Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கள்ளி காட்டு காதலியே!

Final 2 கள்ளி காட்டு காதலியே!

கள்ளி காட்டு காதலியே!

இறுதி அத்தியாயம்

   விக்ரம், தாங்கள் போகும் இடத்தை யாரிடமும் பகிர வில்லை. தன் நண்பர்களிடம் கூட, தன்னால் அவர்களுக்கு ஒரு பிரச்சனை வருவதில் அவனுக்கு விருப்பம் இல்லை.

   முன்பே கதை இப்படி தான் முடியும் என்று அவனுக்கு நன்றாக தெரியும். அந்த வகையில் எல்லாவற்றிற்கும் தயாராக இருந்தான். அவன் திருச்சியில் படிக்கும் போது வேற டிபார்ட்மெண்ட் நண்பர்கள் உண்டு. அவர்களோடு தொடர்பு கொண்டு, தனக்கொரு வேலையை தேடி கொண்டான். தேர்வில் வெற்றி பெற்று இருந்தாலும், கொஞ்ச நாள் ஆகும். அதுவரை வண்டி ஓட வேண்டுமே…



Advertisement

     முதலில் விக்ரம் தம்பதிகள் சென்றது போடி, தாண்டி இடுக்கி பகுதியில் உள்ள கோட்டயம் தான். இவனுக்கு சென்னை, பெங்களூர், ஓசூர் வரை தான் பழக்கம். கண்டறிய கூடாது என்று தான் அங்கு சென்றது.

   முதல் மாத சம்பளம் பத்தாயிரம் தான். அதை வைத்து தான் கிட்ட தட்ட ஒன்றை வருடம் ஓட்டினார்கள். பிரபா, அவனோடு நன்றாக பொருந்தி போனாள். சின்ன வீடு, அளவான பொருட்கள் , நிறைய நெருக்கம் என்று மகிழ்வான வாழ்க்கை தான்.

  ஆனால், விக்ரம் ஒன்றில் உறுதியாக இருந்தான். நிச்சயம் தான் ஒரு நல்ல நிலைக்கு வராமல் அவளை நெருங்க கூடாது என்று… அதை காக்கவும் செய்தான். குறைந்த வருமானம் என்றாலும் நிறைவான வாழ்க்கை இவர்கள் வாழலாம். ஆனால், அவர்களுக்கு பிறக்க போகும் பிள்ளை, எந்த சங்கடங்களையும் அனுபவிக்க கூடாது என்று நினைத்தான். அந்த வகையில் பிரபாக்கு கணவனை மிக பிடித்தது.

Advertisement

   தன் படிப்பை குறித்த கவலை நிச்சயம் பிரபாக்க உண்டு. ஆசையாக படிக்க வைத்த பெற்றவர்களை மீறி, அவள் விருப்பத்துக்கு வாழ்க்கையை தேர்வு செய்து விட்டாள். சாவு வரை போய் தன் காதலை ஒரு கட்டாயத்தில் நிறைவேற்றி கொண்டாள். பெற்றவர்களுக்கு உண்மை இல்லாமல் போனோமே என்று குத்தலுக்கு இதை தண்டனையாக ஏற்றாள்.

Advertisement

    என்ன தான் அளவான வருமானம் என்றாலும், விக்ரம் கையில் பூ இல்லாமல் வர மாட்டான். அது எவ்வளவு விலையாக இருந்தாலும்,கையளவு பூவாது மனைவி கூந்தலை அலங்கரிக்க வேண்டும்.

  பிரபா, முழுக்க முழுக்க வெற்றி பிடியில் மட்டும் தான். அதை அவள் அதிகமாக விரும்பினாள். அவனுக்கு துண்டு எடுத்து தருவதில் இருந்து, அவன் செருப்பை துடைத்து வைப்பது வரை ஆசை ஆசையாக செய்வாள்.

சில நேரம் தன் துணிகளை விக்ரம் தானே அலசி கொண்டாலும், பிரபா விட மாட்டாள். கணவனுக்கு எல்லாம் அவள் செய்தால் தான் திருப்தி.

