Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்மணியே காதல் என்பது நீ தானே

KKEN 15

KKEN-15

    அந்த பெண்ணின் தற்கொலைக்குப் பிறகு மது என்ன காரணம் என்று தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் ஒரு நாள் இரவில் அவள் வண்டியின் முன் மலர் வந்து விழுந்திருந்தாள் . என்ன நடந்தது?

   மலர் இதோ பிறந்தகத்தில் அமர்ந்திருந்தாள். சுவற்றில் பின் தலை சாய்த்து அமர்ந்து இருந்தவளின் கண்ணின் ஓரத்தில் கண்ணீர் வழிந்துக்  கொண்டிருந்தது.

“டேய் என்னடா ஆச்சு?” வெற்றி நண்பனை உலுக்கிக் கேட்டான்.



Advertisement

“அண்ணே! அக்காவை அந்தாளு நடு ரோட்டுல புடவைய உருவிட்டு அடிச்சுகிட்டு இருந்தான்னே. சவாரி விட்டுட்டு வரும்போது அக்கா வீட்டு  வலி(ழி)யா தான்  வந்துகினுருந்தேன்.பாவண்ணே. எவ்ளோ அசிங்கமா இருந்திருக்கும். நம்ம  அக்காண்ணே . எப்டிண்ணே அப்டியே விட்டுட்டு வர முடியும்?

தோழனாய் இருந்தாலும் அவனின் வேதனை புரிந்தது. பெற்ற  மகள் மீது ஏன் அந்த அன்பும் கருணையும் தந்தைக்கு இல்லாமல் போனது? ரொம்ப தேங்க்ஸ் டா! தோழனை ஆரத் தழுவிக் கொண்டான். தன்னிடத்தில்  இருந்து அவன் செய்தது மிகப் பெரிய விஷயம்தான்.

“என்னக்கா! என்ன ஆச்சு?” அக்காவின் அருகில் அமர்ந்து ஆதரவாகப்  பேசினான்.

Advertisement

“பக்கத்து வீட்டு அண்ணன் புதுசா புடவை விக்கறாங்களாம். அதான் நீ கொஞ்சம் கொஞ்சமா காசு குடுன்னு ஒரு புடவை குடுத்தாங்க. நூத்தி அம்பது ரூவா. முதல்ல அம்பது ரூவா கொடுத்துட்டேன். இன்னும் மிச்சம் கொடுக்கல. இன்னிக்கு அவன் புடவை குடுத்தான்னு கட்டிக்குவ . நாளைக்கு அவன் உள் பாவாடை குடுத்தான்னா அதையும் கட்டிக்குவியான்னு அத்தையும் அவங்களும் அசிங்கமா பேசுறாங்க வெற்றி” தேம்பி தேம்பி அழுதாள்.

Advertisement

“என்ன அறுத்து விட்டுடுங்க வெற்றி. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு”

முன்பே இந்த முடிவை எடுத்திருக்கலாம். தம்பிக்கும் கண்ணில் அழுகை வந்து நின்றது.

“அய்ய  காலையிலேயே  வந்து நின்னுருச்சு மூதேவி”

Advertisement

திட்டி கொண்டே உள்ளே வந்து சேர்ந்தார் தந்தை.

“என்ன இப்ப? புருஷன் பொண்டாட்டி சண்டைலாம் எல்லார் வீட்டுலையும் நடக்கறதுதானே. அதுக்குன்னு பொட்டிய தூக்கிட்டு வந்துருவங்களா ? ஆம்பளைங்க அப்டி இப்படித்தான் இருப்பாங்க. நாமதான் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்” சின்னவள் பெரிய மனுஷியாக அறிவுரை வழங்கினாள் .

வெற்றிக்கு அத்தனை கோபம் வந்தது . அடிச்சு பல்ல ஒடைச்சுடுவேன். கல்யாணம் ஆன  நாள்லேர்ந்து நீ இங்க தானே இருக்க? ஏதோ ஒரு நாள் பிரச்சனைன்னு அவ இங்க வந்தா என்னடி பிரச்சனை? வெற்றி எப்போதுமே வாடி போடி என்று  பேச மாட்டான். அவனையே பேச வைத்து விட்டாள்  புவனா.

