Skip to content
Post Views: 3,942
Kken -9
Advertisement
என்ன செய்வது ? யோசித்த மலர் கேட்டாள் .
“ஒனக்கு வித்யா மேடத்தை தவிர வேற யாரையாவது அவங்க வீட்டுல தெரியுமா?”
Advertisement
“சில தடவை அவங்க அம்மாவும் நம்ம வண்டில தான் வருவாங்க”
Advertisement
“அவங்க என்ன மாதிரி?”
“நல்ல டைப் தான் “
“அப்ப அவங்க கிட்ட நீயே விஷயத்தை போட்டு உடைச்சுடு”
Advertisement
“அக்கா “
“இங்க பாரு வெற்றி. அந்த அம்மாகிட்ட விஷயத்தை சொன்னோமா அந்த வீட்டுக்கு ஒரு ஒரு முழுக்க போட்டோமான்னு இருந்துக்க. அப்பாக்கு தெரிஞ்சுது தோலை பிச்சு எடுத்துருவாங்க. அதோட அவங்க எல்லாம் பெரிய பணக்காரங்க. அவங்க மேலே தப்பே இருந்தாலும் ஏழைங்களைத்தான் அவங்க வச்சு செய்வாங்க. நினைப்புல வச்சுக்கோ “
“என்ன வெற்றி? வந்து நேரம் ஆச்சோ?” அக்காவும் தம்பியும் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்தாள் மலரின் மாமியார்.
“இல்ல அத்த இப்ப தான்”
“ஓ ! அக்காவுக்கு என்னடா சீரு கொண்டாந்திருக்க? ” வழக்கம் போலவே குத்தல் பேச்சு வந்தது.
அப்போதுதான் தான் வெறும் கையோடு அக்காவை பார்க்க வந்திருப்பது அவனுக்கே புரிந்தது.
அவன் அமைதியை மலரின் மாமியார் புரிந்து கொண்டாள் .
“பரவால்ல வுடு வெற்றி. இப்ப இல்லன்னா என அடுத்த தடவை சேத்து வச்சு செய்ய போற” குத்தலாக சொன்னாலும் அடுத்த முறை பல்க்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றும் பிட்டு போட்டு விட்டாள் .
“மலரு இந்த மாச சீட்டு இன்னும் கட்டலியா ? பாண்டியம்மா வழில பார்த்து கேட்டுச்சு அதை உடனே கட்டிடும்மா” அன்பொழுகப் பேசினாள் .
இரு குடும்பங்களின் சீட்டு கட்ட வேண்டும்.
அவளிடம் எங்கே அத்தனை பணம் இருக்கும்?
வேண்டுமென்றே தான் வெற்றி இருக்கும்போதே சொன்னாள் . அதன் அர்த்தம், அக்காவுக்குக்காக வெற்றி கட்ட வேண்டும் .
“அப்டியே அந்த கேபிள் டீவி பணத்தையும் கட்டிடும்மா”
“அத்தை ! அவங்க பணம் எதுவும் குடுக்கலியே?” வாய் நுனி வரை வந்த வார்த்தை பயத்தினால் மீண்டும் உள்ளேயே சென்று விட்டது. தம்பி இருக்கும் வரை மாமியார் ஒன்றும் சொல்ல மாட்டாள்தான். அவன் சென்ற பிறகு வேறு ஏதாவது காரணம் சொல்லி இவளே அடி பின்னி விடுவாள். அல்லது கணவனிடம் தாறுமாறாக ஏதாவது சொல்லி கலகமூட்டுவாள். நல்லவன் மிக நல்லவன். என்னவென்று விசாரிக்க கூட மாட்டான். அவனை பொறுத்தவரையில் மலர் மனைவி அல்ல. வீட்டு வேலை செய்ய வேண்டும். உணவு செய்து வைக்க வேண்டும். உடலுறவு வைத்து கொள்ள வேணும். தான் ஒரு மகாராஜா. அவள் ஒரு