“முதல்ல நான் பேசுறேன் தாத்தா. இல்லைனா நான் தான் உங்களை பேச சொல்றேன்னு அப்பா நினைச்சிப்பாங்க. ஊருக்கு போய்ட்டு முதல்ல நான் பேசுறேன். சரினு தான் சொல்வார். அப்படி சரின்னு சொல்லலைனா நீங்க பேசுங்க”, என்றவள் அப்படியே ஆச்சி மடியிலே தூங்கி விட்டாள்.
Advertisement
“பாப்பா தூங்கிட்டாங்க”
Advertisement
“நேத்து நைட் சரியா தூங்கிருக்க மாட்டா. நல்ல பிள்ளை. எதுக்கும் ஆசைப் பட மாட்டா. ஆனா அவளுக்கான உரிமை எதுவும் அவளுக்கு கிடைக்கிறது இல்லை. லதா கிட்ட பேசணும்”
Advertisement
“பேசினா மட்டும். பேசாம இவ இங்கயே இருக்கட்டும். அங்க போய் நிம்மதி இல்லாம இருக்கா. லதா கிட்ட சொன்னாலும் வீணா பிரச்சனை தான் வரும். இவளுக்குன்னு வரவனாவது இவளை புரிஞ்சு இவளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவளை வாழ வைக்கணும். நம்ம பேத்தி ஒரு பொக்கிஷம். யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ?”
Advertisement
“நல்லதே நடக்கும். சரி இரு நான் தலையணை போர்வை எல்லாம் எடுத்துட்டு வரேன். அப்படியே இங்கயே படுத்துறலாம். ரூமுக்கு போக சொன்னா பிள்ளை தூக்கம் போயிரும்”, என்று சொன்னவர் எழுந்து சென்று எல்லாம் எடுத்து வந்தார்.
பேத்தியை சரியாக படுக்க வைத்தவர் அகிலாண்டத்தையும் படுக்கச் சொல்லி விட்டு அவரும் அவர்களுக்கு காவலாக அங்கிருந்த மடக்கு கட்டிலை போட்டு படுத்து விட்டார். பூர்விக்கு அவ்வளவு நிம்மதியான உறக்கம் வெகு நாட்கள் கழித்து கிடைத்தது போல இருந்தது.
பூர்வியின் உலகம் மிகவும் சிறியது. அவளுக்கு தேவையானது பணமோ நகையோ பொருளோ அல்ல. அவளை அன்பாக அனுசரிக்கும் மனிதர்கள் மட்டுமே. அனைவரும் அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்க மாட்டாள். ஆனால் ஏதாவது ஒரு விஷயத்தில் அவளுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
எந்த முக்கியத்துவமுமே இல்லாமல் கடமைக்கு என்று ஒரு திருமண தகவல் அவளைத் தேடி வரப் போகிறது என்று தெரியாமல் நிம்மதியான உறக்கத்தில் இருந்தாள்.
காலையில் பூர்வி கண் விழித்ததே கீச் கீச் என்ற பறவைகளின் சத்தத்தில் தான். அது கிராமம் என்பதால் அதிக பழ மரங்கள் உண்டு. இவர்கள் வீட்டிலே மாமரம் கொய்யாமரம் என உண்டு. அதனால் பறவைகளின் சத்தம் அங்கே கேட்டுக் கொண்டே தான் இருக்கும்.
ஏனோ இந்த காலை அவ்வளவு அழகானதாக இருந்தது. அதை விட அழகானது அவளுடைய தாத்தா பாட்டி போடும் செல்ல சண்டை. ஓய்வு எடுக்காமல் தோட்டத்துக்கு செல்வேன் என்று வீம்பு பிடித்தவரை “இன்னும் இளமை திரும்புதாயா? ரெண்டு நாளுக்கு ஒருக்கா போனா போதும். தினமும் அலையனுமா?”, என்று கண்டித்துக் கொண்டிருந்தார் பாட்டி.,
சிறு சிரிப்புடன் போர்வையை மடித்து தலையணையை தூக்கிக் கொண்டு அறைக்குள் வைத்தவள் குளியல் அறைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்து விட்டு வந்தாள்.
அவள் கையில் சூடான காப்பி கொடுக்க பட்டது. ஒரிஜினல் பசும்பால் தண்ணீர் கலக்காமல் அவளுக்கு பிடித்த சுவையில் இருந்தது. ரசித்து குடித்தவள் பாட்டியின் புலம்பலை கேட்டுக் கொண்டிருந்தாள்.
“வர வர உன் தாத்தா சொல் பேச்சு கேக்குறதே இல்லை பூர்வி மா. எங்கயாவது விழுந்து வாரினா அவருக்கும் தானே கஷ்டம்?”
“விவசாயம் செஞ்சு பழகின உடம்பு. ஒண்ணும் ஆகாதுன்னு உன் ஆச்சிக்கு சொல்லு டா குட்டி”, என்றார் தாத்தா.
இருவருக்கும் இடையில் இருக்கும் பாசமும் அவர்களின் செல்ல சண்டையும் அப்போதும் ரசிக்கும் படியாக இருந்தது. பூர்வி அவர்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் கன்னியாகுமரியில் “அம்மா என்னோட வெள்ளை கலர் ஷால் எங்க?”, என்று அந்த வீடே அதிரும் படி கத்திக் கொண்டிருந்தாள் ஷிவானி.