“என்னடா யாரு கிட்ட என்ன பேசற? அவ வேற வீட்டு பொண்ணு. மரியாதை குடுத்து பேசு. நீ என்னடா அவளுக்கு பல்லை ஓடைக்கறது? நான் உன்ன அடிச்சு பல்லை ஒடைச்சுடுவேன் ராஸ்கல்” புவனாவை சொன்னதும் தந்தைக்கு  அத்தனை கோபம் தலைக்கேறியது. அந்த பாசம் ஏன் தன் மீது இல்லை? மலருக்கு வெறி வந்தது. இல்லை இல்லை இத்தனை நாள் அடக்கி அடக்கி வைத்திருந்த கோபம் வெளியே வந்தது.

“நான் அவங்களுக்கு என்ன செய்யல? வயத்து பசிக்கு குடுக்கலியா? ஒடம்பு பசிக்கு குடுக்கலியா ? மாடு மாதிரி வேலை செய்யல?” எப்போதும் இல்லாத மலரா தந்தையிடம் குரல் உசத்திப்  பேசினாள் .

“வாய  தொறந்த பெல்ட்டு பிஞ்சுரும் …யாரு வீட்டுல வந்து என்ன பேசற?

வந்துட்டா அங்கேர்ந்து,எப்ப பாரு ஒப்பாரி வச்சுக்குனு….” இது தந்தை.

“நீதான் சரி இல்ல. மாமாவுக்கு ஒரு புள்ளைய  பெத்து குடித்திருந்தீன்னா ஒனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?” அன்பாக இல்லாமல் அதிகாரமாக வந்தது தங்கையின் குரல். தந்தையும் தங்கையும் மாறி மாறி அவளை குறை கூறுவதும், திட்டுவதுமாக இருந்தார்கள்.

“இப்ப புரிஞ்சுதா. எதுக்கு நான் இங்க வர்றதே  இல்லனு. இங்க நான் யாருக்கும் வேணாம். ரோட்டுல படுக்கறவன் கூட தன்னோட, குழந்தை குட்டின்னு கொஞ்சமாவது அன்பு  அனுசரணை இருக்கும். இங்க? நம்மள பெத்தவ இதோ இதை பெத்து போட்டு போய்  சேர்ந்துட்டா. இவங்க எல்லாருக்கும் வேலை செய்ய ஒரு வேலைக்காரி தான் நானு  என்ன இவரு பெத்த பொண்ண நினச்சுருந்தா குடி போதைல என்ன வித்துருப்பாரா? என்னவோ ஆளாளுக்கு நான் புள்ள பெத்துக்கலைன்னு சொல்லறீங்களே அந்தாளுக்குத்தான் குழந்தை பொறுக்காது. தெரியுமா உங்களுக்கு?”

 இது வரை யாரிடமும் சொல்லாத உண்மையை  போட்டு உடைத்தாள். அப்போதும் யாரும் அவள் சொல்வதை நம்பவில்லை. வெற்றியைத்  தவிர.

“குடிச்சு குடிச்சு உங்க மாப்பிள்ளைக்கு  குழந்தை பொறக்காதாம். எண்ணிக்கை சுத்தமா ஒண்ணுமே இல்லையாம். அப்டியே பொறந்தாலும் குழந்தைக்கு  ஏக்கப்பட்ட பிரச்சனை இருக்குமாம். சொல்லிட்டாங்க. டாக்டர்”

“ஆமா ! குறை உன்கிட்ட இருந்தாலும் அவன் மேல பழைய தூக்கி போட்டுட்டு வேண்டியதுதானே? “

“என்னக்கா மாமாவுக்கு தகுதி இல்லன்னு சொல்லி இங்கையே வந்து உக்காந்துக்கலான்னு  பிளான் பண்ணாத” இது தங்கை.

