Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூவிடைப் பனித்துளிகள்

poovidaip panithuligal 18 by Aruna Kathir

அத்தியாயம் 18

‘எங்க போய் வெல்லறது!’ என்று நினைத்துக் கொண்டாள். பரணியும், திவ்யாவும் செய்வதறியாது சோஃபாவில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ஒருபக்கம் படத்திற்கு செல்ல ஆசையாக இருந்தது திவ்யாவிற்கு. ‘ரஜினி படம் ஃபர்ஸ்ட் டே எல்லாம் நம்மூர்ல நான் பார்த்ததே இல்ல! பசங்க கூட்டமா இருக்கும்னு அப்பா கூட்டிட்டு போக மாட்டார். இன்னைக்காவது அந்த ஆசைய தீர்த்துக்கலாம்னு நினைச்சேன்’ என்று சொல்லவும் தயக்கமாக இருந்தது. எங்கே அவனுடன் படத்திற்கு தனியே செல்ல நினைக்கிறாளோ என்று தப்பர்த்தம் கொண்டு விடுவானோ என்ற அச்சம் காரணமாக பேசாமல் அமர்ந்திருந்தாள்.

‘அய்ய்யோ, தலைவர் படமாச்சே! ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்கலைன்னா நானெல்லாம் என்ன தலைவர் ரசிகன். நம்மூர்ல அடிச்சு பிடிச்சு ராத்திரி பனியில காத்திருந்து கூட டிக்கெட் எடுத்திருக்கேன்! இப்போ கையில டிக்கெட் இருந்தும் படம் பார்க்க முடியாம ஆகிடுமோ?’ என்ற யோசனையுடன் இருந்தவன், ‘இவ வர்றாளான்னு கேட்கலாம். எப்படியும் பிகு பண்ணிட்டு, நானா? நான் எப்படி தனியா உங்கூட படத்துக்குன்னு சீன் போடுவா! அவளே வரலைன்னு சொல்லிடுவா, நாம எஸ் ஆகிடலாம்’ என்று நினைத்து, பரணி தன் எண்ணத்தை சொல்ல வாய் திறக்க,

“நாம கிளம்பலாமா? படம் போட்டிட போறாங்க!” என்று திவ்யா சொல்லவும் சரியாக இருந்தது. ஆவென திறந்த வாயை மூக்கு துடைப்பது போல மறைத்துக் கொண்டு, “போலாம்” என்று கார் கீயை தேடினான் பரணி.



Advertisement

பரணியுடன் தனியே படத்திற்குச் செல்வோம் என்று திவ்யா கனவிலும் எண்ணியிருக்கவில்லை. ஆனாலும் இது ஏதோ புது மாதிரியாக, விசித்திரமான வகையில் நல்லத்தனமாகவே இருந்தது. ‘ஒரு மாதிரி சந்தோஷமாவும் இருக்கு. படபடப்பாவும் இருக்கு’ என்று எண்ணிக் கொண்டாள்.

தியேட்டர் செல்லும் வரையிலும் இருவரும் எதையும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை. இப்படித் தனிமையில் இங்கே இருவரும் இருந்ததும் இல்லை எனலாம். எப்போதும் யஷ்வந்தோ, நாபியோ, வருணோ சுற்றிலும் இருந்த வண்ணம் இருப்பர். அதனால் இயல்பாக பேசவும் சிரிக்கவும் சுலுவாக இருந்தது.

இருவரும் தனித்துவிடப்பட்ட நிலையில், என்ன பேசுவது என்றே புரிபடாமல் போக, அவ்வப்போது அசட்டுப் புன்னகையை மட்டுமே சிந்திக் கொண்டு தியேட்டர் வந்தடைந்திருந்தனர். படம் திரையிடத் துவங்க, அதுவரையில் இருவருக்கும் இடையில் இருந்த மெளனம் சற்றே விடைபெற்றிருந்தது.

Advertisement

“SUPER STAR RAJINI” என்று பெயருக்கும் தலைவர் இன்ட்ரோ சீனுக்கும் இருவரும் கைதட்டி ரசித்து, ரஜினியின் முகம் காட்டியவுடன், பரணி தான் கையுடன் கொண்டு வந்திருந்த சுக்கலாகக் கிழித்த வண்ண பேப்பரை, “தலைவா!” என்று கத்திக் கொண்டு தூக்கி எறிந்தான்.

