Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Malar Kanai Veesaathey

Malar Kanai Veesaathey 12 1

அத்தியாயம் 12

ஒரு பூ மலர்வது போல

மென்மையாக மலர்ந்து மணம்

வீசிச் செல்கிறது காதல்!!!!



Advertisement

அனைத்து இட்லியையும் ஊட்டிய பிறகு “இங்க பாரு கண்ணு. இப்ப நாம ரெண்டு பேரும் பேசினது யாருக்கும் தெரியக் கூடாது. நான் இன்பாவைப் பத்தி எதுவுமே உன் கிட்ட சொல்லலை சரியா? நானா உங்க வீட்ல பேசப் போறேன். உங்க வீட்ல இருந்து உனக்கு தகவல் வர வரைக்கும் நீ இந்த விஷயம் தெரியாத மாறி காட்டிக்கோ”, என்றார் பார்வதி.

Advertisement

இதற்கு என்ன சொல்ல என்று தெரியாமல் தலையை ஆட்டினாள் வினோதினி. அப்போது இளவரசி பாய் தலையணையோடு அங்கு வர “என்ன டி?”, என்று கேட்டார் பார்வதி.

Advertisement

“நானும் உங்க கூட தான் படுக்க போறேன். அம்மா கிட்ட சொல்லிட்டேன்”, என்று இளவரசி சொல்ல “அதுக்கென்ன தாராளமா வா”, என்றாள் வினோதினி.

Advertisement

தன்னை தனிமையில் விடக் கூடாது என்பதற்காக தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று எண்ணி அவள் மனது சந்தோஷப் பட்டது. அவர்கள் அன்பில் நெகிழ்ந்து போனாள் வினோதினி. மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கச் சென்றார்கள்.

பாட்டியைத் தவிர மற்ற இருவருக்கும் உறக்கம் என்பதே வரவில்லை. இளவரசி கதிரினின் நினைவில் உறக்கத்தை தொலைக்க வினோதினியோ இன்பா தந்த முத்தத்தை எண்ணி உறக்கம் தொலைத்தாள்.

அதே நேரம் இன்பா அவன் கையில் இருந்த ஆல்பத்தை புரட்டிக் கொண்டிருந்தான். அது வினோதினியின் குடும்ப புகைபடங்கள் அடங்கிய ஆல்பம் தான். அதில் அவளுடைய குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. தான் அவசரப் பட்டு அனைத்தையும் சொதப்பி விட்டோம் என்று எண்ணிக் கொண்டான். அப்போது அறைக்கு வந்த கதிர் “என்ன மச்சான் இது? யாரோட ஆல்பம்?”, என்று கேட்டான்.

“வினோதினியோடது மாப்பிள்ளை”

“அது எப்படி உன் கிட்ட வந்துச்சு”

“இதுல தான் பொண்ணு போட்டோ இருக்குனு நினைச்சு பிடுங்கிட்டு வந்துட்டேன் கதிர். அவளோட எண்ணம் தெரியாம அவ கிட்ட மோசமா நடந்துக்கிட்டேன்”

“நானும் தான் டா தேவையில்லாம அவங்களைத் திட்டிட்டேன். ஆனா இப்ப என் கிட்ட நல்லா பேசுறாங்க. நல்ல பொண்ணு. நீ அவங்க கிட்ட பேசுனியா?”

“இல்லை. நான் திட்டினதுக்கு அவ என் முகத்துல முழிப்பாளான்னு கூட தெரியலை கதிர்”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது டா. அவங்க உன்னை மன்னிச்சிருவாங்க. அத்தைக் கிட்ட கூட என்னை அண்ணன் மாதிரின்னு தான் சொல்லிருக்காங்க. என் கவலை என்னனா உன்னையும் அவங்க அண்ணான்னு சொல்லாம இருக்கணும். சரி எதையும் யோசிக்காம தூங்கு”, என்று சொல்லி படுத்து விட்டான்.

