Skip to content
Post Views: 806
கோபமாக வந்து தனது பைக்கை நிறுத்திவிட்டு தன் முன்னே இருந்த மூன்று அடுக்கு கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான். அதிலிருந்த பேரை பார்த்ததும் இன்னும் கொஞ்சம் கோபமாகி, “நேம்போட பாரு சாரா பைனான்ஸ் அந்த சார பாம்புக்கு இது ஒன்னு தான் குறைச்சல்” என்று பொருமி
கொண்டு அந்த கட்டத்துக்குள் உள்ளே சென்றான்.
அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இவனைப் பார்த்ததும் எழுந்து காலை வணக்கம் வைக்க எப்போதும் புன்னகை முகமாய் அனைவரிடமும் சிரித்து பேசிவிட்டு செல்லும் தனது மேனேஜர் இன்று சிறிய தலை அசைப்பு கூட இல்லாமல் உள்ளே செல்ல என்னாச்சு என்று தங்களுக்குள்ளே பார்வை பரிமாறிக் கொண்டனர்.
கோபமாக உள்ளே வந்து தனது கேபினுக்குள் செல்லப் போனவன் அதற்கு எதிரே உள்ள இந்த கம்பெனியின் ஓனரும் தனது அன்னையின் தம்பி மற்றும் தனது வருங்கால மாமனாரான முத்துவேலின் அறைக்குள் கதவினை வேகமாக திறந்து உள்ளே கோவமாக சென்றான்.
Advertisement
ஏதோ பைலை பார்த்துக் கொண்டிருந்தவர் கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்து, “என்ன மாப்ள காலையிலேயே ரொம்ப சூடா இருக்கிற மாதிரி இருக்கு என்ன என் பொண்ண பாத்தீங்களா” என்றார் கிண்டலாக
“யோவ் மாம்ஸ் ஓவரா நக்கல் பண்ணாத பொண்ணாயா பெத்து வச்சிருக்க. நீ மட்டும் அடக்க ஒடக்கமா இருக்குற எங்க அத்தைய கல்யாணம் பண்ணிகிட்ட நான் மட்டும் அந்த சார பாம்ப கல்யாணம் பண்ணிட்டு சாகனுமா” என்றான் கொதிப்புடன் சரண்.
“எது உங்க அத்தை அடக்க ஒடக்கமாவா இது உனக்கே அடுக்குமா மாப்ள”
Advertisement
“பின்ன இல்லையா இப்ப வரைக்கும் நீ கிழிச்சு கோட்ட எங்க அத்தை தாண்டி இருக்கா”
Advertisement
“உங்க அத்த….நான்.. கிழிச்ச.. கோட்ட… தப்பு தப்பா பேசாதா உங்க அத்தை கிழிச்ச கோட்ட தான் நான் தாண்டினது இல்லை. அன்னைக்கு எப்படி உங்க அத்தைய நல்ல அடக்க ஒடக்கமான பொண்ணுன்னு சொல்லி என் தலைல கட்டினீங்களோ அதே மாதிரி இப்போ நான் உங்க தலையில என் பொண்ண கட்ட போறேன்” என்றார் ரஜினி ஸ்டைலில் முத்துவேல்.
“நல்லா பிளான் பண்ற மாம்ஸ் நீ. உனக்காக என் செல்ல குட்டிக்கிட்ட சண்டை போட்டு வந்தேன் பாரு எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்” என்று நொந்து போய் சேரில் அமர்த்தான்.
