ஆரம்பத்தில் ஒன்று தெரியாமல் விழித்தவனை.. ஒவ்வொரு பகுதியிலும் சிறிது காலம் வேலை பார்க்க வைத்து,
இன்று.. ஒரு துணி அங்கு வந்தால்.. அதை வெட்டி, முழு வடிவத்தை கொடுத்து முடிப்பது வரை.. அனைத்தையும் அவனால் செய்ய முடியும்.. என்ற நிலைக்கு மாற்றி வைத்தது தங்கமணி தான்.
Advertisement
இன்றைக்கு அவனுக்கு இருக்கும் திறமைக்கு.. தனியாக யூனிட் வைத்து நடத்தினால், இங்கு அவன் சம்பாதிப்பதை விட அதிகமாகவே அவனால் சம்பாதிக்க முடியும்.. எனும் வண்ணம் இருப்பினும், ‘செய் நன்றி..’ என்ற ஒன்றிற்காக அவன் அங்கேயே இருந்து கொண்டிருக்கிறான்.
இதில் தங்கமணிக்கு ஒரு புறம் வருத்தமும்.. அதே நேரம் பெருமையும் கூட..
Advertisement
Advertisement
அவனை நம்பி, எதையும் செய்யலாம்.. என்ற தைரியத்திலேயே மிகச்சிறிதாக இருந்த யூனிட்டை இன்று நூறு பேருக்கும் மேல் வேலை பார்க்கும் கம்பெனியாக்கியிருக்கிறார் தங்கமணி.
அவருக்கு இருக்கும் மனக்குறை ஒன்று என்னவென்றால், அவர் எத்தனையோ சொல்லியும், அந்த கம்பெனியின் ஒரு மூலையில்.. தான் வாங்கி கொடுத்த உடையோடு ஆரம்பத்தில் தங்கியவன், இன்று வரை தனியாக வீடு எடுக்காமல் அங்கேயே இருப்பது.
Advertisement
சின்னதாக இருந்த யூனிட்டை விரிவுபடுத்திய போது, ஒரு சிறு அறை போன்ற அமைப்பை உருவாக்கி அதனுள்ளே தான் இன்று வரை அவனின் ஜாகை.
அவன் வந்த புதிதில் அப்போது தான் அவர் பெரிய மகள் பெரிய பெண்ணாகியிருக்க, தன் வீட்டில் தங்கவைக்க முடியாது.. என்ற நிலை அவருக்கு..
வெளியே வீடு பார்த்து கொடுத்தால்.. வேலையே தெரியாத.. பதினெட்டு வயதை தாண்டாத பையனுக்கு செலவு செய்வது.. அவருக்கு பிரயோஜனமாக இருக்குமா..? என்ற சந்தேகம்.
அப்போது அவனை பற்றி முழுதும் அவருக்கும் தெரியாதே..!!
அவருக்கும் இன்று இருக்கும் பொருளாதார வசதி அன்று இல்லை. எல்லாம் தீனா வந்த பிறகு தானே சாத்தியமானது.
அவனிடம் தேன்றிய ஏதோ ஒரு ஈர்ப்பும்.. அவனின் தீட்சண்யம் கண்டு ஆர்வம் மட்டுமே அன்று அவரிடம்.
அதனால் அங்கேயே ஒரு ஓரமாக படுத்துக்கொண்டால்.. இரவு காவலுக்கு ஆள் இருந்தது போல இருக்குமே.. என்று ஆரம்பித்தது அந்த பழக்கம்.
நாளடைவில் அவனை பற்றி தெரிந்து.. அவரும் எத்தனையோ முறை சொல்லி பார்த்து, திட்டியும் அவன் முடிவில் மாற்றமின்றி போக, அவரே அவனுக்காக ஒரு வீட்டை பார்த்து அதை அவனிடம் கூட்டி சென்று காட்ட,
“கம்பெனிய விட்டு வெளிய போடா ன்னு நாசுக்கா சொல்றீங்களா ண்ணே..?” என்று அவரின் விழி பார்த்து தீர்க்கமாய் கேட்டவனுக்கு, ‘எப்படி சொல்லி புரிய வைப்பது..?’ என்றே தெரியவில்லை அவருக்கு.
