Skip to content
Post Views: 3,329
எந்தன் ஜீவநதி
நதி 1
Advertisement
“தீனா ண்ணே.. ரெட்டிக்கு அனுப்ப வேண்டிய பண்டலுக்கு, எம் சைஸ்ல நேவி ஃபோல்டிங் பாட்டம் பத்தலையாம்..” என்றபடி வந்து நின்றான்.. பேக்கிங் செக்ஷனில் வேலை பார்க்கும் குமரன்.
யோசனையில் தனது புருவங்கள் இடுங்க, “நேத்து டெலிவரி பண்ணச்சொன்னது.. இன்னும் வரலை..” என்று முணுமுணுத்த தீனா தனது நோட்டை எடுத்து பார்த்துக்கொண்டே போனில் ஒரு எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
Advertisement
Advertisement
மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும், “அண்ணே.. நேத்து டெலிவரி கொடுக்க சொன்னதுக்கு.. இப்ப வரை டெலிவரி பண்ணாம இருக்கீங்க..?
உங்களால பண்டல் போட முடியாம வெயிட் பண்ண வேண்டி இருக்கு..” என்று கண்டிப்பான குரலில் வினவ,
Advertisement
மறுமுனையில் இருந்தவரோ, ‘அச்சோ.. இன்னும் கொஞ்சம் பென்டிங் இருக்கே.. இப்பவே அவசரமா கேட்டா எப்படி..?’ என நினைத்தபடி போலியாய்,
“தீனா.. ரெடியாகிடுச்சுப்பா.. நைட் பைக் பஞ்சர். அதான் டெலிவரி கொடுக்க முடியல. இதோ இப்ப கிளம்பிட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன்..” என பொய்யாய் ஒரு காரணத்தை சொல்லி சமாளிக்க முயன்றார் அவசரமாய்.
அவரின் பேச்சு நிதர்சனத்தை அவனுக்கு உணர்த்திவிட, “முடுஞ்சவரை சீக்கிரம் வரப்பாருங்க.. இனி இப்படி சாக்கு சொல்லாதீங்க.. அண்ணே.
அப்புறம் கட்டுக்கு வேற பக்கம் நீங்க தேட வேண்டி வரும் பார்த்துக்கோங்க..” என கறாராகவே சொல்லி போனை வைத்தவன்,
“குமரா, ஃபீஸ் வர லேட் ஆகும். அந்த ஆள் இன்னும் கிளம்பியிருக்க மாட்டான்.. நீ மேலே நம்ம ஸ்டிச்சிங் செக்ஷன் போ..” என்று சொல்லிக்கொண்டே,
தனது போனிலிருந்து மற்றொரு எண்ணுக்கு அழைத்தவன், “பஹதூர்.. குமரன் வருவான். எம் சைஸ் பாட்டம் லில்லி எத்தனை ரெடியாகியிருக்குன்னு பார்த்து அவங்கிட்ட கொடு..” என்றதும்,
மறுமுனையிலிருந்தவன், “ஃபோல்டிங் கலர் அண்ணே..?” என்றான் அங்கிருக்கும் சரக்கை ஆராய்ந்தபடி.
“நேவிடா.. நேத்து அது தானே கொடுத்தேன்.. இப்ப ரெடியாகியிருக்கனுமே..?” என்றான் மீசையை தடவியபடி.
“ஆச்சு ண்ணே.. நேவி முடுச்சிட்டு.. இப்ப ஆரஞ்சு ஃபோல்டிங் எடுத்தாங்க. அதனால தான் கேட்டேன்..” என சொல்லும் போதே குமரன் வந்து சேர்ந்திட,
“இதோ.. குமரன் வந்துட்டான். நா கொடுத்து அனுப்பிடறேன் ண்ணே..” என்றுவிட்டு வைத்தான் பஹதூர்.
பின்னலாடை தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஊர் திருப்பூர்.
பின்னலாடையில் உள்நாட்டு சந்தை முதல், வெளி நாட்டு ஏற்றுமதி வரை.. இந்தியாவிலேயே மிக முக்கிய இடம் வகிக்கும் மாவட்டம்.
அப்படிப்பட்ட திருப்பூரில் அமைந்துள்ள டி.எம். டெக்ஸில், உள்நாட்டு தேவைகளுக்கான பனியன் வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு.. அது இந்தியா முழுவதும் உள்ள பார்ட்டிகளுக்கு(ஹோல் சேல் கஸ்டமர்ஸ்) அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அங்கு முக்கியமான வேலையில் இருப்பவனே தீனா.. தீனதயாளன்.
அங்கு ‘ஆல் இன் ஆல்..’ என்று சொன்னால் மிகையில்லை.
