Skip to content
Post Views: 7,347
இரும்பில் ஓர் இதயம்…..11
ஆறு நாட்கள் கடந்திருந்தது பரிதியை மருத்துவமனையில் அனுமதித்து.அவனின் காயங்கள் முழுமையாக ஆறவில்லை என்றாலும் ஓரளவிற்கு காய்ந்துவிட்டது.ஆனால் காலின் காயம் தான் சற்று ஆழமாக இருந்ததால் அது ஆற மேலும் நாட்கள் ஆகும் என்றனர் மருத்துவர்கள்.மிருதுளா பரிதியின் பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டாள் என்பதை விட பரிதி அவளை எங்கும் நகரவேவிடவில்லை என்பது தான் உண்மை.அனைத்திற்கும் அவளை தான் நாடினான்.
மிருதுளா சற்று நேரம் பக்கத்தில் இல்லை என்றாலும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்க அவளிற்கு தலைவேதனையாகி போனது.இதில் திவ்யா வேறு அவளை தன்னால் முடிந்த மட்டும் வெறுப்பு ஏற்றி விட்டு செல்லுவாள்.உன் மகாராஜா இப்படி அப்படி என்று அது வேறு அவளிற்கு எரிச்சலை கொடுத்தது.
அதிலும் அவனை சுத்தம் செய்தால் தான் சில காயங்களுக்கு மருந்திடவே முடியும் என்று மருத்துவர்கள் கூற அவனோ மாட்டேன் என்று அடமாக இருக்க மிருதுளா தான் ஓய்ந்து போனாள் அவனிடம் தர்க்கம் செய்து.முகத்தை சுத்தம் செய்ய சென்றால் அவளிடம் எரிந்து விழுந்தான் கோபத்தில் கையை தட்டி ஆர்ப்பாட்டம் செய்ய ஒரு கட்டத்தில் அவனிற்கு மயக்க மருந்து கொடுத்து தான் அவனிற்கு முடி வெட்டி முகத்தை கொஞ்சம் சீர் செய்தாள்.அதிலும் தினமும் அவனை குளிக்க வைத்து அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஆக மொத்தம் மிருதுளாவின் கோபமும் அதன் எல்லையை தொட்டுக் கொண்டிருந்தது.
Advertisement
அன்று மருத்துவர் வந்து பார்த்துவிட்டு நாளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூற அப்போது தான் மிருதுளாவிற்கு சற்று மூச்சே வந்தது.
பின்னே அவனாவது இரவு நேரம் தூங்குவான் மிருதுளாவிற்கு இரவு உறக்கமும் இருக்காது.ஆம் அவன் தூங்கிய பிறகு வேலைக்கு சென்றுவிடுவாள் வயிற்று பாட்டை பார்க்க வேண்டுமே.காலை நேரத்து பணியை இவனிற்காக இரவு மாற்றிக் கொண்டாள்.திவ்யாவிற்கு தான் கோபமாக வரும் என்ன செய்தான் இவன் என்று இவள் இப்படி தன்னை வறுத்தி கொள்கிறாள் என்று.
ஆனால் அவளிடம் இதை எல்லாம் பேசமாட்டாள் நாயகி அவளை கடுமையாக எச்சரித்திருந்தார் இது புருஷன் பொண்டாட்டி பிரச்சனை இதற்குள் நீ போக கூடாது என்று தாய் இதுவரை அவளிடம் கடுமையாக எதையும் கூறியதில்லை என்பதால் தன் மீது தான் தவறு என்று திவ்யாவும் அமைதியாகவிட்டாள்.
Advertisement
அதோஇதோ என்று பரிதியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள்.கால் காயம் ஆறவில்லை என்பதால் நொண்டி தான் நடந்தான்.அவனை வீட்டிற்குள் அழைத்து வந்து அவனை அமர செய்தவள்,
Advertisement
“இருங்க கொஞ்சம் பொருள் வாங்க வேண்டியிருக்க வாங்கிட்டு வந்துடுறேன்….”என்றுவிட்டு அவனின் முகத்தை பார்க்க அவனோ எனக்கு நீ பேசியது காதில் விழுந்துவிட்டது அவ்வலவே என்ற ரீதியில் அமர்ந்திருந்தான்.
