இப்படியாக அவள் மனது திவ்யாவிற்கு நன்கு புரியத் துவங்க, ‘எங்கே பரணிக்கு தன் மேல் இருந்த காதல் இப்போது குறைந்திருக்குமோ?’ என்ற சிறிய அச்சம் ஏற்பட்டிருந்தது. ‘சரி பார்க்கலாம், எங்க போயிடப் போறான்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் அன்றைய தின அலுவலில் அரை மனதாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
Advertisement
அன்றைய தினம் மதிய உணவை நாபிஜூனின் அறைக்கு எடுத்துச் சென்ற திவ்யா சிறிது நேரம், “நாபி நாபி” என்று அழைத்தும் கதவு திறவாமல் போகவும், உணவுத் தட்டைக் கீழே கொண்டு வந்திருந்தாள். நாபியின் மீது கோபம் எழுந்திருந்தது.
‘தப்பு பண்ணது இவ. எல்லாருக்கும் ஆபத்து விளையும். போகாதன்னு தினமும் சொல்ல சொல்ல கேட்காம ஜாகிங் போயே தான் தீருவேன்னு வீம்பா போறா. சரி, எல்லாரும் சேர்ந்து அவளுக்கு ஆப்போசிட்டா பேசிட்டமேன்னு கில்டியாகி போய் சாப்பிட கூப்பிட்டா, ஒரு மரியாதைக்காவாது பதில் சொல்ல வேண்டாம்? கதவை திறக்காமயே இருந்தா இருந்துட்டு போ! யாருக்கு என்ன? பசியோடவே கிட’ என்று மனதிற்கு பொரிந்து கொண்டாள்.
இவள் முக மாறுதலை கவனித்த, யஷ்வந்த, என்னவென்று வினவ, “கதவை தட்டினேன், திறக்கவுமில்ல. பதிலும் சொல்லலை.” என்று பதில் சொல்ல,
Advertisement
“சரி விடு. பசிச்சா அவளா வந்து சாப்பிட்டுக்குவா. சும்மா போய் தாங்க வேணாம். அவ பண்ணது தப்புன்னு கொஞ்சமாச்சும் ரியலைஸ் பண்ணட்டும்” என்று விட்டு தன் சாப்பாட்டில் கவனமானான்.
Advertisement
பரணியின் முகத்தை ஏறிட்டவளுக்கு அவன் தன்னால் தான் நாபி சாப்பிடவில்லையோ என்ற எண்ணத்தில் முகத்தில் லேசான சுணக்கம் காட்டிட, “விடு பரணி. கொஞ்ச நேரத்துல அவளாவே வந்து சாப்பிட்டுக்குவா. மே பீ நம்மளை ஃபேஸ் பண்ண கில்டியா இருக்கோ என்னவோ. ஜஸ்ட் சில் இட் அவுட்.” என்று சொல்லிட, பரணி பதில் சொல்லாமல் மெளனமாய் தன் உணவை உண்டு முடித்தான்.
அன்றைய இரவு உணவிற்கும் நாபி கீழே இறங்கி வரவில்லை. இவர்களும் சென்று அவளை அழைக்கவில்லை. இரவு படுக்கைக்குச் செல்லும்போது மட்டும், திவ்யா நாபியின் அறையின் முன்பு சற்றே தேக்கம் காட்டினாள். அவள் பின்னாலேயே படியேறிய பரணியும் அவளுடன் நின்றுவிட்டான்.
“தட்டி பார்க்கவா?” என்று கம்மிய குரலில் பரணி கேட்க, தன் கைப்பேசியில் மணி பார்த்த திவ்யா,
Advertisement
“அவ எப்பவும் சீக்கிரம் தூங்கிடுவா தானே! மணி ஒன்பதாக போகுது. தூங்கியிருக்க போறா. காலையில பார்த்துக்கலாம். விடு. நீ ரொம்ப யோசிக்காத! அவளே நீ பேசினதை மறந்திருப்பா. நீ என்னடான்னா அதையே நினைச்சுகிட்டு” என்று சொன்னாள்.
