Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேசம் தொடங்கிடும் நிமிடம்

Nesam Thodangum Nimidam 4 2

“என்னது இன்னொருத்தன் கூட கல்யாணமா?”, என்று அதிர்ந்தவளுக்கு ஸ்ரீராமின் தொடுகை நினைவில் வந்து உடல் முழுவதும் ஒரு வித உணர்வைத் தோற்று வித்தது.

அந்த நினைவிலேயே “இனி தன்னால் அவனைத் தவிர மற்றொரு ஆண் மகனின் தொடுகையை தாங்கிக் கொள்ள முடியாது”, என்பது அவளுக்கு புரிந்து போனது.



Advertisement

“அப்ப அவனைக் கட்டிக்கிட்டு அவன் தொடுகையை தாங்கிக்க போறியா?”, என்று மனசாட்சி குரல் கொடுக்க அதற்கு அவளிடம் பதில் இல்லை. பதில் சொல்லும் நிலையிலும் அவள் இல்லை.

Advertisement

பின் தந்தையை நிமிர்ந்து பார்த்தவள் “எனக்கு கல்யாணமே வேண்டாம் பா”, என்றாள்.

Advertisement

“ஏண்டி நீ மட்டும் எங்களுக்கு தலை வலியாவே இருக்க?”, என்று கேட்டாள் அரசி.

Advertisement

“நான் பதில் கேக்கலை ஜானகி. ஆப்சன் தான் கொடுத்துருக்கேன். முடிவு சொல்லு. ஸ்ரீராமா? ரஞ்சித்தா?”, என்று கேட்டார் சரவணன்.

“தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசே மேல். ஏதாவது பண்ணித் தொலைங்க”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள் ஜானகி.

“என்னங்க, இவ என்ன இப்படிச் சொல்லிட்டு போறா?”, என்று கேட்டாள் அரசி.

“அவளுக்கு நம்மளை பிரிஞ்சு கல்யாணம் முடிச்சு போக கஷ்டமா இருக்கு போல அரசி? நம்ம கிட்ட யமுனாவை விட அதிக ஒற்றுதலோட இருந்தா இல்லையா? அதான்”, என்று மனைவியை சமாதானம் செய்தார் சரவணன்.

ஆனால் அவருக்கு என்ன தெரியும்? ஸ்ரீராம் மட்டும் அப்படி ஒரு காரியம் செய்யாதிருந்தால் அவருடைய அருமை மகள் அவளுக்கு கல்யாணம் என்றதும் சந்தோசத்தில் குதித்திருப்பாள் என்று? அவன் அவளுடைய உடலை மட்டும் அல்ல, உணர்வையும் தீண்டியதால் தான் அவள் திருமண வாழ்க்கையை வெறுக்குறாள் என்று அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே?

யாரிடமும் ஜானகியால் அந்த உணர்வை பகிரவே முடியாது. அது அவள் மனதுக்கும் அவனுக்கும் மட்டும் தெரிந்த ரகசியம். அது அழகான நினைவுச் சின்னமா? சூட்டு வலியா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும். தன்னுடைய அறைக்குச் சென்ற ஜானகி என்ன செய்து இதை நிறுத்துவது என்று மண்டையை தட்டி யோசித்துக் கொண்டிருந்தாள்.

“யாரையாவது லவ் பண்ணுறேன்னு சொல்லுவோமா?”, என்று எண்ணினாள். “உடனே நீ லவ் பண்ணினவனைக் கூட்டிட்டு வா, கட்டி வைக்கிறேன்”, என்று சரவணன் சொல்வார் என்பதால் அந்த எண்ணத்தைக் கை விட்டாள். அவளுக்கு தலை வேதனையாக இருந்தது.

சம்பந்தம் பேசி விட்டு அங்கே வீட்டுக்கு சென்ற ரகுவும் ஜெயாவும் அனைவரிடமும் விஷயத்தைச் சொல்ல அனைவருக்குமே சந்தோஷம் தான்.

