Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Karuvin Kural

Karuvin Kural 14

கருவின் குரல்
அத்தியாயம் 14

அனிஷ் மெல்ல மெல்ல புது பள்ளிக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டாள். பழைய பள்ளியில் அவள் அம்மா அவளுடனே இருப்பாள், இந்த பள்ளியில் அவள் மட்டுமே செல்ல வேண்டும் என்பதால் அடிக்கடி தனது பழைய பள்ளியைப் பற்றி பேசிக் கொள்வாள்.

அன்று காலை, ஜானகி அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்க, அனிஷ்
“பூஜா அக்கா, இந்த ப்ராகிரஸ் ரிப்போர்ட் பாரு. எனக்கு நைன்த் ரேங்க் போட்டு இருக்காங்க. நான் நல்லாதா படிச்சு எழுதுனே ஆனாலும் நைன்த் ரேங்க்! என்னோட ப்ரண்ட் மிருணாக்கு ‘ஃபோர் ப்ளஸ் டூ’ சிக்ஸ் னு கூட தெரிலே! நான்தா அவளுக்கு என் பேப்பரை காட்டி எழுத வைச்சே! இப்போ மிருணா பர்ஸ்ட் ரேங்க், நா நைன்த் ரேங்க்! புள்ளையாரப்பா, இனிமே நான் உன்னை கும்படவே மாட்டேன். உனக்கு ரெண்டு ரோஜாப் பூ கூட வைச்சேன் இல்ல, நீயும் என்னை ஏமாத்திட்டே!” எனக் கோவிலை நோக்கி கூறினாள்.

அதற்குள் பாலா வந்து,
“சரி விடு அனிஷ், அடுத்த எக்ஸாம் நல்லா எழுது,” எனக் கூறினான்.



Advertisement

“இல்ல பாலா அண்ணா! உலகத்துல யாருகாச்சு இப்படி நடக்குமா? படிச்சு எழுதறே புள்ளைக்கு நைன்த் ரேங்க்! பார்த்து எழுதன புள்ளை பர்ஸ்ட் ரேங்க்! இந்த ஸ்கூல் எனக்கு புடிக்கல மம்மி. என்னை வேற ஸ்கூல்ல சேத்து விடு!”என்றாள்

சுதா வந்து, “எங்க ப்ராகிரஸ் கார்டு காட்டு,” எனக் கேட்டாள்.

“சுதா அக்கா, உனக்கு ஒன்னு தெரியாது! படிச்ச புள்ள பாக்கட்டும். பூஜா அக்கா, நீயே பாரு,” என்றவளை கண்ணத்தில் செல்லமாக ஒரு இடி இடித்தாள் சுதா.

Advertisement

அதற்குள் ஜானகி வந்து,”நீ பண்ணுன திருட்டு வேலைக்கு நைன்த் ரேங்க்கே ஓவர்! ஒழுங்கா வந்து டிபன் சாப்பிடு, கிளம்பனும்,” என்றாள்.

Advertisement

இருவரும் ஆவிப் பறக்கும் இட்லியை, சூடான சாம்பாருடன் உண்டனர்.

இந்த மாத வீட்டு வாடகை கொடுக்க வேண்டிய நாள். இவ்வளவு நாளாக சுதாவிடம் கொடுத்து, தேவாவிடம் கொடுக்கச் சொல்வாள். ஆனால் இன்று தங்கள் உறவு முறை சுதாவிற்கு தெரிந்தபின் அவரிடம் கொடுப்பது சரிவராது. ஏனெனில் அவர் தேவாவின் மீது வெறுப்பை காட்டுவார்; அது தனக்கு பிடிக்காது. அவரிடம் தேவாவை விட்டுக் கொடுக்கவும் முடியாது. எனவே தானே சென்று வாடகை கொடுக்க முடிவெடுத்தாள்.

தேவா வீட்டு காலிங் பெல்லை அடிக்க, மைதிலி வந்து கதவை திறந்தாள்.
பனியனும் அரைக்கால் பேண்ட்டும் அணிந்திருந்தாள். தாலிக்கொடி முன்னால் தொங்க, தலைவிரி கோலமாய் வந்து நின்றாள். அவள் வந்த கோலம் ஜானகிக்கே முக சுளிப்பைத் தந்தது.

Advertisement

அவள் முகத்தைப் பார்க்காது, “இந்தாங்க, இந்த மன்த் ரென்ட்,” என்றாள்.