“வாயை திறந்து போயிட்டு வான்னு சொன்னா என்னவாம்….”என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவள் வெளியில் சென்றுவிட்டள்.வீட்டிற்கு தேவையான சில சாமான்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பும் போது திவ்யாவின் வீட்டு வாசலில் நாயகி அமர்ந்திருந்ந்தார் இவளை கண்டவுடன் அவர் புன்னகைக்க,
“வாம்மா….வீட்டுக்கு தம்பியை கூட்டிட்டு வந்திட்டியா….தம்பி எப்படி இருக்கு….”என்று விசாரிக்க,
Advertisement
“ம்ம்ம்….இப்ப பரவாயில்லைமா…..”என்றவள் அவரிடம் சென்று,
“ம்ம்மா….அது….”என்று தயங்க,
“என்னமா….ஏதாவது வேணுமா….”என்று நாயகி கேட்க,
“அச்சோ இல்லமா ஏற்கனவே நீங்க செஞ்சதுக்கு நான் எப்படி கைமாறு செய்ய போறேன்னு தெரியலை….”என்றவள் அவரின் கையில் கொஞ்சம் பணத்தை திணித்து,
“ம்மமா….இப்போதைக்கு இது தான் இருக்கு கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திடுறேன்மா….”என்று கூற நாயகி பரிவாக பார்த்தார்.அவருக்கு மிருதுளாவின் நிலை நன்கு புரிந்தது அவரும் இந்த நிலை எல்லாம் கடந்து வந்தவர் தானே அவரின் கணவரும் இப்படி தான் ஏதாவது ஏடாகூடமாக செய்துவிட்டு வந்துவிடுவார் அதில் நாயகி தான் திண்டாடுவார்.என்ன தான் கணவன் என்பவன் சரியில்லை என்றாலும் பெண்கள் பொறுத்து போக தான் வேண்டியாதாகிவிடுகிறது.அதனால் தான் பெண்களை பூமா தேவி என்று கூறுகிறார்கள் போல.
“மிருது….எனக்கு புரியுதுனு ஏன் சொல்லுறேன் தெரியுமா…..நானும் உன்னை போல தான் என் புருஷனும் இப்படி தான் இருப்பார்….எதுக்கு எடுத்தாலும் கோபம் தான் வரும்….வெளில உள்ளவங்க எல்லாம் அவரை மிருகம் அப்படி தான் சொல்லுவாங்க…..ஆனா எனக்கு தெரியும் அவரு எப்படிபட்ட மனுஷன்னு…..என்னை ஒரு நாளும் வார்த்தையால நோகடிச்சது இல்ல….சந்தேகபட்டதில்ல….எனக்கே எனக்குனு மட்டும் இருந்தவர்….”என்று அவர் கூற கூற அவரின் கண்களில் அத்தனை ரசனை.
“ம்ம்….இப்படி சொல்லிக்கிட்டே போலாம்…..உன் புருஷன் அடுத்தவங்ககிட்ட எப்படியோ எனக்கு தெரியாது ஆனா….உன்கிட்ட மட்டும் தான் அவன் அவனா இருக்கான் அதனால தான் உன்கிட்ட கோபப்படுறான்,உன்னை மட்டும் தேடுறான்….இதை நீ புரிஞ்சிக்கிட்டாளே போதும்…..ஏதோ உன்கிட்ட இதையெல்லாம் சொல்லனும் தோணுச்சி அதான் சொன்னேன்….தப்பா எடுத்துக்காத…..”என்று கூற,
“ம்மமா…..உங்க பொண்ணுக்கு நீங்க சொல்லி கொடுக்குறீங்க…..இதுல என்ன தப்பு இருக்கு….ஏன் நான் உங்க பொண்ணு இல்லையா…..”என்று கேட்க,
“நீயும்,திவியும் எனக்கு வேற வேற இல்லை…..சரி….சரி போ உன் புருஷனை பாரு…..போ…..”என்றுவிட்டு அவர் போக,மிருதுளாவும் ஒருவித உற்சாக மனநிலையில் தான் தன் வீட்டின் உள்ளே சென்றாள்.
