Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம்3

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 3

   அன்று இரவு வீட்டுக்கு வரும் போது மித்ரன் மிகவும் சோர்ந்து போய் இருந்தான். என்னவோ மனம் ஒரு மாதிரி இருந்தது. அவன் அலுவலகத்தில் மிக வித்தியாசமான பெண் பிரவீணா. அங்கிருக்கும் சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாமல் தள்ளி தான் நிற்பாள்.

   மித்ரனின் நட்பு வட்டம் பெண்களில் கூட இவள் வர மாட்டாள். ஒரே டீம் என்பதை தாண்டி, வேற ஒன்றில் கூட இவர்களுக்கு ஒத்து போகாது. இவனும் தள்ளி நின்றவன் தான். நீ தவறானவன் என்ற அவள் பார்வையும், உதாசீன பேச்சும் அவனை தூண்டி விட, அப்படி என்ன நீ நவீன கண்ணகியா என்று அவளை சீண்ட ஆரம்பித்தான்.

   அவளும் சிடுசிடுப்பாக தான் இருப்பாள். என்ன ஒன்று அவன் மேலதிகாரி என்பதாலே இவன் கை ஓங்கியும், அவள் சில இடங்களில் தாழ்ந்தும் செல்ல வேண்டி இருக்கும். அப்படி இருந்தும் அவள் முக சிடுசிடுப்பு குறையாது. அவளை டென்சன் பண்ணி பார்ப்பதில், மித்ரனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.



Advertisement

   இன்று தான் பிரவீணா முகத்தில் கடுப்பை தாண்டிய வருத்தத்தை காண்கிறான். அது அவனுக்கும் வருத்தத்தை கொடுத்தது. அவனின் கேலி, கிண்டல் எல்லாம் ஒரு லிமிட்டில் தான் இருக்கும். இன்று கொஞ்சம் தவறி விட்டோமே என்று கவலையாக இருந்தது.

 உடை கூட மாற்றாமல் சோபாவில் கவுந்து கிடக்க, வீட்டு அழைப்பு மணி அழைத்தது. யார் என்று பார்க்க.. இரண்டாவது அக்காவின் கணவர் புவனேந்திரன்.

  “வாங்க மாமா…”

Advertisement

 “என்னடா மித்து முகம் ஒரு மாதிரி இருக்கு.. எதுவும் பிரச்சனையா?..” அக்கறையாக கேட்க.

Advertisement

“வேற ஒன்னும் இல்ல மாமா சும்மா ஒரு டென்ஷன் தான்” என்று சமாளித்தான்.

 “இந்தா மித்ரா, உங்க அக்கா கொடுத்து விட்டா.. தோசை மாவு இருக்கு, அப்புறம் கொஞ்சம் தக்காளி தொக்கு, புளி தொக்கு இருக்கு…”

 மித்ரன் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருப்பான். குடிப்பழக்கம் இருந்தாலும், உணவு விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பு தான். அதிகமாக ஹோட்டல் உணவுகளை நாட மாட்டான். தனியாக இருந்தாலும் தன் கைப்பட வீட்டில் செய்யும் உணவு வகைகள் தான்.

Advertisement

“எதுக்கு மாமா அக்காவுக்கு சிரமம். வீட்டையும் பார்த்து, ஹாஸ்பிடல் போயிட்டு எனக்கும் தனியா செய்யணுமா?…” என்று சொல்ல,

 “அதுக்குத்தான் சொல்றோம் நீ தனியா இருக்காத மித்ரன். உன்னோட அக்கா ரெண்டு பேரும் இங்கதான் இருக்காங்க.. அவங்க யாரு வேணாம்னு நீயும் தனியா இருக்க.. நாங்க என்ன உன்னை எங்க மனைவியோட தம்பி மாதிரியா பார்க்கிறோம். அங்க வந்து சேர்ந்திருடா”என்று அக்கறையாக அழைத்தார் புவனேந்திரன்.

“அதெல்லாம் எனக்கு செட் ஆகாது மாமா. ஏதோ இந்த மாதிரி சின்ன சின்ன ஹெல்ப் பண்ணுங்க ஓகே.. அத விட்டு, எங்க அக்காவ கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு, பின்னாடி நானும் வந்து இருக்கிறது சரியா வராது. அதோட எனக்கு என்னோட பிரைவேசி ரொம்ப ரொம்ப முக்கியம். நான் தனியா இருக்கிறது தான் எனக்கு செட் ஆகும்..” எப்பவும் போல சொன்னான் மித்ரன்.