மைதிலிக்கு இருவரது காதல், திருமணம், குழந்தை பிறப்பு எல்லாம் தெரியும். இருந்தும் தேவாவை பிடித்து இருந்தது. அதைவிட பிரதானம் அவன் சொத்து மற்றும் ஊரில் ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்ற கௌரவம் வேண்டும் என்பதற்காக மணந்து கொண்டாள்.

திருமணம் முடிந்து இவ்வளவு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், தேவா அவள் டேஸ்ட்க்கு ஏற்ப இல்லை என்பதால், அவனை பெயரளவில் மட்டுமே கணவனாக வைத்திருந்தாள். ஆனால் தற்போது தேவா ஜானகி பக்கம் செல்வது சற்று கலக்கத்தை தந்தது.

இன்று ஜானகி அவள் வீட்டுக்கு வந்திருப்பதால், “நாங்க மனமொத்த தம்பதிகளாகத்தான் வாழ்கிறோம்” என்பதை காட்ட நினைத்தாள்.

ஜானகியிடம்,
“ஒரு நிமிஷம் இருங்க. நான் அவரை கூப்பிடரே. நீங்க அவங்க கிட்டையே கொடுத்துருங்க,” என்று கூறி,” மச்சான், இங்க கொஞ்சம் வாங்க,” என்றாள்.

“என்னவென்று?” கேட்டவாறு வந்த தேவா, ஒரு நிமிடம் ஜானகியை பார்த்து திகைத்தான். ஏதோ கள்ளகாதல் செய்து மனைவியிடம் மாட்டிக் கொண்டது போல் குற்ற உணர்வில் ஜானகி முன் நின்றான். காரணம் மேல் சட்டை இல்லாமல் சாட்ஸ் அணிந்து கொண்டு வந்தான்.

ஜானகிக்கு ‘ஏன்டா வந்தோம்?’ என்ற தர்ம சங்கடமான நிலை.
நிமிர்ந்து பார்க்காமல், “இந்தாங்க, வாடகை,” என்று கொடுத்து விட்டு கிளம்பி விட்டாள்.

தற்போது ஜானகி இரவு வர பத்துமணி ஆவதால், அனிஷ் மாலை சுதாவின் கவனிப்பில் இருந்தாள். அன்று பூஜாவுடன் அமர்ந்து ஹோம் வொர்க் செய்து கொண்டிருந்தாள்.

தேவா, அனிஷின் சைக்கிளுக்கு பஞ்சர் ஓட்டி கொண்டு வந்து நிறுத்த, ஒரே குஷி இருந்தும், “ஜானகி வந்து சொல்லும் வரை சைக்கிளை தொட மாட்டேன்,” எனக் கூறி ஹோம்வொர்க்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

“சரி, அம்மா வந்ததும் நானே பர்மிசன் வாங்கி தரே ,” எனக் கூறி வீட்டிற்குள் சென்று அமர்ந்துக் கொண்டான்.

பத்து மணி, ஜானகி வந்துவிட்டாள். சைக்கிளை பார்த்து யோசனையுடன் உள்ளே செல்ல, தேவா அமர்ந்திருந்தான்.
என்ன சொல்வது என தெரியாமல் நேரே கிச்சனில் சென்று டிபன் தயாரிக்க ஆரம்பித்தாள்.

அவள் ஏதாவது பேசுவாள் என எதிர் பார்த்த தேவாவுக்கு, அவள் தன்னை மதிக்காமல் சென்றது ஏமாற்றமே.

அனிஷ்,
“மம்மி, ஹவுஸ் ஓனர்தான் சைக்கிள் ரெடி பண்ணுனார். மம்மி, நா எதும் கேக்குல!” எனக் கூறினாள்.

அவள் ஏதும் பேசாமல் வெங்காயம் உரித்து கொண்டிருக்க, தேவா வந்து, “அனிஷ், நீ சொன்னாதா சைக்கிள் ஓட்டுவேனு? சொல்லுது நீ சரின்னு சொல்லு,” என்றான்.

அவனை நிமிர்ந்து பாராமல், “சரி,” என்றாள். அதற்குமேல் நிற்காமல் இடத்தை காலி செய்து விட்டான்.

அனிஷ், ஜானகியின் முகத்தை ஏக்கத்தோடு பார்க்க, மகளை சைக்கிள் ஓட்ட சம்மதித்தாள். அன்று இரவு உற்சாகமாக சிறிது தூரம் சைக்கிள் ஓட்டிவிட்டு தூங்க சென்றனர் இருவரும்.