யமுனாவோ தங்கையும் இதே வீட்டில் வாழ வரப் போகிறாள் என்ற சந்தோசத்தில் கிரியின் நெஞ்சில் சந்தோஷமாக சாய்ந்து கொண்டாள். அவனும் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.  அம்பிகாவோ தன்னுடைய செல்ல பேரனின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டோம் என்று சந்தோஷப் பட்டாள்.

அனைவரும் ஸ்ரீராம் என்ன சொல்வான் என்று அவனைப் பார்க்க “யாரைக் கேட்டு எனக்கு கல்யாணம் பேசுனீங்க?”, என்று தந்தையிடம் கேட்டான் அவன்.

“அடப்பாவி, இவன் தானே நேத்து கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி கெஞ்சினான்”, என்று எண்ணிய அம்பிகா அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

“உன்னை எதுக்கு டா கேக்கணும்? நான் முடிவு பண்ணினது பண்ணினது தான். ஜானகி தான் என் சின்ன மருமகள். அவ எவ்வளவு அடக்கம் தெரியுமா?”, என்றார் ரகு.

அவர் சொன்னதைக் கேட்டு யமுனா வாய்க்குள் சிரித்துக் கொண்டாள். அவளுக்கல்லவா தெரியும் தங்கையின் அடக்கத்தைப் பற்றி. ஆனால் ஸ்ரீராம் அடுத்து சொன்ன வார்த்தையில் அவள் சந்தோஷம் அடங்கிப் போனது.

“என்னால எல்லாம் இதுக்கு சம்மதிக்க முடியாது. எனக்கு கல்யாணம் வேண்டாம். நான் அண்ணன் வயசு வந்த உடனே தான் கல்யாணம் பண்ணிக்குவேன்”, என்றான் ஸ்ரீராம்.

“உன் சம்மதத்தை யார் கேட்டா? நாளைக்கு எல்லாரும் சம்பந்தி வீட்டுக்கு போறோம். அவ்வளவு தான்”, என்று சொல்லி விட்டு சென்றார் ரகு.

மற்றவர்களும் அங்கிருந்து செல்ல புன்னகையுடன் அமர்ந்தான் ஸ்ரீராம். அவன் அருகில் அமர்ந்த படி “அடேய் நேத்து தானே நீ கல்யாணம் வேணும்னு கேட்ட? இன்னைக்கு அப்படியே உன் அப்பன் கிட்ட மாத்தி பேசுற?”, என்று கேட்டாள் அம்பிகா.

“நான் உடனே சரினு சொன்னா உன் மகனுக்கு சந்தேகம் வந்துரும்  அன்பு. அப்படி சந்தேகம் வந்தா நம்ம திட்டம் சொதப்பிரும்ல? அதான் சும்மா சீன் போட்டேன். இப்ப நானே மறுத்தாலும் அப்பா விட மாட்டாரே”, என்று சிரித்தான் ஸ்ரீராம்.

“என் பேத்தி மேல உனக்கு அம்புட்டு லவ்வா டா? உன் தாத்தனுக்கு தப்பாம பிறந்திருக்க டா, என் செல்லம்”, என்று அவன் கன்னத்தை வருடி விட்டு அங்கிருந்து சென்றாள் அம்பிகா.

“என்னது லவ்வா?”, என்று அதிர்ந்து போய் அமர்ந்திருந்தவனுக்கு இது வரை அவன் யோசித்தே அறியாத அந்த வார்த்தையை எண்ணி மனதுக்குள் பூகம்பம் வந்தது போல இருந்தது.

ஒரு நொடிக்கு மேல் அதை யோசிக்கப் பிடிக்காமல் “லவ்வும் கிடையாது ஒண்ணும் கிடையாது பாட்டி. என்னை அவ பொறுக்கின்னு சொன்னதுக்காக தான் இந்த கல்யாணம். கல்யாணம் மட்டும் முடியட்டும். அப்புறம் அவளுக்கு இருக்கு”, என்று எண்ணிக் கொண்டு அறைக்குள் வந்தான். அவன் உதடுகள் தன்னாலே மலர்ந்தது அவளை எண்ணி.

