் மேடையில் ஏறி பாட தைரியம் இல்லை. யாராக இருக்கும் என்று அனைவரும் திரும்பி திரும்பிப் பார்க்க “கம்ப்யூட்டர் பிரிவு முதலாம் ஆண்டு மாணவி ஸ்ருதி மேடைக்கு வந்து எங்களுக்காக ஒரு பாடல் பாடவும்”, என்று அறிவித்தான்.
தன்னுடைய பெயர் கேட்டதும் அதிர்ந்து போனாள் ஸ்ருதி. இது கட்டாயம் ராகவன் வேலை தான் என்று புரிந்தது. “கடவுளே என்ன இவன் இப்படி பண்ணிட்டான்?”, என்று அவள் அதிர்ந்து விழிக்க “ஏய் ஸ்ருதி, போ டி. உன்னைத் தான் கூப்பிடுறாங்க. நீ நல்ல பாடுவேன்னு என் கிட்ட கூட சொல்லலைப் பாத்தியா?”, என்று சொன்னாள் அவள் அருகில் அமர்ந்திருந்த அவளது தோழி வைஷ்ணவி.
“எனக்கு எல்லாம் பாடத் தெரியாது டி வைஷு. என் பேரை எதுக்கு அனோன்ஸ் பண்ணுறாங்கன்னு தெரியலை. நீ அமைதியா இரு. யாரும் போகலைன்னா எல்லாரும் மறந்துருவாங்க”, என்று சொல்லி அவள் கமுக்கமாக இருக்க “ஸ்ருதி மேடைக்கு வரவும்”, என்று மீண்டும் அறிவித்தான் விஷ்ணு.
“கடவுளே”, என்று அவள் நடுங்க “ஸ்ருதி மேல வா மா. இங்க இருக்குற எல்லாரும் உன்னோட பிரண்ட்ஸ் தானே? எதுக்கு பயம்? இப்பவே தைரியமா இருந்தா தான் காலேஜ் முடிச்சு போகும் போது நல்ல எதிர்காலம் அமையும். தைரியமா வா”, என்று சிதம்பரம் சொல்ல அதற்கு மேல் அமர்ந்தால் மரியாதையாக இருக்காது என்பதால் எழுந்தாள்.
“ஹே”, என்று அனைவரும் கரகோஷம் எழுப்ப தர்ம சங்கடத்துடன் மேடையில் ஏறினாள். மேடைக்குச் சென்றதும் தயக்கமாக தான் இருந்தது. அவள் அருகில் வந்து அவளிடம் மைக்கை நீட்டிய விஷ்ணு “நீ நல்லா பாடுவேன்னு உன் மேல நம்பிக்கை வச்சு உன் பேரைச் சொல்லச் சொன்னது ராகவன் தான். அவன் பேரை மட்டும் இல்லை. உன்னோட மரியாதையையும் காப்பாத்த வேண்டியது உன்னோட பொறுப்பு. நல்லா பாடு”, என்று முணுமுணுத்து விட்டுச் சென்றான்.
ராகவன் பேரை அவன் சொன்ன பிறகு அதற்கு மேல் அவள் எப்படி பாடாமல் இருப்பாள்? முகத்தில் புன்னகையை பூசிக் கொண்டு “ஹலோ பிரண்ட்ஸ், இந்த வாய்ப்பு கொடுத்த சார்க்கு என்னோட நன்றி. திடீர்னு பாடச் சொன்னதுனால என்னால பாட்டு டிசைட் பண்ண முடியலை. அதனால கொஞ்சம் மட்டும் பாடுறேன். பிளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க”, என்று சொன்னவள் தூரத்தில் நின்றிருந்த ராகவனைப் பார்த்து பாட ஆரம்பித்தாள்.
“உயிரின் உயிரே… உனது விழியில்…”, என்ற பாடலைப் பாட ஆரம்பித்தாள். எப்படி பாடப் போகிறாளோ என்று அனைவரும் எண்ண அவளுடைய குரல் கேட்டு அனைவரும் உறைந்து தான் போனார்கள்.
ராகவனை அவளது குரல் மட்டும் அல்லாமல் அதில் இருந்த வார்த்தைகளும் அதிகம் பாதித்தது. அவளையே புண் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை அவன் கவனிப்பதே பெரிய பாக்கியம் என்று எண்ணி சந்தோஷமாக பாடினாள்.
பாடி முடித்ததும் அனைவரும் கை தட்டினார்கள். “சூப்பரா பாடின நம்ம ஸ்ருதிக்கு ஒரு ஓ போடுங்க”, என்று விஷ்ணு மைக்கில் அறிவிக்க ‘ஓ’ என்று கூச்சல் கேட்டது.
“தேங்க் யு”, என்று சொல்லி விட்டு ஸ்ருதி மைக்கை விஷ்ணுவிடம் நீட்ட “கொஞ்சம் இரு மா”, என்றார் சிதம்பரம்.
அவள் குழப்பமாக அவரைப் பார்க்க “சார் பங்ஷன் முடிச்சிக்கலாமா?”, என்று கேட்டான் விஷ்ணு.
