Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

Enthan Jeevanathi 2 1

நதி 2
நாட்காட்டியில் நாட்கள் வாரங்களாகி மாதங்களை கடந்து கொண்டிருந்த போதும் கம்பெனியில் தன்னை பின்தொடரும் அந்த பார்வைக்குரியவள் யாரென தெரியாதிருக்க.. அதை பற்றி அலட்டிக்கொள்ளாமல் கடந்து போக பழகியிருந்ததாய் நினைத்தான் தீனதயாளன்.


Advertisement

அந்த பார்வையின் வீச்சு தன்னை கம்பெனியில் மட்டுமல்ல மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் கூட தனித்து அதை உணர வைக்கும் என்பதை அறியாது அவன் இருந்ததால்,
அது பற்றிய எச்சிந்தனையும் இன்றி அமைதியாக ஓடும் நீரோடை போல நிம்மதியாகவும் அமைதியாகவும் அவனின் வாழ்க்கை சென்று கொண்டிருக்க அதை குழைக்கவென அன்றைய நாள் விடிந்தது போலும்.

Advertisement

Advertisement

தீனாவிற்கு மிகுந்த டென்ஷனோடு தான் ஆரம்பித்தது அந்த விடியல்.. காரணம் அவனின் வீட்டிலிருந்து வந்திருந்த அழைப்பு.
அவன் விழித்ததே, தன் போனின் அழைப்பு மணி ஓசையில் தான்.