“யாரு யாரு மேல பழைய தூக்கி போட்டா ? இந்த விஷயம் உன்னோட பிரண்டுக்கும் தெரியும். உன்னோட சம்பந்திக்கும் தெரியும். அப்படியும் எதையும் உன்கிட்ட சொல்லாம நான்  ஏன் தெரியுமா மலடின்னு பேரோட நிக்கறேன்?இந்த மாதிரிதான் யாரும் என்ன நம்ப மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.  அடியோ ஒதையோ  அவன்கிட்ட வாங்கலாம். அவன் எனக்கு யாரோ. ஆனா பெத்தவங்க கிட்டையும், கூட பொறந்தவங்க கிட்டையும் என்னால வாங்க முடியாது”

 இதுவரை வெற்றி எதுவும் பேசவில்லை. அவன் ஒரு முடிவில்தான் இருந்தான்.

“எங்காக்கா இனிமே இங்க தான் இருக்கும். இந்த வீட்டுக்கு வாடகை, மளிகை சாமான் எல்லாம் நான்தான் வாங்கறேன். இனிமே மாச செலவுக்கு எல்லாரும் சரிசமமா காசு குடுக்கணும். எனக்கும் எங்க அக்காவுக்கும் மட்டும்தான் நான் செலவு  பண்ணுவேன். யாருக்கு வேணுமோ அவங்க இருக்கலாம். வேண்டாதவங்க அவங்க அவங்க வழிய பார்த்துகிட்டு போய் கிட்டே இருக்கலாம்”

 தந்தையையும்  பாப்பாவையும் அவன் என்றுமே பாரமாக எண்ணியதே இல்லை. இருந்தாலும் புவிக்கும் அவள் கணவனுக்கும் கூட பொறுப்பு வர வேண்டும். வெற்றி இந்த முடிவை எடுத்ததற்கு முக்கிய காரணம் புவியின் ஊதாரி செலவுகள் கட்டுக்கடங்காமல் போவதுதான். கிளீன் யுவர் வார்டு ரோப்  . அமேசானில்  விளம்பரம் வந்தது. வாங்கி இரு மாதங்கள் மூன்று மாதங்கள் கூட ஆகாத  துணிகள் பழைய பாத்திரங்களுக்கு போக ஆரம்பித்தன. தோழியின் பிறந்த நாள் விழாவிற்கு நோ  மேக்கப் லுக்கில் வந்தாள் வித்யா. அதை ரசித்தான்.அவனுக்கு பிடித்திருந்தது.  அதற்கான கட்டணம் அவன் வீட்டு  வாடகையை விட அதிகம் . அதையே தங்கை செய்து கொண்டு வந்தபோது. லோக்கல் பார்லராக இருந்தாலும்ம் அதன் செலவு வெட்டிதான். ஆத்திரம் பொங்கியது. எல்லாவற்றையும் விட பெரிய விஷயம் ஏதோ ஹிமாச்சலத்தில் இருந்து வரும் தண்ணீராம் . அரை லிட்டர் நூற்று என்பதா? உப்புமாகூட  ஸ்விகியில் ஆர்டர் செய்ய  வேண்டுமா? எல்லாவற்றிற்கும் முடிவு கட்ட வேண்டும் என்று ஏற்கனவே அவன் நினைத்துதான். இதோ இந்த சந்தர்ப்பத்தில் வந்து நிற்கிறது. இந்த செலவுகளுக்கு ஒரு கடிவாளம் நிச்சயம் தேவை. தந்தை வாயை மூடிக் கொண்டு இருப்பது போல தானும் இருந்தால் சரி பட்டு வராது. பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி. தைரியமாக போட்டு உடைத்து விட்டான். எப்போது  மலரே வாயை திறந்து அறுத்து விட்டுடுங்க என்று  சொல்லி விட்டாளோ இனி முடிவெடுக்கத்தான் வேண்டும். அவனுடன் இருக்க வேண்டாம்.  அவளுக்கு எப்போதும் தன் துணை தேவை. நிச்சயம் தன்னுடைய இந்த முடிவுக்கு வித்யா எதிர்ப்பு சொல்ல மாட்டாள். அவளுக்கும் மலர் மீது தனி அக்கறையும், பாசமும் உண்டு. யோசித்துதான் இந்த முடிவு எடுத்தான். அடுத்த திருமணம் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை.