  எத்தனை முறை கேட்டாலும் மித்ரன் பதில் இதுதான் என்பதால் மேற்கொண்டு வற்புறுத்தாமல் விட்டுவிட்டார். புவனேந்திரன் அத்தோடு அவன் வாழ்க்கை முறையும் தெரியுமே!…

“சரி மித்ரா நான் கிளம்புறேன். உங்க அக்கா உன்ன போன் பண்ண சொன்னா.. மறந்துராத…”

 “சரிங்க மாமா நான் பேசிடறேன்…” என்று மாமாவை வழி அனுப்பி வைத்தவன், தனக்கு தோசை சுட ஆயத்தமானான். அக்கா கொடுத்துவிட்ட தக்காளி தொக்கு இருக்க சமாளித்து விடலாம் என்று தோன்றியது.

  என்னதான் மித்ரன் அவர்களை விட்டு தள்ளி நின்றாலும் ,வாரத்திற்கு அவன் உணவை சமாளிப்பதற்கு தக்க ஏதாவது ஒன்றை அக்கா இருவரும் கொடுத்துவிட்டு கொண்டுதான் இருப்பார்கள்.

  அன்று மித்ரன் உறக்கத்திற்கு செல்லும் முன் இனி, பிரவீணாவிடம் அதிகப்படியான வம்பு வளர்க்கக்கூடாது என்று முடிவோடு உறங்க சென்றான். அதை கடைபிடிப்பது போல் அடுத்தடுத்த நாட்களில் வேலை விஷயங்களைத் தாண்டி அவளை வேற எந்த வகையிலும் சீண்ட வில்லை.

 பிரவீணாவிற்கு பெருத்த நிம்மதி. பொதுவாகவே ஒடுங்கி அமைதியாக போகும் பெண். மித்ரன் தள்ளி நிற்க.. அவள் நிம்மதியாக தன் வேலையை பார்க்கத் தொடங்கினாள். நாட்களும் நகர்ந்தது.

  அன்று சுதந்திர தினம். எல்லோரும் ஒரு வாழ்த்துக்களோடு அவரவர் வேலையில் ஈடுபட.. மெருன் வண்ண காஞ்சி காட்டன் சேலையில் இடது பக்க மார்பில் தேசிய கொடியை குத்திக்கொண்டு நிமிர்ந்து வந்தாள் பிரவீணா. மித்ரன் அவளை ஆச்சரியமாக பார்த்தான். இந்த மாதிரி தேசியக் கொடியை தன் ஆடையில் வைத்துக் கொள்வதெல்லாம் பள்ளி காலத்தோடு அவனுக்கு முடிந்து விட்டது. அதனால் தானோ என்னவோ அவளை ஆச்சரியமாக பார்த்தான். முடிக்காத வேலைகள் பெண்டிங் இருந்ததால் மட்டுமே சிலர் அலுவலகம் வந்திருந்தார்கள்.

   அன்று மதியம் உணவு உண்ணும் போது கூட அவள் தாடையில் இருந்த தேசிய கொடியை கழட்டவே இல்லை. அவளுக்கு அருகில் வேற பக்கம் திரும்பி மித்ரன் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தான்.

  “பிரவீ எவ்வளவு நேரம் கொடிய குத்திட்டு இருப்ப அதை கழட்டி வை…” என்று ஸ்ரீ சொல்ல,

 “அதெல்லாம் மாட்டேன் இன்னைக்கு முழுக்க வச்சுட்டு இருப்பேன்…”

“ஹே நீதான் கொஞ்சம் வித்தியாசமா தெரியுற…”

 “என்ன வித்தியாசம் இன்னைக்கு சுதந்திர தினம் தானே.. பொதுவா வீட்ல இருக்கிற யாருமே கூட தேசியக் கொடிய நெஞ்சில் குத்திக்கிறது கிடையாது தெரியுமா!… நானும் அப்படித்தான் இருந்தேன் ஸ்ரீ..” என்றவள்,

“உங்க மாமா எல்லாம் நாள் முழுக்க தேசியக் கொடியை வைத்துக்கொண்டே தான் இருப்பார். அப்ப எல்லாம் நானும் உன்னை மாதிரி தான் நினைப்பேன் தெரியுமா?.. நான் சொல்லுவேன், காலைல கொடி ஏற்றியாச்சுல்ல இன்னமும் ஏன் வச்சிட்டு இருக்கீங்கன்னு.. அப்படி சொன்னாலும் மாமா எடுக்க மாட்டாரு…” என்றவள் முகம் விகாசித்தது,