Advertisement

அதை எடுத்து, ‘அழைத்தது யார்..?’ என பார்க்க, அது அவனின் அப்பா ஜெயசீலனின் எண்.. என்றதும், அவன் விழி அவசரமாய் ஆராய்ந்தது அன்றைய தேதியை தான்.
“இன்னும் ரெண்டு வாரமிருக்கே பணம் அனுப்ப..! இப்ப, என்ன காரணம் சொல்லப்போறாரோ இடையில பணம் வாங்க..” என்ற யோசனை உள்ளே ஓடினாலும்,
கை தன்னால் இணைப்பை ஏற்க, வாயோ, “சொல்லுங்க ப்பா..” என்றிருந்தது.
“ஏன்டா.. கொஞ்சமாச்சும் கூறுன்னு ஒண்ணு இருக்கா.. இல்லயா..?
உன்ற அக்காளுக்கு ஆடி சீர் செய்யறதுக்கு பணமனுப்புன்னு சின்னவன உட்டு போனுல தக்கல் சொன்னா.. அதுக்கு இதுநா வரைக்கும் பதிலனுப்புனீயா..?
இல்ல.. அதுக்கு வேணுங்கற காசத்தா அனுப்புனீயா..?” என்று மகனிடம் அவனின் நலத்தை கூட விசாரிக்காமல் அவரின் காரியத்தில் கண்ணாக பேச, எப்போதும் போல ஒரு விரக்தி புன்னகை அவன் இதழில்.
‘அங்கிருந்து வராதுன்னு தெரிஞ்சே எதிர்பார்க்கற பாரு.. உன்னை..!’ என மானசீகமாய் தன்னையே திட்டிக்கொண்டவன்,
‘போனில் இதுவரை வந்தே சேராத மெசேஜூக்கு எங்கிருந்து பதில் அனுப்ப..?’ என கேட்டு இருக்கலாம் தான்.
ஆனால் அங்கிருந்து, “ஓ.. பணோ வேணுமுன்னு உன்றகிட்ட ஒவ்வொரு தடவக்கும் கெஞ்சினாத்தா அனுப்புவீயோ..?
உனக்கே அறிவு வேணா.. கூட பொறந்தவளுக்கு செய்யோனுமுன்னு..” என இவனுக்கு தான் திட்டு விழுகுமே அன்றி வேறு புதிதாய் என்ன நடந்துவிடும்..? என நினைத்தவன்,
“நாளக்கு தான் சனிக்கிழமை.. பணம் வந்ததும் அனுப்பிடறேன் ப்பா..” என்றிட,
“எப்போ பாரு.. ஒவ்வொன்னுத்துக்கும் இப்புடி ஓரியாட்டம்(போராடி) பண்ணியே உன்றகிட்ட வாங்க வேண்டி கெடக்கு.. என்னத்த பொழப்புத்தனோ பாக்குறீயோ.. போ..” என்றவர்,
“அனுப்புறப்போ கொஞ்சோ சேத்து அனுப்பு. ஜெவதீஷூக்கு எதோ புக்கு வாங்கோனுமுன்னு.. உன்ற சித்தி சொல்லிட்டு இருந்தா..” என்றிட,
“ம்ம்..” என்றவனிடம் அடுத்து எதுவும் கேட்காமல் அழைப்பை துண்டித்திருந்தார்.
அவரின் தேவையை சொல்லியாகிவிட்டது.. இனி தீனதயாளன் என்பவன் அடுத்து அவருக்கு தேவை என வரும் போது மட்டுமே நினைவில் வருவான்.
இது எப்போது அவன் சம்பாதிக்க ஆரம்பித்தானோ.. அன்று முதல் நடக்கும் வாடிக்கை நிகழ்வு தான் என்ற போதும், ஒவ்வொரு முறையும் அவரின் இந்த சுயநலத்தன்மை தனிமையில் இருப்பவனுக்கு வலியை மட்டுமே மிச்சமின்றி வழங்கி செல்வதை அவர் உணரவே இல்லையே..!!
அந்த சுயநலவாதி ஜெயசீலனுக்கு வாணி, தீனதயாளன், ஜெகதீஷ் என மூன்று பிள்ளைகள்.
அதில் வாணியும்.. தீனதயாளனும் அவரின் முதல் தாரமான கஸ்தூரிக்கு பிறந்தவர்கள்.
ஜெகதீஷ், கஸ்தூரி இறந்த பிறகு சகுந்தலா என்பவரை ஜெயசீலன் மணந்து, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலானபின் பிறந்தவன். இப்போது தான் ஆறாம் வகுப்பு படிக்கிறான்.
அவனின் பள்ளிக்கட்டணம் முதல், அவனின் தேவை அனைத்தும் பார்ப்பது தீனா தான்.
அவன் அக்கா வாணி‌ உள்ளூரிலேயே.. அதுவும் அவர்களின் சித்தியின் தம்பி சக்தியை மணந்து அங்கே தனியாக இருக்கிறார். அவளுக்கு பாலமுரளி என்ற நான்கு வயது மகன்.
தந்தை பேசியதில் உண்டான வலியும் வெறுமையும் மனதை தாக்க.. அதன் விளைவால் உண்டான அழுத்தத்தை பெருமூச்சாக இழுத்து வெளிவிட்டு தன்னை சமன் படுத்த நினைத்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் அது கை கொடுக்காத இயலாமையில் “ச்சை..” என கையை உதறிக்கொண்டு, அந்த கம்பெனியின் மொட்டை மாடியில் அமைந்திருக்கும் குளியலறைக்கு சென்றவன் வேகமாக குளித்துவிட்டு கீழிறங்கினான்.
அவர் பேசியதில் இத்தனை வருடமாக தான் மறக்க நினைத்த பலவும் மாறாத ரணமாய் மீண்டும் அவனுள் உலா வர, அவனால் தன்னை நிலைபடுத்தி கொள்ளவே முடியாது தவித்து நின்றான்.
