Skip to content
Post Views: 1,977
கருவின் குரல்
அத்தியாயம் 15
தேனி நகரத்தின் காலை நேரம். தென்னைகள் மெல்ல மெல்ல காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. வடுகப்பட்டி வழியாக சூரியன் தங்க ஒளியைச் சிந்த, பனிக்காற்று சுகமாக வீசியது. தேனிக்கு என்றே ஒரு தனி மணம் இருந்தது , இயற்கையான காற்று, மரம், செடிகள், பூண்டு, மண், மழை ஆகியவை கலந்த கலவையாக.
பஸ்ஸில் இருந்து இறங்கிய ஜானகி தனது பையை கையில் தூக்கிக்கொண்டு மெதுவாக நடைபோட்டாள். அவளது கண்களில் ஒரு சிறு பயமும், ஒரு பெரிய நம்பிக்கையும் கலந்து இருந்தது.
“இது என் மகளின் எதிர்காலத்திற்கான சின்ன படி…” என்று மனதுள் சொல்லிக் கொண்டாள்.
காலைதான் சந்தை என்பதால், இரவு தேனியில்தான் தங்க வேண்டும். ஹோட்டலில் தங்குவது சரிவராது என முடிவெடுத்து, சுதா மூலம் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் ஏற்பாடு செய்திருந்தாள். அங்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாள். அடுத்தவேலையாக சுதாவிற்கு போன் செய்து, பத்திரமாக வந்து விட்டதாகவும், அனிஷை பற்றி விசாரித்து விட்டு போனை வைக்கப் போனாள்.மகளிடம் பேசினால், அவளை பார்க்க வேண்டும் என்று நாள் முழுவதும் அவள் நினைவாகவே இருக்கும். அதை தவிர்க்கவே போனை கட் செய்தாள். அதற்குள் அனிஷ், சுதாவிடம் இருந்து போனை வாங்கி “மம்மி, ஏன் என்கிட்ட சொல்லாமையே போயிருக்கே? நைட் நீ இல்லாம தூக்கமே வரல மம்மி…” என்றாள்.
Advertisement
கண்ணோரம் கசிந்த நீரை துடைத்துவிட்டு,
“பாப்பா, அம்மா உனக்கு பிடிச்சதெல்லாம் வரும் போது வாங்கிட்டு வரே. நீ குறும்பு செய்யாம இருக்கனும்…” என்றாள்.
“மம்மி, எனக்கு உன்ன மட்டுதான் மம்மி புடிக்கும். நீ மட்டும் போதும் மம்மி…” என்றதும், ஜானகிக்கு தன் உணர்வுகளை அடக்க முடியவில்லை.
“சரி அனிஷ்… அம்மாக்கு நிறைய வேலை இருக்கு. முடிச்சதும் வந்தறேன்,” என போனை கட் செய்து விட்டு அழுது தீர்த்தாள்.
Advertisement
பின் தன்னை தானே தேற்றிக் கொண்டு,
“இனி அழுக கூடாது… என் பிள்ளை வாழ்வு என் கையில்…” என்று முடிவெடுத்தாள்.
Advertisement
சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்த பையிலிருந்த பணத்தை எடுத்து, பயண செலவு, ரூம் வாடகை போக மிச்ச பணத்தை எண்ண ஆரம்பிக்கும் போது தான் பாக்கு மட்டையில் கட்டி வந்த புளியோதரை அவளது கண்ணில் பட்டது.
அப்போதுதான் காலையில் இருந்து சாப்பிடாதது நினைவில் வந்தது. அந்த அளவிற்கு அவள் தன்னிலை மறந்திருந்தாள்.
எப்படியாவது கொஞ்சம் லாபமாவது கையில் கொண்டு செல்ல வேண்டும்…
அனிஷ் பள்ளி பீஸ், வீட்டு செலவு, எதிர்கால சேமிப்பு… எல்லாமே அவள் தலைமேல் சுமையாக இருந்தது.
Advertisement
அதனால் உணவை கூட மறந்திருந்தாள்.
அன்றிரவு, ஒரே படபடப்பு அவளுள்
நாளை எப்படி சந்தை போக போகிறோம்?