மிருதுளா உள்ளே நுழையவும் அவளின் மீது ஒரு டம்பளர் வந்து விழவும் சரியாக இருந்தது.
“ஆஆ….ஏன் அடிக்கிறீங்க…..”என்று அவனை முறைக்க,
“எங்கடீ போன…..எவ்வளவு நேரம்….ஆங்….”என்றவன் முகம் ஏதோ அவஸ்தையாக இருக்க,வேகமாக அவனிடம் நெருங்கியவள்,
“அச்சோ சாரி….சாரி….வாங்க…எந்திரிங்க….”என்றவள் அவனை எழும்ப உதவி செய்தவள் அவனை குளியல் அறையில் விட்டாள்.அவன் முடித்து வெளி வரும் வரை அவள் நிற்க,
“எனக்கு வர தெரியும்….போ….”என்று வெளி வந்தவனின் வாய் கூறினாலும் கரங்கள் என்னவோ மிருதுளாவின் தோள்களில் தான் இருந்தது.
“அப்போ நீங்களே போயிருக்க வேண்டியது தான எதுக்கு என்னை அடிச்சீங்க….”என்று கூற அவள் இடையில் ஒரு கிள்ளு கிள்ளி விட்டவன்,
“ம்ம்ம்….சும்மா உன்னை அடிக்க ஆசை….அதான்…..”என்றுவிட்டு செல்ல,மிருதுளா அதிர்ந்துவிட்டாள் அவனின் இடை தீண்டலில்.வலித்த இடையை தடவிய படி அவள் வர,பரிதியோ எதையும் கண்டு கொள்ளாமல்,
“பசிக்குது…..சாப்பாடு எடுத்துட்டு வா…..”என்று அடுத்த கட்டளை விடுத்தான்.
“எவ்வளவு கொழுப்பு….செய்யறத செஞ்சிட்டு…..ஒண்ணுமே செய்யாத மாதிரி இருக்கார்….”என்று மிருதுளா முணுமுணுத்துக் கொண்டே சாப்பாட்டை எடுத்து வந்து அவனின் அருகே அமர,
“இது தான் சாப்பாடா….”என்று அவன் முகத்தை சுழித்து கேட்க,
“ப்ச்….இன்னைக்கு தானே வந்தோம்….நாளையிலேந்து நான் சமைச்சு தரேன்…..இப்ப சாப்பிடுங்க….”என்றவள் அவனிற்கு சாதத்தை பிசைந்து ஊட்ட,பரிதி எதுவும் கூறாமல் வாங்கி கொண்டான்.தன்னை எப்படி சரியாக அவள் கணிக்கிறாள் என்று பரிதியும் கேட்கவில்லை மிருதுளாவும் அவனை எப்படி இவ்வளவு துல்லியமாக கணிக்கிறோம் என்று அறியவில்லை.
ஆனால் அவனின் முகத்தை வைத்தே அவன் நினைக்கிறான் என்று கூறுவிடுவாள்.சிறு பிள்ளைக்கு செய்வது போல் தான் அவனை தாங்குவாள் ஆனால் அவனிடம் பெரிதாக எந்த பிரதிபலிப்பும் இருக்காது அதை அவள் எதிர்பார்க்கவும் இல்லை போல.எதிர்பார்ப்பு இல்லாத இடத்தில் ஏமாற்றங்கள் இருக்காது அதனால் மிருதுளாவும் எந்தவித எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளவில்லை போல.
பரிதி சாப்பிட்டு முடிக்கவும் அவனை சாய்வாக அமர வைத்தவள் தனது உணவை எடுத்து உண்ண தொடங்கினாள்.அவள் சாப்பிட்டு முடிக்கவும் அவனிற்கான மாத்திரைகளை எடுத்து கொடுக்க அவனும் வாங்கி முழுங்கினான்.