 அறுத்து விட்டுடுங்க சொல்லிய மலரின் வார்த்தைக்காக  காலம்  தன்னை தயார் செய்து கொண்டது..

எந்த நேரத்தில் வீட்டு  மஹாலஷ்மி கண்ணீருடன்  தேம்பி தேம்பி அழுது கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்றாளோ  அப்போதே நல்லவனின், நல்ல நேரமும் முடிவுக்கு வந்து விட்டது போலும். அனைவரையும் தாங்கியவளே இங்கு இல்லை. இனி எனக்கென்ன வேலை? கடவுளும், கருணையும் சேர்ந்தே வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டது.

 சூர்யாவும் அவன் தந்தையும் சென்ற வண்டி விபத்தில் மாட்டி இருவருமே இறந்திருந்தார்கள் அல்லவா? ஆம் ! அந்த விபத்திற்கு காரணமாக இருந்த ட்ரக் ட்ரைவர் வேறு யாரும் அல்ல. நம் நல்லவனே  தான்.  போலீசில் கேஸ் எழுதினார்கள். நல்லவனின் உடல் போஸ்ட்மார்ட்டத்திற்கு சென்று வந்தது. ஐஸ் பெட்டியில் கணவனின் உடலை பார்த்தவளுக்கு அழுகை வந்தததுதான். தனக்காகவா? அல்லது அவனுக்காகவா ? பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அவனின் உடலுக்கும் வயிற்றுக்கும் பசியை போக்கியவள். “இந்தா உனக்காக” ஒரு முழம்  பூ வாங்கி கொடுத்ததில்லை. தீபாவளி! சேர்ந்து புடவை வாங்கியதில்லை.  என்னதான் சுகம் கிடைத்தது அவளுக்கு அவனிடமிருந்து? எத்தனை அடி வாங்கி இருப்பாள்? நட்ட நடு ரோட்டில் புடவையை உருவி அடி  கொடுத்தவனுக்காக இனி அவள் காலமெல்லாம் விதவை பட்டத்தை சுமக்க வேண்டும். அவன் செய்த எல்லாவற்றிற்கும் நன்றி கடன் செலுத்த வேண்டும்.

  அவன் வீட்டில் இருந்து யாரோ ஒருவன் வந்தான். கொல்லி வைத்தான். யார் என்ன உறவு எதுவும் தெரியாது. அதை பற்றி எல்லாம் அவள் அறிந்து கொள்ள ஆசை படவும் இல்லை.

ஏதோ ஒரு நாள் தாலி அறுக்கும் சடங்கு நடத்தினார்கள். பிறக்கும்போது வந்த பூவுக்கும் பொட்டுக்கும் உரிமையை யார் பறித்தார்கள் ? யாரிடமும் கேட்க முடியாது. கணவன் இருக்கும்போது வேறு மாதிரி நரகம் என்றால் இப்போது அவன் இல்லாத போது  வேறு மாதிரி.

கொல்லி வைத்தவனே உரிமை கொண்டாடி வந்தான், மலர் மீது. கொடி போல இருக்கும் அந்த பெண் தன் மீது படர வேண்டுமாம். அந்த கொடி மலருக்கு முல்லை மலர்  வாங்கித்தருவானாம் . சிரிப்பதா அழுவாதா? மனதளவில் மிகவும் நொந்துப்  போனாள் . பதினாறாம் நாள் காரியம் முடிவதற்குள் இவளை யாரிடமாவது தள்ளி விட்டு  பணம் சம்பாதித்து கொள்ள  வேண்டும் என்று கணக்கு போட்டாள்  மாமியார்.  மாமியார் பேசுவது காதில் விழுந்தது. நாத்தனார்தான் தனக்காக பேசி கொண்டிருக்கிறாள்.