“அவருக்கு ரொம்ப தேசப்பற்று தெரியுமா? லஞ்சுக்கு வீட்டுக்கு வரும்போது கொஞ்ச நேரம், ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுப்பாரு. நான் அப்ப அவர் பக்கத்துல பேசுற மாதிரி மேல சாஞ்சுகிட்டு மெதுவா அதை கழட்ட பாப்பனா.. அப்படியே கையெடுத்து விட்டுருவாரு… டிவில தேசிய கீதம் ஓடிட்டு இருந்தா கூட என்ன வேலை பார்த்தாலும் அட்டென்ஷன்ல நிப்பாரு…”

“மாமாவுக்கு அவ்ளோ தேசப்பற்றா பிறவீ..”

“அட நீ வேற.. ஒருநாள் அவர் சாப்பிட்டு இருந்தாரு, டிவி ஓடிட்டு இருந்துச்சு, அதுல தேசிய கீதம் போச்சு… இவர் குணம் தெரிஞ்சு நான் சேனலை மாத்துறேன். அவர் என்ன பண்ணாரு தெரியுமா? திரும்ப ரிமோட்டை என் கையில் இருந்து புடுங்கி அதை சேனலை வைத்து சாப்பிடாமவே தேசிய கீதம் முடியுற வரைக்கும் நின்னுட்டு இருந்தாரு.. அவர் மட்டுமா எனக்கு அப்போ அத்து நாலு மாசம் தல சுத்தும் நானும் நிக்கணும், எங்க அத்தை, மாமா எல்லாரும் நிக்கணும்.. இல்லைன்னா அவ்வளவு கோபம் வரும் அவர் ரொம்ப மதிப்பார் ஶ்ரீ.. அவரும் கட்சியில் இருந்தாருல்லா…”

 இதுவரை வேற பக்கம் திரும்பி அமர்ந்திருந்த மித்திரன் பிரவீணாவின் மாமா என்ற வார்த்தையை கேட்டபின் லேசாக அவள் புறம் திரும்பிக் கொண்டான். அவளின் மாமாவை பற்றி பேசும்போதெல்லாம் முகம் கண்ணெல்லாம் மலர்ந்து விகாசிக்கும்.

இந்தப் பெண் அவள் கணவனை மிகவும் நேசிக்கிறாள் என்று தோன்றியது. இவளை மாதிரி சந்தோஷமாக காதல் நினைவுகளை அசைபோடும் ஞாபகங்கள் தனக்கு இருக்கிறதா என்று நினைத்துப் பார்த்தால் ஒன்று கூட கிடையாது. பொதுவாக கருத்தும் சிந்தனையும் ஒத்துப் போனாலே இவர்கள்தான் வாழ்க்கைத் துணையோ என்று நினைக்கத் தோன்றும்.. அதன் அடுத்த கட்டம் லீவு இன் வாழ்க்கை. அது தொடங்கி ஒரு வருடம் கூட ஆகியிருக்காது என்னவோ பிடித்த மென்மை இருவருக்கும் வந்து பிரிந்து விடுவார்கள்.

கடந்த எட்டு மாதமாக ஐ யாம் சிங்கிள் என்று சுற்றிக் கொண்டிருக்கிறான். பிரவீணா போல உள்ளும் புறமும் பூரிக்கும் காதல் எல்லாம் இவனுக்கு கிடையாது. கட்டுப்பாடுகள் அற்ற வெளிப்படையான சுதந்திரமும், உறவுமே இவனுக்கான காதல் அப்படித்தான்.. இதுவரை நினைத்துக் கொண்டிருந்தான். இந்தப் பிரவீணாவின் மாமா என்ற வார்த்தை தான் அவனை திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது போல…

      அன்று இரவு வீட்டுக்கு திரும்பும் போது சாரதா மகனுக்கு போன் செய்தார்.

“என்னம்மா…”

“என்ன பண்ற மித்து..”