“பொறு விஷ்ணு. இன்னும் ஒரு முக்கியமான வேலை இருக்கு”, என்று சொன்ன சிதம்பரம் மைக்கின் முன் வந்து நின்றார். நிறைவு பேச்சை அவர் பேசப் போகிறார் என்று அனைவரும் அவரைப் பார்க்க “ஸ்ருதியோட பாட்டைக் கேட்டு மயங்காதவங்க யாருமே இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அப்படி இருக்குறப்ப ஸ்ருதியை இந்த ஒரே பாட்டோட அனுப்பினா நல்லாவா இருக்கும்? அதனால நமக்காக ஸ்ருதி இன்னொரு பாட்டு பாடுவாங்க”, என்று அறிவித்தார்.
அனைவரும் சந்தோஷமாக கை தட்ட திகைத்து போய் நின்றாள் ஸ்ருதி. சார் வேண்டாமே என்று அவள் கெஞ்ச “கவலைப் படாதே மா. உன்னை மட்டும் தனியா பாடச் சொல்லுவேனா?”, என்று அவரிடம் கேட்டவர் “இந்த நிகழ்ச்சியின் கடைசி பெர்பாமன்ஸாக ஸ்ருதி மற்றும் ராகவன் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடுவார்கள்”, என்று அறிவித்தார்.
ராகவன் சிரிப்புடன் மேடை ஏற ஸ்ருதியோ அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். கை தட்டல் அரங்கை நிறைத்தது. அவர்கள் பாடுவதற்கு முன்பாவே அனைவரும் உற்சாகமாக இருந்தார்கள். மேடை ஏறிய ராகவனிடம் மைக்கை நீட்டிய விஷ்ணு “விதி வலியது மச்சான். எஞ்சாய்”, என்றான்.
மைக்கை வாங்கிய படி ஸ்ருதியை நோக்கி வந்தான். அவள் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க “கடவுளே இவ பார்வையில் மயங்காம இருக்கணும். என்னைக் காப்பாத்து. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இவளுக்கு நான் மட்டும் தான் கண்ணுக்கு தெரிவேனா?”, என்று எண்ணியவன் அவள் அருகில் வந்து “ஒரு பாதி கதவு பாட்டு பாடலாம்”, என்றான்.
அவளுக்கு அந்த பாட்டு தெரியுமா? அதில் இருக்கும் வரிகள் தெரியுமா என்றெல்லாம் அவன் யோசிக்கவே இல்லை. அவளோ “எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்னு இவங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று குழம்பி போய் நின்றாள். ஸ்ருதி அவனுடைய வீட்டுக்குச் சென்ற போது இந்த பாட்டை ரசித்துக் கேட்டதை பார்த்ததால் தான் அதைச் சொன்னான்.
“ஸ்ருதி, டைம் ஆகுது பார்”, என்று அவன் சொல்ல அவசரமாக அவனிடம் இருந்து பார்வையைப் பிரித்தாள். ஆனாலும் அவன் தன்னை பெயர் சொல்லி அழைத்தது பிடித்திருந்தது.
இருவரும் சேர்ந்து அந்த பாடலை பாட ஆரம்பிக்க அனைவருமே அவர்களின் குரலில் மயங்கித் தான் போனார்கள். எந்த விதமான இசையும் இல்லாமலே அவர்கள் பாடிய பாடல் அனைவரையும் கட்டிப் போட்டது.
இருவரும் முடிக்கும் போது கனவில் இருந்து விழிப்பவர்கள் போல அமர்ந்திருந்தார்கள். சிதம்பரம் மேடை ஏறி பேச ஆரம்பித்தார். அவர்கள் இருவரின் பாட்டை பாராட்டியவர் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
ஸ்ருதி தயக்கமாக அவனை ஏறிட அவனோ அவளை திரும்பிக் கூட பார்க்காமல் வெளியே ஓடி விட்டான். அது வரை இருந்த உற்சாகம் வடிந்தது ஸ்ருதிக்கு.
வேகமாக வந்த ராகவனோ சிதம்பரத்தை தேடித் தான் சென்றான். தன் முன் மூச்சு வாங்க நின்ற ராகவனை சிறு சிரிப்புடன் ஏறிட்டார் சிதம்பரம்.
“ஏன் சார் இப்படி கோத்து விட்டீங்க?”
“நீ மட்டும் ஸ்ருதியை கோத்து விடலாமா?”
“சார் அவ நல்லா பாடுவா. அது எல்லாருக்கும் தெரியணும்னு தான் அவ பேரைச் சொன்னேன்”
“நல்ல வேலை பண்ணிருக்க ராகவா. அவளை உனக்கு தெரியுமா?”
“என் தங்கசிக்கு ஃபிரண்ட் சார். ஒரே ஸ்கூல் தான்”
“ஓ, ஆனா நான் ஒண்ணு சொல்லவா ராகவா”
“என்ன சார்?”
“உன்னோட குரல்ல இருக்குற உயிருக்கு ஜீவனா மாற அந்த பொண்ணால தான் முடியும். அவளை கெட்டியா பிடிச்சிக்கோ. உன்னோட ஆத்மா அந்த பொண்ணால மட்டும் தான் சந்தோஷப் படும். எனக்கு சொல்லணும்னு தோணுச்சு, சொல்லிட்டேன். சரி எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அவர் போன பிறகும் அவர் பேசியது அவன் காதில் விழுந்து கொண்டே இருந்தது.