Advertisement

முன் சீட்டில் இருந்த மனிதன், நல்லவேளை ரஜினி ரசிகன் போலும், பரணி வீசிய கலர் காகிதத்தை சேர்த்து அவனும் திரும்ப ஸ்கிரீன் நோக்கி வீச, பரணியும் திவ்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அது வரையிலும் இருவருக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்த மாய வெண்திரை காற்றில் கலைந்துவிட, இரண்டு ரஜினி ரசிகர்களும் சேர்ந்து படத்தை கண்டுகளித்தனர்.

இடைவேளையின் போது, ஆளுக்கு ஒரு பாப்கார்ன், கோக் என அருந்திவிட்டு, கடைசி க்ளைமேக்ஸ், ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ பாடலுக்கு தீப்பொறியாய் கைதட்டி விசிலடித்து படத்தை ரசித்தனர். இந்த மூன்று மணி நேரத்தில் இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் தோன்றியிருந்ததை உணர முடிந்தது.

ஏனென்றால், வரும்போது உம்மென்று அமைதியாக தியேட்டருக்கு வந்தவர்கள், திரும்ப காரில் போகையில் சலசலவென பேசிக் கொண்டு, “விஜய்சேதுபதி ஆக்டிங் செமல. என்னம்மா நடிச்சிருக்காரு. அனிருத் ம்யூசிக் சும்மா பட்டைய கிளப்பிருச்சு” என்று படத்தை பற்றி அலசிக் கொண்டே சென்றது இதமாக இருந்தது இருவருக்கும்.

Advertisement

வீடு வந்து சேர்ந்த பின்பும் கூட, “டேய், நீயும் வந்திருக்கலாம்டா. சப்டைட்டில் தான் இருக்குல” என்று சிறிது நேரம் படத்தைப் பற்றி, யஷ்வந்திடம் பேசி முடித்த பின்பே உறங்கச் சென்றனர்.

தன் அறைக்குள் செல்லும் முன்னர் சற்றே தயங்கிக் கொண்டு நின்ற திவ்யாவிடம், “தேங்க்யூ ஃபார் டுடே” என்று தன் நெஞ்சில் கைவைத்து ஆத்மார்த்தமாக உண்மையான மகிழ்ச்சியுடன் நன்றி கூறிய பரணியை ஏனோ இந்த நொடி ரொம்பவும் பிடித்துப் போனது அவளுக்கு.

கண்கள் மின்ன, தலையசைத்து தன் அறைக்குள் வந்தவள், கட்டிலில் விழுகவும், ‘இவனை எதுக்காக வேணாம்னு சொன்னோம்? ஒரு வேளை அன்னைக்கு ஓகே சொல்லியிருந்தா, எப்படியிருந்திருக்கும்?’ என்று நொடி நேரத்தில் மனக்குரங்கு எங்கோ ஒரு கிளைக்குத் தாவிக் குதிக்க, ‘சே! அப்படி கிப்படி ஓகே சொல்லியிருந்தா இந்நேரம் பிரேக்கப் தான் ஆகியிருக்கும்.’ என்று சொல்லி தன்னை நிலைபடுத்திக் கொண்டவள், அன்றைக்கு வண்ண வண்ண கனவுகளுடன் உறங்கிப் போனாள்.

பரணியின் மனநிலையோ வார்த்தைகள் கொண்டு வடிக்க இயலாத வகையில் இருந்தது. நான்கு வருடங்கள் கழித்து திவ்யாவை அன்று நேர்காணலின் போது சந்தித்த நொடி இப்போது நினைத்தாலும் ஜிவ்வென்று கிறங்கடிக்கக் கூடியது. அதிலும், அவனைக் கண்டதும் அவள் பதில் சொல்லாமல் திணறவும், ‘இவ இன்னமும் என்னை மறக்கல. கொஞ்சமே கொஞ்சம் அவ மனசில நான் இருந்திருக்கேன்’ என்ற எண்ணம் மட்டுமே அன்று அவனை தடம்புரட்டாமல் நேர்த்தியாக அந்த வினாடியைக் கையாள வைத்தது எனலாம்.