அடிமை. மலரின் கணவன் பணம் சம்பாதிப்பான். அவனாக வீட்டிற்கு எதுவும் கொடுக்க மாட்டான். மாமியார் சில வீடுகளில் வேலை செய்தாள் . மலர் தையல் வேலை செய்தாள் . அவன் வேலை செய்வதை குடிக்க வைத்துக் கொள்வான். மலரிடம் இருந்து பிடுங்கி வேறு பெண்களுக்கு கொடுப்பான். அவன் அன்னை சில பல சமயங்களில் அவனிடம் இருந்தும் பிடுங்கி கொள்வாள். அவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கழியவில்லை . தினமும் அடிதடி சண்டை, கண்ணீர் என்று ஒரே மாதிரிதான் சென்று கொண்டிருந்தது. வெற்றி வரும்போது இது போல பல விஷயங்களுக்கு மாமியார் காசை கறந்து விடுவாள். மலரின் மாமியாரை பார்க்கும்போதெல்லாம் வெற்றியின் மனதில் ,
“காம்பினில் பசும்பால் கறந்தால் அதுவா சாதனை? கொம்பிலும் நான் நான் கொஞ்சம் கறப்பேன் அதுதான் சாதனை ” வசூல் ராஜா கமலஹாசன் வந்து பாடிவிட்டு போவார். இப்போதும் பாடிவிட்டுத் தான் போனார். என்ன? அவரால் பணம் கறக்க முடியாத ஒரு ஜீவன் உண்டு என்றால் அது தந்தை தான். கழுவுற மீனுல நழுவுற மீனுதான் அவர். அந்த சாமர்த்தியம் வெற்றிக்கு இல்லை.
“சரிங்க அத்தை” மனதில் வந்த சினிமா பாடலை “அடங்கு” என்று அடக்கி விட்டு அமைதியாகவேச் சொன்னான்.
“சரிக்கா! நான் கிளம்பறேன்”
வந்தவனுக்கு ஒரு வாய் தேநீர் கூட கொடுக்கவில்லை.
“டேய் டீ யாவது குடிச்சுட்டு போடா”
‘பரவால்ல வேணாம்”
தம்பியின் முகம் காண சகிக்கவில்லை மலருக்கு. பாவம் பசித்திருக்கும். ஒரு வாய் சோறு கூட போட முடியாதவள். மனதில் பாரம் அழுத்தியது. பெரு மூச்சு விட்டு நகர்ந்தாள் . ஏதோ பேச வேண்டும் என்று வந்தவனுக்கு தன்னால் தண்ட செலவு.
தோழனுக்கு அழைத்து பாங்கில் காசு போட சொன்னான்.மலரின் மாமியார் கட்ட சொன்ன இடங்களுக்கு பணத்தை கட்டினான். ஏனோ அக்காவிடம் பேசி விட்டு வந்தது இருந்து மனதில் ஒரு தெளிவு வந்தது.
வித்யா கல்லூரியில் அழைத்து சென்றிருந்த சுற்றுலாவில் இருந்து இன்னும் வந்திருக்கவில்லை. அவள் அன்னை வழக்கம் போல வெள்ளி அன்று வெற்றியின் ஆட்டோவில் பிரயாணித்தார். அக்காவின் அறிவுரைப்படி காயத்ரியிடம் விஷயத்தை சொல்லி விட்டான்.
“மேடம்! உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்”
வண்டியை ஓரம் கட்டிவிட்டு எப்படி சொல்வது? எப்படி ஆரம்பிக்க தயங்கினான். யோசிக்கவில்லை. ஏற்கனவே பலமுறை யோசித்ததுதானே. இருப்பினும் தான் சொல்வதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? வார்த்தைகளை கோர்வையாக, பாந்தமாய் சொல்ல வேண்டும். வித்யாவை குற்றம் சாட்டுவதாக இருந்துவிடக் கூடாது.