“தீனா.. உனக்குன்னு நாளைக்கு ஒரு வாழ்க்கை வரும் போது, நீங்க இருக்க வீடு வேணாமா..?” என்று அவர் பொறுமையாய் சொல்ல,
விரக்தி சிரிப்போடு, “அப்படி ஒன்னு என் வாழ்க்கையில நடக்கவே போறது இல்லை.. அப்புறம் எதுக்கு வீணா..?” என்று சொல்ல,
“ஏன்டா.. உங்க வீட்டுல தான் உனக்கு ஒரு நல்லது பண்ணி வைக்க மாட்டாங்கன்னா.. நானுமா உன்னை அப்படியே விட்டுடுவேன்னு நினைச்சே..?
இப்பவே நிறைய இடத்துல சொல்லி தான் வச்சிருக்கேன். உனக்கென்னடா ராஜா மாதிரி இருக்கே..!
உன்னை கட்டிக்கப்போறவ.. எவ்வளவு கொடுத்து வச்சவன்னு எனக்கு நல்லா தெரியும்..” என்ற போது,
சிறு புன்னகையோடு, “கொடுத்து வச்சவளா..? சரிதான். வேற வேலை இருந்தா போய் பாருங்க ண்ணே..” என்று விட்டு போனவன்,
அவரின் எந்த எண்ணத்திற்கும் வழி வகுக்காமல், தன் வேலையை பார்க்க, “இவன வச்சுக்கிட்டு..” என புலம்ப மட்டுமே முடிந்தது அவரால்.
அவரும் கடந்த மூன்று வருடங்களாக அவனோடு மல்லுக்கட்டி பார்த்து வெறுத்து விட்டார்.. அவன் கல்யாண விசயத்தில்.
ஆரம்பத்திலாவது அவர் அந்த மாதிரி பேச ஆரம்பித்தால்.. நின்று கேட்பவன், இப்போது எல்லாம் அவர் அதைப்பற்றி ஆரம்பிக்கும் முன்பே,
“வேல இருக்கு ண்ணே.. அதை அப்புறமா பேசிக்கலாம்..” என்று விட்டு சென்று விட, அவரும் என்ன தான் செய்வார்..?.
அப்போது அவன் மனம் தன்னால் மாறும்..’ என்று நினைத்து அவரும் விட்டுவிட,
“எனக்கு ராஜாவா நா வாழுறேன்..” என்ற போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் தீனா.
மதிய உணவு வேளை முடிந்து ஒவ்வொருவராய் வரத்தொடங்க, போர்டிக்கோவில் ஓய்வாக சாய்ந்திருந்தவன், கீழ் தளத்தில் அமைந்திருக்கும் கட்டிங் செக்ஷனுக்குள் நுழைந்திருந்தான்.. வேகமாக..?!!!
அங்கு மீண்டும் அவன் வேலை அவனை ஆக்ரமிக்க மூன்று மணி போல வந்து சேர்ந்தார் தங்கமணி.
“தீனா.. ரெட்டிக்கு அனுப்ப வேண்டிய..” என்று அவர் ஆரம்பித்ததை முடிக்கும் முன்னாக,
“அது பார்சல் சர்வீஷூக்கு அனுப்பியாச்சு ண்ணே. இது அதுக்கான செலான்.
அப்புறம் எந்த ஐட்டத்துல எத்தனை ஃபீஸ் ன்னு மொத்த விவரமும் இதுல இருக்கு.
அவர் கொடுத்த அட்வான்ஸ் போக அவர் நமக்கு கொடுக்க வேண்டிய அமவுண்ட்..” என ஒரு தொகையை சொன்னவன்,
“அவருக்கு கால் பண்ணி சொல்லிட்டேன்.. அக்கவுண்ட்க்கு அனுப்பறேன்னு சொன்னார். செக் பண்ணி பார்த்துக்கோங்க..” என மடமடவென ஒப்பித்தவன்,
அடுத்து, ‘தாங்கள் அனுப்ப வேண்டிய ஆர்டர்.. அதில், இப்போது தயாராக உள்ளது எவ்வளவு.. இன்னும் எத்தனை தேவை.. எவ்வளவு நாளில் முடியும்..’ என்ற மொத்தத்தையும் ஒப்பித்து முடிக்க,
அவனுக்கு மூச்சு வாங்கியதோ.. இல்லையோ.. கேட்டிருந்தவருக்கு மூச்சு வாங்க தொடங்கியது.
