Nimir 2.1
சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கோவிந்தன் விசாலாட்சி இருவருக்கும் இந்த வீட்டை விட்டு செல்வதில் விருப்பம் இல்லை. எனவே லலிதாவின் குத்தலான பேச்சினை அவர்கள் பொருட் படுத்தியது கிடையாது. ஆனால் வெண்மதிக்கு லலிதாவின் பேச்சு வருத்தமாக இருக்கும்.
“ஏன்மா இந்த வீட்டில நமக்கும் உரிமை இருக்கு தானே ? பெரியம்மா எதுக்காக இப்படி குத்தலா பேசிக்கிட்டு இருக்காங்க ? நீங்க அவங்கள எதுவுமே திருப்பி கேட்க மாட்டேங்கறீங்க.” என்று தாயிடம் கோபப்படுவாள் வெண்மதி.
Advertisement
“அக்கா சொல்ற மாதிரி இந்த வீட்ல வேலை செய்ற ஒருத்தனுக்கு கொடுக்கிற சம்பளமே ஜாஸ்திதான். இவ்வளவு பெரிய வீட்டை பாதுகாக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா உனக்கு? பெரியப்பா அவரோட நிலத்திலிருந்து வருகிற பணத்த வச்சு தான் செலவு பண்றாரு. நம்மகிட்ட இப்போ சொத்துபத்து எதுவுமே கிடையாது. நம்மளால இந்த வீட்டை பாத்துக்க செலவு பண்ணவும் முடியாது. அப்படி இருக்கும்போது நமக்கு அமைதியாய் இருக்கிறதை தவிர வேற வழி இல்லை.” என்று அவள் வாயை அடைத்து விடுவான்.
தாயிடம் கேட்பாளே தவிர பெரியம்மாவிடம் எதையும் நேரடியாக கேட்டது கிடையாது. நாம் ஏதாவது கேட்க போக வீட்டில் பிரச்சினை பெரிதாக கூடுமென்று அமைதியாக இருந்து விடுவாள்.
பள்ளிப்படிப்பு முடிக்கும் வரையில் அவளுக்கு பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கல்லூரியில் அடி எடுத்து வைத்ததும் அவளுடன் படித்த மாணவ மாணவியர்கள் வண்ணவண்ண உடைகளும் அதற்கேற்றார்போல விதவிதமான நகைகளும் போட்டுக்கொண்டு வருவதை கண்டு அவளுக்கு தான் வைத்திருக்கும் நான்கைந்து சல்வார்கள் குறைச்சலாக தெரிந்தது. எனினும் ஒருநாளும் தாய் தந்தையிடம் அதைப்பற்றி அவள் கேட்டது கிடையாது.
Advertisement
மற்ற மாணவர்கள் செலவு செய்வதை பார்த்து எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று ஒருநாளும் அவள் பெற்றோர்களை கஷ்டப் படுத்தியது கிடையாது. குடும்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல வாழ்ந்து பழகினாள். இயல்பிலேயே படிப்பில் ஆர்வம் கொண்ட வெண்மதி நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்ததால் அவளுக்கு விழுப்புரம் பொறியியல் கல்லூரியில் இலவசமாக சீட் கிடைத்தது. கட்டவேண்டிய சில ஆயிரங்களை, சிறுவயது முதல் மகள் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தினை செலவு செய்தார் கோவிந்தன்.
Advertisement
வீட்டில் இருக்கும் பொழுது படிக்கும் நேரம் போக தன்னால் முடிந்தவரை தாய்க்கு உதவி செய்வாள். வீட்டில் உள்ள எந்த விலை உயர்ந்த பொருட்களிலும் அவளுக்கும் அவள் தாய் தந்தைக்கும் உரிமை இருந்தது கிடையாது. பெரியம்மா நல்ல மனநிலையில் இருந்தால் பிரச்சினை கிடையாது. ஒருவேளை யார் மீதாவது கோபம், கைகால் வலி என்று வந்தால் அதனை லட்சுமியிடமும் வெண்மதியிடமும் தான் காண்பிப்பார்.
பெரியம்மாவின் அண்ணன் வந்து சென்றால் கட்டாயம் ஏதாவது குறையைக் கண்டுபிடித்து தாய், மகள் இருவரையும் திட்டித் தீர்ப்பார்.
வெண்மதி அதனை கேட்டு ரகசிய கண்ணீர் விட்டது உண்டு.
