Kamali Maduraiveeran’s கடைவிழியின் காதலில் 3
அத்தியாயம் 3
பாண்டியன் அலரியை விட ஒரு வயது மூத்தவன். நூறு கண்மை டப்பாக்களை ஒன்றாக வைத்து பூசியது போல் ஒரு நிறம், அதற்கு முடி சூடும் வண்ணம் முட்டைக் கண்கள், இளம் வயதிலேயே இளநரை கொண்ட தலைமுடிகள், வாயில் முன்னே உள்ள பற்கள் நான்கும் “என் முன்னாடி யாராவது வந்தீங்கன்னா, என் பல்ல வச்சு கண்டிப்பா இடுச்சுப்போடுவேன்” என்று பறைசாற்றும் அளவு முன்னே எத்திய பற்கள்,
ஆள் சற்று பருத்த உடம்பு தான். ஒரு சிறு மளிகைக்கடை வைத்திருக்கிறான். இன்னும் திருமணம் ஆகவில்லை என்றாலும் பெண் வாடை இல்லாமல் ஒருநாளும் இருக்கமாட்டான். பெண் பார்க்கும் படலம் தொடங்கி மூன்றாண்டுகள் நிறைவடையும் பரிதாப நிலை. அலாரியின் மீது பள்ளிக்காலம் தொட்டே ஒரு கண் அவனுக்கு.
Advertisement
இரு சக்கர வாகனத்தை நிறுத்தியவன், ஒரு கோணல் சிரிப்புடனும் தவறான பார்வையுடனும் அவளை ஏறிட்டான்.
Advertisement
“என்ன அலரி ஆள் நாளாக நாளாக சும்மா பழுத்த மாம்பழமாட்டம் மினுமினுன்னு ஜொலிக்கிறியே, அப்பா முடியல…” என்று அவளை மேலும் கீழும் பார்த்தான்.
Advertisement
அவன் பார்த்த பார்வையும் பேசிய பேச்சும் அவளை சினமூட்ட, பதில் ஏதும் கூறாது தலையை வேறுபுறம் திருப்பினாள்.
Advertisement
அவளது தலை சிலுப்பலால் கோபம் கொண்ட பாண்டி, “ஏய்….. என்னடி ரொம்ப பண்ற என்ன பாத்தா ஆம்பளையா தெரியலையா உனக்கு, அன்னிக்கு மிஸ் ஆயிட்ட,… இன்னொருதடவை மாட்டாமலா போயிருவ….” என்று தாடையில் கை வைத்து யோசித்தவன், “இன்னொரு தடவை என்ன இன்னொரு தடவை இப்போ இருக்குடி உனக்கு” என்று அவள் முழங்கையை பிடித்து இழுத்தான்.
நிலைமையின் வீரியத்தை உணர்ந்த அலரி, “சீ ….. கைய எடுடா பொறுக்கி நாயே” என்று அவன் கையை உதற “என்ன டி ரொம்ப துள்ற, என்ன பாத்தா மட்டும் சீ…. உம்மச்சானுங்க ரெண்டு பேர பாத்தா மட்டும் உனக்கு இனிக்குதோ, அவனுங்களோட மட்டும் பைக்ல ஒடம்பு மொத்தம் பட ஒரசிகிட்டே போற, இன்னிக்கு நீ என் கூட வர” என்று மீண்டும் அவள் கை பிடித்தான்.
அவன் பிடித்து அழுத்தியதில் முழங்கை வலியை கொடுக்க, முகத்தை அஷ்டகோணலாக்கி கொண்டே அவன் கைய உதற முயன்றாள். பாவம் அவளால் முயல மட்டுமே முடிந்தது, பாண்டியின் கை அழுத்தமாக அவளை பிடித்திருந்தது.
அப்போது தான் புலர்ந்து கொண்டிருக்கும் காலைவேளை என்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்க, யாராவது தன் துணைக்கு வருகிறார்களா என்று அங்கும் இங்கும் கண்களை சுழற்றியவள் ஆஸ்பத்திரியினுள் இருந்து யாராவது வெளியே வருகிறார்களா என்று நோட்டமிட்டாள்.
காலைவேளை என்பதால் நோயாளியின் உடன் வந்த ஆட்கள் ரெசேப்ஷனில் போடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தபடி தூங்கிக் கொண்டு இருந்தனர். ஆள் நடமாட்டம் ஆஸ்பத்திரியிலும் குறைவாக இருந்தது.
சட்டென்று வாகனத்திலிருந்து இறங்கியவன் “என்ன டி அங்குட்டு மிங்குட்டும் பார்வை… உன்ன இன்னிக்கு யாரு காப்பாத்துறானு பாப்போம்” என்றவனோ அவளை தூக்க முயற்சி செய்தான்.