 “வேண்டாம்மா . இதெல்லாம் ரொம்ப பெரிய பாவம்” அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தவளின்  பேச்சு  பெற்ற  மகனை இழந்தவள் போல அல்ல. அந்த நிமிடம் எப்படியாவது அந்த இடத்தை விட்டு தப்பி விட வேண்டும் என்று மட்டுமே யோசித்தவளுக்கு நேரம் காலம் தெரியவில்லை. அந்த நிமிடமே ஓட்டம்  எடுத்தாள் . வந்த பேருந்தில் ஏறிக்  கொண்டாள் . நல்ல வேளை பேருந்தில்  பெண்களுக்கு இலவசம். கண்டக்டரிடம் கேட்டு வெற்றிக்கு இருமுறை அழைத்து பார்த்தாள். நம்பர் போகவில்லை. தந்தைக்கு, தங்கைக்கு அழைக்க விருப்பம் இல்லை. எதுவாக இருந்தாலும் வெற்றியுடன் சேர்ந்து வீட்டில் சென்று நேரில் பேசிக் கொள்ளலாம். கடைசி பேருந்து நிலையத்தில் வண்டி நின்றது. இங்கிருந்து இன்னொரு பேருந்தில் ஏறிக் கொள்ள வேண்டும். நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். பழைய மலருக்கு இருக்கும் பயம் இந்த புது மலருக்கு இல்லை. வாழ்க்கைதான் நம் வாழ்வில் அனைத்தையும் எளிதாக மாற்றி விடுமே. அவளுக்கு இத்தனை தைரியம்  எங்கிருந்து வந்தது? இவள் மட்டுமே நின்று கொண்டிருந்தாள். கையில் ஒரு ருபாய் இல்லை. போன் இல்லை . இருந்தும் இதோ நின்று கொண்டிருக்கிறாள். ஆச்சர்யம் என்னவெனில் கணவன் இருந்தவரை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பல முறை  தோன்றியவளுக்கு இப்போது இந்த நேரம் அந்த எண்ணம் வரவில்லை.

நிச்சயம் விதி வலியதுதான்………

அங்கே இருட்டில் மறைவிடத்தில் ஏதோ ஒரு சிறு குழந்தை அழுவது  போல இருந்தது. யாரோ நான்கு ரவுடிகள் தான் குழந்தையை வைத்திருந்தார்கள். பசி போலும். குழந்தை கதறிக் கொண்டிருந்தது. பார்த்தாலே பணக்கார வீட்டுக் குழந்தை என்பது தெரிந்தது. எங்கிருந்தோ கடத்தி இருப்பார்கள் போலும். வட்டமாக அமர்ந்து குடித்து கொண்டிருந்தவர்கள் அடுத்த சில நிமிடத்தில் குடி போதையில் குழந்தையை மறந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை பொறுமையாக மறைவிடத்தில் மறைந்து நின்றிருந்தவள் மெதுவாக குழந்தையின் வாயை மூடி தூக்கிக் கொண்டு ஓடினாள். பார்த்தவர்கள் பின் தொடர்ந்து வந்தார்கள். வேகமாக  ஓடினாள். வெகு தூரம் ஓடினாலும் சில நாட்களில் சரியாக உண்ண  முடியாததால் இவளுக்கும் மயக்கம் வந்தது.  திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு ஓடியவள்  விழுந்தது மதுவின் வண்டியின் முன். ட்ரைவர் சரியாக கணக்கிட்டதால் பெரிய விபத்தாக இல்லாமல் பிரேக் போட்டிருந்தார். மதுவுக்கு மலரின் முகம் நன்றாகவே மனதில் பதிந்து போய்  இருந்தது. எளிதில் அடையாளம் கண்டு கொண்டாள் . இவர்கள் வண்டியை பார்த்த ரவுடிகள் வேகமாக தப்பி ஓடினார்கள்.

மற்றவர்களையும் கையோடு பிடித்து விட்டார்கள். மலர் நினைத்தது சரியே. இது கடத்தப்பட்ட குழந்தைதான். காவல் நிலையத்திற்கு வந்தவுடன் ,

“மேடம்!”