“உடனே படுக்காதீங்க….கொஞ்ச நேரம் உட்காருங்க….”என்று கட்டளையாக கூற,பரிதி சுவற்றில் சாய்ந்து அமர்ந்துவிட்டான்.ஒற்றை கரத்தால் கண்களை மூடியபடி அவன் சாய்ந்திருக்க,மிருதுளா சாப்பிட்ட பாத்திரங்களை ஓர ஒதுங்க எடுத்து வைத்துவிட்டு கதவடைத்துவிட்டு அவனின் அருகே அமர,கரத்தை எடுத்து அவளை பார்த்தவன் மீண்டும் முகத்தை மூடிக் கொள்ள,
“அடியே மிருது….இப்படியே இருந்தா அப்புறம் பேச முடியாது…..கேளு….”என்று ஒரு மூளை கூற,மற்றொரு மூளையோ,
“இப்ப தான் கொஞ்சம் தெளிஞ்சிருக்கார் அதுக்குள்ள என்ன அவசரம்…..”என்று கூறினாலும்,எங்கே அவன் திரும்பியும் எங்காவது சென்றுவிடுவானோ என்ற பயமும் இருந்தது.
“ம்ஹம்….ம்ம்ம்….என்னங்க….”அவள் கூப்பிட அந்த பக்கம் எந்த பதிலும் இல்லை அவனின் நிலையிலும் எந்த மாறுதலும் இல்லை.
“ஒருவேளை தூங்கிட்டாரோ….”என்றுவிட்டு அவனிடம் இன்னும் நெருங்க,
“ப்ச்…..தள்ளு….”என்றவன் அவளை ஒற்றை கரத்தால் நகர்த்த,
“அடப்பாவி தூங்கலையா…..அப்புறம் நான் கூப்பிட்டேன் பதிலே காணும்…..”என்று அவனிடம் கேட்க,
“எனக்கு தூங்கனும்….தள்ளு….”என்று அவளை நன்றாக நகர்த்தி அவளின் மடியில் படுத்துவிட்டான்.மிருதுளாவிற்கு அவனின் செயலில் வார்த்தைகள் வரவில்லை.சற்று நேரத்தில் தன்னிலை பெற்றவள் மீண்டும் அவனிடம் கேட்கலாம் என்று குனிந்து அவனை பார்க்க,அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான்.
“ம்ம்ம்….தூங்கிட்டாரு…..இவரை என்ன தான் செய்யறது….முதல்ல என்னை துரத்திக்கிட்டே இருந்தாரு இப்ப என்னடானா என்னை ஒட்டிக்கிட்டே இருக்காரு….ஆனா ஒண்ணும் மட்டும் பரிம்மா சரியா தான் சொல்லிருக்காங்க என்கிட்ட மட்டும் தான் எதையோ எதிர்பார்க்குறாரு…..ம்ம்ம்….அது என்ன அது தான் புரியலை….”என்று அவள் தனக்குள் பேசிக் கொண்டாலும் அவளின் கைகள் அவனின் கேசத்தை கோதியபடிதான் இருந்தன.அடுத்த நாள் காலை பொழுது அமைதியாக கழிந்தது ஆனால் மாலை,
“படீர்….படீர்….தடார்…..”என்று மிருதுளாவின் வீட்டில் ஏதோ உடையும் சத்தமும் கூடவே மிருதுளாவின் சத்தமும் அவள் வீட்டின் வெளி வரை கேட்க,திவ்யா கைகளை பிசைந்தபடி பல்லைக் கடித்துக் கொண்டு நின்றாள்.நாயகிக்கோ நடப்பவை மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் ஒண்ணும் செய்யமுடியாமல் நின்றிருந்தார்.
“என்ன தான் இருந்தாலும் இப்படியா ஒருத்தன் பொண்டாட்டிய போட்டு அடிப்பான்….இதை யாரும் இங்க கேட்க மாட்டீங்களா….”என்று பக்கத்தில் உள்ள ஒரு பெண் கேட்க,
“ஏன் நீ போய் கேட்க வேண்டியது தான…..”என்றாள் அவளின் பக்கத்தில் நின்ற பெண்,
“அய்யோ நானா அந்த காட்டான் கிட்ட மனுஷன் பேசுவானா…..எப்ப பாரு எல்லாரையும் முறைச்சிக்கிட்டு திரியிறான்….”என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே மிருதுளாவின் வீட்டு கதவு திறக்கப்பட்டது.அனைவரும் மிருதுளாவிற்கு என்ன ஆச்சோ என்று பயந்தபடி பார்க்க திவ்யா ஒரு படி மேல் போய்,வெளி வந்து கொண்டிருந்த பரிதியின் சட்டை பிடித்துவிட்டாள்.