‘அவ மட்டும், அன்னைக்கு என்னைப் பார்த்து ஜெர்க் ஆகாம நார்மலா பேசியிருந்தா, கண்டிப்பா அவளை நான் செலக்ட் பண்ண அப்ரூவல் குடுத்திருக்கவே மாட்டேன். லவ் ஃபெயில்யர் ஒரு பக்க வேதனைன்னா, அது ஏற்படுத்தின பொண்ணை என் டீமில வச்சுகிட்டு வேலை பார்க்கறது எவ்வளோ வலியைக் கொடுக்கும் எனக்கும்! அதனால ஏதாவது காரணம் சொல்லி அவளை ரிஜெக்ட் தான் பண்ணியிருப்பேன். அவள் ஜெர்க் ஆகி, முகத்தில டென்ஷன் ஏறிப்போய், தண்ணிய குடிச்சு சமாதானம் பண்ணிக்கிட்டதைப் பார்க்கவும் தான் எனக்கு திருப்தியே!

பின்ன, காலேஜ்ல போறப்போவும், வரப்போவும் போதை ஏத்தற மாதிரி அந்த பார்வை பார்த்துட்டு போவா. ஆனா லவ் ப்ரபோஸ் பண்ண வந்தா மட்டும், அந்தா அவனை புடிக்கும், இந்தா இவனை புடிக்கும், அவன், இவன், நீ எல்லாமே எனக்கு ஒண்ணு தான்னு கரகாட்டம் ஆடிட்டு, பை சொல்லிட்டு போயிடுவாளாக்கும்?

ஆபீஸ்ல அவ சேர்ந்த புதுசில, என்கிட்ட சகஜமா பேச முயற்சி செஞ்சா தான். ஆனா கேடி அவ! நார்மலா ஹாய் பாய் அளவுல மெயிண்டெயின் பண்ணிகிட்டா அவளுக்கு நல்லதுன்னு யோசிச்சிருப்பா. ஆனா நான் அதுக்கு இடம் கொடுக்கலையே! நீ பேசவே வேணாம் தாயின்னு தள்ளி தானே நின்னேன்.

பின்ன இவ ஒரு குட்மார்னிங் அனுப்பிச்சா, உடனே நான் மயங்கிப் போய் அவளுக்கு ரிப்ளை பண்ணிட்டு, ‘இனிமே நாம நல்ல ஃப்ரெண்ஸாவே இருப்போம்னு’ விடற பித்தலாட்ட கதையெல்லாம் கேட்டுட்டு, பாய் பெஸ்டியா மாறி அரை லூசா சுத்திட்டு இருந்திருப்பேன்.

அவ யு.எஸ் வராத வரைக்கும் எனக்கும் பெருசா ஒரு டென்ஷனும் இல்ல. அவ வேலைய அவ பார்த்தா, என் வேலைய நான் பார்த்துட்டு இருந்தேன். மனசுக்குள்ள அவ மேல இருந்த காதல் அப்படியே ஒரு ஓரமா அதுபாட்டில் செடிக்கு தண்ணி ஊத்திட்டு அப்பப்போ சோக கீதம் பாடிட்டு இருந்துச்சு. இப்போ, இங்க அவ வந்ததும் மனசு கிடந்து அடிச்சுக்குது.

அவகிட்ட பேசு, அவகூட பழகி, அவளுக்கு நீ யாரு, அவளை எவ்வளோ லவ் பண்ண, பண்ணற இதெல்லாம் புரியவை! என்னா ஆளுடா நீ? இன்னைக்கு அவ ரூமுக்குள்ள போகும்போது எப்படி உன்னைப் பார்த்து அழகா சிரிச்சுட்டு போனாள்ல, அவ மனசில நீ இன்னும் இருக்கடா மடையா!

இனிமே நீ இன்னொரு பொண்ணைப் பார்த்து பேசி, அவளுக்கு உன்னை பிடிச்சு? அதுவுமில்லாம இங்க யு.எஸ்ல நம்மூர் பொண்ணுகளும் கம்மி. இதெல்லாம் நடக்கற காரியமா? இல்லையா, ரொம்ப சோம்பேறித்தனமா இருந்தா, பேசாம வீட்டில பொண்ணு பார்க்க சொல்லி கட்டிக்க! அது மாமா, மாமான்னு உன் பின்னால சுத்தி சுத்தி வரும்ல’ என்று மானங்கெட்ட மனசாட்சி இப்படியும் அப்படியுமாக அவன் மனதைப் போட்டு பிராண்டத் துவங்க தூக்கமில்லாமல் தவித்தான் பரணி.

