Skip to content
Post Views: 1,742
அவனை பற்றி மற்றவர் பெருமை பேச பேச தமயந்தியின் கண்கள் ஆனந்தத்தில் கலங்க ஆரம்பித்தன. தான் இத்தனை வருடம் கஷ்டப்பட்டு அடைய துடித்த பதவியை தன் மகன் இரண்டே வருடத்தில் எட்டியதை எண்ணி மனம் மகிழ்ந்தார். அவனின் முழு முயற்சி இல்லாமல் குறைந்த கால அளவில், இத்தகைய உயர் பதவி கண்டிப்பாய் கிட்டி இருக்காது. அவன் சொந்த உழைப்பை கொட்டி அவன் வாங்கிய விருது அல்லவா இந்த பதவி. இள வயதில் அவன் எட்டிய பதவி சாதனை தானே. சோதனைகள் பல கடந்து சாதனை செய்த மகனை பெருமிதமாய் பார்த்து இருந்தார் மீட்டிங் போது அவர்களின் பேச்சு முடியும் வரை.
அதிலும் ஒருவர் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? தமயந்தி பையன் அவரையும் மிஞ்சி விட்டான் என்றதில் அவன் மீதிருந்த கோபம் அனைத்தும் பஞ்சாய் காற்றில் பறந்து விட்டன. இதனை தானே அவர் எதிர்பார்த்தார். அன்று பறந்த தன் மானத்தை மகன் இன்று காப்பாற்றி கொடி நாட்டி விட்டானே என புளகாங்கிதம் அடைந்தார்.
Advertisement
அவன் தன் துறையை தேர்ந்தெடுத்து படிக்க ஆரம்பித்ததும், இரவும் பகலும் அவனோடு இருந்து கற்று கொடுத்தாரே. அதற்கு பின்னான நாளிலும் இரண்டு ஆண்டுகள் கற்று கொடுத்து, அவன் சுயமாய் தானே தன் அலுவலக மாடியின் மேலேயே தனித்து இயங்கி இதோ இத்தனை உயர்ந்து நிற்கிறானே என ஆதூரமாய் பார்த்தவர் ” வெல்டன் மை பாய் ” என்றார் கைகுலுக்கி.
” தேங்க்ஸ் மேம் ” என்றதில் மேம் என்ற அந்த ஒற்றை வார்த்தையே அத்தனை நிமிட சந்தோசத்தையும் நொடி முழுதில் காலடியில் தள்ளி அவரை நோகடித்து விட்டது. காரில் ஏறி அமர்ந்தவருக்கோ தாள முடியவில்லை. மனதின் பாரம் கண்ணீரை பொழிய செய்ய, அடக்க முயன்றும் அவரால் முடியவில்லை. முகம் திருப்பி அமர்ந்து இருந்ததால் இளாவிற்கு அவரின் அழுகையும் தெரியவில்லை.
Advertisement
Advertisement
மௌனத்தை தொடர பாடலே ஒலித்து கொண்டிருந்தது. ” குற்றம் இல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி ” என்ற வரியில் மகனை பார்த்தவர் “தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீட்சியல்ல, பாடம் படி பவளகொடி” என்ற வரி வர அவன் கரங்களை இறுக பற்றினார். திரும்பி பார்த்தவன் கலங்கிய கண்களை பார்த்து வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டான்.
” அம்மா என்னாச்சு ” பதறி கண்ணீரை துடைக்க அவனின் அம்மா என்ற அழைப்பில் மேலும் கலங்கியவர் தோளிலே சாய்ந்து மயங்கி இமை மூட, ” ம்மா… ம்மா…. “என பதட்டம் கொண்டு, அவர் கன்னத்தை தட்ட, மெதுவே கண் திறக்க, தண்ணீரை கொடுத்து குடிக்க செய்தான்.