என்ன? மதுவின் கண் பார்வை கேட்டது.

“குழந்தைக்கு கொஞ்சம் பால் கிடைக்குமா?”

“ஏன் ஒனக்கு எதுவும் வேணாமா?”

மவுனம். இரவில் எதுவும் இருக்காது. இருவருக்கும் பாலும்  பண்ணும் மட்டும் வாங்கி கொடுத்தார்கள்.

“எக்ஸ்ட்ரா இருவது ரூபா செலவு பண்ணறதுனால எனக்கு ஒன்னும் கொறஞ்சு போய்டாது”

சொல்லிய மதுவின் முகத்தை பார்த்து நன்றி கூறியபடியே குழந்தைக்கு பாலை ஊதி  ஊதி சிறிது சிறிதாக ஊட்டினாள்.

“அப்புறம் எப்படி இருக்காரு உங்க புருஷன் நல்லவரு?”

சிறிது மௌனம். “அவங்க செத்துட்டாங்க மேடம்”

“வாட்?”

“அவங்க குட்டி யானை ஓட்டிட்டு இருந்தாங்க. வழக்கம்போல குடிச்சுட்டு வண்டி ஒட்டினாங்க போல. எதிர்ல வந்த காரு மேல மோதி விபத்து ஆகிடுச்சு. நேத்து தான் தாலி அறுக்கற சடங்கு பண்ணாங்க. எங்க மாமியார் என்ன யாருக்காவது வித்து காசாக்க பார்த்தாங்க. அப்ப தப்பிச்சு போகறப்பதான் இந்த குழந்தையை பார்த்தேன்”

“ஒனக்கு ஒரு தம்பி இருக்கான் இல்ல?”

“ஆமாங்க. அவனுக்குத்தான் போன்  போட்டு பார்த்த நம்பர் போகவே இல்ல”

“வா! வந்து கால் பண்ணிக்கோ. ஒடனே அவனை இங்க வர சொல்லு”

இப்போதும் லைன் போகவில்லை.சார்ஜ் இல்லாமல் அனைத்து வைக்க பட்டிருந்தது.

மலருக்கு இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை.

“மேடம் ! ஆர் கே குரூப் ஓனர் குழந்தையை காணுன்னு கம்பளைண்ட் குடுத்துருக்காராம்”

“எந்த ஸ்டேஷன்?”

*** ஸ்டேஷன் மேடம்.

“ஓகே குழந்தையோட போட்டோவை பேக்ஸ் அனுப்ப சொல்லிடுங்க.

அது ரவி வீட்டுக்  குழந்தை தான் என்பது தெரிந்தது.

அடுத்த  இருபது நிமிடத்தில் படபடப்புடன் வந்து நின்றான்.

கேர் டேக்கரை  நம்பித்தான் விட்டிருந்தான். முதலில் இருந்தவருக்கு பதிலாக புதியதாக வந்திருந்தவள்தான்  சில மாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். நன்றாகவே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போதுதான் தெரிந்தது அத்தனையும் நடிப்பு என்று. அவள்தான் குழந்தையை பார்க்குக்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்லி குழந்தையை இவர்களுக்கு விற்று விட்டாள் . பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்திருந்தாள்  மீனு .

மலரோ எந்த கவலையும் இல்லாமல், குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தாள். மடியில் படுக்க வைத்து ஆட்டி  இருந்ததில் மீனு அடுத்த சில நிமிடங்களிலேயே தூங்கி இருந்தாள் .

ஓடி வந்து ரவி பார்த்தான். என்  குழந்தை தான் மேடம். அடையாளத்திற்கு வேறு சில அத்தாட்சியங்களை  வாங்கிக்கொண்டு குழந்தையை கொடுத்தார்கள்.

குழந்தையின் காதில் இருந்த தோட்டை பிடுங்கி எடுத்திருந்தார்கள். காது புண்ணாகி இருந்தது.

காப்பாற்றிய மலரை ரவி சந்தேகமாக பார்த்தான்.

தொடரும்………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!