Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 17 1

அத்தியாயம் 17

வண்ணத்துப் பூச்சியின்

வண்ணங்களை உணர்ந்தேன்

உன் வெட்கத்தில்!!!



Advertisement

உடனே மதனை அழைத்து விட்டார். அதை எடுத்த மதன் “ஹலோ யாருங்க?”, என்று கேட்டார்.

Advertisement

“நான் நவீனோட அப்பா பேசுறேன்”

Advertisement

“நவீனா?”

Advertisement

“ஸ்ருதியோட அப்பா”

“ஸ்ருதி அப்பாவா? எப்படி இருக்கீங்க? ஸ்ருதி நல்லா இருக்காளா?”, என்று கேட்டார் மதன். 

“நல்லா இருக்கா. நான் இப்ப ஒரு முக்கியமான விஷயம் பேச தான் கால் பண்ணினேன். தேன்மொழி கல்யாண விஷயம் பேசணும்“

“தேனு, ஒரு பையனை விரும்புறா. அந்த பையன் அவ கூட தான் வேலை பாக்குறாராம். எங்களுக்கும் அவ ஆசை தான் முக்கியம்னு படுது. நீங்க ஏதாவது மாப்பிள்ளை பாத்துருக்கீங்களா?”

“இல்லை, என் பையனைத் தான் உங்க பொண்ணு விரும்புறா”

“என்னது தேன்மொழி விரும்புற நவீன் ஸ்ருதியோட அண்ணனா?”

“ஆமா”

“பாருங்களேன், இந்த பிள்ளைங்க சொல்லவே இல்லை”

“ஆமா எங்களுக்கும் இது அதிர்ச்சி தான். ஆனா பிள்ளைங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்”, என்றவர் மகனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே “எங்க பையனும் உங்க பொண்ணும் விரும்பிட்டாங்க. நாம தானே அவங்களை சேத்து வைக்கணும்”, என்றார்.

“ஆமா, எங்களுக்கும் முழு சம்மதம். நாம நேர்ல பேசலாமா?”

“அடுத்த வாரமே நல்ல நாளா பாத்து உங்க வீட்டுக்கு பெண் கேட்டு வரோம். சின்னதா நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம். கல்யாணம் கிராண்டா வச்சிக்கலாம்”

“இன்னும் என்ன சார்னு சொல்றீங்க? சம்மந்தின்னு சொல்லுங்க சம்பந்தி. எனக்கு பரிபூரண சம்மதம்”, என்றார் மதன். 

“சரி நான் அப்புறம் பேசுறேன் சம்பந்தி”, என்று சொல்லி போனை வைத்தார் தேவேந்திரன். அப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்தாள் ஸ்ருதி. 

அவளைக் கண்டு மூவரும் அமைதியாக அவளுக்கு குழப்பமாக இருந்தது.

“என்ன ஆச்சு? நான் வந்ததும் எல்லாரும் அமைதியா ஆகிட்டீங்க?”, என்று கேட்ட படி தந்தை அருகில் சென்று அமர்ந்தாள்.

“உன் கிட்ட நாங்க எல்லாம் சொல்லனுமோ? அது அவசியம் இல்லை தானே? நீ உள்ள போ”, என்று சொன்னதும் அவள் முகம் வாடியது. 

“ஒரு வேளை என்னோட கல்யாண விஷயம் பேசுறாங்களோ?”, என்று பயந்தும் போனாள்.

“அம்மா எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் மா. பிளீஸ் மா. அதைப் பத்தி மட்டும் பேச வேண்டாம்”, என்று அவள் கெஞ்ச முதல் முறையாக மகளைப் பற்றி சந்தேகம் வந்தது தேவேந்திரனுக்கு. அவளையே கூர்ந்து பார்த்தார். 

“இங்க பாரு, நான் உன் கிட்ட எதுவும் சொல்றதா இல்லை”, என்றாள் வேணி.

“அண்ணா பாருண்ணா, அம்மா எப்படிச் சொல்றாங்கன்னு. நானும் இந்த வீட்ல ஒருத்தி தானே? என்னை மட்டும் எதுக்கு ஒதுக்கி வைக்கணும்?”

“நீ எங்களை ஒதுக்கி வைக்கலையா ஸ்ருதி?”, என்று நவீன் கேட்க “அண்ணா”, என்று அதிர்ந்து போய் அழைத்தாள். 

“எங்களுக்கு தெரியாம சினிமால பாடுற அளவுக்கு பெரிய ஆளா ஆகிட்ட. அப்படி தானே மா?”, என்று தேவேந்திரன் கேட்கவும் அதிர்ந்து போனாள்.