வேறு எதையும் பேசும் மன நிலையில் இருவரும் இல்லை. அதே நேரம் சிதம்பரமும் பாமாவிடம் வினோதினியை இன்பாவுக்கு பார்ப்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“தாராளமா பாருங்க. இன்பா கண்டிப்பா சரின்னு சொல்லுவான்”, என்று உளறி நாக்கைக் கடித்துக் கொண்டாள் பாமா.

“அது என்ன இவ்வளவு உறுதியா சொல்ற? ஏதாவது களவாணித் தனம் பண்ணுறியா உன் மகன் கூட சேந்து?”, என்று கூர்மையாக கேட்டார் சிதம்பரம்.

“ஐயோய் இல்லைங்க. அந்த பொண்ணை யாருக்கு தான் பிடிக்காது? ரொம்ப அழகா இருக்குது. பத்தாததுக்கு இன்பா உயிரைக் காப்பாத்திருக்கு. அப்புறம் அவளை பிடிக்க போய் தானே வீட்டுக்கே அவளைக் கூட்டிட்டு வந்துருக்கான். இல்லைனா உங்க பையன் இப்படி பண்ணுவானா? அதனால தான் சொன்னேன்?”, என்று சொன்ன பாமா கடைசி வரை மகனின் காதலைப் பற்றி அவரிடம் வாய் திறக்க வில்லை.

“சரி அம்மா நாளைக்கு அவங்க வீட்ல பேசணும்னு சொன்னாங்க. இப்ப படுத்து தூங்கு”, என்று சொல்லி படுத்து விட்டார் சிதம்பரம்.

அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது. சமையல் செய்ய வேண்டுமே என்று எண்ணி சீக்கிரம் எழுந்த வினோதினி அந்த அடுப்பைப் பற்ற வைக்க போராடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கே அவளுக்கு டீ கொண்டு வந்த பாமா “என்ன செய்ற வினோதினி?”, என்று கேட்டாள்.

“சாதம் வைக்கலாம்னு பாத்தேன் மா”

“அதெல்லாம் நீ ஒண்ணும் கஷ்டப் பட வேண்டாம். நான் உலையை வச்சிட்டேன். உனக்கு ஏதாவது கலவை சாதம் கிண்டித் தரேன்”

“உங்களுக்கு எதுக்கு மா சிரமம்?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நீ இங்க இருக்குற வரைக்கும் உனக்கு என் கையால தான் சாப்பாடு”

“சரி இந்த அடுப்பை எப்படிப் பத்த வைக்கன்னு சொல்லுங்களேன். தீப் பிடிக்கவே மாட்டிக்குது”

“அதைச் சொல்லிக் கொடுத்தா நீ ஏதாவது செஞ்சிட்டு இருப்ப. நான் சொல்ல மாட்டேன். சரி இந்த டீயைக் குடி”

“சரிங்க மா”

“நீ அம்மான்னு சொல்றது நல்லா தான் இருக்கு. ஆனாலும் அத்தைன்னு சொன்னா இன்னும் நல்லா இருக்கும்”, என்று பாமா சொல்ல அவளைத் திகைப்பாக பார்த்தாள் வினோதினி.

அவள் பார்வையை உணர்ந்து “நான் எதுக்கு சொல்றேன்னா நீ இன்பா அப்பாவை அங்கிள்ன்னு சொன்னள்ல? அப்ப என்னை அத்தைன்னு தானே சொல்லணும்? அப்ப தானே ஜோடியா இருக்கும்?”, என்று கேட்க அவளுக்கு சிரிப்பு வந்தது.

தனக்கும் இன்பாவுக்கும் திருமணப் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்ட வினோதினி “சரி உங்களை அத்தைன்னே கூப்பிடுறேன்”, என்றாள்.

“அப்ப இன்பா அப்பாவையும் மாமான்னே கூப்பிடு”

“சரிங்க அத்தை”

“சரி நீ டீ குடிச்சிட்டு அத்தையையும் இளவரசியையும் எழுப்பி விட்டுரு. நான் எல்லாருக்கும் டிபன் செய்யுறேன்”

“நான் உங்களுக்கு உதவி செய்ய வரவா?”

“நீ எனக்கு உதவி செய்யுற நேரம் வரும். அப்ப செய். இப்ப ரெஸ்ட் எடுத்துட்டு குளிச்சிட்டு கிளம்பு”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.