அப்போது தன்னுடைய தங்கையை அழைத்தாள் யமுனா. அக்கா அழைப்பதைக் கண்ட ஜானகி ஒரு நொடி அதை எடுக்காமல் இருந்து விட்டு அதை எடுத்து “சொல்லுக்கா”, என்றாள்.

“ஏய் ஜானகி, இப்ப தான் மாமா வந்து விஷயத்தைச் சொன்னாங்க. எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? சூப்பர் டி. நான் இதை எதிர் பாக்கவே இல்லை. நீயும் நானும் ஒரே வீட்ல தான் இனி காலம் முழுக்க இருக்கப் போறோம்”, என்று சந்தோசமாக ஆர்ப்பரித்தாள்.

ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் ஜானகி அமைதியாக இருக்கவும் “என்ன டி அமைதியா இருக்க?”, என்று கேட்டாள்.

“ஒண்ணும் இல்லைக்கா. திடீர்னு இந்த பேச்சை எதிர் பாக்கலை. அதான் ஷாக்”

“இங்க ஸ்ரீராம் தம்பிக்கும் அதே ஷாக் தான் போல டி”

“என்னக்கா சொல்ற?”

“ஆமா ஜானகி, மாமா வந்து சொன்ன உடனே யாரைக் கேட்டு முடிவு பண்ணுனீங்கன்னு கத்தினாங்க. அப்புறம் மாமா முடிவா சொன்னதும் ஒண்ணும் சொல்லலை”, என்று யமுனா சொன்னதும் ஜானகி கண்கள் மின்னியது.

அப்படி என்றால் அவனுக்கும் இந்த திருமணம் பிடிக்க வில்லை. மற்றவர்களிடம் பேசுவதை விட அவனிடம் பேசினால் சுலபமாக திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று எண்ணினாள்.

பிரச்சனையை ஆரம்பித்தவனிடமே தீர்வைக் கேட்க துடித்தாள் அவள். “அக்கா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறியா?”

“என்ன ஜானகி?”

“எனக்கு அவங்க நம்பர் வேணும்”

“யார் நம்பர்?”, என்று சிரித்தாள் யமுனா.

“அக்கா என்னை கொலைக்காரி ஆக்காத. நான் கல்யாணத்துக்கு முன்னாடி அத்தான் கூட உன்னை பேச வச்சேன்ல? எனக்கும் ஹெல்ப் பண்ணு பிளீஸ்”

“அந்த அளவுக்கு உனக்கு ஸ்ரீராமை பிடிச்சிருக்கா? இதோ இப்பவே அனுப்பி வைக்கிறேன் டி. ஆனா நான் கொடுத்ததா காட்டிக்காத. நிச்சயத்துக்கு முன்னாடி நான் நம்பர் கொடுத்தது யாருக்கும் தெரிய வேண்டாம்”, என்று சொல்லி போனை வைத்தவள் அவனுடைய நம்பரை ஜானகிக்கு அனுப்பி வைத்தாள்.

அந்த நம்பர் வந்ததும் அவசர அவசரமாக அறைக் கதவை தாழிட்ட ஜானகி உடனே ஸ்ரீராமை அழைத்தாள். அவனிடம் பேசவே அவளுக்கு பிடிக்க வில்லை என்றாலும் இப்போது அவன் ஒருவனால் தான் இந்த திருமணத்தை நிறுத்த முடியும் என்று புரிந்தது.

தன்னுடைய அண்ணி போனில் இருந்து அவளின் நம்பரை திருட்டுத் தனமாக எடுத்து சேவ் செய்திருந்தான் ஸ்ரீராம். அதனால் ஜானு என்ற பெயர் திரையில் தெரியவும் அவன் கண்கள் வியப்பால் விரிந்தது.

தன்னுடைய எண்ணை யமுனா தான் கொடுத்திருப்பாள் என்று அவனுக்கு புரிந்தாலும் அவள் எதற்கு அழைக்கிறாள் என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது.