“சொல்லுங்க வெற்றி”
“மேடம், அது வித்யா மேடம் என்ன விரும்பறாங்க மேடம். இது சரிப்பட்டு வராதுன்னு சொன்னாலும் அவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க மேடம். அவங்க நல்லா இருக்கணும். நான்.. அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. நீங்களும் அய்யாவும்தான் சொல்லி புரிய வைக்கணும்”
தன் மகள் தன்னை விரும்புவதை பெற்றவளிடமே வந்து சொல்பவன் எத்தனை நல்லவனாக இருக்க வேண்டும்? வெற்றியை பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பணக்கார வீட்டு பெண். நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் இது சரி பட்டு வாராது என்று ஒதுங்கி கொள்கிறான்.
அவளுக்கு மனதின் ஓரத்தில் சிறு ஆசையும் வந்து. இது சரியா? யோசிக்க ஆரம்பித்தாள். வெற்றி சொல்லுவதை மட்டும் வைத்துக் கொண்டு மகள் மீது சந்தேகப்பட முடியுமா? ஒரு வேளை அவனே நல்லவன் போல நடித்து ஏமாற்றுவதாக இருந்தால்?
மகள் ஊரில் இருந்து வந்தவுடன் வழக்கம்போல கல்லூரிக்கு சென்று விட்டு திரும்பி வந்தாள். எதையும் ஒடனே முடிவு செய்ய கூடாது. மகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக பார்க்க தொடங்கினாள்.
வித்யாவுக்கு எப்போதுமே உடை, நகை அலங்காரத்தில் எல்லாம் அக்கறை இல்லை. பார்லருக்கு சென்றாலும் புருவத்தை சரி படுத்திக் கொள்வாள். அதற்கு மேல் வேறு ஒன்றும் இல்லை. ஆனால் இப்போது பார்லருக்கு சென்றிருக்கிறாள். ஊருக்கு செல்வதற்கு முன்னால் ஏன் செல்லவில்லை.
வந்தவள் பேசியல் செய்து கொண்டு வந்திருக்கிறாள்.
“என்ன திடீர்னு பார்லர் போய்ட்டு வந்துருக்க? அதுவும் பேசியல் பண்ணி இருக்க?”
“ப்ச்! ம்மா! இது ஒரு குத்தமா?”
“நீ மத்த பொண்ணுங்கள மாதிரி எப்பவும் போகறதா இருந்தா தப்பு இல்ல. பட் புது பழக்கமா இருக்கே. அதான். சாதாரணமாத்தான் கேட்டேன். இதை ஏன் குத்தமா யோசிக்கற?”
“இல்லம்மா. கொஞ்சம் பிளாக்கெட்ஸ் இருந்தது. அதான்”
“அப்டியா சரி”
எப்போதும் ஏதோ ஒரு குர்தி ஏதோ ஒரு கம்மல் என்று வருபவள் , இப்போதெல்லாம் அடர்ந்த நிறங்களில் உடுக்க ஆரம்பித்தாள். அதற்கு மேட்சாக கையில் காதில் போட்டுக் கொண்டாள். உதட்டுச் சாயம் கூட பூசத் தெரியுமா? இப்போதெல்லாம் அடிக்கடி ஷாப்பிங் செல்கிறாள். அதுவும் ஞாயிறுகளில்.
மற்ற பெண்களை போலத்தான் வித்யாவும். ஞாயிறு என்பது உறங்குவதற்குத்தானே? ஆனால் அந்த பழக்கம் மாறுகிறதே ? எப்போதும் வித்யாவை சுற்றி பல தோழிகள் இருப்பார்கள். நிறைய அரட்டை அடிப்பாள். இப்போதெல்லாம் அதுவும் குறைந்து கொண்டு வருகிறதே?அடிக்கடி கையில் மெஹந்தி போட்டுக் கொள்கிறாள்.
“ஏதேது புதுசா அரைச்ச மருதாணி வைச்சு விட சொல்லற?”
“சும்மாதான். வச்சா நல்லா இருக்கு” அன்னையிடம் மறைக்கவும் முடியவில்லை. பொய் சொல்லவும் முடியவில்லை.
