Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 2 4

அவன் அருகில் நின்றவள் ஏறி இறங்கும் நெஞ்சத்தையும் படப்படப்பையும் கட்டுக்குள் கொண்டு வர போராடிய படி அவனைப் பார்த்தாள்.

அவளுடைய போராட்டத்தைப் பார்த்தவனுக்கு சட்டென்று என்ன பேச என்று கூட தெரிய வில்லை. அதனால் “என்ன நீ மட்டும் நிக்குற? தேனு ஏங்க?”, என்று கேட்டான்.



Advertisement

“தேனு பாத்ரூம் போயிருக்கா. இப்ப வந்துருவா”, என்று தயங்கிய படியே சொன்னாள். கூடவே இதுக்காகவாது தன்னிடம் பேசினானே என்று அவளுக்கு சந்தோசமாக இருந்தது.

Advertisement

அவள் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க “உன் பாட்டு நல்லா இருந்துச்சு”, என்றான்.

Advertisement

அதைக் கேட்டு அவள் சொர்க்கத்தில் மிதந்தாள் என்று சொன்னால் சரியாக இருக்கும். அவள் முகத்தில் அப்படி ஒரு பரவசம். அதைக் கண்டவனுக்கு ஒரு மாதிரி ஆனது. இப்படி அவளிடம் தன்னைக் கோர்த்து விட்ட வாசுவை எண்ணி பல்லைக் கடித்தான்.

Advertisement

அதனால் “சரி போ”, என்று சொல்லி அவளை இங்கிருந்து போக வைக்க முயன்றான்.

அவளோ அங்கிருந்து செல்லாமல் தயக்கமாக அவனைப் பார்த்தாள்.

“என்ன?”, என்று அவன் புருவம் உயர்த்த “நீங்க தானே மதன்ராஜ்? நீங்க தானே காலை காற்றே அப்புறம் வேற பாட்டை எல்லாம் பாடினீங்க?”, என்று கேட்டாள் தேன்மொழி.

அவன் அவளை வியப்பாக பார்த்தான். யாருமே இதைக் கண்டு கொள்ள வில்லையே. இந்த சிறு பெண் எப்படி கண்டு பிடித்தாள் என்பதே அவனது யோசனை.

அவன் அவளையே பதில் சொல்லாமல் பார்த்துக் கொடிருக்க “என்னால அதை உணர முடியுது. கண்டிப்பா அது நீங்க தான். அந்த பாடல்கள்ல இருக்குற ஜீவனை இன்னைக்கு நீங்க பாடும் போது உணர்ந்தேன். ரெண்டு குரலும் ஒண்ணும் தான்”, என்று ஆணித்தனமாக சொன்னாள்.

“என்ன உளறுற? என்ன பாட்டு? யாரு மதன்ராஜ்? நான் எப்பவுமே ஸ்கூல்ல பாட்டு பாடுவேன். அதே மாதிரி தான் இன்னைக்கும் பாடினேன். வேற ஒண்ணும் இல்லை. நீ தேவையில்லாம பேசாத”

“இல்லை, அது நீங்க தான். கண்டிப்பா அந்த குரல் உங்களோடது தான்”

“சும்மா உளறிட்டு இருக்காத? இங்க இருந்து போ முதல்ல?”, என்று சற்று சூடான குரலில் சொன்னான்.

“அது நீங்க தான்னு சொல்லுங்க. நான் போறேன்”

“இல்லாததை ஆமானு எப்படி சொல்ல முடியும்? முதல்ல இங்க இருந்து போ. எனக்கு உன் கிட்ட பேசப் பிடிக்கலை”, என்று பட்டென்று சொன்னான். அப்படியாவது அவள் இங்கிருந்து செல்வாள் என்று எதிர் பார்த்தான்.

அவளோ “நீங்க சொன்னா தான் போவேன். பிளீஸ் சொல்லுங்க”, என்று நிலையாக நின்றாள்.

“இப்ப போகப் போறியா இல்லையா?”

“முடியாது”

“ஓஹோ எனக்கு இப்ப தான் தெரியுது. அந்த பாட்டை நான் தான் பாடினேன்னு நீ கேக்குறதுக்காக இங்க நிக்கலை. அதை சாக்கா வச்சிட்டு என் கிட்ட வேற ஏதோ எதிர் பார்க்குற? அப்படித் தானே?”, என்று அவள் மேல் குற்றம் சுமத்தினான்.