“ஏய்…..நீ மனுஷனா…உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா மிருது மேல கை வைப்ப…..உன்னை…..இரு அவளுக்கு ஏதாவது ஆச்சு அப்புறம் இருக்கு….காட்டுமிராண்டி….”என்று திட்ட அவளின் கைகளை தனது சட்டையில் இருந்து எடுத்துவிட்டு அவன் நொண்டியபடி வெளியில் சென்றுவிட.
“அச்சோ போச்சு….யோவ் எல்லாத்தையும் இப்படி உடைச்சிட்டு போற….”என்று கத்தியபடி வெளியில் வந்தாள் மிருதுளா.
“ஏய் நீ எப்படி இருக்க….முதல்ல வா போலீஸ் கிட்ட சொல்லாம்……வா….”என்று திவ்யா மிருதுளாவை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்து கொண்டே கூப்பிட,
“அடியே எனக்கு ஒண்ணுமில்ல….நான் நல்லா தான் இருக்கேன்…..”என்று மிருதுளா கூற,
“அட என்ன பொண்ணு நீ உன்னை அடிச்சிட்டு போறான்….உன் சத்தம் இங்க வரைக்கும் கேட்டுது….நீ என்னடானா நல்லா இருக்கேன்னு சொல்லுற….”என்று ஒரு பெண் கூற,
“அட நீ வேற க்கா…..என்ன இருந்தாலும் அது அந்த பொண்ணோட புருஷன் விட்டுக் கொடுக்க முடியுமா….”என்று இன்னொருவர் கூற,மிருதுளா அப்போது தான் தன்னை சுற்றியிருந்த கூட்டத்தை பார்த்தாள்.
“ஏன்மா பொண்ணு….என்ன உன் புருஷன் இப்படி நடந்துக்குறான்….உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையெல்லாம் சத்தம் இல்லாம வச்சுங்க….இங்க அக்கம் பக்கத்துல உள்ளவங்க எல்லாம் இருக்க வேண்டாம்….சத்தம் தெரு வரை கேட்குது…..பார்த்துக்க….உன் பார்த்தா நல்ல பொண்ணா தெரிஞ்ச அதனால தான் வீடு கொடுத்தேன்…..”என்று வீட்டு ஓனரம்மா வேறு கூறிவிட்டு செல்ல,
“இல்லங்க இனி இப்படி நடக்காது….”என்று அசடு வழிய கூறியவள்
“அய்யோ….எல்லாம் இவரால….வீட்டுக்கு வரட்டும் அப்புறம் இருக்கு….”என்று மனதிற்குள் பரிதியை கருவியபடி இருக்க,
“மிருது…மிருது….ஏய்…..”என்று திவ்யா அவளை உலுக்கவும் நினைவுக்கு வந்தவள்,
“ஆங்….எனக்கு ஒண்ணுமில்லடீ….அவரு கோபத்துல பாத்திரத்தை தான் உடைச்சிட்டு போறாரு….”என்று கூற,
“போதும் உன் மகாராஜா பத்தின உன் புகழாராம்…..அந்த காட்டுமிராண்டி….”என்றவள் மேலும் கூறும் முன் அவளை தடுத்த மிருதுளா,
“திவி….போதும்….அவரை காட்டுமிராண்டினு சொல்லாத…..உனக்கு அவரை பிடிக்கல அதோடவிடு….ஆனா அவரை கண்டபடி பேச நான் அனுமதிக்க மாட்டேன்…..”என்று மிருதுளாவின் குரல் அழுத்தமாக வந்தது.