அவனின் அந்த தவிப்பு முகத்திலும் பிரதிபலிக்க, அதே மனநிலையில் இருந்தால்.. தொழில் நடக்கும் இடத்தில் தேவையில்லாத சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.. என்று நினைத்தவன், அவனின் தேவைக்காக வைத்திருக்கும் சைக்கிளை எடுத்துக்கொண்டு அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றான்.
அவன் சென்று சேர்ந்த நேரம் தான் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்து பூஜை நடந்து முடிந்திருந்தது.
அதனால் மூலஸ்தானத்தில் கூட்டம் குறையத்தொடங்க உள்ளே சென்றவன் எதையும் மனதில் வைத்து வேண்டாமல்.. அமைதியாய் கருவறையில் இருக்கும் தாயின் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
அன்று ஆடி முதல் வெள்ளி என்பதால்.. புன்னகையோடு கூடிய அந்த அம்மனின் சிறப்பு அலங்காரத்தில் தன் தாயின் முகம் தேடி நின்றவனுக்கு அதை தந்தாளோ அந்த உலகை ஆள்பவளும்.. அவனின் மனசஞ்சலங்கள் மெல்ல குறைத்திருந்தது அவனுக்குள்.
அவன் உள்ளே வந்தது முதல் அவனின் முகத்தில் தெரிந்த சோர்வும், ஏக்கமும் அங்கிருந்தவளின் கண்ணில் தப்பவில்லை.
அவனின் வருத்தம் தோய்ந்த முகம் அவளையும் வருத்த அவனையே பார்த்தபடி நின்றுவிட்டாள்.
சற்று நேரத்தில் சஞ்சலம் நீங்கி அவனின் முகம் தெளிந்த பிறகே நிம்மதி எழுந்தது அவளுள்.
தன் மனம் சமன்படவும் அங்கிருந்து விலகி கோவிலை சுற்றி வரத்தொடங்கினான் மெல்ல.
மனசஞ்சலத்தில் அந்த நேரம் வரை தோன்றாத உறுத்தல் சட்டென அவனைத் தாக்க, அவசரமாய் அந்த பக்கம் பார்த்தவனுக்கு.. அன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால்.. கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்க அவன் எதிர்பார்த்த எதுவும் புலப்படாமல் போனது.
அந்த புறமிருந்து பார்வையை விலக்கி கொண்ட போதும், தனது புலன்களை கூர்மையாக்கி சுற்றத்தை அவதானிக்க ஆரம்பித்தான்.
ஆனாலும் அவனால் யாரையும் சந்தேகம் கொள்ள முடியாத படி சுற்றியிருக்கும் சூழல் இருக்க,
‘ஆமா.. நீயேன் இப்படி அந்த பார்வைக்குரியவங்கள கண்டுபிடிக்க அலையிறே..?’ என்ற மனதின் கேள்வியில்..
‘அதானே..!’ என்று யோசித்தவன், ‘தேவையில்லாத வேலைய பார்த்தா.. வீணா போறது அவங்க டைம் தானே.. விடு..’ என்று நினைத்துக்கொண்டு,
அங்கிருந்து கிளம்பி கம்பெனிக்கே வந்து சேர, அவனுக்கான காலை டிப்பனோடு காத்துக் கொண்டிருந்தான் குமரன்.
குமரன் வரும் பகுதியில் உணவு ஓரளவு விலை மலிவாகவும், கொஞ்சம் உண்ணும் விதமாகவும் இருப்பதால், அவன் வரும் போது தீனாவிற்கும் வாங்கி வந்து தருவது வாடிக்கையான ஒன்று தான்.
வார இறுதியில் அவனுக்கு சம்பளம் கொடுக்கும் போது, குமரனுக்கு கணக்கு போட்டு கொடுத்து விடுவான் தீனா குமரன் மறுத்தாலும்.
திருப்பூரின் வழக்கத்தில்.. மாதச்சம்பளம் என்பது அலுவலக வேலையில் இருப்பவருக்கு மட்டுமே சாத்தியம்.
மற்ற வேலையில் இருப்பவர்கள் அனைவரும் அந்த வார இறுதி, அதாவது சனி மாலை வேலை முடிந்து செல்லும் போதே சம்பளப்பணம் தரப்பட்டு விடும்.
சீசன் நேரத்தில் அதாவது வேலை அதிகமாய் இருக்கும் போது ஞாயிறும் வேலை இருக்குமெனில் மட்டுமே.. ஞாயிறு அளிப்பார்கள்.
அதுபோலவே வேலையிலும்.. ஃபீஸ் ரேட்.. ஷிஃப்ட் ரேட் என இரண்டு முறை உண்டு.
ஃபீஸ் ரேட்டுக்கு வேலை பார்ப்பவர்கள், வரும் நேரம்.. போகும் நேரத்திற்கு.. கெடுபிடி இருக்காது. அவரின் திறமைக்கு தக்க தைத்து சம்பளம் வாங்கிக்கொள்ளலாம்.
அதே, ஷிஃப்ட் ரேட்டுக்கு வேலை பார்த்தால்.. காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 வரை நீடிக்கும்.
அதற்கு மேல் 8.30 வரை செய்தால், ஒன்றரை ஷிஃப்ட் என கணக்கில் வைத்து, அதற்கு ஏற்ப சம்பளம் கொடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!