எப்போதும் போல குளித்து விட்டு இன்பா கிளம்பி வெளியே வரும் போது வினோதினி வேலைக்கு கிளம்பிச் சென்றிருந்தாள். அவன் எப்போது எழுவான் என்று இளவரசி மூலம் தெரிந்து கொண்ட வினோதினி அவனைப் பார்க்க கூடாது என்பதற்காகவே சீக்கிரம் கிளம்பிச் சென்று விட்டாள்.

அவள் சென்றது அவனுக்கு ஏமாற்றம் தான். அடுத்து பதினொரு மணி போல பார்வதி மற்றும் சண்முகநாதன் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“பாரு, அந்த பொண்ணுக் கிட்ட பேசினியா?”, என்று கேட்டார் சண்முகநாதன்.

“அதெல்லாம் பேசியாச்சு”

“அந்த பொண்ணு இன்பா மேல கோபமா இருக்கா?”

“ஆமா, பின்ன இவன் பண்ண வேலைக்கு கோபம் இல்லாம இருக்குமா?”

“ரொம்ப அடிச்சிட்டானா?”

“அடிச்சா கூட பரவால்லைங்க. இவன் அவளைக் கடிச்சில்ல வச்சிருக்கான்”

“என்ன டி சொல்ற?”, என்று உண்மையிலே அதிர்ந்து போய் தான் கேட்டார்.

“உமரு பேரன் வேற எப்படி இருப்பான்?”, என்று பார்வதி கேட்க வெட்கமாக சிரித்துக் கொண்டார் தாத்தா.

“சரி விடு டி. அப்படினா அந்த பொண்ணு இன்பாவைக் கட்டிக்காதா?”, என்று அவர் கேட்டதும் தான் வினோதினியிடம் பேசியதைச் சொன்னார் பார்வதி.

மனைவியின் சாமர்த்தியத்தை மெச்சிய சண்முகநாதன் “அப்படின்னா இப்பவே தேவி கிட்டயும் கிருஷ்ணன் கிட்டயும் பேசு டி”, என்றார்.

“இப்ப சிதம்பரம் வயல்ல இருந்து வரட்டும். அப்புறம் பேசுவோம்”, என்று சொன்ன பார்வதி “பாமா இங்க வா மா”, என்று மருமகளை அழைத்தார்.

“என்னங்க அத்தை ஏதாவது வேணுமா?”

“அடுப்பு வேலை முடிச்சிட்டியா மா?”

“எல்லாம் வச்சிட்டேன் அத்தை. குழம்பு மட்டும் தாளிக்கணும்”

“அது அப்புறம் தாளிக்கலாம். இப்படி உக்காறு. ஒரு விஷயம் பேசணும்’

“என்னங்க அத்தை?”, என்ற படி அவர் எதிரே அமர்ந்தாள்.

“நைட் சிதம்பரம் ஏதாவது சொன்னானா இன்பா கல்யாணத்தைப் பத்தி?”

“ஆமா அத்தை. நானே உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சேன். வினோதினியை நம்ம இன்பாவுக்கு பாக்கலாம்னு சொன்னார்”

“எங்களுக்கு அதுல சம்மதம் மா. நீ என்ன சொல்ற?”

“நான் சொல்றதுக்கு என்ன இருக்கு அத்தை? எனக்கு அதுல ரொம்ப சந்தோஷம்”

“உன் மகன் சரின்னு சொல்வானா?”, என்று மருமகளிடம் போட்டு வாங்கினார்.

“அவன் தான் அந்த பிள்ளையைப் பாத்த நாள்ல இருந்து பொண்டாட்டியா நினைச்சு தானே வாழ்ந்துட்டு இருக்கான்”, என்று உளறி நாக்கைக் கடித்துக் கொண்டாள் பாமா.

அதை பெரியதாக எடுக்காத மாதிரி காட்டிக் கொண்ட பார்வதி “அப்படின்னா இன்னைக்கே வினோதினி வீட்டில் பேசிருவோமா?”, என்று கேட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!