ஏதோ தோழியின் பிறந்த நாள் விழாவாம் .பர்பிள் நிற உடையில் வானத்து தேவதை இறங்கி வந்தது போலவே இருந்தாள். நோ மேக் அப் லுக் அவளுக்கு அத்தனை பாந்தமாக பொருந்தி இருந்தது. மகளை பார்த்த அன்னையே மயங்கும்போது மற்றவர்கள் மயங்க மாட்டார்களா? நான் சொல்வது வெற்றியை பற்றி மட்டும் அல்ல. உங்களுக்கு புரிந்திருக்கும். நான் சொல்வது அதிபனையும் சேர்த்துதான்.
பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தவனே அதிபன் தானே? இவள் தோழியின் ஒன்று விட்ட அண்ணன். பெயர் தான் ஒன்று விட்ட அண்ணன். இவள் தோழி பிறந்த போது குழந்தையை கையில் வாங்கியது முதல் இப்போது வரை அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து பார்த்து வளர்த்துக் கொண்டிருப்பவன் அதிபன் தான். பர்த் டே பேபி அணிந்திருக்கும் ஆடை கூட அவன் அழைத்து சென்று ஆடை வடிவமைப்பாளரிடம் பிரத்தேயேகமாக ஆர்டர் செய்தது தான். என்ன சில ஆயிரங்களில் முடித்திருக்கலாம். அப்படி செய்தால் அதிபன் இல்லையே. சில லட்சங்களில் மட்டும் ஆடை வாங்கி கொடுத்தான். ஆடை மட்டும் போதுமா/ அதற்கு ஏற்ற நகைகள்? அதுவும்தான். தங்கைக்காக அவன் லட்சம் கோடி என்று எல்லாம் பார்ப்பவன் இல்லை. அப்படிப்பட்டவன் ஏற்பாடு செய்த விழா என்றால்?
விழாவிற்கு வருபவர்கள் அனைவருமே நிச்சயம் பெரிய பெரிய பணக்காரர்கள்தான். நமக்கு பெயர் தெரியாத பல வெளிநாட்டு மாடல் கார்களில் மற்றவர்கள் வந்திறங்க ஒருத்தி மட்டும் ஆட்டோவில் வந்தாள் . திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்த அதிபன் ஆச்சர்யமாக அவளை பார்த்தான். பல பெண்களை பார்த்திருக்கிறான். இவள்? அவள் உடையே சொன்னது அவளின் பண உயரத்தை. எதற்காக ஆட்டோவில் வந்து இறங்கினாள்? இவள் அன்று கல்லூரியில் பார்த்த பெண் அல்லவா ? அன்று புடவை கட்டி இருந்த தேவதை வித்யா நொடியில் கண் முன் வந்து போனாள் .
“நான் எப்படி இருக்கேன்?” முகம் முழுவதும் அத்தனை பூரிப்பு. தன்னவன் தன்னை எப்படி ரசிப்பான் என்ற ஆசை. எதிர்பார்ப்பு. அவள்தான் அவனிடம் காதலை சொல்லி இருக்கிறாள். அவன் இன்னும் பதில் சொல்லவில்லை என்பதெல்லாம் அவள் மனம் யோசிக்கவில்லை.
“உங்களுக்கு என்ன மேடம்? நீங்க தேவதை” வெற்றி இப்படி சொல்வான் என்று ஆசையுடன் அவன் முகம் பார்த்தாள் .
அவனோ இவளை ஏற இறங்க பார்த்துவிட்டு , அலட்சியமாக ,
“நல்லாத்தான் இருக்கு” என்றான்.
அவனின் ஒற்றை பார்வைக்கும் ஒற்றை வார்த்தைக்கும் தானே இத்தனை மெனக்கெடல். முகம் முழுவதும் மகிழ்ச்சி புன்னகையில் மிதந்தவளை அவனின் ஒற்றை சொல் நிகழ் உலகிற்கு கொண்டு வந்தது.
