Skip to content
Post Views: 1,568
꧁☆☬ லயம் – 14 ☬☆꧂
யார் என்ன தவித்தாலும், அழுதாலும், துவண்டாலும், காலத்தை, அதன் ஓட்டத்தை யாராலும் நிறுத்த முடியாதே. நிற்காமல் ஓடும் அதன் பத்ம வியூகத்தில் இருந்து வெளியேற தான் முடியுமா? அதில் அவனும் வசமாய் சிக்கி கொண்டான். சுக்கிர வாரத்தின் பொழுதும் புலர்ந்து விட்டது. காதல் வசம் பறக்க தொடங்கிய மனதை கடிவாளமிட்டு அடக்கி விட்டான் என அவன் தவறாய் நினைத்துவிட்டான். அடங்குவேனா நானென அதுவும் தன் ஆட்டத்தை தொடக்கி விட்டது.
Advertisement
இளாவை அணிந்து வர சொல்லி மாலா வைத்து விட்டு போன இள நீல நிற சட்டையை கண்டவன் கண்களோ கன்னியின் வார்த்தைகளை தான் திருப்பி படித்தது மன திரையில். ப்ளூ கலர் சட்டை போட்டு அழகா ஸ்மார்ட்டா இருப்பார் என காதில் ஒலிக்க எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு, என் மனம் வெள்ளை என தும்பை பூ நிறத்தில் இருந்த மற்றொரு புது சட்டையை தான் அணிந்திட்டான்.
Advertisement
ஒயிட் ஷர்ட், பிளாக் பேண்ட் என அந்த ஆடையிலும் இன்னும் அழகனாய் தான் தெரிந்திட்டான்.கண்கள் மட்டும் தூக்கம் மறந்து, சோர்ந்து சோபையிழந்து தன் துக்கத்தை பறைசாற்ற, இதழில் ஒட்ட வைத்த சிரிப்புடன் மேலிருந்து வந்த தன் மகனை கண்டவருக்கோ மனம் பயம் கொண்டது யாரும் அறியாமல். தான் பார்த்துள்ள பெண்ணை பற்றி மகன் இதுவரை ஒரு கேள்வியும் எழுப்பவில்லை. அனுப்பி வைத்த போட்டோவை கூட அவன் பார்க்கவே இல்லை என ப்ளூ டிக் வராத வாட்சப் செய்தி உண்மையை உரைத்து விட்டது. அவனுக்கு பெண்ணை பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பினும் சிறிதே துளி பயமும் இருந்தது.
Advertisement
” என்ன மச்சான் !!!!.. ஆடிட்டர் நீ, வக்கீல் மாதிரி ஒயிட் ட்ரெஸ்ல வந்துருக்க. சூப்பரா தான் இருக்கு. என் தங்கச்சி விக்கெட் அவுட் ” முரளியின் கிண்டலில் மென்னகை புரிந்தவனோ, பெற்றோர் முன் சென்று நிற்க மாணிக்கம், தமயந்தி முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது .
Advertisement
மகன் அந்த பெண்ணின் செயலில் திருமணத்தை வெறுத்துவிடுவானோ என தவித்து நிற்க, இன்றோ மாப்பிள்ளை கோலத்தில் மனதை குளிர்வித்து விட்டான். இவர்களின் சந்தோசத்திற்கு தானே அவன் தன் மனதை மாற்றி கொண்டு இங்கே சிரித்தபடி வந்தது. இனி தன்னால் எந்த தலைகுனிவும் அவர்கட்கு வந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தான். மாமாவிற்கு கல்யாணம், புது அத்தை வர போகிறார்கள் என்று பொடுசு குட்டிகள் பூரிப்பில் சுத்த, வீடெங்கும் உறவுகள் குழுமி இருக்க சந்தோச வானிலே பறந்து கொண்டிருந்தனர் அனைவரும். இன்றோ சிரிப்பும், பேச்சும் கலவையாய் இல்லம் நிறைந்திருக்க, அவர்கள் உள்ளமும் குளிர்ந்து இருந்தது பூரிப்பில்.