“அப்படியில்ல, எனக்கு மனசு கேட்காது. அவ மேல தப்பு இருக்கு தான். ஆனா, அதுக்காக வீட்டை விட்டு வெளிய போயிடுங்கறது ரொம்ப ஹார்ஷான வார்த்தை. அதை சொல்லியிருக்க கூடாது” என்று பாவமாய் அவன் கூறிட,
அந்த இறுக்கமான சூழலை இலகுவாக்கும் பொருட்டு, “ஆமாம்மா, உனக்கு தான் ஒருத்தரை வெளிய போன்னு சொல்லறது ஈஸியா வருமே!” என்று சிரிப்புடன் தான் கூறியிருந்தாள் திவ்யா. ஆனால் அவள் பேச்சு அந்த சூழலை இன்னமும் அழுத்தமாக்கியிருந்தது. திவ்யாவின் பேச்சைக் கேட்டு சிரிப்பான் என்ற எண்ணத்தில் தான் திவ்யா கல்லூரி நாட்களைப் பற்றிச் சொன்னது. ஆனால் அவனோ, இன்னமும் பதட்டமானான்.
“சாரி திவி, ரொம்ப சாரி. உன்னையும் அப்படி கிளாஸை விட்டு வெளிய போன்னு சொல்லியிருக்க கூடாது. தப்பு தான். நீ எல்லார் முன்னாடியும் ரொம்ப அசிங்கமா ஃபீல் பண்ணியிருப்பல்ல. அதனால தான் இப்போ வரைக்கும் உன் மனசுல அந்த வடு இருக்கு. சும்மாவா சொன்னாங்க, தீயினால் சுட்ட புண்ண விட நாவினால் சுட்ட வடு ஆறாதுன்னு” என்று அவன் கூறவும் தான், இந்த விஷயத்தைப் பற்றி பேசியிருக்கவே கூடாது என்று திவ்யாவிற்கு உறைத்தது.
“ஐய்யோ பரணி, நான் சும்மா உன்னை ஓட்டறதுக்காக சொன்னேன். நிஜமாவே எனக்கு உன் மேல கோவமே இல்ல. ஏ, என்ன நீ இன்னமும் சாரி கேட்டுட்டு நிக்கற.” என்ற சொல்லி அவன் மணிக்கட்டை தன்னிச்சையாக பிடித்துக் கொண்டவள்,
“பரணி நிஜமாவே உன்னை கூல் பண்ணி சிரிக்க வைக்க தான் காலேஜ் பத்தி பேசினேன். எனக்கு உன் மேல துளி கோபமில்ல பா. ப்ளீஸ் நம்பு” என்று சொல்லியவள், அவன் கைகளை பற்றியபடிக்கே அங்கிருந்த சிறிய சோஃபாவில் அவனை இழுத்துச் சென்று அமர வைத்து, தானும் அருகில் அமர்ந்து கொண்டாள்.
“உண்மையா கோவமில்லையே!” என்று மீண்டுமாய் பரணி கேட்க, பிடித்திருந்த அவன் கைகளை இறுக்கியவள், “உண்மையா இல்ல” என்று புன்னகையுடன் கூறினாள்.
இன்னமும் பரணியின் முகம் முழுவதுமாகத் தெளியாததைக் கண்டவள், இலகுவாக சோஃபாவில் சாய்ந்து கொண்டு, “நீ வெளிய போன்னு ஏன் சொன்னன்னு எனக்கு காரணம் தெரியும். அதனால தான் கோபம் வரலை!” என்று சின்ன குறும்பு கண்களில் மின்ன கூறிட,
“என்ன தெரியும்?” என்று அவன் சற்றே இறுக்கம் தளர்ந்தவனாய் வினவினான்.
“ம்ம்ம், நீ ஏன் வெளிய போன்னு சொன்னன்னு தெரியும்னு சொன்னேன்.”
“அதான் கேட்கறேன். என்ன தெரியும்?”
“ம்ம்ம், உன்னை தெரியும்” என்று அவன் சொன்ன வார்த்தை மெட்டிலேயே அவளும் சொல்லிட, மெல்லமாய் சிரித்தான் இம்முறை.
“அது அது வந்து…” என்று அசட்டுத்தனமாய் அவன் சொல்லத் துவங்க, “எல்லா வந்து வந்து போயி” என்று சிரிப்புடன் திவ்யா கூறிட, அவனும் அவளுடன் சேர்ந்து சிரித்தான்.