யாரை பார்ப்பது?
எவ்வளவு வாங்கி எங்கே விற்பது?
எதிர்பார்த்த லாபம் வருமா? பத்திரமாக வீடு திரும்ப முடியுமா?
ஒருவேளை திரும்பும் வழியில் ஏதாவது நடந்தால்… என் மகளின் எதிர்காலம்?என்று ஒரு புறம் குழம்பினாள்.
மற்றொரு புறம் ,அவள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வந்து, ஒரு பெரிய வீட்டில் எல்லா வசதிகளோடும் அனிஷுடன் வாழ்வது போன்ற காட்சிகள் அவளது மனக்கண் முன்னே ஓடியது.
இப்படியான கலவையான மனநிலையுடன் தூங்கச் சென்றாள்.
அடுத்த நாள் காலை வடுகப்பட்டி சந்தை சுறுசுறுப்பாக இருந்தது. கடைகள் முழுக்க வெள்ளை நாட்டு பூண்டுகள் நிரம்பியிருந்தது. ஆண்கள் சிலர் தோளில் மூட்டையை சுமந்தனர்; பெண்கள் விற்பனைக்கு ஆரவாரம் செய்தனர். ஒவ்வொரு கடையிலும் விலைபேச்சு, சிரிப்பு, சண்டை என வாழ்க்கையின் இயல்பான ஒலிகள் ஜானகியின் காதுகளில் ஒலித்தன.
ஜானகி ஒரு மூலையில் நின்று அனைத்தையும் கவனித்தாள்.
“என்னால் இங்கே விலை பேசி வாங்க முடியுமா? உதவிக்கு யாரையாவது அழைத்து வந்திருக்கலாமோ?”
என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தபோதே,
அருகே ஒரு வயதான மனிதரும், அவரது மனைவியும் கூடை நிறைய பூண்டு வைத்துக் கொண்டு,
“பூண்டு வேணுமா?”
என்று கேட்டார்கள்.
அவள் தயக்கத்துடன்,
“ஆமா வேணும்… ஆனா எப்படி வாங்கறதுன்னு தெரியலையே…”என்றாள்
“வீட்டுக்கா? இல்ல வியாபாரத்துக்கா?” என்றார் பெரியவர்.
“வியாபாரத்துக்கு…” என்றாள் ஜானகி.
அவர் சிரித்துக் கொண்டு,”உங்கள பாத்தா நல்ல மனசு மாதிரி தெரிது. இங்க பூண்டு சந்தை நல்லா ஓடும். வாங்கி விற்றா நல்ல லாபம் வரும்…”என்றார்
பெரியவரின் மனைவி கேட்டாள்:”நீங்க எந்த ஊர்?””
“பொள்ளாச்சி” என்றாள் ஜானகி.
“அதுதான்! எங்களுக்கும் சொந்த ஊர் ,பிழைப்புக்காக இங்க வந்தோம்…” இப்போ வீடு,வாசல்னு இங்கேயே இருக்கோம்
என வெற்றிலை கறை படிந்த பல்லை காட்டி சிரித்தார்.
சொந்த ஊர் காரர்கள் என்று அறிந்ததும், ஜானகியின் மனதில் ஒரு தைரியம் குடிகொண்டது.
“எப்படி வியாபாரம் ஆரம்பிக்கணும்னு சொல்லுங்க…” என்று உரிமையாக கேட்டாள்.
“அவர் எவ்வளவு பணம் இருக்கு என்றார். பத்தாயிரம் என்றாள்.