அன்றோ மாணிக்கம், முரளி, மாலாவிற்கு கூட சிறு மனத்தாங்கல் முதல் நாளில் இருந்தது. அவனும் பார்த்தபின் நிச்சயம் வைத்திருக்கலாம். அப்படியென்ன அவசரம், முதல் வாரம் நிச்சயம், மறு வாரமே திருமணமென்று.
முரளியோ ஒரு படி மேலே சென்று, ” இதுக்கு உங்க அம்மா பேசாம, அவன்கிட்ட பேசாமயே இருந்திருக்கலாம். நாலு வருஷம் அவன்ட பேசாம படுத்துனாங்க. இப்போ பொண்ணையே நேரில் காட்டாம புடிச்ச பிடியில் நின்னு கல்யாணத்தை நடத்தியே ஆகணும்னு ஒத்த கால்ல நிக்குறாங்க. அவனுக்குன்னு ஆசை இருக்காதா , கட்டிக்க போற பொண்ணை பத்தி கனவுகள் இருக்காதா, அப்படியென்ன உடும்பு பிடியோ..,” தங்கள் அறையில் தான் அங்கலாய்த்து கொண்டிருந்தான் முரளி.
“ ஏங்க, பொண்ணு அழகா படிச்சு இருக்கா, வேலைக்கும் போறவ, அவளுக்கும் ஒர்க் இப்போ கொஞ்சம் பிரீயா இருக்காம். அடுத்து பசங்க கல்யாணம் இருக்குனு சொல்ராங்க. இப்போ முடிச்சா அடுத்து அவங்களுக்கு பண்ண ஈஸியா இருக்கும்னு அவங்களும் நினைக்கிறங்கா., நம்ம கேட்ட உடனே ரெண்டு வீட்டுக்கும் மனசு ஒத்து தானே முடிவு பண்ணோம்…,”
“ நான் அதெல்லாம் தப்பு சொல்லல. உன் தம்பிக்கு 200 % அவ தான் செட்டாவா, செம்ம மேட்ச், எனக்கும் இப்படி ஒரு பொண்ணை விட மனசே இல்லை. ஆனால் அவன் வந்து பார்த்து இருக்கலாம்னு மனசு தவிக்குது…ஒருவேளை அவனுக்கு புடிக்கலைன்னா என்னம்மா பண்றது? “அவனும் குழம்பி அவளையும் குழப்பினான்.
” ஏங்க!!!.., அவனே ஒன்னும் சொல்லல, நீங்க புலம்பிட்டே இருக்கீங்க, அவனுக்கு பொண்ணை பிடிக்கும். விடுங்க…”
“ பத்து பொண்ணு பார்த்தோமா ..,? பஜ்ஜி சொஜ்ஜி தின்னோமா.., பத்தும் பிடிக்கலன்னு அடுத்தொன்னு பார்த்தோமான்னு இல்லாம, ஒத்த பொண்ணை பார்த்து அதையும் கண்ணுல காட்டாம, என் மச்சான் பேச்சிலர் லைப்பையும் பேயறைஞ்ச்ச மாதிரி வேஸ்ட் பண்றீங்களே ? இதே கேக்க யாருமே இல்லையா .., ? “
” போங்களேன், நீங்களே போய் அம்மாட்ட கேளுங்க, என்கிட்ட மட்டும் வாய் கிழிய பேசுறது, அவங்க முன்னாடி பம்மிட்டு நிக்கிறது. “
” நம்ம சொன்னா மட்டும் அவங்க கேக்க போறாங்க., மேனேஜரும், ஆடிட்டரும் வாய் மூடிட்டு கம்முனு இருக்காங்க., எனக்கென்ன…”
“தெரியுதுல்ல., அப்புறம் ஏன் புலம்பிட்டு இருக்கீங்க., ?”