“வேற எதுவோவா? வேற என்ன?”

“பொம்பளைங்க எதுக்கு அலையுவாங்கன்னு தெரியாதா?”, என்று அவன் நக்கலாக கேட்க அவளுக்கு எதுவும் புரியவே இல்லை. அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“முதல்ல என்னை இரிடேட் பண்ணாம இங்க இருந்து போ. இல்லை தேன்மொழி பிரண்டுன்னு கூட பாக்க மாட்டேன்”

“நீங்க தான் அந்த பாட்டை பாடினதுன்னு ஒத்துக்கவே மாட்டீங்களா? பிளீஸ் என் கிட்ட மட்டும் சொல்லுங்க. நான் வேற யார்க் கிட்டயும் சொல்ல மாட்டேன். உங்க அப்பா பேர் மதன். அம்மா பேர் ராஜி. அப்படின்னா அது நீங்க தான்”, என்று அவள் சொல்ல சுற்றி இருந்த ஆட்களைப் பார்த்தான் ராகவன்.

சில பேர் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தனர். சிலர் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். ஆங்காங்கே இருட்டாக இருந்தாலும் இவர்கள் இருக்கும் இடத்தில் லேசாக வெளிச்சம் இருந்தது.

“ஏன் டி இப்படி படுத்துற? இப்ப என்ன உனக்கு வேணும்? முத்தம் தானே? அதைக் கொடுத்தா இங்க இருந்து போயிருவ தானே?”, என்று கேட்டவன் அவள் கை பற்றி இழுத்துக் கொண்டு கிரவுண்டுக்குள் நுழைந்தான். சுற்றி இருள் போர்வை போர்த்தி இருக்க அவள் முகம் நோக்கி குனிந்தான். அவள் வாயைப் பிளந்து கொண்டு அவனை அதிர்ச்சியாக பார்க்கும் போதே அவள் உதடுகளை சிறை செய்து விட்டான்.

அவளுடைய இதழ்களில் தன்னுடைய இதழ்களை ஆழப் புதைத்தவன் சற்று முரட்டுத் தனமாக அவள் இதழ்களைச் சுவைத்தான். முதல் தீண்டலில் கரைந்து கொண்டிருந்தாள் ஸ்ருதி.

அந்த நொடி இருவருக்குமே உறைந்து விட்டது போல தான் தோன்றியது. ஸ்ருதியோ அப்படியே அசையாமல் இருந்தாள். அவளுக்கு புதிதாக பிறந்தது போல சந்தோஷமாக இருந்தது. உடலில் இருந்த ரத்தம் முழுவதும் அவள் முகத்துக்கு பாய்வது போல இருந்தது. கையில் இருந்த முடிகளெல்லாம் அவன் முத்தத்தால் சிலிர்த்துக் கொண்டது.

‘அவனை விலக்கு’ என்று மூளை கட்டளை இட்டாலும் அவளால் அதற்கு அடி பணிய முடியவில்லை. அவன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் அவனை உதறித் தள்ளியதோடு மட்டும் அல்லாமல் அவனை கட்டாயம் அடித்திருப்பாள்.

கோபத்தில் முத்தமிட்ட ராகவனுக்கோ அவளை அப்படியே அள்ளிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. முதல் முத்தத்தில் அவனுடைய உணர்வுகள் எல்லாம் புதிதாக பிறந்தன. அவன் மனம் உல்லாச வானில் சிறகடித்துப் பறந்தது.

சிறிது நேரம் கழித்து அவளை விட்டு விலகியவன் “இதுக்கு தானே என் கிட்ட வழிஞ்சிட்டு நின்ன? இப்ப நிம்மதியா? முத்தம் மட்டும் போதுமா? இல்லை வேற எதுவும் வேணுமா? எங்கயாவது ரூம் போடவா? அதுக்கு தானே என்னை வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்க?”, என்று கேட்டவன் அவளை மீண்டும் நெருங்க கண்ணீருடன் அங்கிருந்து ஓடி விட்டாள்.

அவள் அங்கிருந்து சென்று விட்டாலும் அவளுடைய கண்ணீர் சுமந்த முகம் அவன் நெஞ்சில் அப்படியே பதிந்தது. இதை அவள் தேன்மொழியிடம் சொல்லி அதை அவள் வீட்டில் சொல்லி விடுவாளோ என்று உள்ளுக்குள் பயமாக இருந்தது.