Advertisement
இந்த சூழ்நிலையில் அவளுக்கு கிடைத்திருக்கும் இந்த வேலை அவளுடைய சாப விமோசனம் ஆகவே அவளுக்கு தோன்றியது. இந்த கூண்டில் இருந்து வெளியேற அவள் காத்துக் கொண்டிருந்தாள்.
கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பொறியியல் பட்டம் பெற அவளுக்கு இன்னும் ஆறு மாத காலம் இருந்தது. இந்த ஆறுமாத காலத்தில் அவள் பக்கத்தில் இருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு சென்று ப்ராஜெக்ட் செய்ய வேண்டும். அதனையும் அதற்குப் பிறகு வரும் செமஸ்டர் தேர்விணையும் நல்லபடியாக முடித்துவிட்டால் வேலை அவளுக்கு கிடைத்துவிடும்.
இந்த வேலை கிடைத்ததும் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு இந்த வீட்டை விட்டு வெளியே சென்று நிம்மதியாக வாழவேண்டும் என்று நினைத்திருந்தாள். அன்றிரவு தந்தை வருகைக்காக காத்திருந்தாள்.
கோவிந்தன் இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவருக்காக காத்திருந்த லட்சுமி அவருக்கு சாப்பாடு பரிமாறினார். சாப்பிட்டு முடித்ததும் அவர்களது அறைக்கு வந்தார். அந்த பெரிய வீட்டில் பத்து அறைகள் இருந்தாலும் இவர்களுக்கு என இரண்டு அறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. லட்சுமி, கோவிந்தன் ஒரு அறையிலும் வெண்மதி இன்னொரு அறையிலும் இருந்தார்கள். அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
வெண்மதி தந்தைக்காக அவரது அறையில் காத்துக் கொண்டிருந்தாள். அவர் உள்ளே நுழைந்ததும்
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”
“என்னம்மா சொல்லு.”
“இன்னைக்கு எங்க காலேஜ்ல கேம்பஸ் இன்டர்வியூ இருந்துச்சு.”
“எனக்கு தெரியும். நீ தான் சொல்லி இருந்தியே. இன்டர்வியூ எப்படி போச்சு?”
“ஈசியா தான் இருந்துச்சு. நான் செலக்ட் ஆகிட்டேன்.”
“அப்படியா ரொம்ப சந்தோஷமா. நீ போய் தூங்கு.”
“இருங்கப்பா. நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கல. “
“ சரி என்ன விஷயமா? சொல்லு மா.”
“என்னோட கோர்ஸ் முடிவதற்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு. இந்த ஆறு மாசத்துல ப்ராஜெக்ட், எக்ஸாம் எல்லாம் நல்லபடியா முடிச்சிட்டா, எனக்கு அந்த வேலை கிடைச்சிடும் அப்பா.
மாசம் 40, 000 மேல சம்பளம் வரும். அதனால நாம எல்லாரும் இந்த வீட்டை விட்டு வெளியே போய் நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம்.”
“என்னமா சொல்ற?” என்று அதிர்ச்சியாக கேட்டார் தந்தை.
அதை எதிர்பார்த்திருந்த வெண்மதி மேலே தொடர்ந்தாள்.
“என்னப்பா இதுல அதிர்ச்சியாக என்ன இருக்கு ?” என்று கேட்டாள்.
“அதிர்ச்சியாக எதுவும் இல்லையா? இது நம்ம வீடு. நாம எதுக்கு இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்?”
“இது நம்ம வீடா? இந்த வீட்ல இருக்கிற ஏதாவது ஒரு பொருளையாவது நாம சுதந்திரமா எடுத்து ஆள முடியுமா? அம்மாவுடைய சொந்தக்காரங்க இல்ல என்னோட ஃப்ரெண்ட்ஸ் என யாரையாவது இங்க கூட்டிக்கொண்டு வந்து தங்க வைக்க முடியுமா?”
கோவிந்தன் பதில் கூறாமல் அமைதியாக இருந்தார்.
லட்சுமி பொறுமையை இழந்து “என்னடி அப்பாகிட்ட மரியாதை இல்லாம எதிர்த்து பேசிக்கிட்டு இருக்க. “என்று ஆரம்பித்தார்.
“அம்மா நீ கொஞ்சம் இரும்மா. நான் இன்னிக்கு நிறைய பேச வேண்டி இருக்கு. நீ அமைதியா இரு.”
“ நான் எதுக்குடி அமைதியா இருக்கணும்? நீ தப்பு பண்ணா நான் கேட்க தான் செய்வேன்.”