பின் பேருக்கு ஏற்ப தயாள குணம் கொண்டவன் தான். இனிமையான சுபாவமும், வேலை வாங்கும் திறனும் கொண்ட அமைதியான ஆறடி ஆண் மகன்.
யாரிடமும் கத்தியோ தேவையில்லாத வாக்குவாதத்திலோ ஈடுபடாமல் இருந்தாலும்.. அவனின் இறுக்கமான பாவனையும், கூர் பார்வையுமே அவனின் கண்டிப்பையும் கோபத்தையும் காட்டிவிடும்.
‘வேலை இடத்தில் எங்கு எப்படியான முகபாவனை காட்ட வேண்டும்..’ எனும் நீக்கு போக்கு புரிந்தவன்.
சொந்தங்களுக்கு முன் அதை செய்திருக்கிறானா..? என்றால் மிகப்பெரிய கேள்விக்குறியே..!
கடின உழைப்பால் உடலை அவன் முயலாமலேயே கட்டுக்கோப்பாய் கொண்டவன்.
கருத்து அடர்ந்த அவனின் புருவங்கள் அவன் யோசனையில் இடுங்கும் போது அதுவே அவனுக்கு பேரழகாய் காட்சி அளிக்கும்.
அடர்ந்த மீசையோடு இந்த காலத்து இளைஞர்களை போல ட்ரிம் செய்த தாடியும் வைத்திருக்கிறான்.
பெண்களுக்கு மட்டுமல்ல மைவிழி ஆண்களுக்கும் வாய்க்கும் என்பதற்கு உதாரணமாக இருப்பவன். அவனின் அந்த மைவிழி அவனின் சிவந்த முகத்திற்கு மேலும் அழகை கூட்டிக்காட்டும்.
புன்னகையை அணிந்து கொண்டு அவன் சொல்வதை தட்டிச்செல்ல யாராலும் முடியாது.
அதுவே வேலையில் தவறென கண்டுவிட்டால்.. அவனிடம் அத்தனை கறார் தன்மை ஒட்டிக்கொள்ளும்.
தொழிலில் நீக்கு போக்கு எல்லாம் வேண்டிய மட்டுமே.. என்ற எண்ணம் கொண்டவன்.
அவனுக்கு.. அவனிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக முடிக்க வேண்டும்.. அதுவரை அவனால் ஓய்ந்து அமர முடியாது.
அந்த கம்பெனியில் அவன் அங்கு வரும் வரை இருந்த நிலையை தனது ஓயாத உழைப்பால் மாற்றிக்காட்டியவன்.
மேல் தளத்திலிருந்து தேவையானதை வாங்கி வந்த குமரன் அவனது வேலையை பார்க்க செல்ல, தீனாவை அடுத்து அடுத்து வேலைகள் ஆக்ரமித்துக்கொண்டது.
கட்டிங் செக்ஷனில் வெட்டப்பட்டவைகளில், தங்களின் ஸ்டிச்சிங் செக்ஷனுக்கு தேவையானதை எடுத்து தனியாக பிரித்து வைத்துவிட்டு,
மீதமுள்ளதை தனியாக.. சொந்தமாக மிஷின் வாங்கி யூனிட் செட் வைத்திருப்பவர்களில் தங்களிடம் வாடிக்கையாக எடுத்து செல்பவர்களுக்கு..
‘யாருக்கு எதுவென..’ பிரித்து.. அதற்குரிய நபருக்கு அழைத்து, “கட்டு ரெடியாகிடுச்சு ண்ணே. வந்தா எடுத்துக்கலாம்..” என்று தகவலை சேர்த்து முடித்தான்.
அதை செய்யும் போதே, ஏற்கனவே எடுத்து சென்று தைத்து கொண்டு வந்தவைகளை.. கொடுத்த எண்ணிக்கை சரியாக வந்து சேர்ந்ததா..?
அதில் அளவுகள் எல்லாமே சரியாக உள்ளதா..? என்று சரி பார்த்து.. பேக்கிங் செக்ஷன் அனுப்பி.. என, மூச்சு விடக்கூட நேரம் கிடைக்கவில்லை அவனுக்கு.
இடையில், ‘டீ டைம்..’ என மற்றவர்கள் சென்ற போதும், இவன்.. இவனது வேலை மட்டும் தடையின்றி சென்று கொண்டிருந்தது.
அந்த கம்பெனியின் முதலாளி தங்கமணி இன்று ஒரு திருமண விழாவிற்கு சென்றிருக்க, அலுவலக வேலை சம்மந்தமான போன் கால் முதல்.. எப்போதும் செய்யும் வேலையும் சேர்ந்து கொள்ள.. மதிய உணவு வேளை வரை அவனுக்கு நிற்க கூட அவகாசமின்றி போனது.