“யார் இதை போட்டுக் கொடுத்ததுன்னு தெரியலையே?”, என்று அவள் விழிக்க மூவரும் அவளை முறைத்துப் பார்த்தார்கள். 

“அப்பா சாரிப்பா. அம்மா என்னை மன்னிச்சிரு. அண்ணா சாரிண்ணா. நான் வேணும்னு பண்ணலை. என்னையே அறியாம இப்படி நடந்துருச்சு”

“ஏன் ஸ்ருதி இதை எங்க கிட்ட மறைச்ச?”

“உங்களுக்கு இந்த பாட்டு பாடுறது எல்லாம் பிடிக்காதுன்னு நினைச்சேன் பா”

“நீ பாடின பாட்டுக்கு நேஷனல் அவார்ட் கிடைச்சிருக்காம். அதை யாரோ ஒருத்தர் மூலமா தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கு. நல்லா இருக்கு டி”, என்றாள் வேணி.

“அடுத்த வாரம் நீ அவார்ட் பங்ஷன் போகணும். உனக்கும் நவீனுக்கும் டிக்கட் போட்டுட்டாங்களாம்”, என்று தேவேந்திரன் சொல்ல “அப்பா சாரிப்பா”, என்றாள். 

“உன்னை நாங்க சுதந்திரமா தானே வளத்தோம் ஸ்ருதி. ஆனா நீ எங்க கிட்ட ஏன் உண்மையா இல்லை? உன்னோட வளர்ச்சி எங்களுக்கு பெருமை தானே? இன்னும் எத்தனை விஷயம் எங்க கிட்ட இருந்து மறைச்சிருக்க?”, என்று கேட்டார் தேவேந்திரன். 

“நான் மறைக்கணும்னு நினைக்கலைப் பா. என்னை தப்பா நினைச்சிறுவீங்களோன்னு பயம் அவ்வளவு தான்”

“எதுக்கு பயப்படனும்? தப்பு செஞ்சா தானே பயம் வரும். நீ என்ன தப்பு செஞ்ச?”, என்று கேட்டவர் அவளுடைய கண்ணைப் பார்த்தார். அவளுடைய கண்ணில் இருந்த அலைப்புறுதலில் அவர் புருவம் உயர்ந்தது. 

அவளை சோதிக்கவே “நாளைக்கு ஆஃபிஸ்க்கு லீவ் போடு. உன்னை பொண்ணு பாக்க வராங்க”, என்றார். அதைக் கேட்டு அவள் முகத்தில் வந்து போன அதிர்ச்சியைப் பார்த்தவருக்கு நிச்சயம் அவள் மனதில் யாரோ இருக்கிறார்கள் என்று புரிந்தது. 

“ஒரு வேளை அது ராகவனா இருக்குமோ? ஸ்ருதி மனசு தெரிஞ்சு தான் ராகவன் அப்படிக் கேட்டானா?”, என்று எண்ணியவர் மகளையே பார்த்தார். 

கண்கள் கலங்கிய படி அவள் அப்படியே அமர்ந்திருக்க “நாளைக்கு தயாரா இரு”, என்றார். வேணியும் நவீனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

தங்கை அழுவது மனதை அசைக்க “அப்பா முதல்ல அவார்ட் பங்ஷன் முடியட்டும். அப்புறம் பாத்துக்கலாம்”, என்றான். அவரும் “சரி, பங்ஷன் முடிஞ்சதும் நிச்சயமே வச்சிக்கலாம்”, என்றார். தற்காலிகமாக கிடைத்த சந்தோசத்துடன் அறைக்குச் சென்றாள் ஸ்ருதி. 

அதே நேரம் ராகவனோ “ஸ்ருதி வீட்டில் அவளிடம் திருமணம் பற்றி பேசி இருப்பார்களா? அவள் பதில் என்னவாக இருக்கும்? என்னால் ஸ்ருதியை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. அவ எனக்கு வேணும்”, என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த மதன் “ஸ்ருதி அப்பா பேசினாங்க டா. நவீன் தேன்மொழி கல்யாணம் விஷயம் பேசினோம். அடுத்த வாரம் என்கேஜ்மெண்ட் வச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க. தேன்மொழி கிட்ட இப்ப சொல்ல வேண்டாம். அவளுக்கு ஷாக் கொடுப்போம்”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

அவர் பேசியதில் இருந்தே தேவேந்திரன் தேன்மொழி நவீன் திருமணம் பற்றி மட்டும் தான் பேசி இருக்கிறார் என்று புரிந்தது ராகவனுக்கு.

