Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 9 2

” அடிச்சி பல்லை கலட்டிருவேன்., யாரு யாரை லவ் பண்ணது, யாருட்ட பேசிட்டே இருக்குற ? ” அவன் கத்தலில், இவள் கத்தி அழுக ஆரம்பிக்க.

” டேய்., மாறா , நீங்க ரெண்டு பேரும் தானடா லவ் பண்ணீங்க., ஏன்டா இப்போ இல்லைங்கிற., ” நண்பர்கள் பேச ,



Advertisement

”  கல்யாணம் பண்ணறதுக்கு தானே மாலை வாங்கிட்டு வர போன, அதுக்குள்ள என்னாச்சு மாறா உனக்கு., என்னை கலட்டி விட பார்க்குறியா.,நான் செத்துருவேன்.., ” கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய கூட்டம் கூடிவிட்டது.

Advertisement

” சத்யா, சுகுமாரனை லவ் பண்ணிட்டு என்னை லவ் பண்றேன்னு சொல்லுற, வெக்கமா இல்லையா உனக்கு ” சத்யாவிடம் கத்தியவன், நண்பர்கள் புறம் திரும்பி ” டேய் உங்களுக்கும் என்னடா ஆச்சு, தப்பா பேசுறீங்க ” கோபமும் எரிச்சலும் குரலில் வெளிப்படையாய் தெரிய கொந்தளித்து பேசி கொண்டிருந்தான்.

Advertisement

அவர்களோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க குழப்பத்தில் அவனிடமே கேட்டனர். ” நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தானடா எப்போவும் சுத்துவிங்க, போன வாரம் புல்லா மாறனும் இல்லைனு ஜோடி போட்டு பிரியாம திரிஞ்சிங்க. இப்போ இல்லைங்கிற… “

Advertisement

” அவளை லவ் பண்ணது மாறன், நான் இல்லைடா, பிரண்டா தான் பழகினேன். “

” பொய் சொல்லாத மாறா… நம்ம லவ் பத்தி காலேஜ் புல்லா தெரியும். நம்ப வச்சி ஆசையை தீர்த்துட்டு என்னை மோசம் பண்ணிட்டியே… ஏன்டா இப்படி பண்ற… ” சத்யாவின் கதறலை கேட்டு சுற்றி இருந்தோர் மட்டுமல்ல தமயந்தியும் நம்பி விட்டார்.

யாரோ ஒருவன் என கொதித்து போய் இருந்தவருக்கு தன் மகன் என்றதும் அதிர்ச்சியில் பேச்சே எழவில்லை. கண்கள் இருட்டி கொண்டு வர தலை சுற்ற ஆரம்பித்தது. கழுத்து வலி நெடு நாட்களாக இருப்பதால் டென்ஷன் ஆனால் இரத்த ஓட்டம் கட்டு கடங்காமல் தலை முழுதும் அலைபாய்வது போல தோன்றும். நின்றாலே முன்னோக்கி விழ வைக்கும். இப்போதோ நடந்தவை கண்டு உலகமே தட்டாமலை சுற்ற உடலை இழுத்து பிடித்து மகன் முன் வந்து நின்றார்.

அவரை கண்டதும் அதிர்ந்தவன் பின் ஓடி வந்து ” ம்மா.. பாரும்மா..  இவ பொய் சொல்லி என்னை கல்யாணம் பண்ண பார்க்குறா, இவளை பிரண்டா தான் நினைச்சேன், உனக்கே தெரியும்ல, சொல்லுமா.. ” தன்னை நம்பும் தாயின் மீது முழு நம்பிக்கை வைத்து அவன் பேச அழைக்க,

அவரோ அவன் கையை உதறி விட்டு துச்சமாய் பார்த்து நின்றார்.  இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணுவேன் என அவன் அன்று சொல்லியது வேறு முள்ளாய் குத்த, இத்தனை பேர் முன்பு ஒரு பெண் பொய் சொல்லுவாளா? அவனோடு படித்தவர்களே இருவரும் காதலித்ததாய் கூறும் போது எதை நம்புவது என தெரியமால் முழி பிதுங்கி நின்றவரோ கோபத்தில் ஓங்கி அவனை அறைந்து விட்டார்.