அந்த வாரம் முழுக்கவே நல்ல மகிழ்வான மனநிலையோடே கழிந்தது. அவ்வப்போது திவ்யா இவனைப் பார்வையால் மேய்வது புரிபடும். ஆனால், அவளிடம் தன் மனதை மீண்டும் உளறிக் கொட்டி, இன்னுமொரு முறை வலியை சுமக்க அவன் தயாராக இல்லை.

அதனால், ‘போதும், ஒரு பல்ப் வாங்கியாச்சுல்ல, திரும்ப இப்போ ஓடிப்போயி அவகிட்ட, ‘திவி திவி, இப்பவும் உன்னை நான் மறக்கல. புதுவீட்டில மந்திரிச்சு தொங்க விட்ட மஞ்சபூசணிக்கா மாதிரி பலவருஷமா இன்னும் நீ என் மனசோட மூலையில தொங்கிட்டு தான் இருக்கன்னு’ சொல்லி திவ்யா, திவ்யா, திவ்யான்னு காதல் கொண்டேன் ஸ்பெட் போட்டு பர்ஃபார்மன்ஸ் பண்ணாலும்,

அவ, ‘இல்லை, நேக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் தோணலை. நீங்க தப்பா நினைச்சுட்டேள்! தோ, வருண் மாதிரி, அந்தா யஷ்வந்த் மாதிரி தான் நீங்களும் என் ஃப்ரெண்டுன்னு’ சேது டைலாக் பேசினாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை. அதனால, இப்படியே போறவரைக்கும் போட்டும். அவளுக்கா ஏதாவது ஃபீல் ஆகுதா? அவளா ஏதாவது சொல்லறாளா என்ன ஏதுன்னு பார்ப்போம்’ என்று முடிவெடுத்துக் கொண்டான்.

சடுதியில் ஒரு வாரம் சென்று விட்டிருக்க, பிப்ரவரி மாதமும் பிறந்திருந்தது. அது என்ன தானோ எப்படித் தானோ, வருஷம் பூராவும் தான் இந்த அமெரிக்கன்ஸ் லவ் பண்ணறானுக, என்னமோ பிப்ரவரி மாசத்துல மட்டுந்தான் லவ் பண்ணற மாதிரி, கடைக்கு கடை, ஹார்ட்டீன் என்ன, ரோஸ் என்ன, கலர் பல்ப் என்ன? அடப்போங்கடா! என்று சலித்துக் கொள்ளும் அளவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் காதல் மாதத்தின் அலங்காரங்கள் தான்.

அவர்கள் அலுவலகத்தில் கூட, ‘சீக்ரெட் வேலண்டைன்’ என்று ஆளுக்கு ஒரு துண்டு சீட்டில் ஒரு நபரின் பெயர் கொடுத்து, அவருக்கு ஏதேனும் பரிசு தரவேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான், அன்று வருணும், திவ்யாவும் க்ரோசரி வாங்க அருகில் இருந்த காஸ்ட்கோ என்னும் பன்னாட்டு அங்காடிக்குச் சென்றிருந்தனர். பிப்ரவரி மாதத்தின் முதல் வார சனிக்கிழமை என்பதால், அந்த அங்காடியில் ஏற்கனவே காதலர் தின அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

அந்த வாரத்திற்குத் தேவையானவற்றை திவ்யாவும் வருணும் வாங்கிக் கொண்டு திரும்ப காரில் ஏறப் போகும் சமயம், “திவ்யா ஒன் மினிட்” என்று திரும்ப அவசர அவசமாக கடைக்குள் ஓடினான் வருண். ஓடிய வேகத்தில் திரும்ப வந்தவனின் கைகளில் ஒரு கற்றை சிவப்பு ரோஜாக்கள்.

காரின் பேசஞ்சர் சீட்டினை திறந்து இருக்கையில் அமர்ந்திருந்த திவ்யாவின் முன்னால், தரையில் ஒரு காலை வைத்து வருண் அமர்ந்து கைகளில் ரோஜாவை நீட்டும் வரையிலும், அவன் என்ன செய்கிறான் என்பது திவ்யாவிற்கு விளங்கவில்லை. என்னமோ வாங்காமல் வந்திருப்பான். அதற்காக திரும்ப உள்ளே ஓடுகிறான் என்றே நினைத்திருந்தாள்.

அவன் செய்கை புரிபடவும் சற்றே அதிர்ந்து போனவள், “வருண்! வாட் ஆர் யூ டூயுங்? மொதல்ல எந்திரி? என்ன இதெல்லாம் வருண்?” என்று ஆச்சர்யத்துடன் வினவினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!