தூரத்தில் ஒரு சிறு ஒளி மெல்ல அருகே வர வர பெரிதாகிக்கொண்டே வந்தது. அலரியின் கண்கள் பளிச்சிட்டது.
அருகே வர வர அது ஒரு டிவிஎஸ் பைக் என்றும் அதன் மேல் அமர்ந்திருந்தவர் அந்த ஏரியா போலீஸ் கான்ஸ்டெபிள் என்பது தெரிந்ததும், பாண்டி முகத்தில் பீதியும் அலரியின் முகத்தில் நிம்மதியும் குடிகொண்டது.
வண்டியை ஓட்டிக்கொண்டே அருகே வந்த அந்த வயதான கான்ஸ்டெபிள் அலரியையும் பாண்டியையும் ஒரு நொடி நோட்டமிட்டார். பின் வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு அவரது லத்தியை கையில் எடுத்தார்.
“ஏம்மா நீ…சோலையூர் பண்ணையார் மருமவதானே” என்று அலரியையும் “டேய் நீ யாரு? எதுக்கு அந்தப்பொண்ணு கைய புடுச்சுட்டு இருக்க?” என்று பாண்டியையும் சத்தமிட்டுக்கொண்டே லத்தியால் தரையில் ஒரு அடி அடித்தார்.
அவர் அடித்த சத்தத்தில் அலரியின் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த பாண்டி அலரியை ஒரு முறை முறைத்துவிட்டு கையை விட்டான். அவன் விட்ட வேகத்தில் ஒடிச்சென்று கான்ஸ்டெபிள் அருகே நின்று கொண்டாள் அலரி, அவன் பிடித்த கையை தேய்த்துக்கொண்டே.
“சார் சார் என்ன காப்பாத்துங்க சார் என்கிட்ட வம்பு பண்றான்” என்றாள் அலரி. “என்ன டே… உடம்பு எப்புடி இருக்கு” என்று லத்தியை ஒரு கையல் தேய்த்துக்கொண்டே பாண்டியை ஒரு பார்வை பார்த்தார்.
“சார் தெரிஞ்ச பொண்ணுதா… சும்மா பேசிகிட்டு இருந்தோம்” என்று அலரியை ஒரு பார்வை பார்த்தான்.
“அங்க என்ன டே பார்வை, தெரிஞ்ச பொண்ணெல்லாம் இப்புடித்தான் ரோட்ல நின்னு கைய புடுச்சு பேசுவீகளோ…. வெண்ண, உன் முழியே சரியில்ல” என்றவாறே லத்தியால் பாண்டியை விளாசினார்.
பின் “நீ எங்கம்மா வீடுக்கா போற” என்றார். அலரி வேகமாக தலையை மேலும் கீழும் ஆட்டவும் “நீ வா மா நா உன்ன வீட்ல விட்டுடறேன்” என்றவரோ அலரியின் பதிலை எதிர்பாராமல் வண்டியில் ஏறிக்கொண்டே,
“நாயே மறுபடியும் உன்ன எங்காவது பாத்தேன் தோலை உருச்சுப்போடுவேன் உருச்சு” என்றவர் “நீ ஏறுமா” என்றதும் அலரி “ஐயோ… இன்னிக்கு மாட்ட போறோம்” என்று மனதிற்குள் புலம்பியவளோ, வெளியே அந்த வயதான கான்ஸ்டெபிளுக்கு சிரித்த முகமாக நன்றி கூறிவிட்டு வண்டியில் ஏறினாள்.
கான்ஸ்டெபிள் வண்டியை எடுக்கும் முன் பாண்டியை நோக்கி ஒரு விரல் நீட்டி எச்சரித்து விட்டு வண்டியை சோலையூர் நோக்கி செலுத்தினார்.
“என்னம்மா நீ பரிதீரன் அத்தமக தானே, இந்த ஆஸ்பத்திரில தானே நர்ஸ் சா வேல செய்யுற” என்றார் உறுதிப்படுத்தும் பொருட்டு.
ஆமா சார் என்றவளோ “கடவுளே இன்னிக்கு என்ன நடக்க போகுதோ தெரியல, இந்த போலீச கழட்டிவிடலாம்னு பாத்தா முடியாது போலயே, ஐயோ மலரு கால்ல சலங்கை இல்லாம ஜங்கு ஜங்குன்னு ஆடுமே, ஐயோ பரி மச்சான் எப்படி சமாளிக்குமோ, கடவுளே மாரியம்மா என்னைய எப்படியாவது இதுல இருந்து காப்பாத்தீரு நான் உனக்கு மாவிளக்கு எடுக்குறேன்” என்று அம்மனுக்கு ஒரு மனு போட்டு விட்டு கலங்கிய மனதுடனும் மருண்ட விழிகளுடனும் என்ன வந்தாலும் எதிர் கொள்ள தயாரானாள் அலரி.
-Kamali Maduraiveeran
