“ஹாய் கைஸ்”, என்ற படி உள்ளே வந்த ராகவன் ஸ்ருதியை ஒரு பார்வை பார்த்து விட்டு புது புராஜெக்ட் பற்றி பேச ஆரம்பித்தான். புராஜெக்ட் பற்றி அவன் ஒவ்வொன்றாக விளக்கிய விதம், எப்படி செய்ய வேண்டும் என்று கொடுத்த குறிப்புகள், சில விளக்கங்களுக்கான எடுத்துக்காட்டுகள், அவனுடைய சரளமான ஆங்கிலப் பேச்சு அனைத்தையும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் பேவென்று அமர்ந்திருப்பதை பார்த்த ராம் “ஓய், சார் சொல்றதை நோட்ஸ் எடு. இப்படி உக்காந்துருக்க. வாய்க்குள்ள கொசு போகப் போகுது”, என்றான்.
Advertisement
அவனை முறைத்தவள் “போடா”, என்று சொல்லி விட்டு மீண்டும் ராகவனை சைட் அடிக்க ஆரம்பித்தாள்.
கடைசியாக ஆளுக்கு ஒரு பேப்பர் கொடுத்து அதில் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகள், எத்தனை நாளைக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்பது எல்லாமே போட்டிருந்தது. எல்லாருக்கும் தனித் தனியாக வேலையைப் பிரித்துக் கொடுத்தான்.
Advertisement
Advertisement
“இப்ப ஓரளவுக்கு உங்க எல்லாருக்கும் வேலை என்னன்னு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இன்னைல இருந்தே வொர்க் ஸ்டார்ட் பண்ணுங்க. ஏதாவது டவுட்டானா முதல்ல உங்களுக்குள்ள டிஸ்கஸ் பண்ணுங்க. உங்க யாருக்குமே அது புரியலைன்னா என் கிட்ட கேளுங்க. அப்புறம் தினசரி வேலையை என் கிட்ட ரிப்போர்ட் பண்ண மறக்க கூடாது. என் கிட்ட நேரா வந்து எக்ஸ்ப்பிலைன் பண்ணினாலும் சரி. இல்லை மெயில் பண்ணினாலும் சரி”, என்று முடித்தான்.
கடைசியில் அவர்களிடம் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்று கேட்க அனைவரும் தங்களுக்கு தோன்றியதைக் கேட்டார்கள். ஸ்ருதி அமைதியாக இருக்கவும் “உங்களுக்கு எந்த டவுட்டும் இல்லையா?”, என்று கேட்டான் ராகவன்.
Advertisement
“நீ பேசினதை கவனிச்சிருந்தா தானே டவுட் வரும்?”, என்று எண்ணிக் கொண்டு “நோ சார்”, என்றாள்.
அவளை வியப்பாக பார்த்தவன் “இவ அவ்வளவு ஜீனியஸா?”, என்று எண்ணிக் கொண்டு வெளியே சென்றான்.
அனைவரும் வேலை செய்து கொண்டிருக்க இவள் மட்டும் ஸிஸ்டமை வெறித்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். பின் ராம் அவளிடம் என்ன டவுட் என்று கேக்க “ஒண்ணுமே புரியலை டா”, என்றாள்.
“நீ ஈன்னு டீம் லீடரை பாக்கும் போதே நினைச்சேன், ஒண்ணும் கவனிச்சிருக்க மாட்டேன்னு. அதோ சேகர் இருக்கான் பார். அவன் கிட்ட கேளு. அவன் தான் சரியான மண்டை. உன் வேலையையும் சேத்து முடிப்பான்”, என்று சொல்ல அவள் சேகரை அழைத்தாள்.
“என்ன டவுட் ஸ்ருதி?”, என்று அவள் அருகில் சேரைப் போட்டு அமர்ந்த படி கேட்டான் சேகர்.
“எனக்கு ஒண்ணும் புரியலை சேகர். பிளாங்கா இருக்கு”
“பிளாங்க்கா இருக்கா? சார் தெளிவா சொன்னாங்களே?”
“அதை நான் கவனிக்கலையே?”
“கவனிக்காம என்ன பண்ணின?”