சூப்பர் மார்க்கெட்டின் பில்லிங் கவுண்டரில் நின்று கொண்டிருந்த ஜானகிக்கு, பில்லிங் மெஷின் ஒலி மெல்ல மெல்ல தூரமாகக் கேட்கும் போல இருந்தது. மனம் வேறேங்கோ போய்விட்டது. தினமும் பத்து மணிவரை வேலை செய்தாலும், சம்பளம் மாதத்திற்கு பனிரெண்டாயிரம் ரூபாய் தான்.

அதில் வீட்டு வாடகை, அனிஷின் பள்ளி பீஸ், மின்சாரம், அத்தியாவசிய செலவுகள் எதுவும் சமாளிக்க முடியவில்லை.

முதலில் இவள் பள்ளியில் வேலை செய்ததால், அனிஷிற்கு கன்ஷெசன் கிடைத்தது. ஆனால் தற்போது முழு ஸ்கூல் பீஸ் இவள்தான் கட்ட வேண்டும்.

அன்று மாலை வீட்டுக்கு வந்தவுடன், அந்ந மாத செலவு போக, பையில் இருந்த மீதமுள்ள பணத்தை மெதுவாக எடுத்து எண்ணினாள். மூன்று நூறு ரூபாய் மட்டுமே இருந்தது.

அனிஷின் புன்னகை முகம் மனதில் தெரிந்தது.”இதுலே ஒரு மாதம் எப்படி சமாளிக்க முடியும்?” என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
மாத சம்பளம் வருவதற்கு முன்பாக செலவு வரிசை கட்டி நின்றது.

அனிஷ் அடுத்த அறையில் பாடப்புத்தகம் திறந்து உட்கார்ந்திருந்தாள்.
“மம்மி, நாளைக்கு ஸ்கூல்லே பேன்ஸி ட்ரெஸ் டே. எனக்கு புதுஹேர் பேண்ட் வேணும்,” என்றாள்.

“இந்த வாரம் வாங்க முடியாது பாப்பா. நெக்ஸ்ட் மன்த் பாக்கலாம்,” என்று மெதுவாகப் பேசினாள் ஜானகி.

அனிஷ் முகத்தைத் திருப்பி, “நீ எப்பவும் இப்படித்தான் மம்மி சொல்றே…” என்று குறைபட்டுக் கொண்டாள். அந்தச் சிறிய குரல் ஜானகியின் மனதில் கத்தி போல் குத்தியது.
தன் குழந்தைக்கு ஒரு சிறிய பொருள்கூட வாங்கிக் கொடுக்க முடியாத நிலை அவளை நொறுக்கியது.

அடுத்த நாள் கடையில் பில்லிங் செய்து கொண்டிருந்தபோது, அருகில் வந்த ஒரு வாடிக்கையாளர் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
“தேனிலே பூண்டு சந்தை இருக்கு. இப்போ குளிர்காலம் துவங்கிடுச்சு. நல்ல சீசன் வேறு! அதை வாங்கி விற்றால் லாபம் வரும். மூன்று நாள்ல பணம் கையில் வந்துரும்!” என்றார்.

அந்த உரையாடல் ஜானகியின் மனதில் ஒரு வெளிச்சத்தைப் பரப்பியது. அவள் கண்களை மூடி நினைத்தாள்,
“பூண்டு சந்தைக்கு போய் அதை வாங்கி விற்றால் கூடுதல் பணம் கிடைக்கும். குறைந்தது அனிஷின் பீஸ் கட்டவாவது அந்த தொகை உதவலாம்…” என்று நினைத்தாள்.

அந்த இரவு அனிஷ் தூங்கிய பிறகு, அவளின் பள்ளி டைரியில் சைன் போட எடுத்தாள். அதில் டெர்ம் பீஸ் இரண்டு வாரங்களில் கட்ட வேண்டும் என எழுதி இருந்தது.

கையில் சுத்தமாக பணம் இல்லை.
என்ன செய்வது? யாரிடம் கேட்பது? என யோசித்தாள்.

சூப்பர் மார்க்கெட்டில் இப்போதுதான் சேர்ந்துள்ளோம் அங்கே கேட்க முடியாது. சுதா அக்காவிடம் கேட்டால் தருவார், ஆனால் எவ்வளவு நாட்கள் அவரிடம் வாங்குவது?