“மெதுவா பேசுன்னு எத்தனை தடவை சொல்றது? வர வர உன் திமிர் கூடிட்டே போகுது. இந்தா தானே இருக்கு?”, என்று அவளை திட்டிக் கொண்டிருந்தாள் லதா. ஆனால் அதற்கெல்லாம் அவள் பயப்பட மாட்டாளே?
ஷிவானி குரல் கேட்ட படி தான் அவர்கள் வீட்டு வாசலில் நின்றார்கள் மதன் குடும்பத்தினர். மதனுக்கு நன்கு கேட்டது அது ஷிவானி குரல் தான் என்று.
“இந்த பொண்ணையா டா நீ விரும்புற? எவ்வளவு சத்தமா பேசுது?”, என்று கேட்டாள் அவன் அன்னை ராஜேஸ்வரி.
“இல்லை மா, இது அவ அக்காவா இருக்கும். ஷிவானி இப்படி எல்லாம் கத்த மாட்டா”, என்று சொல்ல அவனை ஒரு பார்வை பார்த்தாள் ராஜி.
வையாபுரி, கோதை, கிருஷ்ணன், ராஜேஸ்வரி மற்றும் மதன் ஐந்து பேரும் தான் வந்திருந்தார்கள்.
மதன் காலிங் பெல்லை அடிக்க சங்கரலிங்கம் தான் வந்து கதவை திறந்தார். அன்று ஞாயிறு என்பதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தார்கள்.
வந்தது யார் என்று தெரியாமல் சங்கரலிங்கம் “நீங்க?”, என்று இழுக்க “உள்ள போய் பேசலாமா? உங்க பொண்ணு ஷிவானி பத்தி தான் பேச வந்துருக்கோம்”, என்றார் கிருஷ்ணன்.
குழப்பம் வந்தாலும் அதைக் காட்டாமல் “உள்ளம் வாங்க”, என்று சொல்ல ஷிவானியை தவிர அனைவரும் அங்கே வந்து விட்டார்கள்.
மதன் எச்சில் விழுங்கிக் கொண்டு உள்ளே வந்து அமர்ந்திருக்க “யாருப்பா இவங்க?”, என்று தந்தையிடம் கேட்டான் புகழ்.
“தெரியலை டா. ஷிவானியை தெரியும்னு சொல்றாங்க”, என்றவர் “சொல்லுங்க சார், எங்க பொண்ணை உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்டார் சங்கரலிங்கம்.
“எங்க பையனும் உங்க பொண்ணும் விரும்புறாங்க”, என்று உண்மையை போட்டு உடைத்து விட்டார் கிருஷ்ணன்.
“ஷிவானி”, என்று கோபமாக சத்தம் கொடுத்தார் சங்கரலிங்கம்.
“என்னப்பா?”, என்ற படி வந்தவள் அங்கிருந்த மதனையும் அவன் குடும்பத்தையும் கண்டு அதிர்ந்து போனாள். அவள் கண்கள் மதனை முறைத்துப் பார்த்தது. அவன் கண்களால் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
“இவங்க சொல்றது உண்மையா? அந்த பையனை லவ் பண்ணுறியா?”, என்று கேட்டார் சங்கரலிங்கம். மற்றவர்களிடம் திமிரைக் காட்டினாலும் அவளுக்கு தந்தை மீது பயம் உண்டு.
அதனால் எச்சில் விழுங்கி கொண்டு அவரைப் பார்த்தவள் அமைதியாக இருக்க “அப்பா உன்னை தான் கேக்குறாங்க ஷிவானி. பதில் சொல்லு”, என்றான் புகழ்.
வேறு வழி இல்லாமல் ஆம் என்னும் விதமாய் அவள் தலையசைக்க “காலேஜ்க்கு இதுக்கு தான் போனியா? எவ்வளவு தைரியம் உனக்கு?”, என்று கேட்ட படி அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை வைத்தான் புகழேந்தி.
மதன் வீட்டினர் திகைக்க “சும்மா இரு டா எதுக்கு எடுத்தாலும் கையை நீட்டிக்கிட்டு?”, என்ற சங்கரலிங்கம் “தப்பு எங்க பக்கமும் இருக்கு. என்ன பண்ணலாம் சார் சொல்லுங்க”, என்றார்.
“இல்லை, எங்க பெரிய பையன் இவங்களை வெளிய வச்சு பாத்துருக்கான். இதே மாதிரி உங்க சொந்தக்காரங்களோ எங்க சொந்தக்காரங்களோ பாத்தா ஏதாவது பேசுவாங்க. அதான் இவங்களுக்கு கல்யாணம் பேசி முடிச்சிறலாமான்னு கேக்க தான் வந்தோம்? உங்களோட அபிப்பிராயத்தையும் நீங்க சொல்லுங்க”, என்றார் கிருஷ்ணன்.
“அவங்களுக்கு என்ன வயசு ஆகுதுன்னு கல்யாணம் பேசலாம்னு சொல்றீங்க? அது மட்டும் இல்லாம எங்களுக்கு கல்யாணம் முடியாம மூத்த பொண்ணு இருக்கா. அவளுக்கே நாங்க இன்னும் வரன் பாக்கலை? அவளுக்கு முடிச்ச பிறகு தான் இவளுக்கு பேசணும்”, என்று சங்கரலிங்கம் சொல்ல கோதையும் ராஜியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.