“ஏன் ஸ்ருதி அப்பா எங்க கல்யாணம் பத்தி பேசலை? அவங்களுக்கு என்னைப் பிடிக்கலையா? இல்லை நான் பொண்ணு கேட்டது பிடிக்கலையா? ஸ்ருதியை எனக்கு கட்டித் தர மாட்டாங்களா?”, என்று கவலை கொண்டான்.

அதே நேரம் தேன்மொழியோ வீட்டில் திருமணம் விஷயம் பேசாததால் நிம்மதியாக இருந்தாள். என்ன தான் நவீனிடம் ஜோஷப்பை திருமணம் செய்வேன் என்று சொல்லி விட்டாலும் ஜோஷப்பிடம் அதை அவள் பேச எண்ணவே இல்லை.

அவளைக் கண்டதும் நவீன் வேறு முகத்தை திருப்பிக் கொண்டு செல்வது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அவனுடைய பாராமுகம் வதைக்கும் போது தான் அவன் எந்த அளவுக்கு அவள் மனதில் மையம் கொண்டிருக்கிறான் என்ற உண்மையே அவளுக்கு புரிந்தது. 

அவன் நினைவில் தேன்மொழி உண்ணாமல் உறங்காமல் இருக்க அவள் மனதிலும் நவீன் மீது காதல் மலர்ந்திருப்பது புரிந்தது. நவீனிடம் அவள் எவ்வளவோ பேச முயற்சி செய்தாலும் அது நடக்க வில்லை. சரி நடப்பது நடக்கட்டும் என்று கடவுளிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டாள். 

அடுத்த நாள் ஸ்ருதி அலுவலகம் சென்றதும் அவள் நேராகச் சென்று நின்றது ராகவன் முன்பு தான். எப்போதும் போல் அவனைக் கண்டு அவள் பேசத் தயங்க “என்ன ஸ்ருதி?”, என்று கேட்டான்.

“யாரோ நான் பாடினதை வீட்ல சொல்லிட்டாங்க. அம்மா அப்பா ரொம்ப திட்டிட்டாங்க. அந்த பாட்டுக்கு நேஷனல் அவார்ட் கிடைச்சிருக்காம். என்னை போகச் சொல்றாங்க”

“சாரி என்னால தானே உனக்கு திட்டு விழுந்தது?”, என்று உண்மையான வருத்தத்துடன் கேட்க “பிளீஸ் நீங்க என் கிட்ட சாரி கேக்க கூடாது”, என்றாள் ஸ்ருதி.

அவள் அப்படிச் சொன்னதும் ஒரு சுவாரசியம் எழ “என் மேல தானே தப்பு ஸ்ருதி? அப்ப நான் சாரி கேட்டே ஆகணும்”, என்றான். 

“நீங்க தப்பே பண்ணினாலும் சாரி கேக்க கூடாது”, என்று சொல்ல அவளுடைய காதல் அவனை சுகமாக தாலாட்டியது. அவன் தான் அந்த உண்மையை அவளுடைய வீட்டில் சொன்னது என்று அவளுக்கு தெரியவில்லை என்று புரிந்து கொண்ட ராகவன் அவளிடம் உண்மையைச் சொல்ல வில்லை. அது அவசியம் இல்லை என்று விட்டுவிட்டான். 

“நான் இப்ப என்ன பண்ணட்டும்? நீங்களே சொல்லுங்க”, என்று கணவனிடம் பேசுவது போல அவள் பேச அவன் மேனி சிலிர்த்தது. 

முன்பு போல “அதை ஏன் என் கிட்ட கேக்குற?”, என்று கேட்டு அவளை கஷ்டப் படுத்தாமல் “நீ டெல்லிக்கு போ. அவார்ட் வாங்கு. நான் சொன்னதை கேப்பேன்னு நினைக்கிறேன்”, என்றான்.

“ம்ம்”, என்று சொன்னவள் அவனையே பார்த்த படி இருக்க “இன்னும் என்ன?”, என்று கேட்டான்.

“நீங்க வருவீங்களா?”

“ஆமா, எனக்கும் டிக்கட் போட்டுட்டாங்களாம். தகவல் சொன்னாங்க”, என்று சொல்ல அவள் முகம் பூவாக மலர்ந்தது. அவள் முகத்தில் இருந்த தவிப்பு எல்லாம் மாயமானது. 

“அப்படின்னா சரி, நானும் வரேன்”, என்று சொல்லி அவள் புன்னகைக்க அவளது புன்னகை அவனை வாரி அடித்துச் சென்றது.

அவள் வேலையைப் பார்க்கச் செல்ல அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அதே நேரம் மகளின் அறையை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தார் தேவேந்திரன். 