” ம்ம்மா… ” அவனோ அதிர

” இனிமே அம்மான்னு கூப்பிடாதே, நீ யாரோ தான் இனிமே எனக்கு, உன்னை பத்தி நான் கண்ட கனவை எல்லாம்  அழிச்சுட்டு, புத்தி பிசகி நிற்குற நீயெல்லாம் என் பிள்ளையே இல்லை. ” தன்னை நம்பாது பேசும் தாயை கண்ணில் நீர் மல்க பார்த்தவன் மனதோ அக்கணமே இறுகி விட்டது. என் மேல் நம்பிக்கையே இல்லையா என்பதாய் பார்த்து நின்றான். உலகத்தில் தான் நேசிக்கும், பாசம் வைத்த முதல் உறவே தன்னை நம்பாது போனால் யாரிடம் சென்று நம்பிக்கையை எதிர்பார்க்க முடியும்.

நடந்த கலவரத்தை சுற்றி நின்ற கூட்டம் மொத்தமும் வேடிக்கை பார்க்க தலை இறக்கமாய் தோன்றியது தமயந்திக்கு. உயர் பதவியில் செல்வாக்காய் இருந்த, தன்னை ஊர் பார்க்க தலை குனிய வைத்து விட்டானே என அழுகை வர அடக்கி கொண்டு நின்றார். யாருக்கும் சிறு தீங்கு கூட செய்யாத தனக்கு இப்படி ஒரு நிலையா என உள்ளம் குமுற கல்லாய் இறுகி நின்றார்.

அவர்கள் என்றோ செய்த நல்வினை இன்று உதவி செய்தது போல அங்கு பணி செய்பவர் வந்து கத்தி அழைத்தார்.

” சுகுமாரன், சத்யா யாருப்பா… ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றது, சீக்கிரம் வாங்க ” அவரின் அழைப்பில் உச்சக்கட்ட அதிர்ச்சியில் சுற்றி நின்ற அனைவரும் சலசலக்க ஆரம்பிக்க தன் தாயையும், நண்பர்களையும் ஆழ்ந்து, பார்த்த பார்வையில் அவன் சொல்லாமலே புரிந்தது ” என்னை நம்பாமா பேசுனீங்க, இப்போ என்ன சொல்விங்க? ” என்று.

அவசர கல்யாணம் என்றாலும் அனைத்தையும் முதலிலே முறைப்படி கொடுத்து தான் ஏற்பாடு செய்திருந்தான். இதை சத்யா மறந்தது தான் அவன் வாழ்வை காப்பாற்றியது. பெயரை வைத்து ஊரை ஏமாற்றலாம். சட்டத்தை ஏமாற்ற முடியாதே. ஆவணங்கள் அனைத்தும் சுகுமாரன் என்று தானே இருந்தது.

சத்யாவை நோக்கி சென்றவன் “அவனை லவ் பண்ணிட்டு, அவன் குழந்தையை வயித்துல சுமந்துட்டு ஹெல்ப் கேட்டியேனு, உன்னை நம்பி  வந்த என்னை செருப்பால அடிச்சுக்கனும், நீ எல்லாம் பொண்ணா, த்தூ… உங்களை எல்லாம் பிரண்டுன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு. எவனும் பின்னாடி வந்துராதீங்க, அடிச்சு நொறுக்கிருவேன் ” கையில் இருந்த மாலையை சுழற்றி ஓங்கி, சுவற்றில் அடிக்க மலர்கள் எல்லாம் காற்றில் உயர பறந்து, உதிர்ந்து நார் மட்டுமே அவன் கையில் இருந்தது அவன் நிலை போலவே. அதையும் வெறுப்பில் தூக்கி அடித்தவன் ஒன்றும் சொல்லாமல் யாரையும் திரும்பி கூட பார்க்காமல் வெளி சென்று விட்டான். அது தான் அவன் கடைசியாக அவர்களிடம் பேசியவை.

வண்டியேறி சென்றவன் வீட்டுக்கும் வரவில்லை. கோபத்தில் பெட்ரோல் தீரும் வரை சுற்றியவன், வண்டி நின்ற நிலை உணர்ந்து தான் இறங்கி நின்றான். மனமெல்லாம் ரணமாய் தகித்தது. நட்பென்று உதவி செய்தது குற்றமா, தன்னை எந்த நிலையில் நிறுத்தி வைத்து விட்டார்கள், முறைப்படி அனைத்தும் பதிந்திரவிட்டால் தன்னை குற்றவாளியாய் தன் தாயே நிறுத்தி திருமணம் செய்திருப்பாரே, அவரும் தன்னை நம்பவில்லையே. உள்ளம் குமுற, மனம் கொதிக்க இன்னுமே  இறுகி  விட்டான்.