” எனக்கு தான் எங்கம்மா பொண்ணு பார்க்கனும்னாலே கடுப்பாகி, முதல்ல வந்த வரனை பார்த்து கட்டி வச்சிட்டாங்க., ஒரு பொண்ணை கூட சைட் அடிக்க முடியல .., என் அண்ணன், தம்பின்னு யாருக்குமே அலையல, எங்கேயும் கூட்டியும் போகல, உன் தம்பிக்காச்சும் போகலாம்னு நினைச்சேன்., இங்கேயும் இப்படியா..,” என்று நொடிக்க.
” எதே !!!! பொண்ணை சைட் அடிக்க போகணுமா., அதுவும் என்கிட்டயே சொல்றிங்க? ” திரும்பி பார்த்தவளோ கையில் கிடைத்த பொருளை தூக்கி அவன் முதுகில் அடிக்க.
” அய்யோ!!!!.., நமக்கு வாயில வாஸ்து சரியில்லை, கொஞ்சம் அடங்கி இருடா முரளி ..,” என தனக்கு தானே விரல் நீட்டி சொல்லி கொண்டவன் அடுத்து வாயே திறக்கவில்லை.
” அண்ணா !!!..” என்று அவள் அன்பாய் அழைத்ததும், உருகி போய் தங்கை பாசத்தில் பாசமலராய் அவள் புராணம் பாட ஆரம்பித்து விட்டான் அடுத்து வந்த இரு நாட்களில்.
மாலாவின் மாமியார் வீட்டு சொந்தமே அரை டஜனுக்கும் மேல் இருக்க, நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என இருபக்கமும் இணைந்து நிச்சயத்திற்கே இருநூறு பேர்கள் வரை வந்து விட்டனர். ஆதலால் பெரிய மண்டபம் பிடித்து விட்டனர். முரளியோடு இணைந்து, அவன் அண்ணன் தம்பிகளும் சேர்ந்து கல்யாண வேலையும் ஒருபுறம் ஆரம்பித்து விட்டனர்.
மாணிக்கம் திருமண தேதியில் கொஞ்சம் யோசிக்க முரளியின் தாயோ ” அதான் இதனை தடிமாடுங்களை நான் பெத்து வச்சிருக்கேன். மச்சினன் கல்யாணத்தை எடுத்து நடத்த மாட்டாங்களா, ஜாம் ஜாம்னு பிள்ளை கல்யாணத்தை ஜமாய்ச்சிடலாம் கவலையை விடுங்க., ஆளும் பேருமா இத்தனை பேர் இருக்கோம், எதுக்கு தயங்குறீங்க?., “
வர போற மச்சினன் பொண்டாட்டி தான் அவங்களுக்கு தங்கச்சி முறை. அவ மேல அன்பா இருந்தா தான் உறவு பலப்படும். என் பிள்ளைங்க காலத்துக்கும் உறவு கூட சேர்ந்து வாழ முடியும்.., என அறுவரின் மாமியார் வீட்டையும், அவர்களின் மருமகள்களோடு சேர்த்தே இணைத்து கொண்டதில் இவரின் மருமகள்களும் ஒற்றுமையாய் இருந்தனர். எந்த சுணக்கம் காட்டாது அவர்களும் இணைந்து, ஜெட் வேகத்தில் வேலைகளும் நடைபெற்றது.
மாப்பிள்ளையும் பொண்ணும் மட்டும் நேரில் பார்க்காமலேயே பத்திரிக்கை வரை ரெடி செய்து விட்டனர். பிரிண்ட் மட்டும் போட்டு வர வில்லை. தமயந்திடம் வரும் கிளைன்ட் மூலமே பாதி வேலைகள் முடித்து விட்டார். ஆள் பலமும், பண பலமும், மன பலமும் இருந்து விட்டால் எந்த வேலையும் தூசு போல் எளிதில் செய்து விடலாம்.