“ரொம்ப நாளா உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்னு இருந்தேன். கேட்கட்டுமா?” என்று பரணி வினவ, அவன் என்ன கேட்கப் போகிறான் என்று ஒருவாறு திவ்யாவால் யூகிக்க முடிந்தது.
திவ்யாவின் சம்மதத்திற்காக பரணி எதுவும் பேசாமல் அவள் முகம் பார்த்து காத்திருக்க, அவள் தலையசைத்த பின்பே பேசலானான்.
“ஏன் வேண்டாம்னு சொன்ன திவி! நிஜமாவே என்னை பிடிக்கலையா உனக்கு?” என்று அவன் வினவ, ஒருவாறு இதைப் பற்றித்தான் பேசப் போகிறான் என்று யூகித்தவளுக்கு அவன் கேள்விக்கான பதில் சொல்லத் தான் சங்கடமாக இருந்தது. அவள் மனது அப்போது அவளுக்கு சுத்தமாகத் தெரியாது. ஆனால் அதைச் சொன்னால் ஏற்றுக் கொள்வானோ என்னவோ என்ற சந்தேகம் வேறு. பதில் சொல்ல யோசித்து திவ்யா அமைதியாகிட, அவள் மெளனத்தை தவறாகவே புரிந்து கொண்டான் பரணி.
“உனக்கு சொல்ல இஷ்டம் இல்லைன்னா சொல்லிடு. இதைப் பத்தி இனி கேட்கவே மாட்டேன். எனக்கு… எனக்கு அன்னைக்கு நீ சொன்ன காரணம் சரியா பதியல திவி. என்னை வேணாம்னு சொன்னதுக்கு அழுத்தமா எந்த காரணமும் நீ சொல்லலை. என்னை பிடிக்கலைன்னு ஒரு வார்த்தை நீ தெளிவா காட்டியிருந்தா நான் சத்தியமா உங்கிட்ட என் மனசை வெளிப்படுத்தியிருக்க மாட்டேன்” என்றவனின் குரல் லேசாக பிசிர் தட்ட, திவ்யா பதறித்தான் போனாள்.
உண்மையில் பதில் சொல்லத் தெரியாமல் தடுமாற்றம் கொண்டாள்.
“திவி, என்னை நீ அடிக்கடி பார்ப்ப, எனக்கு தெரியும். என் மனசுக்கு நீ பார்க்கறதும், நீ கண்ணால பேசறதும் நல்லாவே புரிஞ்சது. உனக்கு என் மேல இஷ்டம் இருக்குன்னு நம்பி தான் தைரியமா என் மனசை வெளிப்படுத்தினேன். க்ளாஸ்ல ஓணம் அன்னைக்கு உன்னை வெளிய போக சொன்னது கூட, நீ என்னை பார்க்கலைங்கற கோவத்தில தான்” என்று சொல்லி நிறுத்திவிட்டு, அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்திருந்தான்.
அன்றைக்குப் போலவே அவன் முகத்தில் அத்தனை ஏக்கம் ததும்பி வழிந்தது. ‘இன்னமும் இவன் மனதில் நாம் இருக்கிறோமா?’ என்ற சந்தேகம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. அவன் மனது தான் அவன் கண்களில் அப்பட்டமாகத் தெரிகிறதே! இந்த மனதை இத்துனை நாட்களும் ஆழத்தில் புதைத்தல்லவா வைத்துவிட்டான்! ஒருவேளை வந்த தினத்தில் இருந்தே அவன் மனதை வெளிப்படுத்தியிருந்தால் திவ்யா என்ன செய்திருப்பாள் என்று யோசித்தாள்.
‘ஐய்யயோ!’ என்று திரும்பவும் அவனைப் புரிந்து கொள்ளாமல் ஓடிப்போயிருக்கக் கூடும். அதனால் தானோ என்னவோ, பரணி கண் கொட்டாமல் அவள் முகத்தையே பார்க்கவும், திவ்யாவிற்கு அடிவயிற்றில் லேசாக குறுகுறுக்கத் துவங்கியது.