மகன் சென்ற பின்னும் தமயந்தி அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. வேரோடி போய் நின்றிருந்தார். தானே அவன் பேச்சை நம்பாது போனோமே, ஒரு பெண் பேச்சை கேட்டு இத்தனை பேர் முன், செல்லமாய் வளர்த்த தன் மகனை அறைந்து விட்டோமே என குற்ற உணர்வில் தகிக்க அதற்கு மேல் முடியாது நிலை குலைந்து மயங்கி விழுந்து விட்டார்.

அவரோடு வந்த நண்பர்கள் அவரை ஹாஸ்பிடல் தூக்கி சென்று, மாணிக்கத்திற்கும் செய்தியை சொன்னார்கள்.  பதறியடித்து ஓடி வந்தவர் நடந்தவைகளை கேட்டு பதைப்பதைத்து விட்டார். நட்புக்கு துணை போன மகனை தவறு சொல்வதா, அவனை நம்பாத மனைவியை குற்றம் சொல்வதா என இருத்தலை கொல்லி எறும்பாய் தவித்தார். போன் செய்தும் இளா பேசவே இல்லை.

முரளி தேடி அலைந்து கல்லாய் சமைந்து அமர்ந்திருந்தவனை கையோடு இழுத்து வந்தார். ஒரு வார்த்தை கூட பேசாமல் கோபமாய் இருந்தவனை சமாதானம் செய்து, தோள் அணைத்து நின்றது முரளி தான். தமயந்தி கண் திறந்ததும் நடந்தவை அனைத்தும் கண் முன் வர, உணர்ச்சி வசப்பட்டு மீண்டும் மீண்டும் மயக்க நிலையை அடைய, தேறி வர நாட்கள் ஆனது. மாலாவை, பிஞ்சு குழந்தைகளை முரளியின் தாயார் தான் வந்து பொறுப்பேற்று பார்த்து கொண்டார்.

சுக்கல் சுக்கலாய், உடைந்த கண்ணாடி போல சிதறிய மனதை என்ன முயன்றும் அதன் பின் ஓட்ட வைக்க முடியவில்லை. நட்பு என்ற பெயரையே வெறுத்தான். யார் பேச வந்தாலும் கேட்கவில்லை. அனைவரையும் தள்ளி நிறுத்தி விட்டான். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கூட்டமாய் குதூகளித்தவன் தனிமை சிறையில் தன்னையே அடைத்து கொண்டான்.

பிள்ளை பெற்ற உடம்போடு மாலாவிற்கு தான் மனதில் பெரும் சுமை. குழந்தைகளை காரணம் கட்டி இளாவை தங்கள் வீட்டுக்கு கூட்டி சென்று விட்டாள். மாறா என கூப்பிட்டால் திரும்பி கூட பார்க்காமல் செல்பவனை கண்டு கண்ணீர் பெருக்கெடுக்கும். ஆசையாய் மாம்ஸ் என்று தன்னோடு சுற்றி வம்பு சண்டை செய்பவன் தள்ளி நிற்பது உயிரை எடுப்பது போல வலிக்கும். அதிலும் மாறா செத்துட்டான் என அவனே சொல்லும் போது ஏங்கி ஏங்கி அழுவாள். தன் தம்பி மீண்டு வர அவள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாக தான் சென்றது.

மாணிக்கம் மகனை சத்தம் போடும் போதெல்லாம், தான் தடுக்காது இருந்திருந்தால் அவன் நன்றாக இருந்திருப்பானே. நட்பினை அளவோடு நிறுத்தி இருப்பானே என்ற குற்ற உணர்ச்சியே தமயந்தி மனதில் வடுவாக தங்கி விட்டது. தான் கஷ்டப்பட்டாலும் தன் மகன் வாழ்வு  செழிக்க வேண்டும் என தன்னையே வருத்தி கொண்டு அவரும் பேசாமலே இருந்தார். இனியேனும் அவர்கள் வாழ்வு செழிக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!