Advertisement

  செல்வம் சொன்னது போல சின்ன சின்ன சண்டை வராமல் இல்லை. அதேபோல விக்ரம் சொன்ன மாதிரி சண்டை வரும், சமாதானமும் செய்து கொள்வார்கள்.

  முழுதாக இரண்டு வருடத்தின் பின் தான் விக்ரமுக்கு அரசு வேலை கிடைத்தது. தமிழ்நாடு எல்லை பகுதியில் நில சம்பந்த பட்ட ஆர்.ஐயாக பணியில் அமர்ந்தான். முதலில் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திய பின் தான் ஒரு தாம்பத்திய வாழ்க்கையை தன் மனைவியோடு தொடங்கினான்.

    விக்ரம் அறிவான், உண்மையில் காதல் திருமணம் பல சிக்கல்களை கொண்டது. நிறைய சகிப்பு தன்மை, நிறைய அன்பும் இருக்க வேண்டும். அந்த வகையில் இருவருமே ஒருவர் மேல் ஒருவர் காதல், அன்பு, ஆசை அதிகம் கொண்டவர்கள் என்பதால் வாழ்க்கை நன்றாக போனது.

   அடுத்த மூன்று வருடத்தில் விக்ரம் தாசில்தாராக பதவி உயர்வு பெற்றான். அதன் பின் தான் மெல்ல தங்கள் வாழ்க்கையை தன் சுற்று வட்டாரத்துக்கு தெரிய படுத்தினான்.

 திலகவதிக்கு ஒரே பெருமை. நீதிபதி காதில் எல்லாம் விழுந்தாலும் கண்டு கொள்ள மாட்டார். யார் எப்படி போனால் எனக்கென்ன?… அன்று விக்ரமும், பிரபாவும் ஊரை விட்டு சென்ற பின், அருண் விசயத்தை மெல்ல கசிய விட்டான்.

  செல்விக்கு எதுவும் தெரியாது. தங்கள் மகள் தங்களை ஏமாற்றி தான் ஓடி விட்டாள் என்று அவ்வளவு பேச்சு. நீ தான் கையாள் என்று முழுதாக ரேவதியை ஒதுக்கி வைத்தார். பிரபாவின் பொருட்கள் எல்லாம் வெளியே அள்ளி போட்டு தீ வைத்தார். செல்வத்திற்கு நெஞ்சு துடித்தது, உயிரோடு இருக்கும் மகள் போட்டோ எரிக்கும் போது கண் கலங்கியது.

  விக்ரம் வீட்டிலும் அப்படியே அவனின் பொருட்களை எரித்து, ஒதுக்கி விட்டதாக காட்டி, என்று நான், என் நிலைப்பாடு, என் ஊர் தான் முக்கியம் என்று நீதிபதி நிரூபிக்க. ஊர் மக்கள் கொஞ்சம் அடங்கினார்கள். அப்படி இருந்தும் இரண்டு வருடம் ஐயனார் கோவில் திருவிழா எடுத்து செய்ய வில்லை. ரெண்டு ஊரும் சேராமல் தான் இருந்தது. அடுத்தடுத்து இரு ஊருக்கும் தேவை இருக்க, மற்றதை மறந்து விட்டார்கள்.

  விக்ரம் வாழ்வும் தொய்வு இல்லாமல் தான் சென்றது. எல்லாம் பிரபா பிள்ளை சுமக்கும் வரை தான். அதன் பின் ஸ்கூல் போகும் சிறு பிள்ளை போல அம்மா வேண்டும் என்று அழுக தொடங்கினாள். இவனுக்கு தான் சமாளிப்பது பெரும் பாடாக இருந்தது.

 இவன் வீட்டில் கூட தந்தை தவிர எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் பிரபா வீட்டில் பிடி கொடுக்கவே இல்லை. பிரபா மாசமான விசயம் சொல்லி கூட, செல்விக்கு பெரிய அளவு பாதிப்பில்லை.