தனியாகவா வந்திருக்க கூட யாரும் வரலியா என கேட்க, இல்லை என முகத்தை தொங்க போட்டுக் கொண்டே தன்னை பற்றி சிறு அறிமுகமும் செய்து கொண்டாள். நானும் என் மகளும் மட்டும் தான், எங்கள் வாழ்வாதாரத்திற்கு இந்த பூண்டு தொழிலை நம்பி வந்துள்ளேன் என்றாள்
அவர் மெதுவாக,
“ஐந்தாயிரம் போதும். மூன்று மூட்டையும் வண்டியும் தர்றேன். இன்னைக்கு ரேட் அறுபத்தி ஐந்து. நீ நூறு ரூபாய்க்கு விற்கலாம். லாபம் கிட்டும்.” என்றார்
பழைய ரேடியோ ஸ்பீக்கர் கட்டிய வண்டியை அவளுக்குக் காட்டி, “ஒரு மூட்டை மட்டும் எடுத்துட்டு போ. அது விற்று தீர்ந்ததும் அடுத்தது. நம்பிக்கையா செய் அம்மா… லாபம் வரும்.”என்று தைரியம் தந்தார்.
“லாபம்…” என்ற வார்த்தையை கேட்டவுடன் அவளது இதயம் மின் விளக்கைப் போல பிரகாசமானது.
ஐந்தாயிரம் கொடுத்தாள்.
“இதுதான் என் வாழ்க்கையை மாற்றும் தொகையா ?” என்று மனதில் கேட்டுக் கொண்டாள்.
உள்ளூர் தெருவில் வண்டியை ஓட்டிச் சென்றாள். வண்டி சத்தமாக கரகரத்தது; மக்கள் அவளை ஆச்சரியத்துடன் யார் இவள் என பார்ப்பது போல ஜானகிக்கு தோன்றியது . “பெண்னு ஒருத்தி பூண்டு விக்கறா?” பாத்த நம்ம ஊர் போல இல்லையே என்ற கிசுகிசுக்கள் காதில் விழுந்தாலும், அவள் முகத்தில் எந்த பதற்றமும் இல்லை.
முதலில் யாரும் அவளிடமிருந்து வாங்கவில்லை. ஒரு மணி நேரம் கழிந்தும் வண்டியில் பொருட்கள் அதேபோலவே இருந்தது. வியர்வை துளிகள் அவளது நெற்றியில் வழிந்தன. “ஏன் யாரும் வாங்குல?” என்று மனதுள் அவள் கேள்வி எழுப்பினாள்.
அப்போது ஒரு மூத்த பெண் வந்து,
“எவ்வளவு அம்மா பூண்டு?” என்று கேட்டாள்.
அவள் தயக்கத்துடன்,
“இது புதிய பூண்டு அம்மா… ஒரு கிலோக்கு நூறு ரூபா,” என்றாள்.
அந்த பெண் சிரித்துக் கொண்டு, “சிறிது குறைச்சி தா, அடுத்த வாட்டியும் உன்னிடம்தான் வாங்குவேன்,” என்றாள்.
அவள் உடனே மனம் குளிர்ந்து,
“அப்படின்னா தொண்ணூறு ரூபா வாங்குங்க அம்மா,” என்று சொன்னாள்.
அந்த நாள் அவளது முதல் விற்பனை! அந்த நிமிஷத்தில் அவளது உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. அனிஷ் வண்டியில் உட்கார்ந்தபடி சிரிப்பது போல தோன்றியது . ஜானகி அவள் சிரிப்பை பார்த்து மனதுள் நினைத்தாள்,
“இந்த சிரிப்பு தான் எனக்கு வலிமை!”
மாலை நேரம் வரையில் அவள் பலரிடம் மூன்று மூட்டை பூண்டுகளையும் விற்பனை செய்து முடித்தாள். சிலர் புன்னகையுடன் பேசினர், சிலர் கிண்டல் செய்தனர், சிலர் அவளது உறுதியைக் கண்டு பாராட்டினர். மாலையில் வியாபாரத்தை முடித்து கணக்கை பார்க்கும் போது, அவள் பையிலிருந்த சில்லறைகள் முழுக்க வியர்வை கலந்த முயற்சியின் பலனாக இருந்தது. சுமார் பத்தாயிரம் ரூபாய் லாபம் வந்தது.
அவள் அந்த பணத்தை பார்த்த போது, கண்களில் நீர் வந்து விட்டது. “இது தான் என் உழைப்பின் துவக்கம்…” என்று மெதுவாக தன்னிடம் சொன்னாள்.