“இது என்ன பதில்? சிறு குழந்தை போல உடைத்து பிதுக்கி அழுது விடுவாளோ”
தன் உயிரின் முகம் பார்த்தவனுக்கு கஷ்டமாகத் தான் இருந்தது. அப்படியே அவளை கையில் அள்ளி எடுத்து முகம் எங்கும் எச்சில் முத்தம் வைக்க ஆசையாகத் தான் இருந்தது. என்ன செய்வது? தனக்கு அந்த தகுதி இல்லையே? அவனுக்கு மட்டும் தகுதி இருந்திருந்தால் அவளை முதன் முதலில் பார்த்த அன்றே அவள் அப்பாவிடம் சென்று பெண் கேட்டிருப்பானே ? அந்த அரண்மனை போன்ற வீட்டில் இருக்கும் பெரிய சோபாவில் நடு நாயகமாக அமர்ந்து உங்கள் பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது, திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டிருப்பானே?
அவள் தன் காதலை சொன்ன போதே இவன் சவாரிக்கு வர முடியாது என்று கூறி இருப்பான். இருந்தாலும் அன்று அவள் வேறு ஒரு ஆட்டோவில் சென்று மாட்டிக் கொண்டதால் வர மாட்டேன் என்று சொல்ல அவனுக்கு வாய் வரவில்லை. அது மட்டுமா? அவனும் தானே அவள் மீது அத்தனை ஆசை வைத்திருந்தான். அவளை பார்க்காமல் அவனால்தான் இருந்து விட முடியுமா? மனம் வேண்டாம் என்று சொன்னாலும் அவள் ஊருக்கு சென்ற போது கூட வீடியோ காலில் அவள் முகம் பார்த்தவன் தானே?
“திரும்பி போகறச்சே ஒன்னும் நீ வர வேணாம். நான் ஒன்னும் ஒனக்கு கால் பண்ண மாட்டேன், சொல்லி விட்டு மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு செல்பவளை பார்த்தால் சிரிப்புத் தான் வந்தது”
அவனிடம் கோபப்பட்டுக் கொண்டு தோழியின் வீட்டு வாயிலை அடைந்தாள் அப்போது அங்கே ஒரு ஜாகுவார் கார் பின்னே வரவும் இவள் ஓரமாக ஒதுங்கி கொண்டாள் . அப்போது எதிர் பாராமல் கல் தடுக்கி கீழே விழப் போனவளை பாய்ந்து வந்து பிடித்துக் கொண்டான் அதிபன். எதிர்பாராமல்தான் அவளை அவன் பிடித்தான். பிடித்தான் என்று கூட சொல்ல முடியாது கையை நீட்டினான். கீழே விழாமல் அவன் கைகளில் விழுந்தாள் நம் தேவதை. நிச்சயம் அதில் எந்த தவறான எண்ணமும் இல்லை என்றாலும் அவன் கை அவளின் இடையிலும் அதற்கு மேலும் பட்டிருந்தது. அவளுக்கு இது என்ன உணர்வு? அவளை தூக்கி நிறுத்தியவன்,
“ஆர் யூ ஆல்ரைட்?” கேட்டுக் கொண்டிருக்கும்போது தோழி வந்து விட்டாள் . இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் . அவள் கைகள் இன்னும் அவன் பிடியில்தான் இருந்தது. சில்லிட ஆரம்பித்திருந்த இவள் கைகளுக்கு அவன் உள்ளங்கை சூட்டை தானமாக கொடுத்துக் கொண்டிருந்தான்.
“ம்ம் ! எஸ்! தேங்க்ஸ்! இப்ப ஓகே!” மெதுவாக கையை உருவிக் கொண்டாள் .
அதற்குள் கேக் கட்டிங் செய்யப் போகும் அறிவிப்பு வந்ததும், மேடைக்கு தங்கையுடன் விரைவாக விரைந்தான் அதிபன் அருணாச்சலம்.
பிறந்தநாள் விழா நடந்து கொண்டிருந்தது. இவளுக்குத்தான் உள்ளூர ஒரு விதமான பயம். கீழே விழப்போனவளை கை பிடித்து தாங்கியது குற்றமா? அல்லது பயம் நீங்க இன்னும் சற்று நேரம்அவள் கைகளை தன் கைக்குள் வைத்துக் கொண்டது தப்பா ? இந்த காலத்தில் இது எல்லாம் சகஜம்தானே? ஆனால் தனக்கு ஏன் உள்ளூர இந்த நடுக்கம். அவளுக்கு புரியவில்லை. மற்ற தன தோழிகளுடன் இணைந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாலும் மனதில் மட்டும் முனுமுனு வென்று ஏதோ சொல்ல முடியாத கலவரம். வேறு எந்த விஷயத்திலும் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை .
மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு விரைவாகவே கிளம்பி விட்டாள் .
“நான் கிளம்பறேண்டி. நாளைக்கு பாக்கலாம் . உங்க அண்ணன் கிட்டையும் சொல்லிடு”
“ஓ ! ஓகே! ஓகே! சொல்லிட்டா போச்சு” தோழியின் குரல் வேறு மாதிரி ஒலித்தது.
திரும்பி அழைத்துச் செல்ல வெற்றியே வந்து விட்டான். அவளுக்காகவே அருகில் வந்த சின்ன சின்ன சவாரியை மட்டும் எடுத்துக் கொண்டான். அவள் அழைக்கும் பொது அங்கேயேதான் அருகிலேயே இருந்தான்.
பார்ட்டிக்கு வந்த போது இருந்த களை இப்போது வித்யாவின் முகத்தில் இல்லை. அங்கே ஏதோ நடந்திருக்கிறது. என்னவாக இருக்கும்? இல்லை களைப்பாக கூட இருக்கலாம்.
“வெற்றி! வண்டிய கொஞ்சம் ஓரமா நிறுத்துங்களேன்”
இரவானதாலோ என்னவோ அந்த சந்தில் பெரியதாக ஆள் நடமாட்டமில்லை.
ஓரமாக நிறுத்தி விட்டு அவன் கீழே இறங்கி நின்று கொண்டான். தொடர்ந்து வண்டி ஓட்டியதில் முதுகு சற்று வலிப்பது போல இருந்தது . சோம்பல் முறித்துக் கொண்டான்.
அவன் எதிர் பாராத நேரம் பின்னோடு வந்து வித்யா கட்டிக் கொண்டாள் .
“வெற்றி ப்ளீஸ் என்ன தள்ளி விட்டுடாத”
இப்போது அவள் கையை விலக்கி முன் புறமாக திரும்பிக் கொண்டான். அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
“என்னாச்சு மேடம்?”
“மேடம் இல்ல. வித்யா சொல்லு”
“என்னாச்சு? தியா?” குரலில் அத்தனை மென்மை .
“தெரிலடா. ஏதோ ஏதோ ஒரு பயம் மனசுக்குள்ள. எனக்கு என்னன்னு சொல்ல தெரிலடா “
“அங்க என்ன நடந்துச்சு? யாரவது திட்டினாங்களா ?”
இல்லை என்று மண்டை ஆட்டினாள்
“பிரண்ட்ஸ் யாராவது கிண்டல் செஞ்சாங்களா ?”
அதற்கும் இல்லை என்று தான் மண்டை ஆட்டினாள் .
“அப்ப என்னதான் ஆச்சு? போகும் போது நல்லாத் தானே போனீங்க?”
அங்கே நடந்ததை கூறினாள் .
“அசோ இதுக்காகவே பயந்து போனீங்க? அந்த சார் உங்களுக்கு நல்லது தானே செஞ்சாங்க?”
அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டு கண்களை துடைத்து விட்டான்.ஒரு கன்னம் காட்டினாள். முத்தம் வைத்தான். மறு கன்னம் காட்டினாள். அங்கேயும் முத்தம் வைத்தான். நிச்சயம் அவள் வளர்ந்த குழந்தைதான்.
வீட்டுக்கு போய் சுடுதண்ணில குளிச்சுட்டு நெத்தில விபூதி இட்டுக்கிட்டு அம்மா மடியில தலையை வச்சு படுங்க. மனசுல இருக்கற பயமும் போய்டும். உடம்புல இருக்கற அசதியும் போய்டும். சொல்லிக் கொண்டே வண்டியை இயக்க ஆரம்பித்தான்.