       விக்ரம் ஒருவாறு பிரபாக்கு புரிய வைத்தான். முன்பு விக்ரம் மட்டுமே பிரதானம். இன்று எல்லாம் இருக்க, மனம் இல்லாத உறவை தேடியது. தாய் கண்டிப்பு கூட இன்று சரியென்று தோன்றியது.

      பிரபா நலன் கருதி தான் விக்ரம் ஓசூர் குடி வந்தான். அங்கு அவன் நண்பர்கள் இருக்க, ஒரு பாதுகாப்பு என்று நினைத்தான்.

  ஆனால், திலகவதி விட வில்லை. “நான் பெத்தது ஒத்த பிள்ளை, அவன் வாரிச நான் தான் கையில வாங்குவேன்…” என்று கணவரோடு சண்டை போட்டு மகன் வீடு வந்து விட்டார்.

   ஏற்கனவே மறுகி கொண்டு இருந்தவள், மாமியார் வந்ததும் ஒட்டி கொண்டாள்.

  “ஏண்டா விக்ரம். நான் என்ன சொன்னாலும் சரின்னு சொல்ற… திட்டுனாலும் வாங்கிறா. என்னை எதுத்து கூட பேசுறது இல்லை. ரொம்ப அமைதிடா…”

  “அவ குணம் அது தான்மா… ரொம்ப நல்ல பொண்ணு…”

பிரபா, விக்ரம் தம்பதிக்கு மகன் பிறந்திருந்தான். மகனை கையில் வாங்கிய போது அவ்வளவு நெகிழ்ச்சி, சரியாக பிடிக்க கூட தெரியவில்லை.

  ஆபரேசன் தான். பிள்ளையை திலகவதி கவனிக்க, பிரபா முழுக்க விக்ரம் வசம் தான். அவ்வளவு தாங்கினான்.

   தனக்கு பேரன் பிறந்து இருக்கிறான் என்று அறிந்த போது செல்வம் முகத்தில் ஒரு பெரும் நிம்மதி. ஆனாலும் ஒட்ட வில்லை. செல்வி, “யாரு பிள்ளை பெத்தா, பேர் வச்சா எனக்கென்ன வந்துச்சு. யாரோ எவளோ அவ பேச்சு எனக்கெதுக்கு…”வெட்டி கொண்டார்.

      ஆறு மாதமும் திலகவதி அங்கு தான் இருந்தார். விக்ரம் உடன் பிறப்புகள் ஒருவர், ஒருவராக வந்து பார்த்து விட்டு போனார்கள். மதன், அருண் கூட வந்தார்கள்.

   தந்தை தனியாக இருப்பார் என்று சொல்லி தான் விக்ரம் தாயை ஊருக்கு பேக்கப் பண்ணான்.

      ஊர் வந்து திலகவதிக்கு பேரன் நினைவு தான். ஓயாமல் புலம்பி கொண்டு இருப்பார். மக்களிடம் கூட

    “நீங்க எல்லாம் அப்படி இருக்க மாட்டிங்கடி. அவ அம்புட்டு பொறுமை. உன் தம்பி கோபத்துக்கு, அவ அம்புட்டு விட்டு குடுத்து போற…”

   “ஆமா, வெளிய தான் உன் மகன் கத்துவான். வீட்டுக்குள்ள அவ கால் பிடிச்சு விடுவான். அது தான் உன் மகன் வீரம்…” என்று சந்திரா கூட கேலி செய்வாள்.

சும்மா திலகவதி பேரன், பேரன் என்று புலம்ப, பொறுக்க முடியாமல்,

   “இந்தா காட்டு அவனை…” என்று நீதிபதி கேட்க.

  “யார…”

“அதான் உன் சாமிய…”

  “விக்ரமா…” என்று ஆச்சர்யமாக மனைவி கேட்க.