Advertisement
” மாறா.., சாரிடா… சாரி.. அம்மா அன்னைக்கு இருந்த கோபத்துல அப்படி சொல்லிட்டேன். இருந்த டென்ஷன்ல என்னையும் மீறி வார்த்தை வந்துருச்சு. மனசு அறிஞ்சு நான் சொல்லலடா. சாரிடா….சாரி… சாரி மாறா ” என மீண்டும் மீண்டும் உரைக்க, மனம் தாளாதவன் இறுக அணைத்து ஆற்றுப்படுத்தினான்.
” விடும்மா… ஒண்ணுமில்ல… ரிலாக்ஸ் ஆகு ” சிறு பிள்ளையாய் மகன் அவரை தேற்றி அமைதி படுத்தினான். அவர்கள் மனமோ கடந்து சென்ற நாளினை எண்ண தொடங்கியது.
இளமாறனை மாறா என்றே அனைவரும் அழைக்க வேண்டும். தமயந்தி விரும்பி அவனை அழைக்கும் பெயரையே, அனைவரும் அழைக்க வேண்டும் என சொல்வான். அதுவே அவனின் பிடித்தம், மாற்றி கூப்பிட்டால் திரும்ப கூட மாட்டான். இரண்டாம் ஆண்டிற்கு பின் இன்னுமே சுகுமாரன் மாறாவின் நட்பு இறுகி விட்டது. ராஜா தன் படிப்பில் முழுதாய் தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டிய சூழ்நிலை, பெரும் பொழுதுகள் அதிலே அவன் கழிக்க ஆரம்பிக்க, சிறிது சிறிதாய் ராஜாவிடமிருந்து விலக ஆரம்பித்தான். சுகுமாரானை கண்டாலே ராஜா சண்டை போட இளாவிற்கோ அது பிடிக்கவில்லை.
” டேய் ! அந்த சுகுமார் சொல்றதை நம்பாதே, அவன் சரியில்லை ” என கூறினாலும் இளா நம்பவில்லை. இது குறித்து அடிக்கடி இருவருக்குள்ளும் சண்டை வரவும் செய்தது. பைனல் இயர் படிப்பதால், வேறு பாட பிரிவினாலும் அடிக்கடி தனிப்பட்டு பேசி பழக நேரமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனை நன்கு பயன்படுத்தி கொண்டு சுகுமார் ராஜாவை இளாவிடம் இருந்து முற்றிலும் தள்ளி நிறுத்தி விட்டான்.
மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் அவன் வகுப்பில் புதிதாய் வந்து இணைந்தவள் தான் சத்யா. கண்ணை கவரும் அழகியாய் வந்தவளை பார்த்தவுடன் சுகுமார் காதல் கொண்டு விட்டான். தோழமையாய் பழகும் இளாவோடு அவளும் நட்பு பாராட்ட சுகுமாருக்கோ அது வசதியாய் அமைந்து விட்டது. சிறிது நாட்களிலேயே தன் காதலை பகிர அவளோ மறுத்துவிட்டாள். விடாது அவள் பின் சுற்றி தொல்லை செய்திட, ஒரு கட்டத்தில் அவளும் இவன் காதலை ஏற்று கொண்டாள்.
காதல் பறவைகளுக்கு தூது செல்வது, உடன் சுற்றுவது, பணத்தை தண்ணீராய் செலவழிப்பது என நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அப்பாவியாய் இளாவும் அவர்களோடு சுற்றி திரிந்தான். நாட்கள் அதன் போக்கில் கழிய விளையாட்டை ஓரம் கட்டி விட்டு முற்றும் முழுதாய் படிப்பில் நாட்டம் செலுத்த தொடங்கி இருந்தான் இளா.
அடுத்து CA சேர வேண்டி இருப்பதால் படிப்பில் கவனம் இருக்க சுற்றத்தை கவனிக்க தவறி இருந்தான். கான்டீன், லன்ச் பிரேக்கில் தான் மற்றவரிடம் பேசுவான். பெரும்பாலும் சுகுமார், சத்யா மட்டுமே அவன் உடன் இருப்பர். நட்பு வட்டம் சுகுமாரனை மாறன் என்றும் இளமாறனை மாறா என்றும் அழைக்க அவள் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டாள். ஆனால் அவர்கள் அறியாத ஓன்று சத்யா மாறாவை காதலிப்பதாய் சொல்லி கொண்டு சுற்றி திரிவது. (உங்களுக்கு கன்ப்யூஸ் ஆகாமல் இருக்க நான் இளா என்றே அழைக்கிறேன்.)