தனக்கு தகுதி இருந்திருந்தால் வித்யாவை காலமெல்லாம் உள்ளங்கையில் தாங்கி இருக்கலாம் என்ற ஏக்கம் வெற்றிக்கு உண்டுதான். அதற்கு காலம் ஒத்துழைக்கும். ஆனால் இவனுக்கு அந்த தகுதி வரும்போது வித்யாதான் பாவம் அதிபனுக்கு சொந்தமாகி இருப்பாள்.
இன்றைய விஷயத்தை ஏனோ அவர்கள் இருவருமே பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. வித்யா இந்த விஷயத்தை அன்னையிடம் கூற வில்லை. வெற்றியிடம் சொன்னதும் அவளுக்கே இது ஒன்றுமில்லாத விஷயமாகிப் போனது. பிறகு எதற்கு அன்னையிடம் சொல்லி அவளையும் பயப்படுத்த வேண்டும்? தன் கணவன் சொன்னது போலவே நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு அன்னையின் மடியில் படுத்துக் கொண்டாள் . “டேய் புருஷா நீ சொன்னது சரிதான்” மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். மனதை (மனம்) கவர்ந்தவனிடம் மனதை ஒப்படைத்த பிறகு அவன்தானே கணவன்.
இத்தனை வருடங்களாக பார்க்காத ஒரு பெண் எதற்காக அதிபனின் கண்களில் அடிக்கடி பட வேண்டும்?
அவர்களின் சந்திப்பு மீண்டும்……………..
வித்யா வெற்றியின் காதல் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
காயத்ரி நேரம் பார்த்து கணவனிடம் பேச காத்துக் கொண்டிருக்கிறார்.
அதற்கு முன்பு வித்யா வாயை திறக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அவள் அதிகமாக பேசுவது இல்லை. புன்னகை முகமாக வலம் வந்து கொண்டிருக்கிறாள். முன்பே சொன்னது போல அழகாக தோற்றத்தில் ஈடுபாடு வந்தது.
அன்று அவன் அணைத்து முத்தமிட்டதற்கு பிறகு அவளுக்கு அவன் மீது இன்னும் அதிகமாக உரிமை வந்தது போல இருந்தது.
“வெற்றி”
“சொல்லுங்க மேடம்”
தயங்கினாள்.
வெளியில் வெறித்தவள்,
“எனக்கு ஒரு கிஸ் வேணுண்டா”
“முடியாது” எத்தனை எளிதாக மறுத்து விட்டான்.
கைகள் உரசினாலும் உதடு உரச அவன் அனுமதிக்கவில்லை.
“அப்ப அன்னிக்கு மட்டும்?” வித்யாவுக்கு கோபத்தில் மூக்கு விடைத்தது.
“அன்னிக்கு ஏதோ நீங்க பயந்திருந்தீங்க. பேச்சு வாக்குல ஏதோ தெரியாம”
“பேச்சு வாக்குல ஏதோ தெரியாமையா? வா ! என்னோட பிரண்ட்க்கு
இன்ட்ரோ கொடுக்கறேன். பேச்சு வாக்குல தெரியாம அவளுக்கும் முத்தம் குடுக்கறியான்னு பாக்கறேன்.கரி சட்டி! கரி சட்டி!”
அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.
அவனின் மறுப்பு அவளுக்கு அவமதிப்பாக இருந்தது. தன்னை தானே கேவலமாக உணர்ந்தாள். கண்களின் ஓரம் நீர் துளித்தது .
வண்டியை ஓரம் கட்டி விட்டு மெதுவாக அவளிடம் பேசினான்.
“மேடம்”
பதில் இல்லை. மீண்டும் அழைத்தான்.