“பரணி, நான் அன்னைக்கு… எப்படி சொல்லன்னு தெரியலை” என்று ஆரம்பித்தவள், ஒரு முடிவுக்கு வந்தவளாக, “பரணி, என் வீட்டில நிலைமை அந்த நாள்ல ரொம்ப மோசமா இருந்துச்சு. பணப்பிரச்சனை. அக்காவுக்கு ஐவிஎஃப் ட்ரீட்மெண்டுக்கு கடன், அது ஃபெயில் ஆகி, அவ வீட்டுல குழந்தை இல்லன்னு பிரச்சனை பண்ணி, எங்க அப்பா அம்மா அங்க பேச போக, அவங்களை ரொம்ப திட்டி, பணமில்லன்னு அசிங்கப்படுத்தின்னு நிறைய நடந்துட்டு இருந்துச்சு. நீ பஸ்ல பேசினப்போ என மனசெல்லாம் நீ பேசின எதையுமே முழுசா கவனிக்கலை. முழுமனசா கேட்கலை. என் வீட்டை பத்தின டென்ஷன். எனக்கு வேலை கிடைக்குமான்னு கவலை. இதெல்லாம் மட்டுமே மனசில ஓடிட்டு இருக்கறப்போ வேற எந்த எண்ணமும் எனக்கு இல்லாம போச்சு” என்று நிறுத்தி ஒரு மூச்சு எடுத்துக் கொண்டு திரும்பவும் தொடர்ந்தாள்.
“என் வீட்டு நிலைமை பத்தி மட்டுமே எனக்கு அப்போ கவலை. காதல்னா என்னன்னு கூட எனக்கு முழுசுமா தெரியலை, புரிதல் இல்ல. ஹாஸ்டல்ல என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் லவ் பண்ணறேங்கற பேர்ல மணிக்கணக்கா ஃபோன் பேசிட்டு, வெளிய சுத்தணும், பாசம்ங்கற பேர்ல கண்ட்ரோல் பண்ணற லவ்வர்கிட்ட மாட்டிகிட்டு திண்டாடினது எல்லாம் அந்த ஒரு நிமிஷம் என் மனசை நிரைச்சிருச்சு. எங்கே உன் காதலை ஏத்துக்கிட்டா, என் பொறுப்பெல்லாம் மறந்து போயிடுமோன்னு பயம் வந்துடுச்சு.
இதெல்லாம் ஒரு காரணமான்னு உனக்கு தோணலாம். ஆனா, அந்த 20 வயசுல என் மெச்சூரிட்டி லெவல் அவ்வளோ தான்.” என்றவள் பரணி என்ன சொல்ல போகிறானோ என்று ஆர்வமாகவே பார்த்தாள். இவள் கூறியதை அவன் அசைபோட்டுக் கொண்டிருந்தான்.
அவன் எதுவும் சொல்லாமல் போகவும், “நான் சொன்ன காரணம் ரொம்ப சின்னபுள்ளத் தனமா இருக்கில்ல?” என்று வினவ, அவனோ இல்லை என்று தலையசைத்தான்.
“20 வயசுல உனக்கு நல்ல மெச்சூரிட்டி இருந்திருக்கு. நான் தான் உன் வீட்டு நிலைமை என்னன்னு ஒரு நிமிஷம் கூட யோசிக்காம, நான் வேலைய விட்டு போறதுக்குள்ள உங்கிட்ட பேசிடணும்னு நினைச்சிருக்கேன்.” என்று அவன் சற்றே இலகுவான குரலில் கூறிடவும் தான் திவ்யாவின் தடதடத்த மனம் சற்றே அமைதி கொண்டது.
“காலேஜ்க்கு அப்பறம் நீ என்னை காண்டாக்ட் பண்ண முயற்சிக்கவே இல்லைல திவி?”
“இல்ல” என்று உண்மையை ஒப்புக் கொண்ட போதும், “அப்பப்போ உன் ஃபேஸ்புக் ஃப்ரொஃபைல் பார்ப்பேன். நீ வெரிஜோன் கம்பெனில வொர்க் பண்ண வரைக்கும் தெரியும். அதுக்கு மேல எந்த அப்டேட்டும் இல்லை.”
“அப்படியா? நீ என் ஃப்ரெண்ட் லிஸ்டில இருக்கியா?” என்று அவன் ஆச்சர்யமாக வினவ,
நமுட்டுச் சிரிப்பு சிரித்தவள், “தினேஷ் ஐடில இருந்து அப்பப்போ செக் பண்ணுவேன்” என்று உண்மையை ஒப்புக் கொண்டாள்.