அதனால் டேபிளில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து குடித்தவர், “ஏன் டா.. நா அனுப்பிட்டையா.. ன்னு ஒரு வார்த்தை தானே கேட்டேன்.. ஆமா.. இல்லை..ன்னு மட்டும் சொன்னா பத்தாதா..?
இப்படியா சொல்லுவே..! நீ, மொத்தமா இதை பார்த்துக்கறதால தான், நா நிம்மதியா வெளி வேலைய பார்த்துட்டு ஜாலியா இருக்கேன்.
போடா போய் வேலைய பாரு..” என்று அலுப்போடு சொல்லிவிட்டு,
அவன் கொடுத்து சென்ற செலானை.. ஆடிட்டருக்கு அனுப்பும் ஃபைலில் எடுத்து வைத்தார்.
தீனா மீண்டும் கம்பெனிக்குள் வர, கட்டுக்களை வெளி யூனிட்டுக்கு எடுத்து செல்ல வேண்டி வரிசையாக ஆட்கள் வர ஆரம்பித்தனர்.
அதில் டாப் தைப்பவர்களுக்கு.. அதை எடுத்து கொடுத்து.. அதற்குரிய போல்டிங் துணி முதற்கொண்டு அனைத்தையும் சரியாக கொடுத்தவன்,
பாட்டம் தைப்பவருக்கு எலாஸ்டிக் அளவு பார்த்து.. பிரித்து வைத்திருப்பதை சரி பார்த்து..
‘எப்போதுக்குள் டெலிவரி செய்ய வேண்டும்..’ என்பதையும் கண்டிப்போடு சொல்லி அனுப்பினான்.
ஏற்கனவே காலையில் டெலிவரிக்கு லேட் செய்தவரை நிறுத்தி, “இதோட நாலு முறை லேட் பண்ணிட்டீங்க அண்ணே. இதே மாதிரி அடுத்த தடவ ஆகாம பார்த்துக்கோங்க.
டல் சீசன்ல கட்டுக்கு அப்புறம் அலைய வேண்டி வரும்..” என மறைமுகமாய் மிரட்டவும் தவறவில்லை.
கட்டு எடுக்க வந்தவர்கள், கொண்டு வந்தவைகளை சைஸ் வாரியாக டாப் பாட்டம் இணைத்து, அடுத்த நாள் பேக்கிங் செக்ஷனுக்கு அனுப்ப வேண்டி தயாராக வைத்தவன்,
குமரனிடம் காட்டி, “நாளைக்கு முதல்ல இந்த ஐட்டத்தை பேக் பண்ண சொல்லு குமரா.. ஆந்திரா பார்ட்டிக்கு அனுப்பனும் மதியம்..” என போர்டிக்கோ அருகே நின்று சொல்லிக் கொண்டிருந்தவனுக்கு..
இந்த சில மாதங்களாய் உணரும் அதே உணர்வு தாக்க, வேகமாய் மற்றவர் அறியாத வண்ணம் தன்னை சுற்றி ஆராய்ந்தவனுக்கு எப்போதும் போல இப்போதும் தோல்வியே..
மொத்தமாக வேலையை முடித்துவிட்டு செல்லும் கூட்டத்தில் கலந்திருப்பவரில் யார் அது..?! என்ற கேள்வி இன்றும் மனதோடு அவனுள்.
‘கண்ணாமூச்சியா ஆடறே..? சிக்கும் போது இருக்கு உனக்கு..’ என மனதில் சொல்லிக்கொண்டவன் அங்கிருந்து உள்ளே சென்றிருந்தான் கடுப்போடு.
அவன் தன்னை இன்றும் கண்டுகொள்ளாதது சோர்வை தந்த போதும், இந்த கண்ணாமூச்சி ஆட்டமும் வெகு சுவாரஸ்யமாக இருக்க,
‘லவ் யூ கண்ணழகா..!!’ என மனதுக்குள் அவனுக்காக தான் வைத்த செல்லப்பெயரை சொல்லி.. அவனை கொஞ்சிக்கொண்டு மெல்லிய புன்னகை சிந்தியபடி அங்கிருந்து சென்று கொண்டிருந்தாள் அவனின் பிடிவாதத்தை தகர்க்க போகும் சரவெடி…