“ஏன்டீ….நான் உனக்காக பேசினா நீ என்னையே திட்டுற…..”என்று திவ்யாவும் எகுற,
“ப்ச்….திவி விடுடீ….எனக்கு ஒண்ணுமில்ல…..அப்படி அவர் என்னை அடிச்சிருந்தா நான் முதல்ல எழுந்து வந்திருக்க முடியுமா….இது வேற பிரச்சனை…..”என்றவள் மற்றவர்களிடமும் மன்னிப்பை வேண்டினாள்.
திவ்யா இவளையே முறைத்தபடி நிற்க மூச்சை இழுத்துவிட்டவள்,
“திவிமா முடியலைடீ….ஏற்கனவே அவரை சமாளிக்கவே எனக்கு தனி தெம்பு வேணும் போல இருக்கு…இதுல நீயும் என்னை படுத்தாத….வா….”என்று அவளின் கையை பற்றி அவள் வீட்டின் வாசலில் அமர செய்தவள்,தானும் அவளுடன் அமர,
“ஏன்டீ உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரிய மாட்டேங்குது…புருஷன் பொண்டாட்டி பிரச்சனைக்குள்ள நீ போகாதுனு சொன்னா கேட்கமாட்ட….”என்று நாயகி கோபத்தில் கத்த,
“ம்மா…..விடுங்க….அவ என்மேல உள்ள பாசத்துல ஏதோ பேசிட்டா….”என்று மிருது நாயகியை சமாதான படுத்த,
“ஆமா ஆமா உன் கிட்ட வாயால பேசினா….உன் புருஷன் கிட்ட கையால பேசினா….”என்று நாயகி கூற,மிருதுளாவிற்கு நெஞ்சம் நடுங்கிவிட்டது.அவளின் வெளிறிய முகத்தை கண்ட திவ்யா,
“ப்ச்….ம்மமா….ஒழுங்கா சொல்லு….நான் சட்டைய தான் பிடிச்சேன்….ஏதோ அடிச்ச மாதிரி பில்டப் கொடுக்குற….”என்றவள் மிருதுளாவிடம்,
“நீ ஷாக்க குறை…..உன் உத்தம ராஜாவை ஏதோ பண்ணிட்டது போல பார்க்குற…..”என்று வேறு கிண்டல் செய்ய,மிருதுளாவிற்கு ஆச்சிரியம் தான் பரிதி திவ்யா நடந்து கொண்டதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் சென்றது.
“அவ்வளவு நல்லவர் எல்லாம் இல்லையே….”என்று மிருதுளா வாய்விட்டே புலம்ப,
“அதே தான் நானும் சொல்லுறேன்….உன் ராஜாக்கு நீ கூஜா தூக்காம வா போலீஸ்ல சொல்லாம்….”என்று திவ்யா கூற,
“அடியே அவர் உன்னை எதுவும் செய்யாம போயிருக்காரேனு நான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்….”என்ற மிருதுளாவை முறைத்த திவி,
“ஏன்டீ….நான் உன்னை காப்பாத்துனா நீ என்னை சிக்கல்ல மாட்டிவிட பார்க்குற…இதுக்கு தான்டீ சொல்லுவாங்க….காதல் பைத்தியங்க கூட எல்லாம் பிரண்ட் ஷிப் வச்சிக்காதனு…..”என்று விட்டு கோபமாக எழுந்து செல்ல,
“அடியே நில்லுடீ…ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன்….”என்று கூறியவாரே அவளின் பின்னே சென்றாள்.
இரவு நேரம்,
எந்த பக்கமும் நகர முடியாமல் இருந்தான் அவன்.அவனின் வாயையும் துணி கொண்டு அடைத்திருந்தாள் மிருதுளா.அவன் அடங்காமல் திமறிக் கொண்டிருக்க,
“சும்மா இருங்க….இல்ல ராத்திரி பூரா கட்டி வச்சிடுவேன்…..”என்றவள் மிரட்ட,
“அடியே என் கையில நீ சிக்குன….உன்னை கொல்லப்போறேன் பாரு…..”என்று கண்களால் எச்சரிக்கை விட்டுக் கொண்டிருந்தான் பரிதி.
error: Content is protected !!