“இதோ இப்பதான் வீட்டுக்குள்ள நுழையிறேன்…”

“சாப்பாடு என்னடா?…”

“என்னத்த பெருசா.. என்ன இருக்கோ, அத வச்சு சமாளிக்க வேண்டியது தான்…”

“எதுக்குடா சலிச்சுக்கிற.. இதுக்குத்தான் ஒரு கல்யாணத்தை பண்ணுடான்னு தலபாட அடிச்சிக்கிறேன். உனக்குன்னு ஒருத்தி இருந்தா.. அவ உன்ன நல்லா பார்த்துப்பா.. நல்ல சாப்பாடு, உறக்கம், டென்ஷன் இல்லாத வாழ்க்கை, சந்தோசமா இருக்கலாம்டா கண்ணா..” என்று தாய் அறிவுறுத்த,

   “எது டென்ஷன் இல்லாத வாழ்க்கை. கல்யாணம் பண்றது டென்ஷன் இல்லாத வாழ்க்கையா? அம்மா, கல்யாணமே ஒரு பெரிய டென்ஷன் தெரியுமா!… காலையில சீக்கிரம் எந்திரிக்கணும் பால் பாக்கெட் வாங்கணும், காய்கறி வாங்கணும், கடைக்கு போகணும், டிரஸ் எடுக்க கூட்டிட்டு போகணும், சினிமாவை கூட்டிட்டு போனும், வெளியே கூட்டிட்டு போகனோம், கரண்ட் பில் கட்டனும், தண்ணிக்கு பாக்கணும், குழந்தை பெத்துக்கணும், ஸ்கூல் கூட்டிட்டு போகணும், வீடு கட்டணும், சொத்து சேர்க்கணும், முக்கியமா டார்ச்சர் பண்ற பொண்டாட்டியை எல்லாம் சமாளிக்கணும்.. இவ்வளவும் பார்த்து தான் ஆம்பளைகளுக்கு முப்பது வயதிலேயே ஹார்ட் அட்டாக் வந்துருது.. இந்த டென்ஷன் எல்லாம் எனக்கு ஆகாது விட்டுடுங்க…” என்றவன்,

  “ என் நேரத்துக்கு நான் வீட்டுக்கு வரணும், எனக்கு புடிச்சதை சாப்பிடணும், எனக்கு தோன்றத நான் செய்யணும், சொந்தக்காரங்க யாரு என் வீட்டுக்கு வரக்கூடாது, யாரும் என்னை கேள்வி கேட்கக்கூடாது, யாருக்கும் நான் கணக்கு சொல்லக்கூடாது.. முக்கியமா குழந்தைகளோட நச நசப்பு இல்லாம இருக்கணும். அப்படியே கல்யாணம் ஆனாலும் தனித்தனி பெட்ரூம்தான் என்னோட பிரைவேசிகுள்ள அந்த பொண்ணு வரவே கூடாது இதுக்கெல்லாம் சரியா?…” என்று தாயை பார்த்து கேட்க,

சாரதாவுக்கு மகன் கண்டிஷனை கேட்டு கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.. “டேய் மித்து கண்ணா.. பொண்ணு அழகா இருக்கணும், படிச்சிருக்கணும், வசதியா இருக்கணும்.. இப்படி வேணா சொல்லி பொண்ணு கேக்கலாம்டா. நீ சொல்றத வச்சு பொண்ணு கேட்டா எந்த பொண்ணுடா சரின்னு சொல்லும்…”

“எந்த பொண்ணும் சரின்னு சொல்லாதும்மா.. அதனால என்கிட்ட கல்யாணம் பேச்சை எடுக்காதீங்க.. அப்படி எடுக்கிறதா இருந்தா, நான் மேல சொன்னதுக்கெல்லாம் சரின்னு சொல்ற ஒரு பொண்ணா கூட்டிட்டு வாங்க…”

“அப்படி எல்லாம் ஒரு பொண்ணு வரமாட்டான் மித்ரன்” கடுப்பாக சொன்னார் சாரதா.

“அதுக்குத்தான் எங்களை மாதிரி ஜீனியஸ் கண்டுபிடிச்சுருக்காங்க லீவ் இன் ரிலேஷன்ஷிப். நோ கமிட்மெண்ட்ஸ், நோ டிஸர்பிட்மெண்ட்ஸ் ஒன்லி ஹேப்பினஸ்…”

 இதற்கு மேல் கல்யாணம் பேச்சை எடுக்கவில்லை சாரதா. மகன் குணம் தெரிந்தும் பேசியது தவறுதான். பெற்ற தாயிடமே லீவின் ரிலேஷன்ஷிப் பத்தி எக்ஸ்பிளைன் பண்றான்.