அப்பாவிடமோ தேவாவிடமோ கேட்பது கூட ,தான் வாழும் வாழ்க்கையின் அர்த்தத்தை ஒரு நொடியில் சுக்குநூறாக உடைத்துவிடும் என்று எண்ணினாள்.

அப்போதுதான் காலை பூண்டு சந்தை பற்றி வாடிக்கையாளர் பேசியது நினைவு வந்தது. யூடியூப்பில் அதை பற்றிய செய்திகளை தெரிந்து கொண்டாள்.

ஒரு பழைய டைரியை எடுத்து, ஒரு பக்கத்தில் கணக்கு போடத் தொடங்கினாள்.
“பஸ் டிக்கெட் — ₹80
ஹோட்டல் ரூம் — ₹200
சாப்பாடு — ₹100”
அடுத்து ஒரு வரி கீழே,
“விற்றா லாபம் — ₹10,000?” என்று எழுதினாள்.

பத்தாயிரம் லாபம் என்ற எழுத்தை பார்த்தவுடன், அவளது மனதில் நம்பிக்கை முளைத்தது.

அடுத்த நாள் காலை, சூரியன் ஒளி அவள் வீட்டு ஜன்னலின் மீது விழுந்தது.ஜானகி பழைய பர்சில் வைத்திருந்த இரண்டு வெள்ளி கம்மல்களை எடுத்தாள். அந்த சூரிய ஒளியில் அது தங்கமாக மின்னியது.அவற்றை விற்று, தேனிக்கு சென்று பூண்டு வாங்கி விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்தாள்.

சுதாவிடம் தன் முடிவைச் சொன்னாள்.
அவளுக்கு சந்தோசமே.
“தேனிக்கு பஸ் எத்தன மணிக்கெல்லாம் கிடைக்கும் அக்கா?” எனக் கேட்டாள்.

“காலை ஆறரை மணிக்கு பஸ் இருக்கு ஜானகி. ஆனா, நீயே தனியா போறியா?” என்று சுதா கவலையுடன் கேட்டாள்.

“ஆம். அனிஷ் பீஸ் பத்தி நினைச்சா தூக்கமே வர மாட்டேங்குது,” என்று தழுதழுத்த குரலில் பேசினாள்.

அன்று அதிகாலை நான்கு மணிக்கு, ஒரு சிறிய பையை தயார் செய்தாள். அதில் சிறிய தண்ணீர் பாட்டில், பாக்கு மட்டையில் கட்டிய புளியோதரை, கம்மல் விற்ற பணம், அனிஷின் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வைத்தாள்.

பையை மூடும்போது, அவள் ஒருநிமிடம் தன் வாழ்வை நினைத்து கண்ணீர் விட்டாள். பின் அழக் கூடாது என்று தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“அம்மா சீக்கிரம் வருவேன் பாப்பா,” என்று தூங்கிக் கொண்டிருந்த அனிஷின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவளுக்கு ஸ்கூலிற்கு தேவையானதை பேக் செய்து வைத்து விட்டு, சுதாவை பார்த்துக்க சொல்லி கிளம்பினாள்.

பஸ் ஸ்டாண்டில் நின்றபோது, அவளது மனதில் ஒரு கலவையான உணர்வு தோன்றியது. அதில் பயமும், நம்பிக்கையும், தாய்மையும் நிறைந்து இருந்தது.

பஸ் வந்து நின்றது. கண்டக்டர் “தேனி! தேனி!” என்று கூப்பிட்டார்.

ஜானகி பஸ்சுக்குள் ஏறி, ஜன்னல் அருகே அமர்ந்தாள். சாலையின் ஓரம் பசுமை நிறைந்த வயல்கள் விரிந்திருந்தன. காற்று அவளது முகத்தை வருடியது.

“இது எனக்கு ஒரு புதிய துவக்கம்…” என்று மனதில் கூறிக் கொண்டாள்.

அவளது கையில் இருந்த சின்ன பை, மனதில் இருந்த பெரிய கனவு, பூண்டு சந்தை இவையெல்லாம் அவளுக்காக என்ன விதி எழுதப் போகிறது என்பதை காலமே சொல்லும்…

பஸ்ஸின் சத்தத்துடன், அவள் வாழ்க்கையின் புதிய பக்கமும் உற்சாகமாக சத்தமிட்டது.

— கருவின் குரல் ஒலிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!