  “அவன் இல்லை, அதான் உன் பேரனை. சும்மா இல்லை, நீ தான் எப்ப பாரு எம் பேரன் அவங்க தாத்தா மாதிரி ன்னு சொன்ன. நான் பார்க்கணும், நெசமாவே அவன் என்னை மாதிரி தான…”

   “நெசம் தான். உங்களை தான் அச்சு உரிச்சு வச்சு இருக்கான்…” என்றவர் பேரன் போட்டோ காட்ட,

நீதிபதிக்கும் பேரன் தன்னை போல இருப்பாதாக தான் தோன்றியது.

  மகன் ஜெய ஆத்விக் ஒரு வயதாகும் போது விக்ரம் சொந்த ஊருக்கே வந்து விட்டான். அவன் டவுனில் தான் வீடு பார்த்தான்.

  நீதிபதி, “இந்தா உம் சாமி கிட்ட சொல்லு, அவன் வேணா வாடகை வீட்டுல இருக்கட்டும். எம் பேரன் சொத்துகாரன். இங்க நமக்கு மூணு வீடு இருக்க, அங்க ஏன் போனும்…”

   “அவன் வேலைக்கு தூரம்ல…”

  “அதுனால என்ன போய் போய் வர சொல்லு…” பேரன் ஆசை வந்தது நீதிபதிக்கு.

    விக்ரம் குடி வந்த போதும் தள்ளி தான் நின்று கொண்டார்கள். அவனும் கண்டு கொள்ள வில்லை.எல்லாம் ஒரே நாளில் சரியாகாது. ஆனால், கோபமில்ல என்று புரிந்தது.

      விக்ரம் தன் வீட்டோடு உறவாட, பிரபா பயந்தே தள்ளி இருந்தாள். ஆனால் சொந்த ஊர் வந்த பின் ஒதுங்கி போக முடிய வில்லை.

  இன்று தன் மகனை தூக்கி கொண்டு கள்ளி காடு செல்ல, நிறைய மாற்றம். முன் அவர்கள் வீடு தான் முன்னாடி இருக்கும். இப்போது அவர்கள் வீட்டை சுற்றியே நிறைய வீடு இருந்தது. ஆனால், அவர்கள் வீடு மட்டும் பழமை மாறாமல் இருந்தது. பழைய நினைவுகள் நெஞ்சை துளைத்தது…

    அதே வீடு, அவள் ஆடிய ஊஞ்சல் கூட செல்வம் அப்படியே பராமரித்தார்.

 “ஆரு?…” கேட்டது செல்வி தான். சற்று தள்ளி பார்க்கும் போது அடையாளம் தெரியவில்லை.

   தாயை பார்த்தும் பிரபா கண்களில் அவ்வளவு கண்ணீர்.

 “யாரு அது என் வீட்டுல பிள்ளையை தூக்கி வந்தது…” என்று கிட்ட வந்தவர், அப்படியே நின்று போனார்.

  மகள், அவர் பெத்த மகள் அடையாளம் தெரியாத அளவுக்கு நிறைய மாற்றம். நெஞ்சு துடித்தது. பிள்ளையை கையில் ஏந்தி வந்து இருக்க, கோபம் கொள்ள முடிய வில்லை.

      “ அம்மா…” என்று அழுகையோடு கிட்ட வர, முகம் திருப்பி கொண்டார். ஆனால், வெளியே போ என்று சொல்ல வில்லை. அவருக்கும் வலித்தது.

   தம்பி வெளி ஊரில் கல்லூரியில் படிக்கிறான். அவளோடு பேசுவான். பெற்றவர்கள் தான் தள்ளி நின்றது. யார் என்று செல்வம் வெளியில் வந்த பார்க்க,

மகளை கண்டு அதிர்ந்து போனார். மகள் முழுதாக விக்ரமின் மனைவியாக நின்று இருந்தாள். கொஞ்சம் பூசிய உடல் வந்தது, குழந்தை தன்மை போய் தாய்மை தெரிந்தது, ஒரு வைர கல் மூக்குத்தி மட்டுமே அவர்கள் போட்ட மிச்சம். மத்த எல்லாம் நீதிபதி மருமகள்.