“நான் மேடம் தான் இல்ல. நீ கரெக்ட்டா லிமிட்ல தான் இருக்க. எனக்குத்தான் என்னென்னவோ. எவ்ளோ சொன்னாலும் இந்த பாழா போன மனசு கேக்க மாட்டேங்குது. தானே வந்து ஐ லவ் யூ சொல்லறா. முத்தம் கேக்கறா. சீ இது இவ்ளோதானேங்கற இளக்காரம் தானே? எத்தனையோ பசங்க என்ன சுத்தி சுத்தி வந்துருக்காங்க. இப்ப இல்ல. ஸ்கூல் டேஸ்லேயே. யாரையும் ஏறெடுத்து பாக்காத இந்த கண்ணு ஒருத்தனை மட்டும் பார்த்துச்சு.எப்ப பார்த்தாலும் அக்கா, தங்கச்சி, பாப்பா இப்டியே பேசுவான். ஒரு வேளை அந்த பெண்களுக்கு நடுவுல நானும் வந்து சேர்த்துக்கனுன்னு ஆசை வந்துடுச்சோ என்னவோ? என்ன ஒருத்தன் பார்த்துக்கணும். கண்ணுக்குள்ள வச்சு கவனிக்கணும். காதலிக்கணும். நீதாண்டி அழகின்னு வாயில பல்லு போன கிழவி ஆனதுக்கு அப்புறம் சொல்லணும். கண்ணாடி போட்டதும் அப்புறமும் என்னோட கண்ணுல அவனோட கண்ண பாக்கணும். இதுக்குத்தான் உன் பின்னாடியே அலையறேன். மத்தபடி நான் எதுக்கும் அலையல . அவளின் வார்த்தைகளின் வீரியம் அவளுக்கு புரிந்ததோ என்னவோ? அவனுக்கு புரிந்தது.
சட்டென இறங்கி வந்து அவள் கேட்ட முத்தத்தை அவள் கன்னங்களில் வாரி வழங்கினான்.
“நீ அலையல டீ . நான்தான் அலையறேன். உனக்கு பின்னாடியே அலையறேன். பயமா இருக்குடி. நம்ம வயசு அப்படி. உன்னோட வசதி அப்டி. புரிஞ்சுக்கடி”
“அதெல்லாம் எங்க வீட்டுல ஓகே சொல்லிடுவாங்க . என்னோட மாம், டாட் லவ் மேரேஜ் தான். அவங்கள ஒத்துக்க வைக்கறது ரொம்ப ஈஸி. பட் ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு. வாழ்க்கைல உழைக்க தயாரா இருக்கணும். அது இருந்தா எங்க அப்பா ஈஸியா பொண்ணு குடுத்துடுவாரு”
“உங்க அம்மா அப்பா உங்க கல்யாணத்தை எத்தனை சிறப்பா செய்யணுன்னு நினச்சுருப்பாங்க? பொண்ணு பணக்கார வீட்டு மருமகளா இருக்கனுன்னு நினைச்சுருப்பாங்க? “
‘ப்ச்!அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல”
“எங்க மலரக்காவையே சரியான எடத்துல கல்யாணம் பண்ணாமத்தான் இன்னிக்கு அது இவ்ளோ கஷ்டப்படுது . நீங்களும் இந்த ஏழையை பண்ணிக்கிட்டு எதுக்குங்க கஷ்டப்படணும்?”
“உங்க அக்கா கஷ்டப்படறதுக்கு காரணம் அவங்க புருஷன் சரி இல்ல. ஆனா என்னோட புருஷன் அப்படியில்ல. என்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவாரு “
“என்னால முடியுமா? பயமா இருக்குடி” அவள் முகத்தை பார்த்து, கண்களை பார்த்துக் கூறினான்.
அவன் கைகளை எடுத்து தன் கன்னங்களில் வைத்துக் கொண்டாள்.
“உன்னால முடியலைன்னா யாராலையுமே என்ன சந்தோசமா வச்சுக்க முடியாதுடா”
அவள் குரலில் அத்தனை காதல். அத்தனை மென்மை . அத்தனை நம்பிக்கை. அவன் மீது அவளுக்கு இருக்கும் நம்பிக்கை அவன் மீது அவனுக்கே இல்லாதது.
காதல் வந்துச்சோ…இந்த காதல் வந்துச்சோ………
தொடரும் …………
error: Content is protected !!