“தப்பு நான் பண்ணா மட்டும் நல்லா கேளு. மத்தவங்க பண்ணா கேட்காதே.” என்று தந்தையை ஓரக்கண்ணால் பார்த்தாள் மகள். தன்னை தான் குறிப்பாக கூறுகிறாள் என்பது புரிந்தும் அமைதியாகவே இருந்தார் கோவிந்தன்.
தான் அலட்சியமாகவும் உறவினர்களை நம்பியும் சொத்துக்களை ஏமாந்ததை பற்றிதான் பேசுகிறாள் என்று அவருக்கு புரிந்தாலும் பதில் கூறமுடியாமல் குற்றவுணர்ச்சியில் குறுகி நின்றிருந்தார்.
அவரை அந்த நிலைமையில் பார்த்த லட்சுமிக்கு கோபம் வந்தது
“என்னடி எங்க ரெண்டு பேரையும் விட நல்லா நாலு எழுத்து படிச்சு பட்டம் வாங்க போற திமிரில் பேசுறியா?”
என்று அதட்டி அவள் வாயை மூட முயற்சி செய்தார். ஆனால் தாயை பற்றி நன்கு புரிந்து வைத்திருந்த வெண்மதி அடங்க மறுத்தாள்.
“ஆமா அந்த திமிரில் தான் பேசுறேன்னு வச்சுக்கோங்க. நான் கேட்டதற்கு இன்னும் அப்பா பதில் சொல்லல என்று தந்தையை பார்த்தாள் நேராக நிமிர்ந்து.
கோவிந்தன் எப்பொழுதுமே மனைவி மக்களிடம் அன்பாகவே நடந்து பழக்கப்பட்டவர். அவருக்கு யாரையும் அதிகாரம் செய்யவும் கோபமாக பேசவும் தெரியாது. அதனாலேயே அவரை அவருடைய உறவினர்கள் எளிதில் ஏமாற்றி விட்டனர்.
“நீ சொல்றது எல்லாமே கரெக்ட்டு தான் மா. இந்த வீட்ல நாம சுதந்திரமா எந்த ஒரு பொருளையும் எடுத்து ஆள முடியாது. நமக்கு பிடித்தவங்களை கூட்டிட்டு வந்து தங்க வைக்க முடியாது தான். அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்ற?”
“அப்பா எனக்கு நல்ல வேலை கிடைக்கப் போகுது. நாம இந்த வீட்டிலிருந்து போய் நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம் பா. பிளீஸ் வாங்கப்பா.” என்றாள் கெஞ்சும் குரலில் வெண்மதி கலங்கிய கண்களுடன்.
அவளது பேச்சை விட அவள் கண்ணீர் அவள் தந்தையை கரைத்து இருக்க
“ இன்னும் ஆறு மாசம் இருக்கு. அதுக்கு அப்புறம் நாம இத பத்தி பேசுவோம். இப்போ நீ போய் தூங்கு.” என்று அவர் கூற அதற்கு பிறகும் பேச முடியாமல் மெண்மதி அறைக்கு சென்றாள்.
லட்சுமி “நீங்க அவ பேசினது எல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க. அவ நமக்கு நல்லது செய்கிறதா நினைச்சுக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கா. அவ பேசும்போது வெளியே போய் நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம்னு சொன்னா பாத்தியா லட்சுமி?”
“ஆமாம். நானும் கவனிச்சேன். அப்போ அவ இத்தனை நாளா இங்க இது ரெண்டும் இல்லாம தான் இருந்துட்டு இருக்கா.”
லட்சுமி அமைதியாகவே இருந்தாள். நானாவது பகல் முழுசும் வெளியில இருக்கிறேன். நீதான் அண்ணிகிட்ட மாட்டிக்கொண்டு முழிச்சிட்டு இருக்க. பாவம் லீவு நாள்ல வெண்மதியும் அண்ணிகிட்ட பேச்சு வாங்குறா.”
“ஆமாங்க. நீங்க சொல்றது கரெக்ட் தான். வெண்மதிக்கு என்ன மாதிரி எல்லோருக்கும் அடங்கிப் போற குணம் கிடையாது. அத நினைச்சு எனக்கு கொஞ்சம் நிம்மதி தான்”.
“ ஆமாம் லட்சுமி. அவ இந்த காலத்து பொண்ணு. எல்லாத்தையும் எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டா.
இப்படித்தான் தைரியமா வளரணும். என் பொண்ணு பேசினது எனக்கு ஒரு பக்கம் கஷ்டமா இருந்தாலும் ஒரு பக்கம் தைரியமா பேசினது ரொம்ப சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருந்துச்சு.” என்று கூறியபடியே பெருமூச்சு விட்டார்.