பின் அதை அப்போது பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டு அமைதியாக நின்றான். அவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவர். அதில் ஒரு ஆள் வாசு.

அவன் ஸ்ருதியிடம் பேசுவானா மாட்டானா என்பதைக் கவனிக்க தான் ஒளிந்திருந்தான். அதே போல அவன் அழைத்ததையும் ஸ்ருதி அவனை நோக்கிப் போனதையும் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ தன்னால் ஆன உதவி என்று எண்ணி சந்தோஷப் பட்டுக் கொண்டான்.

ஆனால் அதன் பிறகு ராகவன் அவளை இருளுக்குள் அழைத்துச் சென்றதும் அவசரமாக அங்கே ஓடினான். அங்கே கண்ட காட்சியில் திகைத்து நின்று விட்டான் வாசு. ராகவன் அப்படி நடந்து கொள்வான் என்று அவன் கனவிலும் நினைக்க வில்லை. இருட்டில் அவனுக்கு எதுவும் தெளிவாக தெரியாமல் போனாலும் மங்கலாக அனைத்தும் தெரிந்தது. அப்படியே அசைவற்று நின்று விட்டான்.

இந்த காட்சியைப் பார்த்தது தேன்மொழியும் தான். பாத்ரூம் சென்று விட்டு வந்தவள் கண்டது ஸ்ருதியும் ராகவனும் பேசுவதை தான். “இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறாங்களா? என்னைப் பத்தி தான் அண்ணா ஸ்ருதி கிட்ட கேட்டுட்டு இருக்கானா?”, என்று எண்ணி அவள் அவர்களை நோக்கிச் செல்ல ராகவன் அவளை இழுத்துக் கொண்டு செல்வது தெரிந்தது.

அதிர்ச்சியாக அவள் அங்கே செல்ல நடந்ததைப் பார்த்து அவளுக்கு மேலும் அதிர்ச்சி தான். தன்னுடைய அண்ணனா இப்படி என்று எண்ணி விக்கித்து போனாள். இனி ஸ்ருதியின் முகத்தில் எப்படி விழிப்பேன் என்று கவலையுடன் நின்றவளின் கண்ணில் ஸ்ருதி அழுத படி ஓடி வருவது தெரிய அப்போதைக்கு அவளை எதிர்க் கொள்ள தைரியம் இல்லாமல் ஒரு மரத்தின் பின்னே ஒளிந்தாள்.

“என்ன செய்து விட்டேன் நான்?”, என்று தலையில் அடித்த படி ராகவன் சைக்கிள் ஸ்டேண்ட் வர அப்போது தான் வருவது போல அவன் எதிரே வந்து நின்றாள் தேன்மொழி.

தன் மேல் இருந்த கோபம் அவள் மேல் திரும்ப “எங்க போய்த் தொலைஞ்ச?”, என்று தங்கையிடம் எரிந்து விழுந்தான் ராகவன்.

“பாத்ரூம் போயிருந்தேன்”, என்று அமைதியாகச் சொன்னாள் தேன்மொழி. அவளுக்கு அந்த நிமிடம் அவளுடைய அண்ணனைப் சுத்தமாக பிடிக்க வில்லை. அந்த கோபம் அவளுடைய பேச்சில் வெளிப் பட்டது. ஸ்ருதி கண்ணீருடன் அங்கிருந்து சென்றதே அவள் நினைவில் வந்தது. தோழியை அழ வைத்து விட்டவன் என்று எண்ணி அவன் மீது கோபத்தில் இருந்தாள்.

அவள் மனதில் இருக்கும் கோபத்தை உணராதவன் “சரி வா, நேரம் ஆகிருச்சு. வீட்டுக்கு போகணும்”, என்றான்.

“ஸ்ருதி எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா. நான் அப்புறம் வரேன். நீ போ”, என்று சொன்ன தேன்மொழி அவனுடன் செல்ல விரும்ப வில்லை.

“அவ இங்க இல்லை”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான் ராகவன்.

“அவ எங்க போனா? அங்க தான் நின்னா”, என்று அவனை நேருக்கு நேராக பார்த்துக் கேட்டாள்.

இசை தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!