“அடுத்த வாரம் உங்க அப்பாவோட பெரியப்பா மகனோட மகள் கல்யாணம்டா.. நிச்சயத்துக்கு தான் நீ வரல, அதுக்கே குறையா சொன்னாங்க. தயவு செஞ்சு கல்யாணத்துக்கு வந்துரு மித்ரன்…”

 “அம்மா நீ சொல்ற ரிலேஷன்ஷிப் எனக்கு குழப்புது. இதுல கல்யாணத்துக்கு வேற வர சொல்ற.. அவ்வளவு நெருங்கிய சொந்தமா என்ன?.. நீ சொன்னது எனக்கு புரியல.. ஆமா, அந்த பொண்ணு எனக்கு என்ன முறை வரும்?…”

“சரியா போச்சு உனக்கு தங்கச்சி முறை வரும்டா..”

“இந்த தலையை சுத்தி மூக்க தொடுற சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் கண்டிப்பா போயே ஆகணுமா?…”

 “அப்படி ஒன்னும் தூரத்து சொந்தம் எல்லாம் கிடையாது மித்ரன். ஒன்னு விட்ட சொந்தம் தான். நீ கண்டிப்பா வந்தே ஆகணும். தயவு செஞ்சு வா மித்ரன் நீ அங்க வந்து சாப்பிடலாம் வேணாம், ரொம்ப நேரம் உட்காரவும் வேணாம், வந்து தலையை மட்டும் காட்டிட்டு போடா ப்ளீஸ்.. ரொம்ப தூரம் இருந்து கட்டிக் கொடுக்குறாங்க.. நம்ம ஆளுங்க அங்க இருக்கணும்ல்லா.. அதுவும் நீ இந்த ஊர்ல இருந்துகிட்டு வராம போயிட்டா, சொந்தத்துல நம்மள தாண்டா பேசுவாங்க.. தயவு செஞ்சு வா மித்து. சும்மா ஜஸ்ட் ஒரு ஆப்னவர் மட்டும் வந்து தலையை காட்டிட்டு போ…” தாய் வருந்தி அழைக்க,

“உனக்காக வேணா வந்து தலையை காட்டிட்டு வாரேன். அதுக்காக அங்க இருக்குற ஒவ்வொருத்தர் கிட்டயும் என் கைய புடிச்சு கூட்டிட்டு போய் இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்க கூடாது.. நான் வருவேன், பார்ப்பேன், கிளம்பி விடுவேன்….” என்று முன்பாகவே தன் நிலவரத்தை சொல்லி விட்டான் மித்ரன்.

  அடுத்து வந்த நான்கு நாட்களும் பிரவீணா விடுமுறை எடுத்துக் கொண்டாள். அவனிடம் நேராக சொல்லி பர்மிஷன் கேட்டு எல்லாம் லீவு எடுக்கவில்லை.. அவளுக்கு லீவும் இருக்க அவனுக்கு ஒரு மெயில் போட்டு, லீவ் எடுத்துக் கொண்டாள்.

அந்த வாரம் சனிக்கிழமையில் சாரதா சொன்ன கல்யாணத்திற்கு கிளம்பி விட்டான் மித்ரன். அங்கு யாரையும் அவனுக்கு தெரியாது. ஆனால், சொந்தம் என்பதால் எப்படியும் தன் அம்மா, அப்பா, அக்கா, அவர்கள் கணவர் என்று தம்பி ஆட்கள் இருப்பதால் தைரியமாகவே உள் நுழைந்தான்.

அப்பொழுதுதான் திருமணம் நடப்பதற்கான அறிகுறியில் மண்டபம் காணப்பட்டது. தன் வீட்டு ஆட்களைப் பார்த்து கையை உயர்த்தியவன், மணமக்களை திரும்பி பார்த்தான். அங்கு என்னவோ ஒரு சின்ன சலசலப்பு. என்னவென்று பார்க்க மாப்பிள்ளையின் அம்மாதான் மேடையில் ஒரு நாற்காலியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.

  கொஞ்சம் பதட்டமான சூழல். என்னவாம் என்று தாயைப் பார்க்க.. அவர் கைகாட்டிய திசையில் அமர்ந்து இருந்தது பிரவீணா.

“ஹே.. அது நம்ம பிரவீணா..” இவள் எங்கே இங்கு என்று பார்க்க.