அன்று இரவு, தேனியின் குளிர் காற்று அவளது முகத்தை வருடியது
அந்த பெரியவரிடமும் அவரின் மனைவியிடமும் வண்டியை கொடுத்தது, வியாபாரத்திற்கு உதவியதற்காக லாபத்தில் பாதியை தர வேண்டாம் என மறுத்து விட்டனர் வாரத்தில் இரண்டு நாட்கள் சந்தை உள்ளது நீ அடுத்த முறையும் இதே போல் வாங்கி எங்கள் வண்டியிலேயே விற்கலாம். எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம் என்றனர் .
உங்கள் பெயர் என ஜானகி கேட்க, அந்த பெண்மணி ஈஸ்வரி என்றார். ஒரு நிமிடம் தன் தாயின் பெயரைக் கேட்டதும் கண்களில் நீர் கசிந்தது, முயன்று கட்டுப்படுத்தி அவர்களிடம் இருந்து விடை பெற்றாள்.
வீடு செல்லும்முன், அனிஷ்ஷிற்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள், ட்ரெஸ்,திண்பண்டங்கள் என வாங்கிச் சென்றாள்.
இரண்டு கைகளிலும் பையுடன் அம்மா வருவதை பார்த்த அனிஷிற்கு அவ்வளவு சந்தோசம் அம்மாவை கட்டிக் கொண்டாள் .
இரண்டு நாட்கள் பார்க்காது இருந்ததால் இருவர் கண்களிலும் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி தெரிந்தது.
சுதாவிடம் அங்கு நடந்ததை பகிர்ந்து கொண்டாள் .லாப பணத்தை சாமி படம் முன்பு வைத்தாள்.
அனிஷ் ஸ்கூல் பீஸ்,வீட்டு செலவு, அடுத்த வாரம் வியாபாரத்திற்கு பத்தாயிரம் என எடுத்து வைத்த பிறகும் கையில் ஆறாயிரம் சேமிப்பாக நின்றது.
சுதா இதை அப்படியே வைக்காமல் ஏதாவதில் முதலீடு செய் என கூறினாள்.
இல்லை அக்கா நான் ஃபாரின்க்கு எக்ஸ்போர்ட் பண்ணலானு இருக்கே, சவுதி,துபாய்லே எல்லா நிறைய தேவை பூண்டுகளுக்கு இருக்கு,ஏற்கனவே தேவாவின் தேங்காய் ஏற்றுமதி நிறுவனத்திலே வேலை செஞ்சதுனாலே அதுபத்தின ஐடியா இருக்கு என்றாள்.
சுதாவிற்கு ஜானகியின் மேல் ஒரு நம்பிக்கை பிறந்தது எப்படியும் வாழ்வில் கரை சேர்ந்து விடுவாள் என்று, அதே சமயம் தாய்மையை நினைத்து பெருமையாக இருந்தது எவ்வளவு வலிமையற்றவராக இருந்தாலும் தன் பிள்ளை என வரும்போது,அவர்களின் வாழ்வாதாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல வைக்கிறதே என்று…அடுத்த வாரங்களில் அனிஷையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தாள் ஜானகி. வாழ்க்கையை பற்றி அவளுக்கு தெரியப் படுத்த விரும்பினாள்.
அத்தோடு ஏற்றுமதிக்கு தேவையான அனைத்தையும் சிறிது சிறிதாக செய்து கொண்டு வந்தாள்
தேவாவிற்கு இப்போது ஜானகி எங்கே போகிறாள் ஏன் வீடு அடிக்கடி பூட்டி உள்ளது என்ற கேள்வி,யாரிடம் கேட்பது சுதாவிடம் இப்போதெல்லாம் ஓரடி தள்ளியே நின்று கொள்கிறான். சுதாவை தவிர வேறு யாரிடமும் கேட்டு பிரியோஜனம் இல்லை என்பது அவனுக்கு தெரியும். சரி இன்றிரவு ஜானகி வீடு திரும்பியதும் அவளிடமே கேட்டு தெரிந்து கொள்வது என முடிவெடுத்தான்
— கருவின் குரல் ஒலிக்கும்
error: Content is protected !!