“என்னாச்சி மாப்பிள்ளை ஏன் இவ்ளோ டல்லா இருக்க”
Advertisement
“ஏன் மாம்ஸ் உன் பொண்ணு எது சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டாளா”
“நீ அவளுக்கு புரியுற மாதிரி சொல்லு மாப்ள”
“ஏன் சொல்ல மாட்ட நீ. உன் பொண்ணு தான நீ சொல்ல வேண்டியது தான” என்றான் நக்கலாக
“நான் சொன்னா உன் அத்தையே புரிஞ்சிக்க மாட்டேங்குது இதுல அவ பெத்த பொண்ணு எங்க இருந்து புரிஞ்சுக்க” என்று கிண்டலாக பேசியவர், “நான் பேசினா என்ன ஆகும்னு உனக்கே தெரியும் மாப்ள. அதனால தான் நான் பேசாம இருக்கேன். என் பொண்ணு எப்பவோ என் கைய விட்டு போயிட்டா” என்றார் விரத்தியாக
“என்ன மாமா நீ இப்ப எதுக்கு பீல் பண்ற நான் இருக்கும்போது உன் பொண்ணு அதான் அந்த சார பாம்ப எப்படி வழிக்குக்கொண்டு வரணும்னு எனக்கு நல்லாவே தெரியும் நீ பீல் பண்ணாத மாமா” என்றான் ஆறுதலாக
“என் பொண்ணு உனக்கு சார பாம்பா இரு ஒருநாள் அவ கிட்ட நீ மாட்டாமயா போவ” என்றார் தன்னை சரி செய்து கொண்டு விளையாட்டாக
“ஆமா இவங்க பொண்ணு அப்படியே வந்து எங்கள அடிச்சிட போறா பாரு அட போ மாமா. சரி எனக்கு வெளிய நிறைய வேலை இருக்கு நான் போய் வேலை பார்க்குறேன். உன்கூட வெட்டியாக உக்காந்து கதை விட எனக்கு டைம் இல்ல” என்று சொல்லி வெளியே சென்றவனை பார்த்து, “நான் பாட்டுக்கு செவனேன்னு வேலை பார்த்துட்டு இருந்தேன். அவனா வந்தான் பேசினான் திட்டுனான் கடைசில என்ன போய் வேலை வெட்டி இல்லாதவன்னு சொல்லிட்டு போய்ட்டான். அது சரி நம்மள யாரு மதிக்க போறாங்க. பொண்டாட்டி பிள்ள இப்போ வருங்கால மாப்பிள்ளை எல்லாருக்கும் நம்ம தொக்கா தான் தெரியிறோம் போல” என்று புலம்பிக் கொண்டு தனது வேலையை பார்க்க தொடங்கினார்.
@@@@@@@@@
“அக்கா நான் சொல்லித்தந்தது எல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல” என்றான் சிவபிரகாசம்.
“ஆங்.. என்ன தம்பி”என்றாள் ஏதோ யோசனையில் இருந்த இந்திரா.
“என்னக்கா நான் சொன்னது எதுவும் நியாபகம் இல்லையா’ என்று இந்திரா பார்த்து சொன்னவன், ‘லட்சுமி க்கா இப்படி இருந்தா எப்படி”என லட்சுமியை பார்த்து முடித்தான்.
“அச்சோ தம்பி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அதெல்லாம் கரெக்டா சொல்லிருவாங்க அப்படித்தானே இந்திரா கரெக்டா சொல்லிருவ தான” என்றாள் லட்சுமி இந்திராவை பார்த்து
“சொல்லிருவேன் அக்கா இருந்தாலும் ஒரு டைம் நீங்க சொல்லி தாங்களேன்”
“சரியா போச்சு… சரி இப்போ கடைசியா சொல்லுறேன் எல்லாத்தையும் கொஞ்சம் மைண்ட்ல ஏத்திக்கோங்க க்கா. இப்ப நம்ம லோன் எடுக்க போறது உங்க பொண்ணோட படிப்பு செலவுக்காக சரியா. உங்களோட ஹஸ்பண்ட் பத்தி கேட்டாங்கனா அவர் இறந்துட்டாருன்னு சொல்லாதீங்க வெளிநாட்டுல வேலையில இருக்காரு அப்படின்னு சொல்லுங்க. ஏன்னா இந்த லோனுக்கு நாமினியா உங்களோட ஹஸ்பண்ட் ஐடி ப்ரூப் தான் நம்ம கொடுக்கப் போறோம். அதனால அவரு இறந்துட்டாருன்னு சொல்லாதீங்க. அதோட தப்பி தவறி கூட இந்த லோனு லட்சுமி அக்காவுக்கு தான் நீங்க எடுத்துக் கொடுக்கிறீங்கன்னு சொல்லவே சொல்லாதீங்க உங்க பொண்ணோட படிப்பு செலவுக்காக மட்டும் தான் நீங்க இப்போ லோன் வாங்குறீங்க அத கட்ட போறதும் நீங்க தான். எல்லாத்தையும் கரெக்டா சொல்லுங்க அக்கா எதுவும் சொல்லி சொதப்பிராதீங்க” என்றவன் லட்சுமி பார்த்து, “சரி லட்சுமி க்கா நல்லா சொல்லிக் கொடுத்துட்டு இருங்க. நான் சார் வந்துட்டாரான்னு பாத்து பேசிட்டு உங்கள உள்ள கூப்பிடுறேன்” என்று சொல்லி லோன் ஆபிசர் அறைக்குள் சென்றான் சிவப்பிரகாசம்.