“அதானே பார்த்தேன். நீ ஃபேஸ்புக்லையே இல்லையே எப்படி என் ஃப்ரெஃபைல் பார்த்திருப்பன்னு நினைச்சேன்?”
“நான் ஃபேஸ்புக்ல் இல்லைன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று இவள் ஆச்சர்யமாக வினவ,
“ஏன் நீ மட்டும் தான் உன் ஃப்ரெண்ட் தினேஷ் ஐடில இருந்து என்னை நோட்டம் விடுவியா? நான் உன் க்ளாஸ் மேட் சக்திவேல்கிட்ட உன்ன பத்தி விசாரிக்காம இருப்பனா?” என்று சிரிப்புடன் அவன் கேட்கவும், திவ்யாவும் அவனுடன் சேர்ந்து நகைத்தாள். சக்திவேல் பற்றிய பேச்சு வரவும் திவ்யாவிற்கு கல்லூரியில் நான்காம் வருடம் நடந்த நிகழ்வுகள் ஒன்றின் பின் ஒன்றாக நினைவிற்கு வந்தன.
“அந்த சக்திவேல் குரங்கனை பத்தி எங்கிட்ட பேசாத! நீ வேலைய விட்டு போனதும் அவன் என்ன என்ன பண்ணான் தெரியுமா?” என்று கால்களை சோஃபாவில் மடக்கி நன்றாக வாகாக அமர்ந்து கொண்டவள் ஆர்வமாக பேசத் துவங்கினாள்.
“நாம பஸ்ல பேசினதை அவன்கிட்ட நீ சொன்னியா?” என்று முதலில் கோபமாக வினவியவள், பரணி இல்லை என்று தலையசைக்கவும், “நீ சொல்லியிருக்க மாட்ட, ஆனாலும் அந்த டாகுக்கு நான் உன்னை பிடிக்கலைன்னு சொன்னேன்னு தெரிஞ்சிருக்கு. ஃபைனல் இயர் முழுக்க என்னை எங்க பார்த்தாலும் கொலைக்காரி மாதிரி பார்ப்பான். அவன் மட்டுமில்ல, எங்க க்ளாஸ் பசங்க எல்லாருமே அப்படி தான் பார்ப்பானுக. நாம என்னவோ வருஷக்கணக்கா லவ் பண்ண மாதிரியும் நான் உன்னை ஏமாத்திட்ட மாதிரியும் நடந்துக்குவாங்க.”
“அப்படியா? நிஜமாவே அவன்கிட்ட நாம பேசினது எதுவும் சொல்லலை திவி!”
“அட தெரியும்டா. நீ சொல்லியிருக்க மாட்டன்னு நான் தான் சொல்லறனே!” என்று திவ்யா உரிமையாக அவனிடம் கூறியது பரணிக்கு கொள்ளை கொள்ளையாகப் பிடித்திருந்தது. நடுவில் ஓடிப்போன ஐந்து வருடங்கள் என்னவானது என்றே தெரியாதது போல, அன்றைக்கு கல்லூரியில் இருந்து நேரே இந்த இரவுக்குள் புகுந்து விட்டதைப் போன்ற மாயை தோன்றியது.
திவ்யாவும் யாருடனோ பேசுகிறோம் என்ற எண்ணத்தில் இது நாள் வரையிலும் சற்றே ஒதுக்கத்துடன் தான் பேசி வந்தாள். சிற்சில சமயம் பரணியை நோட்டம் விட்டாலும், பெரியதாய் வார்த்தைகளாக எதையும் சொன்னாளில்லை. ஆனால் இன்றைய இரவுக்காகவே காத்திருந்தது போன்று இருவரும் பேசிக் கொண்டனர். அவள் கைகளுக்குள் பிடிபட்டிருந்த அவன் கையை எடுத்து இலகுவாக தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன், திவ்யா பேசுவதை ஆர்வமாக கவனிக்கலானான்.