“வீட்ல நைட் என்ன சாப்பாடு இருக்கும்னு யோசிச்சேன். இப்ப இதைச் சொல்லித் தருவியா மாட்டியா?”, என்று கேட்டதும் சிறு சிரிப்புடன் அதை அவளுக்கு சொல்லிக் கொடுத்தான்.
அவளுடைய அன்றைய வேலையை எப்படி முடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு எழுந்தான். “தேங்க்ஸ்”, என்று ஸ்ருதி சொல்ல அவள் தலையில் செல்லமாக குட்டி விட்டு சென்றான். இதை எல்லாம் கவனித்த படி இருந்த ராகவன் சேகர் எழுந்து சென்றதும் அவளுடைய ஸிஸ்டம்க்கு “என்னோட கேபின்க்கு வா”, என்று மெஸ்ஸேஜ் அனுப்பினான்.
“டேய் ராம், இங்க பாரு ஏதோ வருது”, என்று அவள் கத்த “டிஎல் தான் உன்னைக் கூப்பிடுறார். என்னன்னு கேட்டுட்டு வா”, என்று சொன்னதும் படபடப்பாக அவன் அறைக்கு சென்றாள்.
“எக்ஸ்கியூஸ் மீ சார்”, என்று கேட்டுக் கொண்டே அவள் கதவைத் திறக்க அவனோ அவளைத் தீ பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். “இப்ப என்ன ஆச்சின்னு தெரியலையே”, என்று எண்ணிக் கொண்டு அவன் எதிரே சென்று நின்றாள்.
“ஆக நீ இங்க வேலை செய்ய வரலை. அப்படித் தானே?”, என்று கேட்டான். “ஐயோ பயபுள்ள கண்டு பிடிச்சிருச்சே. நான் இவனுக்காக தான் இங்க வேலைக்கு வந்தேன்னு இவனுக்கு தெரிஞ்சிருச்சா? ஆனா எப்படி?”, என்று எண்ணிக் கொண்டு தலை குனிந்து நின்றாள்.
“என்ன டி அமைதியா இருக்க? பதில் சொல்லு”, என்று அவன் கேட்க அந்த டி அவளுக்கு தித்தித்தது. “வேலை பாக்க வந்தா வேலையை மட்டும் பாக்கணும். ஆனா நீ இங்க நல்லா கடலை வருத்துட்டு இருக்குற?”, என்று கேட்டதும் குழப்பமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் குற்றம் சாட்டியது கோபத்தை தர “சேகர் கிட்ட டவுட் தான் கேட்டேன்”, என்றாள்.
“அந்த டவுட்டை என் கிட்ட கேக்க வேண்டியது தானே? போ போய் வேலையைப் பாரு”, என்று சொல்ல அமைதியாக திரும்பி நடந்தாள்.
“என்னைப் போய் எப்படித் திட்டிட்டான். இனி அவனை திரும்பி பாக்க கூடாது. அவனை நினைக்கவும் கூடாது”, என்று முடிவு எடுத்த்தாள். ஆனால் ஒரு நாள் கூட அவளால் அதை செயல் படுத்த முடியவில்லை. அவள் எடுத்த சங்கல்பம் எல்லாம் காற்றோடு கரைந்து போனது. அடுத்த நாள் அவன் எப்போது வருவான் என்று எண்ணி வாசலைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அவன் வந்ததும் அவள் கண்கள் மின்னியது. ஆனால் அவன் அவளைத் தேடும் போது தலை குனிந்து கொண்டாள். தன்னுடைய காதலை அவனிடம் வெளிப் படுத்தி விட அவளுக்கு தைரியம் இல்லை.
அவளுக்கு அவனைப் பிடிக்கும். அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் பார்ப்பாள். மற்ற படி அவனை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. அதற்கான தைரியமும் இது வரை வந்ததில்லை. அவளுடைய காதலுக்கு எதிர்காலம் இருக்கிறதா என்று கூட அவளுக்கு தெரியாது. ஆனால் அவன் தான் அவளுக்கு எல்லாமும்.
ஒரு நாள் காலையில் லிஃப்டுக்குள் சென்றாள் ஸ்ருதி. சிறிது நேரத்தில் ராகவனும் அங்கே வந்தான். அவனைக் கண்டதும் பயமும் படபடப்பும் கொண்டு அவனைப் பார்த்தாள்.