செமஸ்டருக்கு இரு வாரமே இன்னும் இருந்தது. இளாவை விட்டால் இனி பிடிக்க முடியாது என கருதியவள் ஒரு நாள் இளாவின் முன் வந்து அழுகையோடு கண்ணை கசக்கி கொண்டு நின்றாள்.
பதறியவனோ “சத்யா!, ஏன்டா அழகுற? “
” மாறா ! அது எ..எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு எனக்கு தெ…தெரியல., நா., நான் .. ” என தயங்க
” ஏய் ! என்கிட்டே என்ன தயக்கம்., என்னனு சொல்லு. ஏதா இருந்தாலும் ப்ராமிசா நான் ஹெல்ப் பண்றேன்., ” என்னவென்று கேளாமல் உதவி செய்யும் குணம் சத்தியத்தை தர விதியோ சிரித்தது.
சற்றே தயங்கியவள் ” அது நான் டூ மந்த்ஸ் ப்ரக்னென்ட் ” அதிராமல் குண்டை தூக்கி போட
இவனுக்கோ சுகுமாரை எண்ணி ஆத்திரம் வந்தது. காதல் தவறில்லை. ஆனால் பெண்ணிடம் திருமணத்திற்கு முன் அத்துமீறி, அவளை உடமையாக்குவது பெருந்தவறு. தன்னோடு நட்பாக இருந்து கொண்டு பெண்மைக்கு மதிப்பு கொடுக்காமல் இத்தகைய கீழான செயலை செய்ய அவனால் எப்படி முடிந்தது என கடும் கோபம் மனதில் மூண்டது. அவன் மட்டும் கண் முன்னே இருந்திருந்தால் அடி வெளுத்து இருப்பான்.
“ஏய்! உங்களுக்கு அறிவில்லையா? அசால்ட்டா வந்து சொல்லிட்டு இருக்க டாமிட் எங்க அவன்?” பல்லை கடித்து கொண்டு அவன் கேட்ட விதத்தில் இவளுக்கே பயம் வந்தது. சத்யா பெண்ணாக இருந்ததால் அடி வாங்காமல் தப்பித்தாள்.
” எங்களையும் மீறி தெரியாம நடந்திருச்சு. பிளீஸ் மாறா! நீ தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும். அவன் ரொம்ப பயந்துட்டு அழுக ஆரம்பிச்சிட்டான். எங்க வீட்டுல இதை பேசுற நிலைமை இல்லை. புரிய வைக்கவும் முடியாது. எங்க அக்காக்கு கல்யாணம் பண்ணாம எனக்கு பண்ண மாட்டாங்க. அவன் வீட்டுல ரெண்டு அக்கா, தங்கச்சி இருக்க அவனுக்கும் பண்ண ஒத்துக்கவே மாட்டாங்க. இருக்குற ஒரே வழி யாருக்கும் சொல்லாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணறது தான். ப்ளீஸ் மாறா! ஹெல்ப் பண்ணு ” என கெஞ்சி கூத்தாடி அவனையும் ஒருவாறு சம்மதிக்க வைத்து விட்டாள்.
“நீயும் கைவிட்டா எங்களுக்கு சாகுறது தவிர வேற வழியில்லை ” அழுது அரற்றியதால் இளாவும் ஒத்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான்.
ரிஜிஸ்டர் ஆபீஸில் உள்ளோரிடம் பேசி லஞ்சம் கொடுத்து உடனே திருமணம் செய்ய ஏற்பாடும் செய்து விட்டான். சுகுமார் ஒரு வாரமாக கல்லூரிக்கு வராமல் இருந்ததால் சத்யா, இளாவும் தான் சேர்ந்து சுற்ற, ஜோடி புறாக்கள் சேர்ந்து சுற்றுவதாய் மற்றவர்கள் நினைத்தனர்.
error: Content is protected !!