சுற்றிலும் இருள் போர்வை போர்த்தி இருந்ததால் சாலை ஓர மரங்களும், உயர்ந்த கட்டிடங்களும் கொஞ்சம் பூதாகரமாக தான் தெரிந்தது. ஆனாலும் அவள் அந்த காட்சிகளையும் முகத்தில் வந்து மோதிய குளிர் காற்றையும் ரசித்தாள்.
அவளுக்கு பயணம் மிகவும் பிடிக்கும். ஒவ்வொன்றையும் ரசிக்கும் மனம் அவளுக்கு உண்டு. சிறிது நேரம் கழித்து அவளது சீட்டில் படுத்து தூங்கியும் விட்டாள். அடுத்த நாள் காலை டிரைன் கோயம்புத்தூரை நெருங்கும் முன்பே விழிப்பு வந்து விட்டது. அங்கே இருக்கும் கழிவறையை உபயோக்கிக்க மனதில்லாததால் அப்படியே இருந்து விட்டாள். பின் தாத்தாவுக்கு அழைத்து ஸ்டேஷன் போவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று விவரம் சொன்னாள்.
Advertisement
“அங்க தான் டா வந்துட்டு இருக்கேன். நீ வரவும் நானும் வந்துருவேன்”, என்று அவர் சொன்னதும் சரி என்று சொல்லி போனை வைத்தாள்,
ஏனோ ஊர் நெருங்க நெருங்க அவளுக்கு உற்சாகமாக இருந்தது. ஏதோ சொந்த வீட்டுக்கு செல்வது போல ஒரு சந்தோஷம். பூமிநாதன், அகிலாண்டம் அது தான் அவளது தாத்தா பாட்டி.
Advertisement
Advertisement
பூமிநாதன், பொறுமையின் சிகரம். அகிலாண்டம் கொஞ்சம் துடுக்கு பேச்சு உண்டு. ஆனால் மிகவும் நல்ல குணம். அதனால் தானே இருவரையும் பூர்விக்கு அவ்வளவு பிடிக்கும். அவர்களுக்குள் இருக்கும் அன்பும் நேசமும் இன்னும் அதிகமாக பிடிக்கும். ஏனோ திருமணம் முடித்தால் அவர்களைப் போல ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை அவளுக்கு எப்போதும் உண்டு.
அவள் டிரைன் போவதற்கு முன் பேத்திக்காக அங்கே காத்திருந்தார் பூமி. பேத்தியைக் கண்டதும் பூமிநாதன் முகம் மலர்ந்தது. “வாங்க வாங்க என் செல்ல குட்டி எப்படி இருக்கீங்க?”, என்று அவள் கன்னம் பற்றி கொஞ்சினார்.
Advertisement
“போங்க தாத்தா இன்னும் என்னை குழந்தை மாதிரியே கொஞ்சுறீங்க”, என்று சிணுங்கினாள்.
“எங்களுக்கு நீ எப்பவும் குழந்தை தான் டா. சரி வா போகலாம். உன் ஆச்சி காத்துட்டு இருப்பா. எவ்வளவு நாள் ஆச்சு? புகழ் கல்யாணத்துல பாத்தது. அப்புறம் எங்களாலயும் அவ்வளவு தூரம் வர முடியலை. என் கொள்ளு பேரன் எப்படி இருக்கான்?”
“நல்லா இருக்கான் தாத்தா? அப்படியே அண்ணன் மாதிரி இருக்கான். வீட்டுக்கு வாங்க நான் போட்டோ காட்டுறேன்”, என்றவள் தாத்தாவுடன் சென்றாள்.
இவர்களின் வரவுக்காக வாசலிலே காத்திருந்தாள் அகிலாண்டம். பேத்தியைக் கண்டதும் அவளது முகம் மலர்ந்து விட்டது. அதன் பின் அங்கே பேச்சு பேச்சு பேச்சு மட்டும் தான். பூர்வி இவ்வளவு பேசுவாளா என்று அவர்கள் இருவரைத் தவிர மற்ற யாருக்குமே தெரியாது.
மூவர் தான் அந்த வீட்டில். ஆனால் இவள் வந்ததும் அந்த வீடே சந்தோஷம் கொண்டது போல தான் இருந்தது.
ஆகிலாண்டம் ஆச்சி அவளுக்கு பிடித்த உணவுகளை செய்து வைத்திருக்க மூவரும் குளித்து விட்டு காலை உணவை உண்டார்கள். அவளுக்கு பிடித்த பண்ட வகைகள் பழங்கள் கூட அங்கே வாங்கி வைக்கப் பட்டிருந்தது.,
அவளை தெரிந்த அக்கம் பக்கத்தினரும் வந்து அவளை நலம் விசாரித்து விட்டு “இங்கயே இருந்துரு பூரவி. நீ இருந்தா தான் ரெண்டு பெருசுகளும் சந்தோஷமா இருக்கும், அவங்களுக்குக்குன்னு யார் இருக்கா? பேசாம உனக்கு இங்கயே மாப்பிள்ளை பாக்கட்டுமா?”, என்று கேட்டார்கள்.
ஏனோ அவளுக்கு அதில் சம்மதம் தான். அவர்கள் கிளம்பியதும் “அந்த அக்கா சொல்ற மாதிரி பேசாம இங்கயே எனக்கு மாப்பிளை பாருங்க தாத்தா. கடைசி வரை உங்க கூடயே இருந்துருவேன்”, என்றாள்.