அவருக்கு அவள் மனதை அறிய வெகு நேரம் தேவை இருக்க வில்லை. சில பொருள்களை ஆராய்ந்த உடனே தெரிந்து கொண்டார். ஆண்கள் அணியும் டீ ஷார்ட், கூலிங்க் கிளாஸ், அவனைப் பத்தி அவள் உருகி உருகி எழுதிய டைரி, ராகவனின் போட்டோ என அனைத்தும் சொன்னது அவளுக்கு ராகவன் மீது இருக்கும் காதலை. 

உடனே மதனை அழைத்து விட்டார். அதை எடுத்து “சொல்லுங்க சம்பந்தி”, என்றார் மதன். 

“நவீன் தேன்மொழிக்கு நிச்சயதார்த்தம் பண்ணும் போது ராகவன் ஸ்ருதிக்கு நிச்சயம் பண்ணிருவோமா?”

“என்ன சொல்றீங்க?”

“ஆமா அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்க?”

“அப்படியா? ராகவன் சொல்லவே இல்லையே?”, என்று அவர் கேட்க ராகவன் தங்கள் வீட்டுக்கு வந்து ஸ்ருதியை திருமணம் செய்ய கேட்டதைச் சொன்னார். 

“அவன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம் சம்பந்தி. ஸ்ருதி எங்களுக்கு மருமகளா வர நாங்க கொடுத்து வச்சிருக்கணும்”, என்றார் மதன். 

பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறதுல எங்களுக்கும் சம்மதம் தான் சம்பந்தி. இது கடவுள் போட்ட முடிச்சு போல?”, என்று கேட்டார் தேவேந்திரன்.

“ஆமா சம்பந்தி? இல்லைனா எதுக்கு நம்ம குடும்பம் ரெண்டும் மீட் பண்ணனும்?”

“ஆமா, அப்புறம் வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் வச்சிக்கலாமா?”

“அது வந்து சம்பந்தி வியாழக் கிழமை நைட் தான் ராகவன் விருது வாங்க போறான். அவன் இல்லாம நிச்சயதார்த்தம் பண்ணனுமா?”

“விருது வாங்கப் போறது என் பொண்ணும் தான் சம்பந்தி”

“என்ன சொல்றீங்க?”

“ராகவன் உங்க கிட்ட சொல்லலையா?”

“இல்லையே?”

“பிள்ளைங்களுக்குள்ள நிறைய நடந்துருக்கு சம்பந்தி. அதெல்லாம் ஒரு நாள் விவரமா பேசலாம்”, என்று ஆரம்பித்தவர் சுருக்கமாக எல்லாம் சொன்னார். பின் “ஸ்ருதியும் ராகவனும் சேர்ந்து மெடல் வாங்க போயிட்டு வரட்டும். நாம தேன்மொழி நவீன் நிச்சயம் வச்சிக்கலாம்”, என்றார். 

“அது வந்து சம்பந்தி, ராகவன் ஸ்ருதி இல்லாம இந்த நிச்சயம் வேண்டாமே? அவங்களும் இருந்தா தானே சந்தோஷமா இருக்கும்?”, என்று மதன் கேட்க “சரி அவங்க அவார்ட் வாங்கிட்டு வந்த பிறகு ரெண்டு ஜோடிக்கும் நிச்சயதார்த்தம் ஒன்னாவே வச்சிக்கலாம். இப்ப சம்மதம் தானே? ஆனா ஸ்ருதிக்கும் தேன்மொழிக்கும் நாம ஒரு சர்பிரைஸ் கொடுக்கணும். அதனால அவங்களுக்கு மட்டும் எதுவும் தெரிய வேண்டாம்”, என்றார் தேவேந்திரன். 

“டபுள் சந்தோஷம் சம்பந்தி. கண்டிப்பா நான் எதுவும் சொல்ல மாட்டேன். எங்க சின்ன பையனுக்கு கூட நாங்க சொல்லலை. அவன் சரியான ஓட்டை வாய். சரி நான் அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்தவர் தேன்மொழியை அழைத்தார் . 

“என்னப்பா?”

“நீ கூட என் கிட்ட இதை சொல்லலைல மா?”

“என்னங்க?”, என்று கேட்டாள் ராஜி.

“நான் எதைப்பா சொல்லலை?”, என்று கேட்டாள் தேன்மொழி.

“ராகவன் கூட சேந்து பாட்டு பாடி ஸ்ருதிக்கும் அவார்ட் கிடைக்க போகுது. அதை நீ சொல்லலைல? போ மா”, என்று சொல்லி விட்டு அவர் செல்ல விக்கித்து போய் நின்றாள் தேன்மொழி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!