அவன் கன்னத்தில் பதிந்திருந்த இருவரது கோர்த்த கைகளையும் பற்றி திவ்யாவின் நினைவில் சட்டெனப் பதியவில்லை. தன் போக்கில் சக்திவேல் பற்றி பரணியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“நான் அவனை கிராஸ் பண்ணறப்போலாம், ‘சிலர் இருக்காங்கடா, சரியான பிசாசு மனசுடா. எப்படித்தான் இப்படியெல்லாம் ஜென்மங்க இருக்குன்னே தெரியல்ல’னு சொல்லுவான். மொதல்ல அவன் என்னை தான் ஜாடை மாடையா பேசறான்னு எனக்கு புரியவே கொஞ்ச நாள் ஆச்சு. நான் பெருசா கண்டுக்காம போயிருவேன். ஆனாலும் விடமாட்டான். அவனோட கேங் பசங்க எல்லாருமே என்னை ஒரு கொலை வெறியோட தான் பார்த்தானுங்க” என்று கண்களை அகல விரித்து சொல்லிக் கொண்டிருந்தாள்.
“நானாச்சும் பரவாயில்ல பரணி! தினேஷ் தான் ரொம்ப பாவம் தெரியுமா. அவனை ரொம்ப டார்சர் பண்ணானுக. நான் உன்னை லவ் பண்ணாததுக்கு அவன் என்ன பண்ணான் பாவம். என் ஃப்ரெண்டுங்கற ஒரே காரணத்துக்காக அவனை எல்லா பசங்களும் ஒதுக்குனாங்க. சில நாள் அவன் மட்டும் தனியா நடந்து மெஸ்ஸுக்கு போவான். தனியா பெஞ்சில படுத்திருப்பான். பாவமா இருக்கும்” என்றவள் அப்போது தான் அவள் வலது கையை தன் இரு கைகளுக்குள் பொத்தி அதைத் தன் கன்னத்தில் வைத்தபடிக்கு அவளையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த பரணியின் கண்களை ஆழமாய் பார்த்தாள்.
‘கைகளை விலக்கிக் கொள் திவி’ என்று கூக்குரல் கேட்கிறதா என்று மனதிற்குள் காதுகளைக் கொடுக்க, என்னவோ அவள் மனது அந்த நேரம் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டது போலும். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளும் தன் பேச்சை நிறுத்திவிட்டு அவனையே பார்ப்பதை அப்போது தான் உணர்ந்தான்.
கண்களை விலக்காமல் திவ்யா அவனையே தான் ஏறிட்டாள். அவன் கைப்பிடிக்குள் இருந்த அவள் கையை விலக்கிக் கொள்வாளோ என்ற சிறிய பதட்டம் அவனிடம் தோன்றிய நொடி, ‘என்ன?’ என்று வார்த்தையாக கேட்காமல் புருவத்தை மட்டும் உயர்த்த, திவ்யா, ‘ஒண்ணுமில்லை’ என்று தலையை மட்டுமாய் அசைத்தாள்.
அவள் தலையசைப்பை தனக்குச் சம்மதமாக எடுத்துக் கொண்டவன், விழிகளை அவள் கண்களை விட்டு அகற்றாமல் அவள் கைகளை தன் உதட்டின் மிக அருகில் கொண்டு சென்று உதடுபதிக்காமல் நிறுத்தினான். அவன் உஷ்ணமான மூச்சுக் காற்று மட்டும் அவள் கைகளில் பரவிட, திவ்யாவின் வயிற்றுக்குள் அங்கங்கே சிறு பட்டுப்பூச்சிகள் சிறகடிக்கத் துவங்கியது.
உதடு பதிக்க அவள் சம்மதம் வேண்டி அவன் காத்திருக்கிறான் என்பது அவன் வாய்மொழியாகக் கேட்காமலேயே திவ்யாவிற்குப் புரிந்திட, மெல்லமாக சரியென தலையசைத்தாள். மறுநொடி அவன் உதடுகள் அவள் உள்ளங்கையின் பின்னால் அழுத்தமாக அல்லாமல் மிக மெல்லியதாகப் படர்ந்து மணிக்கட்டை அடைந்திருந்தது. உதட்டால் வருடியபடிக்கே விழி உயர்த்தி திவ்யாவை ஏறிட, அவளோ உணர்ச்சிக் குவியலாய் அவன் அருகில் அமர்ந்திருந்தாள்.