  அது பிரவீணா தான். மண்டபத்தின் கொஞ்சம் உட்புறத்தில் ஒரு நாற்காலியில் உறங்கும் மகனை மடியில் போட்டு அமர்ந்திருந்தாள். சந்தன வண்ண சின்ன கரை வைத்து சேலை. எப்பவும் போல இறுக்கிப் பின்னிய கூந்தல். முகம் மட்டும் சோர்ந்து போய் அழுகையை அடக்கியதாக ஒரு தோற்றம்…

அவள் அருகில் நின்றிருந்த இருவர் பிரவீணா கையை பிடித்து எழுப்ப, அவள் சங்கட சிரிப்போடு அவர்களை தவிர்த்து விட்டு பிள்ளையை மடியில் வைத்து அமர்ந்து கொண்டாள்.

“என்னவாம்மா…” என்று மித்ரன் கேட்க.

“அந்த பொண்ணு இருக்குல, அதுதான் மாப்பிள்ளையோட அக்காவாம்.. பாவம்டா அந்த பொண்ணு, புருஷன் இல்லையாம்..” என்று சாரதா சொல்ல,

 என்ன என்று பதறி போனவன். “என்னம்மா சொல்ற புருசன் இல்லன்னா?..” துடிக்கும் இதயத்தை பிடித்துக் கொண்டு கேட்டான்.

“அந்த பொண்ணு புருசன் இறந்துட்டாங்களாம்.. நாலு வருசம் ஆச்சாம். அதுதான் அந்த பொண்ணு சங்கடப்பட்டுகிட்டு கல்யாணம் நடக்கும் போது மேடைக்கு வர மாட்டேன்னு சொல்லி ஒதுங்கி நின்றுச்சு…” என்று சொல்லி கொண்டு சாரதா நகர,

நெஞ்சை பிடித்து விட்டான் மித்ரன். என்னவோ மனதில் அப்படி ஒரு வலி… எவ்வளவு அழகாக என் மாமா என்று பேசுவாள். அந்த மாமா என்ற வார்த்தைக்கு சொந்தக்காரன் உயிரோடு இல்லையா?.. இங்கு வேலைக்கு வந்த இரண்டு வருடமும் பிரவீணா வாயிலிருந்து வரும் வார்த்தை எல்லாம் மாமா மாமா தானே..

 மித்ரன் கூட பலமுறை நினைத்திருக்கிறான் ரொம்ப அன்னோன்யமான தம்பதிகள் போல என்று… ஆரம்பத்தில் சேலையோடு பிரவீணா வேலைக்கு வரும் பொழுது.. தமிழ் பண்பாடு மங்களகரமா வாராங்களாம் என்று இவன் கிண்டல் அடித்தது உண்டு. இன்று அதை நினைக்கும் பொழுது மனம் வலித்தது.

 இப்பொழுது தான் மித்ரன் கவனித்தான். கல்யாண வீடு பூவுக்கும், நகைக்குமா பஞ்சம். ஆனால், அவளிடம் மாற்றமில்லை. இங்கு இருக்கும் அத்தனை பேர் தலையிலும் பூ இருக்க, பிரவீணா வெறும் தலையோடு தான் இருந்தாள். கல்யாண வேலைகள் நடந்தது, யார் சொல்லியும் அவள் கல்யாண மேடை ஏறவில்லை. ஆதிரனும் உறங்கி இருக்க, மகனை மடியில் வைத்து அமர்ந்து கொண்டாள். அவள் அமர்ந்து இருந்த விதம் அவள் முகத்தில் தெரிந்த வலி, ஏனோ மித்ரன் இதயத்தை அசைத்தது.

பிரவீணா இப்படி என்று அவனால் சத்தியமாக கற்பனையோடு செய்ய முடியவில்லை. எத்தனை ஆசையாக மாமா என்று பேசுவாள். அந்த ஒருத்தர் இந்த உலகத்திலே இல்லாதவர் என்பதை இவனால் யோசிக்கவே முடியவில்லை. நாலு வருடம் கடந்து விட்டதாமே.. எப்படி.. எப்படி இந்த வலியோடு வாழ்க்கையை கடந்து வந்து கொண்டிருக்கிறாள்.

பிரவீணா, அவள் மாமா பற்றி பேசும்போது கண்களில் நிறைய காதலை பார்த்து இருக்கிறான். அவள் காதல் நிறைவேறியும், நிலைக்கவில்லையே.. உண்மையில் மித்ரனுக்கு, பிரவீணாவை நினைத்து நிறைய வலித்தது.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!