“தீனா ண்ணே.. மதியத்துக்கு என்ன வாங்கி வர..?” என்று வந்து நின்ற குமரனின் சத்தத்தில் தான், மதிய உணவுக்கான நேரம் வந்துவிட்டதே தெரிந்தது அவனுக்கு.
“எப்பவும் போல எதாவது வாங்கிட்டு வாடா..” என்றுவிட்டு, போர்டிக்கோவில் போட்டிருந்த துணி மூட்டை ஒன்றில் சாய்ந்து அமர்ந்தவனுக்கு வீட்டு சாப்பாட்டின் ஏக்கம் எப்போதும் போல தோன்றி மறைய..
“அதிகத்துக்கு ஆசைப்படாத தீனா..! உனக்கு வாய்ச்சதை தக்கவச்சுக்கோ..” என்று தனக்கு தானே அறிவுரை கூறிக்கொண்டவன்.. குமரன் வாங்கி வந்த தக்காளி சாதத்தை உண்டு முடித்தான்.
தீனா.. பதினெட்டாவது வயதின் தொடக்கத்தில்.. ‘எங்கு செல்ல..?’ என தெரியாமல் வந்து நின்ற இடம் இந்த திருப்பூர்.
‘வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்..’ என்பதற்கு பதில், ‘வந்தோரை வரவேற்று வாழ வழிகாட்டும் இடம் திருப்பூர்..’ என சொன்னால் மிகையன்று.
எந்த ஊரில் பஞ்சமென்றாலும் சரி.. காதல் பிரச்சனையா.. ஜாதி பிரச்சனையா.. ஊரை விட்டு வந்து திருப்பூரை தஞ்சமடைந்தால் போதும்.. எப்படியாவது பிழைத்துக்கொள்ளலாம்.. என்ற நம்பிக்கையை கொடுக்கும் ஊர்.
மிகக்குறைந்த வாடகையில் இருந்து.. எந்த தரத்திற்கும் வீடு கிடைப்பதோடு.. தொழிலுக்கும் பஞ்சமில்லாத சூழல் இங்கிருக்க.. எப்படியாவது.. தங்களை காத்துக்கொள்ளலாம்.. என நம்பி வந்து இருப்பவர்களே அதிகம்.
தென் தமிழகத்திற்கு பஞ்சம் வந்த காலத்தில் ஆண்.. பெண் பேதமின்றி அங்கிருந்து வந்து இங்கே விடுதியோடு இணைந்த கம்பெனிகளிலும்,
தனியாக ஒரு சிலர் சேர்ந்து வீடு எடுத்து தங்கி.. வேலை பார்த்து, தங்களின் குடும்பத்துக்கு அனுப்பி, அவர்களின் வயிறை வாட விடாமல் செய்த பெருமை இந்த ஊருக்கு உண்டு.
இப்போது வடமாநில மக்கள் அதிகமாய் தங்களின் குடும்ப சூழ்நிலைக்காக இங்கே தஞ்சம் புகுந்துள்ளனர்.
இன்றும் ஆண், பெண் என பாகுபாடின்றி வேலைக்கு வந்து இங்கே தங்குவதும், வருடத்திற்கு ஒரு முறை மட்டும் சென்று.. சொந்தங்களோடு உறவாடி வருவதும்.. இயல்பான ஒன்றாகி போனது இந்த ஊரில்.
அவ்வாறு தன்னை தானே பார்த்துக்கொள்ள வேண்டிய சூழலில் வந்து நின்றவனை.. அன்போடு அரவணைத்து கொண்டது இந்த ஊரும் இந்த கம்பெனியின் முதலாளி தங்கமணியும்.
இரு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான தங்கமணிக்கு பார்த்த உடனே ஏனோ தீனதயாளனை பிடித்துவிட்டது.
அது, ‘அவனின் அலைப்புருதல் இல்லா கண்களாலா..? இல்லை.. அவனின் பசியின் விளைவால் முகம் வாடி கிடந்த போதும், அந்த விழியில் இருந்த தீட்சண்யத்தாலா..?’ என்பது தெரியவில்லை.
ஆனால் அன்று முதல் இங்கு எல்லாமே தீனா வசம் தான். தங்கமணிக்கு தெரியாதது கூட தீனாவிற்கு தெரியும்.
ஆனால் ஒரு பொழுதும் அவர்.. அவன் மீது கொண்ட நம்பிக்கையை அவன் உடைத்தது இல்லை.
அதுவே இந்த பத்து வருடங்களாக அவனை அங்கு நிலைத்திருக்க வைத்திருக்கிறது.
error: Content is protected !!