அவளது பயம் கூட அவளின் அழகை இன்னும் அதிகப் படுத்தி தான் காட்டியது. பயந்து நடுங்கும் மான் குட்டியைப் போல இருந்த அவளின் பார்வையை ரசித்தான் ராகவன். இப்படி ஒரு பயத்துடன் கூடிய அழகான பார்வையை அவனை நோக்கி வீசி வீசியே அவனை கொஞ்சம் கொஞ்சமாக சரணடைய வைத்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.
அஞ்சி நடுங்கி அவனைப் பார்த்த ஸ்ருதியைக் கண்டு அவன் மனது லேசாக அசைந்தது. கதாநாயகனைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னையே விழி விரித்து பார்த்ததில் சுவாரசியம் கூடியது அவனுக்கு.
அவன் விழிகளில் தெரிந்த மென்மையில் வியப்பு வந்தது ஸ்ருதிக்கு. அவன் புருவங்களை ஏற்றி இறக்கி அவளை கேள்வியாக பார்க்க அவனின் அந்த செயலில் சொக்கிப் போனாள். இந்த நொடிகள் கடக்கவே கூடாது என்று அவளுக்கு தோன்றியது.
அவன் அவளை நெருங்கி வந்தான். அவனுடைய அருகாமையில் அவள் உடல் நடுங்கியது,. பெண்மையின் மிளிர்வுடன் இருந்த அவளது அழகில் அவன் மனம் லயிக்க ஆரம்பித்தது. மற்ற ஆட்கள் வரும் அரவம் கேட்க அவளை விட்டு விலகியவன் போய் வருகிறேன் என்னும் விதமாய் தலையசைக்க அவன் விடை கொடுத்த அழகில் அவள் முகம் மேலும் மலர்ந்தது.
அன்று மாலை ராகவன் வீட்டுக்கு போன போது தேன்மொழி அவன் வரவைக் கூட உணராமல் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.
“இனி தான் டி வருவான். வந்த உடனே டீ குடிப்பான். அப்புறம் என் கிட்ட இல்லைனா அமர் கிட்ட ஏதாவது வம்பிழுப்பான். எங்களுக்குள்ள சண்டை வந்தாலும் ஜாலியா தான் இருக்கும்”, என்று தேன்மொழி சொல்ல ராகவனுக்கு தன்னைப் பற்றி தான் யாரிடமோ சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது.
“ஒரு வேளை அவளா இருக்குமோ?”, என்று எண்ணியவன் தேன்மொழி பேசுவதை வேடிக்கை பார்த்தான்.
அப்போது “தேனு இங்க வா”, என்று ராஜி அழைத்ததும் “அப்புறம் பேசுறேன்”, என்று சொன்ன தேன்மொழி போனை வைத்து விட்டுச் செல்ல அவசரமாக அதை எடுத்துப் பார்த்தான்.
ஸ்ருதி என்று அதில் இருக்க அவனுக்கு வந்தது கோபமா இல்லை, இதமா என்று புரியாத ஏதோ ஒரு உணர்வு அவனை ஆக்ரமித்தது.
அவளைப் பற்றி எண்ணிக் கொண்டே அவன் மாடிக்குச் செல்ல “ஆமாக்கா, வேலை முடிஞ்சு வந்துட்டான். டீ குடிக்கிறான்னு நினைக்கிறேன். நான் மேல இருக்குறேன். வண்டி சத்தம் கேட்டுச்சு”, என்று பேசிக் கொண்டிருந்தான் அமர்.
நிச்சயம் அமர் பேசுவது ஸ்ருதியிடம் தான் என்று புரிந்தது. “இப்ப தானே தேனு கிட்ட கேட்டா? மறுபடியும் இவன் கிட்டயா? என்னை பத்தி நினைக்கிறதை தவிர அவளுக்கு வேற வேலையே இருக்காதா?”, என்று வியப்பாக எண்ணிக் கொண்டான்.
அறைக்குள் வந்தவன் உடை மாற்றி விட்டு டீ குடித்தான். பின் அவளை நினைத்த படியே மியூசிக்கில் கான்செண்ட்ரேட் செய்தான்.