“என்னக்கா இப்படி சொல்றாங்க நான் தான் அப்ப கட்டனுமா” என்றாள் இந்திரா பயத்துடன்
“அதெல்லாம் ஒன்னும் இல்லை இந்திரா. சும்மா அவங்க கேட்கிற கேள்விக்கு அந்த தம்பி சொல்லிருந்த மாதிரி பதில் சொல்லு மிச்சபடி உன்னோட லோன் காச நான் தான் கட்டுவேன்”
“இருந்தாலும் அக்கா எந்த பிரச்சனையும் வராது தான” என்றாள் இன்னும் தெளியாத பயத்துடன்
“அதெல்லாம் ஒரு பயமும் இல்ல உன்ன மாதிரி தான் சரசும் எனக்கு 5 லோன் எடுத்து தந்த இருக்கா இதுவரைக்கும் யாரும் அவ வீட்டு முன்னாடி போய் காசு கேட்டது கிடையாது. அப்படித்தானே சரசு” என்றாள் இந்திராவுடன் சேர்ந்து அவளுக்கு லோன் எடுத்து கொடுக்க வந்திருக்கும் சரஸ்வதியை பார்த்து
“ஆமா இந்திரா என்னோட புருஷன் சரியான குடிகாரன் என் பசங்கள படிக்க வைக்கிறதுக்கு நான் இந்த லோன் காச வாங்கி தான் படிக்க வைக்கிறேன். இவங்க தர புல் அமௌன்ட் என்னால கட்ட முடியாது அதனால நானும் லட்சுமி அக்காவும் சேர்ந்து ஆளுக்கு பாதி பாதியா எடுத்துக் கட்டுவோம். அதே மாதிரி லட்சுமி அக்காக்கும் தனியா நான் அஞ்சு லோன் எடுத்துக் கொடுத்து இருக்கேன் இதுவரைக்கும் ஒருத்தர் கூட எங்க வீட்டு முன்னாடி வந்து கத்துனது கிடையாது அக்கா டான்னு அந்த டயத்துக்கு கட்டிருவாங்க அதனால நீ பயம் இல்லாம எடுத்து குடு இந்திரா” என்றாள் நம்பிக்கை ஊட்டும் விதமாக சரஸ்வதி.
“என்ன இந்திரா இன்னும் என்ன நம்ப மாட்டியா. நம்பளனா இப்பவே கிளம்பி போயிட்டே இரு. ஒன்னு முழு மனசோட நம்பி எனக்கு எடுத்துதா இல்லையா அக்கா உங்க மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்லிட்டு வீட்டுப் பக்கம் போய்கிட்டே இரு” என்றாள் கரராக.
“இல்லக்கா உங்க மேல நம்பிக்கை இல்லாம எல்லாம் இல்லை இருந்தாலும் ஒரு பயம். நீங்க இவ்வளவு சொல்லும்போது உங்களுக்கு நான் எடுத்து தராம இருப்பேனா ஒன்னும் பிரச்சனை இல்ல க்கா நம்பி எடுத்து தரேன்” என்று இந்திரா சொல்லிக்கொண்டு இருக்கும்போது லோன் ஆபிஸர் அறையிலிருந்து வந்த சிவப்பிரகாசம் லட்சுமியை மட்டும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
அங்கே இவர்களின் டாக்குமென்ட்டை செக் செய்து கொண்டு இருந்த அருண்குமார் அவளை பார்த்து, “வாங்க உட்காருங்க என்ன லட்சுமி அக்கா எப்படி இருக்கீங்க”
“நீங்க இருக்கிற வரைக்கும் நாங்க ரொம்ப நல்லா இருப்போம் சார்” என்றாள் வாயெல்லாம் பல்லாக
“அது சரி லட்சுமி க்கா வர வர உங்க தேவைகள் அதிகம் ஆயிட்டே போகுது போல. பார்த்து பண்ணுங்க மொத்தமா மாட்டிக்காதீங்க”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் நாங்க கம்மியா தான் பண்றோம்”
“அது சரி அப்புறம் லட்சுமி க்கா நான் வேற ஊருக்கு மாற போறேன் இப்போ வந்திருக்கு மேனேஜர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான ஆளு. அவர் கிட்ட மாட்டிக்காதீங்க பார்த்து பண்ணுங்க”