   தமிழ் செல்வம் பார்த்த படி நிற்க, பிரபா ஓடி வந்து தந்தை காலை கட்டி கொண்டாள். அப்பா, அப்பா என்று அவ்வளவு அழுகை. தந்தைக்கு மனம் தளர தொடங்கியது. பேரனை பார்த்தார். விக்ரம் வீட்டு வர்கம் என்று அடித்து சொல்லலாம். ஆனால் அந்த கண், தன் மகள் போல…

   அங்கு கொட்டும் பனியில் நிற்கும் போது கூட மகளின் கண் நினைவில் நிற்கும். அந்த கண் அப்படியே பேரனுக்கு என்று நினைத்தார்.

  “ இவளுக்கு எப்பவும் அப்பன் தானஉசத்தி…” என்று நினைத்தவர், மகள் அருகே சென்று வெடுக்கென்று பேரனை தூக்கி கொண்டு நகர்ந்து விட்டார் செல்வி.

  அப்போதும் கூட பிரபா தந்தை காலை விட வில்லை. ஊரே வேடிக்கை பார்த்தது.

   “அட, தூக்கு ப்பா செல்வம். ஊர் உலகத்துல நடக்காததா நடந்து பேச்சு…”

   “உம் மக தான் பேர் சொல்ல பிழைக்குது. உம் பேரனை பாரு…”

   “எம்புட்டு வருசம் செண்டு பிள்ளை வந்து இருக்கு, ஒதுக்கி தள்ளாத, ஒத்தையில கிடக்கீங்க…”

  செல்வம் மகளை தொட்டு தூக்கியவர், “விடு அழுகாத பாப்பா…” என்றவர் பேரனை பார்க்க நகர்ந்து கொண்டார் .

  இது போதும் பிரபாக்கு,வேற என்ன வேண்டும் . எல்லாம் மாறும் ஒரு நாள்…

  பேரனை அடிக்கடி தூக்கி வர சொல்லுவார் நீதி. முக்கல்வாசி நேரம் அவர்கள் கையில் தான். பெத்த மகன் போட்டோவை தீயில் போட்டவர், பேரன் போட்டோவை வீடு முழுக்க மாட்டி வைத்தார்.

    விக்ரம், ரேவதிக்கு ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்தான். அரசு பெண்கள் விடுதியில் சமையல் வேலைக்கு தான் எடுத்தார்கள். அதுவே திருப்தி ரேவதிக்கு… நிழலில் வேலை, பாதுகாப்பான இடம், தன் மகளோடு தங்கி கொண்டார். நல்ல சம்பளமும் வந்தது.

   விக்ரம் ஊருக்கும் செய்தான். இது தானே அவன் இடம். பெரிய பதவியில் இருக்க, நிச்சயம் மரியாதை கிடைத்தது. கடந்த காலம் அலச பட வில்லை. பிரபாவதி குளத்து கரை வீட்டு பெண்ணாக தான் இருந்தாள்.

  கண்மாய் தூர் வார, கால்வாய் நீர் வரத்து கொண்டு வர என்று ஊர் காரியங்களில் முன் நின்றான். அரசு சலுகை கிடைக்க நிறைய உதவினான். மகனை கண்டு பெற்றவருக்கு பெருமை. அதுவும் அரசு வண்டியில் ஏறி போகும் போது ஆசையாக பார்ப்பார். இன்னும் பேச வில்லை. ஒரு நாள் எல்லாம் மாறும்.

  ஆனால், விக்ரம், பிரபா காதல் மட்டும் என்றும் மாற வில்லை. எத்தனை நகை இருந்த போதும் பிரபா, கணவனுக்கு பிடித்த மூக்குதியை மட்டும் மாற்ற வில்லை. அவனோடு ஒட்டி, அவனோடு இனைந்து, அவனுக்காக தான் நின்றாள். அவர்களுக்கு காதல் கசக்க வில்லை. அன்பும் மாற வில்லை. அவனை நம்பி வந்தாள், அவளின் நம்பிக்கைக்கு என்றும் உரியவனாக நின்றான் ஜெய விக்ரமன்.

   நன்றி🙏🙏🙏🙏

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!