நயனங்கள் மட்டும், பரணியின் கண்களை விட்டு அகலாமல் அவனையே பார்த்தவண்ணம் இருக்க, “ஐ லவ் யூ பரணி” என்று மெல்லமாய் அவள் உதடுகள் முதன் முதலாய் முணுமுணுத்தன. அவள் உதட்டசைவைக் கண்டு ஒரு நொடி திணறியவன், “ம்ம்ம்ம்?” என்று ஆச்சர்யமாகக் கண்கள் விரிய அவளை நோக்கிட, பற்கள் தெரியாமல் உதட்டை சுழித்தவள், கண்களாலேயே அவனைத் தன் அருகே அழைத்திருந்தாள்.
இந்த நொடிக்காகவே ஜென்ம ஜென்மமாய் காத்திருந்தவன் போல, அவள் அருகே, மிக அருகே முகத்தை கொண்டு சென்றவனின் தலைமுடியில் தன் விரல்களைக் கோர்த்துக் கொண்ட திவ்யா, அவன் கொஞ்சமும் எதிர்பாரா வண்ணம், அவன் காதுமடல் அருகே உதடுகளைக் குவித்து, காதுகளை மெல்ல வருடிட, அவன் உடல் முழுவதுமே சிலிர்த்துப் போனது.
“ஏ…” என்ற ஒற்றை சொல்லுக்கு மேல் அவனிடமிருந்து எந்த வார்த்தையும் வந்திடாது போக, அவனைத் தன்னுடன் கொஞ்சமாய் அணைத்துக் கொண்டவள், அவன் காதருகில் மீண்டுமாய், “ஐ லவ் யூ பரணி” என்று கூறிட, திவ்யாவின் முகத்தை தன் காதருகில் இருந்து முன்னால் கொணர்ந்தவன், அவள் கன்னத்தை இரு கைகளிலும் தாங்கிப் பிடித்து அவள் கண்களை ஆழமாய் பார்வையிட்டான்.
அவன் பார்வை அவள் விழிகளில் மோதி, குளிரில் சற்றே வெடவெடத்த அவள் உதடுகளில் சென்று குத்திட்டு நிற்க, அவன் எண்ணம் புரிந்தவள் போல, உதட்டை இம்முறையும் பிரிக்காமல் புன்னகைத்தாள். அவன் உதடுகள் அதற்கு மேல் பொறுமை காக்கவில்லை. அவள் கீழுதட்டை தன் பற்களால் மெல்லக் கவ்வியிருந்தன.
“ஸ்ஸ்” என்று அவள் சொன்ன வார்த்தைகள் அவளுக்கே கேட்கவில்லை. இந்த ஒரு முத்தத்திற்காகத் தான் இத்தனை நாட்களும் காத்திருந்தனர் போன்று எங்கே இருக்கிறோம், தாங்கள் யார், எந்த உலகில் சஞ்சாரம் செய்கிறோம் என்ற சிந்தை எதுவும் இல்லாதவர்களாகிப் போயிருந்தனர்.
அவன் கைகள் திவ்யாவை தன்னுடன் சேர்த்து அணைத்திருக்க, சில நொடிகள் கழித்தே அவளை தன் உதட்டுச் சிறையில் இருந்து விடுவித்திருந்த பரணியின் உதட்டில் நீங்காத புன்னகை பூத்திருந்தது. “என்னோட திவி” என்று நெஞ்சம் நிறைய ஆசையுடன் அவன் மொழிய, உரிமையாக அவன் தோளைக் கட்டிக் கொண்டாள்.
அமர்ந்திருந்த நிலையிலேயே அவளின் கால்களை தன் தொடையின் மீது போட்டுக் கொண்டவன், திவ்யாவை தன் தோளுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். அவன் தோளில் சாய்ந்திருந்த போது உலகில் எதுவுமே கஷ்டமில்லை. எல்லாமே பரணி சரிசெய்து விடுவான் என்ற ஆழமான நம்பிக்கை தோன்றியிருந்தது. பரணி அதன் பின்னே முத்தமழை பொழிந்திருக்கவில்லை.
உரிமையாக அவள் கால்களை மெல்லமாய் பிடித்துவிடத் துவங்க, “வேண்டாம்” என்று இவள் மனமில்லாமல் தான் தடுத்தாள். பரணி அவள் மறுப்பை சட்டை செய்யாமல், அவள் கால்களை பிடித்து விட்டபடிக்கே பேசலானான்.