வேண்டும் என்றே முதல் முறை அதை எடுக்காமல் விட்டான். இரண்டாவது முறை அவள் அழைக்கவும் அதை எடுத்தவன் தூக்க கலக்கத்தில் பேசுவது போல “எந்த நாதாரி தூக்கத்துல இருக்குறவனை திருப்பி திருப்பி தொல்லை பண்ணுறது?”, என்று கேட்டு விட்டு “ஹலோ யாருங்க?”, என்று நல்லவன் போல கேட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு பல்லைக் கடித்த ஜானகி “நான் யமுனாவோட தங்கச்சி ஜானகி பேசுறேன்”, என்றாள்.

“ஓ நீயா? என்ன சொல்லு?”, என்றான் அலட்சியமாய்.

தான் என்று தெரிந்தால் அவன் பேசியதற்கு மன்னிப்பு கேட்பான் என்று அவள் எதிர் பார்க்க அவனுடைய அலட்சியம் அவளுக்கு எரிச்சலை கூட்டியது.

“உன் கிட்ட….”, என்று அவள் ஆரம்பித்ததும் “ஏய் மரியாதை மரியாதை முக்கியம்”, என்றான் அவன்.

“பெரிய இவன்”, என்று மனதில் நினைத்த ஜானகி “உங்க…. கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”, என்றாள்.

“என்ன விஷயம்?”

“இல்லை உங்களுக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு தெறிஞ்சிக்கிட்டேன். எனக்கும் இதுல விருப்பம் இல்லை. அதனால நாம ஏதாவது செஞ்சு இதை ஸ்டாப் பண்ணிறலாமா? நான் மட்டும் ஸ்டாப் பண்ணா அது அக்கா வாழ்க்கையை பாதிக்கும். நீங்க மட்டும் ஸ்டாப் பண்ணா அது கிரி மச்சான் வாழ்க்கையை பாதிக்கும். நாம ரெண்டு பேரும் சேந்து பிடிக்கலைன்னு சொன்னா யாருக்கும் எந்த பிரச்சனையும் வராதே?”

“என் கிட்ட இருந்து நீ தப்பிக்கவே முடியாது டி. வசமா வந்து சிக்கிட்டியே செல்லக் குட்டி. இந்த பொறுக்கி தான் இந்த ஜென்மத்துல உன் புருஷன் ஜானு மா. இனி உன் வாழ்க்கை என் கையில்”, என்று மனதில் நினைத்தவன் “நீ சொல்ற பிளான் நல்லா இருக்கு ஜானு. நாம இது விஷயமா நேர்ல பேசுவோமா? ஏன்னா என்னோட ஹிட்லர் அப்பா எப்ப வேணும்னாலும் என் ரூமுக்கு வருவார்”, என்று புன்னகையுடன் சொன்னான்.

“அங்க உங்க அப்பாவும் அப்படித் தானா? இங்கயும் அதே கதி தான். சரி எங்க வரணும்னு சொல்லுங்க. நான் வரேன்”, என்று சொன்னாள். அவன் சாதாரணமாகவும் தனக்கு சாதகமாகவும் பேசியதால் அவன் மீதிருந்த கோபமும் அதற்கான காரணமும் அவள் மனதில் பின்னுக்கு சென்றது. கூடவே அவள் மனம் இப்போது கல்யாணத்தை நிறுத்துவதில் இருந்ததால் அவனிடம் நட்பாகவே பேசினாள்.

“நான் இடம் மெஸ்ஸேஜ் பண்ணுறேன் ஜானு. சரியா இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க வந்திரு. எங்க வீட்ல இருந்து நாளைக்கு சாயங்காலம் தான் உங்க வீட்டுக்கு வருவோம். நாம இன்னைக்கே பேசி முடிச்சிறலாம்”, என்றான்.

அவனுடைய ஜானு என்ற அழைப்பு ஏதோ ஒரு விதத்தில் அவள் மனதுக்கு பிடித்திருந்தது. ஆனால் அதை எல்லாம் அடி மனதில் அடக்கியவள் “என்னது இப்பவா? மணி இப்பவே ஆறரை ஆகிருச்சு. இதுக்கு மேல வீட்ல விட மாட்டாங்க”, என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!