“என்ன சார் இப்படி சொல்றீங்க நாங்களே உங்களை நம்பி தான இருக்கோம்”
“வேற என்னக்கா பண்ண. இப்போ வந்திருக்க மேனேஜர் வேற யாரா இருந்தாவது வேற வழியில கரெக்ட் பண்ணலாம். இவர் நம்ம ஓனரோட வருங்கால மாப்பிள்ளை. இவர்கிட்ட ஒன்னும் நம்மளால செய்ய முடியாது. அதோட பழைய கணக்கு எல்லாத்தையுமே நோண்ட தொடங்கிட்டாரு எப்ப நாங்க மாட்ட போறோம்னு எங்களுக்கே தெரியல. நீங்க பார்த்து இருந்துக்கோங்க க்கா இப்போதைக்கு இவங்க ரெண்டு பேருக்கு நான் லோன் போட்டு தர்றேன். இனி எந்த லோன்னு எடுக்காதீங்க இவ்வளவுதான் நான் உங்கக்கிட்ட சொல்ல முடியும் என்ன வேற எங்க மாத்த போகிறாங்கனு தெரியல” என்று சொன்னவன், “சரி லட்சுமிக்கா அவங்க ரெண்டு பேரையும் கூப்பிடுங்க அவங்க கிட்ட சில கேள்வி கேட்டுட்டு நான் சைன் பண்ணி விடுறேன்” என்றான்.
உடனே வெளியே அமர்ந்திருந்த சரசு மற்றும் இந்திராவை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான் சிவபிரகாசம்.
“என்னமா எதுக்கா நீங்க லோன் வாங்குறீங்க” என்று உள்ளே வந்த இருவரையும் பார்த்து கேட்டான் அருண்குமார்.
“ஐயா என் புருஷன் ஒரு குடிகாரன் நான் என்னோட வயித்து பொழப்புக்கு மாடு வாங்கறதுக்காக லோன் வாங்குறேன் சார்” என்றாள் சரஸ்வதி.
“சரிம்மா நான் உங்களுக்கு லோன் அப்ரூ பண்றேன். கரெக்டா டைமுக்கு கட்டிருங்க சரியா” என்று சொல்லி அவளிடம் கைரேகை மற்றும் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவரும் அந்த டாக்குமெண்டில் சைன் பண்ணினார்.
அடுத்து, “நீங்க மா” என்று இந்திராவை பார்த்து கேட்டதற்கு, “சார் என்னோட பொண்ணு காலேஜ் படிக்கிறா இந்த மாசம் செமஸ்டர் பீஸ் கட்றதுக்காக லோன் வாங்குறேன் சார்” என்றாள் சிறு பயத்துடன் இந்திரா.
“உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றாரு” என்று கேட்டதற்கு
சிறிது பயத்துடன் லட்சுமி முகத்தை பார்த்துவிட்டு, “அவர் வெளிநாட்டில் இருக்கிறார் சார்”
“என்னம்மா சொல்றீங்க வெளிநாட்டில் இருக்கிறவருக்கு இல்லாத காசா” என்றார் வியப்புடன்
“அது.. அது வந்து.. சார்..என்று திணறிய இந்திராவை பார்த்து லட்சுமி, “சார் அவர் இப்பதான் வெளிநாட்டுக்கு போய் ஒரு மாசம் ஆகுது அதனால பேமென்ட் வந்து இவங்க கைக்கு வர டிலே ஆகுது அதனாலதான் இவங்க லோன் எடுக்குறாங்க சார்” என்றாள் சமாளிக்கும் விதமாக
“ஓ சரி மா உங்க லோன்னையும் அப்ரோல் பண்றேன். மாசம் மாசம் கரெக்டா கட்டிருங்க என்ன” என்று அவளைப் பார்த்து சொன்னவன். ஒரு பைலை இந்திராவின் முன்வைத்து கையெழுத்து போட சொல்லி அவளின் இடது கைரேகையை வாங்கிக் கொண்டு அவனும் அதே பைலில் அப்ரூவல் கையெழுத்து போட்டான்.
இந்திராவின் இந்த கையெழுத்து அவளின் தலையெழுத்தை மாற்றுமா அல்லது அவளின் உயிரினை பறிக்குமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.
error: Content is protected !!