மாலா இருப்பது தமயந்தி அவளுக்கு கட்டி கொடுத்த வீட்டில் தான். எல்லா வீட்டிலும் கீழ் தளம் மகளுக்கு, மேல் தளம் மகனுக்கு என்றே கட்டுவார். சென்னை வீடும் அப்படியே. பங்களா டைப் வீடு. ஆதலால் அனைவரும் ஒரே இடத்தில இருந்து தங்கி, அங்கிருந்தே கிளம்பினர். உறவுகள் , மழலை செல்வங்கள் அனைத்தும் முண்டியடித்து இரு வேனில் கிளம்பி சென்றிருக்க, எஞ்சியவர்கள் கார்களில் கிளம்பினர்.
காரில் தன்னருகே வந்தமர்ந்த மகனிடம் உன்னுடைய நம்பிக்கையை நான் காப்பாத்துவேன் என்பதாய் ஆழ்ந்து பார்த்து, கைகளை இறுக பற்ற, தாய் உரைக்காமலே மனதை படித்தவன் ” உங்க மருமகளை பார்க்க போலாமே., ” மென் சிரிப்புடன் கேட்க ” என் மருமகளையா, உன் ஆளையா..?” என பூடகமாய் சிரிக்க, சற்றே யோசித்தவன் போனை கையில் எடுக்க, தடுத்தவரோ, ” நேரிலோ பார்த்துக்கோ, போனை வை..,” ” ஜஸ்ட் கூல்.,, ரிலாக்ஸ் ” என்றார் நிமிர்வுடன்
தாயின் வார்த்தைகளில் இன்னுமே தவிப்பு அதிகமாகியது. ” ச்சே…, பொண்ணு யாருன்னு பார்த்திருக்கலாம், மிஸ் பண்ணிட்டேன்.., அவ பேரை கூட கேட்கல ” காலம் கடந்த ஞானோதயம் மாறனுக்கு. அன்றோ சொல்லெனா உணர்வு மனதை தாக்க பெண்ணின் புகைப்படத்தையும் அவனுக்கு பார்க்க தோன்றவில்லை.
இரு நாட்கள் தான் என்றாலும் அவளின் தாக்கம் கொஞ்சம் அதிகமாக தான் இருந்தது. தாயிடம் பேசலாமா என கூட யோசித்தான். பின் தான் தானே திருமணத்திற்கு சரி சொன்னது, எந்த முகத்தை வைத்து கொண்டு இப்போது வேண்டாம் என்பது என தனக்கே ஆறுதல் கூறி கொண்டு தான் ஊரிலிருந்து கிளம்பினான். அவள் தனக்கானவள் என்றால் என்றோ கண் முன் அவளின் தரிசனம் கிடைத்திருக்குமே, கிட்டவில்லையே, மனம் கவர்ந்த பெண் என்பதை தாண்டி அவளை பற்றி எதுவும் தெரியாதே, கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாமோ.
எல்லாரும் கூறுவது போல பணி ஒன்றே மனதில் இருக்க, பக்கத்தில் இருந்திருந்தால் கூட தெரியாமல் தான் இருந்திருப்பேனோ என சுயபச்சாதாபம் கொண்டவன், தாய் தொல்லை தட்டாத தனையனாய் வீடு வந்து சேர்ந்திருந்தான். இதோ கிளம்பியும் வந்தாகி விட்டது. மண்டபம் நெருங்க நெருங்க மனதில் ஒரு பதட்டம் சூழ்ந்தது. சொல்ல முடியா உணர்வுகள் பெருகியது. தாளம் தப்பி துடிக்கும் இதயத்தோடு காரில் இருந்து கீழே இறங்கி நிற்க, புயலென சிவாவோடு, ராஜாவும் ஓடி வந்தான்.
error: Content is protected !!