“யாருக்கு யாருன்னு நம்ம கைல இல்லை டா. மாப்பிள்ளை, அதான் உங்க அப்பா என்ன முடிவு பண்ணுறாரோ அங்க தான் உன் வாழ்க்கை. உனக்கு கல்யாணம் ஆனதும் உன் புருஷனை கூட்டிட்டு அடிக்கடி இங்க வந்துரு”, என்று சொல்லி பேத்தியை சமாதானப் படுத்தினாள் அகிலாண்டம்.
“ஏன் தாத்தா முன்னாடி விட ஆச்சி இப்ப அழகா ஆகிட்ட மாதிரி இருக்குல்ல?”, என்று கேட்டாள் பூர்வி.
“ஆமா ஆமா, ஆனா அவ எப்பவும் என் கண்ணுக்கு அழகு தான்”, என்றார் பூமி.
“கிண்டலா ரெண்டு பேருக்கும்? எனக்கு என்னமோ உங்க தாத்தாவுக்கு தான் பொண்ணு பாக்கணும்னு தோணுது”, என்று கிண்டல் அடித்தாள் அகிலாண்டம்.
இருவரும் இந்த வயது வரை அவ்வளவு ஒற்றுமையாக இருக்க தனக்கும் இப்படி ஒரு வாழ்க்கை வேண்டும், இவர்களைப் போல கடைசி வரை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது பூர்விக்கு.
ஆனால் நினைப்பது எல்லாம் நடக்குமா என்ன? எதுவுமே நாம் கையில் இல்லையே.
அன்று மாலையும் மூவரும் ஒன்றாக அமர்ந்து கதை பேசினார்கள். ஷிவானி அவளை டார்ச்சல் செய்ததை, நித்யா பேசியதை எல்லாம் இப்போது சிறு சிரிப்புடன் அவர்களுடன் பகிர்ந்து கொள்வாள். பூர்விக்கு நண்பர்கள் கூட இவர்கள் தான். ஷிவானி என்ன தான் கொடுமை செய்தாலும் பூர்வி அதை சாதாரணமாக தான் எடுத்துக் கொள்வாள்.
பெரியவர்களுக்கும் அவள் மனதுக்குள் எவ்வளவு குமுறல் இருக்கும் என்று அப்போது தான் புரியும். பேசிக் கொண்டே இருக்க மூவருக்கும் நேரம் போனதே தெரிய வில்லை.
இரவு உணவுக்கு ஆச்சி செய்து தந்த இடையாப்பும் தேங்காய்ப்பாலும் தொண்டையில் அமிர்தமாய் இறங்கியது.
“என்ன சொன்னாலும் உன் பொண்ணுக்கு இவ்வளவு ருசியா செய்ய தெரியலை ஆச்சி. என்ன ஒரு டேஸ்ட்?”, என்று சொல்லி பூர்வி நாக்கை சப்பு கொட்ட அவள் தலையில் லேசாக தட்டிய ஆச்சி “என் மகள் அதையாவது செய்றா. ஆனா அவ மக இன்னும் சமையலே கத்துக்கலை. நீ எப்ப சமையல் கத்துக்கப் போற?”, என்று கேட்டார் அகிலாண்டம் .
“பாருங்க தாத்தா அவங்க பொண்ணைப் பத்தி சொன்னதும் ஆச்சிக்கு கோபம் வந்துருச்சு”
“எனக்கும் அவ பொண்ணு தான்”, என்றார் பூமி. அவர்களுக்கு லதா ஒரே பெண் என்பதால் அவர்கள் மீது அவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள்.
“அம்மாடியோ நான் தான் அவுட். ரெண்டு பேரும் உங்க பொண்ணை விட்டுக் கொடுக்க மாட்டீங்களே? பேசாம நான் உங்களுக்கு பேத்தியா இருக்குறதுக்கு பதிலா பொண்ணா இருந்துருக்கலாம்?”, என்று சிரித்தாள் பூர்வி.
இரவு உணவுக்கு பின் ஆச்சி மடியில் படுத்துக் கொண்டு தாத்தாவுடன் அந்த நிலவைப் பார்த்துக் கொண்டே கதை பேசிக் கொண்டிருந்த பூர்விக்கு இது தான் சொர்க்கம் என்றே தோன்றியது.
“பேசாம நான் படிச்ச காலேஜ்லே எம்.பி.ஏ போடலாம்ன்னு இருக்கேன் தாத்தா”, என்றாள் திடீரென்று.
“ஏன் டா திடீர்னு?”
“எனக்கு அங்க இருக்கவே பிடிக்கலை. இன்னும் சொல்ல போனா அது என் வீடுன்னு நினைவே வர மாட்டிக்கு. எப்படியும் மாப்பிள்ளை பாக்க ரெண்டு வருஷம் ஆகும், அதுக்குள்ள பி. ஜி முடிச்சிருவேன்ல?”
“நீ காலேஜ் முடிச்ச உடனே இதை தான் உன் தாத்தா சொன்னார்? நீ தான் வேண்டாம்னு சொல்லிட்ட? இப்ப நீ காலேஜ் முடிச்சு மூணு வருஷம் ஆகுது. இப்ப மறுபடி படிக்கணும்னு சொல்ற?”, என்று கேட்டார் அகிலாண்டம்.
“படிக்கிறதுக்கு வயசா முக்கியம்?”
“சரி டா, நான் மாப்பிளை கிட்ட பேசுறேன்”, என்றார் பூமி.